ஸ்வரம் 8

 


ஸ்வரம் 8…


இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்க்கவே இல்லை நேகா. பூக்களை ரம்யாவிடம் கொடுக்க வந்தவளை வழியில் வழி மறித்த உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அவளிடம்,


"அடுத்து உன் கல்யாணம் தானே..?" என்று கேட்டு அவளைக் கிண்டல் செய்ய, அவருக்குச் சிரித்தபடி பதில் அளித்து விட்டு வேகமாகத் திரும்பிய நேரம் தான் ரிஷிவர்மனின் மீது மோதி இருந்தாள்.


திடீரென யார் மீதோ தான் மோதவும், பதட்டத்தில் கீழே விழ போகிறோம் என்று பயத்தில் கண் மூடிக் கொண்டவளை இடையில் கைக் கொடுத்துத் தாங்கி இருந்தான் அவன்.


தன் கைகளில் தேவதை எனக் கண் மூடி இருந்த பெண்ணவளைத் தன் குளிர் கண்ணாடியின் ஊடே பார்த்தான் ரிஷிவர்மன்.


அப்பொழுது மறுபக்கமாக விழுந்து சத்தம் எழுப்பிய தட்டின் சத்தத்தில் சட்டென்று கண் திறந்த நேகா, தன் முகத்தின் வெகு அருகே தெரிந்த பரிச்சயமான முகத்தைக் கண்டு ஒரு நொடி நெற்றிச் சுருக்கியவள், அடுத்த வினாடி திகைப்புடன், "ரிஷி அத்தான்! நீங்களா..!!?" என்று கேட்டபடி அவனிடம் இருந்து விலகி நின்றாள்.


அவளின் ‘அத்தான்’ என்ற அழைப்பில் ஒற்றைப் புருவம் தூக்கி அவளை அவன் கேள்வியாகப் பார்க்க,


"என்னத்தான்..?? என்னைத் தெரியலையா..? சரியா போச்சு..!! அடிக்கடி வீட்டுக்கு வந்தா தானே நான் யாருன்னு தெரியும். ஆடிக்கொரு தடவை கூட நீங்க இந்தப் பக்கம் வர மாட்டீங்களே..?" என்று சொல்லி அவள் சிரித்தாள்.


அவனோ சுவிங்கத்தை மென்றவாறு யோசனையுடன் அவளை மேலும் கீழும் பார்த்துத் தன் லேசர் விழிகளால் படம் பிடித்துக் கொண்டவன், அவளிடம் வேறு ஏதும் பேசாமல் உள்ளே சென்று விட்டான்.


ரிஷிவர்மன் அப்படிச் செல்லவும், அவன் குணமே அப்படித்தான் என்று அவளுக்குத் தெரியுமாதலால், அவனின் செயலில் வருத்தம் அடையாமல் இதழ் பிதுக்கித் தன் தோளைக் குலுக்கிய நேகா, எதேர்ச்சையாக வாசல் பக்கம் தன் பார்வையைப் பதித்தாள். அங்கே கண்கள் ரத்தமெனச் சிவக்க, தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்தபடி நின்றிருந்தான் அஜித்குமார்.


ஆம்!! சற்று முன்புதான், தன் தாய் தங்கையுடன் தனது காரில் வந்து இறங்கி இருந்தான் அஜித்குமார். மேகாவின் திருமணத்திற்கு அவனுக்கு அழைப்பு விடுத்த நேகா, கூடவே திருமணத்தை ஒட்டி இரண்டு வாரம் விடுப்பும் எடுத்திருந்தாள்.


கடந்த ஒரு வாரமாக அவளைக் காணாமல் தவித்த அஜித், இன்று தன்னவளைக் கண்டு ரசிக்கும் ஆவலில், இந்தத் திருமணத்திற்கு வந்து விட்டான். ஆனால் வந்தவனின் கண்ணில் வேறு ஒருவன் தன்னவளைத் தாங்கிப் பிடித்திருக்கும் காட்சி விழ, அதில் அவனது காதல் மனம் கோபத்தைத்தான் தத்தெடுத்தது.


