என்னுயிர் 3


என்னுயிர் 3

காலையில் கண் விழித்த அருந்ததி, புத்துணர்ச்சியுடன் எழுந்தாள்... குளியலறைக்குள் சென்று முகம் கழுவியவள், அங்குச் செல்ஃபில் இருந்த வெள்ளை துவாலை கொண்டு முகம் துடைத்தபடி வெளியே வந்தவள், கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தாள். 

சிலிப்பிக் கொண்டு நின்றிருந்த தலை முடிகளைக் காதோரம் ஒதுக்கி விட்டுக் கையில் இருந்த டவலைக் கட்டிலில் வீசியவள், வாசல் கதவைத் திறந்தாள்… 

அதிகாலை காற்றுச் சுகந்தமாக அவளின் முகத்தில் மோதியது. சூரியன் இன்னமும் தன் உக்கிரத்தை பூமிக்கு அனுப்பாமல் ஏனோ அமைதி காத்துக் கொண்டிருந்தான். தோட்டத்தில் நீர் பாய்ச்சி இருந்ததால், செடிகளின் மேல் முத்துக்களாய் பனித்துளிகள் இலைகளின் மீது இருக்க, அதைப் பார்க்க ரொம்பவே அழகாக இருந்தது. அது அவளது மனதுக்கு ஒரு அமைதி கொடுத்தது… 

மனதில் எழுந்த புத்துணர்ச்சியுடன் இரு கைகளையும் வீசியபடி தோட்டத்தில் நடந்தாள். சுற்றி முற்றிப் பார்த்துக் கொண்டே நடந்தவளின் கண்ணில் கேட் அருகில் நின்றிருந்த இரண்டு காவலர்கள் தென்பட்டனர்.. 

அவர்களைப் பார்த்ததும் அவளுக்கு நேற்று நடந்தது நினைவுக்கு வந்தது.

நேற்று பங்களாவில் இருந்து வெளியேறவும், அங்குக் கீழே இருந்த முயல் குட்டியைக் கண்டு அதைத் தூக்குவதற்கு அருந்ததி குனியவும், ஒரு வலிய கரம் அவளைப் பக்கவாட்டில் இழுத்து விட்டது… 

“ஆஆஆஆ” என்று கத்தியபடி கீழே விழுந்தாள் அருந்ததி. அதைத் தொடர்ந்து ஒலித்தது ஒரு கர்ஜனை குரல்.. 

“சேகர், சாமிக்கண்ணு” என்ற கதிரோவியனின் கோபக் குரலில் வேகமாக ஓடி வந்தனர், காவலாளியும், தோட்டக்காரனும்…. 

“வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன் ஹியர்...? ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க...?” என்று அவர்களைப் பார்த்து உறுமியவன்… 

காவலாளியிடம், “சாமிக்கண்ணு கேட் பக்கத்துல உக்காந்து தூங்குறதுக்கா உங்களுக்குச் சம்பளம் கொடுக்குறேன், ஹான்...?” என்று கத்தி விட்டுச் சேகரிடம் திரும்பியவன் “வீட்டைச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்குறது இல்லையா…? சந்தேப்படும்படியா யாரு நடமாடுறான்னும் கவனிக்கிறது இல்லயா…?, ஆமா ப்ரௌனி எங்க...? அதை எதுக்கு அவிழ்த்து விடல...?” என்று இருவரிடமும் காய்ந்தான் கதிரோவியன்… 

கதிரோவியனிற்கு எப்பொழுதுமே, எதிரிகள் அதிகம் தான். அவன் வீட்டை விட்டு வெளியேறும் அடுத்த வினாடியில் இருந்து சற்று அலர்ட்டாக இருப்பான். ஆனால் வீட்டில் இந்தச் சம்பவம் நடந்தது இதுவே முதல் தரம். அவனால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை… 

“ஸ்கவுண்ட்ரல் என் கையில மட்டும் அவன் சிக்கட்டும். அப்போ இருக்கு அவனுக்கு” என்றவன், “ரொம்பத் தூரம் போயிருக்க மாட்டான்... கோ அன் சர்ச் ஹிம்” என்று கர்ஜிக்க, அடுத்த நிமிடம் அவர்கள் அவ்விடத்தை விட்டு மறைந்தனர். 

சற்று முன் அருந்ததி, வாசல் அருகே வரவும், மாடியில் இருந்து கதிரோவியனும் வெளியே செல்வதற்கு வேகமாக வந்தான். போலீஸ் காரனுக்கு நாலு பக்கமும் கண் இருப்பது உண்மை எனும் விதமாக, அவனது கண்ணில், அவர்கள் வீட்டின் காம்பவுண்ட்டை ஒட்டி இருந்த மாமரத்தின் கிளையில் மறைந்திருந்த ஒரு உருவம் தென்பட்டது. கூர்ந்து அதைப் பார்த்துக் கொண்டே வந்தவன், காம்போவுண்ட் சுவற்றில் இருந்த ஒளிவிளக்கின் வெளிச்சத்தில் அந்த உருவத்தின் கையில் இருந்த துப்பாக்கியைக் கண்டு கொண்டு நெற்றியைச் சுருக்கினான்.. 

