ஸ்வரம் 6

 


ஸ்வரம் 6


வாசலில் கார் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த ரம்யா, "அத்தை…" என்றபடி ஓடி வந்து மோகனாவை இடுப்போடு கட்டிக் கொண்டாள்.


"ரம்யா குட்டி! எப்படி இருக்கே?" என்று மோகனா தன் மருமகளிடம் நலம் விசாரிக்க,


"சூப்பரா இருக்கேன் அத்தை!!" என்றவள், "மாமா…" என்றபடி அடுத்துக் கார்த்திக்கிடம் தாவினாள்.


தங்கை மகளைத் தோளோடு அணைத்து, அவளது தலையைத் தடவி கொடுத்த கார்த்திக், "காலேஜுக்கு கிளம்பலயா ரம்யா?" என்று கேட்டான்.


"நான் அப்பவே ரெடி மாமா. ஆனா நம்ம வீட்டு ரொமான்ஸ் கப்பிள் இருக்காங்கள்ல, அவங்க அவங்களோட ரொமான்ஸை முடிச்சுட்டு இன்னும் கீழே வரல. அவங்க வரவும் சாப்பிட்டுக் கிளம்பணும்" என்று அவள் கண்ணடித்துக் கூறவும்,


ரம்யாவின் தலையில் வலிக்காமல் கொட்டிய மோகனா, "வாலு!! மாமாகிட்ட பேசுற பேச்சைப் பாரு!" என்று அவளை முறைத்தாள்.


"ஹலோ அத்தையாரே! என்ன இப்பவே மருமகளைக் கொடுமை படுத்த ட்ரெயினிங்கா? ம்ம்ம்? எங்க மாமா.. நான் அப்படித்தான் பேசுவேன், உங்களுக்கு என்ன?" என்று இடுப்பில் கை வைத்துத் தன் கண்களை உருட்டி ரம்யா மோகனாவிடம் எகிறவும்,


"பாருங்க இவளை, இப்பவே என்ன வாய் பேசுறா? நம்ம வீட்டுக்கு வந்துட்டா, என்னை என்ன பாடு படுத்த போறாளோ?" என்று மோகனா பொய்யாகக் கவலைப்படவும்,


"அஃது!! அந்தப் பயம் இருக்கணும் அத்தை!!" என்றவள், "அப்படித்தானே மாமா?" என்று தன் தாய் மாமனை ரம்யா துணைக்கு அழைத்தாள்.


கார்த்திக்கோ, "என் முன்னாடியே என் பொண்டாட்டியை மிரட்டுறியா? உன்னை…" என்று அவளது காதை பிடித்துத் திருகினான்.


"ஆ! ஆ! என் காது! அயோயோ! மாமா உங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சும் உங்ககிட்ட போய்ச் சப்போர்ட்க்கு வந்தேன் பாருங்க! என்னைச் சொல்லணும்…" என்று அவளும் பொய்யாக அலறிக் கொண்டிருக்கும் போது,


"ரம்யா! யார் வந்துருக்காங்க?" என்றபடி அங்கு வந்தாள் ஓவியா.


"எல்லாம் உங்க வருங்காலச் சம்பந்தி தான்மா" என்றாள் ரம்யா.


"யாரு!! அண்ணனா?" என்றவள், "அண்ணா" என்று அழைத்தவாறு தனது கையை நீட்டி காற்றில் துழாவ, "ஓவிமா…" என்றபடி தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டான் கார்த்திக்.


"ஹலோ மேடம்! என்ன உங்க அண்ணா மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரிவாரோ? அப்போ நான் என்ன தக்காளி தொக்கா?" என்று பொய்யாகத் தோழியிடம் மோகனா கோபம் கொண்டாள்.


"வாடி வாயாடி! உன்னைத் தனியா வேற வரவேற்கணுமா என்ன?" என்று தோழியை அணைத்துக் கொள்ள,


"ஓவிமா! ரவி எங்கே?" என்று கேட்டான் கார்த்திக்.


"அவங்க ஆபிஸ் போகக் கிளம்பிட்டு இருக்காங்க, இப்ப வந்துருவாங்க. நீங்க வாங்கண்ணா, உக்காருங்க" என்ற ஓவியா,


"ரம்யா! மாமாக்கும், அத்தைக்கும் காபி எடுத்துட்டு வா!" என்று மகளைப் பணித்தாள்.


