ஸ்வரம் 3

 



ஸ்வரம் 3...


"அம்மா! டிபன் ரெடியா? நேரம் ஆச்சு, எங்க பாஸ் இருக்கானே சரியான சிடுமூஞ்சி… ஒரு நிமிஷம் லேட்டா போனா கூட பாதி நாள் சம்பளத்தைப் பிடிச்சுக்குவான் பக்கி" என்று தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் முதலாளியைத் திட்டிக் கொண்டே தனது அறையில் இருந்து வேகமாக வெளியே வந்தாள் தனுஷா.


"ஏன்டி இப்படிப் பறக்குறே? உன் பாஸ் ஃபாரின்ல இருந்து இன்னைக்குத் தானே வந்துருக்கான். உடனே ஆபிசுக்கு வருவானா என்ன…?" என்று கேட்டபடி வந்த லெட்சுமி மகளுக்கு பூரியை பரிமாற ஆரம்பித்தார்.


"ஃபாரின் போய்ட்டு வந்தா? அன்னைக்கே ஆபிஸ் போக கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா என்ன?" என்ற குரலோடு சேர்த்து அழுத்தமான காலடியோசை கேட்டது.


தன் முன்னே தட்டில் இருந்த பூரியை அவசர அவசரமாக உண்ண ஆரம்பித்த தனுஷா, அந்தக் குரலைக் கேட்டு பூரியை மென்றவாறே நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கே நெடுநெடுவென்ற உயரத்தில், சாம்பல் நிறத்தில் கோட் சூட் அணிந்து, நிமிர்ந்த நடையில் கம்பீரமாக மாடிப்படியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான், தனுஷாவின் அண்ணன் அஜித் குமார்!


"அப்படிச் சொல்லு அண்ணா…" என்றவள், "ஆமா அண்ணா, ரெஸ்ட் எடுக்காம நீ எங்கே கிளம்பிட்டே? இன்னைக்கு ஆபிஸ் போகணுமா?" என்று தன் அண்ணனின் மேல் அக்கறை கொண்டு கேட்டாள் தனுஷா.


"ஆமாம்டா, இன்னைக்கு மட்டும் ஓய்வெடுத்துட்டு நாளைக்குப் போகலாம்ல…" என்ற தாய்க்கும் தங்கைக்கும், தனது சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தபடி தங்கையின் அருகே இருந்த இருக்கையில் அவன் அமரவும்,


"என்னைக்குத்தான் என் பேச்சைக் கேட்டு இருக்கே…" என்று அங்கலாய்ப்பது போன்று அவர் கூறினாலும், மகனின் வளர்ச்சியில் எப்பொழுதும் அந்த தாய்க்கு பெருமை அதிகம் உண்டு.


அவனுக்கும் தட்டு எடுத்து வைத்து அதில் பூரியை வைக்க, "தேங்க்ஸ்மா!" என்றவன், அதை உண்ண ஆரம்பித்தான்.  


"அண்ணா! செம ஹேண்ட்சம்மா இருக்கே! உன்னோட இந்தச் சிரிப்பு தான் உனக்கு கூடுதல் ப்ளஸ்! இன்னைக்கு எத்தனை பொண்ணுங்க உன்னைப் பார்த்து ஜொள்ளு விட்டு சென்னை மாநகரை வெள்ளத்தில் மிதக்க வைக்கப் போறாங்களோ?? ஹா ஹா…" என்று தன் அண்ணனைக் கிண்டல் செய்து சிரித்தாள் தனுஷா.


அவனோ தங்கையின் காதை பிடித்து வலிக்காமல் திருகியவன், "வாலு! வாலு! என்னா வாய் பேசுற, உன் பிரென்ட் தானே அவ? எவ்ளோ அமைதியா இருக்கா! நீ மட்டும் ஏன் இப்படி இருக்கே? உன்னை எல்லாம்…" என்று பொய்யாக முறைத்தான் அவன்.