புரிந்த அடுத்த நொடி, தனக்கு எதிரே சென்று கொண்டிருந்த அருந்ததியைச் சட்டென்று இழுத்தான். அவன் நினைத்தது சரியே என்பது போல் மரத்தில் இருந்தவனும் சுட்டு விட்டான். உடனே மறுபக்கம் குதித்து ஓடியும் விட்டான். நல்ல வேளையாக அருந்ததிக்கு ஏதும் ஆகவில்லை.. 

தோட்டக்காரன், காவலாளி இருவரையும் எவ்வளவு திட்ட வேண்டுமோ திட்டி விட்டு, தனது மொபைலை எடுத்து சில எண்களை அழுத்தினான். எதிர் முனையில் எடுத்ததும் சில உத்தரவுகளைப் பிறப்பித்தான். 

சத்தம் கேட்டு பிரபுவும், லட்சுமிமாவும் பதட்டத்துடன் வெளியே ஓடி வர, அவர்கள் பின்னே வந்த சிவப்பிரகாசம் சூழ்நிலையை உணர்ந்து மகனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்… அவனும் தந்தையின் கேள்விக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.. 

சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் வேனும் இன்னொரு காரும் அங்கு வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய கைரேகை நிபுணர் இருவர், அவர்கள் வேலையைச் செய்யத் தொடங்கினர்… மர்ம ஆசாமி விட்டுச் சென்ற சில தடயங்கள் மற்றும் துப்பாக்கி குண்டையும் எடுத்துப் பத்திரப்படுத்தினர்... 

போலீஸ் ஜீப்பில் இறங்கிய இன்ஸ்பெக்டர் சூர்யா, கதிரோவியனிடம் பேசி விட்டு, அவனுடன் வந்த இரண்டு காவலர்களை, கேட் அருகில், பாதுகாப்பிற்கு நிற்குமாறு உத்தரவிட்டு அவனும் சென்றுவிட, அங்கு நிலவிய பரபரப்பு சிறிது அடங்கியது. 

அதன் பிறகே அருந்ததியைக் கவனித்தான் கதிரோவியன். அவன் இழுத்து விடும் போது எப்படி விழுந்தாளோ, அப்படியே இன்னமும் அமர்ந்திருந்தாள். என்ன ஒன்று!! கதிரோவியனை முறைத்துக் கொண்டு இருந்தாள்... 

‘அப்ப என்னன்னா கார்ல இருந்து கீழ இழுத்து விட்டான். இப்ப காப்பாத்துறேன்னு கீழ தள்ளி விட்டுட்டான். இவனுக்கு என்னைய கீழே தள்ளி விடுறதே வேலையா போச்சி’ என்று மனதுக்குள் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாலும், அவனது இந்த ஆளுமையை உள்ளுக்குள் ரசிக்கவே செய்தாள்... 

கதிரோவியனோ ‘இன்னுமா நீ எழுந்துக்கல...?’ என்பது போல் அவளை ஒரு பார்வை பார்க்கவும், சட்டென்று அவளது பக்கத்தில் நின்றிருந்த லட்சுமிமாவைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டாள்.. 

அவரோ “பாப்பா உனக்கு ஒண்ணும் ஆகலையே...?” என்று கவலையுடன் அவள் அருகில் அமர்ந்து கொண்டு நலம் விசாரித்தார்… ‘ஹ்ம்ம் இந்தப் பொண்ணு வந்து ஒரு நாளு கூட முழுசா முடியல. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்...?’ என்று கவலை கொண்டார். ஆனால் அவளோ 

“ஹய்யோ லெட்சுமிமா, இவிங்கத்தேன் இந்தச் சாதாரண விஷயத்துக்கு அக்கப்போர் பண்றாய்ங்கனா, நீங்க வேற எதுக்குக் காமெடி பண்றீக...? போங்க லட்சுமிமா… எனக்குப் பஜ்ஜி தின்னது வயிறு நெறையல. இப்ப எனக்கு ரொம்பப் பசிக்கிது. என்ன சாப்பாடு செஞ்சிருகீக...? எடுத்து வைங்க… சட்டுபுட்டுனு தின்னு முடிச்சிட்டு, தூங்கப் போறேன். அப்பதேன் வெள்ளன எழுந்து வேலைக்குப் போக முடியும்” என்றவள் பின்பு பிரபுவைப் பார்த்து… 

“டேய் பிரபு, எவ்ளோ நேரம் தான்டா நான் உட்கார்ந்து இருக்கிறது… கொஞ்சம் என்னைய தூக்கி விடலாம் இல்லையா...?” என்றபடி தன் இரு கைகளையும் அவனை நோக்கி விரிக்க, கதிரோவியனோ அவளை முறைத்துப் பார்த்தான். 

