ஸ்வரம் 2

 


ஸ்வரம் 2… 



குறை ஒன்றும் இல்லை

மறைமூர்த்தி கண்ணா… 

குறை ஒன்றும் இல்லை 

கண்ணா….

குறை ஒன்றும் இல்லை

கோவிந்தா.


என்ற மெல்லிய குரல் பூஜை அறையில் இருந்து மிதந்து வந்தது. அதை ரசித்துக் கேட்டபடி, கணவனுக்குத் தேவையானதை ஒவ்வொன்றாக எடுத்துக் கட்டிலில் வைத்துக் கொண்டிருந்தாள் ஓவியப்பாவை. 


குளித்து முடித்து, குளியல் அறையில் இருந்து இடுப்பில் டவலுடன் தலையில் ஈரம் சொட்ட, மனைவியின் பின்னே வந்து நின்றான் ரவிவர்மன். 


கணவனின் வரவை உணர்ந்து, "என்னங்க… எல்லாம் எடுத்து வச்சிட்டேன், சீக்கிரம் ட்ரெஸ் பண்ணிட்டு வாங்க. நான் கீழே போறேன்" என்று அவள் கூறவும்,


அவனோ, மேலும் அவளை நெருங்கி நின்று தலையை வேகமாக ஆட்டினான். அதில் அவனது தலை முடியில் இருந்து தெறித்த ஈரம், ஓவியாவின் கழுத்தில் பட்டு, அவளது உடல் சில்லென்று சிலிர்த்தது.


"ரவி! என்ன விளையாட்டு இது..? சின்ன பிள்ள மாதிரி..!!" என்று கேட்டவள், கட்டிலில் கைகளால் துழாவி, அங்கே கிடந்த டவலை எடுத்து, ரவிவர்மனை நோக்கித் திரும்பி நின்றவள், "இந்தாங்க... மொதல்ல தலையைத் துவட்டுங்க…" என்றாள்.


அவனோ, டவலுடன் மனைவியின் கைப் பிடித்துத் தன் தலையில் வைத்தவன், "நீயே துவட்டி விடு பேபி…" என்றான்.


"என்னங்க... குட்டிமா இன்னும் காலேஜ் போகல. வீட்ல தான் இருக்கா. ஞாபகம் இருக்கட்டும். கதவு சும்மா சாத்தி தான் வச்சி இருக்கேன், திடீர்னு வந்து நிப்பா. சொன்னா கேளுங்க…" என்று கூறினாள்.


"அதெல்லாம் வர மாட்டா. என் பொண்ணு பூஜையில் பிசி. ஏய்! தலையைத் தானே துவட்டி விடச் சொல்றேன். என்னமோ நான்…" என்று மனைவியின் காதில் மேற்கொண்டு அவன் கிசுகிசுத்தான்.


"அயோ... என்ன பேசறீங்க…" என்று முகம் சிவந்த ஓவியா, கணவனின் மார்பில் ஒரு அடி அடிக்க, 


"ஹா ஹா…" என்று வாய் விட்டுச் சிரித்த ரவிவர்மன், மனைவியின் இடையில் கைக் கொடுத்து இழுத்து, தன்னோடு அணைத்துக் கொண்டான்.


கணவனின் செயலை ரசித்தாலும், "நீங்க ஒரு பெரிய பிஸ்னெஸ் மேன்ங்கிறதை உங்களுக்கு ஞாபகப்படுத்தினாலும், நீங்க அதை அடிக்கடி மறந்துடுறீங்க…" என்று கூறி முறைத்தாள் ஓவியா. 


"ஏன்..? பிஸ்னெஸ் மேன்னா பொண்டாட்டியைக் கட்டிப் பிடிக்க கூடாதா..? இல்ல இப்படி முத்தம் தான் கொடுக்க கூடாதா..?" என்று நியாயம் கேட்டவன், ஓவியாவின் கழுத்து வளைவில் தன் இதழை அழுத்தமாகப் பதித்தான்.