"யாரு? அவ அமைதியா? இதை அவகிட்ட சொல்லி பாரு! எட்டூருக்கு கேக்குற மாதிரி சிரிப்பா…" என்று சொல்லி சிரித்தவளின் தலையில் வலிக்காமல் தட்டி விட்டு, 


"காலையில் என்கிட்ட கிஃப்ட் எங்கேன்னு கேட்டல்ல.. என் ரூம்ல பார்சல் இருக்கு. போய் எடுத்துக்கோ…" என்று கூறிய அஜித் உண்டு முடித்து கை கழுவியவன்.. "அம்மா! மதியம் லன்ச் குடுத்து விட வேண்டாம்! க்ளையண்ட் மீட்டிங் இருக்கு. நான் வெளியே பார்த்துக்கிறேன்…" என்றுவிட்டு தங்கையைப் பார்த்தவன், 


"இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி 'எங்க பாஸ் சரியான சிடுமூஞ்சி… ஒரு நிமிஷம் லேட்டா போனா கூட பாதி நாள் சம்பளத்தைப் பிடிச்சுக்குவான் அந்த பக்கின்னு' உன் பாஸை திட்டுனே. இப்ப என்னன்னா ஆபிசுக்கு கிளம்பாம உக்காந்து மொக்கிக்கிட்டு இருக்கே…" என்று மேலும் தங்கையைக் கடுப்படித்து விட்டு வெளியே வந்து தனது பி.எம்.டபுள்யூ காரை ரிமோட் மூலம் திறந்தவன், அதில் ஏற போனான். 


தானும் வேகமாக கைக் கழுவி விட்டு எழுந்த தனுஷா, "அண்ணா! ஒரு நிமிஷம்…" என்று அவனைத் தடுத்து நிறுத்தி, 


"எனக்கு மட்டும் தான் கிஃப்ட்டா? இல்ல உன் ஆளுக்கும் இருக்கா…?" என்று கேட்டுக் கண் சிமிட்ட,


"ஹா ஹா.. மை டியர் ஸ்வீட் தங்கையே! மொதல்ல அவளுக்கு மட்டும் தான் வாங்கினேன். ம்பச்! என்ன பண்றது? நீ என் தங்கையா போய்ட்டியே?? சரி, போனா போகுதுன்னு தான் உனக்கும் சேர்த்து வாங்கிட்டேன்…" என்றவன் தங்கை தன்னை முறைப்பதைக் கண்டு, அவளிடம் சிக்கும் முன் வேகமாக காரினுள் அமர்ந்து அதை அதிவேகமாகச் செலுத்தி அங்கிருந்து பறந்து விட்டான். 


"டேய் அண்ணா! நீ நைட் வீட்டுக்கு வந்து தானே ஆகணும்? அப்போ இருக்குடா உனக்கு…" எனத் தன் காலை தரையில் உதைத்து விட்டு. அலுவலகத்திற்குச் செல்ல நேரம் ஆவது உணர்ந்தாலும், தன் அண்ணன் தனக்கும் தன் தோழிக்கும் என்ன வாங்கி வந்திருக்கிறான் என்பதைக் காண ஆவலுடன் வீட்டுக்குள் ஓடினாள் தனுஷா. 

 

காரில் சென்று கொண்டிருந்த அஜித்தின் வலது கை காரை ஓட்டினாலும், இடது கையில் இருந்த தன் கைப்பேசியில் தொடுதிரையில் குழந்தை முகமாய் சிரித்துக் கொண்டிருந்தவளை ரசித்து பார்த்தவனின் இதழோ, "மை லவ்…" என்று காதலாக முணுமுணுத்தது.


அலுவலக பார்க்கிங்கில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய நேகா, வேகமாக அலுவலகத்தினுள் நுழைந்து அதே வேகத்தில், "ஹாய் வினு! குட் மார்னிங்! நம்ம சிடுமூஞ்சி ஆபிசுக்கு வந்தாச்சா…?" என்று ரிசப்ஷனில் நின்றிருந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டே லிப்ட்டை நோக்கி ஓடினாள். 


"இப்ப தான் வந்தார்…" என்று கூறிய ரிசப்ஷன் பெண் மேற்கொண்டு ஏதோ கூறும் முன், 'வந்தார்' என்ற வார்த்தையை மட்டும் உள்வாங்கிய நேகா, "ஆத்தி! போச்சு! போச்சு!" என்று புலம்பியபடி லிப்டின் அருகே சென்று நிற்கவும், லிப்ட் கதவு மூடிக் கொண்டது.


"ஹையோ! இது வேறயா? அஞ்சாவது மாடிக்கு வேற போகுதே. எப்போ திரும்பி வரும்ன்னு தெரியலையே? பேசாமல் படியில் ஏறிடுவோமா?" என்று அவள் எண்ணமிடும் போதே மூடிய லிப்ட் கதவு தானாகத் திறந்தது.


