ஸ்வரம் 4

 



ஸ்வரம் 4..


அந்த அழகான பெரிய வீட்டின் ஹாலில் போடப்பட்டிருந்த விலையுயர்ந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுத் திமிராக அமர்ந்தபடி, தன் மருமகளை முறைத்துக் கொண்டிருந்தார், அந்த மாமியார்


அவரது மருமகளோ, "அத்தை! நான் சொல்றதைக் கேளுங்க… நான் அப்படி எல்லாம் பண்ணல, என்னை நம்புங்க!" என்று கண்களில் கண்ணீர் கரைபுரண்டோட அழுதாள்.


"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? என் புள்ளையை உன் முந்தானையில முடிஞ்சு வைக்க நினைச்சவ தானே நீ? உன்னோட பேச்சை நான் நம்பத் தயாரா இல்ல. ஒழுங்கு மரியாதையா என் புள்ள வர்றதுக்குள்ள இந்த வீட்டை விட்டு வெளியே போயிரு! அதான் உனக்கு நல்லது" என்று அந்த மாமியார் தன் மருமகளின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடவும், சரியாக அதே நேரம் 'தொடரும்' என்று வந்தது.


இவ்வளவு நேரம் டீவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியலில், அந்த மாமியார் தன் மருமகளை எப்படி எல்லாம் கொடுமை படுத்தினாள் என்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த ராதா…


"ச்ச! எவ்வளவு நல்ல ஸீன்! இந்த இடத்துல போய் இப்படித் தொடரும் போட்டுட்டானே? அவன் நல்லா இருப்பானா? நாசமா போவான்…" என்றபடி எதிர் சோபாவில் அமர்ந்து டைரியில் எதையோ எழுதிக் கொண்டிருந்த தன் மருமகள் மோகனாவை ஜாடையாகப் பார்த்தார்.


அதே நேரம் தான் எழுதுவதை நிறுத்தி விட்டுக் கண்ணில் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி, அதைச் சற்று ஊதி மீண்டும் அணிந்து கொண்ட மோகனா,


"என்ன அத்தை, கோபமா இருக்கீங்களா? குடிக்கச் சூடா காபி ஏதும் வேணுமா?" என்று கிண்டலாகக் கேட்டாள்.


மருமகளின் கேள்விக்குப் பதில் அளிக்காமல், "ஹூம்…" வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டவர், அடுத்தச் சீரியலுக்கான நேரம் ஆனதும் மீண்டும் டீவியைப் பார்க்க ஆரம்பித்தார்.


அடுத்தச் சீரியலில், "என்னங்க, உங்க அம்மாவை முதியோர் இல்லத்துக்கு எப்போ கூட்டிட்டுப் போறீங்க? சீக்கிரம் சொல்லுங்க.. அதைக் கொண்டாட நான் என் பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் பார்ட்டி கொடுக்கணும்…" என்று தன் கணவனிடம் கூறினாள், அந்தச் சீரியல் மருமகள்.


"கண்ணா! ராஜா! உன் பொண்டாட்டிகிட்ட கொஞ்சம் சொல்லுப்பா. நான் இந்த வீட்ல ஓரமா ஒரு மூலையில இருந்துட்டுப் போறேன். என்னை முதியோர் இல்லத்தில சேர்த்திடாதே!" என்று மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார், சீரியல் மாமியார்.


அதில் சட்டென்று டீவியை அணைத்த ராதா, "நாடகமா எடுக்கிறானுங்க நாடகம்?? ச்ச! இத பார்த்து தான் ஊர்ல இருக்கிற எல்லா மருமகளுங்களும் அவங்கவங்க மாமியாரைக் கொடுமை படுத்துறாளுங்க போல…" என்றபடி மீண்டும் மோகனாவை ஜாடையாகப் பார்த்துக் கூறி விட்டு ரிமோட்டை தூக்கி சோபாவில் எறிந்தார்.


அதையும் கவனித்த மோகனா, "என்ன அத்தை, சீரியல் பார்த்து சூடா இருக்கீங்க போல!! காபி வேணாம், ஜில்லுன்னு ஜூஸ் கொண்டு வரச் சொல்லவா?" என இப்பொழுது நமுட்டுச் சிரிப்புடன் கேட்டாள்.


