ஸ்வரம் 5

 




ஸ்வரம் 5


மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் அரக்க பறக்க உணவை உண்டு முடித்து விட்டு, "மோஹிமா! பாய்…" என்று கூறியபடி வாசலை நோக்கி ஓடப் போன நேகாவை,


"ஏய் நேகா! நில்லுடி! காலையிலேயே உன்கிட்ட என்ன சொன்னேன்? இன்னைக்கு லீவு போடு, ஓவி வீட்டுக்குப் போறோம்னு சொன்னேனா இல்லையா? நீ பாட்டுக்கு வேலைக்குக் கிளம்பிட்டே" என்று மகளை மோகனா முறைக்க,


"ம்மா ம்மா.. என் செல்ல மோஹிமா இல்ல.. என்னோட எம்டி சிடுமூஞ்சின்னு சொல்லி இருக்கேன்ல, லீவெல்லாம் தர மாட்டார்மா. சோ நீங்களும், அப்பாவும் ஓவிமா வீட்டுக்குப் போய்ட்டு வருவீங்களாம், நான் ஆபிசுக்கு போய்ட்டு வருவேனாம்" என்றவள், அடுத்த நிமிடம் சிட்டாகப் பறந்து விட்டாள்.


"சாயங்காலம் வீட்டுக்கு வருவேல, அப்போ இருக்குடி உனக்கு…" என்று பல்லைக் கடித்த மோகனா, தனது அறையில் இருந்து வெளியே வந்த சின்ன மகளிடம்,


"ஸ்னேகா! என்னடா காலேஜுக்கு இவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்ட? சரி, எப்படியும் ரம்யாவைக் கூட்டிட்டுத் தானே போவே? நானும் அப்பாவும் அங்கே தானே போறோம். இன்னைக்கு எங்க கூடக் கார்ல போகலாம் வா!" என்று மகளைத் தங்களுடன் அழைத்தாள் மோகனா.


"இல்ல மோஹிமா, நான் அண்ணா கூடச் செழியன் அங்கிளைப் பார்க்கப் போறேன். அவரைப் பார்த்துட்டு அப்படியே காலேஜ் போயிடுவேன். இன்னைக்கு அங்க வரலன்னு நேத்தே ரம்யாகிட்ட சொல்லிட்டேன்" என்று கூறவும்,


"ம்பச்! ஆமால்ல, மறந்தே போட்டேன் பாரு! இன்னைக்கு உனக்கு அவர்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கி இருக்குல. விக்கி எங்கே?" என்று மோகனா கேட்டுக் கொண்டிருக்கும் போது,


"இதோ வந்துட்டேன் மோஹிமா.. ஸ்னேகா! போலாமாடா?" என்று கேட்டபடி தன் முழுக்கை சட்டையை மடக்கியவாறு அங்கு வந்தான் விக்ராந்த்.


"நான் ரெடிண்ணா…" என்ற தங்கையைப் பார்த்துச் சிரித்தவன்,


"சாப்பிட்டியாடா?" என்று கேட்க, அவள் 'ஆம்' என்று தலையை ஆட்டவும், "மோஹிமா! போய்ட்டு வரோம்" என்று அன்னையிடம் கூறி விட்டுத் தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.


செல்லும் தன் பிள்ளைகளைப் பார்த்த மோகனாவோ, "ஹ்ம்ம்!!" என்று பெருமூச்சு விட்டபடி தன் கணவனைக் காணச் சென்றாள்.


காரில் அமைதியாக அமர்ந்திருந்தாள் ஸ்னேகா. மிதமான வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த விக்ராந்த், "ஸ்னேகா…" என்று அழைத்தான்.


"என்னண்ணா?" என்று கேட்டவளிடம், "இன்னும் மூணு மாசத்துல உனக்குப் படிப்பு முடியுதுல, மேற்கொண்டு படிக்கப் போறியா? இல்ல நம்ம ஆபிசுக்கு வரப் போறியா?" என்று கேட்டான் விக்ராந்த்.


ஒரு நொடி அமைதியாக இருந்தவள் பின்பு, "மேல படிக்கணும்ண்ணா... ஆனா…" என்று அவள் சிறு தயக்கத்துடன் இழுத்தாள்.


