ஸ்வரம் 1

 



தீபஷ்வினியின் 

"என் இதயத்தின் ஸ்வரம் நீயடி"

பாகம்1


ஸ்வரம் 1..



அந்த இடமே புயல் அடித்தது போல் ஓய்ந்திருக்க, 'யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன..?' என்பது போல் இறுமாப்புடன் நின்றிருந்தான் அவன்..!!


அவன் மனைவியோ, கண்ணீர் வழிய அவன் முன்பு வந்து நின்றவள், "இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க..? இப்படி நடக்கணும்னு தானே இவ்வளவு நாளும் காத்திருந்தீங்க..? நீங்க நினைச்சது நடந்துருச்சில்ல.. போதுமா..? இப்ப உங்களுக்குச் சந்தோசமா..?" என்று அழுகையுடன் கேட்டவளைக் கொஞ்சமும் இரக்கமில்லாமல் பார்த்தான், அவளது கணவன். 


அவனது அந்தப் பார்வையில் 'இவனையா உருகி உருகி உயிருக்கு உயிராகக் காதலித்தேன்..? இவனையா மனதில் பொத்தி பொத்தி வைத்துப் போற்றினேன்..? இவனுக்காகவா இவன் செய்த அனைத்தையும் பொறுத்துப் போனேன்..!!' என நினைத்து மனதுக்குள் வெறுத்துப் போனாள் அவள். அந்த வெறுப்பை முகத்தில் கொண்டு வந்து கணவனை வெற்றுப் பார்வை பார்த்தாள். 


'இனி ஒரு சொட்டுக் கண்ணீர் கூட இவன் முன் சிந்தக் கூடாது!' என்று முடிவெடுத்தவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுத்தித் துடைத்து விட்டு வேகமாகத் தங்களது அறைக்குச் சென்றாள். 


சென்ற வேகத்தில் திரும்பி வந்து, கணவனின் முன் நின்றவளின் கையில் ஒரு பேப்பர் இருந்தது. அதைக் கண்டு, அவன் தன் புருவத்தைத் தூக்கிக் கேள்வியாக அவளைப் பார்க்க,


"இது என்னன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? நமக்குக் கல்யாணம் ஆன அன்னைக்குக் கல்யாணப் பரிசா, முதல் ராத்திரி அப்போ, நீங்க எனக்குக் கொடுத்த விவாகரத்துப் பத்திரம் தான்..!! இத்தனை நாளா என் காதலால் உங்களை மனுசனா மாத்த முடியும்ங்கிற நம்பிக்கையில் காத்திருந்தேன். ஆனா இன்னைக்கு நடந்தது…" என்று வாய் பொத்தித் தனது அழுகையை அடக்கியவள்… 


"இன்னைக்கு நடந்த விஷயத்தில், உங்களை என்னால் எப்பவுமே மன்னிக்க முடியாது! அதான் இத்தனை நாளா நீங்க கேட்ட டிவோர்ஸை, இப்ப, இந்த நிமிஷம் தர முடிவு பண்ணிட்டேன். இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. இனி நீங்க யாரோ, நான் யாரோ..." என்றவள் மடமடவென்று அதில் கையெழுத்து போட்டு விட்டு, கணவனின் முகத்திலேயே அந்த விவாகரத்துப் பேப்பரை விட்டெறிந்து விட்டு, அடுத்த நொடி புயல் போல் அந்த வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். 


சில மாதங்களுக்கு முன்பு… 


கனிவாய் வள்ளி 

தெய்வானைக் கணவா 

உணர்வோர் கதிர்வேலா

முனிவாய் 

எனில் நான் 

எங்கடைவேன் முத்தா

அருணை முனிக்கு அரசே

இனிவாதனையால் 

அடியேன் என்றும் 

குன்றா வணம் வாழ்

சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!


என்ற முருகன் மந்திரத்தைப் பூஜை அறையில் அமர்ந்து, கண்களை மூடி, மனமுருகி கூறிக் கொண்டிருந்தாள், அந்த வீட்டின் கடைக்குட்டி ஸ்னேகா.


அவள் அந்த மந்திரத்தை 108வது முறையாக சொல்லி முடிக்கவும், அதே வீட்டின் மாடியறையில் இருந்து, அந்த வீடே அதிரும் அளவிற்கு ஒலித்தது ஒரு ஆங்கிலப் பாடல்...