அதை உணர்ந்து ஓரவிழியால் கதிரோவியனைப் பார்க்க, அவனின் உக்கிரப் பார்வைக்கு உள்ளுக்குள் பயந்தாலும், வெளியே சாதாரணமாகக் காட்டிக் கொண்டவள், தூக்கிய தன் இரு கைகளையும் தூசி தட்டிவிட்டு “சரி ஓகே நானே எழுந்துக்கிறேன்” என்றவள் எழுந்து நின்றாள்… 

இவ்வளவு நேரம் சற்று பதட்டத்துடன் நின்றிருந்த பிரபுவோ அவளின் செய்கையில் அவளை முறைத்தவன், 

‘அடிப்பாவி, ஜஸ்ட் மிஸ்ஸுல உயிர் தப்பிச்சிருக்கா. ஆனா அதைப் பத்தி கவலைப்படாம, என்ன சாப்பாடுன்னு கேக்குறா. அது மட்டும் இல்லாம என்னைய தூக்கச் சொல்லி ஒரண்ட இழுத்து எனக்குச் சமாதி கட்டிருப்பாளே… ச்ச கொஞ்சநேரம் இவகிட்ட பேசினதுல இவ பாஷை எனக்கு ஒட்டிக்கிச்சே’ என்று மனதில் புலம்பியவன், 

“ஆமா இங்க நடந்தது உனக்குக் காமெடியா...?” என்றபடி அவளிடம் மெதுவாகக் கேட்க… 

“பின்ன தீபாவளி வெடி வெடிச்சதுக்கு யாராவது பயப்படுவாய்ங்களா...? போ பிரபு குட்டி, இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கியே… நீ இன்னும் வளரணும்” என்று சொன்னாளே பார்க்கலாம்…!!! 

பக்கத்தில் நின்று கொண்டிருந்த சிவப்பிரகாசத்திற்கும் அருந்ததியின் பேச்சுச் சிரிப்பை உண்டு பண்ணினாலும், இந்த விஷயத்தைச் சாதாரணமாக விட முடியாதே...!! கதிர் மட்டும் கவனிக்கவில்லை என்றால், இப்பொழுது அதை நினைத்துப் பார்க்கவே அவரால் முடியவில்லை… தன்னை நம்பி பெண்ணை அனுப்பி வைத்திருக்கும் தன் நண்பனுக்கு என்ன பதில் சொல்லுவார் அவர்? ஆனாலும் பெரிய மகன் மீது இருக்கும் நம்பிக்கையில் கவலையற்று இருந்தார்... 

“சரி லட்சுமி… அருந்ததியை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போய்ச் சாப்பிட வை” என்று கூறியவர் சின்ன மகனிடம் “நீ உன் ரூமுக்குப் போ” என்றதும், விட்டால் போதும் என்று ஓடி விட்டான் பிரபு… 

அவர்களை அனுப்பி வைத்து விட்டுக் கதிரோவியனைப் பார்த்தார் சிவப்பிரகாசம்… அருந்ததியின் செயலில் கோபம் இருந்தாலும், அவன் மனமோ தீவீர சிந்தனையில் ஆழந்திருந்தது.

மகனின் அருகில் சென்றவர் “என்னப்பா யோசனை...? ரிஸ்க்கான புதுக் கேஸ் ஏதும் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கியா...?” என்று கேட்டு அவனின் தோளைத் தொட்டார். 

தந்தையின் கேள்வியில் அவரைப் பார்த்துச் சிரித்தவன், “எஸ் டாட், நேத்து ஒரு புதுக் கேஸ் என் கைக்கு வந்தது. ரொம்ப முக்கியமான கேஸ், அதைக் கேர்ஃபுல்லா ஹண்டில் பண்ண வேண்டும் என்பதால் தான் தாமோதரன் என்பவரைப் பார்க்க இன்னைக்கு ஏர்போர்ட் போக வேண்டி இருந்தது” என்றவனுக்கு ஏர்போர்ட் வாசலில் அருந்ததியைப் பார்த்தது, அதன் பிறகு நடந்தது, அந்நேரம் நினைவுக்கு வந்தது. 

“ம்பச்” என்றபடி அதை நினைவை ஒதுக்கியவன், “அவர் தான் இந்தக் கேஸில் முக்கியமான ஆள். சோ நானே அவரைப் பிக்கப் பண்ணப் போனேன். ஒரு சீக்ரெட்டான இடத்தில் வச்சி தான் எங்க டிஸ்கஷன் நடந்தது. ஆனா…” என்றபடி அங்கும் இங்கும் சற்று நடை பயின்றவனுக்கு, கொஞ்ச நேரம் முன்னே இன்ஸ்பெக்டர் சூர்யா போனில் கூறிய விஷயம் ஞாபகம் வந்தது. 

“சார் மிஸ்டர் தாமோதரனுக்குச் சின்ன ஆக்சிடெண்ட்” என்று சூர்யா போன் செய்யவும் தான், உடனே கிளம்பினான். ஆனால் அதற்குள் இங்கு இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. 

இரண்டையும் சேர்த்துப் பார்த்தவனுக்கு எதுவோ புரிவது போல் இருக்க, அவன் முகத்தில் மர்மமான புன்னகை லேசாக எட்டிப் பார்த்தது.