"என்னடா?? எதுக்கு இப்படித் தயங்குறே? நீ என்ன படிக்கப் போறே, எந்தக் காலேஜில் உனக்கு அட்மிஷன் வேணும்? அதை மட்டும் சொல்லு, மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்ற தன் அண்ணனைத் திரும்பிப் பார்த்த ஸ்னேகா,


"நான் கனடா இல்லனா அமெரிக்கா இப்படி ஃபாரின் போய் என்னோட படிப்பைத் தொடரணும்னு ஆசைப்படுறேன்ண்ணா…" என்று அவள் அதே தயக்கத்துடன் கூறி முடிக்கவில்லை..!!


"வாட்…??!!!" என்று அதிர்ந்து காரை சாலையின் ஓரமாக நிறுத்தினான் விக்ராந்த்.


*******


"ஏ.கே ஸ்ஃபேர் பார்ட்ஸ்" அலுவலகப் பார்க்கிங் ஏரியாவில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிய நேகா, தன் தோள் பையை எடுத்துக் கொண்டு, வலது கையின் ஆள்காட்டி விரலில் ஸ்கூட்டியின் சாவியைச் சுழற்றியபடி அங்கிருந்து நகர்ந்தாள். அப்பொழுது அவள் கண்ணில் பட்டது, கருப்பு நிற பி.எம்.டபுள்யூ வாகனம்.


அதைப் பார்த்ததும் தன் ஒற்றைப் புருவத்தைத் தூக்கியபடி அந்த வாகனத்தின் அருகே சென்றவள், "மணி ஒன்பது கூட ஆகல, அதுக்குள்ள ஆபிசுக்கு வந்துட்டான். இவன் சீக்கிரம் வர வேண்டியது, அப்புறம் மத்தவங்க லேட்டா வர்றாங்கனு சொல்லி காய்ச்சி எடுக்க வேண்டியது. இவனுக்குத்தான் வேற வேலை இல்லன்னா மத்தவங்களும் அப்படி இருப்பாங்களா என்ன? கொஞ்சம் யோசிக்க வேணாமா?


ஒரு ஓட்ட வண்டியும், ஒண்ணுக்கும் உதவாத இந்தப் பில்டிங்கும் வச்சிருந்தா நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..??!! இதுல உனக்கு மனசுல பிஸ்னெஸ்மேன்னு நினைப்பு வேற!! ஹூம்!!" என்று தனது முதலாளி அஜித்குமாரை வஞ்சமில்லாமல் வறுத்தெடுத்தவள்,


"சும்மா சும்மா என்னைக் கூப்பிட்டு வச்சி திட்டிட்டே இருப்பேல. உன்னை ஏதாவது பண்ணனுமே? என்ன பண்ணலாம்?" என்று யோசித்தவளுக்கு மனதில் மின்னல் வெட்ட, சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள்.


அவளைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்பதையும், சிசிடீவி கேமரா வேறு பக்கம் இருக்கிறது என்பதையும் நன்றாக உறுதிபடுத்திக் கொண்டு, தன் கைப்பையில் இருந்து லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து, அந்தக் காரின் கண்ணாடியில் கிறுக்க ஆரம்பித்தாள் நேகா. நன்றாகக் கிறுக்கி வைத்து விட்டு,


"ஏய்! இப்ப தான் நீ ரொம்ப அழுக்கா இருக்கே! வெவ்வே!!" என்று அழகு காட்டி விட்டுச் சிரித்தபடி ஒருவித துள்ளல் நடையில் அலுவலகத்தின் உள்ளே வந்தவளை, "என்ன நேகா? உன் முகம் பிரகாசமா இருக்கு. என்ன விஷயம்?" என்று கேட்டாள் ரிசப்ஷனிஸ்ட்.


"எஸ் வினு செல்லோ! நேகா இன்னைக்கி ஹேப்பியோ ஹேப்பி!! ஏன்னா என்னோட ரொம்ப நாள் ஆசை ஒன்னு, இன்னைக்கு நிறைவேறிடுச்சு. அதான்…" என்று விட்டு அவளைப் பார்த்து கண் சிமிட்டியவள், தனது தளத்துக்கு வந்து தனக்கான இருக்கையில் அமர்ந்து, கணினியை உயிர்ப்பித்தபடி பக்கத்து இருக்கையைப் பார்க்க, அதுவோ காலியாக இருந்தது.


