ஸ்வரம் 10

 



ஸ்வரம் 10


ஒரு வாரம் கடந்திருந்தது. தங்களது அறையில் கணவனின் நெஞ்சத்தில் துயில் கொண்டிருந்தாள் ஓவியா. இந்த ஒரு வாரமாக அல்லும் பகலும் மகனை நினைத்துப் புலம்பியபடி அவள் அழுது கொண்டிருக்க,


ரவிவர்மனோ, எப்பொழுதும் போல் மனைவியைச் சமாதானம் செய்தவாறு தன் தூக்கத்தைத் தொலைத்திருந்தான்.


அன்று அதிகாலை நேரம் அவனது மொபைல் ஒலிக்க, டேபிளில் இருந்த மொபைலை எட்டி எடுத்துப் பார்த்தான். அழைப்பது அவன் செல்ல மகள் என்றதும் அவனது இதழில் மென்புன்னகை தோன்ற, மெதுவாக மனைவியைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு எழுந்து பால்கனிக்குச் சென்றவன் அழைப்பை ஏற்று, "குட் மார்னிங் குட்டிமா!!" என்று மகளுக்கு வாழ்த்தியவன், "என்னடா, இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்டே?" என்று கேட்டான்.


"குட் மார்னிங்ப்பா!" என்றவள், "அப்பா! இங்க செம க்ளைமேட்!! சும்மா ஜில்லுன்னு இருக்கு. நிறைய இடம் சுத்திப் பார்த்தோம். எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு. நாமளும் இங்க ஒரு எஸ்டேட் வாங்கிப் பங்களா கட்டணும்ப்பா" என்று ஆசையுடன் அவள் கூறினாள்.


மகளின் ஆசைக்குத் தடை சொல்லுவானா அவன்?? 


"நாளைக்கே வாங்கிடலாம் குட்டிமா" என்று கூறிய ரவிவர்மன், "ஸ்னேகா எங்கடா?" என்று கேட்டான்.


"இதோ, என் பக்கத்துல தான் இருக்கா. நானும் ஸ்னேகாவும் மார்னிங் வாக் போகப் போறோம்" என்றதும்,


"கவனமாடா! தனியா எங்கேயும் போகாதீங்க! அங்கே செங்கா இருப்பான், அவனைக் கூட்டிட்டுப் போங்க. அப்புறம் அன்னைக்கு மாதிரி ஸ்னேகாகிட்ட ஏதும் விளையாடி வைக்காதே ரம்யா!" என்று மகளுக்கு எச்சரிக்கை செய்யவும் அவன் மறக்கவில்லை.


"இல்லப்பா, அப்படிப் பண்ண மாட்டேன்!" என்றவள் "அப்பா! அம்மா ஓகே தானே? அண்ணாவை நினைச்சு அழுதாங்களாப்பா..?" என்று தாயைக் கேட்டாள் ரம்யா.


ஒரு பெருமூச்சை வெளியேற்றிய ரவிவர்மன், "ம்ம்ம்.. இன்னும் டல்லா தான் இருக்கா. சீக்கிரமே சரி ஆகிடுவா" என்றவன், "எப்போ குட்டிமா கிளம்புறீங்க?" என்று கேட்டான்.


"நாளைக்குப்பா.. ஸ்னேகாக்கு பைனல் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகப் போகுதுல, அதான் ஈவினிங் அங்கே வந்துருவோம்" என்று ரம்யா கூறவும்,


"ஓகேடா.." என்று விட்டு மேலும் சிறிது நேரம் மகளிடம் அவன் பேசிக் கொண்டிருக்க, அந்நேரம் வெளியே வீட்டின் அருகே ஒரு வாகனம் வந்து நிற்பது கண்டு திகைத்தான் ரவிவர்மன்.


அவனது திகைப்புக்குக் காரணம் அது ரிஷியின் வாகனம்..!! கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் கழித்து இங்கு வந்துள்ளான் அல்லவா?! மகன் வீட்டின் உள்ளே வருவான் என எதிர்பார்த்த ரவிவர்மன் அந்த வாகனத்தையே பார்த்திருந்தான். அதில் இருந்து அவன் இறங்காதது கண்டு அவனுக்குப் பெருமூச்சு வந்தது. மகன் உள்ளே வரப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டு தானே அவனை நோக்கிச் சென்றான்.


வெளியே சற்றுத் தள்ளி நின்றிருந்த வாகனத்தின் அருகே சென்ற ரவிவர்மன், முன்பக்க கார் கதவை திறந்து உள்ளே அமர்ந்தான்.