மகனின் புன்னகையைக் கண்டு புரிந்து கொண்டவர் “ஓகே கதிர் கேர்புல்” என்று மட்டும் கூறி விட்டு நகர்ந்து விட்டார். அவர் டிப்பார்ட்மெண்டில் இருந்த போது பார்க்காத ரிஸ்கா...!! 

கதிரோவியனோ தந்தை சென்ற பின்னர் அப்படியே நின்றிருந்தான். பின்பு அந்த மாமரத்தையும் தனது வீட்டு வாசலையும் பார்த்தவன், காவலுக்குப் புதிதாக நிறுத்தியிருந்த காவலர்களை நோக்கி நடந்தான்... 

நேற்று நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றவள், பின்பு அந்தக் காவலர்களைப் பார்த்து “ஹாய்” என்று கையசைத்தாள்.. 

ஆனால் அவர்களோ அவளைக் கவனிக்காமல் விரைப்பாக நின்றிருந்தனர். “சுத்தம்...!! அவன் வீட்டுக்கு காவ காக்க வந்துருக்கப் போலீஸ் கூட அவன மாதிரியே இருக்காய்ங்க. சுத்த போர்யா” என்றவளின் கண்ணில் பட்டது அந்த மாமரம். “ஹை மாங்கா” என்றபடி துள்ளிக் குதித்தடி அந்த மரத்தை நோக்கி நடந்தாள். ஆனால் அந்த மாமரத்தின் கீழே ஒரு உருவம் தென்பட்டது. 

“யார் அது...? படுக்க எடமே இல்லன்னுட்டு அங்கிட்டுப் போய்ப் படுத்துருக்காய்ங்க. ஒருவேளை நேத்து சுட்டவனா இருக்குமோ...?” எனக் கோமாளித்தனமாக யோசித்தபடி அந்த இடத்தை நோக்கி நடந்தாள் அருந்ததி. 

அதன் அருகே சென்றதும், தன் அழுத்தமான நடையைப் பூனை நடையாக மாற்றி, மிகவும் மெதுவாக நடந்தாள். ஆனாலும் சில காய்ந்த சருகுகள் மிதிபடும் ஓசையில் படுத்திருந்த அந்த உருவம், சட்டென்று தலையை மட்டும் தூக்கி, தனது இடது கையைத் தலைக்கு அணை கொடுத்து அண்ணாந்து மரத்தைப் பார்த்தது. பின் தனது வலது கையின் பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் சேர்த்து வட்டமாக்கி, தனது ஒரு கண்ணில் வைத்து, அந்த மரத்தை ஜூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தது. 

அங்குப் படுத்திருந்தவனைக் கண்டு “அடடே நம்ம சிரிப்பு போலீஸ் ஆபீசரு” என்றவள்…

“என்ன போலீஸ் ஆபீசரே...!! இங்கன என்னத்த பண்றீக...?” என்று கேட்டுக் கொண்டே பிரபுவின் அருகே அமர்ந்தாள். 

தன் அண்ணன் தான் வந்து விட்டாரோ என நினைத்துப் பயந்திருந்தான் பிரபு. ஆனால் வந்தது அருந்ததி என்றதும், இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டவன், பின்பு அவளிடம் “பார்த்தா தெரியல, இன்வெஸ்டிகேசன் பண்ணிட்டு இருக்கேன்..” என்றான் கெத்தாக. 

“என்னது இன்வெஸ்டிகேஷனா...?” எனப் புரியாமல் விழித்த அருந்ததிக்கு, அவன் படுத்திருந்த பாணியில் சிரிப்பு வந்தது. ஜாகிங் உடையில், கால் நீட்டி, ஒரு கையைத் தலைக்கு அண்டை கொடுத்து, பள்ளிகொண்ட ஸ்ரீரங்கர் மாதிரி படுத்துக் கொண்டு மாமரத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். 

“ஓ உங்கூர்ல இப்படிப் படுத்துக் கெடந்துலாம் இன்வெஸ்டிகேசன் பண்ணுவாய்ங்களா...? இது புதுசால்ல இருக்கு. அதும் எனக்குத் தெரியாம போச்சே...?” என்று அதிசயித்தாள். 

அவனோ “ஆமா இங்க, இந்த ஆங்கிள்ல பாரு. நேத்து சுட்டவன், இந்த மரக்கிளையில் இருந்து தான் சுட்டுருக்கணும்” என்றதும், 

பிரபு காட்டிய திசையில் தானும் பார்த்த அருந்ததி, “எப்புடி...? ஒரு படத்துல செந்தில் சொல்லுவாறே, இந்த ஆங்கிள்லப் பார்த்தா ஜொய்ங்குன்னு தெரியும்னுட்டு, அப்படியா..?” என்றவள் “அரிய கண்டு பிடிப்பு தான் ஆபீசரே… இதுக்காகவே ஒனக்கு ஸ்ரைட்டா ஐஜி போஸ்ட்டே கொடுக்கலாம்” என்றபடி தன் வாயில் விரல் வைத்து யோசனை போல் காட்டிக் கொள்ள… 