"அந்தத் தனு குரங்கு இன்னும் வரலையா? ம்ம்ம்... மகராசி!! சொந்த ஆபிசு! இஷ்டம் போல வருவா, இஷ்டம் போலப் போவா. நான் அப்படியா?" என்று புலம்பியபடி மேஜை ட்ராயரைத் திறந்து அவளுக்குப் பிடித்த சாக்லேட் ஒன்றை எடுத்து உண்ண போகும் நேரம்..


"நேகா மேடம், உங்களை எம்.டி வரச் சொன்னார்" என்றவாறு வந்தான் ஆபிஸ் பாய்.


"கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டானே? டேய் குமாரு! இதுக்காவே ஒருநாள் என்கிட்ட நல்லா அனுபவிப்ப பாரு!" என அவள் வெளிப்படையாக முணுமுணுத்தாள்.


"என்னையா மேடம் திட்டுறீங்க?" என்று பாவம் போல் கேட்டான் ஆபிஸ் பாய்.


"ச்ச ச்ச! உன்னைத் திட்டுவேனா? நீ இந்த ஆபிசோட ஹீரோவாச்சே? நான் நமக்குப் படியளக்கிற முதலாளியைப் பாராட்டுறேன்" என்று கூறி விட்டு இரண்டாம் தளத்திற்குச் சென்றாள்.


"ஆனாலும் இந்த நேகா மேடத்துக்கு ரொம்பத் தான் தைரியம்!!" என்றபடி அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றான் ஆபிஸ் பாய்.


இங்கு அஜித்தின் அறையின் முன் வந்து நின்ற நேகா, "மே ஐ கமின் சார்?" என்று பவ்யமாக அனுமதி கேட்டாள்.


"எஸ் கமின்…" என்ற கம்பீரக் குரலில், எப்பொழுதும் போல், அவனுக்கு அழகு காட்டி விட்டு அமைதியாக உள்ளே சென்றவள், "கூப்பிட்டிங்களா சார்?" என்று அப்பாவியாகக் கேட்டாள்.


அவளை மேலும் கீழும் பார்த்தவன், "உக்காருங்க!" என்று விட்டுத் தன் கண்களால் இருக்கையைச் சுட்டிக் காட்டினான்.


மெதுவாக இருக்கையில் அமர்ந்தவள், "எதுக்கு சார் வரச் சொன்னிங்க?" என்று அறியா பிள்ளை போல் மீண்டும் கேட்கவும்,


"மிஸ் நேகா! உங்களுக்கு ட்ராயிங் வரைய தெரியுமா?" என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டான் அஜித்.


'எதுக்குக் கேக்குறான்? ஒருவேளை ஸ்கூல் ஏதும் ஆரம்பிக்கப் போறானா? அங்கே ட்ராயிங் டீச்சரா வேலை பார்க்கக் கூப்பிடுவானோ?? நல்லதா போச்சு! இவன்கிட்ட தினம் தினம் பாட்டு வாங்குறதுக்கு அந்த வேலை எவ்வளவோ மேல்!!" என்று உள்ளுக்குள் குதூகலம் கொண்டவள்,


"ம்ம்ம்... தெரியும் சார், சூப்பரா வரைவேன் சார். ட்ராயிங்ல நான் தான் ஸ்கூல் பர்ஸ்ட் சார். உங்களுக்கு என்ன மாதிரியான டராயிங் வேணும்னு சொல்லுங்க சார். இப்படிங்கிறதுகுள்ள வரைஞ்சி காட்டுறேன் சார்" என அவள் உற்சாகத்துடன் "சார்! சார்!" என்று அடுக்கிக் கொண்டே போக,


"வெல்…!!" என்று தனது வலது கை ஆள்காட்டி விரலால் தன் நெற்றியை நீவிய அஜித்,


"அப்போ, இது என்ன மாதிரியான டிராயிங்ன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க" என்றவன், தன் லேப்டாப்பை அவள் முன் திருப்பி வைத்து விட்டு, தன் நாடியில் கை வைத்து, சிறிது நேரத்தில் அவளது முகத்தில் வர இருக்கும் நவரசத்தை ரசித்துப் பார்க்கக் காத்திருந்தான்.