தான் வந்து அமர்ந்தும் தன்னைப் பார்க்காமல், தாடை இறுக காரின் ஸ்டியரிங்கை இறுக பிடித்துக் கொண்டு அழுத்தமாக அமர்ந்திருந்த மகனைக் கண்டு கனிவுடன், "ரிஷி!!" என்றபடி அவனது சிகையைத் தன் கைகளால் கோதினான்.


தந்தையின் வருகையை உணர்ந்தாலும் அமைதியாக இருந்தவனுக்கு, அவரது அந்த வருடல் கோபத்தைத் தான் கிளப்பியது. சட்டென்று அவரது கையைத் தட்டி விட்டு அவரைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.


மகனின் முறைப்பில் ரவிவர்மனுக்குச் சிரிப்பு வர, "எப்படி ராஜா இருக்கே?" என்று அன்பொழுக கேட்டான் ரவிவர்மன்.


தந்தையின் விசாரிப்பையும், புன்னகையையும் அசட்டை செய்தவன், "நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன..?" என்று கோபத்துடன் கூறியவன், "ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் இங்க வந்துருக்கேன். பேசிட்டு உடனே கிளம்பிடுவேன்" என்றான், எங்கோ பார்த்துக் கொண்டு..


ரவிவர்மனோ, "ம்ம்.. பேசலாம் ராஜா.. அதுக்கு முன்ன நீ வீட்டுக்குள்ள வா, குளிச்சி சாப்பிட்டு ரெஸ்ட் எடு. பார்க்கவே டயர்டா தெரியற" என்று அக்கறையாகக் கூறினான்.


அவனோ எள்ளலாகத் தன் தந்தையைப் பார்த்தவன், "என்ன திடீர்னு என் மேல பாசம் பொங்குது..? இத்தனை வருசமா இந்த அக்கறை எல்லாம் எங்க போச்சு..?" என்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.


"எங்க பையன் எங்களை விட்டுத் தள்ளி தள்ளிப் போனாலும் அவன் மேல இருக்கிற பாசம் குறைஞ்சிருமா..? இல்ல அக்கறை தான் இல்லாம போகுமா..?" என்று கேட்ட தந்தையைச் சட்டென்று திரும்பிப் பார்த்தவன்,


"பாசம்..!! பொல்லாத பாசம்..!!" என்று வெடுக்கெனக் கூறிய ரிஷிவர்மன், ஸ்டியரிங்கை மேலும் அழுத்திப் பிடித்துக் கொண்டு தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், தான் வந்த விஷயத்தைத் தந்தையிடம் சொல்லி முடிக்க, ரவிவர்மனோ யோசனையாகத் தன் மகனைப் பார்த்தான்.


தந்தையின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட ரிஷிவர்மன், "என்னடா மண்டபத்தில இருந்து கோபத்துல கிளம்பிப் போனவன், இப்ப ஒரு வாரம் கூட ஆகலை, அதுக்குள்ள வந்து ஓகே சொல்றானேனு யோசிக்கிறீங்க ரைட்..??" என்றவன்..


"அப்ப வேணாம்ன்னு தோணுச்சு, நிச்சயத்தை நிறுத்த வந்தேன். இப்ப வேணும்ன்னு தோணுது. சோ டைரக்ட்டா கல்யாணமே பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்" என்றதும்,


முகம் இறுக தன் மகனை அழுத்தமாக பார்த்த ரவிவர்மன், "ரிஷி! இது விளையாட்டு பேச்சு இல்ல. நீ வேணாம்னு சொல்லி விலகிப் போறதுக்கும், நீ வேணும் சொன்னா உடனே சரின்னு சொல்றதுக்கும்.." என்றான்.


"நான் ஏன் டாட் விளையாடப் போறேன்..? அல்ரெடி நீங்க எல்லோரும் சேர்ந்து தான் என் வாழ்க்கையில் விளையாடிட்டிங்களே..?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்.


அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து, "ரிஷி..!!" என்று மகனின் தோளில் கை வைத்தான் ரவிவர்மன்.


"ம்ப்ச்! ஓகே லீவ் இட்.. இது என் வாழ்க்கை! இதுதான் என் முடிவு! நான் சொன்னதைச் செய்ங்க, இல்லன்னா என்னை இப்படியே விட்டுடுங்க. இதுக்கப்புறம் என் விஷயத்தில் யாரும் தலையிட கூடாது!" என்று அழுத்தமாக கூறியவன்,


"டேட் பிக்ஸ் பண்ணிட்டு எனக்குக் கால் பண்ணுங்க. நௌ ஆம் ஜஸ்ட் லீவிங்" என்றுவிட்டு கார் சாவியில் கை வைத்தான்.


