ஸ்வரம் 11

 


ஸ்வரம் 11…


அஜித்தின் கேபினில் இருந்து வெளியே வந்த நேகா, "விடுதலை! விடுதலை! விடுதலை!" என்று ராகம் போட்டு பாடியபடி தனது இருப்பிடத்திற்கு வந்தாள்.


இன்னமும் தனுஷா மும்முரமாக வேலை செய்து கொண்டிருப்பது கண்டு, "தனு செல்லோ! நான் கிளம்புறேன்டி. இனிமேல் என்னைப் பார்க்கணும்ன்னா எங்க வீட்டுக்கு வா, ஓகேவா?" என்று தோழியிடம் கூறி விட்டு, அங்கிருந்த மற்றவர்களிடம் அவள் வேலையை விட்டு விட்டதாகக் கூறவும் அங்கே சிறு சலசலப்பு எழுந்தது..


ஆளாளுக்கு "ஏன்? எதுக்கு? என்னாச்சு?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, தனுஷா கூடத் தன் கோபம் மறந்து, "என்னடி சொல்றே..?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.


நேகாவோ தனக்குத் திருமணம் முடிவாகி இருப்பதை அவர்களிடம் கூறவும், எல்லோரும் அவளது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். தனுஷாவோ மேலும் அதிர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


எல்லோருடைய வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்ட நேகா திரும்பித் தன் தோழியைப் பார்க்க, அவளை முறைத்துப் பார்த்தபடி தனது இருக்கையில் அமர்ந்தவளைக் கண்டு,


'இவளுக்கு என்னாச்சு? நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன். ஒன்னு உம்முன்னு இருக்கா, இல்லனா முறைச்சு பார்க்கிறா' எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்ட நேகா,


தோழியின் அருகே தனது இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு, "தனு! என் மேல் ஏதும் கோபமாடி..?" என்று கேட்டாள்.


அவளோ, "கோபம்லாம் இல்லடி, திடீர்னு நீ வேலையை விட்டுப் போறேனு சொல்லவும் சின்ன வருத்தம்" என்றாள்.


"அப்போ எதுக்குடி நான் வந்தப்போ உம்முன்னு இருந்தே..?" என நேகா பல்லைக் கடிக்க..


"அது வேற டென்ஷன்டி.." என்று சொல்லிச் சமாளித்தவள், "ஆமா, அன்னைக்கு உனக்கு என்கேஜ்மெண்ட் நடக்கல தானே..? இப்ப என்னன்னா கல்யாணம்னு சொல்றே. என்னடி இதெல்லாம்..? எனக்கு ஒன்னுமே புரியல" என்று கேட்டுத் தோழியின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.


"அதுவா..? எதுக்கு என்கேஜ்மெண்ட் வச்சி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டுன்னு, அத்தான் நேரடியா கல்யாணத்தை வைக்கச் சொல்லிட்டார்" சொல்லிக் கண் சிமிட்டியவளை ஆழ்ந்து பார்த்த தனுஷா,


"உன்கிட்ட கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே நேகா. உனக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா..? அன்னைக்கு மண்டபத்தில அத்தனை பேர் முன்னாடி உங்க பொத்தான், அதான் உங்க ஓவிமா பையன், அவரோட அம்மான்னு கூடப் பார்க்காம அவங்களை அவமானப் படுத்துறார். நீ என்னன்னா ஓடிப் போய் அவர் கையைப் பிடிச்சு நிறுத்துறே.


அவரும் கொஞ்சம் கூட யோசிக்காம உன் கையை உதறிட்டுப் போய்ட்டார். இப்ப என்னன்னா அவர் கூடக் கல்யாணம்னு நீ சொல்றே. என்னடி இதெல்லாம்..? அவர் நடந்துகிட்டத்தை நினைக்கும் போது எனக்கே உன் அத்தான் மேல கொலைவெறி வருது. ஆனா நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டே.. உனக்கு மனசுன்னு ஒன்னு இருக்கிறதை உங்க வீட்ல யாரும் யோசிக்கவே மாட்டங்களா..?" சற்றுக் கோபமாகவே கேட்டாள் தனுஷா.