ஏதோ வரைபடத்தைத் தான் தனக்குக் காட்டுகிறான் என்ற எண்ணத்தில், "இதோ! பார்த்துச் சொல்றேன் சார்" என்றவள், மடிக்கணினியின் திரையில் ஒளிர்ந்த புகைப்படத்தைப் பார்த்தாள். பார்த்தவளது கண்கள் அதிர்ச்சியில் விரிய, 'ஆத்தி..!!' என அதிர்ந்து வேகமாக எழுந்து நின்று விட்டாள்.


"என்னாச்சு நேகா? எதுக்கு எழுந்துட்டிங்க?" என்று சிரிப்பை உள்ளடக்கிய குரலில் அவன் கேட்கவும்,


"ஹான்! ஓ..ஒன்னும் இல்ல சார்.. இது என்னனு சரியா தெரியல. அதான் எழுந்து நின்னு பார்க்கலாம்ன்னு…" என உளறிக் கொட்டிய நேகாவிற்கோ, அந்த ஏசி அறையிலும் வியர்த்தது.


அவனோ, "சரி, ட்ராயிங் தான் என்னனு தெரியலன்னு சொல்லிட்டிங்க. அதுல ஏதோ தமிழ்ல கிறுக்கி இருக்கே, அதையாவது என்னனு கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன். ஏன்னா நான் படிச்சது ஊட்டி கான்வென்ட்ல. சோ ஐ கான்ட் ரீட் தமிழ்" என்று விட்டு அவளது முகத்தை மட்டுமே பார்த்திருந்தான் அஜித்.


அதில் ஒரு நொடி திருதிருவென முழித்தவள், 'ஏன்டா டேய்! இந்த இத்துப் போன ஆபிசுல நான் மட்டும் தான் இருக்கேனா? உன்னைப் பத்தி நான் எழுதினத என்னையே படிக்கச் சொல்றியே. எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியலடா வெண்ணை!!" என்று மனதில் கவுண்டர் கொடுத்தாள் நேகா.


ஆம்! அதில் இருந்தது, சற்று முன் அஜித்தின் வாகனத்தில் அவள் வரைந்து வைத்த ஓவியமும், கிறுக்கி வைத்த வாக்கியமும் தான்.


"என்ன நேகா? சைலென்டா இருக்கீங்க. உங்களுக்குத் தமிழ் தெரியும் தானே?" என்று அவன் கேட்க,


"ஹான்! தெரியும் சார், தெரியும்! நல்லாவே தெரியும்!" என்றவளின் மனமோ, 'அடியேய் நேகா! இந்தக் காரியத்தைப் பண்ணினது நீதான்னு இவனுக்குத் தெரியல போல. அதான் அமைதியா இருக்கான். அதனால எப்படியாவது சமாளிச்சு தப்பிச்சு ஓடிரு!!' என்று தனக்குத்தானே பேசியவள்,


"ஹி ஹி! சார், அதுல உங்களைப் புகழ்ந்து தான் எழுதி இருக்கு. அப்படி என்ன எழுதி இருக்குன்னா, 'உங்க பேர் மட்டும் இல்ல, நீங்க கூடப் பார்க்க தல அஜித்குமார் மாதிரி ஹேன்ட்சமா அழகா இருக்கீங்க'ன்னு…" என்று இழுத்துக் கூறி விட்டு, எச்சில் விழுங்கியபடி அவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.


அவனோ, "அப்படியா எழுதி இருக்கு?" என்று தன் தாடையைத் தடவ,


"ஆமா சார், ஆனாலும் பாருங்க! எவ்வளவு தைரியம் இருந்தா உங்க கார்ல இப்படிக் கிறுக்கி வச்சி இருக்காங்க? எப்படி இருந்தாலும் அது தப்பு தானே சார்? அதனால அது யாருன்னு கண்டு பிடிச்சு, அவங்களைச் சத்தம் போட்டே ஆகணும். நாம சிசிடீவி புட்டேஜ் செக் பண்ணலாம் சார்" என்று அங்கே சிசிடீவி கேமரா இல்லை என்பதால் தைரியமாக வாய் விட்டாள் நேகா.