அவரோ, "டேய் கார்த்திக்! உன் பொண்டாட்டி அப்போ இருந்து என்னைக் கிண்டல் பண்ணிட்டு இருக்கா. அதை என்னனு கேக்காம நீ பாட்டுக்குச் சும்மா உக்காந்து இருக்கே. என்னடா இதெல்லாம்?" என்று அங்கே அமர்ந்து தன் மடியில் இருந்த லேப்டாப்பில் கண் பதித்து இருந்த தன் மகன் கார்த்திக்கிடம் புகார் வாசித்தார் ராதா.


"அம்மா! உங்க ரெண்டு பேருக்கும் நடுவில என்னை இழுக்காதீங்க. இப்ப நீங்க முறைச்சுக்குவீங்க, நாளைக்குக் காலையிலேயே என் மருமகளைப் போல யாரும் உண்டான்னு பாட்டு பாடுவீங்க. என்னனு நான் கேட்டா, ‘எனக்கும், என் மருமகளுக்கு ஆயிரம் இருக்கும். நீ எதுக்கு மூக்கை நுழைக்கிறேனு' என்கிட்டயே எகிறிட்டு வருவீங்க. எனக்கு அது தேவையா? சோ, நீங்களாச்சு! உங்க மருமகளாச்சு!" என்று லேப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றாமல் அன்னைக்குப் பதில் அளித்த கார்த்திக், அதற்கு மேல் அங்கிருந்தால் தனக்குப் பேராபத்து என்று புரியவும், லேப்டாபை மூடி விட்டு எழுந்து நைசாக நழுவி மாடியேறி விட்டான். அவன் கூறியது உண்மை என்பதால் அமைதியாகி விட்டார் ராதா.


அங்கே மற்றொரு சோபாவில் அமர்ந்து தனது மொபைலை நோண்டி கொண்டிருந்த நேகா, தந்தையின் பேச்சில் சிரித்தவள், "ஏய் மேகா! என்னடி இது? மாமியார் மருமகள்குள்ள ஏதும் பிரச்சினையா? இன்னைக்குன்னு பார்த்து புகைச்சல் அதிகமா இருக்கு. நான் ஆபிஸ் போன நேரத்துல எனக்குத் தெரியாம ஏதும் நடந்துருச்சா?" என்று கேட்டாள்.


"அது ஒன்னும் இல்லடி, நம்ம மோஹிமா ஈவினிங் வடைக்கு மாவு அரைச்சுட்டு இருந்தாங்க. அப்போ கிராண்ட்மா சும்மா இல்லாம கிச்சனுக்குள்ள போய் வடை எப்படிச் சுடணும்னு அவங்களுக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டங்க. அதுக்கு மோஹிமா,


'ரொம்பப் பேசினிங்கன்னா வடைக்குப் பதிலா உங்களைக் கொதிக்கிற எண்ணையில் சுட்டு எடுத்துருவேன்னு' சொல்ல.. இவ செஞ்சாலும் செய்வானு பயந்து வெளியே வந்துட்டாங்க. ஆனாலும் மோஹிமாவை ஒன்னுமே பண்ண முடியலையேங்கிற ஆதங்கத்துல பாவம் புலம்பிட்டே இருக்காங்க" என்று கூறிச் சிரித்தாள் மேகா.


"ம்ஹூம்! எனக்கென்னமோ வேற ஏதோ விஷயம் இருக்கும்னு தோணுதுடி" என்று யோசனையுடன் கூறினாள் நேகா.


"அப்படிங்கிற?? சரி விடு! கத்திரிக்கா முத்துனா கடைக்கு வந்து தானே ஆகணும். அப்போ என்னனு தெரிஞ்சிட்டுப் போகுது" என்று சொல்லி விட்டு மேகா மீண்டும் சிரிக்க,


"ஏன்டி, எப்ப தான் இந்த ஆதிகாலத்து பழமொழியை விட்டுத் தள்ளுவ?" முறைத்தாள் நேகா.


"புது மொழி கண்டு பிடிக்கிற வரைக்கும்… ஹா ஹா..." என்று இருவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துப் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர்.