தன் மேல் உள்ள அக்கறையில் தனக்காக யோசிக்கும் தன் தோழியைக் கட்டிக் கொண்ட நேகா, "நீ கேட்ட அத்தனை கேள்விக்கும் என்கிட்ட பதில் இருக்கு. ஆனா அதைச் சொன்னா உனக்கு முட்டாள்தனமா தெரியும்" என்றவள்


"தனு! எனக்கு என் குடும்பம் ரொம்ப ரொம்ப முக்கியம்டி!! இந்தக் கல்யாணத்துல எங்க மோஹிமா தீவிரமா இருக்காங்கன்னா.. அது எங்க ஓவிமாக்காகத் தான்..!! அவங்க பையனோட மனசை மாத்தி, அவங்க முகத்துல சிரிப்பைக் கொண்டு வர என்னால் முடியும்ன்னு எங்க மோஹிமா நினைக்கிறாங்க. அவங்க நம்பிக்கையை நான் காப்பாத்த வேண்டாமா..? எப்படி இருந்தாலும் நான் யாரையாவது கல்யாணம் பண்ணித் தானே ஆகணும்..? அது ஓவிமா பையன்னும் போது எல்லாருக்கும் சந்தோஷம் தானே..!!" என்று கூறிச் சிரித்தவளை என்ன செய்தால் தகும் என்று தனுஷாவிற்குத் தெரியவில்லை.


அதற்கு மேல் அவளிடம் எதுவும் கேட்காமல், தனது டேபிளில் இருந்த கல்யாணப் பத்திரிகை ஒன்றை எடுத்து நேகாவிடம் கொடுத்தாள் தனுஷா.


"என்னடி இது..?" என்று வாங்கிப் பார்த்த நேகா, "ஹேய்! அமலாக்குக் கல்யாணமா..? சூப்பர் சூப்பர்..!!" என்று கூறவும்,


"ம்ம்ம்.. நேத்து தான் பத்திரிகை வந்தது. அவங்க கிராமத்தில வச்சி கல்யாணம்" என்ற தனுஷா வேறு விஷயம் பேச ஆரம்பித்தாள்.


சிறிது நேரம் அவளிடம் பேசி விட்டு, எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அஜித்தின் அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள் நேகா.


அவள் கிளம்பிய அடுத்த நொடி தனது அண்ணனைக் காணச் சென்றாள் தனுஷா.


"அண்ணா! என்ன முடிவு பண்ணி இருக்கே..? எல்லாம் கை மீறி போய்ட்டு இருக்கு. ஏதாவது செய்வேன்னு பார்த்தா நீ கூலா இருக்கே..?" என்று ஆதங்கத்துடன் அண்ணனிடம் கேட்க,


"நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கோ தனு!!" என்று அவன் அமர்த்தலாகக் கூறினான்.


"என்னமோ போ! எனக்கு உன்னை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு" என்றவள் அண்ணனின் கேபினை விட்டு வெளியேறினாள்.


தங்கை செல்லவும் தன்னவள் கையெழுத்து இட்டுச் சென்ற பைலை எடுத்துப் பார்த்தவன், அதில் இருந்த நேகாவின் கையெழுத்தை ஆசையுடன் வருடினான் அஜித்குமார்.


நேகா வேலையை விட்டு ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை காலை உணவை முடித்து விட்டு ராதா அவரது அறையில் ஓய்வெடுக்கச் செல்ல, விக்ராந்த் மொபைலை நோண்டியபடி ஹாலில் அமர்ந்திருந்தான். மோகனாவும், கார்த்திக்கும் ஓவியாவின் வீட்டிற்குக் கிளம்பிச் சென்று பத்து நிமிடம் ஆகி இருந்தது. நேகா மற்றும் ஸ்னேகா இருவரும் சமையல் அறையில் இருந்தனர்.


"ஸ்னேக் பேபி! அந்தத் தக்காளி சட்னி எடுத்து அக்கா தட்டுல வைடா" என்று விட்டு தோசையைப் பிட்டுச் சாம்பாரில் குளிப்பாட்டி அப்படியே தன் வாயில் போட்டு, "ம்ம்ம்ம்.. சாம்பார்ன்னா நம்ம மோஹிமா வச்ச சாம்பார் தான்.. என்னா ருசி!! என்னா ருசி!! அவங்க கைப் பக்குவத்தை அடிச்சிக்க ஆளே இல்ல..!!" என்றபடி ரசித்து உண்ண ஆரம்பித்தாள் நேகா.


ஸ்னேகாவும் தன் அக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டில் தக்காளி சட்னியை வைத்து விட்டுத் தோசை கல்லில் தோசை வார்க்க ஆரம்பிக்க..