அதைத் தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்று புரிந்த ஓவியா, "இன்னைக்கு போர்ட் மீட்டிங் இருக்குன்னு சொன்னிங்கள்ல... கிளம்புங்க…"


"கண்டிப்பா போகணுமா பேபி..?" என்றபடி மீண்டும் அவன் முத்தம் வைக்க,


"போயே ஆகணும்!!" என்று வலுக்கட்டாயமாகக் கணவனைத் தள்ளி நிறுத்தினாள்.


அவனோ, மேலும் அவளை நெருங்கி நின்று, "பேபி! இங்க பாரேன்… உனக்கு நாலு வெள்ளை முடி வந்துருச்சுடி…" ரவியின் குரலில் நிஜமாகவே கவலை வெளிப்பட்டது.


அதில் வாய் பொத்திச் சிரித்த ஓவியா, "ரொம்பக் கவலைப்படாதீங்க! வயசானா எல்லோருக்கும் வெள்ளை முடி வரத்தான் செய்யும். இப்ப அதுக்கு என்னவாம்…?" என்று கேட்க,


"என்னது!!! உனக்கு வயசாகிடுச்சா..? ஆனா உன்னைப் பார்த்தா, எனக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே பேபி…" என்று மனைவியை வாசம் பிடிக்க முயன்றான்.


"வேற எப்படித் தெரியுதாம்..?" கணவனின் காதலில் அவளும் சற்றுக் குழைந்தாள். 


"சொல்லவா பேபி..?" என்று அவன் சரசமாகக் கேட்டான். 


அதில் சட்டென்று சுதாரித்த ஓவியா, "வேணாம்பா... வேணவே வேணாம்! கொஞ்ச நேரம் சும்மா இருங்க, போதும்…" என்றவள், அவனுக்கான உடையைக் கட்டிலில் இருந்து எடுத்துக் கணவனின் கையில் கொடுத்தாள். 


அவளை முறைத்துக் கொண்டே ஆபிஸ் கிளம்ப தயாரான ரவிவர்மன், கோட் சூட் அணிந்து, கம்பீரமாகக் கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான். அப்பொழுது… 


"உங்க ரொமான்ஸ் முடிஞ்சிதா..? உள்ள வரலாமா..?" என்று கேட்டது ஒரு குரல். 


"உங்க அம்மாகிட்ட நான் ரொமான்ஸ் பண்ணிட்டாலும்…" என்று சத்தம் வெளியே கேட்காத வண்ணம் ரவிவர்மன் வாய்க்குள் முணுமுணுத்தான்.


"ரவி…" என்று கணவனை அதட்டிய ஓவியா, "குட்டிமா! உள்ள வா… பூஜை முடிச்சுட்டியாடா..? பாட்டி போட்டோக்கு மறக்காம பூ போட்டுட்டே தானே..?" என்று தன் மகள் ரம்யாவிடம் கேட்டாள்.


"பூஜையும் முடிச்சாச்சு. பாட்டி போட்டோக்குப் பூவும் போட்டாச்சு. டைனிங் டேபிள்ல டிஃபன் கூட ரெடியா இருக்கு. உங்களைச் சாப்பிட கூப்பிட தான் இங்கே வந்தேன்…" என்றவள், தந்தையைப் பார்த்து,


"வாவ்!!! அப்பா…. யூ ஆர் லுக்கிங் சோ யங் டுடே. இன்னைக்கு உங்களுக்கு ஒரு பத்து வயசு குறைஞ்சா மாதிரி இருக்கு. என்ன விஷயம் ம்ம்ம்..?" என்று தந்தையைக் கேலி செய்தாள்.


"என்ன குட்டிமா இப்படிச் சொல்லிட்டே..? இன்னைக்குத்தான் யங்கா இருக்கேனா..? நான் எப்போவும் யங் தான். உங்க அம்மாகிட்ட வேணா கேட்டுப் பாரு. கரெக்ட்டா சொல்லுவா. அப்படித்தானே ஓவிமா..?" என்று மனைவியை வம்பிழுத்தான் ரவிவர்மன்.