அவனுக்குப் புரிந்து விட்டது தான் சொல்வதை அருந்ததி நம்பவில்லை என்று. 
“ஒருவேளை என்னை வச்சி காமெடி பண்றாளோ...? இல்லை தன்னைக் கிண்டல் செய்கிறாள்” என்று வெகுண்டு எழுந்து அமர்ந்தவன், 

“என்ன கிண்டல் பண்றியா...? எங்க அண்ணா தான் சொன்னார். போலீஸ் ஆகுறதுக்கு இப்படிலாம் இன்வெஸ்டிகேசன் பண்ணனும்னு” என்று வீர வசனம் பேச, 

அவன் தலையில் வலிக்காமல் குட்டியவள் “நம்புற மாதிரி சொல்லணும். அப்பதேன் நான் நம்புவேன். ஒழுங்கா சொல்லு, வெள்ளனவே எழுந்து இங்கன எதுக்கு வந்து படுத்துருக்கே...?” என்று கேட்டாள்.

“ஹி ஹி” என்று அசடு வழிந்தவன், “எல்லாம் எங்க அண்ணன் தான் காரணம்” என்றான் பாவமாக.

“பார்றா, உங்க அண்ணா ஸ்ட்ரிக்ட் ஆபிசருன்னு நேத்தைக்கே தெரிஞ்சிகிட்டேன். ஆனா சொந்தத் தம்பியை வெளியே தொறத்துர அளவுக்கு ஸ்ட்ரிக்ட்னு இப்பதேன் புரியுது. அடப்பாவமே!!” என்று உச்சுக் கொட்டினாள்.. 

அவளை முறைத்தவன் “வெளியேலாம் துரத்தல. எங்க அண்ணாக்குக் காலையில் எழுந்ததும் முதல் வேலையா, எங்க பங்களாவை, இருபது ரவுண்ட் அடிக்கணும்…” 

“நல்லது தான… உங்க அண்ணா இருபது ரவுண்டு என்ன நூறு ரவுண்டு கூட அடிக்க வேண்டியது தான்...!! அத விட்டுபுட்டு உன்னைய எதுக்கு வெளியே படுக்க வச்சார்...? அதச் சொல்லு கூமுட்ட” என்றதும்… 

“யாரை கூமுட்ட சொல்றே...? நீ தான் அது” என்று பட்டென்று அருந்ததியின் தலையில் குட்டினான். 

“ஏய் இந்தாறு… இப்ப எதுக்கு என்னைய குட்டுனே...?” என்று அவள் அவனை முறைக்க, 

“நீ மட்டும் என்னைக் கொட்டுனல்ல, இப்போ அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு” என்றதும், 

“அப்ப சரி நீ முதல்ல விஷயத்தைச் சொல்லு” என்று அருந்ததி கேட்டாள்.

“காலையில் ஆறு மணிக்கு எழுந்து இந்த வீட்டை சுத்தி ஓடணும். அப்புறம் மாடியில் இருக்கும் ஜிம்முக்குப் போய் ஒருமணி நேரம் எக்ஸசைஸ் பண்ணணும். இதுதான் சாப்பிடணும், இப்படித்தான் இருக்கணும்னு இன்னும் நிறைய ரூல்ஸ் அன் கண்டிஷன்ஸ் போட்டுருக்கார். அதை ஒழுங்கா பாஃலோ பண்ணணும். அப்போ தான் நான் போலீஸ் ஆக முடியுமாம். இதெல்லாம் நான் பண்ணலன்னு வச்சிக்க, நான் காலி” என்றான். 

“டேய் நீ சொல்லும் போதே எனக்குக் கண்ணைக் கட்டுதே. இதெல்லாம் நீ எப்படிடா செய்யிறே?” 

“அதெல்லாம் யாரு செய்றா? ச்சும்மா எங்க அண்ணாவை நம்ப வைக்க அலாரம் வச்சி கஷ்டப்பட்டு ஆறுமணிக்கே எழுந்து ஒரு ரவுண்டு மட்டும் ஒடுவேன். அப்புறம் அண்ணாக்குத் தெரியாம, கெஸ்ட் ஹவுஸ்குள்ள போய்த் தூங்கிருவேன்” என்று முடித்தவன், திடீரென்று “அயோ இல்ல இல்ல, நான் எதுவும் சொல்லல நீயும் ஏதும் கேக்கல. எல்லாத்தையும் உன் மனசுல இருந்து அழிச்சிரு” என்று பரபரத்தான் பிரபு. 

அவனின் பேச்சில் அருந்ததிக்குச் சிரிப்பு வந்தது, ‘எங்கே அவனது அண்ணனிடம், நான் போட்டு குடுத்துருவேன்னு பயபுள்ள பயப்படுது போல!!’ என்று நினைத்தாலும், ஒருமாதிரி ஆகிவிட்டது அவளுக்கு. 