"ஸ்னேக் பேபி! அதுல எண்ணெய் ஊத்தாதடா, பேட் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிடும். அதுக்குப் பதிலா நாலு குழி கரண்டி நெய் ஊத்து" என்று தங்கையிடம் கூற,


"வேணாம்க்கா.. ஏற்கனவே நீங்க குண்டா இருக்கீங்க. எக்சர்சைஸூம் பண்ண மாட்டேன்கிறீங்க. இப்ப வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கிறதால சாப்பாடும் அன்கண்ட்ரோல்ல போய்ட்டு இருக்குனு மோஹிமா திட்டிட்டே இருக்காங்க. இது மட்டும் அவங்களுக்குத் தெரிஞ்சிது, அவ்ளோ தான் சொல்லிட்டேன்..!!" என எச்சரிக்கை செய்தவாறு நேகாவின் தட்டில் தோசையை வைத்தாள்.


"ஸ்னேக் பேபி! நான் ஸ்லிம்மா இருந்து அழகி போட்டிக்கா போகப் போறேன். நீ நெய்யை எடுத்து ஊத்தி நல்லா மொறு மொறுனு முறுகலா தோசையைச் சுட்டு போட்டுட்டே இரு! நான் வஞ்சமில்லாம சாப்பிட்டுட்டே இருக்கேன். நாம பிறந்ததே சாப்பிடத்தானே..??" என்று விட்டுச் சப்புக் கொட்டியவள்..


"ஆமா, உனக்கு எப்ப எக்ஸாம் ஆரம்பிக்குது..? அடுத்து என்ன பண்றதா இருக்க..?" என்று கேட்ட நேகா, தங்கை சுட்டு வைத்த நெய் தோசையில் கை வைக்கவும், அவளது தட்டு அவள் கையில் இருந்து நொடியில் பிடுங்கப்பட்டது.


"அயோயோ! என் நெய் தோசை!" என்று அலறிய நேகா தட்டை பறித்தது யார் என்று நிமிர்ந்து பார்க்க, எதிரே மகளை உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் மோகனா.


"ஆத்தி!! மோஹிமா நீங்களா?" என்று கேட்டவளின் பார்வை அன்னையின் கையில் இருந்த தோசையில் தான் ஏக்கமாகப் பதிந்தது.


மோகனாவோ, "ஸ்னேகா! உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன், நீ என்ன பண்ணிட்டு இருக்கே..? ஏற்கனவே உங்க அக்கா டைனிங் டேபிளில்ல வச்சி பத்துத் தோசை சாப்பிட்டாள்ல.. இனி கேட்டா கொடுக்காதே! முக்கியமா இவளை கிச்சன் பக்கம் விடாதேனு சொன்னேனா இல்லையா..?" என்று சின்ன மகளை முறைத்தாள்.


அவளோ, "அக்கா பாவம் மோஹிமா!! வயிறே நிறையலனு சொன்னாங்க, அதான் சுட்டுக் குடுத்தேன்" என்ற ஸ்னேகாவை மேலும் முறைத்த மோகனா,


"நேகா! இதென்னடி பழக்கம் கிச்சன் திண்டுல உக்காந்து சாப்பிடுறது..? கீழே இறங்கு..!!" என்று நேகாவையும் திட்டி விட்டு, "ரெண்டு பேரும் மொதல்ல இங்கிருந்து வெளியே போங்க!" என்று இருவரையும் வெளியே போகச் சொன்னாள்.


நேகாவோ தாயின் திட்டை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, 'கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே..?' என்று ஏக்க பெருமூச்சு விட்டவள்..


"நான் வெளியே போறது இருக்கட்டும் மோஹிமா.. நீங்க உங்க பிரெண்ட் ஓவிமாவைப் பார்க்கத்தானே கிளம்புனீங்க. இப்ப எதுக்குத் திரும்பி வந்திங்க? ஆமா நான் சாப்பிட்டுட்டு இருக்கேன்னு உங்களுக்கு யார் சொன்னது?" என்று அவள் இடுப்பில் கை வைத்து அன்னையைக் கேள்வி கேட்டுப் பதிலுக்கு முறைக்க,


"உங்க அப்பாக்கு ஒரு வேலை வந்துட்டுதுன்னு பாதி வழியில திரும்பி வந்து என்னை வீட்ல விட்டுட்டுப் போய்ட்டார். நான் வந்ததும் நல்லதா போச்சு. உனக்கு மதிய சாப்பாடு கட்.." என்ற நேரம் கிச்சன் வாசலில் நிழலாடியது. யார் என்று தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள் நேகா.


