ஸ்வரம் 7

 


ஸ்வரம் 7



அந்த மிகப் பெரிய திருமண மண்டபம் மாலை நேரத்தில் நியான் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்க, அதன் முகப்பில், "சஞ்சீவ் வெட்ஸ் மேகா" என்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.


கார்த்திக் - மோகனா தம்பதியரின் மகளான மேகாவுக்கும், மோகனாவின் அண்ணனான பாலா - ஸ்வேதா தம்பதியரின் இளைய மகன் சஞ்சீவ்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இன்று வரவேற்பும் நாளை காலையில் திருமணமும் நடக்க இருப்பதால், இதோ, வரவேற்புக்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருக்கச் சுற்றமும், சொந்தமும் வந்த வண்ணம் இருந்தனர்.


"ஹலோ மாமா! எங்க வந்துட்டு இருக்கீங்க..?" என்று தன் தாய்மாமன் பாலாவிடம் போனில் கேட்டுக் கொண்டிருந்தான் விக்ராந்த்.


"......"


"ம்ம்ம்... சரி, நாங்க எல்லோரும் மண்டபத்துக்கு வந்தாச்சி. நீங்க கிட்ட வரவும் போன் பண்ணுங்க"


"......"


"ஓகே, நான் பார்த்துக்கிறேன்" என்று வைத்த விக்ராந்த் அடுத்து யாருக்கோ அழைக்கப் போகும் நேரம்..


"அத்தான்! நான் எப்படி இருக்கேன்..?" என்ற குரல் கேட்க, திரும்பிப் பார்த்தான் விக்ராந்த்.


அவன் எதிரே கற்கள் பதித்த தங்க நிற லெஹங்கா அணிந்து மிதமான அலங்காரத்தில் அழகான சிட்டுக்குருவி போல் நின்றிருந்தாள் ரம்யா.


அதே நேரம், "அண்ணா! நான் எப்படி இருக்கேன்..?" என்றவாறு ரம்யாவை போல் அதே நிறத்தில் உடை அணிந்து வந்து நின்றாள், அவனது செல்ல தங்கை ஸ்னேகா.


"ஓய்! நான்தான்டி பர்ஸ்ட் கேட்டேன். சோ அத்தான் மொதல்ல எனக்குத்தான் சொல்லுவாங்க" என்றாள் ரம்யா.


"முடியாது! அவங்க என்னோட அண்ணா, எனக்குத்தான் பர்ஸ்ட் சொல்லுவாங்க" என்று ஸ்னேகா ரம்யாவைப் பார்த்து முறைத்தாள்.


இருவரையும் பார்த்துச் சிரித்த விக்ராந்த், "ரெண்டு பேருமே கியூட்டா அழகா இருக்கீங்க போதுமா..?" என்று முற்றுப்புள்ளி வைத்தான்.


"அத்தான்! இதெல்லாம் செல்லாது. யாராவது ஒருத்தருக்குத்தான் கிரெடிட் கொடுக்கணும். அது நானா இல்ல ஸ்னேகாவா..? அதை மட்டும் சொல்லுங்க" என்று ரம்யா விடாமல் அடம்பிடித்தாள்.


அவளது பேச்சை ரசித்துச் சிரித்த விக்ராந்த் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு "ம்ம்ம்…" என்று சில நொடிகள் இருவரையும் பார்த்து யோசிப்பது போல் பாவனை செய்தவன், "எனக்கென்னமோ இன்னைக்கு ரம்யா தான் அழகா இருக்கான்னு தோணுது" என்று கூறி விட்டான்.


அவன் அப்படிச் சொன்னது தான் தாமதம்..!! "ஹேய்…" என்று கத்தி கூச்சலிட்டுக் குதித்த ரம்யா ஸ்னேகாவைப் பார்த்து அழகு காட்ட...