Who let the dogs out

Woof, woof, woof, woof, woof

Who let the dogs out

Woof, woof, woof, woof, woof

Who let the dogs out

Woof, woof, woof, woof, woof

Who let the dogs out..


என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்த அடுத்த வினாடி, ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த ராதா, தன் கையில் தயாராக வைத்திருந்த பஞ்சை எடுத்துக் காதில் சொருகிக் கொள்ள. வீட்டை ஈரத் துணியால் துடைத்துக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண்ணோ, வாளியில் இருந்த அழுக்கு நீரை தரையில் கவிழ்த்திருக்க, சமையல் அறையில் இட்லிக்கு சட்னி அரைத்துக் கொண்டிருந்த மோகனாவோ, அரைத்த கலவையைப் பதற்றத்தில் கைத் தவறி பாத்திரத்தோடு கீழே கொட்டி இருந்தாள். 


அவளது பக்கத்தில் நின்றிருந்த அவ்வீட்டின் மற்றொரு வேலைக்காரப் பெண்ணோ, இது தினமும் நடப்பது தான் என்பதால், எப்பொழுதும் போல் கீழே கொட்டியிருந்த சட்னியைத் துணி கொண்டு துடைக்க ஆரம்பித்தாள்.


கோபத்தில் முகம் 'ஜிவுஜிவு' எனச் சிவக்க, சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மோகனா, ஹாலில் அமர்ந்திருந்த தன் மாமியாரிடம் சென்று, 


"இப்படிப் புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உக்காந்து இருக்கீங்களே..!! மேல போய் அந்த ரெண்டையும் ரெண்டு சாத்து சாத்துவோம்னு கொஞ்சமாவது தோணுதா..?" என்று அவரிடம் எரிந்து விழுந்தாள்.


ராதாவோ, மருமகளை எகத்தாளமாகப் பார்த்து, "நான் எதுக்குடி போய் சாத்தணும்..? அந்த ரெண்டும் நீ பெத்தது தானே..? நீயே போய் அடக்கு! ஹூம்…" என்று கழுத்தை ஒரு வெட்டு வெட்ட, அவரது பதிலில் மாமியார் என்றும் பாராமல் முறைத்துப் பார்த்தாள் மோகனா.


'இந்த முறைப்புக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!' என்பது போல் அவளது பார்வையைக் கண்டுகொள்ளாதவர், 


"இங்க பாருடி.. எப்பவும் சொல்றதைத்தான் இப்பவும் சொல்றேன். என் பேரன் விக்ராந்த் இருக்கானே, அவன் என் புள்ள கார்த்திக் மாதிரி. அவ்வளவு அமைதி..!! இதோ! சாமி ரூம்ல பூஜை பண்ணிட்டு இருக்காளே என் சின்ன பேத்தி, அவ அப்படியே உருவத்திலும் சரி, குணத்திலும் சரி என் பொண்ணு ஓவியா மாதிரி..!! ஆனா, அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பெத்து வச்சிருக்கியே ரெண்டு வானரங்க, அதுங்க அப்படியே உன்னை மாதிரி..!! அதனால நீ தான் போய் அவங்களை அடக்கணும்…" என்று கூறி விட்டு மருமகளை மேலும் நக்கலாகப் பார்த்து வைத்தார்.


மோகனாவோ, "வயசான காலத்துல உங்களை முதியோர் இல்லத்தில கொண்டு போய் சேர்க்காம, பாவம் பார்த்து, விட்டு வச்சிருக்கேன்ல. நீங்க இப்படித்தான் பேசுவிங்க. இருங்க, இன்னைக்கு நைட் இதைப் பத்தி என் புருஷன்கிட்ட, அதான் உங்க புள்ளகிட்ட, டிஸ்கஸ் பண்றேன்…" என்று தன் பங்கிற்கு மாமியாரிடம் எகிறி விட்டு மாடிப்படி ஏறினாள் மோகனா.


ராதாவோ கொஞ்சமும் அசராமல், "மொதல்ல அதைச் செய்யுடி! உனக்குப் புண்ணியமா போகும். உன் தொல்லை இல்லாம அங்கயாவது நிம்மதியா இருப்பேன்" என்று முணுமுணுத்தார். 


படியேறியபடியே, "இருங்க இருங்க... இன்னைக்குச் சாப்பாட்டுல உங்களுக்கு மட்டும் உப்பை அள்ளிப் போடுறேன்…" என்றுவிட்டு வேகமாகச் சென்று மகள்களின் அறைக்கதவை படாரென்று திறந்தாள்.