"அதெல்லாம் வேண்டாம் ஓவிமா. உன் பிரென்ட் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னா. அதான் உடனே கிளம்பி வந்தோம்" என்று கார்த்திக் கூறவும்,


"என்ன விஷயம் மோனா?" ஆர்வத்துடன் கேட்டாள் ஓவியா.


"சந்தோஷமான விஷயம் தான் ஓவி. ரவி வரட்டும் சொல்றேன்" என்ற மோகனா அங்கு நின்றிருந்த ரம்யாவைப் பார்த்தவள், "ரம்யா! உனக்குக் காலேஜுக்கு நேரம் ஆச்சுலடா, நீ சாப்பிட்டுக் கிளம்பு!" என்று கூற,


"சரி அத்தை…" என்ற ரம்யா டைனிங் அறையை நோக்கிச் சென்றாள்.


"ஸ்னேகா இன்னும் வரலையே மோனா? அவ வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து தானே காலேஜுக்குப் போவாங்க" என்று ஓவியா சொல்ல,


"இல்லடி, இன்னைக்கு அவளுக்குச் செழியன் சார்கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் இருக்கு. விக்கி தான் அவளைக் கூட்டிட்டுப் போயிருக்கான். அவரைப் பார்த்துட்டு அப்படியே காலேஜுக்குப் போயிருவேன்னு சொன்னா" என்று மோகனா கூறினாள்.


"ஒஹ்…" என்ற ஓவியாவுக்கோ, இரண்டு நாட்களுக்கு முன் ரிஷியின் பெயரைச் சொல்லி ரம்யா அவளிடம் விளையாடியதும், அதற்கு அவள் பயந்து நடுங்கியதும் நினைவுக்கு வர, "இன்னும் எவ்வளவு நாள் ட்ரீட்மெண்ட் எடுக்கணும்?" என்று மோகனாவிடம் ஓவியா கேட்க, அதே கேள்வியை,


டாக்டர் செழியனிடம், "அங்கிள்! ஸ்னேகா இன்னும் எவ்வளவு நாள் இங்க வரணும்?" என்று கேட்டுக் கொண்டிருந்தான் விக்ராந்த்.


"சொல்றேன் விக்ரம்" என்ற மனோதத்துவ மருத்துவர் செழியன் ஸ்னேகாவிடம் சில கேள்விகள் கேட்டார். அதற்கு அவள் அளித்த பதில்களை உன்னிப்பாகக் கவனித்தவர், பின்பு செவிலிப் பெண் ஒருவரை அழைத்து,


"இவங்களைக் கூட்டிட்டுப் போங்க. இந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கச் சொல்லுங்க" என்று செவிலியிடம் பேப்பரை ஒன்றை நீட்டினார்.


அதை வாங்கிக் கொண்டு ஸ்னேகாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள் செவிலிப் பெண்.


அவர்கள் செல்லவும், "சொல்லுங்க அங்கிள்…" என்று மீண்டும் கேட்டான் விக்ராந்த்.


"இத்தனை வருஷத்தில் கடந்த ரெண்டு வருசமா ஸ்னேகா எவ்வளவோ பரவாயில்ல விக்ரம். ட்ரீட்மெண்ட்க்கு தானாவே ஒத்துழைப்பு கொடுக்குறா. இதுவே நல்ல முன்னேற்றம் தான். அநேகமா இனிமேல் தேவைப்பட்டா மட்டும் இங்கே வந்தா போதும்னு நினைக்கிறேன்" என்று அவனிடம் நம்பிக்கை அளிக்கும் விதமாகக் கூறியவர்,


"அட் த சேம் டைம், ஸ்னேகா நார்மலா இருக்கிறதால நீங்க கேர்லெஸ்ஸாவும் இருக்கக் கூடாது விக்ரம்! அவ கூட எப்பவும் யாராவது ஒருத்தர் இருக்கணும். எதுக்குச் சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்" என்று எச்சரிக்கை செய்யவும் அவர் தவறவில்லை.