"ஹப்பா!!! தேங்க் காட்!" என்றபடி லிப்டில் நுழைந்து மூச்சு வாங்கியபடி நின்ற நேகா, தனக்காக லிப்ட்டை திறந்த அந்த ஜீவனுக்கு நன்றி சொல்ல நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த அவளது விழிகளோ சாசர் போல் விரிந்தது என்றால்..


அவளது அருகில் நின்றிருந்தவனின் விழிகளோ, அவளைக் கோபத்துடன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. 


லிப்ட் ஐந்தாம் தளத்தில் நிற்கவும், அவன் வேக எட்டுக்கள் வைத்து வெளியேறி விட, நேகாவோ ஆறாம் தளம் வந்ததும், லிப்டில் இருந்து வெளிப்பட்டு, தன் கைப்பையைத் தலையில் வைத்து நொந்தபடி தனது இருக்கைக்கு வந்து தொப்பென்று அமர்ந்தாள். 


"ஹேய் நேகா! என்னாச்சு? எதுக்கு ஒரு மாதிரி இருக்கே…? எனி பிராப்ளம்…?" என்று கேட்டான், பக்கத்து இருக்கையில் இருந்த கோ வொர்க்கர் விகாஷ்.


"ம்பச்! ஒன்னும் இல்ல. நம்ம பாஸ் வந்தாச்சு, அதான் ப்ராப்ளம்…" என்று அவள் கூறி முடிக்கவும்,


அவ்வளவு தான்..!! இவ்வளவு நேரம் அங்கே வேலை பார்க்காமல் சலசலத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பொறுப்பாக வேலை பார்ப்பது போல அவரவர் கணினியின் முன் அமர்ந்து விட்டார்கள்.


அதைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. மேலும் அது அவளுக்குப் பழகிப் போன ஒன்று தான் என்பதால் அதை விடுத்து வேறு யோசனைக்குத் தாவியது அவளது மனம். "லிப்டில் வச்சு எதுக்கு அப்படி முறைச்சான்? போயும் போயும் இவளுக்காக லிப்ட் கதவை திறந்தோமானு கோபப்பட்டானா? இல்லை நான் சொன்ன சிடுமூஞ்சிங்கிற வார்த்தை அவனுக்கு கேட்டுருச்சா?? ம்ம்ம்…" என்று நாடியில் கை வைத்துத் தீவிர யோசனையில் இருந்தவளின் முதுகில் ஒரு போடு போட்டு விட்டு,  


"என்னடி? எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி உக்காந்து யோசிச்சுட்டு இருக்கே…??" என்று கேட்டபடி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, தனது கணினியை இயக்கினாள், நேகாவின் தோழி.


"ஏன்டி பிசாசே, எதுக்குடி அடிச்சே…?” என்று தானும் அவளை மொத்திய நேரம்…


"நேகா மேடம்! உங்களை பாஸ் வரச் சொன்னார்…" என்று கூறி விட்டுச் சென்றான் ஆபிஸ் பாய். 


"ஓகே!!! இன்னைக்கு ஏதோ தரமான சம்பவம் உனக்குக் காத்திருக்குனு ஒரு பட்சி சொல்லுது. போ! போ! போய் அவர் என்ன கொடுத்தாலும் அள்ளிக்கிட்டு வா! ஓடு! ஓடு…" என அவள் தோழியைக் கிண்டல் செய்யவும்…


"உன்னை வந்து வச்சிக்கிறேன்டி…" என்று கடுகடுத்து விட்டுத் தனது முதலாளியைக் காண ஐந்தாம் தளத்துக்குச் சென்றாள் நேகா.


ஏ.கே ஸ்பேர் பார்ட்ஸ்.. இது வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி. அதன் பேக்டரி, குடோன் எல்லாம் சென்னைக்கு சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ளது. நேகா வேலை செய்வதோ ஏ.கே ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியின் தலைமையகத்தில்… 


மேனேஜிங் டைரக்டர் என்று பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்த கதவை இருமுறை விரலால் தட்டி விட்டு, "மே ஐ கமின் சார்…?" என்று கேட்டாள்.


"எஸ் கமின்…" என்ற கம்பீரக் குரலில், "வெவ்வெவ்வே…" என்று அழகு காட்டியவள், பின்பு முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அந்த அறை கண்களைக் கவரும் வகையில் அழகாகவும் மிகவும் நேர்த்தியாகவும் இருந்தது.


தன் முன் வந்து நின்றவளை நிதானமாக ஏறிட்டுப் பார்த்தான், ஏ.கே ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியின் முதலாளியான அஜித் குமார்.. 