அங்கே நமுட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தான் விக்ராந்த்.


அவனது அந்தச் சிரிப்பே சொல்லியது, அன்னையிடம் போட்டுக் கொடுத்தது அவன் தான் என்று! அடுத்த நொடி, "ப்ரோ! இது உன் வேலை தானா..?" என்று கேட்டுப் பல்லைக் கடித்த நேகா அவனை அடிக்கத் துரத்த, தங்கையின் கையில் சிக்காமல் வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தான் விக்ராந்த்.


"ப்ரோ! ஒழுங்கா நீயா வந்தா ரெண்டு அடி தான் அடிப்பேன், நானா உன்னைப் பிடிச்சேன் சட்னி ஆக்கிருவேன்" என்று கடுகடுத்தபடி அவனைப் பிடிக்க ஓடினாள்.


அதே நேரம் தோழியைக் காணத் தனது ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் தனுஷா. தனது வாகனத்தை நிறுத்தி விட்டு நேகாவைத் தேடி வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்தாள்.


அப்பொழுது தங்கையின் கையில் சிக்கி விடாமல் நேகாவைப் பார்த்தபடியே பின்னோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்த விக்ராந்த், உள்ளே வந்து கொண்டிருந்த தனுஷாவைக் கவனிக்கவில்லை.


ஆனால் அவன் பின்னே நின்றிருந்த தோழியைக் கண்டு விட்ட நேகா, "ப்ரோ! ஓடாதே, அப்படியே நில்லு! பின்னாடி பாரு ஆள் நிக்கிது" என்றவள், தனுஷாவைப் பார்த்து, "ஏய் தள்ளுடி!" என்று கையை ஆட்டிக் கத்தவும்..


தன்னைத் திசை திருப்ப தான் அப்படிச் சொல்லுகிறாள் என்று நினைத்த விக்ராந்த் மேலும் பின்னால் நகர, தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவனைக் கண்டு தனுஷா சுதாரித்து நகரும் முன், அவள் மீது வேகமாக மோதி விட்டான்.


அதில் "ஆ..ஆ" என்று கத்தியபடி நிலை தடுமாறி தொப்பென்று தனுஷா விழுந்து வைத்தாள்.


அப்பொழுது தான் தனது பின்பக்கம் யாரோ இருப்பது உணர்ந்து அவன் திரும்பவும், கார்ப்பெட் அவனது காலையும் இடறி விட, பூப்போன்ற பெண்ணவள் மீதே மொத்தமாக விழுந்து விட்டான் விக்ராந்த். அவனது தேக்குமர உடலின் எடையைத் தாங்க முடியாமல் வலியில் "அம்மா ஆ ஆ!!" என்று அலறி விட்டாள் தனுஷா.


இதை எதிர்பாராத விக்ராந்த் அவள் மேல் இருந்து வேகமாக எழுந்து கொண்டவன், "ஷிட்!!" என்று நெற்றியை நீவியபடி அவளைப் பார்க்க, அவளோ வலியில் முகம் சுருங்க எழ முயன்று கொண்டிருந்தாள்.


அவளைப் பார்க்க பாவமாக இருக்க, அவள் எழுவதற்கு உதவி செய்ய நினைத்து அவன் தன் கையை அவளிடம் நீட்டும் முன்,


"அயோயோ தனு! என்னாச்சுடி..? இன்னும் உயிரோட தான் இருக்கியா..? இந்தப் பில்லர் உன் மேல விழுந்ததுல நீ நசுங்கி போய்ட்டியோன்னு நினைச்சுட்டேன்டி. அப்படி மட்டும் நடந்து இருந்தா உங்க அண்ணனுக்கு யார்டி பதில் சொல்றது..?" என்றபடி ஓடி வந்து தனுஷாவைத் தூக்கி விட்டாள் நேகா.


தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற தனுஷாவிற்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது. இத்தனை நாட்களும் தன்னவனைத் தள்ளி இருந்து ரசித்து இருக்கிறாள். இன்றோ தோழியைக் காணும் சாக்கில் அவனைப் பார்த்து விடலாம் என்ற ஆர்வத்தில் தான் வந்தாள். ஆனால் இப்படி ஒரு வரவேற்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை. இந்தத் திடீர் மோதலால் அவளது உடல் வலித்தாலும் தன்னவனின் ஸ்பரிசம் ஏற்படுத்திய கிளர்ச்சியில் வெட்கமும் வந்தது.