தன்னைத்தான் கேலி செய்து சிரிக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்ட ராதா, "ரெண்டு பேரும் படுக்கப் போகாம இன்னும் இங்க உக்காந்து என்ன கெக்கே பெக்கேன்னுட்டு சிரிச்சுட்டு இருக்கீங்க? மாடிக்கு ஓடுங்க…" பேத்திகளை விரட்டியவர்…


அங்கே தரையில் அமர்ந்து தன் மடியில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, கீழே வெள்ளை முத்துக்களாய்ச் சிதறி கிடந்த மல்லிகை மொட்டுக்களை அழகாக நூலில் கோர்த்தபடி படித்துக் கொண்டிருந்த ஸ்னேகாவைப் பார்த்தார். அவரது மனம் கனிந்தது. சின்னப் பேத்தியை அழைக்கப் போகும் நேரம் வாசலில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. அதில் நிமிர்ந்து பார்த்தார்.


அதற்குள், "ப்ரோ வந்தாச்சு" என்று நேகா, மேகா இருவரும் கூறவும், கையில் பெரிய பார்சலுடன் வீட்டின் உள்ளே வந்தான் விக்ராந்த்.


அண்ணனது கையில் இருந்த பார்சலைப் பார்த்ததும், "வாவ்! கல்யாண பத்திரிகை வாங்கிட்டு வந்திட்டியா ப்ரோ? என்கிட்ட குடு, நான் தான் மொதல்ல பார்ப்பேன்" என்றவாறு அவன் கையில் இருந்ததைப் பிடுங்க வந்தாள் நேகா.


"கல்யாணப் பொண்ணு நான்தான்! சோ நான் தான் பிரிச்சுப் பார்ப்பேன், ப்ரோ! என்கிட்ட குடு!" என்றபடி எழுந்து சென்ற மேகா தன் அண்ணனின் கையில் இருந்து வாங்க முயன்றாள்.


"அடியேய்! கல்யாண பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமா போய் ஒரு இடத்தில உக்காருடின்னு மோஹிமா உன்னைத் திட்ட போறாங்க, சொல்லிட்டேன்" என்று எச்சரித்தாள் நேகா.


"ஏன்? ஏன் உக்காரணும்? அதெல்லாம் முடியாது! நான் தான் பார்ப்பேன். மோஹிமாகிட்ட நீ அடி வாங்காம ஓடிப் போயிரு!" அடம்பிடித்தாள் மேகா.


"அடிப்பாவி! என்னடி என்னை ஓடிப் போகச் சொல்றே? மோஹிமா இங்க பாருங்க இவளை…" என்று அவளைப் பார்த்து நேகா குறும்பாகக் கண் சிமிட்டினாள்.


அவர்களின் பேச்சிலும், செயலிலும் கடுப்பான விக்ராந்த், "மோஹிமா உங்களை அடிப்பாங்களோ இல்லையோ, நான் நிச்சயம் அடிச்சுருவேன். தள்ளி நில்லுங்க ரெண்டு பேரும்…" என்று சத்தம் போட்டான்.


"என்னது அடிப்பியா? ஓய் லேடர்(ஏணிப்படி)! எங்கே அடி பார்ப்போம்??" என நேகா முறைத்துக் கொண்டு தன் அண்ணன் மேல் பாய்வதற்குள்…


"சப்பா! இதுங்க ரெண்டையும் பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே!!!" என்று எப்பொழுதும் போல் ஆயாசமாக வாய் விட்டுப் புலம்பிய மோகனாவைப் பார்த்துச் சிரித்த ராதா,


"கடவுள் இருக்கார்டா பேராண்டி!! கடவுள் இருக்கார்!!" என்று தன் பேரனிடம் கூறி விட்டு, மருமகளின் முறைப்புக்குப் பயந்து தனது அறைக்குச் சென்று விட்டார்.


"உங்களை நாளைக்குக் கவனிச்சுக்கிறேன்" என்று மாமியாரைப் பார்த்து முணுமுணுத்த மோகனா,


"ஏய் வானரங்களா! நீங்க ரெண்டு பேருமே பத்திரிக்கையைப் பார்க்க வேண்டாம். நாளைக்குக் காலையில பூஜை முடிச்சதும் எல்லோரும் பார்த்தா போதும். இப்ப உங்க ரூம்க்கு போங்க" என்று சற்றுக் குரல் உயர்த்தி அதட்டல் போட்டாள் மோகனா.