அவனது அந்தப் பார்வையில் கடுப்பான நேகா, 'பார்க்கிறதைப் பார்! இவனுக்கு நடிகர் அஜித் குமாருன்னு நினைப்பு! ரொம்ப தான் பண்றான்…" என்று மனதில் அவனை வறுத்தெடுத்தாலும், "சார், எதுக்கு வரச் சொன்னீங்க?" என்று பவ்யமாகக் கேட்டாள். 


"மிஸ்.நேகா! உக்காருங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…" என்றவன் எதிரே இருந்த இருக்கையை கண் காட்ட, அதில் அமர்ந்தவள், ‘உக்காந்தாச்சு, இப்பவாவது சொல்லு ராசா…' என்பது போல் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அவனோ, தன் முன் இருந்த லேப்டாப்பை அவள் புறம் திருப்பி வைத்து விட்டு, தன் இரு முழங்கைகளையும் டேபிள் மீது வைத்து, விரல்களை கோர்த்து, அதில் தன் நாடியை(தாடையை) வைத்து அவளைப் பார்த்தான்.


லேப்டாப் திரையில் ஒளிர்ந்த மெயிலை பார்த்து நெற்றிச் சுருக்கிய நேகா, 'இதுல என்ன இருக்கு? ஒண்ணுமே புரியலையே…?' நிஜமாகவே அவள் குழம்பித்தான் போனாள்.


"மிஸ்.நேகா! இது நீங்க அனுப்பிய மெயில். மும்பைக்கு நம்ம சென்ட் பண்ண இருந்த ப்ராடெக்ட்க்கான மெயில். உங்க கவனக்குறைவால் டெல்லின்னு போட்டு அனுப்பிட்டீங்க. கண்டைனரும் டெல்லிக்கு போயிருச்சு. மும்பைக்காரன் என்னன்னா கண்டைனர் இன்னும் வரலையேனு கத்துறான். டெல்லிக்காரன் என்னன்னா நான் ஏதும் ஆர்டர் பண்ணலையேன்னு கத்துறான். இப்ப புரிஞ்சிருக்குமே? நான் எதுக்கு உங்களைக் கூப்பிட்டு வச்சி இதெல்லாம் சொல்றேன்னு… மும்பைக்காரன் நம்ம டீலிங்கையே கேன்சல் பண்ணிட்டான். இதனால இந்த கம்பெனிக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா…?" என்று அவன் அமைதியாகக் கூறினாலும் குரலில் கோபம் அதிகமாகவே இருந்தது.


லிப்டில் வைத்து எதற்காக அந்த முறைப்பு முறைத்தான் என்று இப்பொழுது அவளுக்குப் புரிந்தது.


"இது முதல் தடவை இல்ல மிஸ்.நேகா! உங்க விஷயத்தில் இப்படித்தான் அடிக்கடி நடக்குது. வேலை பார்க்க வந்தா கொஞ்சமாச்சும் சின்சியாரிட்டி இருக்கணும். சும்மா பொழுது போக்குக்காகத் தானே நீங்க எல்லாம் வேலைக்கு வரீங்க?? சோ கம்பெனி லாஸ் ஆனா உங்களுக்கு என்னங்கிற நினைப்பு.. அப்படித்தானே…??" என்று திட்ட ஆரம்பித்து விட்டான் அஜித்குமார்.


தவறு நடந்தால், அதிலும் அவனுக்கு கோபம் என்று வந்து விட்டால், பாராபட்சம் பார்க்காமல் திட்டுவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அவள் நினைத்தால், "எவ்வளவு சார் நஷ்டம் ஆச்சு?" என்று அவனிடமே கேட்டு, இப்பொழுதே இந்த நிமிஷமே ப்ளாங் செக் எழுதி அவன் முன் வைத்து விட்டுச் செல்ல முடியும். ஆனால் அதைச் செய்யாமல், தவறு தன் மேல் என்பதால் அவன் திட்டுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் நேகா.


"கமான்! ஸ்பீக் அவுட் நேகா… இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்…? என்ன?? எவ்வளவு நஷ்டமோ அதை ஒரே செக்கா எழுதி குடுத்துட்டுப் போகலாம்னு நினைக்கிறீங்க, ரைட்…" என்று அவன் கேட்டு முடிக்கவில்லை! 