Who let the dogs out

Woof, woof, woof, woof, woof


என்ற பாடலுக்கு ஏற்றபடி, கட்டிலில் ஏறி நின்று, இரவு உடையான பேன்ட் டீசர்ட்டுடன், கையில் ட்டூத் ப்ரெஷை வைத்துக் கொண்டு, பாட்டு படிப்பது போல் பாவலா செய்தபடி, 'ஆடுகிறோம் பேர்வழி' எனக் குதித்துக் கொண்டிருந்தார்கள், இரட்டையர்களான நேகா அன்ட் மேகா இருவரும்..!! 


அவர்களைப் பார்த்துக் கோபம் தலைக்கேற, வேகமாகச் சென்று ஸ்பீக்கரை அணைத்தாள் மோகனா.


பாடல் நின்றதும் தாங்களும் குதிப்பதை நிறுத்தி விட்டு, யார் ஸ்பீக்கரை அணைத்தது என்று இருவரும் ஒருசேர பார்க்க, அங்கே தங்களை முறைத்தபடி நின்றிருந்த தாயை பார்த்ததும், 


"ஓஹ்! மோஹிமா... செம சாங்..!! எதுக்கு ஆப் பண்ணே..?" என்றபடி நேகா கட்டிலில் இருந்து இறங்கி, மீண்டும் பாடலை ஒலிக்க விட, அதை மீண்டும் அணைத்த மோகனா,


"ஏன்டி.. காலங்காத்தால இப்படி வீடே அதிர்ந்து போற மாதிரி பாட்டு சத்தத்தைக் கூட்டி வச்சிருக்கீங்களே... கொஞ்சமாவது மண்டையில வேணாமா..? இவளுக்குத்தான் அறிவில்லன்னா, உனக்குமாடி அறிவில்ல..?" இன்னமும் கீழே இறங்காமல் கட்டிலில் நின்றிருந்த மேகாவைப் பார்த்துத் திட்டினாள் மோகனா.


அவளோ, "இங்க பாருங்க மோஹிமா.. கண்ணுக்குத் தெரியாததைப் பத்தி எல்லாம் என்கிட்ட கேக்க கூடாது. தெரிஞ்ச கேள்வியா கேளுங்க, டான்னு பதில் சொல்றேன்" என்றாள் மேகா.


"நிஜமா சொல்றேன்டி.. உங்க ரெண்டு பேரையும் பெத்ததுக்கு ஏதாவது குட்டிச்சுவத்துல தான் போய் தினமும் முட்டிக்கணும்…"


"எதுக்கு மோஹிமா குட்டிச்சுவர்..? அதான் மிஸ்டர் கார்த்திக் நம்ம வீட்டைச் சுற்றி அம்மாம்பெரிய காம்பவுண்ட் சுவர் கட்டி வச்சி இருக்காரே..!! அதுல போய் ஹேப்பியா முட்டிக்கோ!" என்று அசால்ட்டாக நேகா கூற,


"வாய் வாய்... வர வர ஓவர் வாய்..!!" என்று திட்டிய மோகனா, நேகாவின் காதைப் பிடித்துத் திருக,


"ஆஆ! மோஹிமா... புள்ளைங்கன்னா இப்படி ஆடி பாடிட்டுத்தான் இருப்பாங்க. வேணும்னா நீயும் கூட சேர்ந்து ஆடு! அதை விட்டுட்டு எங்க மேல கோபப்பட்டா எப்படி..?" என்று கேட்டபடி, தாயிடம் இருந்து தனது காதைக் காப்பாற்றிக் கொண்டு, சற்றுத் தள்ளி போய் நின்று கொண்டாள் நேகா. 


"என்னடி இப்படிச் சொல்லிட்டே..? மோஹிமாக்கு வயசாகிடுச்சு. இன்னும் ஒரு வருஷத்துல பேரனோ, பேத்தியோ வரப் போறாங்க. அதுக்கு அப்புறம் நிஜமாவே பாட்டி தான்..!! அவங்ககிட்ட போய் ஆடச் சொல்றியே..?" என்று மேகா தாயை கேலி செய்தாள்.