அவன் அருகில் நின்றிருந்த தனுஷாவும், அந்தக் காட்சியைக் கண்டு, தன் அண்ணனின் கோபம் உணர்ந்து அவன் முகம் பார்த்தவள், அவனது கையை இறுக பற்றிக் கொண்டாள். ஆனாலும் அவனது கோபம் அடங்க மறுத்தது.


அவர்களைப் பார்த்த நேகா, "வாங்க சார்!! வாங்க ஆன்ட்டி!! தனு வாடி!!" என்று மூவரையும் வரவேற்றாள். பெண்கள் இருவரும் அவளைப் புன்னகையுடன் எதிர்கொண்டார்கள் என்றால், அஜித்தோ அவளை உறுத்து விழித்தபடி தான் உள்ளே வந்தான்.


அவனைப் பார்த்த நேகா, 'பார்றா!! இப்ப எதுக்கு இந்த மங்கூஸ் மண்டையன் என்னய்ய பார்த்து இப்படி முறைக்கிறான்..?' என எண்ணியவள், அதே கேள்வியைத்தான் தன் தோழியிடம், "ஏன்டி தனு! இப்ப எதுக்கு உங்க அண்ணன் என்னய்ய முறைச்சு பார்க்கிறாரு..? இது அவரோட ஆபிஸ் இல்ல, கல்யாண மணடபம். ப்ளீஸ்டி! கொஞ்சம் சிரிக்கச் சொல்லு, பார்க்கச் சகிக்கல..!!" என்று தோழியின் காதில் கிசுகிசுத்தாள்.


தனுஷாவின் மனமோ, 'ஹீரோவா என்ட்ரி கொடுக்க நினைச்சவனை ஒத்த சீன்ல வில்லன் ரேஞ்சிக்கு கோபப்பட வச்சிட்டு, அவன் சிரிக்கணும்னு நினைக்கிறியே..? நீயெல்லாம் நல்லா வருவடி..!! நானே நீ பண்ணின காரியத்துக்குப் பூகம்பம் எப்போ வெடிக்கும்னு பதக் பதக்னு இருக்கேன், இதுல இவ வேற..!!' என அலுப்புடன் எண்ணிக் கொண்டவள், தோழியைப் பார்த்துச் சிரித்து வைத்தாள்.


நேகா - ரிஷிவர்மன் இருவரின் நெருக்கத்தைக் கண்டு அஜித்குமார் கோபம் கொண்டான் என்றால், அங்கே நின்றிருந்த இன்னொரு ஜீவனோ ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அது வேறு யாரும் அல்ல, ரிஷியின் உடன் பிறந்த தங்கை ரம்யா தான்..


தன் அண்ணனை வெகு வருடங்கள் கழித்து இன்று தான் பார்க்கிறாள் ரம்யா. ஸ்னேகா விக்ராந்த்திடம் விளையாடும் போதும், அவன் அவளிடம் பாசம் காட்டும் போதும், அவர்களை ஆசையுடன் பார்ப்பாள்.


அவளது மனமோ.. தன் அண்ணனும் தன்னிடம் இப்படிப் பாசம் காட்ட வேண்டும், தானும் அவனிடம் செல்லம் கொஞ்ச வேண்டும் என்று உள்ளுக்குள் ஏக்கம் கொள்ளும். ஆனால் விபரம் அறிந்து அவன் இதுவரை அவளிடம் பேசியது கூட இல்லையே!!?? என்றும் போல் தன் அண்ணனை நினைத்து பெருமூச்சு விட்ட ரம்யா திரும்பி ஸ்னேகாவை பார்த்தாள். ஆனால் ஸ்னேகாவோ அவளது அருகில் இல்லை.