ஆனாலும் பிரபு கூறிய ரூல்ஸ் கேட்டு முழி பிதுங்கியது அருந்ததிக்கு. அவனிடம் “சரி பயப்படாத, நான் போட்டுக் குடுக்க மாட்டேன்” என்றவள், 

“ஏன் பிரபு, நான் கெஸ்ட் ஹவுஸில தங்குனதால நீ இன்னைக்கு இங்கன வந்து படுத்துருக்கியா...?” என்று கேட்டதும், 

“அதெல்லாம் இல்ல. எப்போதாவது இங்க வந்து படுப்பேன். அது சேகர் அண்ணாக்கும் சாமி அண்ணாக்கும் தெரியும். ஆனா அவங்க யாரும் கண்டுக்க மாட்டாங்க” என்றான் பிரபு. 

“சரி அத்தேன் இன்னொரு ரூம் இருக்கே, அங்கன வந்து படுத்திருக்கலாமில்ல.. அங்கிட்டுத் தான உன்னோட பொக்கிஷம் எல்லாம் வெச்சிருக்க” என்று கூறி அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் அருந்ததி… 

அவள் கூறியதைக் கேட்டு அதிர்ந்த பிரபு “அதையும் பார்த்துட்டியா...?” என்று அவளை முறைத்தான். 

“ம்ம்ம்ம் நேத்தேக்கி ரவைக்கே(நைட்) பார்த்துட்டேன்” என்றவள், “அதில என்னையும் கூட்டுச் சேர்த்திக்கோ பிரபு. எனக்கும் தம் அடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. இப்ப தான் நாம் பிரெண்ட்ஸ் ஆகிட்டோமே” என்று பிரபுவின் தோளில் தட்ட, அவனோ அவளை விசித்திரமாகப் பார்த்து வைத்தான்.. 

“சரி அதை விடு. உனக்குப் போலீஸ் ஆகுறது புடிக்கலன்னா ஸ்ட்ரிக்ட் ஆபீசர் கிட்ட நேரடியா சொல்லிற வேண்டியது தானே” என்றாள். 

“ம்க்கூம்… எங்க அண்ணா வரும் வண்டி சத்தம் கேட்டாலே எங்கடா ஓடிப்போய் ஒளியலாம்னு இடம் தேடுறவன் நான். நான் எங்க அண்ணா கிட்ட போய் அவர் பேச்சை மறுத்து பேசுறதா? நான் மாட்டேன்பா. அதும் இல்லாம எங்க குடும்பத்துல எல்லாருமே போலீஸ். எங்க தாத்தா, அப்பா, அண்ணா, சோ என்னையும் போலீஸ் ஆக்கணும்னு நினைக்கிறாங்க. பட் எனக்குன்னு ஒரு கனவு இருக்கு அரு” என்றவன் பெண்கள் செய்வது போல் இமைகளைப் படபடவென்று சிமிட்டியவாறு கண்ணில் கனவுடனும் கூற, 

அவனின் பாவனையில் அருந்ததிக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.. “சரி அந்தக் கனவு தான் என்னனுட்டுக் கொஞ்சம் சொல்லேன், நானும் தெரிஞ்சிக்கிறேன்” என்று நிஜமான ஆவலுடன் கேட்டாள்.. 

இதுவரை யாரும் அவனிடம் அவனது ஆசையைப் பற்றிக் கேட்டது இல்லை. அவனது அன்னை இருந்திருந்தால் ஒருவேளை கூறியிருப்பானோ என்னவோ...!! அதனால் அருந்ததி கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் 

“அதுவா, எனக்குன்னு ஒரு டுகாட்டி பைக், ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை, கைநிறைய சம்பளம். அப்புறம் நாலு பொண்ணுங்களை சைட் அடிக்கணும். அதுல ரெண்டை பில்ட்டர் பண்ணணும். மீதி ரெண்டுல ஒன்னை செலக்ட் பண்ணணும், ஜாலியா ஒரு வருஷம் ஊர் சுத்தணும். அப்புறம் அதே பொண்ணைக் கல்யாணம் பண்ணனும்” என்றவன், 

“இதெல்லாம் போலிஸ் ஆனா பண்ண முடியுமா...?” என்று ஏக்கத்துடன் கேட்டான். 

“அப்போ ஒனக்கு நெசமாவே போலீஸ் வேலை புடிக்கலயா...?” என்று அருந்ததி கேட்க, 

“ஆமா எங்க ஆயா சத்தியமா பிடிக்கல… வேலையா அது...?? ஒரு பொங்கல் தீபாவளின்னு லீவு உண்டா...? ராத்திரி பகல்னு நிம்மதியா தூங்க முடியுமா...? அடிக்கடி ட்ரான்ஸ்பர் பண்ணிருவாங்க. அதுவும் இல்லாம எனக்குத் துப்பாக்கின்னாலே பயம். அதைப் பார்த்தாலே என் கை நடுங்கும்” என்று கூறவும்.. 