"ஆமாடி, வீம்புக்கு ஆடுறேன் பேர்வழின்னு ஆடி, கீழே கீழே விழுந்து வச்சா, மிஸ்டர் கார்த்திக்கிற்குத்தான் கஷ்டம்…" என்று நேகா மற்றவளை ஏத்தி விட,


"ஆமா... நீ சொல்றதும் சரிதான்…" என்று கூறிச் சிரித்தாள் மேகா.


"ஏய்... யாருக்குடி வயசாகிடுச்சு..? எனக்கா..!! இப்ப பாட்டை போடுங்கடி, உங்களை விட நான் நல்லாவே ஆடுவேன். பார்க்கிறீங்களா..?" என்றபடி பிள்ளைகளுக்குப் போட்டியாக ஆட களத்தில் இறங்கத் தயாரானாள் மோகனா. 


அப்பொழுது, "உனக்கு இங்க என்ன வேலை..?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் கார்த்திக்.  


காதோரம் மட்டும் சில முடிகள் நரைத்திருக்க, அன்றிருந்த அதே கம்பீரம் கொஞ்சமும் குறையாமல், அப்படியே இருந்தான் கார்த்திக். 


தந்தையைப் பார்த்ததும், "குட் மார்னிங்ப்பா" என்று மகள்கள் இருவரும் சேர்ந்தார் போல், தந்தைக்குக் காலை வணக்கம் கூறி விட்டு, அவனை ஆளுக்கொரு பக்கமாகக் கட்டிக் கொண்டனர்.


மகள்களின் தலையைத் தடவி கொடுத்த கார்த்திக், "ரெண்டு பேரும் இன்னும் பிரெஷ் கூடப் பண்ணாம, உங்க அம்மாகிட்ட என்ன வம்பு பண்ணிட்டு இருக்கீங்க..? நேகா! உனக்கு ஆபிசுக்கு டைம் ஆகுதுல, ஓடு! மேகா நீயும் போ!" என்று அவன் அவர்களை விரட்ட,


"ப்பா... நாங்க சமத்தா எழுந்து குளிக்க ரெடி ஆகிட்டுத்தான் இருந்தோம். அதுக்குள்ள இந்த மோஹிமா வந்து, பாட்டை போடுங்கடி, நான் டான்ஸ் ஆடணும்னு அடம்பிடிச்சுட்டு இருக்காங்க…" மேகா கூற, அவளை இடுப்பில் கை வைத்து முறைத்துப் பார்த்தாள் மோகனா.


"எஸ் ப்பா.. இதுக்குத்தான் நாங்க அப்பவே சொன்னோம்.. இந்த மோஹிமா வேணாம், வேற அம்மா வாங்கிக்கலாம்னு.. ம்பச்… நீங்க தான் இந்த பெட்ரோமாஸ் லைட்டு தான் வேணும்னு அடம் பிடிச்சீங்க. இப்ப பாருங்க, எங்களுக்குத்தான் கஷ்டம்…" என்று கூறி விட்டு, தாயின் அடிக்குப் பயந்து தந்தையின் முதுகிற்குப் பின் ஒளிந்து கொண்டாள் நேகா. 


அதற்குள் மகளை அடிக்கப் பாய்ந்து வந்த மனைவியைப் பிடித்துக் கொண்ட கார்த்திக், "நீங்க ரெண்டு பேரும் காபி குடிக்க ஓடுங்க…" என்று கூறிய அடுத்த நிமிடம் அங்கிருந்து, "தேங்க்ஸ்ப்பா…" என்ற இருவரும் அன்னைக்கு அழகு காட்டி விட்டு ஓடி விட்டனர். 


"என்ன பேச்சு பேசிட்டுப் போறாளுங்க..? நீங்க என்னன்னா பார்த்துட்டுச் சும்மா நிக்கிறீங்க…" கணவனிடம் சண்டைக்குப் போனாள் மோகனா. 


"ஏன்டி.. எப்ப பார்த்தாலும் இப்படி அவங்க ரெண்டு பேர் கிட்டையும் மல்லுக்கு நிக்கிறே..? உங்க மூணு பேரையும் சமாளிக்கிறதுக்குள்ள எனக்குத்தான் போதும் போதும்னு ஆகுது" என்று கூறிய கணவனை முறைத்துப் பார்த்த மோகனா,


"எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்..!! அதான் இப்படிச் சொல்பேச்சு கேக்க மாட்டோம்னு வளர்ந்து நிக்கிறாங்க. ஆம்பள பிள்ளையை அடிச்சு வளர்க்கணும், பொம்பளை பிள்ளையை அன்பா வளர்க்கணும்னு சொல்லுவாங்க. ஆனா நம்ம வீட்ல அப்படியே தலைகீழா இருக்கு…" என்றவள், அப்பொழுது தான் கவனித்தாள், தான் தன் கணவனின் அணைப்பில் இருக்கிறோம் என்பதை..!! உடனே அவனிடம் இருந்து விலக முயல, கார்த்திக்கின் பிடி இரும்பாக இருந்தது.