"ஆமா சார்… அயோ இல்ல சார்…" என உளறியவள், அவனது முறைப்பைக் கண்டு, "சாரி சார்! இனிமேல் கவனமா இருப்பேன், இது போல் இன்னொரு தடவை கண்டிப்பா நடக்காது!" என்று இறங்கிய குரலில் அவள் கூற,


"இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் சொல்றீங்க.. ஆனா திருந்தின மாதிரி தான் தெரியல? பட் அடுத்த தடவை இப்படிக் கூப்பிட்டு வச்சி பேசிட்டு இருக்க மாட்டேன்…" என்று எச்சரித்தவன், "ஓகே, யூ மே கோ நவ்…" என்ற அஜித் லேப்டாப்யை தன் புறம் திருப்பிக் கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.


நேகாவும் விட்டால் போதும் என்று எழுந்தவள், அங்கிருந்து வேகமாக வெளியேற நினைத்துக் கதவைத் திறக்கப் போகவும், "ஒருநிமிஷம் மிஸ்.நேகா! நான் சிடுமூஞ்சியா இருக்கிறதால் தான், உங்களைத் தவிர, மத்தவங்க எல்லோரும் வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்றாங்க…" என்று அவன் ஒரு கொட்டு வைத்தான்.


'ஆஹா! பயபுள்ளைக்கு நாம சொன்னது கேட்டுருக்கு. இவனுக்கு பாம்பு காது போல!’ என அதைக் கவனமாக மனதில் நினைத்தவள், "சாரி சார்!" என மீண்டும் ஒரு மன்னிப்பை வேண்டி விட்டுத் தன் தளத்துக்கு வந்து விட்டாள்.


முகம் வாடி வந்தவளைப் பார்த்து, "என்னடி? உன் முகம் இப்படி டாலடிக்குது! பாராட்டு மழை அதிகமா கிடைச்சுதோ…??" என்று கேட்டு நேகாவின் கையால் அடி வாங்கினாள், அவளின் தோழி தனுஷா. 


அவளை அடித்து விட்டு உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்த நேகா, உள்ளே நடந்ததை அப்படியே தோழியிடம் கூறி விட்டு, "ஆனாலும் உங்க வீட்ல உங்க அண்ணனுக்கு நீங்க சின்ன வயசுல சிரிக்கச் சொல்லிக் குடுக்காம இருந்தது ரொம்ப தப்புடி…" என்று கூறி பல்லைக் கடித்தாள். 


"விட்றி! விட்றி! அவன் அப்படி வளர்ந்துட்டான். நாம ஒன்னும் பண்ண முடியாது! அதெல்லாம் அவனுக்கு வரப் போறவ பட வேண்டிய கவலை. சரி, உன் கோபத்தை குறைக்க உனக்கு ஒன்னு கொண்டு வந்துருக்கேனே…" என்றவள், "டொட்டடொயின்" என்றபடி தன் கைப்பையில் இருந்து சாக்லேட் பாக்ஸ் ஒன்றை எடுத்து நேகாவின் முன் வைத்தாள்.


தனுஷா கூறியது போல் சற்று முன் வாங்கிய திட்டுக்களை அனைத்தையும் மறந்தவளாக, "ஹை!!! சாக்லேட்டு! ஏதுடி இது?" என்று கேட்டது மட்டும் அல்லாமல், அதைப் பிரித்து அதில் இருந்து ஒன்றை எடுத்து ரசித்து உண்ண ஆரம்பித்தாள் நேகா.


அதைப் பார்த்த தனுஷா, "ஆனா ஒண்ணுடி.. உன்னைக் கவுக்க காஸ்ட்லியான பொருளுக்கு மெனக்கெட வேணாம். இப்படி விதவிதமா சாக்லேட்டை உன் கண்ணுல காட்டினா போதும்! நீயே கவுந்துருவே.. ஹாஹா…" அவள் சிரிக்க… 


"போடி! உனக்குத்தான் தெரியுமே? நான் குண்டா இருக்கேன்னு எங்க மோஹிமா இந்த ஐஸ்க்ரீம், சாக்லேட், கேக் எதையும் என் கண்ணுல காட்டுறதே இல்ல. க்ராண்ட்மா தான் அப்போ அப்போ ஒளிச்சு ஒளிச்சு தருவாங்க. அதையும் ஒருநாள் மோஹிமா பார்த்துட்டாங்க. க்ராண்ட்மாக்கு செம திட்டு! அப்புறம் நான் ஆபிஸ் வரும் போது வெளியே கடையில ஏதும் வாங்கி சாப்பிட கூடாதுன்னு பேக்கெட் மணியைக் கூடத் தர்றது இல்ல…" என்று கூறிக் கொண்டே கிட்டத்தட்ட பாதி சாக்லேட்களை காலி செய்திருந்தாள் நேகா.