'குழந்தையைப் பக்கத்துல வச்சிக்கிட்டு என்ன பேசுறார் பாரு..!!' என்று தலையில் அடித்துக் கொண்டவள், பேச்சை மாற்றும் பொருட்டு, "குட்டிமா! உனக்கு காலேஜ்க்கு நேரம் ஆச்சுல. வா, நாம கீழே போகலாம், உங்க அப்பா அவர் வயசைப் பத்தி ஆராய்ச்சி எல்லாம் முடிச்சிட்டு மெதுவா வரட்டும்…" என்றவள், மகளை அழைத்துக் கொண்டு வெளியேற, தானும் சிரித்துக் கொண்டே அவர்கள் பின்னே சென்றான் ரவிவர்மன். 


டைனிங் இருக்கையில் ரவிவர்மன், ஓவியா இருவரும் அமரவும், தந்தைக்கும் தாய்க்கும் காலை உணவை பரிமாறி விட்டு, தானும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் ரம்யா.


ரம்யா தன் தாயின் அழகையும், தந்தையின் அறிவையும் கொண்டு பிறந்தவள். மோகனாவின் மகள் ஸ்னேகாவை விடப் பத்து மாசம் சின்னவள். பத்தொன்பது வயது தான் ஆகிறது. ஸ்னேகா பி.காம் மூன்றாம் வருடம் படிக்க, ரம்யா கம்பியூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். ஸ்னேகா அதிர்ந்து கூடப் பேச மாட்டாள். அப்புராணி, ரொம்ப அமைதி, மோகனாவிற்கு இப்படி ஒரு பொண்ணா..? என்று எல்லோருக்கும் நினைக்க தோன்றும்.  


ஆனால், ரம்யாவோ படு சுட்டி, ரொம்பவே பொறுப்பானவள். விவரம் தெரிய ஆரம்பித்ததில் இருந்து, தன் தாயை, மகளாக அல்லாமல் இன்னொரு தாயாய் பார்த்துக் கொள்பவள். தாய், தந்தை இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் தன்னால் துன்பம் வரக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பவள். எதையும் சிரித்துக் கொண்டே கடந்து விட வேண்டும் என்ற குணம் உடையவள். 


"எக்ஸாம்க்கு எல்லாம் பிரிப்பர் பண்ணிட்டியா குட்டிமா..?" என்று கேட்டான் ரவிவர்மன்.


"சூப்பரா படிச்சிட்டேன்ப்பா. இந்தத் தடவையும் நான் தான் க்ளாஸ் பஸ்ட்டா வருவேன்…" என்றாள் துள்ளலுடன்.


"குட் குட்டிமா!! நீ அப்படியே என்னை மாதிரி பிரில்லியண்ட்..!! நல்ல வேளை... நீ உங்க அம்மா மாதிரி மக்கு இல்ல…" அப்பொழுதும் சும்மா இருக்காமல் மனைவியை வம்பிழுத்தான்.


"ஹலோ... யாரு மக்கு..? நாங்களும் க்ளாஸ் பஸ்ட் தான்..!! வேணும்ன்னா இப்பவே எங்க வீட்டுக்குப் போய் என் ரிப்போர்ட் கார்ட் எடுத்துட்டு வந்து காட்டவா..?" ரோசமாகக் கூறினாள் ஓவியா.


"உங்க அம்மாக்கு இப்ப அவங்க அம்மா வீட்டுக்குப் போகணும். அதுக்கு இப்படி ஒரு சாக்கு…" என்று மேலும் கிண்டல் செய்தான்.