"அப்போ சிசிடீவி புட்டேஜ் பார்த்து, இதைச் செஞ்சவங்களுக்குத் தண்டனையைக் கொடுத்துட வேண்டியது தான். அப்படித்தானே நேகா…?" என்று கேட்டான்.


"அ...அப்படியே தான் சா...சார்… ஹான் இல்ல இல்ல... அயோ சார்! எதுக்கு சார் தண்டனை அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க? சும்மா வார்ன் பண்ணி மட்டும் விட்டுடலாமே?" என்று சற்றே பதற்றமான குரலில் அவள் கூறவும்,


"தென் ஓகே…" என்ற அஜித், தன் லேப்டாப்பில் வேறு பைல் ஒன்றை ஓப்பன் செய்து, அதை மீண்டும் அவள் புறம் திருப்பி வைத்தான்.


'மறுபடியும் என்னடா மங்கூஸ் மண்டையா??' என்று அதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காணொளியைப் பார்த்து அவளுக்கு மயக்கமே வந்து விட, தொப்பென்று இருக்கையில் அமர்ந்து விட்டாள்.


அவளது மயக்கத்திற்குக் காரணம்... பார்க்கிங் ஏரியாவில் நேகா அவனது காரில் கிறுக்கி வைத்து விட்டுச் சென்ற அடுத்த நொடி, கார் கண்ணாடி மெதுவாகக் கீழே இறங்க, உள்ளே அமர்ந்திருந்த அஜித்தோ காரில் இருந்து இறங்கி நின்றான். அது தான் வீடியோவாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.


ஆம்! நேகா வருவதற்குச் சிறிது நேரம் முன்பு தான் அலுவலகத்திற்கு வந்தான் அஜித். காரை பார்க் செய்து விட்டுக் காரில் இருந்து இறங்கப் போகும் நேரம், நேகா வருவதைக் கவனித்தவன், தன்னவளை அவள் அறியாமல் ரசிக்க ஆசை கொண்டு காரின் உள்ளேயே அமர்ந்து விட்டான். ஆனால் நேகாவோ, அலுவலகத்தின் உள்ளே செல்லாமல் அவனது காரின் அருகே வரவும், அவனுக்கு வியப்பு மேலிட்டது.


சரி, என்னதான் செய்கிறாள் என்று பார்க்க அவன் காத்திருக்க, அவளோ மடமடவென ஏதோ வரைந்து விட்டுச் சென்று விட்டாள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அங்கே வேறு யாரும் இருக்கிறார்களா? கேமரா எங்கு இருக்கிறது? என்று சுற்றும் முற்றும் பார்த்தாளே தவிர, அவள் நின்ற இடத்திற்கு மேல் இருந்த கேமராவையும் வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த அஜித்தையும் அவள் அறியவில்லை.


'ஹூம் ஹூம்! யாரும் இல்லன்னுல நினைச்சு அப்படிப் பண்ணி வச்சேன். ஆனா காருக்கு உள்ளேயே எனக்கு ஆப்பு உட்கார்ந்து இருந்து இருக்குன்னு தெரியாம போச்சே!!' என்று அங்கும் இங்கும் தன் விழிகளைச் சுழற்றி இறுதியாகத் தன் முதலாளியைப் பாவம் போல் பார்த்தாள்.


இதழோரம் துடித்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்ட அஜித், "இப்ப சொல்லுங்க, இதுல என்ன எழுதி இருக்கு?" என அவன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேட்டான்.


அவளோ தலையைக் குனிந்து கொண்டு, "ஒரு திருஷ்டி பொம்மையும், அதுக்குக் கீழே கீழ கு..குமாரு... நீ வெறும் குமாரா இல்ல கொக்கி கொக்கி கொக்கி.." அடுத்த வார்த்தை வெளிவராமல் அவளது தொண்டைக்குழியில் சிக்கி சின்னாபின்னம் ஆனது.