"புரியுது அங்கிள்.. அதனால தான் அவளைத் தனி ரூம்ல கூட நாங்க தங்க வைக்கிறது இல்ல. எங்க பாட்டி கூடத்தான் படுக்க வைக்கிறோம்" என்ற விக்ராந்த்,


"அங்கிள்! எப்பவும் நான் உங்ககிட்ட கேட்கிற அதே கேள்வி தான்! இத்தனை வருஷ ட்ரீட்மெண்ட்ல, ஒரு நாள் கூடவா, ஸ்னேகா எதுக்காக இப்படி இருக்கான்னு உங்களால கண்டுபிடிக்க முடியல?" என்று கேள்வி எழுப்பினான்.


"விக்ரம்! நான் ஒரு சாதாரண டாக்டர், கடவுள் இல்லை. அப்படிக் கடவுளாகவே இருந்தா கூடப் பெண்களின் ஆழ் மனசுல ஒளிஞ்சு இருக்கிற சில விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியாது. அப்படித்தான் ஸ்னேகாவோட ஆழ் மனசை தட்டி எழுப்ப எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன். அவ தன் மனசை இறுக்கமா பூட்டி வச்சிக்கிறா. அதுக்கு மேல அவளை நாம தொந்தரவு பண்றது தப்பு. அது அவ மனநிலையை இன்னும் பாதிக்க அதிக வாய்ப்பிருக்கு" என்று அவனுக்குப் புரியும்படி அவர் கூறினார்.


அவனோ, "அங்கிள்! ஒருவேளை..." என்று ரிஷியை மனதில் கொண்டு ஏதோ கேட்க வரவும், மருத்துவப் பரிசோதனை முடித்துக் கொண்டு ஸ்னேகா வரவும் சரியாக இருக்க, சட்டென்று தன் பேச்சை நிறுத்திய விக்ராந்த் செழியனைப் பார்த்தான்.


அவரோ அவனைப் பார்த்துக் கண்களை மூடித் திறந்து, "ஸ்னேகா! டெஸ்ட் எல்லாம் எடுத்தாச்சாமா? டேப்லெட் மட்டும் மறக்காம ரெகுலரா டைமுக்கு எடுத்துக்கணும். ஓகேவா பேபி??" என்று புன்னகையுடன் கூற,


"சரி அங்கிள்…" என்று அவரைப் பார்த்து புன்னகைத்தவள், அண்ணனைப் பார்த்ததும், இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் விக்ராந்த். இருவரும் மருத்துவரிடம் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.


அவர்கள் கிளம்பவும் தனது கைப்பேசியை எடுத்துச் சில எண்களை அழுத்தி விட்டுச் செழியன் காத்திருக்க, அந்தப் பக்கம் எடுத்ததும்,


"ஸ்னேகா இஸ் ஆல்ரைட். இனி எந்தப் பிரச்சினையும் இல்ல. ஆனாலும் கொஞ்ச நாள் கவனமா இருக்கணும்" என்று கூற,


"......" 


அந்தப் பக்கம் என்ன கூறப்பட்டதோ??


"எஸ்! இன்னைக்கும் விக்ரம் கேட்டார், நான் சமாளிச்சுட்டேன்" என்றதும்,


"...."


"ஓகே…" என்றுவிட்டு வைத்தார் மருத்துவர் செழியன்.


"அண்ணா, நான் டெஸ்ட் எடுக்கப் போனதுக்கு அப்புறம் டாக்டர் அங்கிள் உங்ககிட்ட என்ன சொன்னார்?" என்று கேட்டாள் ஸ்னேகா.


தங்கையைத் தோளோடு அணைத்துக் கொண்ட விக்ராந்த், "என் செல்ல தங்கை பூரணமா குணம் ஆகிட்டாங்களாம். மாத்திரை மட்டும் கொஞ்ச நாள் எடுத்துக்கிட்டா போதுமாம். இனி அவரைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு வர வேணாமாம்னு சொன்னார்" என்று சொல்லி அவன் புன்னகைக்க,


"அப்போ நான் ஃபாரின் போலாம் தானேண்ணா?" என்று கேட்டு விட்டு ஒருவித எதிர்பார்ப்புடன் தன் அண்ணனின் முகம் பார்த்தாள் ஸ்னேகா.


தங்கையின் கேள்வியில் யோசனையானான் விக்ராந்த். ஏனெனில் அவளது நிலைமை என்னவென்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்தும் எதற்காக நாடு விட்டு நாடு செல்ல இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாள் என்று புரியவில்லை. சற்று முன் அவள் காரில் வைத்துக் கேட்கும் போது கூட, 'ஏதோ ஆசைப்பட்டுக் கேட்கிறாள், எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வாள்' என்று தான் நினைத்தான். ஆனால் அவளது முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவன் குழம்பிப் போனான்.