அவளையே பார்த்திருந்த விக்ராந்த் அவளின் முகச் சிவப்பை கண்டு, 'ச்ச! நாம அவ மேல விழுந்ததுல அவளுக்கு வலிச்சு இருக்கும். அதான் இந்தப் பொண்ணுக்கு முகம் சிவந்து போச்சு போல!!' என எண்ணியவன் நிமிடமும் தாமதிக்காமல் "சாரி…" என்றுவிட்டு அடுத்த நொடி மாடிப்படி ஏறி விட்டான்.


அதற்குள் அவளது அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மோகனா, "என்னாச்சு..? யார் கத்தினது..?" என்று கேட்டு நேகாவையும் தனுஷாவையும் பார்க்க,


"மோஹிமா! அது வந்து உங்க பையன்.." என்று நேகா நடந்த விஷயத்தைக் கூறும் முன் அவளது கையைப் பிடித்துத் தடுத்த தனுஷா, "அது ஒன்னும் இல்ல ஆன்ட்டி.. நான் தான் கவனிக்காம கார்ப்பெட் தட்டி கீழே விழுந்துட்டேன்" என்று கூற, தனது அறைக்குள் நுழைய போன விக்ராந்த்தின் காதில் அவள் சொன்னது தெளிவாக விழ, சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தான். அதே நேரம் அவளது பார்வையும் அவனை ஒரு நொடி தொட்டு மீண்டது.


"பார்த்துக் கவனமா வரக் கூடாதாமா..? மொத மொத எங்க வீட்டுக்கு வந்துருக்கே, இப்படியா விழுந்து வைப்ப..?" என்று கேட்ட மோகனா, "உள்ள வந்து உக்காரு! விழுந்ததுல அடி ஏதும் பட்டுருச்சாமா..?" என்று அக்கறையுடன் கேட்டாள்.


"அதெல்லாம் இல்ல ஆன்ட்டி.." என்று கூறியவள், 'ப்பா! உடம்பா அது..? பாறாங்கல்லு!!' என்று அவனை மனதுக்குள் திட்டினாலும், அவனது அந்த நெருக்கத்தை அவள் ரகசியமாய் ரசித்தது என்னவோ உண்மை!!


"சரிமா, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க" என்ற மோகனா தோழிகள் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு மதிய சமையலை கவனிக்கச் சமையல் அறைக்குச் சென்றாள்.


நேகாவோ, "தனு வாடி! என்னோட ரூம்க்குப் போகலாம்" என்று தோழியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றாள்.


இங்கு அறைக்குள் வந்த விக்ராந்தோ, "நீ லூசு தான்டா விக்ரம்! சின்னப் பையன் மாதிரி ஓடிப் பிடிச்சு விளையாடி ஒரு பொண்ணு மேல இப்படியா விழுந்து வைப்பே..? ச்ச! உன்னைப் பத்தி அவ என்ன நினைச்சு இருப்பா..?" என்று தனக்குத்தானே திட்டியவன் சோபாவில் தொப்பென்று அமர்ந்தான்.


எத்தனையோ தடவை அவளை அவன் பார்த்து இருக்கிறான். தங்கையின் தோழி என்று கடந்து விடுவானே தவிர வேறு எந்த எண்ணமும் இதுவரை அவனுக்கு அவள் மேல் தோன்றியது இல்லை. அவளிடம் மட்டும் அல்ல மற்ற பெண்ணிடம் கூட அவன் அப்படித்தான். மூன்று தங்கைகளுடன் பிறந்தாலோ என்னவோ..!! பெண்களிடம் எப்பொழுதும் கண்ணியமாகத்தான் நடந்து கொள்வான்.


ஆனால் இன்று அவன் வேண்டும் என்று அப்படிச் செய்யவில்லை என்றாலும், அவனது செயல் அவளைக் காயப்படுத்தி இருக்குமோ என்று மனதில் குற்றவுணர்வு கொண்டான்.


தெரியாமல் நடந்த செயல் அவளைக் காயப்படுத்தி இருக்குமோ என்று புலம்பிக் கொண்டு இருப்பவனுக்குத் தெரியவில்லை..!! பின்னாளில் தெரிந்தே அவளைக் காயப்படுத்தப் போகிறோம் என்பது..!!