"ஹூம் ஹூம்... போங்கண்ணா, நான் உங்க பேச்சு க்கா…" என்று சிணுங்கியபடி திரும்பி நடக்கப் போக, தன் தங்கையின் கைப் பிடித்துத் தன் தோளோடு அணைத்துக் கொண்ட விக்ராந்த்,


"ஸ்னேகா குட்டி! நீ எப்பவுமே தேவதை தான்டா! இன்னைக்கு ஒரு நாள் போனா போகுது, அவ அழகா இருந்துட்டுப் போட்டும்ன்னு அப்படிச் சொன்னேன்" என்று கூறி தங்கையைப் பார்த்து அவன் கண்‌ சிமிட்டி வைக்க,


"அண்ணா…" என்று சிரித்த ஸ்னேகா, "ரம்யா! எங்க அண்ணா சொன்னதைக் கேட்டியா..? ஹா ஹா…" என்று கேலி செய்து சிரிக்க,


"கேட்டியாவா..? நல்லாவே கேட்டேன்..!! அதான் அவரை அடிக்க ஏதாவது கிடைக்குமான்னு பார்க்கிறேன்" என்று கோபத்தில் சுற்றும் முற்றும் பார்த்த ரம்யா, அடிக்க ஏதும் கிடைக்கவில்லை என்றதும், தன் கையையே ஆயுதமாக்கி அவனை அடிக்க வர, அவளது கையைப் பிடித்துக் கொண்டு வாய் விட்டுச் சிரித்தான் விக்ராந்த்.


அப்பொழுது பட்டுச்சேலை சரசரக்க அவர்களை நோக்கி வந்த மோகனா, "ரெண்டு பேரும் அவன்கிட்ட என்ன வம்பு பண்ணிட்டு இருக்கீங்க..? ரூம்க்கு போய் மேகா ரெடியாகிட்டாளானு பாருங்க, போங்க…" என்று அவர்கள் இருவரையும் அனுப்பி விட்டு,


"விக்கி! மாமாக்கு போன் பண்ணிட்டியா..? எங்க வந்துட்டு இருக்காங்களாம்..?" என்று கேட்டாள்.


"இப்ப தான் மோஹிமா போன் பண்ணினேன். இன்னும் அரைமணி நேரத்தில வந்துருவோம்னு சொன்னாங்க. அப்புறம் சஞ்சீவ் கூட அவன் பிரெண்ட்ஸ் நாலு பேர் வராங்களாம், அவங்களுக்கு ஹோட்டல்ல ரூம் ஏற்பாடு பண்ணச் சொன்னாங்க. அது மட்டும் பார்க்கணும்…" என்று அவன் கூறவும்,


"சரிப்பா, நீ பார்த்துக்கோ! உங்க அப்பா எங்கே..?" என்ற மோகனா சுற்றித் தன் பார்வையை ஓட்டி கணவனைத் தேட,


"அதோ! அங்கே வாசல் பக்கம் ரவி மாமாகிட்ட நின்னு பேசிட்டு இருக்காங்க பாருங்க" என்று விக்ராந்த் கூறவும், மோகனாவோ கணவனை நோக்கிச் சென்றாள்.


அன்னை நகர்ந்ததும் தனது மொபைலில் சில எண்களை அழுத்தி காதில் வைக்க, அழைப்பு செல்லவில்லை. "ச்ச! டவர் இல்ல…" என்றபடி பக்கவாட்டில் இருந்த வாசல் வழியாக வெளியே மணடபத்தின் தோட்டத்திற்குச் சென்றவன், மீண்டும் எண்களை அழுத்தி காதில் வைக்க, அதே நேரம் அவன் கையில் இருந்த மொபைலை அவனது பின்புறம் இருந்து அவன் அறியாமல் நொடியில் பறித்துக் கொண்டது ஒரு கரம்


யார் என்று வேகமாகத் திரும்பிப் பார்த்த விக்ராந்த், அது ரம்யா என்றதும், "ம்பச் ரம்யா! எதுக்கு என் ஃபோனை பிடுங்கினே..? குடு என்கிட்ட, முக்கியமான கால் ஒன்னு பண்ணனும்" என்று அதட்டியபடி அவள் கையில் இருந்த தனது மொபைலை வாங்குவதற்கு அவன் தன் கையை நீட்டினான்.


அவளோ சட்டென்று போனை தன் முதுகிற்குப் பின்னால் மறைத்துக் கொண்டு, அவனது கையில் சிக்கிடாதவாறு சற்றுத் தள்ளியும் நின்று கொண்டவள், "தர மாட்டேன் அத்தான்!" என்று அவனை முறைத்தாள்.