அன்னையை முடிந்த மட்டும் முறைத்த இரட்டையர்கள் இருவரும், "ப்ரோ! அடுத்து உனக்குத்தான் கல்யாணம். நீ என்ன பண்றே.. உன் பொண்டாட்டி இந்த வீட்டுக்கு வந்ததும், அவகிட்ட சொல்லி இந்த மோஹிமாவை ஒரு வழி பண்ண வைக்கிற.. ஆமா…" என்று காலால் தரையை உதைத்து விட்டு மாடிப்படி ஏற,


"அவன் பொண்டாட்டி உங்க ரெண்டு பேருக்கும் அண்ணி. அவ இவன்னு சொன்னிங்கன்னா வாயில சூடு போட்டுருவேன்" என்று மகள்களைத் திட்டியவள்,


அங்கே பூ தொடுத்தபடி படித்துக் கொண்டிருந்த சின்ன மகளிடம், "ஸ்னேகா! அண்ணாகிட்ட இருந்து பத்திரிகையை வாங்கிப் பூஜை ரூம்ல கொண்டு போய் வைமா" என்று கூறினாள்.


அன்னை கூறியதை அவள் கவனிக்கவில்லையோ? அவளது கவனம் முழுவதும் படிப்பதிலும், பூ தொடுப்பதிலுமே இருந்தது.. 


"மோஹிமா! அவ படிக்கட்டும். நானே கொண்டு போய் வைக்கிறேன்" என்றவன், பூஜை அறைக்குச் சென்று பார்சலை வைத்து விட்டு வந்து அன்னையின் அருகே அமர்ந்தவன்…


"மோஹிமா! எப்போ இருந்து பத்திரிக்கை கொடுக்க ஆரம்பிக்கணும் சொல்லுங்க, ஸ்டார்ட் பண்ணிடலாம். அதுக்கு முன்ன, மொதல்ல குலதெய்வ கோவிலுக்குப் பத்திரிக்கை வைக்கணும்னு சொன்னிங்கள்ல. எப்ப போலாம்னு சொல்லுங்க, அங்கே பூஜைக்கு ஏற்பாடு பண்ணனும். அப்புறம் வெளியூர்ல யாருக்கெல்லாம் கொடுக்கணும்னு சொல்லிட்டீங்கன்னா, நான் கொரியர் பண்ணிடுறேன்.


மண்டபம் டெக்கரேஷன்க்கு சில டிசைனர்ஸ்கிட்ட பேசிட்டேன். நாளைக்குச் சாயங்காலம் வீட்டுக்கும் வரச் சொல்லிட்டேன். மேகாக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ணச் சொல்லுங்க. சாப்பாடு மெனு கொஞ்சம் மாத்தணும்னு சொன்னிங்கள்ல, அதையும் எழுதி குடுத்திங்கன்னா நான் கேட்டரர்ஸ்க்கு மெயில் பண்ணிடுவேன். தென்…" எனப் பொறுப்புள்ள அந்த வீட்டின் மூத்த மகனாக, தங்கைக்குப் பாசமிகு அண்ணனாக, விக்ராந்த் பேச பேச அவனையே பார்த்துக் கொண்டிருந்த மோகனா…


மகனின் தலையைக் கலைத்து விட்டு, "இன்னைக்கு ஏதோ பிஸ்னெஸ் மீட்டிங் இருக்கு, டின்னர் அங்கேயே முடிச்சிருவேன்னு சொன்னியே?? சாப்பிட்டியா விக்கி?" என்று கேட்டாள்.


அன்னையின் கையைப் பிடித்துக் கொண்ட விக்ராந்த், "சாப்பிட்டேன் மோஹிமா. அப்படியே வர்ற வழி தானேன்னு இன்விடேஷனையும் வாங்கிட்டு வந்துட்டேன்" என்று அவன் கூறவும்,


"சரிப்பா.. நீ சொன்னது எல்லாம் நான் எழுதி வைக்கிறேன். மீதி காலையில் பேசலாம். டயர்ட்டா தெரியற, போ, போய்ப் படு!" என்றாள்.