"என்னண்ணா யோசிக்கிறீங்க? எனக்காக மோஹிமாகிட்ட பேசுவீங்க தானே? அப்பாகிட்ட நானே பேசிடுவேன். ஆனா அப்பா ஓகே சொன்னா கூட மோஹிமா சம்மதிக்கவே மாட்டாங்க. அவங்களைச் சமாளிக்க உங்களால மட்டும் தான் முடியும்" என்று தாயின் மனம் அறிந்து அவள் கவலையுடன் கூறினாள்.


"ஸ்னேகா! இதோ! நீயே சொல்லிட்டியே, மோஹிமாவைச் சம்மதிக்க வைக்கிறது கஷ்டம்னு. சோ இப்போதைக்கு மேகா கல்யாணம் முடியட்டும். தென் உன்னோட படிப்பு முடியட்டும். அதுக்கு அப்புறம் இது பத்தி மோஹிமாகிட்ட பேசலாம். அதுவரை படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, ஓகேவா?" என்று அப்போதைக்கு அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவன், தங்கையை அழைத்துக் கொண்டு அவளது கல்லூரிக்குச் சென்றான்.


அன்று மாலையில் சிரித்த முகமாக வீட்டுக்கு வந்த மோகனா, டீவி பார்த்துக் கொண்டிருந்த ராதாவின் அருகில் அமர்ந்தவள், "என்ன அத்தை, வீடு அமைதியா இருக்கு. நேகா இன்னும் வரலயா? ஸ்னேகா எங்கே? ரூம்ல இருக்காளா?" என்று மகள்களைக் கேட்டாள்.


அவரோ, "ஓவியாகிட்டயும் மாப்பிள்ளைகிட்டயும் பேசிட்டிங்களா? ரெண்டு பேரும் என்ன சொன்னாங்க?" என்று கேட்டார்.


"பேசிட்டோம் அத்தை. மேகா கல்யாணத்தப்பவே நேகா - ரிஷி நிச்சயதார்த்தத்தை வச்சிக்க ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டாங்க. எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு" என்று மகிழ்ச்சியுடன் கூறியவள், எழுந்து சமையல் அறைக்குச் செல்ல,


"இந்த ஒரு விஷயத்தில மட்டும் ஏன் தான் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறான்னே தெரியல??" என்று வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருக்கும் போது, காரை பார்க் செய்து விட்டு வந்த கார்த்திக் அன்னையின் அருகே அமர்ந்தவன், "அம்மா! மோகனா எல்லாம் சொன்னாளா?" என்று கேட்டான்.


"சொன்னா! சொன்னா! சுரைக்காய்க்கு உப்பில்லைனு நல்லாவே சொன்னா. போடா! என் பேச்சுக்கு இங்க யாரு மதிப்பு கொடுக்குறா? நீயும் உன் பொண்டாட்டி சொல்றதைக் கேட்டு ஆடுறே. இதே, இது உங்க அப்பா இருந்திருந்தா என் பேச்சைத்தான் கேட்டு இருப்பார், தெரியுமா?" என்று அவர் மகனிடம் அங்கலாய்த்துக் கொண்டிருக்க,


"நல்லா இருக்கே உங்க நியாயம்? மாமா மட்டும் உங்க பேச்சைக் கேட்கணும், என் புருஷன் என் பேச்சைக் கேட்கக் கூடாதா?" என்றபடி கையில் இரண்டு காபி காப்புகளுடன் வந்த மோகனா, ஒன்றை கணவனிடம் கொடுத்து விட்டு இன்னொன்றை மாமியார் கையில் கொடுத்தாள்.


'இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை!!' என்று நொடித்துக் கொண்டாலும் அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவர்


"சரி, இனி மறுத்துப் பேசி ஒன்னும் ஆகப் போறது இல்ல. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டு, நல்ல காரியத்தை ஆரம்பிப்போம். நல்லதே நடக்கும்ன்னு நம்புவோம்" என்ற ராதா,


"டேய் கார்த்திக்! நாளைக்கே குலதெய்வ கோவிலுக்குப் போய்ட்டுப் பத்திரிக்கை வச்சிட்டு வந்திடலாம். அதுக்கு அப்புறம் நிறைய வேலை இருக்குல, ஒவ்வொன்னா ஆரம்பிக்கணும்" என்று தனது சம்மதத்தை அவர் தெரிவிக்கவும், மாமியாரைக் கட்டிக் கொண்டாள் மோகனா.