ஆம்! நேகா - மேகா இருவரும் இரட்டையர்கள் என்றாலும் உருவ ஒற்றுமை கிடையாது. மேலும் மேகா ஒல்லியாக வளர்த்தியாக இருப்பாள். ஆனால் நேகா நன்றாக புஸுபுஸுவென்று சற்றுப் பூசினார் போன்று இருப்பாள். 


மேகா தன் அழகின் மேல் அக்கறை கொண்டு பார்த்து பார்த்துத் தான் சாப்பிடுவாள். தேவைக்கு அதிகமாக ஒரு பருக்கை கூட அதற்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டாள். ஆனால் நேகா அப்படி அல்ல, சாப்பாடு என்றால் போதும்! முதல் ஆளாக டைனிங் டேபிளுக்கு வருபவள், அனைவரும் உண்டு விட்டு எழுந்த பின்பு தான், போனால் போகிறது இரவு பார்த்துக் கொள்ளலாம் என்று மெதுவாக எழுந்து செல்வாள். குணத்தில் கூட மேகா - நேகா இருவரும் சற்று வேறுபட்டவர்கள் தான்..


பேசிக் கொண்டே பாதி சாக்லேட்களை சாப்பிட்டு விட்டு மீதியைத் தனது டேபிள் ட்ராயரில் வைத்துப் பூட்டினாள். 


"ஏன்டி…" என்று கேட்ட தனுஷாவுக்கு,


"நாளைக்கு வேணாமா…? ஏதோ என் மேல உள்ள பாசத்தில கொண்டு வந்து குடுத்தே. இப்படித் தினமும் உன்கிட்ட கேட்டா உதைக்க மாட்டியா…?” என்று கேட்டுச் சிரித்தவள், "இனியாவது கொஞ்சம் வேலை பார்க்கலாம்" எனக் கணினியின் பக்கம் தன் பார்வையைத் திருப்ப,


தனுஷாவோ, "ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன். இப்ப கேட்கவா நேகா…?" என்று பீடிகை போட்டாள்.


கீ போர்டில் தன் விரல்களால் நாட்டியம் ஆடியபடி, "கேளேன்டி! என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்…?" என்றாள். 


"இல்ல, நீயும் மேகாவும் டுவின்ஸ் தானே? அவளுக்கு மட்டும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ண போறாங்க, அடுத்து உனக்கு எப்ப கல்யாணம்…?" என்று கேட்டாள்.


"இன்னும் ஒரு வருஷத்துல…" என்று உடனே பதில் வந்தது நேகாவிடம் இருந்து…


"அதெப்படி உறுதியா சொல்ற…? அப்போ ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்தாச்சா? ஏன்டி என்கிட்ட சொல்லவே இல்ல? போடி! நீயெல்லாம் ஒரு பிரெண்டாடி? என்கிட்ட பேசாதே!” என்று கோபப்பட்டாள் தனுஷா. 


"எதுக்கு இப்ப அவசரப்படுறே? மாப்பிள்ளை எல்லாம் பார்க்கலடி. அல்ரெடி மாப்பிள்ளை ரெடியா தான் இருக்கான். அவன் வேற யாரும் இல்ல, எங்க ஓவிமா பையன் தான். ஆக்சுவலி மேகாக்கும், எனக்கும் ஒரே மேடையில் கல்யாணம் வைக்கத்தான் பிளான் போட்டாங்க எங்க மோஹிமா. பட் எனக்கு இப்ப கல்யாணத்தில் விருப்பம் இல்ல. அதனால் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஸ்ட்ரிக்ட்டா அப்பாகிட்ட சொல்லிட்டேன். பிள்ளைகள் விருப்பத்துக்கு எங்க வீட்ல எப்பவும் மதிப்பு கொடுப்பாங்க. இருந்தாலும் மோஹிமாவை நம்ப முடியாது. அதனால் தான் உங்க அண்ணன் பாஸ்ங்கிற பேர்ல எவ்வளவு திட்டினாலும் கோபப்பட்டு, ரோசப்பட்டு, வேலையை விட்டுட்டு வீட்ல இருக்காம தொடர்ந்து வேலைக்கு வந்துட்டு இருக்கேன். ஒரு வருஷம் ஏற்கனவே முடிஞ்சிருச்சு. இன்னும் ஒரே ஒரு வருஷம் தான். அதுக்கு அப்புறம் உங்க அண்ணனுக்கும் டாட்டா, அவரு ஆபிசுக்கும் டாட்டா காட்டிட்டு ஓவிமா பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பெங்களூர்க்கு கிளம்பி போய்ட்டே இருப்பேன்…" என்று கூறவும், 


"சோ.. மேடம் இன்னும் ஒரு வருஷம் ஃப்ரீ பேர்ட்ன்னு சொல்லு…" என தனுஷா கிண்டல் செய்ய..