இந்த வயதிலும், தன் தாய் - தந்தை இருவரின் இந்தப் புரிதலான காதல், எப்பொழுதும் போல், இப்பொழுதும், ரம்யாவை வியக்க வைத்தது. வெளி உலகிலும், பிஸ்னஸ் உலகிலும் தந்தை அனைவருக்கும் சிம்ம சொப்பனம் என்று அறிவாள். அதே நேரம் அவர் வீட்டுக்குள் வந்து விட்டால் போதும்..!! "ஓவிமா, பேபி" என்று அன்னையை மட்டுமே சுற்றி வருவதும், மனைவி சொல்லே மந்திரம் என்பது போல் நடந்து கொள்வதும், என அவர்களின் அன்னியோன்யத்தைப் பார்க்க பார்க்க, ரம்யாவுக்குச் சுவாரஸ்யமாக இருக்கும். இன்றும், அவர்களின் காதலை ரசித்துப் பார்த்தபடி சாப்பிட ஆரம்பித்தாள். அப்பொழுது வெளியே ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.


"அப்பா! உங்க செல்லக்குட்டி வந்தாச்சு." என்று ரம்யா கூறிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்து விட்டாள் ஸ்னேகா. 


"ஹலோ மை செல்லக்குட்டி... வாங்க வாங்க…" என்று வரவேற்றான் ரவிவர்மன். 


"ஹாய் மாமா…" என்றபடி ரவிவர்மனின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள் ஸ்னேகா.


"ஸ்னேகா! ஏன்டி லேட்டு..?" என்று கேட்டவள், "சாப்பிட்டியா..? தட்டு வைக்கவா..? சாப்பிடுறியா..?" என்று கேட்டாள் ரம்யா.


"வேணாம் ரம்யா. சாப்பிட்டுத்தான் வந்தேன்…" என்றவள், கையில் இருந்த டப்பாவை டைனிங் டேபிளில் வைத்து விட்டு, "ஓவிமா! உங்க பிரெண்ட் ரவா லட்டு குடுத்து விட்டாங்க…" என்று கூறவும்,


"வாவ்!!! ரவா லட்டா..? அத்தை சூப்பரா செஞ்சி இருப்பாங்களே..!! என்னோட பேவரிட் ஸ்வீட்..!!" என்றுவிட்டு ஒன்றை எடுத்து உண்ண ஆரம்பிக்க,


"காலேஜ்க்கு நேரம் ஆச்சு." என்ற ஸ்னேகா, "ரம்யா! வாடி.." என்றுவிட்டு எழுந்து நின்றாள்.


தானும் எழுந்த ரம்யா, தனது அறைக்குச் சென்று கல்லூரி பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், "பைப்பா, பைம்மா…" என்று விட்டு ஸ்னேகாவின் கைப் பிடித்து இழுத்தபடி வாசலுக்குச் சென்றாள்.


சினேகா ஸ்கூட்டியில் அமரவும், "ஸ்னேகா! இன்னைக்கு நான் ஓட்டுறேன்டி.." என்று கூறவும், 


"இந்தா!” என்று சாவியை ரம்யாவிடம் கொடுத்தாள் ஸ்னேகா.


ரம்யா வண்டியின் முன்புறம் அமர்ந்து கொள்ள, அவளது பின்புறம் அமர்ந்தாள் ஸ்னேகா.. அடுத்த நிமிடம் ஸ்கூட்டி வேகமெடுக்க.. 


"ஏய்! மெதுவா போடி. இப்படி நீ வண்டி ஓட்டுறதுனால தான் மாமா உனக்கு ஸ்கூட்டி வாங்கித் தர மாட்டேன்கிறாங்க.." என்று சொல்லிச் சிரித்தாள் ஸ்னேகா..


இங்கு, "ஓவிமா! எனக்கும் மீட்டிங்க்கு நேரம் ஆச்சு. நானும் கிளம்புறேன்டா" என்றவன், மனைவியின் கன்னத்தில் தட்டி விட்டு கிளம்பி விட்டான்.


அனைவரும் கிளம்பவும், மெதுவாகப் படியேறி, தங்களது அறைக்கு அருகில் இருந்த அறை வாசலில் வந்து நின்ற ஓவியா, அதன் கதவைப் பாசமுடன் வருடியவள், பின்பு கைப்பிடியைத் திருகி அதைத் திறந்து உள்ளே சென்றாள்.