மகன் கூறியது கேட்டு ரவியின் மனதில் முதலில் சந்தோஷம் தான் எழுந்தது. எதற்காகவும் யாருக்காகவும் இறங்கி வராதவன் இப்பொழுது அவனாக வந்துள்ளான். இதுவே நல்ல மாற்றம் தானே?? என்று நிம்மதி கொண்டவன்,


"ரிஷி! அதுக்குள்ள கிளம்பணுமா? வந்தது தான் வந்தே, இன்னைக்கு ஒரு நாள் நம்ம வீட்ல தங்கலாமே..? உள்ள வா ராஜா!" என்று மீண்டும் அழைத்த தந்தையை நிதானமாகத் திரும்பிப் பார்த்தவன்..


"நான் இங்கே தங்குறதுனால உங்க மனைவிக்குப் பிரச்சினையாகிடாதா டாட்..? ஏன்னா உங்க மனைவிக்கு ஒன்னுன்னா உங்களால் தான் தாங்கிக்க முடியாதே..? என்னை விட உங்களுக்கு அவங்க தானே முக்கியம்..?!!" என்று அவன் சாதாரணமாகக் கூறினாலும், அந்த வார்த்தையின் பின் பொதிந்திருந்த அர்த்தத்தையும், அவன் மனதின் வலியையும் புரிந்து கொண்ட ரவிவர்மன்,


"ரிஷி..!!" என்று சட்டெனத் தன் மகனை அணைத்துக் கொண்டான்.


அவன் நினைவில் பத்து வயதான தனது மகன் தன் காலை கட்டிக் கொண்டு, 'வேண்டாம் டாடி! வேண்டாம்! நான் உங்களை விட்டு இருக்க மாட்டேன். என்னை விட்டுட்டுப் போகாதீங்க டாடி!!' என்று தன்னிடம் கெஞ்ச கெஞ்ச, கேட்காமல் தான் அவனை ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்த அன்றைய நாள் நினைவுக்கு வர, அதில் மனம் கலங்கி நின்றான் ரவிவர்மன். தன் மகனின் மனதுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவனைத் தனிமையில் வாட விட்டுத் தவறு செய்து விட்டோமோ?? என்ற குற்ற உணர்ச்சி மேலோங்க, அவனது அணைப்பு மேலும் இறுகியது.


ஆனால் ரிஷிவர்மனோ தந்தையின் அணைப்பில் உடல் இறுகி போனான். அவனுக்கும் அதே நினைவு கண்முன் தோன்றியதோ என்னவோ..?!! ஒருமுறை கோபத்தில் கண் மூடித் திறந்தவன், தந்தையின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, "நான் கிளம்பணும்" என்றான்.


ரவிவர்மனோ, மனமே இல்லாமல் காரில் இருந்து இறங்கி நிற்க, அடுத்த நொடி ரிஷியின் வாகனம் அவனது கையில் வேகமெடுத்தது.


செல்லும் தன் மகனை மனம் வலிக்கப் பார்த்திருந்தான் ரவிவர்மன். அவன் மனதிலோ, மகன் திருமணத்திற்குச் சம்மதித்தது சந்தோஷத்தைக் கொடுத்த அதே நேரம் சிறு நெருடலும் உண்டானது. ஏனெனில் பத்து வயதில் இந்த வீட்டை விட்டு ஹாஸ்டலுக்குச் சென்றவன், இத்தனை வருடங்களாக எவ்வளவு அழைத்தும் இங்கு வராதவன், அன்று மண்டபத்தில் கூட அனைவரையும் உதாசீனம் செய்து விட்டுச் சென்றவன், இன்று திருமணம் பற்றிப் பேச வந்திருக்கிறான் என்றால்..?! அவன் மனதில் வேறு ஏதும் திட்டம் இருக்கிறதா? என்று தான் அவனுக்குப் புரியவில்லை.


ஆம்! ரவிவர்மன் மகனைப் பற்றி யூகித்தது சரியே என்பது போல், காரில் சென்று கொண்டிருந்த ரிஷிவர்மன் தனக்குள் வன்மமாகச் சிரித்துக் கொண்டான். அவன் கண்முன் ஏதேதோ விஷயங்கள் தோன்ற, முகம் இறுக தன் கோபத்தைக் காரின் வேகத்தில் காட்டினான்.


மகன் கிளம்பியதும் சோர்ந்து போன நடையில் தங்களது அறைக்கு வந்தவனின் காதில், "ரவி!" என்ற மனைவியின் குரல் தான் விழுந்தது.