நேகாவின் அறைக்குள் இருவரும் வந்ததும், "ஏன்டி நேகா! என்னடி இது..? உங்க அண்ணன் பெரிய பிஸ்னெஸ்மேன்னு நினைச்சேன். ஆனா அவரு இப்படி உன் கூட ஓடிப் பிடிச்சு விளையாட்டிட்டு இருக்காரு" என்று கேட்க,


"ஹா ஹா.. நாங்க அப்படித்தான்டி! வீட்ல இருந்தா வீட்டை ரெண்டாக்கிருவோம். எங்க மோஹிமா தான் பாவம்!!" என்று சொல்லிச் சிரிக்கவும்,


"அப்புறம் உன் கல்யாண வேலை எல்லாம் எப்படிப் போகுதுடி..?" என்று கேட்ட தனுஷா, "இந்தா, உனக்காக வாங்கிட்டு வந்தேன்" எனத் தன் அண்ணன் கொடுத்து விட்ட சாக்லேட்கள் அடங்கிய டப்பாவைத் தோழியிடம் கொடுத்தாள்.


"ஹை!! தேங்க்ஸ்டி!!" என்றவள் அதை வாங்கி எப்பொழுதும் போல் அதை உண்டவள்,


"என் கல்யாண வேலை தானே.. சூப்பரா போகுது. இன்னைக்கு டேட் பிக்ஸ் பண்ண தான் அப்பாவும், மோஹிமாவும் கிளம்பினாங்க. ஆனா அப்பாக்கு அர்ஜெண்ட் வேலைனு ரிட்டன் ஆகிட்டாங்க. சரி, அதை விடு! என்ன சாப்பிடுற..? ஏதாவது கொண்டு வரச் சொல்லவா..?" என்று கேட்டபடி தோழியின் கைகளை நேகா பிடித்துக் கொள்ள,


"அதெல்லாம் ஒன்னும் வேணாம். உன்னைப் பார்த்து ஒரு வாரம் ஆச்சா..? அதான் பார்த்துட்டு அப்படியே உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்" என்றாள் தனுஷா.


"என்ன விஷயம்டி..? ஒருவேளை உங்க அண்ணனுக்குக் கல்யாணம் ஏதும் பிக்ஸ் ஆகிருச்சா என்ன? அதுக்காகத்தான் இந்தச் சாக்லேட்டா..? அச்சோ பாவம்!! அவர்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கப் போற அந்த ஜீவன் யாரோ..??!!" சொல்லி நேகா சிரித்தாள்.


அதற்குத் தோழியை முறைத்த தனுஷா, "அடியேய்! எங்க அண்ணனைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது..? டெரர் மாதிரியா இருக்கு..? அவன் எவ்வளவு சாப்ட் தெரியுமா..!! அவனுக்கு வரப் போறவளை பூ மாதிரி பார்த்துப்பான்" என்று தன் அண்ணனை விட்டுக் கொடுக்காமல் கூறவும்,


"இங்க பாரு.. என் மேல உனக்கு ஏதும் கோபம் இருந்தா நாலு அடி வேணா அடிச்சிக்கோ. ஆனா உங்க நொண்ணன் சாப்ட்னு சொல்லாதே! கடுப்பாகிருவேன். அவரை நீதான் மெச்சிக்கணும்" என்று அவள் தோழியிடம் எகிறிக் கொண்டு வந்தவள், "ஆமா, இப்ப எதுக்குத் தேவை இல்லாம அவர் பேச்சு..? நீ வந்த விஷயத்தைச் சொல்லு!" என்று நேகா அஜித்தின் பேச்சை தவிர்க்க,


'நானாடி எங்க அண்ணா பேச்சை எடுத்தேன்..?' எனத் தனக்குள் சிரித்த தனுஷா, "அது வேற ஒன்னும் இல்ல, நம்ம அமலாக்கு வர்ற ஞாயிறு கல்யாணம் இருக்குல.." என்று கேட்க,


"அட ஆமா! மறந்தே போய்ட்டேன் பாரு. நீ பத்திரிகை தந்த அன்னைக்கே எனக்கு அவ போன் பண்ணியும் இன்வைட் பண்ணினா" என்று நேகா கூறவும்,


"அதான் நாம ரெண்டு பேரும் அவ கல்யாணத்துக்குப் போய்ட்டு வரலாமானு கேட்கத்தான் வந்தேன்" என்றவளைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த நேகா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து,