"தேங்க்ஸ் அத்தை! உங்க சம்மதம் இல்லாம இதைப் பண்றேனோன்னு உறுத்திட்டே இருந்தது" என்று கூறவும்,


'இப்பவும் எனக்கு விருப்பம் இல்ல தான். உனக்காகத்தான் அமைதியாகிட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவர்,


"எல்லாம் சரிமா, இந்த விஷயத்தை ரிஷிகிட்ட சொல்லியாச்சா? அவன்கிட்ட யார் பேசப் போறா? அவனோட சம்மதமும் வேணும்ல" என்று கேட்டார் ராதா.


"அதை ரவி பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார்மா. நாளைக்குக் கோவிலுக்குப் போறதுக்கு விக்ரம்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணச் சொல்றேன்" என்ற கார்த்திக் தங்களது அறைக்குச் சென்றான்.


மோகனாவோ, "ரிஷி நிச்சயம் சம்மதிப்பான் அத்தை. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க வேணா பாருங்க, என் பொண்ணுங்க புகுந்த வீட்ல சந்தோஷமா ஜாம் ஜாம்னு வாழ போறாங்க" என்றவள், "நான் ஸ்னேகாவைப் பார்த்துட்டு வரேன்" என்றுவிட்டு சின்ன மகளைக் காணச் சென்றாள்.


ராதாவோ, 'அவன் சம்மதிச்சா சரி!' என்று மனதில் நினைத்தாலும், அவருக்குத் தெரியும், எப்படியும் அவன் நூறு சதவீதம் மறுத்து விடுவான் என்று. இருந்தும் மருமகளின் மனதை வருத்தச் செய்ய விரும்பாமல் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.


அதே சமயம் 'ஒருவேளை நேகாவைத் திருமணம் செய்யத் தனது பேரன் சம்மதித்து, அவளது கைப் பிடிக்கும் நேரம் அவன் குணம் மாறினால், தன் மகளின் இத்தனை வருட ஏக்கத்திற்குத் தன் பேத்தியின் மூலம் விடிவுகாலம் வரும் தானே? மேலும் இது தான் விதி என்றிருந்தால் யாரால் என்ன செய்ய முடியும்?' என்று தன்னைத்தானே சமாதானமும் செய்து கொண்டார் ராதா.


ஓவியாவின் வீட்டில்…

"என்ன ஓவிமா ஒரு மாதிரி இருக்கே? உங்க அண்ணாவும், மோகனாவும் வந்துட்டுப் போனதுல இருந்து யோசனையாவே இருக்க? உனக்கு இந்தச் சம்பந்தத்துல விருப்பம் தானே?" என்று கேட்டான் ரவிவர்மன்.


"என்னங்க கேள்வி இது? இல்லன்னு நான் சொன்னேனா? நேகா துறுதுறுன்னு இருப்பா. அப்படியே மோகனாவைப் பார்க்கிற மாதிரியே இருக்கும். நம்ம வீட்டுக்கு அவ மருமகளா வந்தா, இந்த வீடே நிறைஞ்சிடும் தெரியுமா?" என்று உளமாரக் கூறியவளின் மனமோ, 'அப்படியாவது என் பையன் என்கிட்ட வந்துட மாட்டானான்னு ஒரு நப்பாசை தாங்க…' என்று எண்ணிக் கொண்டது.


"அப்புறம் என்ன ஓவிமா யோசனை?" என்று மீண்டும் கேட்டான் ரவிவர்மன்.


"என் யோசனை எல்லாம்... நாம இங்க சரின்னு சொல்லிட்டோமே, இதுக்கு ரிஷி என்ன சொல்லுவானோன்னு தான் இருக்கு. அவன் சரின்னு சொல்லிட்டா பிரச்சினை இல்லங்க. சப்போஸ் அவன் நேகாவை பிடிக்கலன்னு சொல்லிட்டா? இல்ல அவன் மனசுல வேற ஏதாவது எண்ணம் இருந்தா? அண்ணாகிட்ட என்ன சொல்றது?" என்று தன் மகனின் குணம் அறிந்து கலக்கத்துடன் கூறினாள் ஓவியா.