"என்னங்க... என்ன இது..? விடுங்க…" என்று கணவனிடமிருந்து திமிறினாள்.


"அதெப்படி மோகனா..!! அப்போ பார்த்த அதே அழகு, கொஞ்சமும் குறையாம, இப்பவும் அப்படியே இருக்க..?" என்று கிறக்கமாகக் கேட்டபடி மனைவியின் ஈரக் கூந்தலில் முகம் புதைத்தான் கார்த்திக்.


"அச்சச்சோ! இது பிள்ளைங்க ரூம். இங்க வச்சு என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? ரெண்டு பேரும் திடீர்னு வந்து நிப்பாளுங்க…" என்றவள், விலகுவதிலேயே குறியாய் இருந்தாள்.


அவனோ, "அப்போ நம்ம ரூம்க்குப் போகலாமா..?" என்று கேட்டு விட்டு மேலும் அவளுள் புதைய முயன்றான்.


"பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்டானாம். இன்னும் ஒரு வருஷத்துல தாத்தா ஆகிருவீங்க. ஆனா அய்யாவுக்கு இப்ப தான் இளமை திரும்புதுன்னு நினைப்பு. விடுங்க என்னை…" என்று கூறவும்,


சட்டென்று மனைவியைத் தன்னிடம் இருந்து விலகி நிறுத்திய கார்த்திக், "என்னடி இப்படிச் சொல்லிட்ட..? என்னைப் பார்த்தா கிழவன் மாதிரியா இருக்கு..? இப்ப நான் நினைச்சா கூட, உன்னோட சபதத்தின்படி, மீதம் இருக்கும் ஆறு குழந்தைகளுக்கு உன்னை அம்மா ஆக்க முடியும், பார்க்கிறியா..?" என்று அவன் வீர வசனம் பேசினான்.


அவளோ, கணவனை நன்றாக நெருங்கி நின்று, "ஹலோ மிஸ்டர் கார்த்திக்! என்ன எனக்கு ஆப்ரேஷன் பண்ணியாச்சுங்கிற தைரியத்துல, இப்படி வசனம் பேசுறீங்களா..? ஒன்னும் பிரச்சனை இல்ல. நாளைக்கே டாக்டர்கிட்ட போறேன். ஒரே ஒரு ரீ-ஆபரேஷன் பண்ணிக்கிறேன். அடுத்த பத்தாம் மாசம் ட்ரிபிள்ஸ் பெத்துக்குறேன். எப்படி வசதி..?" என்று கண் சிமிட்டிக் கேட்க,


'செஞ்சாலும் செய்வா ராட்சஸி..!!' என்று 'கப்சிப்' என வாயைப் பொத்தி அவன் தான் அடங்கிப் போக வேண்டி இருந்தது. ஆனாலும் தன் கெத்தை விடாமல், "இப்படி வளவளன்னு பேசிட்டு இருக்காதே! இன்னைக்கு ஆபிசுக்குச் சீக்கிரம் போகணும். நான் ரெடி ஆகுறேன் நீ போய் டிபன் எடுத்து வை…" என்றுவிட்டு அங்கிருந்து மாயமாகி இருந்தான் கார்த்திக்.


அதில் வாய் விட்டுச் சிரித்த மோகனா, அலங்கோலமாகக் கிடந்த மகள்களின் அறையை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள். 


கீழே வந்த மேகா, நேகா இருவரும் "ஹாய் கிராண்ட்மா!" என்று அழைத்தபடி, தங்களது பாட்டியின் அருகே இருபக்கமும் அமர்ந்து கொண்டனர்.


அவர்கள் இருவரையும் முறைத்த ராதா, "ஏன்டி.. குளிக்காம கீழே வரக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..? கொஞ்சமாச்சும் என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கிறீங்களா..?" 