"ரம்யா! விளையாட இது நேரம் இல்ல, எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. குடு என் ஃபோனை…" என்று அவன் பொறுமையாகவே கேட்டுப் பார்த்தான்.


அவளோ, "ம்ம்ம்... மாட்டேன் அத்தான்.. நீங்க எப்படி அப்படிச் சொல்லலாம்..? அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க…" என்று அடமாக நின்றாள்.


அவளை நெற்றிச் சுருக்கிப் பார்த்த விக்ராந்த், "அப்படி என்ன சொன்னேன்..? எதுக்கு இப்படிப் பண்ணிட்டு இருக்கே..?" என்று புரியாமல் அவளிடமே அவன் கேட்க,


"நான் அழகா இல்ல ஸ்னேகா அழகானு உங்ககிட்ட கேட்டதுக்கு, நீங்க உங்க தங்கச்சிக்குச் சப்போர்ட் பண்ணி என் காலை வாரினிங்கள்ல... அதுக்குப் பதில் சொல்லுங்க, அப்போ தான் இதைத் தருவேன். அப்படி இல்லையா..? இந்தப் போன் உங்களுக்கு இல்ல" என்றுவிட்டு அவள் அவனை மேலும் முறைத்தாள்.


"ஏய் லூசு…" என்று தன் நெற்றியை நீவியவன், "விளையாடாம போனை குடுமா…" என்று அவளை நோக்கி ஒர் எட்டு எடுத்து வைத்தபடி அழுத்தமாகக் கேட்டான்.


அவளோ அப்பொழுதும், "நான் அழகா இருக்கேனா இல்லையா..? நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க. அதுக்கு அப்புறம் தரேன்" என்று சொல்லி அடம் பிடித்தவாறு பின்னால் நகர்ந்தாள்.


அவன் என்ன நினைத்தானோ..? சட்டென்று அவளை எட்டிப் பிடித்து அவள் வைத்திருந்த தன் மொபைலை பறிக்க முயன்றான்.


அவனின் இந்தச் செயலை எதிர்பாராத ரம்யா அதிர்ந்து நின்றாள். காரணம்... அவள் தனது கைகளைப் பின்னால் கோர்த்து மொபைலை பிடித்து இருந்ததால், விக்ராந்த்தோ அவளைப் பிடித்துத் தனது திண்ணென்ற தேக்குமர உடலோடு ஒட்டி நிற்க வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட அவளை அணைத்தபடி போனை வாங்க முயன்று கொண்டிருந்தான்.


இருவருக்கும் நடுவில் காற்றுக்குக் கூட இடம் இல்லை என்பது போல் இருவரும் மிகவும் நெருக்கமாக நின்றிருக்க, அவனது மூச்சு காற்று பெண்ணவளின் கழுத்து வளைவில் பட்டு அவளை மூச்சு வாங்க வைத்தது.


குழந்தையாய் தன்னிடம் விளையாட வந்தவளைக் குமரியாய் உணர வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அறியாமல் தனது மொபைலை பறித்துக் கொண்ட விக்ராந்த், அவளிடம் இருந்து சற்று விலகி நின்றவன், அவளது கன்னத்தில் தட்டி,


"நீயும் அழகி தான் ரம்யா…" என்று ஆழ்ந்த குரலில் கூறி சிரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட, ரம்யாவோ கன்னம் சிவக்க அசைவற்று அப்படியே நின்று விட்டாள். அவள் மனதிலும், உடலிலும் படபடப்பு இன்னுமே இருந்தது.


அவன் தனது மாமன் மகன் என்ற எண்ணத்தில் இது போல் எப்பொழுதுமே அவனிடம் அவள் வம்பிழுப்பாள் தான்! அவனுக்கோ அத்தை மகள் என்ற எண்ணம் இருந்தாலும், 'சின்னப் பெண்! வளர்ந்த குழந்தை போன்று தன்னிடம் விளையாடுகிறாள்' என்று ஓர் எல்லைக்கு மேல் அவளிடம் இருந்து தள்ளித்தான் நிற்பான். அதைத் தாண்டி அவள் மீது அவனுக்கு வேறு எந்த எண்ணமும் இருந்தது இல்லை. ஆனால் இன்றோ, அவனது இந்தச் செயல், பெண்ணவளின் மனதில் அவன் மீது பூப்பூக்கச் செய்திருந்ததை அவன் அறியவில்லை.