"ஓவிமா! நீ கலங்க தேவையே இல்லடா. போன மாசம் நம்ம குடும்ப ஜோசியர்கிட்ட ரிஷி ஜாதகத்தைக் காட்டினப்போ, அவர் அதைப் பார்த்துட்டு என்ன சொன்னார்? உனக்கு ஞாபகம் இருக்குல??" என்று கேட்டான் ரவிவர்மன்.


"நல்லாவே ஞாபகம் இருக்குங்க. அந்தத் தைரியத்துல தான் அண்ணாவும், மோனாவும் கேட்கும் போது மறுக்காம சரின்னு சொன்னேன்" என்று அவள் கூறவும்,


"பின்ன என்னமா? கவலையை விடு! அவனுக்குத் தாய்மாமா பொண்ணு தான் மனைவியா வரணும்னு விதி இருக்கும் போது, விதிப்படி தான் எல்லாம் நடக்கும். நான் இப்பவே ரிஷிகிட்ட பேசுறேன்" என்று எழுந்து வெளியே செல்லப் போன கணவனின் கைப் பிடித்துத் தடுத்த ஓவியா,


"என்னங்க…" என்று தயங்கி இழுத்தாள்.


மீண்டும் மனைவியின் அருகே அமர்ந்த ரவிவர்மன், "என்ன பேபி?" என்று கேட்க,


"இங்க இருந்தே பேசுங்க. போனை ஸ்பீக்கர்ல போடுங்க. அவனை நேர்ல தான் பாக்க முடியல, அவன் குரலையாவது ஆசை தீர கேட்டுக்கிறேன்" என்றவளின் குரலில் மகனின் மீதான ஏக்கம் அப்பட்டமாகத் தெரிய, மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டான் ரவிவர்மன்.


ரவிவர்மன் ஓவியாவைக் கைப்பிடித்ததில் இருந்து எதற்காகவும் அவளை ஏங்க விட்டது இல்லை. அவள் கேட்டது கேட்காதது என அவளது ஆசைகள் அனைத்தையும் உடனுக்குடன் இன்றளவும் பூர்த்திச் செய்து வருகிறான், தன் மகனின் விஷயத்தைத் தவிர!


அவன் நினைத்தால், இதோ! அடுத்த நொடியே தன் மகனை வற்புறுத்தி இங்கு வரவழைத்து மனைவியின் ஏக்கத்தை உடனே போக்க முடியும். ஆனால் அதன் பிறகு?? அதை அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. மனைவியின் புத்திர ஏக்கம் புரிந்தும், ஏதும் செய்ய முடியாமல் இருக்கும் தன்னை அறவே வெறுத்தான் ரவிவர்மன்.


"ரவி! ரிஷிக்கு போன் பண்ணுங்க" என்று மீண்டும் கூறிய ஓவியா தன் மகனின் குரலைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தாள்.


'இந்த நிலைமை வேற யாருக்கும் வரக் கூடாது ஓவிமா!!' என்று தனக்குள் சொல்லிக் கொண்ட ரவிவர்மன் மகனின் எண்ணிற்கு அழைத்தான்.


அலுவலகத்தில் இருந்து தனது அப்பார்ட்மெண்டை நோக்கி வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன். அப்பொழுது அவனது மொபைல் ஒலி எழுப்பியது. அழைப்பது யார் என்று பார்த்தவன், தந்தை என்றதும் போன் காலை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டு விட்டு, மொபைலை டேஷ்போர்ட் மீது வைத்தவன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்.


மகனின் அமைதி எதற்கென்று புரிந்து கொண்ட ஓவியாவின் கண்கள் குளமாகியது.


அதைக் கவனித்த ரவிவர்மன் ஆழ்ந்த மூச்செடுத்து, "எப்படி இருக்கே ரிஷி?" மகனின் நலன் விசாரித்தான்.


தந்தையின் குரல் கேட்டதும், "எனக்கென்ன டாட்?? தனிக்காட்டு ராஜா!! நல்லா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்" என்று நக்கலாகக் கூறினான் ரிஷிவர்மன்.