"கிராண்ட்மா! இந்த ஆடு மாடு இருக்குல்ல, அதுங்க தான் சீக்கிரம் குளிக்குமாம். நாம மனுசங்க..!! சோ மெதுவா தான் குளிக்கணுமாம், நேத்து தான் டீவியில சொன்னாங்க…" என்று மேகா கூறவும்,


"அப்போ நம்ம கிராண்ட்மா அனிமல்னு சொல்றியா..?" என்று நேகா கேட்க,


"இதுக்குத்தான்டி உங்ககிட்ட நான் வாயே குடுக்குறது இல்ல…" என்று அவர் கடுப்புடன் கூறிக் கொண்டிருக்கும் போது, தனது பூஜையை முடித்துக் கொண்டு ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தாள் ஸ்னேகா.


அவளைப் பார்த்ததும் "அங்க பாருங்கடி.. பொண்ணுன்னா அவ பொண்ணு..!! உங்களை விட சின்ன வயசுதானே அவளுக்கு..? இன்னும் காலேஜ் படிப்பைக் கூட முடிக்கல. ஆனா எவ்வளவு பொறுப்பா இருக்கா..? அவளைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்துங்களேன்டி..!!" என்று தன் சின்ன பேத்தியை அவளது உடன் பிறப்புகளிடமே பெருமையாகப் பேசிச் சிலாகித்தார் ராதா. 


"அப்போ பூஜை பண்ணினா பொறுப்பு வரும்னு சொல்றிங்க, அப்படித்தானே கிராண்ட்மா..?" என்று மேகா இழுத்துக் கேட்க, 


"தென் ஓகே... நாளைக்கே ஒரு பூஜையை போட்டுறலாமா..?" என்று தங்களது பாட்டியை ஜாடையாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள் நேகா.


அதற்குள் அவர்களை நெருங்கி விட்ட ஸ்னேகா, "அக்கா! பாவம்க்கா பாட்டி. அவங்களை விட்டுருங்க…" என்று சிரித்துக் கொண்டே கூறியவள், பாட்டியின் முன் கற்பூர ஆரத்தி தட்டை நீட்டினாள்.


அதைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்ட ராதா, "அம்மாடி..!! இன்னைக்கு உனக்கு பரீட்சை இருக்குல்ல. போம்மா… போய் கிளம்பி வா! நான் டிபன் எடுத்து வைக்கச் சொல்றேன்" என்று கனிவுடன் கூறினார்.


அவளோ, "சரி பாட்டி…" என்றுவிட்டு "அக்கா! மோஹிமா எங்கே..? உங்க ரூம்க்குத்தானே வந்தாங்க..?" என்று கேட்டாள். 


நேகாவோ எழுந்து தங்கையின் அருகே சென்று அவளது காதில், "ஸ்னேக் பேபி! உன்னோட செல்ல மோஹிமாவும், கார்த்திக்கும் எங்க ரூம்ல ரொமான்ஸ் பண்ணிங்... அதான் நாங்க வெட்கப்பட்டு ஓடி வந்திங்…" என்று கூறிய அடுத்த நொடி, தலையில் கொட்டு வாங்கி இருந்தாள்.


"ஷ் அஹ்ஹ்…" என்று தலையைத் தடவியபடி வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் நேகா.


அங்கே, உருவத்திலும் கம்பீரத்திலும் தன் தந்தையை அச்சு அசலாகக் கொண்டு நின்றிருந்தான், கார்த்திக் - மோகனா தம்பதியரின் மூத்த புதல்வன் விக்ராந்த்..!! 


"ஹூம் ப்ரோ... எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..? வளர்ற பிள்ளை தலையில் கொட்டாதேன்னு…" என்று சிணுங்கியபடி தன் அண்ணன் விக்ராந்த்தை முறைத்தாள் நேகா.


"யார்கிட்ட என்ன பேசுறதுன்னு உனக்குத் தெரியாதா..? அவகிட்ட பேசுற பேச்சா அது..?" என்று தங்கையை அதட்டிய விக்ராந்த், "ஸ்னேகா! நீ காலேஜ்க்குக் கிளம்புமா. உன்னோட ஸ்கூட்டி சர்விஸ்ல இருந்து இப்ப தான் வந்தது. வெளியே நிக்கிது. சாவி அதிலேயே இருக்கு. பார்த்துக்கோ…" என்று அவன் சின்ன தங்கையிடம் கூற,


"தேங்க்ஸ்ண்ணா…" என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள். 


அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ராதா, "அப்படித்தான்டா ராசா... இதோ! இவளுக்கும் சேர்த்து ரெண்டு போடு. அடங்கவே மாட்டேன்கிறா..!!" என்று தன் பேரனிடம் மேகாவையும் கைக் காட்டி விட்டு, மருமகள் இன்னும் கீழே வரவில்லை என்றதும், எழுந்து காலை சமையல் வேலையை மேற்பார்வை பார்க்கச் சென்றார். 


"ப்ரோ! என்னய்யா கொட்டுறே..? இரு இரு... எனக்கும் ஒரு காலம் வரும். அப்போ நானும் உன்னைக் கொட்டுவேன்…" என்றாள் நேகா.


"அடியேய்... ப்ரோ இருக்கும் வளர்த்திக்கு, ஏணி வச்சி ஏறினா கூட அவன் தலை உனக்கு எட்டாது…" என்று தன் அண்ணனைக் கிண்டல் செய்தாள் மேகா. 


"உங்க ரெண்டு பேருக்கும் வாயே வலிக்காதா..? எப்ப பாரு லபலபானு பொரிஞ்சிக்கிட்டே இருக்கீங்க. மோஹிமா உங்களைத் திட்டுறதுல தப்பே இல்ல..!!" என கூறிக் கொண்டே சோபாவில் அமர்ந்தவன், டீபாயின் மீதிருந்த அன்றைய நாளிதழை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான்.


அதற்குப் பதில் சொல்ல, "ப்ரோ…" என்று ஆரம்பிக்கவும், மேகாவின் மொபைல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. 'யார்' என்று பார்த்தவளின் முகத்தில் வெட்கம் வந்தது.


அதைக் கவனித்த நேகா, "ப்ரோ! அங்கே பாரேன்…" என்று மேகாவைக் கண் காட்ட, தங்கையைப் பார்த்தவன், "என்ன மேகா..? போன்ல யாரு..? மாப்பிள்ளையா..?" என்று கேட்டான்.


"எஸ் ப்ரோ... நான் பேசிட்டு வரேன்…" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


"குடுத்து வச்சவ..!! இன்னும் ரெண்டு மாசத்துல மாமா பையனையே கல்யாணம் பண்ணிக்கப் போறா. பெத்தது தான் பெத்தாங்க.. கூட ஒரு பையனை மாமா பெத்து இருக்க கூடாதா..? ஹ்ம்ம்…" என்று ராகம் போட்டு இழுத்துக் கூறவும், தங்கையை முறைத்தான் விக்ராந்த்.


"ஹி ஹி... ச்சில் ப்ரோ ச்சில்…" என்று அசடு வழிந்தவள், "கூப்பிட்டீங்களா க்ராண்ட்மா..? இதோ வந்துட்டேன்…" என்றபடி அங்கிருந்து அவளும் நகர்ந்து விட்டாள். ஏனெனில் அவர்களின் விளையாட்டுப் பேச்சை ஓரளவுக்குத்தான் அவனும் ரசிப்பான். வரம்பு மீறினால் தங்கைகள் என்றும் பார்க்க மாட்டான். 


அடுத்த அரைமணி நேரத்தில் அந்த வீடு பரபரப்பை தத்தெடுத்தது. கார்த்திக் மற்றும் விக்ராந்த் அலுவலகம் செல்ல கிளம்பி வர, நேகாவும் அவள் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் செல்ல கிளம்பி வந்தாள். ஸ்னேகாவோ கல்லூரிக்குச் செல்ல தயாராகி வந்தாள். மேகா தன் வருங்கால கணவனுடன் பேச ஆரம்பித்து விட்டதால், இப்போதைக்கு அவள் வர மாட்டாள் என்பதால், அவளை யாரும் அங்கே எதிர்பார்க்கவில்லை.


அனைவரும் டைனிங் ஹாலில் அமர்ந்திருக்க, எல்லோருக்கும் காலை உணவை பரிமாற ஆரம்பித்தாள் மோகனா. 


கார்த்திக்கும், விக்ராந்த்தும் வேலை விஷயம் பேச, நேகா அலுவலகம் செல்ல நேரம் ஆகி விட்டது என்று அரக்க பறக்க நின்று கொண்டே, 'சாப்பிட்டேன் பேர்வழி' என்று கொஞ்சம் போல் கொறித்து விட்டுக் கிளம்பி விட்டாள். 