"நல்லா வந்தே போ..!! அவ கல்யாணம் அவளோட சொந்த கிராமத்தில நடக்கப் போகுது. எனக்கு இங்க கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்குடி. இந்த நேரத்தில எங்க வீட்ல இதுக்குப் பெர்மிஷன் கேட்டேன்னு வை.. எங்க மோஹிமா எனக்குத் தோசை சுட்டு போடுறாங்களோ இல்லையோ, அந்தக் கரண்டியாலயே நாலு போடுவாங்க. அவங்ககிட்ட யார் அடி வாங்குறது..? என்னால முடியாதுமா" என்று விட்டு தோழியை முறைத்தாள்.


"அதெல்லாம் பெர்மிஷன் தருவாங்க, ஜஸ்ட் ரெண்டு நாள் தானே..? அவ நம்ம பிரெண்டுடி. எங்க அண்ணா கூடப் போய்ட்டு வான்னு சொல்லிட்டான். சொல்ல போனா அவனைத்தான் டிராப் பண்ணச் சொல்ல நினைச்சேன். ஆனா அவன் அன்னைக்குன்னு பார்த்து அர்ஜென்ட் வேலையா சிங்கப்பூர் போறானாம். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அதான் உன்னைக் கூட்டிட்டுப் போலாம்னு நினைச்சேன். ப்ளீஸ்டி! நான் வேணா உங்க அம்மாகிட்ட கேட்கிறேன்" என்றவளை நம்பிக்கை இல்லாமல் பார்த்த நேகா,


"நீ கேக்குறது சரி தான்.. ஆனா எனக்கு எந்தச் சேதாரமும் ஏற்படாதுன்னு உறுதி கொடுத்துட்டு மோஹிமாகிட்ட கேளு" என்று நேகா தோளைக் குலுக்கவும்..


"நான் இருக்கேன், நீ வாடி" என்று தோழியை இழுத்துக் கொண்டு கீழே சென்றாள் தனுஷா.


இருவரும் கீழே வரவும், சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மோகனா, "ரெண்டு பேரும் பேசி முடிச்சாச்சா..?" என்று புன்னகையுடன் கேட்டாள்.


தனுஷாவோ அவளைப் பார்த்து பதிலுக்குப் புன்னகை செய்தவள், "ஆன்ட்டி, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள்.


"என்கிட்டயா..? என்னமா..?" என்று அவள் புரியாமல் கேட்க,


"அது வந்து ஆன்ட்டி.. எங்க பிரென்ட் அமலா இருக்காள்ல.. அவளுக்கு அவங்க சொந்த ஊரில வச்சி கல்யாணம் நடக்கப் போகுது" என்று ஆரம்பித்து எல்லாம் சொல்லி முடித்தவள், "ப்ளீஸ் ஆன்ட்டி! நேகாவையும் அனுப்பி வைங்க, பத்திரமா கூட்டிட்டுப் போய்ட்டு கூட்டிட்டி வந்து விட்டுருவேன்" என்று விண்ணப்பம் வைத்தாள் தனுஷா.


மோகனாவோ மகளை ஒரு பார்வை பார்க்க, அவளோ 'நான் இல்லை' என்பது போல் தோளை குலுக்கினாள்.


"இல்லமா.. அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம் முடிவு ஆகி இருக்கு. இந்த நேரத்தில வெளியே அனுப்புறது சரியா இருக்காது" என்று முடிவாக மறுத்தாள் மோகனா.


"என்ன ஆன்ட்டி இப்படிச் சொல்றிங்க..? இப்ப தான் அவ பிரீ பேர்ட்டா இருக்க முடியும். கல்யாணத்துக்கு அப்புறம் அவளே நினைச்சாலும் பிரெண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. ஓவிமா உங்க கூடவே இருக்கிறதால உங்களுக்குப் பிரெண்ட்ஷிப் பத்தி பிரச்சினை இல்ல. பட் நேகா அப்படியா..?" என்று மேலும் மேலும் பேசி மோகனாவின் மனதை கரைத்தாள் தனுஷா.


அவளது பேச்சில் "நல்லாவே பேசுற.. உன்னைப் பத்தி நேகா சொல்லிக் கேட்டு இருக்கேன். இப்பதான் நேர்ல பார்க்கிறேன்" என்று சொல்லிச் சிரித்தவள், "என்னைக்குப் போகணும்..?" என்று கேட்டாள்.