"யா யா…" என்ற நேகா தன் கவனத்தை முழுவதுமாக வேலையில் செலுத்த ஆரம்பித்தாள்.


"இன்னொரு விஷயம் கேட்கவா நேகா?" என்று மீண்டும் இழுத்தாள் தனுஷா.


"எதுனாலும் ஒரே டைமா கேட்டுத் தொலையேன்டி! சும்மாவே சரியா வேலை பார்க்க மாட்டேன்கிறேன்னு கூப்பிட்டு வச்சு கூப்பிட்டு வச்சி உங்க அண்ணா திட்டுறார். இதுல நீ வேற நொய் நொய்ன்னுட்டு…" நேகா எரிச்சல் பட,


அதை புறம் தள்ளிய தனுஷா, "உங்க ஓவிமா பையனை நீ லவ் பண்றியா நேகா? இல்ல வீட்ல பார்த்து இருந்ததால் கல்யாணம் பண்ணிக்கப் போறியா…?" என்று கேட்கவும்,


"இன்னைக்கு உனக்கு என்னடி ஆச்சு? ஒரு சாக்லேட் பாக்ஸ் குடுத்துட்டு இவ்வளவு கேள்வி கேட்டுட்டு இருக்கே???” என்று சிரித்தாலும், தோழி கேள்விக்கு, "அது வந்து…" என்று பதில் சொல்லும் முன் நேகாவின் டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ஒலிக்க ஆரம்பித்தது. அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தபடி, 


"லன்ச் டைமில் பேசலாம் தனு…" என்ற நேகா போனில் க்ளையண்ட் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பிக்க, தனுஷாவோ தன் அண்ணனைக் காணச் சென்றாள். 


அஜித்திடம் வந்தவள், நேகா தன்னிடம் கூறியதை அப்படியே கூறி விட்டு, "அண்ணா! எப்படியோ இன்னைக்கு சாக்லேட்டை குடுத்து மேட்டரை அவகிட்ட இருந்து கறந்துட்டேன். இனி உன் சாமர்த்தியம்! இன்னும் ஒரு வருஷம் தான் இங்கே வேலை பார்ப்பேன்னு சொல்றா. இப்ப கோட்டை விட்டுட்டு, பின்னாடி இந்தப் படத்துல எல்லாம் ஹீரோக்கள் வில்லன் வேலை பார்க்கிற மாதிரி நீயும் பண்ண கூடாது! நீ எப்பவும் ஹீரோவா இருக்கிறது தான் நான் விரும்புவேன், சொல்லிட்டேன்…" என்று கறாராகக் கூறி விட்டுச் சென்று விட்டாள்.


தங்கை கூறய விஷயத்தை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அஜித், அவள் சென்றதும், தன் மொபைலில் பதிந்திருந்த நேகாவின் புகைப்படத்தைப் பார்த்து, "நான் ஹீரோவா இருக்கிறதும், வில்லனா மாறுவதும் உன் கையில் தான் இருக்கு பேபி…" என்றவனின் குரலில் என்ன இருந்தது???! தன் காதலியைக் கண்டிப்பாகக் கைப்பிடிப்பேன் என்றா? அல்லது அவளைச் சிறை பிடித்தாவது தன்னவளாக்குவேன் என்றா? அது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்..!!


*****”


அந்தக் கல்லூரியில் அரசமரத்தடியில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து தன் மடியில் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள் ரம்யா.


அவள் முகத்துக்கு நேராக சொடக்கிட்டு, "ரம்யா! உனக்குத்தான் எக்ஸாம் முடிஞ்சிதுல, எதுக்கு இன்னும் கிளம்பாம இருக்கே…?" என்று கேட்டபடி அவள் அருகில் அமர்ந்தான் பத்ரி. அவன் அதே கல்லூரியில் எம்.காம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன்.


