ஸ்வரம் 12

 



ஸ்வரம் 12…


கல்லூரிக்குள் நுழைந்து தனது ஸ்கூட்டியை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு, அதில் இருந்து இறங்கினார்கள் ரம்யாவும், ஸ்னேகாவும்.


"ஸ்னேகா! எல்லாம் படிச்சிட்டியாடி..?" என்று ரம்யா கேட்டுக் கொண்டே நடந்தாள்.


"சூப்பரா படிச்சுட்டேன், எப்பவும் போலப் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆகிருவேன்" என்று தன் கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டியபடி ஸ்னேகா பதில் அளிக்கவும்,


"ஆல் தி பெஸ்ட்டி..!!" என்று ஸ்னேகாவை வாழ்த்தி விட்டுத் தனது வகுப்பை நோக்கி நடந்தாள் ரம்யா.


சற்றுத் தூரத்தில் நின்று இவர்கள் வந்ததையும், பேசுவதையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் பத்ரி, இவர்களின் சீனியர்! அவன் படிப்பை முடித்துச் சில மாதங்கள் ஆகிறது. வேலை தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால் இன்னமும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.


இன்று ஏனோ தன்னவளைப் பார்க்க வேண்டும் போல் இருக்க, நொடியும் தாமதிக்காமல் சீக்கிரமே கல்லூரிக்கு வந்து அவளுக்காகக் காத்திருக்கிறான்.


அவனைத் தூரத்தில் இருந்தே பார்த்து விட்ட ரம்யா, வேகமாக அவன் அருகில் சென்று, "ஹாய் சீனியர்! எப்படி இருக்கீங்க? என்ன காத்து திடீர்னு இந்தப் பக்கம் வீசுது? ம்ம் ம்ம்.." என்று கிண்டலுடன் கேட்டாள்.


அவளைப் பார்த்துச் சிரித்தவன், "ஒரு வேலை விஷயமா இந்தப் பக்கம் வந்தேன். அப்படியே நம்ம காலேஜ் பார்த்ததும் உள்ள வந்துட்டேன்" என்று கூறவும்,


"ஆ! ஆ! இந்தப் பொய் தானே வேணாங்கிறது..?? உங்க ஆளை பார்க்கத் தானே வந்தீங்க?" என்று ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டுவது போல் அவனிடம் சிரித்துக் கொண்டே கேட்டாள் ரம்யா.


அவள் கூறியது உண்மை என்பதால் அவன் முகத்தில் அழகான வெட்கச் சிரிப்பு தோன்றியது. அதை முயன்று மறைத்தவன், "சீனியர்னு கொஞ்சமும் உனக்குப் பயமே இல்ல.." என்று பொய்யாக அவள் தலையில் கொட்டினான்.


"சீனியர்னு நினைச்சா தானே பயம் வரும். நாமதான் பிரெண்ட்ஸ் ஆச்சே?? சரி சொல்லுங்க! எங்கே வேலை பார்க்கிறீங்க? உங்க ஆளை பார்த்தீங்களா? லவ்வை சொல்லிட்டிங்களா?" என்று அவள் கேள்விகளை அடுக்க,


அவனோ, "வேலை தேடிட்டு இருக்கேன் ரம்யா. ஆக்சுவலி வேலை கிடைச்சதுக்கு அப்பறம் தான் என் ஆள்கிட்ட லவ்வை சொல்ல நினைச்சு இருந்தேன். ஆனா வேலைதான் கிடைச்ச பாடு இல்ல. சரி, என் லவ்வை சொல்லி என் காதலையாவது காப்பாத்திக்கலாம்னு வந்துட்டேன்" என்று கூறவும்,


"என்ன சீனியர் சொல்றிங்க.? கோல்ட் மெடல் வாங்கின உங்களுக்கு இன்னுமா வேலை கிடைக்கல..?" என்று அவள் ஆச்சர்யமாகக் கேட்டாள்.


"கோல்டு மெடல் வாங்குனா, அதை எல்லாம் வீட்ல ஷோகேஸ்ல வச்சி அழகு வேணா பார்க்கலாம்ன்னு.. ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்குனதுக்கு அப்புறம் தான் எனக்குப் புரிஞ்சது" ஆற்றாமையுடன் கூறினான் பத்ரி.