“இவ்ளோ பயத்த வெச்சி கிட்டு தான் எங்கிட்ட நேத்துத் தில்லா பேசினியாக்கும்” என்று அவனை மேலும் கீழும் பார்க்க…

“அது ச்சும்மா உன்னை மிரட்டி பார்த்தேன். ஆனா நீதான் உல்டாவா என்னை மிரட்டுனே” என்றதும்…

“ஹா ஹா… சோ ஸ்வீட் பிரபு நீ. உன்னைய பார்த்ததும் எனக்குப் பயம் வரல. அதும் இல்லாம என்னைய யாராலும் மிரட்ட முடியாது. எனக்குப் பயம்ன்னா என்னன்னே தெரியாது. அந்தப் பயம் தான் என்னைய பார்த்து பயப்படணும்” என்றவள் எழுந்து நின்று பிரபுவைப் பார்த்தாள். அவனோ அவளைப் புரியாமல் பார்தான்… 

“டேய் மங்கூஸ், ரொம்ப யோசிக்காத. இந்த டயலாக் நம்ம தல ஒரு படத்துல பேசிருப்பார். கெத்தா இருக்குமேன்னுட்டு அத உங்கிட்ட அவுத்து வுட்டேன். ஹா ஹா சீக்கிரம் ரெடியாகி வா. என்னைய நீதேன் ஆபிஸ் கூட்டிட்டு போகணும், நேத்திக்கு அங்கிள் சொன்னாருல்ல…” என்று விட்டு சென்று விட்டாள்.. 

அறைக்குள் வந்து தயாராகி வெளியே வந்த அருந்ததி, அங்குப் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வண்டியை இயக்கி கொண்டிருந்தவனைக் கண்டு, 

“அட ரெடியாதேன் நிக்கிறியா” என்றபடி வேகமாகப் பைக்கின் அருகே சென்றவள், பைக்கில் அமர்ந்திருந்தவனின் தோளில் தட்டி “சூப்பர்டா, இப்படித் தான் பங்க்சுவாலிட்டி மெயின்டெயின் பண்ணணும்” என்றது மட்டும் இல்லாமல், அவனின் தோளை அழுத்தி பிடித்து, அவனது பின்னால் பைக்கில் ஏறி அமர்ந்தாள். 

அப்பொழுதும் அவளது வாய் சும்மா இல்லாமல், தன் கையால் அவன் தோளை அழுத்தி, “டேய் ச்சும்மா சொல்லக் கூடாது. ஒம் பாடியை கிண்ணுன்னு வெச்சிருக்கே. ஒன்னய எந்தப் பயிற்சியும் இல்லாம போலீஸ்ல சேர்த்துக்குவாய்ங்க” என்றவள், “ம்ம் சரி சரி வண்டியெடு, போலாம் ரைட்” என்றாள்… 

ஆனால் அவனோ இயக்கிய வண்டியை நிறுத்தி, தலை கவசத்தைக் கழட்டி விட்டு மெதுவாகத் திரும்பி அருந்ததியைப் பார்த்தான்.

“என்னடா வண்டியை நிப்பாட்டிட்டே...?” என்று கேட்ட அருந்ததியோ, அவன் தன்னைத் திரும்பிப் பார்த்து முறைக்கவும், 

கண்கள் விரிய “சா...சா..சா...சா…” என்றாள். அதற்கு மேல் அவளுக்கு வார்த்தையே வரவில்லை.. ஏனென்றால் அது பிரபு இல்லை கதிரோவியன்.. 

பிரபுவிற்கு முக்கியமான வேலை ஒன்றை கொடுத்து வெளியே அனுப்பி விட்டவன், தானும் ஒரு முக்கியமான இடத்திற்குச் செல்வதற்காகக் காரை தவிர்த்து விட்டு, அவனது புல்லெட்டைக் கிளப்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் அருந்ததி வந்து அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.. 

‘எங்கே மறுபடியும் இழுத்து கீழே தள்ளி விடுவானோ...?’ என்று பயந்தவள், அவளாகவே சட்டென்று பைக்கில் இருந்து இறங்கி, “ஏன் சார் நான் வண்டியில ஏறதுக்கு முன்னாடியே சொல்றது இல்லயா இது நீங்கதான்னு...?” 

“பிரபு என்னய ஆபிசில ட்ராப் பண்றதா சொல்லியிருந்தான்… அத்தேன் நான் பிரபுகுட்டினு நெனைச்சி ஒங்க பக்கத்துல உக்காந்துட்டேன். தப்பு ஒங்க மேலதேன். ஆனா நீங்க என்னய மொறைக்கிறீக” என்று படபடத்தாள்.

பிரபுவைத் தொட்டுப் பேசும் போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கதிரோவியன் என்றதும், இப்பொழுது உள்ளுக்குள் அவளுக்கு அப்படி ஒரு படபடப்பு வந்தது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க அவன் கேட்காமலேயே உளறி கொட்டி கிளறி மூடினாள். 

ஆனால் கதிரோவியனோ, அவள் பேச்சை கவனிக்காமல், “சேகர்” என்று கத்தி அழைத்தான்.. 

“சொல்லுங்க சார்” என்று உடனே ஓடி வந்தான் சேகர்.

“இவங்களுக்கு ஆட்டோ ஒண்ணு ஏற்பாடு பண்ணி குடுங்க” என்றவன் “கவனம்” என்று சற்று அழுத்திச் சொன்னான்.. 