அவள் அருகே சென்ற ரவிவர்மன், "ஓவிமா! இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருக்கலாம்ல, நைட் கூட நீ சரியா தூங்கலயே..?" மனைவியின் மேல் அக்கறை கொண்டு அவன் கூறவும்,


"எப்படி ரவி எனக்குத் தூக்கம் வரும்..? பதினேழு வருஷம் ஆச்சு நான் நிம்மதியா தூங்கி.." என்று விரக்தியுடன் கூறிய மனைவியை மனம் கனக்கப் பார்த்த ரவிவர்மன், 'ரிஷி வந்த விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா..?' என்று சிறிது நேரம் யோசித்தான். பின்பு எப்படியும் சொல்லித்தானே ஆக வேண்டும் என்று நினைத்து,


ஓவியாவின் அருகே அமர்ந்தவன், அவளது கையைப் பிடித்துக் கொண்டு, "ஓவிமா! நம்ம ரிஷி வந்திருந்தான்" என்று கூறினான்.


கணவன் கூறியதைக் கேட்டு இன்பமாக அதிர்ந்த ஓவியா, "என்னங்க சொல்றிங்க, என் புள்ள வந்திருந்தானா..? என்னைப் பார்க்க வந்துட்டானா..?" என்று சந்தோஷ மிகுதியில் எழுந்து வேகமாக வாசலை நோக்கி ஓட, சட்டென்று மனைவியைப் பிடித்துக் கொண்டான் ரவிவர்மன்.


அவளோ, "என் புள்ள எங்கே ரவி? அவன் ரூம்ல இருக்கானா? என்னை அவன்கிட்ட கூட்டிட்டுப் போங்களேன்" கணவனிடத்தில் கெஞ்சினாள் ஓவியா.


என்னதான் அவன் அவளை ஒதுக்கி வைத்தாலும், பலர் முன்னிலையில் உதாசீனம் செய்தாலும், அதையெல்லாம் மறந்து, தான் எப்பொழுதோ தொலைத்து விட்ட தனது கன்றுக்குட்டியை தேடும் பசுவாக இன்றும் பரிதவிக்கிறாள் ஓவியா.


மனைவியின் தவிப்பைக் காணச் சகிக்காமல் அவளை மென்மையாக அணைத்துக் கொண்ட ரவிவர்மன்,


"பேபி! அவன் அப்பவே கிளம்பிட்டான்டா" என்று கூற,


"என்ன சொல்றிங்க, என் புள்ள என்னைப் பார்க்காமலே கிளம்பிட்டானா..? ஏன் ரவி.. அவன் வந்த உடனே என்னையும் உங்க கூடக் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல..?" என்று அழுகையுடனும், ஆதங்கத்துடனும் கேட்ட ஓவியா,


"ரவி! என் புள்ளைய என்கிட்ட இருந்து பிரிக்காதீங்கன்னு உங்ககிட்ட எவ்வளவோ கெஞ்சினேனே, நீங்க கேட்டிங்களா..? இப்ப பாருங்க, என்னை ஒரேடியா வெறுத்து ஒதுக்கிட்டான். அவன் என்னை அம்மான்னு கூப்பிட்டு பதினேழு வருஷம் ஆகுது ரவி!!" என்று அவள் எப்பொழுதும் போல் கணவனது நெஞ்சில் சாய்ந்து புலம்ப ஆரம்பித்தாள்.


மனைவிக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் ரவிவர்மன். பின்பு அவள் மனதை மாற்றும் பொருட்டு, "ஓவிமா! இத்தனை வருசமா வீட்டுக்கே வராதவன், வரவே மாட்டேன்னு வீம்பா இருந்தவன், இப்ப திடீர்னு வீட்டு வாசல் வரை வந்துருக்கான்னா.. அது ஏன்னு நீ கேட்க மாட்டியா..?" என்று அவளது கவனத்தைத் திசை திருப்பி மகன் வந்த காரணத்தை அவளிடம் கூறவும், அதைக் கேட்ட ஓவியாவின் அழுகை சட்டென்று நின்று போக, அவளது முகம் பிரகாசமானது.


"நிஜமா தான் சொல்றிங்களா ரவி..?" என்று நம்ப முடியாமல் மீண்டும் கணவனிடம் கேட்டாள்.


"சத்தியமா! இப்ப உனக்கு ஹேப்பி தானே..?" என்ற ரவிவர்மன் மனைவியின் கண்ணீரைத் துடைத்தான்.


அவளோ, "ரவி! அப்போ இந்த விஷயத்தை அண்ணாக்கு இப்பவே சொல்லிடலாம். என் பையன் மனசு மாறுறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுடலாம். அதுக்கு அப்புறம் என் புள்ள என்கிட்டயே வந்துடுவான்ல..?" என்று ஏக்கம் கொஞ்சமும் குறையாமல் கேட்டவளைக் கனிவுடன் பார்த்த ரவிவர்மன்,


"ம்ம்ம்.. ஆமா! இந்தா நீயே சொல்லிரு!" என்று தன் மொபைலில் இருந்து கார்த்திக்கின் வீட்டு லேண்ட் லைன் எண்களை அழுத்தி அவளிடம் கொடுத்தான்.