அந்த அறை, சில மாதங்களாகவே ஆட்கள் புழங்காமல் இருப்பதற்கான அறிகுறியுடன், ரொம்பவே அமைதியாக இருந்தது. தன் கைகளைக் காற்றில் துழாவியபடி, ஓர் இடத்தில் வந்து நின்ற ஓவியாவின் கை, அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஆளுயரப் புகைப்படத்தை ஆசையுடன் வருடியது. 


அந்தப் புகைப்படத்தில், நீல வண்ண கோட் சூட், கழுத்தில் டை, கண்ணில் குளிர் கண்ணாடி அணிந்து, ஒரு கையை பேண்ட் பேக்கெட்டிலும், மறுகையை ஸ்டைலாக தூக்கி நின்றபடி, ஆண்மைக்கே உரிய கம்பீரத்தில், பெண்களை ஈர்க்கும் அழகில் இருந்தாலும், அவனது முகத்திலோ, ஒருவித கடுமை தான் அதிகம் தெரிந்தது. 


அவன் ரிஷிவர்மன்... ரவிவர்மன் - ஓவியப்பாவை தம்பதியரின் தவப் புதல்வன். அழகில் அன்னையைப் போன்று இருந்தாலும், குணத்தில் தந்தையைப் போலவா என்று கேட்டால், நிச்சயம் கேள்வி குறி தான் பதில். ஏனெனில் ரவிவர்மன் கோபக்காரன் தான்..!! அதே நேரம் அன்புக்கு அடங்குபவன், ஓவியாவின் காதலுக்குக் கட்டுப்பட்டவன். 


ஆனால், அவனது மகனோ யாருக்கும் அடங்காதவன், எதற்கும் கட்டுப்படாதவன். அவனிடம், 'அன்பாய் கொஞ்சம் பேசு' என்று யாராவது கூறினால், "அன்பா…? அப்படி என்றால் என்ன…? எங்கு கிடைக்கும்…?" என்று கேட்பவன், "பாசமா?? அப்படி ஒன்று இந்த உலகத்தில் இருக்கா என்ன..?" என்று திருப்பிக் கேட்பான். ஆம்!! குணத்தில் அப்படியே தந்தைக்கு நேர் எதிர் குணம் கொண்டவன் தான் இந்த ரிஷிவர்மன்..!!


மகனின் புகைப்படத்தில் கன்னத்தைப் பதித்துச் சாய்ந்து நின்ற ஓவியா, "ராஜா! இந்த அம்மாவைப் பார்க்க எப்பப்பா வருவீங்க..?" அது நடக்காது என்று தெரிந்தே, புகைப்படத்தில் இருக்கும் தன் மகனிடம் இதயம் கனக்க கேட்டாள் அந்தத் தாய். 


தாய் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவனோ, பெங்களூரில், உயர்ந்து எழும்பி நின்ற அந்த இருபத்தி மூன்று மாடிகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்டில், தனக்குச் சொந்தமான ஃப்ளாட்டில் இருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான்.


அந்த அப்பார்ட்மெண்ட்டில் ஒரு தளத்தில் நான்கு வீடுகள் இருக்கும். ஆனால் ரிஷிவர்மனோ, இருபத்தி இரண்டாம் தளத்தில் இருந்த நான்கு வீடுகளையும் சேர்த்து வாங்கி, ஒரே பிளாட்டாக மாற்றி, தான் மட்டுமே வசித்து வருகிறான்.


உடற்பயிற்சி அறையில் சின்ன டேபிள் போல் இருக்க, அதில் படுத்து வெயிட் லிப்ட் செய்து கொண்டிருந்தான் ரிஷிவர்மன். அவன் ஒவ்வொரு முறையும் அந்த வெயிட்டை தூக்கி இறக்கும் போதும், அவனது முறுக்கேறிய இறுகிய புஜங்கள், அவனது உடல் உறுதியை எடுத்துக் காட்டியது. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அதைச் செய்து முடித்து வியர்வை வழிய எழுந்து அமர்ந்தவன், கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்து நெட்டி முறிக்க, பொலபொலவென்று சொடக்கிட்டது அவனது உடல்!