ஆனால் அருந்ததியோ, “ஆட்டோ வெளியே தான் நிக்கும். நானே பார்த்துகிறேன். சேகர் அண்ணா நீங்க போங்க” என்றாள்.. 

சேகர் என்பவனோ கதிரோவியனின் பதிலுக்காக அவனைப் பார்த்தான்.

கதிரோவியனோ ‘சரி நீ போ’ என்பது போல் சேகரிடம் கண் காட்ட, அவன் நகர்ந்து விட்டான்.. 

தன் தோளைக் குலுக்கி விட்டு ஹெல்மட்டை அணிந்தவன், பைக் சாவியைத் திருகி ஸ்டார்ட் செய்யப் போனவனை, 

“கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா சார் ஒங்களுக்கு...? வெளியூர்ல இருந்து வேலை பார்க்க வந்தவ, நேத்தக்கி  பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சிருக்கேன், அதும் ஒங்க வீட்ல இருந்ததுனால. நீங்க என்னன்னா தனியா ஆட்டோல போகச் சொல்றீக. எனக்குப் பாதுகாப்பு குடுக்க வேண்டியது ஒங்க கடமை இல்லையா சார்...?” என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டாள். 

கதிரோவியனுக்கு அவளது பேச்சைக் கேட்டு எரிச்சலாக வந்தது. அவசரமாக ஒரு இடத்திற்கு அவன் போக வேண்டி இருக்க, ஆனால் அருந்ததியோ அவனை வழி மறித்து நின்றுக் கொண்டிருக்கிறாள்... 

யார் பேச்சையும் காது கொடுத்துக் கேட்காத கதிரோவியன், அருந்ததியின் பேச்சைத் தட்டி விட்டு ஏனோ செல்ல முடியவில்லை. அதனால் வந்த எரிச்சல்தான் இது...!!

“வெய்ட் கால் டேக்சி வரச் சொல்றேன்” என்றவன் தனது கைப்பேசியை எடுக்கப் போனான். 

அப்பொழுது வீட்டின் உள்ளே இருந்து வந்தார் சிவப்பிரகாசம். அங்கு மகனையும், அருந்ததியையும் பார்த்தவர், 

“அருந்ததி நீ இன்னும் ஆபிஸ் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கே...? முதல் நாளே லேட்டா போகலாமா...?” என்றவர் “பிரபு எங்கே...?” என்று கேட்டுக் கொண்டே “பிரபு” என்றபடி உள்ளே குரல் கொடுத்தார்.. 

“பிரபுவை நான் தான் வெளியே அனுப்பினேன் டாட். இவங்களை டேக்சி பிடிச்சி போகச் சொல்லுங்க” என்றான். 

“நோ கதிர்… நேத்து நடந்த சம்பவம் அருந்ததிக்குக் கண்டிப்பா பயத்தைக் கொடுத்திருக்கும்.  நாம கேர்புல்லா இருக்கணும். அவளையும் சேர்த்து நாம தான் பார்த்துக்கணும். அதனால இன்னைக்கு மட்டும் அவளை நீ ட்ராப் பண்ணிடு” என்றார். 

தந்தையைப் பார்த்த கதிரோவியன் திரும்பி அருந்ததியைப் பார்த்தான். அவளோ முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டாள். 

“இன்று மட்டும் தான் கதிர், நாளைக்குள்ள நான் அருந்ததிக்கு ஸ்கூட்டி, இல்லன்னா கார் ஏற்பாடு பண்றேன்” என்று அவன் தந்தை சொல்லவும், முதல் முறையாக அவர் பேச்சைத் தட்ட முடியாமல் “ம்ம்ம்” என்றான். 

“ஆல் தி பெஸ்ட் அருந்ததி” என்ற சிவப்பிரகாசத்தைப் பார்த்து சிரித்தவள்…

“தேங்க்ஸ் அங்கிள்” என்று விட்டு மெதுவாகப் பைக்கில் ஏறினாள். ஏனோ அவளுள் சொல்ல முடியாத உணர்வும் பதட்டமும் ஏற்பட்டது. 

அவள் அமர்ந்திருந்த பின்னிருக்கை சற்றுத் தூக்கலாக இருந்ததால், பேலன்ஸ் செய்து உட்கார முடியவில்லை அவளால். அவள் சரியாக அமர்வதற்குள் பைக் வேகமெடுத்துக் கேட்டைத் தாண்டி வெளியே சென்றிருக்க, 

எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தவள், அவனிடம் “சார் பைக்ல புடிக்க ஏதும் இல்ல, ஒங்களைப் புடிச்சுக்கவா?” என்று கேட்ட மறுநொடி அவன் சட்டென்று பிரேக் அடித்தான்.

பிரேக் போட்ட வேகத்தில், “சார்” என்று கத்தியவள், அவனின்  அனுமதி இல்லாமலே  அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு அமர்ந்ததும் அல்லாமல், தன் வலது கையை அவனது வயிற்றைச் சுற்றி போட்டுக் கொண்டு பயத்தில் தலையைக் கதிரோவியனின் முதுகில் சாய்த்துக் கொண்டாள்… 
  
                            ********
               


No comments:

Post a Comment