"வர்ற வெள்ளிகிழமை ஆன்ட்டி.. ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் இங்க வீட்ல இருப்போம்" என்றதும்


"சரிமா, அவங்க அப்பாகிட்ட கேட்டுட்டு நேகாவை அனுப்பி வைக்கிறேன்" என்று அனுமதி அளிக்கவும்,


"தேங்க்ஸ் ஆன்ட்டி! தேங்க்யூ சோ மச்!" என்ற தனுஷா, "அப்போ நான் கிளம்புறேன் ஆன்ட்டி. நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு, அம்மா தேடுவாங்க" என்றுவிட்டு அவள் எழுந்து கொள்ளும் நேரம், தனது அறையில் இருந்து அழுத்தமான காலடியோசையில் படியிறங்கி வந்தான் விக்ராந்த். அவனது பார்வை அவள் மீது நிலைத்திருக்க..


அவனது வரவை உணர்ந்த தனுஷாவின் உள்ளம் படபடத்தது. அவனைப் பார்க்க அவளது மனம் ஆசை கொண்டாலும் வெட்கம் அவளைத் தடுக்க, தோழியிடம் கூறி விட்டு அவனை ஏறிட்டுப் பார்க்காமலே அங்கிருந்து சென்றாள்.


கீழே இறங்கி வந்த விக்ராந்த்தோ, தனுஷா வேகமாகச் செல்வது கண்டு ஏனோ அவனது இதழில் புன்னகை அரும்பியது. தனக்குள் சிரித்தபடி வந்து சோபாவில் அமர்ந்தான்.


மோகனாவோ, "நேகா! நீதான் அவகிட்ட சொல்லி என்கிட்ட கேட்கச் சொன்னியா..?" என்று கேட்டு மகளை முறைத்தாள்.


"அயோயோ! நோ மோஹிமா! நான் அப்படிப் பண்ணுவேனா..? அப்படியே எனக்கு எது வேணும்ன்னாலும் தைரியமா உங்ககிட்ட இல்லனா மிஸ்டர்.கார்த்திக் கிட்ட நேரடியாவே கேட்டுருவேன். இப்படி ஆள் வச்சில்லாம் கேட்க மாட்டேன். அவகிட்ட நான் வரலனு தான் சொன்னேன். அவ தான் உங்ககிட்ட கேட்டுப் பார்க்கிறேன்னு சொன்னா" என்று படபடவென அன்னைக்கு விளக்கம் கொடுக்கவும்..


"இருக்காது மோஹிமா.. இவளை நம்பவே நம்பாதீங்க! இவ ஒரு ஃபிராடு!" என்று தன் பங்கிற்கு விக்ராந்த் அன்னையை ஏற்றி விட்டான்.


"ப்ரோ! அப்போ அடிக்காம விட்டதுக்கு இப்ப செமத்தியா என்கிட்ட வாங்கிக் கட்ட போறே, சொல்லிட்டேன்.." என்று நேகா பல்லைக் கடித்தபடி அண்ணனை நெருங்கி அவனை அடிக்க ஆரம்பித்தாள்.


தன் பிள்ளைகளின் செல்ல சண்டையை ரசித்தபடி எழுந்து சென்றாள் மோகனா.


வெள்ளிக்கிழமை காலை அழகாக விடிந்தது. அன்று சீக்கிரமே எழுந்து குளித்து முடித்துத் தயாரான நேகா, தனக்கு வேண்டியவற்றை எல்லாம் ஒரு டிராவல் பேக்கில் அடுக்கிக் கொண்டு கீழே வந்தாள்.


"நேகா! வா, நானே உன்னை உன் பிரென்ட் வீட்ல ட்ராப் பண்றேன்" என்றபடி வந்தான் விக்ராந்த். "தேங்க்ஸ் ப்ரோ!" என்றவள்,


"மோஹிமா! போய்ட்டு வரேன், பாய்ப்பா, கிராண்ட்மா மிஸ் யு.. பாய் ஸ்னேக் பேபி.." என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தன் தோழியின் திருமணத்திற்குக் கிளம்பினாள் நேகா.


இந்தப் பயணம் தன் வாழ்க்கையையே புரட்டிப் போட போகிறது என்பதை முன்னமே அறிந்து இருந்தால்.. இந்தப் பயணத்தை நேகா தவிர்த்திருப்பாளோ என்னவோ..?


*******



No comments:

Post a Comment