அவளைத் தேடி வந்த ஸ்னேகா, "ஏய் ரம்யா! இங்க என்ன பண்றே..? என் பின்னாடி தான் வந்துட்டு இருக்கேன்னு நினைச்சு நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே ஃபர்ஸ்ட் ஃபுளோருக்குப் போய்ட்டேன். என்னடா சத்தத்தைக் காணோம்ன்னு திரும்பிப் பார்த்தா நீ இல்ல. உன்னைத் தேடி வந்தா நீ இங்க நிக்கிறே…" என்றவள் அவளது முகத்தைத் தன் புறம் திருப்பியவள், அவளது முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்து, "ஆமா, உன் கன்னம் எதுக்கு இப்படிச் சிவந்து இருக்கு..?" என்று கேட்டவாறு ரம்யாவின் தோளைப் பிடித்து உலுக்க,


அதில் தன்னுணர்வுக்கு வந்த ரம்யா, தன் கன்னத்தை அழுத்தி விட்டு, "அ..அது ஒன்னும் இல்ல ஸ்னேகா... இந்தத் தோட்டம் பார்க்க நல்லா இருந்தது. அதான் இன்னொரு தடவை பார்க்கலாம்னு வந்தேன். இங்க ரொம்பக் குளிருதுல, அதான் என் கன்னம் ரெட்டாகிருச்சுன்னு நினைக்கிறேன்" என்று வாய்க்கு வந்ததைச் சொல்லி வைத்தவள், மேற்கொண்டு ஸ்னேகா ஏதும் கேட்கும் முன்,


"சரி, வா நாம போகலாம்…" என்று அவளை இழுத்துக் கொண்டு மண்டபத்தின் உள்ளே வந்தவளின் பார்வையோ, அவளையும் அறியாமல், தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த விக்ராந்த்தின் மீது படிய, அவனைப் பார்த்தவாறு ஸ்னேகாவுடன் நடந்தாள்.


அப்பொழுது ரவி விக்ராந்த்திடம் ஏதோ சொல்ல, அதற்குச் ‘சரி’ என்று தலையை ஆட்டியவன் மாடிப்படி ஏறினான்.


அதே நேரம் மண்டபத்தின் வாயிலில் தனது ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் தனுஷா. ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு உள்ளே வர, அவளைப் பார்த்த மோகனா, "நீ நேகா பிரென்ட் தனுஷா தானே..?" என்று கேட்க,


"ஆமா ஆன்ட்டி…" என்று அவள் புன்னகை முகமாகக் கூறவும்...


"நீ மட்டும் தான் வந்தியா..? அம்மாவைக் கூட்டிட்டு வந்துருக்கலாமேமா…?" என்று கேட்க


"நாளைக்கு வரேன்னு சொல்லிட்டாங்க ஆன்ட்டி.." என்றதும்,


"சரிமா, உள்ளே போ. நேகா பர்ஸ்ட் ஃபுளோர்ல இடது பக்கம் ரெண்டாவது ரூம்ல இருக்கா" என்று சொல்லி அவளை அனுப்பி வைக்க, தனுஷாவோ தோழியைக் காண உள்ளே சென்றாலும், அவளது பார்வையோ சுற்றும் முற்றும் பார்த்து யாரையோ தேடியது. அவள் தேடிய நபர் அவள் கண்ணில் சிக்கவில்லை என்றதும், "ம்பச்…" என்று சோர்வுடன் மாடிப்படி ஏறினாள்.


அதே நேரம் போனில் பேசியபடி வேகமாகப் படியில் இறங்கிக் கொண்டிருந்தான் விக்ராந்த். அழுத்தமான காலடியோசையில் நிமிர்ந்து பார்த்த தனுஷா இனிமையாக அதிர்ந்தாள்.


அவனைப் பார்த்ததும் அவளது கண்களோ சாசர் போல் விரிய, அவள் மனமோ, எப்பொழுதும் போல் அவனின் கம்பீரத்தை ரசித்து உள்வாங்கியது.