அவளையே சிரிப்புடன் பார்த்திருந்த அஜித், "நேகா! ஒண்ணுக்கும் உதவாத இத்துப் போன இந்தப் பில்டிங்கோட முதலாளியின் ஓட்ட வண்டியை நிறுத்தணும்ன்னா, அந்த இடம் ரொம்பவே பாதுகாப்பா இருக்கும்ன்னு ஏன் உங்களுக்குத் தோணல?" என்று நிறுத்தி நிதானமாக அவன் கேட்டு வைக்க,


'அய்யோ! போச்சு போச்சு! நான் பேசினது கூட அவனுக்குக் கேட்டுருக்கே? இப்படி வசமா மாட்டுவேன்னு நான் என்ன கனவா கண்டேன்? கிளம்பும் போதே மோஹிமா ஓவிமா வீட்டுக்கு வரியான்னு கூப்பிட்டாங்க. லீவை போட்டுட்டு அப்படியே ஓடிப் போயிருக்கணும். ம்ம்ம்... விதி யாரை விட்டது? இவன்கிட்ட தினம் தினம் பாட்டு வாங்கணும்னு என் தலையில் எழுதி இருக்கோ என்னவோ??" நொந்து போனவள், மேலும் தலையைக் குனிந்து கொண்டாள்.


அவள் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து அவனுக்கு மேலும் சிரிப்பு வர, "பேபி…" என்று மிக மிக மென்மையான ஆழ்ந்த குரலில் அழைத்தான் அஜித்.


அவனது அந்த அழைப்பில் "என்னது பேபியா??" என்று சடாரென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நேகா.


ஆனால் அவனோ, தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, "நேகா! என் மேல் என்ன கோபம் இருந்தாலும் என்கிட்ட நேரடியாவே காட்டலாம். இப்படிக் கார் கூட விளையாடுறதை இதோட நிறுத்திக்கோங்க. இப்ப நீங்க போகலாம்" என்று விட்டு அவன் மடிக்கணினியைத் தன் புறம் திருப்பி அதில் பார்வையைப் பதிக்க,


"பேபின்னு யாரைக் கூப்பிட்டான்? இங்க இவனும் நானும் தானே இருக்கோம். அப்போ என்னைத்தான் கூப்பிட்டானா? எதுக்கு அப்படிக் கூப்பிட்டான்? ஒருவேளை நேகானு தான் சொல்லி இருப்பானோ? என் காதுல பேபின்னு விழுந்துச்சோ? நான் தான் அதைச் சரியா கவனிக்கலயோ?" என்று குழம்பிப் போனவள் அப்படியே அசையாமல் நிற்க,


"என்னாச்சு? இன்னும் நீங்க கிளம்பலயா?" என்ற அஜித்தின் அதட்டலில், "சா...சாரி இனி மேல் அப்படிப் பண்ண மாட்டேன் சார்…" என்று அவசர மன்னிப்பை வேண்டி விட்டு, விட்டால் போதும் என்று வேகமாக வாசலை நோக்கி நடந்தவள், கேபின் கதவை திறக்கப் போகவும், அவளது உள்ளுணர்வு ஏதோ உந்த, சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள்.


அதே நேரம் அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்தது. எவ்வளவு நேரம் கடந்ததோ?? பட்டென அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி வைத்தான் அஜித்குமார்.


அவனது செயலில் அவளுக்குக் குப்பென்று வியர்க்க, 'ஒருவேளை இதுவும் பிரம்மையோ?' என்று எண்ணியவள், தன் கண்களைக் கசக்கி விட்டு மீண்டும் அவனைப் பார்க்க, அவனோ கர்ம சிரத்தையுடன் கணினியில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தான்.


"ச்ச! என்னாச்சு எனக்கு? ம்பச்…" என்றபடி வேகமாக வெளியேறிய நேகா, உம்மென்று வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள்.


"என்னடி? வந்ததும் வராததுமா உன் ஆளுகிட்ட திட்டு வாங்கிட்டே போல" என்று கேட்டு நேகாவின் கோபத்தைக் கிளறி விட்டாள் தனுஷா.