பின்பு, அங்குத் தொங்கிக் கொண்டிருந்த டர்க்கி டவலை எடுத்துத் துடைத்தபடி ஹாலுக்கு வந்தான். அங்கே டீபாயின் மீது பிளாஸ்கில் இருந்த காபியைக் கப்பில் ஊற்றிக் குடித்தவன், கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்து விட்டுப் பின்பு குளிக்கச் சென்றான். 


ரிஷிவர்மன் பள்ளி படிப்பை ஊட்டி கான்வென்டில் படித்து விட்டு, கல்லூரி படிப்பை லண்டனில் உள்ள பிரபல யூனிவர்சிட்டியில் முடித்தான். 


படிப்பை முடித்து விட்டு வந்த மகனிடம், தன் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை ரவிவர்மன் ஒப்படைக்க, அவனோ, "நான் லண்டனில் இருந்தபடியே ஏற்கனவே ஆர்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கம்பெனியை பேங்க் லோன் மூலம் ஆரம்பித்து விட்டேன். அதனால் உங்கள் சொத்து எனக்குத் தேவை இல்லை" என்று மறுத்து விட்டான். 


மகனின் மனம் அறிந்து, அவனை மேற்கொண்டு வற்புறுத்தி பிரச்சினையைக் கிளப்ப விரும்பாமல், அவனது மேல் உள்ள நம்பிக்கையில், மகனது விருப்பப்படியே விட்டு விட்டான் ரவிவர்மன். 


கடந்த நான்கு வருடங்களாக, ஆர்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி பெரிய அளவில் நல்ல பெயர் வாங்கி இருக்கிறது. இந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி மட்டும் அல்ல, ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியும் நடத்தி வருகிறான். மேலும் இளம் தொழிலதிபருக்கான விருதும் வாங்கி இருக்கிறான். அப்படிச் சுயமாய் உழைத்து முன்னேறியதால், தொழில் விஷயத்திலும், வேலை விஷயத்திலும் சிறு பிசகு கூட வந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பான் ரிஷிவர்மன். 


குளித்து முடித்து வந்த ரிஷிவர்மன், திமிறிய தன் புஜத்தை இன்னும் எடுப்பாக எடுத்துக் காட்டும் விதத்தில், சாம்பல் நிறத்தில் அரைக்கை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டவன், 'உன்னைப் போலவே நானும் யாருக்கும் படிய மாட்டேன்!' என்பது போல் சிலுப்பிக் கொண்டு நின்ற அவனது தலை முடியை ஜெல் தடவி அடக்கினான். தன் உணர்வுகளை மறைக்க எப்பொழுதும் பயன்படுத்தும் குளிர் கண்ணாடியை எடுத்துக் கண்ணில் மாட்டிக் கொண்டு, கார் சாவியை எடுத்துக் கொண்டவன், வீட்டை பூட்டி விட்டு லிப்டில் கீழே வந்தான். 


அப்பொழுது அவனது ஐபோன் ஒலி எழுப்ப, எடுத்துப் பார்த்தவன், ஆன் செய்து காதுக்குக் கொடுத்து,


"ம்ம்ம்.. சொல்லு ராபர்ட்.. என்னாச்சு..? ஆள் கிடைச்சானா..?" என்று கேட்டவனின் குரலில் தான் எவ்வளவு கம்பீரம்! ஆளுமை!


"......"


"ஓகே.. இன்னும் பத்து நிமிஷத்தில் நான் அங்கே இருப்பேன்…" என்றவன், பார்க்கிங்கில் நின்றிருந்த தனது வெளிநாட்டுக் காரை ரிமோட் மூலம் இயக்கித் திறந்தவன், சற்று முன் அவன் போனில் கூறியது போல், அவன் செல்ல வேண்டிய இடத்துக்குக் காரைச் செலுத்தினான். 


சிறிது நேரத்தில் அவன் வர வேண்டிய இடம் வந்து விட, ரிஷிவர்மனின் வரவுக்காகவே காத்திருந்ததைப் போல், வேகமாக அவனின் அருகே வந்தான் அவனின் பி.ஏ ராபர்ட். 