"ம்ம்ம்… குட் நைட் மோஹிமா…" என்று விட்டுத் தன் அன்னையின் கன்னத்தில் முத்தம் பதித்தவன், ஸ்நேகாவின் அருகே சென்று, "ஸ்நேகா! இன்னுமா படிச்சுட்டு இருக்கே? மணி என்ன ஆகுது பாரு! காலையில் படிக்கலாம், எழுந்திரு…" என்றபடி தங்கையின் தலையைத் தடவ, அதில் தன் கவனம் கலைந்து நிமிர்ந்து பார்த்த ஸ்நேகா,


"அண்ணா…" என்றாள். அவளின் சிரிப்பில் தான் எவ்வளவு உயிர்ப்பு!! இந்த உயிர்ப்பு எப்பொழுதும் தன் தங்கையின் வாழ்வில் இருக்க வேண்டும் என்பதே அந்த அண்ணனின் வேண்டுதல் அல்லவா..??


"படிச்சு முடிச்சுட்டேண்ணா, பூவும் கட்டி முடிச்சுட்டேன். இதோ எழுந்துக்கறேன்…" அவள் கூறவும்,


"உன் அக்காங்க ரெண்டு பேரும் பண்ற அழும்புலயும் கவனம் சிதறாம படிக்கிறே பார்த்தியா, அங்கே நிக்கிறேடா நீ!!" என்று சொல்லி அவன் சிரித்தான்.


"இல்லண்ணா, நான் உக்காந்து இருக்கேன்" என்று விட்டுத் தானும் சிரித்தாள் ஸ்னேகா.


"வாலு! வாலு…" என்று தங்கையின் தலையைப் பிடித்து ஆட்டிய விக்ராந்த், "சரிடா, போய்த் தூங்கு, காலையில் சீக்கிரம் எழுந்துக்கனும்ல" என்று விட்டு எழுந்தவன், வீட்டின் தலைவாசல் கதவை பூட்டி விட்டுத் தனது அறைக்குச் சென்று விட்டான்.


தனது புத்தகத்தை மூடி விட்டு, நெருக்கித் தொடுத்த மல்லிகை சரத்தையும் தனது புத்தகத்தையும் கையில் எடுத்துக் கொண்டு எழுந்த ஸ்னேகா, பூவை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு, "குட்நைட் மோஹிமா…" என அன்னையிடம் கூறியவள், பாட்டியின் அறைக்குச் சென்று விட்டாள்.


சிறிது நேரம் கழித்து மோகனாவும் தன் கையில் இருந்த டைரியை டீபாயின் மீது வைத்து விட்டு, எழுந்து மாமியாரைக் காணச் சென்றாள்.


ராதாவின் அறையில் அவரது அருகில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் ஸ்னேகா. அங்கு வந்த மோகனாவிற்கோ மகளைப் பார்த்ததும் பெருமூச்சு எழுந்தது. பின்பு கட்டிலின் அருகே சென்றவள், மாமியாரின் காலருகே அமர்ந்து, அவரின் காலை எடுத்து தனது மடியில் வைத்து மென்மையாகப் பிடித்து விட ஆரம்பித்தாள்.


தூக்கம் வராமல் வெறுமனே கண்களை மூடிப் படுத்திருந்ததால் கண் விழித்த ராதா, தனக்குக் கால் பிடித்து விட்டுக் கொண்டிருந்த மருமகளைக் கண்டு,


"என்னம்மா, தூங்கப் போகாம இங்க என்ன பண்றே?" படுத்திருந்தபடியே அவளிடம் கேட்டார்.


"உங்க மனசு குழப்பதுல இருக்கும் போது எனக்கு எப்படி அத்தை தூக்கம் வரும்?" என்று கூறி விட்டு அவள் புன்னகைத்தாள்.


என்னதான் சில விஷயங்களில் இருவரும் முட்டி மோதிக் கொண்டாலும், மோகனாவின் மேல் தனிப் பாசம் உண்டு அவருக்கு. அதே போல் தான், மோகனாவும் தன் மாமியாரின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாள்.


"ம்பச்! குழப்பம் எல்லாம் இல்ல, நான் எப்பவும் போலத் தான் இருக்கேன்…" என எங்கோ பார்த்துக் கொண்டு பதில் அளித்தார் அவர்.