இங்குக் கார்த்திக்கின் வீட்டில் மோகனா பூஜையை முடித்து விட்டு வெளியே வரவும் தொலைபேசி ஒலி எழுப்பவும் சரியாக இருக்க, இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தவள், "ஹலோ!" என்றாள்.


அந்தப் பக்கம் ஓவியா சொன்ன விஷயத்தில், "ஓவி! என்ன? என்னடி சொல்றே..? ரிஷி கல்யாணதுக்குச் சம்மதிச்சுட்டானா..?" என்று சந்தோஷமாக மோகனா கேட்டாள்.


அவளது சத்தம் கேட்டு எல்லோரும் ஹாலில் கூடி விட்டனர்.


ஓவியாவிடம் பேசி விட்டு வைத்த மோகனா, "அத்தை! ரிஷி கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லிட்டானாம். இதுல அதிசயம் என்னன்னா.. ரிஷி இன்னைக்கு வீட்டுக்கு வந்தானாம். தேங் காட்..!! நான் நினைச்ச மாதிரி நிச்சயம் நடக்கலையேனு ரொம்பவே கவலையில் இருந்தேன். அப்பாடா!! இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு" என்று மகிழ்ச்சி பொங்க அவள் கூறவும்..


விக்ராந்த்தோ, அன்னை கூறிய விஷயத்தைக் கேட்டுக் கோபத்தில் பல்லைக் கடித்தாலும், அதை முகத்தில் காட்டாமல் அலுவலகம் கிளம்பிச் சென்று விட்டான்.


ராதாவோ அதைக் கேட்டு அதிர்ச்சியானவர், 'இனி எல்லாம் கடவுள் விட்ட வழி!' என நினைத்து அமைதியானார்.


கார்த்திக்கிற்கோ, ரிஷியின் அன்றைய செயலில் அவனுக்கு அவன் மேல் கோபம் இருந்தது தான். ஆனால் நேகா அவனைத் தடுத்து நிறுத்திய போது அவளிடம் அவன் கடுமை காட்டவில்லை என்பதைக் குறித்தும் வைத்திருந்தான்.


அதே நேரம் 'ரிஷியின் கோபம் எல்லாம் ஓவியாவின் மீது தானே..? ஒருவேளை தன் மனைவி கூறுவது போல் தன் மகளால் அவன் மனம் மாறினான் என்றால், தங்கையின் நிம்மதி மீட்டெடுக்கப்படும் தானே..?’ அப்படி நடக்கும் என்றால் தன் தங்கைக்காகக் கண்டிப்பாக அவன் இந்தத் திருமணத்திற்குத் தடை சொல்ல மாட்டான். ஆகையால் அவனும் இந்தத் திருமணத்தைச் சந்தோசமாக வரவேற்றான்.


அப்பொழுது இரண்டு வாரங்கள் விடுமுறை முடிந்து அன்று அலுவலகம் செல்ல கிளம்பி வந்த நேகா, "மோஹிமா! டிபன் ரெடியா..?" என்று கேட்டபடி உணவு மேஜைக்குச் செல்ல,


மோகனாவோ, "நேகா! இனி நீ வேலைக்குப் போக வேண்டாம், ரெசிக்னேஷன் லெட்டர் மெயில் பண்ணிடு!" என்று மகளிடம் கூற,


"ஏன் மோஹிமா, மிஸ்டர்.கார்த்திக் எனக்குப் புதுசா கம்பெனி ஏதும் ஆரம்பிச்சு தர போறாங்களா என்ன..? அப்படி இருந்தா ஒன் கண்டிஷன்! அதில எனக்குப் பி.ஏ நீங்க தான். படிச்ச படிப்புக்கு வீட்ல வெட்டியா இல்லாம என்கிட்ட வேலைக்கு வாங்க. உங்களுக்கு நான் நல்ல சம்பளம் போட்டுத் தரேன், எப்புடி..??" என்று கூறி அன்னையைப் பார்த்துக் கண்ணடிக்க..


"வாய்!! வாய்!! இந்த வாய் தான்டி உன்னை வாழ வைக்கப் போகுது. எனக்கு நீ சம்பளம் தரியா..??" என்று மகளின் தலையில் கொட்டி வைத்தாள் மோகனா.