"என்ன ராபர்ட்..? அந்த நாயை எங்க வச்சி இருக்கீங்க..?" என்று இவன் கேட்ட தொணியே சொன்னது, ரிஷிவர்மனின் கோபத்தின் அளவை..!! 


"செக்கண்ட் பிளோர் சார்…" என்று அவன் கூறவும், தனது வேக நடையில் கட்டிடத்தினுள் சென்ற ரிஷிவர்மன், இரண்டாம் மாடிக்கு வந்தான். அங்கே சுற்றித் தடிதடியாக நான்கு பேர் நின்றிருக்க, அவர்களின் நடுவே இருந்த இருக்கையில் ஒருவன் அமர்த்தப்பட்டிருந்தான்.


ரிஷிவர்மனைப் பார்த்ததும் பயத்தில் நடுங்கியபடி, "சார், தெரியாம பண்ணிட்டேன் சார். என்னை விட்டுருங்க சார். இனி இப்படிப் பண்ண மாட்டேன். ப்ளீஸ் சார்!!" என்று கெஞ்சியவன், எழுந்து வேகமாக ஓடி வந்து, அவனது காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.


ஆனால் ரிஷியோ, "ராபர்ட்…" என்று குரல் கொடுத்துத் தன் கையை அவன் பக்கமாக நீட்ட, அதைப் புரிந்து கொண்டு, தன் முதலாளியின் கையில் தடினமான இரும்பு கம்பி ஒன்றை வைத்தான், அவனது பி.ஏ. 


அதை இறுக்கிப் பிடித்தவன், "என் முன்னாடி, நேருக்கு நேர், நின்று என்னை எதிர்ப்பவங்களையே, நான் விட்டு வச்சது இல்ல. கூடவே இருந்து, என் முதுகில் குத்த நினைச்ச உன்னை, நான் சும்மா விடுவேனா..? இவ்வளவு நாளா என்கிட்ட சம்பளம் வாங்கிட்டு, விஸ்வாசத்தை, என் எதிரி கம்பெனிக்காரன்கிட்ட காட்டின உன்னை என்ன பண்ணலாம்..?" என்று சிங்கமாய் கர்ஜித்தவன், தன் காலை பிடித்துக் கதறிக் கொண்டிருந்தவனை ஒரே உதை உதைத்துத் தூர தள்ளி விட்டு, தன் கையில் இருந்த இரும்பு கம்பியால், கொஞ்சமும் இரக்கமில்லாமல் அவனுக்கான தண்டனையைக் கொடுக்க ஆரம்பித்தான் ரிஷிவர்மன்.


"ராபர்ட்!!! இந்த நாய் இவ்வளவு நாளும் யாருக்கு விசுவாசமா இருந்துச்சோ, அவனுக்கே பேக் பண்ணி அனுப்பிரு! இன்னொரு தடவை இந்த ரிஷிகிட்ட விளையாட நினைச்சா அதுக்கான தண்டனை பயங்கரமா இருக்கும்ன்னு இனிமேல் புரிஞ்சிக்குவாங்க…" என்று உத்தரவிட்டான் ரிஷிவர்மன்.


"ஓகே பாஸ்…" என்ற ராபர்ட் அங்கு நின்றிருந்தவர்களிடம் கண்ணசைக்க, அடுத்த நிமிடம் கீழே குற்றுயிரும் குலை உயிருமாக கிடைந்தவனை அள்ளிக் கொண்டு சென்றனர்.


அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த ரிஷி, "ராபர்ட்! உங்க அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போகணும்னு ஒன் வீக் லீவ் கேட்டல்ல… பெர்மிஷன் கிராண்டட்… பட் ஜஸ்ட் ஒன் வீக் தான்…" என்றவன் தனது காரில் ஏறி சென்று விட்டான்.


****

1 comment:

  1. Over ah panrane inda Rishi ivanuku eppadi um oru appavi ponnu dan Jodi ah dan irukum yar athu sneha ah

    ReplyDelete