"அத்தை! இது இப்ப எடுத்த முடிவு இல்லன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன். ஓவியா வீட்டுக்கு என் பொண்ணு மருமகளா போகணும்ங்கிறது தான் என்னோட ஆசைன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கறப்போ இப்படி உம்முன்னு முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டா என்ன அர்த்தம்?" என்று அவள் கேட்க,


'அதுக்குத்தான் இன்னும் ஒரு வருஷம் இருக்கே. அது நடக்கும் போது நடக்கட்டும்னு விடாம, மேகா கல்யாணத்தப்பவே ரிஷிக்கும், நேகாக்கும் நிச்சயம் பண்ணிடனும்னு எதுக்கு அவசரப்படுறே? உனக்கு உன்னோட ஆசை தான் முக்கியம்னு ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறே?' என்று தன் மனதில் ஆதங்கப்பட்டார் ராதா.


ஆம்! அன்று உணவு மேஜையில் ஸ்நேகா மற்றும் நேகாவைத் தவிர மற்ற எல்லோரும் இருக்கும் பொழுது திடீரென, "மேகாவின் திருமணத்தன்றே ரிஷி - நேகா இருவரது திருமண நிச்சயத்தை முடித்து விட வேண்டும்" என்று கூறினாள் மோகனா.


அதில் திகைத்து அனைவரும் அவளைப் பார்க்க, கார்த்திக்கோ மனைவியைப் புன்னகையுடன் பார்த்தான். கணவனின் அந்த நம்பிக்கையான புன்னகை தானே அவளுக்குப் பலம்!!


"நிச்சயத்துக்கான ஏற்பாட்டையும் சேர்த்தே பாருங்க. இது பத்தி நாளைக்கே ஓவியா வீட்டுக்குப் போய்ப் பேசலாம்" என்று கூறி விட்டாள். எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ள, ராதாவால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


ரிஷி அவரது மகளின் மகன் தான்! அவருக்குப் பேரன் தான்! ஆனால் அவனின் குணம் தான் அவருக்குப் பிடிக்காமல் போனது. அதற்குக் முதற்காரணம், இதுநாள் வரை தன் மகளை "அம்மா" என்று அழைக்காதது தான். எதனால் அப்படி இருக்கிறான் என்று அவருக்குத் தெரியவில்லை என்றாலும், இப்படிப் பெற்ற தாயையே ஒதுக்கி வைத்திருப்பவனுக்கு, துறுதுறுவெனக் குறும்பை மட்டுமே குணமாகக் கொண்டுள்ள தன் பேத்தி நேகாவை மணமுடிக்க அவருக்கு எப்படி விருப்பம் வரும்??


அவரது எண்ணம் போலவே நேகாவும் இரண்டு வருடம் கழித்தே தனக்குக் கல்யாணம் என்று முடிவாகக் கூறி விட்டாள். ஒருவருடம் கடந்த நிலையில், இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே என்று அப்போதைக்கு அதைப் பற்றி நினைக்காமல் இருந்தார். ஆனால் மோகனாவோ, அவர்களின் கல்யாணத்தை இப்பவே உறுதி படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள். அதை எப்படித் தடுப்பது என்று தான் அவருக்குப் புரியவில்லை. அதனால் தான் தன்னுடைய அமைதியில் தனது மறுப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.


"என்ன அத்தை யோசிக்கிறீங்க? உங்களுக்கே தெரியும், இப்ப கூட இந்த ரெண்டு கல்யாணமும் ஒண்ணா நடக்க வேண்டியது! ஆனா நேகா மனசுக்காக அவ கேட்டுக்கிட்டதால நான் தள்ளிப் போட சம்மதிச்சேன். எப்படியும் இன்னும் ஒரு வருசம் கழிச்சு நேகா ஓவியா வீட்டுக்குத்தான் மருமகளா போகப் போறா. என்ன அதை இப்பவே ஊரறிய உறுதிபடுத்திக்கப் போறோம், அவ்வளவு தானே??" என்று கூற, அவரோ அமைதியாக இருந்தார்.