"ஷ்.. ஆஹ்.." என்று தலையைத் தடவிய நேகா, "பின்னே.. நான் யாரோட பொண்ணு..!! தி க்ரெட் ரவுடி ரங்கம்மா, மிசஸ்.மோகனா கார்த்திக் பொண்ணாச்சே..!! இந்த வாய் கூட இல்லனா என்னை நாய் தூக்கிட்டுப் போய்டாது..??" என்று சிரித்தவள், அன்னையின் அடிக்குப் பயந்து தந்தையின் பின்னே ஒளிந்து கொண்டாள்.


பேத்தியின் குறும்பை எப்பொழுது போல் மனதுக்குள் ரசித்த ராதா, 'கடவுளே!! என் ராஜாத்தி எப்பவும் இப்படியே சிரிச்சுட்டுச் சந்தோஷமா இருக்கணும்!!" என்று வேண்டுதல் வைத்தார். அது நடக்காது என்று தெரிந்தால் என்ன செய்வாரோ..??


கணவனின் பின்னே ஒளிந்து நின்றிருந்த மகளை முறைத்த மோகனா, "நான் என்ன சொல்றேன்.. இவ என்னன்னா என்னைக் கிண்டல் பண்ணிட்டு இருக்கா, பாருங்க!!" என்று கணவனிடம் புகார் வாசித்தவள்,


"நேகா! உனக்கும் ரிஷிக்கும் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் முடிவு பண்ணப் போறோம். அதான் வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னேன், புரியுதா..?" என்று கூறி அவள் மகளை முறைக்க,


"வாவ்!! வாட் அ மிராக்கிள்..!! ஆமா மோஹிமா.. இந்த அதிசயம் எப்போ நடந்தது..? அத்தான் ஓகே சொல்லிட்டாங்களா..? நான் கூட நிச்சயம் நின்ன துக்கத்தில நாலு நாள் பச்சை தண்ணி பல்லுல படாம வெறும் சாக்லேட், ஐஸ்கிரீம், பிரியாணி, புலாவ், நூடுல்ஸ் தான் சாப்பிட்டு என் சோகத்தை ஆத்திக்கிட்டேன் தெரியுமா..? இனிமேல் விதவிதமா சாப்பிடுவேன்" என்று சிரிக்காமல் கூறவும், மகளின் பேச்சில் வாய் விட்டுச் சிரித்தான் கார்த்திக்.


மோகனாவுக்கும் கூடச் சிரிப்பு வந்தது. ஆனாலும் சிரிக்காமல், "நேகா! எனக்குத் தெரியாம நீ சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டு இருக்கே, அப்படித்தானே..? யாருடி உனக்கு வாங்கிக் குடுத்தது..?" என்று கேட்டுத் தன் மாமியாரை முறைததாள்.


அவரோ, "என்னை எதுக்குடி பார்க்குற..?" என்று பதிலுக்கு மருமகளை முறைத்தார் ராதா.


"ஹா ஹா.. ஓகே மோஹிமா.. உங்க மாமியார் - மருமகள் சண்டையைக் கன்டினியூ பண்ணுங்க. இனி வேலைக்கு வர மாட்டேன்னு நான் நேரிலேயே போய்ச் சொல்லிட்டு கையெழுத்து போட்டுட்டு வந்துறேன். அதான் மரியாதை!!" என்ற நேகா எப்பொழுதும் போல் அரக்க பறக்க சாப்பிட்டுக் கிளம்பி விட்டாள்.


கார்த்திக்கும் அலுவலகம் கிளம்பினான். மோகனாவோ தன் சந்தோஷத்தை ஊட்டியில் இருக்கும் தன் அண்ணன் குடும்பத்திடம் பகிர்ந்து கொள்ள, மீண்டும் அந்த வீடு கல்யாணக் களை கட்ட ஆரம்பித்தது.


நாம் என்னதான் முடிவு எடுத்தாலும் நமக்கு மேல் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அல்லவா..? அவர் என்ன முடிவு செய்து இருக்கிறாரோ, அதன் படி தானே எல்லாம் நடக்கும்..!!


அலுவலகத்தின் பார்க்கிங்கில் தனது வாகனத்தை நிறுத்திய நேகா துள்ளல் நடையில் உள்ளே செல்லவும்,


அவளை ஆச்சரியமாகப் பார்த்த ரிசப்சனிஸ்ட், "என்ன நேகா.. இன்னைக்குப் படு குஷி போல!!" என்று புன்னகையுடன் கேட்டாள்.


"ஹாய் வினு டார்லிங்! இன்றில் இருந்து இந்த ஆபிஸ் என்கிட்ட இருந்து விடுதலை ஆகுது, அதான்.." என்று கண்ணடித்து அவள் கூறவும்,


"புரியலையே..?" என்று அவள் யோசனையுடன் கேட்க, "என்ன விஷயம்னு வந்து சொல்றேன் வினு" என்றவள் லிப்டில் ஏறினாள்.