"அடியேய்! என்னடி உளர்ற? என் ஆளா??" என்று நேகா முறைக்க,


"ஹி ஹி! டங் ஸ்லிப் ஆகிருச்சுடி. உன் முதலாளிகிட்டன்னு சொல்ல வந்தேன்" என்று அவள் சமாளிக்கவும்,


"அஃது!! இன்னொரு தடவை விளையாட்டுக்கு கூடச் சொல்லாதே! எனக்குக் கெட்ட கோபம் வரும், சொல்லிட்டேன்" என்று நேகா பல்லைக் கடிக்கவும்,


"ஏன்டி, தெரியாம சொன்னது ஒரு குத்தமா? சரி, அதை விடு! இன்னைக்கு என்ன கோல்மால் பண்ணி வச்சே? அத சொல்லு…" என்று கேட்க,


"ம்ம்ம்…" என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் கூறிய நேகா, "ஏதோ விளையாட்டுக்கு அப்படிப் பண்ணேன்டி. அதுக்கு என்னாமா திட்டிட்டார் தெரியுமா..?" நொந்து போன குரலில் கூறவும்,


"ஹா ஹா! ஏன்டி உனக்கு இந்த வேண்டாத வேலை? எங்கேயாவது ஆடு தானா போய்க் கறிக்கடைக்காரன்கிட்ட தலையை நீட்டுமா?" என்று வாய் விட்டுச் சிரித்த தனுஷா, பின்பு பேச்சை மாற்றும் விதமாக,


"ஆமா மேகா, கல்யாணத்துக்கு உனக்கு என்ன கலர் சேலை எடுக்கப் போறே? என்ன ஜ்வெல் போட போறே?" என்று கேட்டாள்.


"தெரியலடி, அநேகமா மேகா கல்யாணத்தப்போவே என்னோட நிச்சயம் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஏன்னா இன்னைக்கு அதைப் பத்தி பேசி முடிவெடுக்க, அப்பாவும் அம்மாவும் ஓவிமா வீட்டுக்குப் போயிருக்காங்க. அப்படி முடிவாகிருச்சுன்னா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தானே எல்லாம் எடுத்துட்டு வரணும். சோ ஓவிமா தான் எனக்குச் சேலை செலக்ட் பண்ணுவாங்க" என்று புன்னகை முகமாகக் கூறவும்,


"எ...என்னடி? திடீர்ன்னு இப்படிக் குண்டை தூக்கிப் போடுறே? மேகா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு?" என்று அதிர்ந்து கேட்டாள் தனுஷா.


"ஆமா!! எனக்குத்தானே நிச்சயம், அதுக்கு நீ எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?" என்று புரியாமல் நேகா கேட்டாள்.


"இல்லையே.. நான் சாதாரணமா தான் கேட்டேன்" என்ற தனுஷா, "சரி, இந்த மெயில்க்கு இன்னைக்குப் பதில் அனுப்பணுமே, அனுப்பிட்டியா?" என்று பேச்சை மாற்றி வேலை விஷயம் பேச ஆரம்பித்த அவளின் மனமோ, இந்த விஷயத்தைத் தன் அண்ணனிடம் கூற வேண்டும் என்று எண்ணியது.


இங்கு அஜித்தோ, நேகா வெளியேறவும் கணினி திரையில் பார்வையைப் பதித்தவன், அதில் ஓடிக் கொண்டிருந்த காணொளியைப் பார்த்துத் தன்னவள் செய்த சேட்டையை ரசித்தபடி, "மை கியூட் பார்பி டால்! உன்னோட இந்தச் சுட்டித்தனமான ஆட்டிட்யூட் தான்டி நான் ரொம்ப லைக் பண்றேன். ஐ லவ் யு மை பேபி டால்!!" என்று ரசித்துக் கூறிக் கொண்டான்.


அதே நேரம் தன் மகள் நேகாவிற்கும், ஓவியாவின் மகன் ரிஷிவர்மனுக்கும் திருமணம் பேசி முடிக்க ரவிவர்மன் வீட்டிற்கு வந்திறங்கினார்கள், கார்த்திக் - மோகனா தம்பதியர்.


***

1 comment:

  1. Mohana Rishi kunponnu kuduka porimgale Avan kitta oru varthai ketimgala avane dangerous fellow ah irukane unga ponnoda vazhkai ah ninaichi paru ma

    ReplyDelete