ஆம்! சற்று முன் அவள் தேடிய நபர் வேறு யாரும் இல்லை விக்ராந்த் தான். அவளது மனதிற்கு இனியவன் அவன் தான்! அடிக்கடி நேகா மற்றும் மேகாவைக் கல்லூரியில் விட வரும் பொழுது அவனைப் பார்த்திருக்கிறாள். அதன் பிறகு எப்பொழுதாவது நேகாவை அலுவலகத்திற்கு விடவும், அழைத்துச் செல்லவும் வருவான். அவனின் அழகிலும், கம்பீரத்திலும், எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத அவனது கண்ணியத்திலும் ஈர்க்கப்பட்ட தனுஷா, அவனைத் தன் மனதில் தன்னவனாக எப்பொழுதோ ஆழ பதித்துக் கொண்டாள்.


ஆனால் இதுநாள் வரை தன் மனதை அவனிடம் மட்டும் அல்ல வேறு யாரிடமும், ஏன் தன் அண்ணனிடம் கூட, அவள் பார்வையிலோ, வார்த்தையிலோ கூட வெளிப்படுத்தியது இல்லை. அதற்கு முதல் காரணம்… தன்னால் தன் அண்ணனின் காதலுக்கு இடையூறு ஏதும் வந்து விடக் கூடாது என்ற எண்ணம். மேலும் தனது காதலை தன் அண்ணனிடம் சொன்னால் நிச்சயம் நிறைவேற்றி வைப்பான் என்ற நம்பிக்கை இருப்பதால், இப்போதைக்கு விக்ராந்த்தைப் பார்க்கும் போதெல்லாம் ரசித்துப் பார்ப்பதை மட்டுமே தன் வேலையாக வைத்துள்ளாள்.


தன்னை ஒருத்தி அணுஅணுவாய் ரசித்துப் பார்த்துக் காதலிக்கிறாள் என்று அறியாமல் தனுஷாவைக் கடந்து சென்று விட்டான் விக்ராந்த்.


அதன் பிறகு சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வர, மாப்பிள்ளை அழைப்பு, ஆரத்தி எடுப்பது, நலுங்கு வைப்பது என வரவேற்பு அமோகமாக நடைபெற்றது. இரு குடும்பங்களிலும் சந்தோஷம் நிறைந்து வழிந்தது.


இப்படி மேகாவின் திருமண நிகழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்க, அங்கே முதல் வரிசையில் அமர்ந்திருந்த இருவரின் மனமோ, நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை.


மறுநாள் திருமணநாளும் அழகாக விடிந்தது. மணமகள் அறையில் மேகாவின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் அழகு நிலைய கலைஞர்கள் அவளை அழகு படுத்திக் கொண்டிருக்க.. அங்கே இருந்த ஆளுயர கண்ணாடியின் முன் நின்று தன்னைத்தானே அலங்கரித்துக் கொண்டிருந்தாள் நேகா.


அப்பொழுது உள்ளே நுழைந்தனர் ஸ்னேகா, ரம்யா இருவரும். மேகாவின் அருகே வந்த ரம்யா, "அண்ணி! ஸ்மைல் ப்ளீஸ்…" என்று அவளைத் தனது மொபைலில் படம் பிடித்தாள்.


ஸ்னேகாவோ, நேகாவின் அருகே வந்து நின்று தன் அக்காவின் அழகை ரசித்துப் பார்த்தாள். தங்கையின் குறுகுறு பார்வையில் சிரித்த நேகா, "என்ன ஸ்னேக் பேபி, அப்படிப் பார்க்கிறே..?" என்று கேட்டுக் கண் சிமிட்ட,


அவளோ, "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா…" என்று கூறவும். "உன்னை விடவா..?" என்று தங்கையின் நாடியைப் பிடித்து ஆட்டினாள் நேகா.


சுற்றும் முற்றும் தன் பார்வையைச் சுழற்றிய ஸ்னேகா, "அக்கா! உங்ககிட்ட ஒன்னு கேட்கவா..?" என்று கேட்டாள்.