தனது தளத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்த நேகா, பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தனுஷாவைப் புருவம் தூக்கிப் பார்த்தவள், "ஓய்! தனு குரங்கு! என்னடி? நான் வந்தும் என்னைப் பார்க்காம அம்புட்டு தீவிரமா அப்படி என்ன டைப் பண்ணிட்டு இருக்கே?" என்று கேட்டபடி தனது கணினியை இயக்க..


தோழியை ஒரு நொடி திரும்பிப் பார்த்த தனுஷாவுக்கோ, தன் அண்ணன் அவள் மேல் வைத்திருக்கும் காதலைப் பற்றி இவளிடம் கூறி விட்டால் என்ன என்று தோன்றியது. ஆனால் அடுத்த நொடி, அதைத் தன் அண்ணன் தான் நேகாவிடம் கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு,


“ஒன்னும் இல்ல.. முக்கியமான பைல் ஒன்று கரெக்ட் பண்ணச் சொல்லி அண்ணா சொன்னார். அதான் பார்த்திட்டு இருந்தேன்” என்று தனுஷா கூறவும்,


“ஓகேடி” என்றுவிட்டு கணினியில் தனது ராஜினாமா கடிதத்தை எழுதி, அதைப் பிரதி எடுத்துக் கொண்டு அஜித்தைக் காண அவனது தளத்திற்குச் சென்றாள். அவனது கேபினை இரு முறை தட்டி விட்டு அவன் அழைப்புக்காகக் காத்திருந்தாள்.


சிறிது நேரம் கழித்து, "எஸ் கமின்!" என்ற ஆளுமையான குரலில் கேபின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் நேகா.


உள்ளே கணினியில் கண் பதித்திருந்த அஜித், வந்தது யார் என்று தெரிந்தும், அவளைத் திரும்பிப் பார்க்காமல் தன் வேலையைத் தொடர..


அவளோ, "சார்!!" என்று அவனைப் பவ்யமாக அழைத்தாள்.


அவனோ, அவளது பொய்யான பவ்யத்தை ரசிக்கும் மனநிலை இல்லாததால், அவளைத் திரும்பியும் பாராமல், "எஸ்.." என்று மட்டும் கூறினான்.


அதில் கடுப்பான நேகாவோ, 'ரொம்பத்தான்டா பண்றே..!!' என்று அவனுக்கு அழகு காட்டி விட்டு, "சார்! நான் என் வேலையை ரிசைன் பண்றேன்" என்றாள்.


அதைக் கேட்டு அஜித்குமார், "வாட்…??!!" என்று திரும்பி அவளைப் பார்த்தான்.


"எஸ் சார்.. இதோ! என் ரெசிகினேஷன் லெட்டர்" என்று ஒரு கவரை அவனிடம் நீட்டினாள்.


அவளின் மேல் இருந்த தன் பார்வையை அகற்றாமல் அதை வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்தவன், "ஏன் திடீர்னு இந்த முடிவுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா மிஸ்.நேகா..?" என்று கேட்டான்.


"அது வந்து.. எனக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு சார். அடுத்த மாசம் முதல் தேதியில் கல்யாணம் வைக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க. அதான் எங்க அம்மா இனி வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என்று அவள் கூறவும்,


"ஓஹ்.." என்று தாடையைத் தடவியபடி அவளைப் பார்த்த அஜித்,


"கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கே, அதுக்குள்ள ஏன் வேலையை விடுறீங்க..?" என்று அவன் கேட்க,


அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவளின் மனமோ, 'எதுக்குக் கேள்வி மேல கேள்வி கேட்குறான் இந்த மங்கூஸ் மண்டையன்..? ஒருவேளை கூப்பிட்டு வச்சி திட்ட ஆள் இல்லைன்னு நம்ம மனசை மாத்த பார்க்கிறானோ..? சிக்காதடி நேகா..!! எதையாவது சொல்லி இவன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடு! அதான் உனக்கு நல்லது!' என நினைத்தவள்,


"என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க..? எனக்குக் கல்யாணம் ஆகப் போகுது சார். கல்யாணம்ன்னா எவ்ளோ வேலை இருக்கும்?? அதுக்கு முதல்ல என்னைக் கல்யாணம் பண்ணப் போறவர்கிட்ட தினமும் கடலை போடணும். கலர் கலரா கனவு காணணும். அப்ப அப்ப வீட்டுக்குத் தெரியாம நானும் அவரும் ரகசியமா தியேட்டர், சினிமான்னு சுத்தணும். கல்யாண புடவை எடுக்கிறது, நகை வாங்குறதுன்னு எவ்ளோ வேலை இருக்கு சார். ஒவ்வொன்னுத்துக்கும் நான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்டு நிக்க முடியுமா? அதான் ஒரேடியா வேலையை விட்டு நின்னுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்" என்று நாணி கோணி வெட்கப்பட்டுக் கொண்டு நேகா கூறினாள்.