"இப்படி ஓடுறதுக்கு நம்ம ஆபிசுலேயே அவ வேலை பார்க்கலாம்…" என்று மகளின் நலனில் அக்கறை கொண்டு கூறினாள் மோகனா.


"நானும் எவ்வளவோ அவகிட்ட சொல்லிட்டேன். கேட்டா தானே..?" என்று தன் பங்கிற்குப் பேத்தியை அக்கறையுடன் கடிந்தார் ராதா.


"விடுங்கம்மா... சொந்த ஆபிஸ்ன்னா முதலாளி பொண்ணுன்னு மரியாதை கொடுத்து ஒதுக்கி வச்சிருவாங்க. சுதந்திரமா வேலை பார்க்க முடியாதுனு நினைக்கிறா. அவ சொல்றதும் சரி தானே..?" என்று கார்த்திக் கூறவும்,


"என்னவோ போ... மேகாக்கு அமைஞ்ச மாதிரி நல்ல மாப்பிள்ளை இவளுக்கும் கிடைச்சுட்டா நிம்மதியா இருக்கும்…" என்று அவர் கூற,


"என்னத்தை இப்படிச் சொல்லிட்டீங்க..? அவளுக்குத்தான் நம்ம ஓவியா பையன் இருக்கானே..!! அப்புறம் எதுக்கு மாப்பிள்ளை கிடைக்கணும், அது இதுன்னு பேசறீங்க..?" மாமியாரைக் கடிந்தாள் மோகனா.


"அம்மாடி! அவன் எனக்கும் பேரன் தான்..!! ஆனா, அவன் குணத்துக்கு நம்ம நேகா குணம் சரியா வருமான்னு தான் யோசிக்கிறேன்…" எனப் பேரனின் குணம் அறிந்தே, தன் பேத்தியை அவனுக்கு மணமுடிக்க யோசித்தார் அந்த மூதாட்டி. 


"நீங்க எதுவும் யோசிக்க வேணாம் அத்தை. மேகா என் அண்ணன் பாலா வீட்டுக்கு மருமகன்னா, நேகா... ஓவியா வீட்டுக்கு மருமக. இதை எப்பவும் யாரும் மறுக்க கூடாதுன்னு எப்பவோ சொல்லிட்டேன்…" என்று அழுத்திக் கூற, கார்த்திக்கோ அமைதியாக இருந்தான். 


"இப்ப எதுக்கு இந்தப் பேச்சு..? அதெல்லாம் நடக்கும் போது பார்த்துக்கலாம்…" என்று அப்போதைக்கு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் விக்ராந்த். 


அங்கே நடந்து கொண்டிருந்த வாக்குவாதத்துக்கும், தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது போல், நன்றாக உண்டு விட்டு, "மோஹிமா! அப்பா! நான் காலேஜ் போய்ட்டு வரேன். பை அண்ணா… போய்ட்டு வரேன் பாட்டி" என்று பாட்டிக்கு மட்டும் அவரது கன்னத்தில் முத்தம் வைத்தவள், புத்தகப் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினாள் ஸ்னேகா.


"ஸ்னேகா! ஒரு நிமிஷம் நில்லுடா. நேத்து ரவா லட்டு செஞ்சேன்ல, அது ஒரு டப்பால போட்டு வச்சிருக்கேன். அதை எடுத்துட்டுப் போய் அத்தை வீட்ல கொடுடா. ரம்யாக்கு ரொம்பப் பிடிக்கும்…" என்ற மோகனா, அந்த டப்பாவை எடுத்து வந்து மகளிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டவள் வாசலை நோக்கி நடந்தாள். 


"ஸ்னேகா! கவனம்மா..!!" என்று கார்த்திக் கூற, "சரிப்பா…" என்றவள், வெளியேறி தனது ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு, தனது அத்தை ஓவியாவின் வீட்டை நோக்கிச் செலுத்தினாள் ஸ்னேகா.


*****


பேபிஸ் இந்த கதையை முழுசா படிக்க நினைக்கிறவங்க

ஸ்வரம் 1👇

https://amzn.in/d/9S7Bk9S


ஸ்வரம் 2👇

https://amzn.in/d/bhTXk65




2 comments:

  1. Inda story padichadu Pola iruke

    ReplyDelete
    Replies
    1. எஸ் மா படிச்சு இருப்பீங்க😍
      இது ரீரன் ஸ்டோரி..🙌

      Delete