"என்னம்மா..?" என்று கேட்டுக் கொண்டே தன் கண்களில் மையை அழகாகத் தீட்ட,


"உ...உங்களுக்கும் இன்னைக்கு எங்கேஜ்மெண்ட் இருக்குல..? அதுல உங்களுக்கு விருப்பம் தானேக்கா..?" என்று கேட்டவளின் குரலில் ஒருவித பயம் தென்பட்டது.


தான் இருந்த மனநிலையில் அதைக் கவனிக்காத நேகாவோ, "ஆமாடா, அதான் அக்கா ரெடியாகிட்டு இருக்கேன்" என்று கூறிச் சிரித்தவள், தனது ஒப்பனையைத் தொடர்ந்தாள்.


ஆனால் தங்கையின் கேள்வியையும், அவள் குரலில் தெரிந்த பயத்தையும் உணர்ந்து கொண்ட மேகாவோ, "ஸ்னேகா! இங்க வா..." என்று தங்கையைத் தன் அருகில் அழைத்தவள்,


"நீ எதுக்கு டல்லா இருக்கே..? நேத்து உன் முகத்தில் இருந்த சிரிப்பு கொஞ்சம் கூட இப்ப இல்லையே..? என்னாச்சு உனக்கு…? ரிஷி அத்தானை நினைச்சு பயப்படுறியா..? எதுவா இருந்தாலும் அக்காகிட்ட சொல்லு…" என்று மேகா திடீரென்று கேட்கவும்தான் நேகாவுக்கும் தங்கையின் கேள்வி புரிந்தது.


உடனே தன் அலங்காரத்தை நிறுத்தி விட்டு தங்கையின் மறுபுறம் வந்து அமர்ந்தவள், "ஏன் ஸ்னேகா.. உனக்கு இந்த நிச்சயதார்த்தத்துல விருப்பம் இல்லையா..? அப்படி ஏதும் இருந்தா அக்காகிட்ட தயங்காம சொல்லு..!! உடனே மோஹிமாகிட்ட பேசி இந்த நிச்சயத்தை நிறுத்திடுறேன். எனக்கு நீதான் முக்கியம். உனக்கு விருப்பம் இல்லாதது எதுவும் நடக்காது!!" என்று அவள் கூறினாள்.


தன் முகத்தை வைத்தே தன்னைக் கண்டு கொண்டதும் அல்லாமல், தன் உணர்வுக்கு மதித்து அளித்துப் பேசும் தமக்கைகளின் அன்பைக் கண்டு, அவளது கண்கள் சட்டென்று கலங்கித்தான் போனது. அதை அவர்கள் கவனிக்கும் முன் கண் சிமிட்டி உள்ளிழுத்தாள்.


அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ரம்யா, "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி… இன்னைக்கு நைட்டே நீங்க ஊட்டிக்குக் கிளம்பி போயிருவீங்கள்ல, அதை நினைச்சு இவ பீல் பண்றாளா இருக்கும். அப்படித்தானே ஸ்னேகா..?" என்று கேட்கவும், புன்னகையுடன் 'ஆம்' என்று தலையசைத்தாள் ஸ்னேகா.


"ஊப்!! அவ்வளவு தானா?? நானும் வேற என்னவோ ஏதோனு நினைச்சுப் பயந்துட்டேன்" என்றபடி தங்கையை ஆதுரமாகப் பார்த்த மேகா, "நைட் அக்கா மட்டும் கிளம்பலடா.. எனக்குத் துணையா உன்னையும் கூட்டிட்டுத்தான் போறேன், ஓகேவா..?" என்று சமாதானம் செய்தாள்.


அப்பொழுது அறைக்குள் வந்த மோகனா, "ரம்யா! ஸ்னேகா! உங்க ரெண்டு பேரையும் கல்யாணத்துக்கு வர்றவங்களைப் பூ கொடுத்து வரவேற்க சொன்னேன்ல, போங்க" என்று அவர்களை அங்கிருந்து கிளப்பியவள்,


"நேகா! உங்க ஓவிமா எங்கே..?" என்று மகளிடம் கேட்டாள்.


"அவங்க அதோ அந்தப் பக்கம் இருக்கிற பால்கனியில நிக்கிறாங்க" எனக் கூறவும், தோழியைத் தேடிச் சென்றாள் மோகனா.