'இவ எங்க போனா?' என்று யோசித்தபடி நின்றவள், தன் காலுக்கடியில் அரவம் உணர்ந்து வேகமாகக் கீழே பார்க்க, அங்கே தரை முழுக்கக் கற்கண்டு சிதறி இருக்க, அதை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தாள் ஸ்னேகா.


அதைக் கவனித்த ரம்யா, "ஏய் ஸ்னேகா! கீழே உக்காந்து என்னடி பண்ணிட்டு இருக்கே..?" என்று கேட்டாள்.


அவளை நிமிர்ந்து பாராமல், "அது வந்து.. டேபிள்ல வச்சிருந்த கற்கண்டு தட்டு தெரியாம என் கை பட்டு கீழே கொட்டிருச்சுடி. அதான் எடுத்துட்டு இருக்கேன்" என்று கூறியவளை பார்த்த ரம்யா, 


"ம்ப்ச்! அத எடுக்காத, அப்படியே ஓரமா தள்ளி வை! வேற கற்கண்டு பாக்கெட் எடுத்துக்கலாம்" என்று கூறவும்,


அவள் கூறியது போல் செய்து விட்டு, "சரி ரம்யா, நீ பாக்கெட் எடுத்து வை, நான் போய் என் கையைக் கழுவிட்டு வந்துடுறேன். இங்க பாரு! ஒரே பிசுபிசுப்பு.." என்றவள் வாசலை நோக்கி நகர்ந்தாள்.


"அந்தப் பக்கம் எங்கடி போறே..?" என்று புரியாமல் ரம்யா கேட்டாள்.


தன் உள்ளங்கை இரண்டையும் அவளிடம் நீட்டியவள், "இதைப் பார்த்தா மோஹிமா திட்டுவாங்க. அதான் அவங்க கண்ணுல படாம மண்டபத்துக்குப் பின்பக்கமா இருக்கிற வழியில் மாடிக்குப் போய்டுறேன்" என்றவள் அவளின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டாள்.


தன் தலையை ஆட்டி விட்டு, திருமணத்திற்கு வந்து கொண்டிருப்பவர்களைப் பன்னீர் தெளித்து வரவேற்க ஆரம்பித்தாள்.


அதே நேரம் வேக எட்டுக்கள் வைத்து அலட்சியமாகவும் திமிராகவும் உள்ளே நடந்து சென்ற ரிஷிவர்மன், முதல் வரிசையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.


தனது அருகில் அமர்ந்திருந்த உறவுக்காரப் பெண்மணியிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ராதா, தன் மறுபுறம் இருந்த இருக்கையில் யாரோ வந்து அமர்ந்ததை உணர்ந்து, அதே சிரிப்புடன் திரும்பிப் பார்த்தவரின் கண்ணில் பட்டான், அவரது பேரன் ரிஷிவர்மன்.


அவன் வருவான் என்பதை எதிர்பாராத ராதாவோ, தன் மகளின் வாரிசைக் கண்டதும், அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு தோன்றியது.


அதே நேரம் ரிஷிவர்மனும் அவரைத்தான் பார்த்தான். தனது பாட்டியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை அலட்சியப்படுத்தியவன், 'யார் நீ?' என்பது போல் அந்நியப் பார்வை பார்த்து வைத்தான்.


அவ்வளவு தான்..!! அவனது அந்த அலட்சியத்தில் ராதாவின் பூரித்த முகம் சட்டென்று கோபத்தைப் பூசிக் கொள்ள, அவனை முறைத்து விட்டு, "ஹூம்!!" என்று ஒரு வெட்டு வெட்டியவர், முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டார்.


அப்பொழுது அவரிடம் பேசிக் கொண்டிருந்த பெண்மணியோ, "ராதா! இது உன் பொண்ணு வயித்துப் பேரன் தானே..?" என்று ரிஷியைப் பார்த்துக் கேட்க,


"ஆமா ஆமா, என் பேரன் தான்" என்று அவரிடம் சொல்லி விட்டு, 'திமிர் பிடிச்சவன்!! பாட்டி எப்படி இருக்கீங்கன்னு ஒரு வார்த்தை கேட்குறானா பாரு…? யாரோ போலப் பார்க்கிறான். இவன்லாம் எங்க உருப்படப் போறான்..?' என்று அவன் காது படவே அவர் முணுமுணுத்தார்.


அவரது பேச்சில் இதழ் சுழித்து நக்கலாக அவரைப் பார்த்துச் சிரித்தவன், தன் பார்வையை மணமேடையில் செலுத்தினான்.


அவனைத் தொடர்ந்து வந்த அஜித்குமாரின் குடும்பத்தை மறுபக்கம் முதல் வரிசையில் அமர வைத்த நேகா, தோழியிடம் கூறி விட்டு, அஜித்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மேகாவின் அறைக்குச் சென்று விட்டாள். அவளை அஜித்தின் பார்வை தொடர்ந்து சென்றது என்றால், தனுஷாவின் கண்களோ தன்னவன் எங்கே என்று தேடியது.


அங்கே மணமேடையில் ஐயர் கூறும் மந்திரங்களை மாப்பிள்ளை சஞ்சீவ் உச்சரித்துக் கொண்டிருக்க, கார்த்திக் - மோகனா இருவரும் தன் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராக நின்றிருந்தார்கள். தன் கணவனுடன் ஏதோ பேசியபடி திரும்பிய மோகனா, ரிஷியைப் பார்த்ததும் முகம் பிரகாசமாக,


"என்னங்க.. அங்க பாருங்க..!!" என்று முன்வரிசையில் தோரணையாக அமர்ந்திருந்த ரிஷியைக் கண் காட்ட, அவனும் தங்கை மகனைப் பார்த்தான்.


"நான் சொன்னேன்லங்க, ரிஷி கண்டிப்பா வருவான்னு.." என்று அவள் சந்தோஷமாகச் சொல்லி சிரிக்க, அவளது அருகில் நின்றிருந்த ஸ்வேதா, "மோகனா! அதானே ஓவியா பையன்..?" என்று கேட்க,


"ஆமா அண்ணி" என்றவள் ஓவியாவைத் தேட, அவளது கண்ணில் அவள் தென்படவில்லை.


'அத்தை பக்கத்துல தானே உக்காந்து இருந்தா, எங்க போனா..?' என்று யோசித்தவள், மேடையில் நின்றவாறே, "அத்தை! ஓவி எங்கே..?" என்று அவரிடம் சத்தமாகக் கேட்டாள் மோகனா.


ராதாவோ பக்கத்தில் இருந்தவரிடம் மும்முரமாகப் பேசிக் கொண்டு இருந்ததால் அதை அவர் கவனிக்கவில்லை. ஆனால் அந்தப் பெயரை கேட்ட நொடி ரிஷியின் முகமும், உடலும் பாறை போல் இறுகியது.


அப்பொழுது தந்தையிடம் ஏதோ கேட்பதற்காக மேடையேறி வந்த விக்ராந்திடம், "விக்கி! உங்க மாமாவும், அத்தையும் எங்கே..?" என்று கேட்டாள் மோகனா.


"அவங்க ரெண்டு பேரும் வெளியே தோட்டத்துல நின்னு பேசிட்டு இருக்காங்க" என்று அவன் கூறவும்,


"அவங்களை உடனே கூட்டிட்டு வா!" என்ற மோகனா, "விக்கி.." என்று ரிஷியைக் கண்களால் சுட்டிக் காட்டி, "அவன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசி வெல்கம் பண்ணிடுப்பா" என்று கூறவும்,


திரும்பி அவனைப் பார்த்த விக்ராந்த் மீண்டும் அன்னையைப் பார்த்து, "உங்களுக்கு வேணுமன்னா நீஙக அவனைக் கூப்பிட்டு வச்சி கொஞ்சுங்க, என்னைக் கட்டாயப் படுத்தாதீங்க!" என்று ஏற்கனவே சின்னத் தங்கையை நினைத்து ரிஷியின் மேல் இருந்த கோபத்தை அவன் அன்னையிடம் காட்டினான்.


"விக்ரம்..!!" என்று அழுத்தமாக அழைத்தான் கார்த்திக்.


"சாரிப்பா!! அவனைப் பார்த்தாலே எனக்குக் கடுப்பாகுது. ஓவிமாக்காகத்தான் அமைதியா இருக்கேன்" என்றவன், அதற்கு மேல் அங்கு நில்லாமல் விறுவிறுவென்று இறங்கிச் செல்ல, "என்னங்க.. இவன்.." என்று கணவனைப் பார்த்தாள்.


"மோகனா! மேகா கல்யாணம் முடியும் மட்டும் ஏதும் பிரச்சினை வேணாம்னு நினைக்கிறேன்" என்று அமைதியாக அதே சமயம் அழுத்தமாகவும் கார்த்திக் கூறிக் கொண்டிருக்க,


அப்பொழுது, "முகூர்த்தத்துக்கு நாழி ஆயிடுத்து. பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ!" என்று குரல் கொடுத்தார் ஐயர்.


"அண்ணி! நான் போய் மேகாவைக் கூட்டிட்டு வரேன்" என்று நகரப் போன மோகனாவை, "நீ நில்லு! என் மருமகளை நான் தான் கூட்டிட்டு வருவேன்" என்று அங்கிருந்து சென்றாள் ஸ்வேதா.


சிறிது நேரத்தில் மாம்பழ வண்ணத்தில் தங்க நிற ஜரிகை பட்டில், வைர நகைகள் மின்ன நடந்து வந்த மேகா, சஞ்சீவின் அருகே அமர்ந்தாள். மணப்பெண் தோழியாக அவளுடன் வந்த நேகாவைப் பார்த்த அஜித், தனது கோபத்தைச் சிறிது கைவிட்டு அவளை விழுங்கும் பார்வை பார்த்தான்.


ஐயர் மந்திரங்களைக் கூறி விட்டுத் தாலி இருந்த தாம்பூல தட்டை எடுத்து, "இதை எல்லார்கிட்டயும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்கோ!" என்று நீட்ட, அதை வாங்கிக் கொண்ட நேகா மேடையை விட்டு கீழே இறங்கினாள்.


அவள் முதலில் வந்து நீட்டியது அஜித்திடம் தான்! அவனோ, அவளையும் அவள் கையில் இருந்த தாலியையும் பார்த்தவன், 'சீக்கிரமே நானும் உனக்குத் தாலி கட்டி என்னவள் ஆக்கிடுவேன் பேபி' என்று மனதில் கூறிக் கொண்டு தட்டில் இருந்த அட்சதையை எடுத்துக் கொண்டான். அவளோ, அவன் மனதில் இருப்பதை அறியாமல், அவனைப் பார்த்து சிறு புன்னகையைச் சிந்தி விட்டு மற்றவர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தாள்.


மேடையில் நின்றிருந்த மோகனா, "என்னங்க.. ஓவியாவையும் ரவியையும் காணோம். அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரப் போன விக்கியையும் காணோம்" என்று அவளது கண்கள் பக்கவாட்டில் இருந்த வாசலைப் பார்க்க,


"வெளியே தானே நிக்கிறாங்க..? இப்ப வந்துருவாங்க" என்று கார்த்திக் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தான்.


அதே நேரம் அன்னையிடம் கடுகடுத்து விட்டு வெளியே வந்த விக்ராந்த், தன் பின்னங்கழுத்தை அழுத்திக் கோதிக் கொண்டு தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.


ஆம்! ராதாவைப் போல் அவனுக்கும் தன் தங்கை நேகாவை ரிஷிவர்மனுக்கு மணம் முடிக்கக் கிஞ்சித்தும் விருப்பம் இல்லை. நேகாவின் திருமணப் பேச்சை மோகனா எடுக்கும் போதெல்லாம் ஒன்று அமைதி காப்பான், இல்லையேல் அந்த இடத்திலேயே இருக்க மாட்டான்.


ராதா வெளிப்படையாக மறுத்துக் கொண்டிருந்தார் என்றால், இவனோ உள்ளுக்குள் மறுகி கொண்டிருந்தான். அவன் நினைத்தால் எப்பொழுதோ இந்தத் திருமணப் பேச்சை நிறுத்தி இருக்க முடியும். ஆனால் தன் அத்தை ஓவியாவுக்காக மட்டுமே எதுவும் பேசாமல் இருக்கின்றான்.


ஆனால் இப்பொழுது அவனைப் பார்த்ததும் அவனது கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பின்பு ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டவன், தோட்டத்தில் ஓவியாவைத் தேட, சற்றுத் தள்ளி நின்று இருவரும் பேசிக் கொண்டிருப்பது கண்டு வேகமாக அவர்களிடம் சென்றான் விக்ராந்த்.


அங்கே ரவிவர்மனிடம், "என்னங்க.. ரிஷி இன்னும் வரலையே? என்ன பண்றது?? அவனுக்கு ஒரு போன் பண்ணிக் கேளுங்களேன்" என்று ஓவியா கவலையுடன் கூறவும்,


"ஓவிமா! அவன் கண்டிப்பா வந்துருவான்டா. நீ இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுறே..? மோகனா உன்னைத் தேடுவாங்க. வா, உள்ள போகலாம்…" என்று ரவிவர்மன் கூறிக் கொண்டு இருக்கும் போது அவ்விடம் வந்த விக்ராந்த், "மாமா! ஓவிமா! முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சு, உள்ள வாங்க" என்று அவர்களை அழைத்தான்.


"சரி" என்று இருவரும் மண்டபத்தை நோக்கி நடக்கும் சமயம் ரவியின் மொபைல் ஒலி எழுப்பியது. "விக்ரம்! நீ உங்க அத்தையைக் கூட்டிட்டு உள்ள போ! நான் ஜஸ்ட் டூ செக்கென்ட்ல வந்துடுறேன். இது ரொம்ப இம்பர்ட்டெண்ட் கால்" என்று கூறவும்,


"சரி மாமா" என்றுவிட்டு ஓவியாவின் கைப் பிடித்து அழைத்துச் சென்ற விக்ராந்த், அவள் தவிப்பைக் கண்டு தன் அத்தையைத் தோளோடு அனைத்துக் கொண்டு,


"ஓவிமா! ரிஷி வந்துருக்கான்" என்று மெல்லிய குரலில் அவளிடம் கூறவும், அவளது நடை அப்படியே நின்று விட்டது.


"என்ன!!? என்ன சொன்ன? என் புள்ள வந்துட்டானா..?" என்று மனம் கொள்ளா மகிழ்ச்சி பொங்கக் கேட்டவள், தன்னை மறந்து வேகமாக நடக்கவும், "ஓவிமா.." என்று அவளைத் தடுத்தான் விக்ராந்த்.


"விக்ரம்! என்னை ரிஷிகிட்ட கூட்டிட்டுப் போறியா..?" என்று கேட்ட அந்தத் தாயுள்ளம், தான் பெற்ற மகவைக் காணத் துடித்தது.


"இல்ல ஓவிமா.. மொதல்ல கல்யாணம் முடியட்டும். அப்புறம் அவனைப் பார்க்கலாம்" என்ற விக்ராந்த் மேடையை நோக்கி அவளைத் திருப்பினான்.


ஓவியாவோ விக்ராந்த்தின் கன்னத்தில் கை வைத்து, "ப்ளீஸ்டா கண்ணா! எனக்கு இப்பவே என் புள்ளைய பார்க்கணும்" என்றவளின் கண்களில் நீர் துளிகள்..!!


தனது ஓவிமாவின் கலங்கிய கண்களைப் பார்த்த விக்ராந்திற்கு ரிஷியின் மேல் ஆத்திரம் பொங்கியது. முயன்று தன்னை அடக்கிக் கொண்டவன்,


"சொன்னா கேளுங்க ஓவிமா.." எடுத்துச் சொல்லிப் பார்த்தான்.


அவளோ, "அவன் எந்தப் பக்கம் இருக்கான்னு மட்டும் சொல்லு விக்ரம். நானே அவன்கிட்ட போறேன்" என்று அவள் விடாமல் அடம் பிடித்தாள்.


ஓவியாவின் தவிப்பைப் பார்க்க முடியாமல் அவளை ரிஷியை நோக்கி அழைத்துச் சென்றான் விக்ராந்த்.


அவனது பார்வை வட்டத்தில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அன்னையைக் கண்டு விட்ட ரிஷியின் உள்ளம் கொதிநிலையை அடைய, அவனது முகம் மேலும் இறுகி போனது.


மகனின் மனநிலையை அறியாமல் அவனை நெருங்கி விட்ட ஓவியா, நடுங்கும் தன் கரத்தை அவனை நோக்கி நீட்டினாள்.


அதில் பொறுமை இழந்த ரிஷிவர்மன், தன்னைத் தொட வந்த அன்னையின் கை தன்னைத் தொட்டு விடும் முன், "ஏய்..!!" என்று கர்ஜித்தபடி வேகமாக எழுந்து நின்று, தாய் என்றும் பாராமல் அவளை உறுத்து விழித்தான்.


அவனின் அந்தக் கர்ஜனையில் ஓவியா மட்டும் அல்ல மண்டபமே சற்று அதிர்ந்து தான் போனது.


விக்ராந்தோ, தன் அத்தையைப் பாதுகாப்பாய் மறுபக்கம் இழுத்து அணைத்துக் கொண்டு, "ரிஷி! யார்கிட்ட பேசுறோம்னு பார்த்துப் பேசணும், மரியாதை ரொம்ப முக்கியம்..!!" என்று அவனை நோக்கி விரல் நீட்டி எச்சரித்தபடி அவனுக்கும் மேல் கர்ஜித்தான். ராதாவோ எழுந்து மகளின் அருகே வந்து நின்று தன் பங்கிற்குத் தானும் பேரனை முறைத்தார். மேடையில் நின்றிருந்த கார்த்திக் வேகமாகக் கீழிறங்கி வர..


வெளியே போனில் பேசிக் கொண்டிருந்த ரவிவர்மனோ, மண்டபத்தின் உள்ளே இருந்து வந்த சத்தம் கேட்டு ஓடி வந்தவன், உடனே நிலமையைப் புரிந்து கொண்டு இரண்டே எட்டில் மனைவியை அடைந்து அவளை அனைத்துக் கொள்ள, அவளோ அப்பொழுதும் கண்ணீருடன், "என்னங்க.. என் புள்ள.." என்று தான் கணவனிடம் கேட்டாள்.


மகனை அழுத்தமாகப் பார்த்த ரவிவர்மன், "அவன் உன் புள்ள தான் ஓவிமா!! எங்கேயும் போய்ட மாட்டான், நீ வா!" என்று சமாதானம் செய்து மனைவியை மேடையை நோக்கி அழைத்துச் சென்றான். மனமே இல்லாமல் கணவனுடன் ஓவியா நடந்து சென்றாள்.


செல்லும் தன் தாய் தந்தையரின் முதுகை வெறித்துப் பார்த்த ரிஷியின் கோபம் கட்டுக்குள் வர மறுத்தது. இத்தனை வருடங்கள் கழித்து அவன் இங்கு வந்ததே தனது நிச்சயத்தை நிறுத்துவதற்காகத்தான்..!! ஆனால் இப்பொழுதோ, அது தானாகவே நின்று விடும் என்று புரிந்ததில், அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல், மேடையில் ஓவியாவை அரணாய் காத்து நின்றிருந்தவர்களை இதழ் சுழித்து இகழ்ச்சி புன்னகையுடன் பார்த்தவன், அடுத்த நொடி வாசலை நோக்கித் திரும்பி நடந்தான்.


மோகனாவோ ரிஷி செல்வதைக் கண்டு, அப்பொழுதும் அவனை எப்படித் தடுப்பது என்று புரியாமல் நின்றவளுக்கு மனதில் மின்னல் வெட்ட, தன் அருகில் நின்றிருந்த மகளைப் பார்த்து அவளது காதில் ஏதோ கிசுகிசுத்தாள். அன்னை சொல்வதை நொடியில் புரிந்து கொண்ட நேகா, வேகமாக மேடையில் இருந்து இறங்கி ஓடிச் சென்று ரிஷியின் கையைப் பிடித்து நிறுத்தி இருந்தாள்.


ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்தவன் தன் கையை அவள் பிடித்து நிறுத்தவும், அவளது கையையும் அவளையும் அனல் தெறிக்கப் பார்த்தான். அதையெல்லாம் கண்டு அசருபவளா நேகா..?? மோகனாவின் மகளாச்சே..!!


"என்ன அத்தான்..? உடனே கிளம்பிட்டிங்க..? மேகா கல்யாணம் முடிஞ்சதும் அடுத்து நம்ம நிச்சயதார்த்தம் இருக்கு. மாமா சொல்லி இருக்காங்க தானே..? மறந்துட்டிங்களா..?" என்று கேட்டு அவனைப் பார்த்து அவள் அழகாகச் சிரித்தாள்.


அவளது பேச்சில், இவள் தான் கார்த்திக்கின் மகள் என்று புரிந்து கொண்டவனுக்கு அவளின் அந்தச் சிரிப்பில் மேலும் கோபம் அதிகரிக்க, "இந்த நிச்சயதார்த்தம் நடக்காது! கையை விட்டுட்டு தள்ளி நில்லு!!" என்று உறுமலுடன் கூறியவன், அவளது கையை உதற முயன்றான்.


அவளோ அவனை விட்டு விடாமல் மேலும் இறுக்கிக் கொண்டு, "ம்பச்! நீங்க சொன்னா ஆச்சா..? என் கூட வாங்க மொதல்ல" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.


அவனோ சிறிதும் அசையாமல் அவளை முறைத்துப் பார்த்தபடி நிற்க, "அத்தான்! சொன்னா கேளுங்க" என்றாள் நேகா.


அதே நேரம் அவர்களையே பார்த்திருந்த அஜித்தின் மனம் உலையாய் கொதித்தது. அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் தன்னைப் பிடித்துத் தடுத்த தன் தங்கையின் கையை உதறியவன், எழுந்து நேகாவை முறைத்துப் பார்த்தபடி அவளைக் கடந்து சென்றான்.


அதைக் கவனித்த நேகா, "என்னாச்சு..? எதுக்கு இப்பவே கிளம்புறாங்க..?" என்று அவள் அவனைத் தடுக்கும் முன், "கெட்டி மேளம்!! கெட்டி மேளம்!!" என்ற ஐயரின் சத்தம் அவளது கவனத்தைத் திசை திருப்பியது. அஜித்தை மறந்து தன் கையில் இருந்த அட்சதையை ரிஷியின் கையோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு மணமக்கள் மீது தூவினாள்.


இதைக் கண்ட மோகனாவின் மனமோ நிறைந்து விட்டது!! யாராலும் கட்டுப்படுத்த முடியாத காற்றாற்று வெள்ளம் போன்றவனைத் தன் மகள் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டு, நிச்சயம் ரிஷி மாறி விடுவான் என எண்ணிக் கொண்டாள்.


நடந்த இந்தக் கல்யாண களேபரத்தில் ஸ்னேகாவை எல்லோரும் மறந்து விட்டது தான் விந்தையிலும் விந்தை..!!


****

No comments:

Post a Comment