அஜித்துக்கோ, அவள் பேச்சிலும், பாவனையிலும் மிகுந்த ஆத்திரம் எழுந்தாலும், அதைத் தற்பொழுது காட்ட விரும்பாதவன், "நீங்க இவளோ எக்ஸைட் ஆகுறத பார்த்தா, உங்களோடது லவ் மேரேஜா..?" என்று அவளைத் துளைக்கும் பார்வை பார்த்தபடி கேட்டான்.


அவளோ சிறிதும் யோசிக்காமல், "ச்சே! ச்சே! லவ் மேரேஜ் எல்லாம் இல்ல சார், அரேன்ஞ்ட் மேரேஜ்தான்.. நான் கட்டிக்கப் போறவர் என்னோட அத்தை பையன். சின்ன வயசுலேயே அவருக்கு நான்தான்னு முடிவு பண்ணிட்டாங்க" என்று உடனே பதில் கொடுக்க, ஏனோ அஜித்தின் மனம் சற்று அமைதியானது.


ஆனாலும் ஏதோ ஒன்றை அவள் வாய்மொழியாகத் தெரிந்து கொள்ள நினைத்தவன், "காதல் இல்லாம கல்யாணம் பண்ண எப்படிச் சம்மதிச்சீங்க..?" என்று அவன் கேட்டான்.


இவ்வளவு நேரம் அவன் கேட்ட கேள்விகளுக்கு ‘டான் டான்' எனப் பதில் அளித்துக் கொண்டிருந்தவள், அவனது இந்தக் கேள்வியில், 'இதெல்லாம் எதுக்குக் கேட்குறான்?' என்று புரியாமல் முழித்தாலும்,


"காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணணும்ன்னு இல்லையே சார். கல்யாணத்துக்கு அப்புறம் கூடக் காதலிக்கலாம்தானே..?" என்று பதில் கூறினாள்.


அவளது இந்தப் பதிலை கேட்டு புன்னகைத்தவன், "உங்க ரெசிகினேஷன் லெட்டர் இஸ் அக்செப்டெட்!" என்றுவிட்டு தனது மொபைலில் இருந்து பி.ஏவை அழைத்தான். அவனிடம் விஷயத்தைக் கூறி விட்டுப் போனை வைக்க, சிறிது நேரத்தில் அவனின் பி.ஏ ஒரு பைலுடன் உள்ளே வந்தான்.


தான் கொண்டு வந்த பைலை அஜித்திடம் கொடுக்க, அதை வாங்கி நேகாவின் முன் வைத்தவன், "இது உங்களோட ரிலீவிங் லெட்டர்.. இதைப் படிச்சி பார்த்து கையெழுத்து போட்டுட்டு நீங்க கிளம்பலாம்" என்று அந்தப் பைலை கண்களால் அவளிடம் சுட்டிக் காட்டினான்.


நேகாவின் மனமோ, 'என்ன இது..? உடனே எனக்கு ரிலீவிங் லெட்டர் கொடுத்துட்டான். எப்ப என்னைத் துரத்தலாம்ன்னு காத்துக்கிட்டு இருந்தானோ..?' என்று நினைத்தவள்,


"எதுக்கு சார் இதைப் போய்ப் படிச்சி பார்த்துகிட்டு..? உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு சார்" என்றவள் அதில் கையெழுத்தை இட்டு விட்டு நிமிரவும், அஜித்தின் இதழில் ஒரு விசமமான புன்னகை தோன்ற, "சீக்கிரமே மிசஸ் ஆக வாழ்த்துக்கள் மிஸ் நேகா!!" என்று கூறினான்.


"தேங்க்யூ சார்.." என்றவள் புன்னகையுடனே அங்கிருந்து கிளம்பினாள்.


செல்லும் தன்னவளைப் பார்த்திருந்தவனின் இதழில் பூத்திருந்த விஷமப் புன்னகை மறையவே இல்லை. அந்தப் புன்னகைக்குப் பின்னே இருக்கும் அர்த்தத்தை அவன் மட்டுமே அறிவான்..!!


****


1 comment:

  1. Adapavi ellorume thiruttu pasamgala irukanumga oruthanum olunga yosichi ner vazhila porathu illa pogamda

    ReplyDelete