திருமண மண்டபம் பரபப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ஓவியாவோ அமைதியாகப் பால்கனியில் நின்றிருந்தாள். அவளது தோளில் ஒரு கரம் அழுத்த, அந்தக் கரத்தின் மீது தன் கையை வைத்த ஓவியா, "மோனா..." என்று அழைக்க,


"நீ என்ன வெளியே வராம இங்கே நின்னுட்டு இருக்க..? உன்னை ரவி தேடிட்டு இருக்கார்" என்று கூறினாள் மோகனா.


"நான் இப்பவே அங்கே வந்து என்ன பண்ண போறேன்..? கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்" என்று தன் மனதை மறைத்துச் சிரிக்க முயன்றாள் ஓவியா.


தோழியை ஆழ்ந்து பார்த்தவள், "எதையாவது மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கியா ஓவி?" என்று கேட்டாள் மோகனா.


"ச்ச! ச்ச! அப்படில்லாம் இல்லடி... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்" என்ற குரலின் தடுமாற்றத்தை உள்வாங்கியவள், தோழியின் நாடியை பிடித்துக் கொண்டு,


"ஓவி! ரிஷிக்கும், நேகாக்கும் நிச்சயம் வச்சிட்டோமே, ஆனா ரிஷி இன்னும் வரலையே..? அவன் வருவானா? வர மாட்டானா? அப்படி வரலன்னா, மோனாக்கு என்ன பதில் சொல்றதுன்னு தானே தவிச்சுட்டு இருக்கே..?" என்று ஓவியாவின் மனதை அழகாகப் படம்பிடித்துக் காட்டியது போல் கேட்டாள் மோகனா.


"மோனா…!!" என்று அவளது கையைப் பிடித்துக் கொள்ள,


"என் ஓவி பேபி மனசுல என்ன இருக்கும்னு எனக்குத் தெரியாதா..?" என்று சிரித்தவள், "ஓவிமா! அவன் கண்டிப்பா வருவான். அப்படி இல்லையா.. நிச்சயதார்த்தத்துக்கு மாப்ள இங்க இருக்கணும்ன்னு அவசியம் இல்லடி. நீ ஏன் டென்ஷன் ஆகுறே..?" என்று கேட்கவும்,


'நிச்சயத்துக்கு அவசியம் இல்ல, ஆனா கல்யாண நேரத்திலும் அவன் இப்படியே பண்ணிட்டடா?? என்ன பண்றது..?' என்று நினைத்த ஓவியாவின் மனதில் பிரளயம் உண்டானது.


தோழியின் மனதை படித்த மோகனா, "ஓவிமா! எனக்கு ரிஷி மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ.. ரவி மேல நிறையவே நம்பிக்கை இருக்கு. அவர் பேச்சை என்னைக்கும் ரிஷி தட்ட மாட்டான்னு எனக்குத் தெரியும்" என்று மோகனா கூறவும்,


"இப்படி இந்தக் கல்யாணம் நடந்தே ஆகணும்னு ஏன் மோனா இவ்ளோ பிடிவாதம் பிடிக்கிற..? நேத்து நைட் அம்மா புலம்பிட்டே இருந்தாங்க" என்றதும்,


'சப்பா! உனக்கும் உங்க அம்மாக்கு புரிய வைக்கிறதுகுள்ள என் ஆவியே போயிரும் போல இருக்கு!' என்று மனதில் நினைத்தவள்,


"ஓவி! குடும்பமே வேண்டாம்ன்னு பிடிவாதமா ஒதுங்கி இருக்கிறவனுக்கு வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சா, அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். தெரிஞ்சும் என் பொண்ணைப் பணயம் வைக்கிறேன்னா, அப்படியாவது என் பொண்ணு அவன் மனசை மாத்திட மாட்டாளா..? என் ஓவி பேபிகிட்ட அவன் பையன் வந்துட மாட்டானா..? உன் முகத்துல பழைய சந்தோஷத்தைக் கொண்டு வர முடியாதான்னு தான்டி நினைக்கிறேன்" என்று கூறவும், தோழியின் கையை இறுக பற்றிக் கொண்டாள் ஓவியா.