அது புரிந்தாலும், "சரி, நீ எப்போ வீட்டுக்கு வரே?" என்று பொறுமையாகவே கேட்டான் ரவிவர்மன்.


"எந்த வீடு டாட்?" இப்பொழுது அவனது குரல் இறுக்கத்துடன் ஒலிக்க, அந்தக் குரலே சொன்னது, அந்தக் கேள்வியை அவன் விரும்பவில்லை என்று.


அதை உணர்ந்த ஓவியாவின் கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. மனைவியின் தோளில் சற்று அழுத்தம் கொடுத்த ரவிவர்மன், மகனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதி காக்க,


"ம்பச்! சீக்கிரம் சொல்லுங்க, ஐ ஹவ் சம் இம்பார்ட்டெண்ட் வொர்க் டாட். வொய் டிட் யு கால் மீ?" என்று கேட்டான் மகன்.


"என்கிட்ட பேசுறதை விட உனக்கு வேலை அவ்வளவு முக்கியமா ரிஷி?" என்று தந்தை நிதானமாகக் கேட்க,


"நீங்க எனக்கு முக்கியம் என்பதால் தான் உங்க போன் காலை அட்டென்ட் பண்ணிருக்கேன் டாட்" என்று 'நீங்க' என்ற வார்த்தையில் மட்டும் அவன் சற்று அழுத்தம் கொடுத்துக் கூறவும்,


கண்களை மூடித் திறந்த ரவிவர்மன், "ஓகே, உன்னை எதுக்காக இங்க வரச் சொல்றேனு உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.


இடது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்து வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவன், வலது கை ஆள்காட்டி விரலால் தன் நெற்றியை நீவியபடி, "ஒஹ்! எஸ்! உங்க மச்சான், அதான் மிஸ்டர் கார்த்திக்கோட பொண்ணுக்குக் கல்யாணம்ல. சோ என்னை நீங்க இன்வைட் பண்றிங்க. ரைட்??" கேலியுடன் கேட்டான்.


"இல்ல, என் பையன் ரிஷிவர்மனுக்கும், அவனோட தாய்மாமன் பொண்ணுக்கும் அதே நாளில் நிச்சயம் வச்சிருக்கோம். அதுக்கும் தான் உன்னை வரச் சொல்றேன்" என்று ரவிவர்மன் நிறுத்தி நிதானமாகக் கூறவும்,


"வாட்??!!" என்றபடி வாகனத்தை நிறுத்திய ரிஷி மொபைலை கையில் எடுத்தான்.


"எஸ் மை சன்!! மேகா கல்யாணத்தப்பவே உன்னோட நிச்சயதார்த்தத்தையும் பிக்ஸ் பண்ணிருக்கோம்" என்று புன்னகையுடன் கூறினான்.


"யாரைக் கேட்டு முடிவு பண்ணினீங்க?" என்று கோபத்தில் பல்லைக் கடித்தபடி கேட்டான் ரிஷிவர்மன்.


"என் பையன் கல்யாணத்தைப் பிக்ஸ் பண்ண நான் யாரைக் கேட்கணும்? இது இப்ப முடிவு பண்ணின விஷயம் இல்லன்னு உனக்கு நல்லாவே தெரியும் ரிஷி. அதனால பிடிவாதம் பிடிக்காம ஒழுங்கா வந்து சேர்! இட்ஸ் மை ஆர்டர்!!" என்று மகனுக்குக் கட்டளை இட்ட ரவிவர்மன், அவனை மேலும் பேச விடாமல் மொபைலை அணைத்திருந்தான்.


தந்தையின் பேச்சில் அவனது கோபம் சற்றும் அடங்காமல் எல்லையைக் கடந்தது தான் மிச்சம். ஸ்டியரிங்கைப் பிடித்து அழுத்தித் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றவனின் மனக்கண் முன் ஓர் பிம்பம் தோன்ற,


"எனக்கும், என் மாமன் மகளுக்கும் நிச்சயதார்த்தமா?? டாமிட்!! எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்!!" என்று புலியின் சீற்றத்தோடு வன்மமாகக் கூறிக் கொண்டான் ரிஷிவர்மன்.


***

1 comment:

  1. Rishi ivlo terror ah irukiye enna nadanthathu Amma ah vera pudikala, un ninaipula Vara ponnu yar sneha ah, anda pullaya enna panniyo inda naattai vitte poga parkura,

    ReplyDelete