"அத்தை! நம்ம ரிஷி கோபக்காரன்ங்கிறது தானே உங்க மனசை போட்டு படுத்துது. ஏன், உங்க புள்ள கூடத்தான் கல்யாணத்துக்கு முன்ன எப்பவும் உர்ருன்னே இருந்தாரு. அதுக்கு அப்புறம் எப்படி மாறிட்டாரு? அது மாதிரி ரிஷி நேகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா கண்டிப்பா மாறிடுவான். இவ குணத்தால அவனை மாத்திடுவா. அவன் உங்க பேரன் அத்தை, அவனை நீங்களே ஒதுக்கி வைக்கலாமா?" என்று அவருக்குப் புரியும்படி எடுத்துச் சொன்ன மோகனா,


"இன்னொரு விஷயத்தை நான் உங்ககிட்ட தெளிவா சொல்லிடுறேன். ஓவியாவை நம்ம வீட்டுப் பொண்ணைத் தவிர வேற யாராலும் நல்லா பார்த்துக்க முடியாது. இப்ப ரம்யா அங்க இருக்குற வரைக்கும் அவ பார்த்துப்பா. ரம்யாக்கும் கல்யாணம் முடிஞ்சி புகுந்த வீட்டுக்குப் போய்ட்டா, அதுக்கு அப்புறம்???


ஒருவேளை நம்ம ரிஷிக்கு வெளியிடத்தில் பொண்ணு பார்த்துக் கட்டி வச்சிட்டோம்னு வைங்க. அவ ஓவியாவை ரம்யா மாதிரி பார்த்துக்குவானு என்ன நிச்சயம்? ரவி அவளைத் தங்கமா தங்குறார்தான்! ஆனாலும் எப்பவும் அவ கூட அவர் இருக்க முடியாது தானே? இதே இது, நம்ம நேகான்னா, நாம கவலை இல்லாம இருக்கலாம். நாமும் எப்பவும் போல இன்னும் அதிக உரிமையோட ஓவியா வீட்டுக்குப் போய்ட்டும் வந்துட்டும் இருக்கலாம். நான் உறுதியா இருக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம்" என்று நீளமாகப் பேசி முடித்த மோகனா எழுந்து கொண்டாள்.


"அத்தை! உங்க பிடிவாதத்தை விட்டுருங்க. நாளைக்கு ஓவி வீட்டுக்கு நாம போறோம், பேசி முடிக்கிறோம்" என்றவள், ஸ்நேகாவின் அருகே சென்று மகளுக்குப் போர்வை ஒன்றைப் போர்த்தி விட்டு, அவளின் தலையைத் தடவி கொடுத்து மகளின் நெற்றியில் முத்தமிட்டவள், அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.


ராதாவுக்கோ மோகனாவை நினைத்துப் பெருமையாக இருந்தது. அவரது மகள் ஓவியாவுக்காகத்தான் அவள் பார்த்து பார்த்துச் செய்கிறாள். ஆனாலும் பேத்தி என்று வரும் பொழுது, அவரது மனம் அதை முழுமையாக ஏற்க தான் மறுத்தது.


தங்களது அறைக்குள் நுழைந்து கதவை தாழ் போட்டு விட்டுக் கட்டிலில் வந்து அமைதியாக அமர்ந்தாள் மோகனா.


கையில் ஆங்கிலப் புத்தகத்தை வைத்துப் புரட்டிக் கொண்டிருந்த கார்த்திக், மனைவி அமைதியாக இருப்பது கண்டு கையில் இருந்ததை மூடி பக்கத்தில் வைத்து விட்டு,


"மோகனா…" என்று அழைத்தான்.


"ம்ம்ம்" என்று மட்டும் குரல் கொடுத்தாள்.


"என்னமா? என்ன ஒரு மாதிரி இருக்கே? என்னாச்சு??" என்று கேட்டான்.


அவளோ கணவனை நெருங்கி, அவன் தோளில் சாய்ந்து கொண்டு, "என்மேல் ஏதும் கோபமாங்க?" என்று கேட்டாள்.


"எதுக்கு இப்ப சம்பந்தம் இல்லாம இப்படிக் கேக்கறே" என்று மனைவியின் தலையைக் கோதியபடி கேட்டான்.