"ஓவி! அவன் நீ பத்து மாசம் சுமந்து பெத்த பிள்ளைடி! அவன் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் இப்படி இருக்கான். இத்தனை வருசமா விட்டாச்சு. இனியும் அப்படியே விடச் சொல்றியா..? எனக்கு என் ஓவிமா சிரிக்கணும். நிச்சயம் நேகா ரிஷியை மாத்துவா, அவனும் நிச்சயம் மாறுவான்! கண்டிப்பா நான் சொல்றது நடக்கும், எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவள்,


"ரிஷிக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா அப்பவே ரவிகிட்ட சொல்லி இருப்பான் தானே..? அவர் அவன்கிட்ட கேட்டு ரெண்டு மாசம் ஆச்சுல..? இதுவரை அவன் மறுத்து ஏதும் சொல்லலையே? அதனால நீயா ஏதும் மனசுல போட்டு அலட்டிக்காதடி. நல்லதே நடக்கும்னு நம்புவோம், வா…" என்றுவிட்டு தோழியை உள்ளே அழைத்து வந்தாள் மோகனா.


அங்கே கட்டிலில் இருந்த பூக்கள் நிரம்பிய தட்டை பார்த்து, "ம்பச்! இதை விட்டுட்டுப் போய்ட்டாளுங்களா..? நேகா! நீ ரெடி ஆகிட்டியா..? இந்தப் பூத்தட்டை ரம்யாகிட்ட கொண்டு போய்க் கொடுத்துட்டு வரியாம்மா..?" என்று கேட்க…


"ஓகே மோஹிமா…" என்ற நேகா பூக்கள் நிரம்பிய தட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.


அதே நேரம் மண்டப வாசலில் சீறிக் கொண்டு வந்து நின்றது, கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் வாகனம். அதில் இருந்து கம்பீரமாக இறங்கினான் ரிஷிவர்மன்.


உடற்பயிற்சியால் முறுக்கேறிய உடம்பும், கூர் நாசியும், அழுத்தமாக இறுகி காணப்பட்ட இதழ்களும், ட்ரிம் செய்யப்பட்ட மீசை, ஜீன்ஸ், டீசர்ட் என ஆளை அசத்தும் அழகில் இருந்தவனின் கண்களிலோ குளிர் கண்ணாடி அணிந்திருந்தாலும், அவனது விழிகளோ, தனது லேசர் பார்வையால் மண்டபத்தின் உள்ளே அலசியது.


சுவிங்கத்தை மென்றவாறு வேக எட்டுக்கள் எடுத்து வைத்து உள்ளே சென்றவனை, "சார், ஒரு நிமிஷம்" என்று அழைத்து நிறுத்தியது செக்யூரிட்டியின் குரல்.


அதில் சட்டென்று நின்று தலையை மட்டும் திருப்பிப் பார்த்த ரிஷிவர்மனின் பார்வையில், அவன் அணிந்திருந்த குளிர் கண்ணாடியையும் மீறி தெரிந்த அனலில்,


"சாரி சார்! உங்க கார் வாசல்ல நிக்கிது. அது கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்" என்று மென்று முழுங்கினான்.


அவனைப் பார்த்த ரிஷிவர்மன் சட்டெனத் தனது வாகனத்தின் சாவியை அலட்சியமாக அவனை நோக்கித் தூக்கிப் போட, அதைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அந்தச் செக்யூரிட்டி.


மீண்டும் சுவிங்கத்தை மென்றவாறு வேகமாகத் திரும்பியவனின் மீது வந்து மோதி இருந்தாள் நேகா. அவள் அப்படி மோதவும், அவள் கையில் இருந்த பூக்கள் அடங்கிய தட்டு அந்தரத்தில் பறந்தது.


தன் மீது மோதி கீழே விழ இருந்த பெண்ணின் இடையில் கைக் கொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான் ரிஷிவர்மன். அதே நேரம் அவள் அந்தரத்தில் பறக்க விட்ட அந்தப் பூக்கள் அனைத்தும் இருவரின் மீதும் பூ மழையாய் பொழிய ஆரம்பித்திருந்தது. 


*****


1 comment:

  1. Nega ku Rishi kidaiathu nu thonude ivanuku buildup over ah iruke

    ReplyDelete