புத்தகத்தில் இருந்து தனது பார்வையைத் திருப்பி அவனைப் பார்த்துச் சிரித்த ரம்யா, "ஹாய் சீனியர்! எனக்கு எக்ஸாம் முடிஞ்சிது. நான் ஸ்னேகாக்காக வெயிட்டிங்…" என்று கூறவும்.. 


"ஒஹ்! ஓகே ஓகே.. சரி, அடுத்த வருஷம் உனக்கு படிப்பு முடியுதுல, மேற்கொண்டு என்ன படிக்க போறே…?" என்று அவளிடம் கேட்டான் பத்ரி.  


"ஹா ஹா.. அதை அடுத்த வருஷ படிப்பு முடியவும் யோசிக்கலாம் சீனியர்…" என்று ரம்யா சிரித்துக் கொண்டே கூறியவள், "சரி, உங்களுக்கு இது லாஸ்ட் இயர். நெக்ஸ்ட் நீங்க என்ன பண்ண போறீங்க சீனியர்? பாரின் போய் படிக்கப் போறீங்களா…?" என்று அவனிடம் கேட்டாள். 


தன் கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்ட பத்ரி தலையைப் பின்னால் சாய்த்து, "அடுத்து என் முழு நேர வேலையா என் ஆளை கரெக்ட் பண்ண போறேன்…" என்று அவன் ரசித்து கூற,


"சீனியர்! இது போங்காட்டம்! உங்க ஆளு உங்க ஆளுனு சொல்றீங்களே தவிர, இதுவரைக்கும் அந்த ஆளை ஒரு தடவை கூட நீங்க கண்ணுல காட்டவே இல்லை…" முகம் சுருக்கினாள் ரம்யா.


"எப்படியும் இந்த வருஷ முடிவுக்குள்ள காட்டிடுவேன்…" என்று அவன் கூறிக் கொண்டு இருக்கும்போது, "ரம்யா…" என்று சற்றுத் தள்ளி நின்று குரல் கொடுத்தாள் ஸ்னேகா.


"உங்க ஆளை அப்புறம் காட்டுங்க… இப்ப என் ஆளு வந்தாச்சு. பை சீனியர்…" என்றபடி ரம்யா ஸ்னேகாவை நோக்கிச் சென்று விட, பத்ரியின் அருகே வந்து அமர்ந்தான், அவனது நண்பன்.


"என்ன பத்ரி, சாமிக்கிட்ட வரம் கேட்டுட்டியா?" என்று கேலி செய்தான் அவன்.


"ம்ம்ம்.. நானும் கேட்கத்தான் நினைக்கிறேன். ஆனா சாமி என்னை ஏறெடுத்து பார்த்தா தானே…??” ஏக்கப்பெருமூச்சு வெளிப்பட்டது பத்ரியிடம் இருந்து…


"பத்ரி! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே! நிஜமாவே நீ அவளை லவ் பண்றியா?" என்று கேட்டான், அவனது நண்பன்.


"இதுல தப்பா நினைக்க ஒன்னுமே இல்லடா.. நான் அவளை மட்டும் தான் லவ் பண்ணுவேன்…" பத்ரியின் குரலில் அவ்வளவு உறுதி!!


"பத்ரி! உன்கிட்ட எப்பவும் சொல்றதை தான் இப்பவும் சொல்றேன். இதை நீ அட்வைஸா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்ல, இல்ல உன் மேல் உள்ள அக்கறையால் சொல்றேன்னு எடுத்துக்கிட்டாலும் பரவாயில்ல, அவ உனக்கு வேணாம்டா…" என்றான், பத்ரியின் நண்பன். 


சட்டென்று கோபத்துடன் எழுந்த பத்ரி, "இதைச் சொல்ல தான் வந்தியா…? ஏற்கனவே இப்படிப் பேசாதேனு சொல்லி இருக்கேன். இனிமேல் இந்த மாதிரி பேசுறதா இருந்தா உன்னோட பிரெண்ட்ஷிப் இன்னையோட கட் பண்ணிக்கிறேன்…" என்றவன்,


"இங்க பார், நான் அவளை மனப்பூர்வமாக லவ் பண்றேன். அவ எப்படி இருந்தாலும் அவ எனக்குத்தான், எனக்கு மட்டும் தான்…!!" என்று நண்பனிடம் காட்டமாகப் பேசிய பத்ரி அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று சென்று விட்டான்.


****


1 comment:

  1. என்னங்கடா நடக்குது எவன் எவள லவ் பண்றானுங்க ஒன்னும் பிரில

    ReplyDelete