"என்னமோ தெரியலங்க.. கொஞ்ச நாளாவே மனசுக்குள்ள ஏதோ தப்பா நடக்கப் போற மாதிரியே தோணுது. எதுக்காக அப்படின்னு என்னால உணர முடியல. அதான் உங்களைக் கேக்காம நானே இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன்" என்று அவள் இழுத்தபடி கூறவும்…


"எது?? நாளைக்குப் பொங்கல்க்குப் பதில் பூரி சுட போறேன்னு சாயங்காலம் சொன்னியே, அதுவா??" என்று கேட்டு வேண்டும் என்றே வம்பிழுத்தான் கார்த்திக்.


சட்டென்று கணவனிடம் இருந்து விலகி அமர்ந்தவள், "நான் எவ்வளவு சீரியஸா சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்ன பேசறீங்க?" முறைத்தாள்.


"ஹான்! இது நல்ல பிள்ளைக்கு அழகு. இப்படி முறைச்சா தான்டி நீ மோகனா. உனக்கெல்லாம் சென்டிமென்ட் சுட்டுப் போட்டாலும் சூட் ஆகாது. அதனால அதை ட்ரை பண்ணாம நீ நீயா இரு…" என்று அவன் கூறவும்..


"அதாவது என்னைக் காமெடி பீஸுன்னு மறைமுகமா சொல்றிங்க, அப்படித்தானே? போங்க உங்க பேச்சு க்கா!!" என்று சிணுங்கியபடி கணவனின் மார்பில் அவள் இரு கைகள் கொண்டு அடிக்க,


"ம்ஹூம், கல்யாண வயசுல உனக்கு நாலு பிள்ளைங்க இருக்காங்கன்னு சொன்னா, யாரும் நம்ப மாட்டாங்க. நீதான் அவ்வளவு குறும்பு பண்றே…" என்றபடி மனைவியின் கைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சத்தில் போட்டுக் கொண்டவன், அவளை மென்மையாக அணைத்துக் கொண்டு,


"மோகனா! நம்ம பிள்ளைங்க விஷயத்தில் முடிவு எடுக்க அம்மாவா உனக்கு முழு உரிமை இருக்கு. எந்தத் தாயும் தன் குழந்தைகளுக்கு நல்லது தான் நினைப்பா. கூடவே நீ உன் தோழிக்காகவும் யோசிக்கிறே. இந்த விஷயத்தில் நான் ரொம்பவே லக்கிடி!! நீ அடிக்கடி ஒரு பாட்டு கேட்பியே.."


"வாலிபங்கள் 

ஓடும் வயதாகக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

அழகான மனைவி 

அன்பான துணைவி

அமைந்தாலே 

பேரின்பமே…"


லயத்தோடு பாடிய கார்த்திக், "இந்தக் கவிதையை அந்தக் கவிஞன் எந்த அர்த்தத்தில் எழுதினானோ தெரியல. ஆனா நான் இந்த வரிகள் சொல்வது மாதிரி, உன் கூட வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்" என்றவன், தன் நெற்றியால் மனைவியின் நெற்றியில் முட்டி,


"அன்பான, அழகான, குறும்பு நிறைந்த, குழந்தைத்தனம் மாறாத நீ எனக்குக் கிடைச்சது எனக்கு வரம்!! நீ என்ன சொன்னாலும் நான் மறுக்க மாட்டேன், கோபப்படவும் மாட்டேன். முக்கியமா உன்னோட டிசிசன் ஒருநாளும் தப்பாகாதுன்னு, எனக்கு அதுல நிறைய நம்பிக்கை இருக்கு. அதனால இதுல கோபப்ட ஒன்னுமே இல்ல…" என்று காதலுடன் கூறினான்.


கணவனின் காதலில் எப்பொழுதும் போல் இப்பொழுதும் சுகமாய் நனைந்த மோகனா, "உங்களோட இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமா எப்பொழுதும் நான் இருப்பேன். ஐ லவ் யு கார்த்திக்!!" என்றாள், அதே அன்பு மாறாமல்.


ஆனால் அவர்கள் அப்பொழுது அறியவில்லை!! பின்னாளில் மோகனா எடுக்கப் போகும் ஒரு முடிவு, சிலரின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட போகிறது என்பதை… அப்பொழுதும் கார்த்திக் இதே காதலுடன் மனைவியை நேசிப்பானா..??


****


1 comment: