ஸ்வரம் 9

 



ஸ்வரம் 9..



மண்டபத்தில் இருந்து கோபமாக வெளியேறிய அஜித் தனது காரை கிளப்பிச் சென்றிருந்தான். அவன் கையில் வாகனம் கட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருக்க, அவன் மனமோ நிலையிலாமல் தவித்துக் கொண்டிருந்தது.


பிஸ்னெஸ் உலகில் பல வெற்றிகளை ஈட்டியவனுக்கு வாழ்க்கையில் தோற்று விடுவோமோ? தன்னவள் தன்னை விட்டுச் சென்று விடுவாளோ? என்று முதன்முறை பயம் பிடிக்க, "நோ.." என்று கத்தியபடி சட்டென வாகனத்தைச் சாலையோரம் நிறுத்தி விட்டு, ஸ்டியரிங்கில் இரு கைகளையும் வைத்து, அதில் தலை சாய்த்துக் கண் மூடிக் கொண்டான்.


அவன் நினைவில் முதன் முதலாக நேகாவைச் சந்தித்த அந்தப் பொன்னான நாள் வந்தது.


தன் தங்கையைக் கல்லூரியில் விடுவதற்காக அவளை அழைத்து வந்திருந்தான் அஜித்குமார்.


தனுஷா கல்லூரியில் முதன் முதலில் அடி எடுத்து வைப்பதால் ராகிங் ஏதும் இருக்குமோ என்ற பயத்தில், தன் அண்ணனைத் துணைக்கு அழைக்க, அவனும் வந்து விட்டான்.


கல்லூரி வாசலில் அவளை இறக்கி விட்டவன், "தனு! பயப்படாம உள்ள போ. அடுத்த வருஷம் நீயும் சீனியர் தான். சோ எஞ்சாய் திஸ் ராகிங் அண்ட் எப்படி ராகிங் பண்றதுன்னு கத்துக்கோ!" என்று அவன் புன்னகையுடன் கூறவும்..


"என் பயம் உங்களுக்கு விளையாட்டா இருக்கா..? போங்கண்ணா..!!" என்று சின்னப் பிள்ளை போல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள் தனுஷா.


தங்கை உள்ளே செல்லவும், சிரித்தபடி தனது வாகனத்தில் ஏற போன அஜித்தின் கண்ணில் விழுந்தாள், அங்கு வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய நேகா..


மேகா - நேகா இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்பதால் ஆரம்பப் பள்ளி தொடக்கம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் தான் படித்து வந்தனர். ஆனால் மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, மேகா தனக்குப் பிடித்த ஃபேஷன் டிசைனிங்கைப் படிக்க ஆசைப்பட, நேகாவோ இன்ஜினியரிங்கை தேர்ந்தெடுத்ததால் வெவ்வேறு கல்லூரியில் சேர்த்து விட்டான் கார்த்திக்.


கல்லூரி வாசலில் தன்னை இறக்கி விட்ட தந்தையிடம், "பாய் டாடி.." என்றுவிட்டு கல்லூரியை நோக்கி அவள் திரும்ப,


கார்த்திக்கோ, "கவனம் நேகா! ராகிங் ஓவரா போச்சுன்னா எனக்குக் கால் பண்ணுடா" அக்கறையாக அவன் கூற, அவளோ,


"என்னைப் பத்தி தெரிஞ்சும் இப்படிச் சொல்றிங்களே டாடி..? என்கிட்ட தான் இங்க இருக்குற சீனியர்ஸ் எல்லோரும் கவனமா இருக்கணும்" என்று அவள் கண் சிமிட்டிக் கூறவும்,


"அதைத்தான்டா நானும் சொன்னேன், சீனியர்ஸ்க்குச் சேதாரம் ஜாஸ்தியா இருந்தா எனக்குக் கால் பண்ணுன்னு.." என்று மகளின் காலை வாரினான்.


"டாடி..!!" என்று இடுப்பில் கை வைத்து அவள் தந்தையை முறைத்தாள்.


"ஹா ஹா.." எனச் சிரித்து விட்டு, "ஆல் தி பெஸ்ட் குட்டிமா!" என்று மகளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு காரை கிளப்பிச் சென்று விட்டான் கார்த்திக்.


நேகாவின் குறும்பு பேச்சில் கவரப்பட்ட அஜித் அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். துறுதுறு கண்களுடன் சிரித்த முகமாகப் புசுபுசுவென்று இருந்தவளை ஏனோ அவனுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது.


தன்னை ஒருவன் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல் கல்லூரிக்குள் சென்று விட்டாள் நேகா.


அன்று மாலை தங்கையை அழைத்துச் செல்ல சீக்கிரமே வந்து விட்டான் அஜித்.


தனுஷாவுடன் நேகா மற்றும் இன்னொரு பெண்ணும் கைக் கோர்த்தபடி வெளியே வருவதைக் காரில் அமர்ந்தபடி கவனித்த அஜித்தின் புருவம் உயர்ந்தது.


தங்களது காரின் அருகே வந்து விட்ட தனுஷா, "அண்ணா! இவங்க ரெண்டு பேரும் என் பிரெண்ட்ஸ் இவ பேரு அமலா, இவ பேரு நேகா..” என்று தோழிகளை அறிமுகப்படுத்தியவள்,


“இன்னைக்கு ராகிங்ல என்ன நடந்தது தெரியுமா? சீனியர்ஸ் என்னைப் பாட சொன்னாங்க. எனக்குத்தான் பாட தெரியுமே..? சோ உடனே பாடிட்டேன். ஆனா அடுத்து மரத்தில ஏறி தலைகீழா தொங்கச் சொன்னாங்க.


என்ன பண்றதுன்னு பயத்தில உங்களுக்குப் போன் பண்ணவா வேணாமானு நான் நின்னுட்டு இருந்தப்போ தான், நேகாவும் அமலாவும் அங்க வந்தாங்க. அப்ப சீனியர்ஸ் இவங்களையும் தொங்கச் சொல்ல, அமலாவும் என்ன மாதிரி பயந்துட்டா. ஆனா நேகா என்ன பண்ணா தெரியுமா..? சீனியர்! சீனியர்! எனக்கு அதெல்லாம் தெரியாது, நீங்க ஒரு தடவை செஞ்சி காமிங்கன்னு சொன்னா. அந்தக் கேணை சீனியரும் உடனே மரத்தில ஏறி இப்படின்னு தலைகீழா தொங்கிக் காட்டினாங்களா..? எல்லோருக்கும் சிரிப்பு வந்துருச்சு.


அப்புறம் தான் இவ அவனை ராகிங் பண்ணிட்டு இருக்கான்னு புரிஞ்சிருக்கும் போல!! ஹா ஹான்னு கையெடுத்து கும்பிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. நேகா அமலாவையும், என்னையும் சேர்த்து இழுத்துட்டுப் போய்ட்டா. உடனே நாங்களும் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்" என்று நடந்த அனைத்தையும் சிரித்தபடி அஜித்திடம் கூறியவள்,


"நேகா! அமலா! இவர் எங்க அண்ணா, பெரிய பிஸ்னெஸ் மேன்" என்று தோழிகளிடம் தன் அண்ணனை அறிமுகம் செய்து வைத்தாள்.


உடனே அமலா "ஹாய் அண்ணா…" என்று கூற, நேகாவும் மரியாதை நிமித்தம், "ஹாய் அ.." என்று கூற ஆரம்பிக்கும் முன்,


"தனு! யாரு என்னனு தெரியாம முதல் நாளே பிரெண்ட் ஆகிருவியா..? உனக்கு அறிவில்ல..? கார்ல ஏறு!" என்று தங்கையைக் கடுமையாக அதட்டியவன், நேகாவை முறைத்துப் பார்த்தான்.


அவனது அந்தப் பேச்சில் விக்கித்து நின்று விட்டாள் நேகா. இப்படி யாரும் அவளை இதுவரை உதாசீனம் செய்தது இல்லை என்பதால் அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அவள் அப்படி நின்றது ஒரு நொடி தான்! அடுத்த நொடி,


"ஆமாடி, நான் யாருன்னு தெரியாம நீ ஒன்னும் என்கிட்ட பேச வேண்டாம். என்னைப் பத்தி நாளைக்கு விலாவாரியா உனக்குக் கிளாஸ் எடுக்கிறேன். அதுக்கு அப்புறம் நாம பிரெண்ட்ஸ் ஆகிக்கலாம்" என்றவள்,


அஜித்தைப் பார்த்து, "ஹலோ சார்! எங்களுக்கும் ஒரு அண்ணா இருக்கான்.‌ அவனும் படிச்சு முடிச்சுட்டான். உங்களை மாதிரியே சீக்கிரமே பிஸ்னெஸ்மேனும் ஆகிருவான். அவனை ஒருநாள் தனுகிட்ட இன்ட்ரோ கொடுப்பேன். அவன் ஒன்னும் உங்களை மாதிரி இவளை இன்சல்ட் பண்ண மாட்டான்" என்று மூக்கு விடைக்கக் கூறியவள், அஜித்தை நன்றாக முறைத்து விட்டு, அங்கே தன்னை அழைக்க வந்த தந்தையின் காரில் ஏறி சென்று விட்டாள்.


அமலாவும், "வரேன் தனு" என்றவள் நகர்ந்து விட, நேகா கோபத்துடன் செல்வதைப் பார்த்த தனுஷா, "ஏன்ணா இப்படிப் பேசுனே..? பாரு..!! அவ எப்படிப் பீல் பண்றான்னு..?? என்கிட்ட சிரிக்க சிரிக்கப் பேசினா தெரியுமா..? கிளாஸ்ல ஒரு இடத்துல இருக்காம துறுதுறுன்னு அங்கே இங்க ஓடிட்டே இருந்தா. எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்குண்ணா" எனச் சோகமாகக் கூறவும்,


அஜித்தோ, 'நான் அப்படிப் பேசலன்னா என்னை அண்ணானு சொல்லி இருப்பாளே..?' என்று நினைத்துச் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.


அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் பிஸ்னெஸ் உலகில் பல பெண்களைக் கடந்து வந்திருக்கிறான். ஏன்..? அவன் அலுவலகத்தில் வேலை செய்யாத அழகிகளா என்ன? ஆனால் யாரிடமும் செல்லாத அவனது மனதை கவர்ந்திழுத்து இருந்தாள் ஒரு சிறு பெண். ஆம்! முதல் நாளே, அதுவும் முதல் பார்வையிலேயே, அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் நேகா. எது அவளை நோக்கி அவனை இழுத்தது என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனாலும் அவளை அவனுக்குப் பிடித்து இருந்தது.


அதனால் தான் தனுஷாவை கல்லூரியில் விட்டு விட்டு அலுவலகத்திற்குச் சென்றவனுக்கு ஏனோ வேலையே ஓடவில்லை. ஒருவாறு நேரத்தைக் கடத்தியவன், மாலையில் தங்கையை அழைத்துச் செல்லும் சாக்கில் நேகாவைப் பார்த்து விட விரைவாகவே வந்து காத்திருந்தான்.


கல்லூரியின் நேரம் முடியவும் நேகாவும் அவனை நோக்கி தனுஷாவுடன் வந்தாள். ஆனால் தனுஷா அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைக்கும் போது, அவள் தன்னை ‘அண்ணா’ என்று அழைத்தது அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அவளை போல் நேகாவும் எங்கே தன்னை ‘அண்ணா’ என்று அழைத்து விடுவாளோ? என்று அஞ்சியவன், அவள் மனம் புண்படும்படி பேசி விட்டான். இனி சாதாரணமாகக் கூட அவனிடம் அவள் பேச மாட்டாள் அல்லவா..? இப்போதைக்கு அதுவே போதுமானதாக இருந்தது.


அதற்கு முதற் காரணம்.. இப்பொழுது தான் அவள் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் பூஞ்சிட்டு. அவளது மனதை கலைக்க அவன் விரும்பவில்லை. படித்து முடிக்கக் காத்திருந்தான்.


இரண்டு நாட்களுக்கு முன் யாராவது, 'நீ இப்படி ஒரு பெண்ணிடம் உன் மனதை பறிகொடுப்பாய்' என்று கூறி இருந்தால், அவர்களை ஓட ஓட விரட்டி அடித்து இருப்பான். ஆனால் இன்றோ.. அவன் மனம் நேகாவை மட்டுமே நினைக்க ஆரம்பித்து இருந்தது.


அதன் பிறகு வந்த நாட்களில் அஜித்தை அவள் பார்க்க நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவனோ தனக்குள் சிரித்துக் கொள்வான்.


இடைப்பட்ட நாட்களில் தன் தங்கை அறியாமல், அவள் வாய் மொழியாக, நேகாவின் மனதில் இதுவரை வேறு யார் மீதும் அவளுக்கு ஈர்ப்பு ஏதும் வரவில்லை என்று அறிந்து, நிம்மதியாகத் தன் காதலை தனக்குள் வைத்துப் பாதுகாக்க ஆரம்பித்தான்.


இப்படியே மூன்று வருடங்கள் அஜித் நேகாவை அவள் அறியாமல் பார்ப்பதும், நேகா அவனைப் பார்த்து விட்டாள் என்றால் அவளை முறைப்பதுமாக இருந்தான்.


நேகா - மேகா இருவரும் தங்களது படிப்பை முடித்ததும் இருவரின் திருமணப் பேச்சை எடுத்தாள் மோகனா. அதற்கு மேகா சம்மதித்து விட, நேகாவோ இரண்டு வருடங்கள் சுதந்திரப் பறவையாக இருக்கப் போவதாகவும், மேலும் தான் சிறிது காலம் வேலைக்கும் போகப் போவதாகவும் கூற, மகளின் மனதுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவள் விருப்பப்படி விட்டு விட்டனர்.


வீட்டில் சம்மதம் கிடைத்ததும் வெளியே வேலை தேட ஆரம்பித்தாள் நேகா. அதைத் தெரிந்து கொண்ட தனுஷா, தங்களது அலுவலகத்தில் வேலைக்கு அழைத்தாள்.


அவளோ, 'எது.. அந்தச் சிடுமூஞ்சி கிட்டயா..?' என்று சற்றுத் தயங்கினாலும், தான் வேலை செய்யும் இடத்தில் தன் தோழியும் இருப்பாள் என்பதால் அஜித்தின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தாள்.


நேகாவிற்காகத் தங்கை தன்னிடம் வேலை கேட்டதும், நேர்முகத் தேர்வு கூட இல்லாமல் உடனே அவளைச் சேர்த்துக் கொண்டான் அஜித்.


தனுஷாவைப் பொறுத்தவரை தனக்காகத் தன் தோழிக்கு அண்ணன் வேலை கொடுத்துள்ளான். ஆனால் உண்மை என்னவென்று அஜித் மட்டுமே அறிவான்!


வேலைக்குச் சேர்ந்த புதிதில் தன் விளையாட்டுத்தனத்தால் வேலையில் நிறையத் தவறு செய்ய ஆரம்பித்தாள் நேகா.


அஜித்தோ, இதுதான் சாக்கென்று அவளைக் கூப்பிட்டு வைத்து வேண்டும் என்றே திட்டி அனுப்பி வைப்பான்.


அதே நேரம் அவள் இப்படி அடிக்கடி தவறு செய்ய வேண்டும் என்பது தான் அவனது ஆசையாக இருந்தது. அப்பொழுது தானே திட்டும் சாக்கில் தன்னவளை அருகில் அழைத்து அணுஅணுவாய் ரசிக்க முடியும்..?


ஆனால் அவன் செய்த ஒரே தவறு.. பார்வையினால் கூடத் தன் காதலை நேகாவிடம் வெளிப்படுத்தாதது தான். சொல்லாத காதல் என்றுமே செல்லாது என்று படித்த அந்த மேதாவிக்குத் தெரியாமல் போனது.


இப்படி யாருக்கும் தெரியாமல் பொத்தி பொத்தி வைத்த அஜித்தின் காதலை தனுஷா தான் முதலில் கண்டுகொண்டாள்.


ஒருநாள் அவன் குளிக்கச் சென்ற சமயம் தன் அண்ணனிடம் ஏதோ கேட்க அவனது அறைக்கு வந்தவள், அவன் குளித்துக் கொண்டிருப்பது தெரிந்து பிறகு வந்து கேட்கலாம் என்று திரும்பிய நேரம், கட்டிலில் கிடந்த அஜித்தின் மொபைல் ஒலி எழுப்பியது. பேசுவோமா வேண்டாமா என்று யோசித்தவள், பின்பு அதை எடுத்துப் பேசி விட்டு வைக்கும் போது, தொடுதிரையில் இருந்த நேகாவின் புகைப்படத்தைக் கண்டு அவளது கண்கள் பெரிதாக விரிந்தது.


குளித்து விட்டு வந்தவனிடம், "என்னண்ணா இது..? எத்தனை நாளா நடக்குது..?" என்று மொபைலை அவனிடம் காட்டித் தன் இரு புருவம் தூக்கி அவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,


"இப்ப எதுக்கு என் போனை எடுத்தே..?" என்று தங்கையை முறைத்தான் அஜித்.


"பேச்சை மாத்தாதே அண்ணா.. ஒழுங்கா பதில் சொல்லு!" என்று அவளும் பொய்யாக முறைத்தபடி அவனிடம் கேட்டாள்.


அஜித்தும் அதற்கு மேல் மறைக்க விரும்பாமல் தங்கையிடம் தன் மனதை திறந்தான். அதைக் கேட்ட தனுஷாவின் மனமோ குதூகலம் கொண்டது. அதற்கு முதற்காரணம், தன் தோழியே தனக்கு அண்ணியாக வரப் போவது, இன்னொன்று தோழியின் அண்ணன் விக்ராந்த்!


ஆம்! அவள் மனம் விக்ராந்தைப் பார்த்ததில் இருந்து அவனைத் தன்னவனாக ஏற்றுக் கொண்டதாலும், மேலும் சில காரணங்களாலும், தன்னால் முடிந்த உதவிகளைத் தன் அண்ணனின் காதலுக்கு இன்றளவும் செய்து வருகிறாள், இனியும் செய்வாள்.


ஸ்டியரிங்கில் தலை வைத்துப் படுத்திருந்த அஜித்தின் மனமோ, 'தான் பொத்தி பொத்தி பாதுகாத்த தனது பொக்கிஷம் கை நழுவி விடுமோ..?' என்று பதற்றம் கொண்டது.


"நேகா தனக்குக் கிடைக்க, அவளைத் தன்னிடம் வரவைக்க, தான் என்ன செய்ய வேண்டும்..?" என்று யோசிக்க ஆரம்பித்தான்.


அமைதியில்லா அவனது மனதால் எதுவும் யோசிக்க முடியவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ..??! அவனது மொபைல் ஒலி எழுப்பி அவனை நடப்புக்கு அழைத்து வந்தது.


எடுத்துப் பார்த்தவன் அழைப்பது தங்கை என்றதும் அட்டென்ட் செய்து, "சொல்லு தனு!" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.


அண்ணனின் குரலில் இருந்த வலியை தனுஷா உணர்ந்து கொண்டாலும், தாயை அருகில் வைத்துக் கொண்டு ஏதும் பேச முடியாததால், "அண்ணா எங்க இருக்கே..? நாங்க மண்டப வாசல்ல நிக்கிறோம்" என்று அவள் கூறவும்,


"ம்ம்ம்.. நான் வேற கார் அனுப்புறேன். வீட்டுக்கு வந்துருங்க" என்றவன் மொபைலை அணைத்து இருந்தான். தான் இருக்கும் மனநிலையில் மீண்டும் அங்குப் போக முடியாது என்பதால் தான் அப்படிச் சொன்னான். பின்பு தனது வீட்டு ஓட்டுநருக்கு அழைத்து விபரம் சொல்லியவன் தானும் காரை கிளப்பிச் சென்று விட்டான்.


வீட்டுக்கு வந்தவன் அவனது அறைக்குள் முடங்கி விட, அவனது அன்னையோ, "தனு! உங்க அண்ணன் என்ன பண்றான்னு போய்ப் பாரு! கல்யாண வீட்லயும் சாப்பிடாம கிளம்பிட்டான். அவன் வீட்டுக்கு வந்து இவ்ளோ நேரம் ஆகுது, இன்னும் வெளியேவும் வரல" ஒரு தாயாக மகனின் பசியை நினைத்துக் கூறினார்.


தனுஷாவோ, 'அவன் எதுக்கு இப்படி இருக்கான்னு எனக்குத்தான் தெரியும்!!' என்று மனதில் நினைத்தபடி தன் அண்ணனிடம் பேச அவனது அறைக்குச் சென்றாள்.


அண்ணனின் அறை வாசலில் நின்று அவனை அழைக்க, உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றதும், கதவின் கைப்பிடியைத் திருக, அதுவோ திறந்து கொண்டது.


உள்ளே சென்றவள், அங்கே பால்கனியில் நின்று எங்கோ பார்த்துக் கொண்டிருந்த தன் அண்ணனை நோக்கிச் சென்றாள்.


"அண்ணா!" என்று அவள் அழைக்க,


"ம்ம்ம்.." என்றவன், வேறு ஏதும் பேசாமல் இறுக்கமாக நின்றிருந்தான்.


அதைக் கண்டு, "ம்ப்ச்.. இப்ப என்னாச்சுனு இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கே..?" என்று சற்றுக் கோபமான குரலில் கேட்டாள் தனுஷா.


அவனோ, "இன்னைக்கு அவளுக்கு எங்கேஜ்மெண்ட் இருக்குனு உனக்குத் தெரியுமா..?" என்று அமைதியாக அதே நேரம் அழுத்தமாகத் தங்கையிடம் கேட்டான்.


அவனது கேள்வியில் ஒரு நொடி அமைதி காத்த தனுஷா, "தெரியும்ண்ணா.. நேகா தான் சொன்னா. அப்பவே உன்கிட்ட சொல்ல நினைச்சேன். ஆனா நீ கோபத்துல ஏதாவது செய்யப் போய், உன்னால மேகா கல்யாணத்துல பிரச்சினை ஏதும் ஆச்சுன்னா? சும்மாவே உன்னைத் திட்டிட்டு இருப்பா. அதுக்கு அப்புறம் நேகா உன்னைத் திரும்பியும் பார்க்க மாட்டா. அந்தப் பயத்திலதான் உன்கிட்ட சொல்லலை" என்றவள்,


"ஆனா அண்ணா, இன்னைக்கு அவளுக்கு நிச்சயம் நடக்கல தெரியுமா..? அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை மேகா கல்யாணம் முடிச்ச அடுத்த செகன்ட் மண்டபத்தில இருந்து வெளியே போய்ட்டான்" என்று கூறியவளின் குரலில் உற்சாகம் நிரம்பி வழிந்தது.


தங்கை கூறியது கேட்டும் அஜித் முகத்தில் எந்த ஒரு உணர்வுகளையும் காட்டாமல் அமைதியாக நின்றான். எப்படியாவது தன் அண்ணனின் சந்தோஷத்தை மீட்டெடுக்க நினைத்த தனுஷா, "அண்ணா! எனக்கு ஒரு ஐடியா! நாம வேணா அவளைக் கடத்திடுவோமா..? அப்படியே கடத்திக் கொண்டு போய் ஏதாவது கோவில்ல வச்சி தாலி கட்டி நம்ம வீட்டுக்கே நேரா கூட்டிட்டு வந்துடலாம், எப்படி என் ஐடியா..??" என்று ஆர்வமாகக் கூறினாள்.


தங்கையின் பேச்சில் சடாரெனத் திரும்பி அவளைப் பார்த்த அஜித்தின் இதழில் புன்னகை அரும்பியது. அவளது தலையில் வலிக்காமல் கொட்டியவன், "அவ உன் பிரெண்ட்! ஞாபகம் வச்சிக்கோ!" என்று கூற..


அவளோ, "ம்ஹூம்! அதுக்கு முன்னாடி நீ என் அண்ணா. உனக்காக, உன் சந்தோசத்துக்காக நான் என்ன வேணா பண்ணுவேன். உன்னை விட எனக்கு வேற யாரும் முக்கியம் இல்ல. உனக்கு அப்புறம் தான் மத்தவங்க.." என்ற தனுஷாவின் குரலில் அவ்வளவு தீவிரம்..!! ஆனால் இந்த வார்த்தையால் பின்னாளில் விலைமதிக்க முடியாத தன் நட்பையே இழக்கப் போகிறோம் என்பதை அவள் அப்பொழுது அறியவில்லை.


தங்கையைத் தோளோடு அணைத்துக் கொண்ட அஜித், "அப்படில்லாம் பண்ண வேண்டாம். அவளை நான் ஊரறிய தான் கைப் பிடிப்பேன். அவ தான் என் மனைவி. நான் சொல்றது கண்டிப்பா நடக்கும்" என்று அவன் உறுதியுடன் கூறவும்,


"எப்படிண்ணா..? அவங்க வீட்ல எல்லோரும், முக்கியமா மோஹி ஆன்ட்டி, அவளுக்கு ஓவிமா பையனைக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல உறுதியா இருக்காங்க. இன்னைக்கு நிச்சயம் நடக்கலன்னாலும், எப்படியாவது பேசி அடுத்து ஸ்ட்ரெயிட்டா கல்யாணத்தை வச்சிட்டா என்ன பண்றது..?" தன் அண்ணனின் வாழ்க்கையைக் குறித்து அவளுக்கு மிகுந்த கவலை உண்டானது.


"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்டா, நீ போ!" என்று தங்கையைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்த அஜித்குமார், மீண்டும் தொலை தூரத்தை வெறிக்க ஆரம்பித்தான்.


ஆம்! தனு கூறியது போல் மேகாவின் திருமணம் முடிந்த நொடி, தன்னைப் பிடித்திருந்த நேகாவின் கையை உதறி விட்டு அங்கிருந்து சென்றிருந்தான் ரிஷிவர்மன்.


அதன்பிறகு சுற்றமும் நட்பும் கிளம்பி இருக்க, மண்டபத்தில் மூன்று குடும்பங்கள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள். மேலும் சில சம்பிரதாயங்கள் இருந்ததால் அதை இரு குடும்பங்களும் செய்து கொண்டிருந்தனர்.


ஓவியா தன் கணவனின் நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டு தன் மகனைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.


ரவிவர்மனோ, மனைவியை ஆதரவாக அணைத்து இருந்தாலும், அவன் மனமோ எதையோ யோசித்துக் கொண்டிருந்தது.


விக்ராந்திற்குத்தான் இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி!! ஒன்று மேகாவின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. இன்னொன்று நேகா - ரிஷி நிச்சயம் நடக்காமல் போனது. இனிமேலும் ரிஷி சம்மதிப்பான் என்று அவனுக்கு நம்பிக்கை இல்லை. அதுவே அவனுக்குப் போதுமானதாக இருக்க, நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.


ராதாவோ, "கடங்காரன்!! என் பொண்ணைப் பார்த்து ஏய்ன்னு கத்துறான், உருப்படாதவன்..!!" என்று மனதில் பேரனை அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.


இப்படியே எல்லோரும் அவரவர் மனநிலையில் ரிஷியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, அப்பொழுது திடீரென, "ஸ்னேகா எங்கே..?" என்று தங்கையைக் கேட்டாள் மேகா.


அதன் பிறகு தான் அவளின் நினைவே எல்லோருக்கும் வந்தது போலும்! சட்டென்று கணவனிடம் இருந்து விலகிய ஓவியா, தன் கவலை மறந்து, "ஆமா, ஸ்னேகா எங்க..? அவ சத்தத்தையே காணோம்" என்று சிறு பதற்றத்துடன் கேட்டாள்.


எல்லோரும் சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தார்கள். விக்ராந்த் வெளியே தோட்டத்தை நோக்கிச் செல்ல, "நான் ரூம்க்குப் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று படியில் பாய்ந்து ஏறினாள் ரம்யா.


மண்டபத்தின் முதல் மாடியில் அவர்கள் இருவருக்கும் ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த ரம்யா அறை கதவை தட்டி, "ஸ்னேகா! உள்ளயா இருக்கே..?" என்று குரல் கொடுக்க, உள்ளிருந்து எந்தப் பதிலும் இல்லை என்றதும்,


"கைக் கழுவிட்டு வரேன்னு சொன்னா.. நடந்த களேபரத்துல நானும் இவளை மறந்துட்டேன். எங்க போயிருப்பா..?" என்று தனக்குத்தானே கேட்டபடி கதவை திறந்து உள்ளே சென்றவள், அறையில் அவள் இல்லை என்றதும் பால்கனி பக்கம் ஏதோ நிழலாட, அதை நோக்கிச் சென்றாள் ரம்யா.


அங்கே சுவரில் சாய்ந்து கண்களை மூடியபடி நின்றிருந்தவளைக் கண்டதும் அவளுக்கு நிம்மதியாக இருந்தாலும், அவள் மேல் கோபம் பொத்துக் கொண்டு வர, "அடியேய்..!!" என அவளைப் பிடித்து உலுக்கினாள்.


அதில் பட்டெனக் கண் திறந்து எழுந்து பார்த்த ஸ்னேகா, "ரம்யா! மேகாக்கா கல்யாணம் முடிஞ்சிதா..? நேகாக்கா நிச்சயதார்த்தம் என்னாச்சு..?" என்று சாதாரணமாகக் கேட்டவளை முறைத்துப் பார்த்தவள்..


"அதெல்லாம் இருக்கட்டும். கைக் கழுவிட்டு வரேன்னு தானே சொல்லிட்டு வந்தே..? வந்த வேலையை முடிச்சுட்டு கீழே வர வேண்டியது தானே..? எதுக்குடி இங்க இப்படி நின்னுட்டே தூங்கிட்டு இருக்கே..?" என்று பல்லைக் கடித்தபடி கோபத்தில் பொரிய,


"அ...அது.. என்னனு தெரியல, திடீர்னு எனக்குத் தலை சுத்துற மாதிரி இருந்தது. கொஞ்ச நேரம் படுக்கலாம்னு படுத்தேன். அப்படியே தூங்கிட்டேன் போல. இப்ப தான் எழுந்து பால்கனிக்கு வந்தேன்" என்றவள், "நீ சொல்லு ரம்யா, எல்லாம் நல்ல மாதிரி முடிஞ்சிதா..?" என்று மீண்டும் கேட்கவும்,


"முடிஞ்சிது! முடிஞ்சிது! ஆனா எங்க அண்ணாக்கும், நேகா அண்ணிக்கும் நிச்சயதார்த்தம் மட்டும் நடக்கல" என்றவள் கீழே நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கும் போது, "ஸ்னேகா.." என்று விக்ராந்த்தின் குரல் கேட்டது.


அதில் இருவரும் அறைக்குள் நுழைய, தங்கையைப் பார்த்ததும் தான் அவனுக்கு உயிரே வந்தது. "என்னமா..? என்னாச்சு..? எதுக்கு இங்க வந்தே..?" என்று கனிவுடன் கேட்க, ரம்யாவிடம் கூறியதையே அண்ணனிடமும் கூறியவள்,


"இப்ப நான் ஓகேண்ணா, வாங்க கீழே போகலாம்" என்று அவள் கூறவும், தங்கையைக் கீழே அழைத்துச் செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள் ரம்யா.



கீழே வந்த ஸ்னேகாவைப் பார்த்த அனைவரும் என்னானது என்று கேள்வி மேல் கேட்க, விக்ராந்த் தான் ஒருவாறு ஏதேதோ சொல்லிச் சமாளித்தான்.


அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க, அனைவரும் கிளம்பி கார்த்திக் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.


மேகா புகுந்த வீட்டிற்குக் கிளம்பும் நேரம் நெருங்க, நேகா தான் அவளை விட்டுப் பிரிய முடியாமல் அழுது தீர்த்து விட்டாள். என்ன தான் தைரியமான பெண்களாக இருந்தாலும்.. கருவில் இருந்து ஒன்றாக விளையாடி, ஒன்றாகப் பிறந்து, ஒன்றாகச் சண்டை போட்டு, ஒன்றாக இருந்தவர்கள் அல்லவா..? இந்தப் பிரிவை இருவராலும் தாங்க முடியவில்லை.


அங்கிருந்தவர்களுக்குத் தான் இருவரையும் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தாலும், அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் தான் பெருகியது.


பின்பு ஒருவாறு இருவரையும் சமாதானம் செய்து, அழுகையை நிறுத்தி, ஸ்னேகாவையும் ரம்யாவையும் மேகாவுடன் அனுப்பி வைத்தாள் மோகனா.


ஓவியாவும் ரவிவர்மனும் தங்களது வீட்டுக்குக் கிளம்பவும் விக்ராந்தின் போன் ஒலிக்க, அதை எடுத்துப் பேசியபடி வெளியே தோட்டத்திற்குச் சென்று விட்டான்.


ராதாவோ என்றும் இல்லாமல் இன்று நிம்மதியாக உறங்கச் சென்றார். ஆனால் அவர் அறியவில்லை!! அவரது பேரன் அவரது இந்த நிம்மதியான உறக்கத்திற்கு ஆப்பு வைக்கப் போகிறான் என்பதை..


****


1 comment:

  1. Sneha silence ah iruka na Rishi ah parthutalo terror ah parthu bayam vara Dane seium, Ajith one side love ke ivlo akkapor ah poda mudalla.love ah solra vazhi ah par

    ReplyDelete