அவன் கூறியதைக் கேட்ட ரம்யாவுகோ அவன் மேல் இரக்கம் பிறக்க, "சீனியர்! உங்களுக்கு வேலை கிடைச்சுடுச்சு..!!" என்றாள் திடீரென.


"வாட்..!!?? என்ன என்னைப் பார்த்தா உனக்குக் கிண்டலா இருக்கா..?" என்று அவன் அவளை மீண்டும் முறைக்க,


"உண்மை தான் சீனியர்.. ஆர்.வி கன்ஸ்ட்ரக்ஷன் கேள்விப்பட்டு இருக்கீங்களா?" என்று கேட்டாள்.


"ஆமா, அது உங்க கம்பெனி தானே?" என்று அவன் கூறவும்,


"எஸ்! அங்கதான் உங்களுக்கு வேலை. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க" என்றவள், தனது மொபைலில் இருந்து தன் தந்தைக்கு அழைத்தாள்.


"யாருக்கு போன் பண்றா..?" என்று அவன் யோசனையுடன் அவளையே பார்த்திருந்தான்.


அந்தப் பக்கம் முக்கியமான மீட்டிங்கில் இருந்த ரவிவர்மனோ மொபைல் ஒலிப்பது கண்டு எடுத்துப் பார்த்தவன், அழைப்பது மகள் என்றதும் உடனே ஆன் செய்து, "சொல்லு குட்டிமா, காலேஜ் போய்ட்டியா..?" என்று கேட்டான்.


"வந்துட்டேன்ப்பா.. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்ப்பா, அதான் உங்களுக்குப் போன் பண்ணினேன். நீங்க இப்ப ப்ரீயா இருக்கீங்களாப்பா..?" என்று கேட்க, தன் முன்னே இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவன், "ஃப்ரீ தான் குட்டிமா.. என்ன ஹெல்ப் வேணும் சொல்லு!" என்றான்.


"அப்பா!‌ என்னோட சீனியர், பேர் பத்ரி! கோல்ட் மெடலிஸ்ட்! நம்ம கம்பெனியில நல்ல சம்பளத்துல அவருக்கு வேலை வேணும். நான் இப்பவே அனுப்பி வைக்கிறேன், ஓகேவா?" என்று ரம்யா கேட்கவும்,


மகளின் பேச்சில் வியப்புடன் அவனது புருவங்கள் உயர்ந்தது. ஏனெனில் இதுவரை இப்படி யாருக்காகவும் அவள் வேலை வேண்டும் என்று கேட்டதே இல்லையே?! அதனால் மறுபேச்சுப் பேசாமல், "சரிடா! வரச் சொல்லு!" என்று ரவிவர்மன் கூறி விட்டான்.


"லவ் யு ப்பா!!" என்று குதூகலித்தவள் மொபைலை அணைத்து விட்டு, "சீனியர்! இப்பவே எங்க கம்பெனிக்கு போங்க. என் பேரை சொல்லி அப்பாவை மீட் பண்ணுங்க. உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் ரெடியா இருக்கும். அதுக்கு அப்புறம் கையில வேலையோட கெத்தா போய் உங்க ஆள்கிட்ட லவ்வை சொல்லுங்க" என்று கூறி கண் சிமிட்டி விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள் ரம்யா.


குழந்தைத்தனம் மிக்க சிறு பெண்! ஒரு நிமிடத்தில் அவனுக்கு வேலை ஏற்பாடு பண்ணி விட்டுச் சாதாரணமாகச் செல்கிறாள். அவளைத் திகைப்புடன் பார்த்திருந்த பத்ரி, பின்பு ரம்யா கூறியது போல், வேலை கிடைத்ததும் தனது காதலைத் தன்னவளிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று அங்கிருந்து ஆர்.வி கன்ஸ்ட்ரக்ஷனை நோக்கித் தனது வாகனத்தைக் கிளப்பினான்.


மதியம் பரீட்சை முடிந்து வெளியே வந்த ஸ்னேகா ரம்யாவிற்காகக் காத்திருக்க, அவளும் சிறிது நேரத்தில் வந்து விட்டாள்.


"ஸ்னேகா! வாழ்த்துக்கள்டி!! எக்ஸாம் முடிச்சாச்சு, அப்புறம் என்ன பண்ணப் போறே? எப்பவும் போல ஃபாரின் போய்ப் படிக்கப் போறேன்னு சொல்லுவியே.. அதைத்தான் பண்ணப் போறியா..?" என்று கேட்டுக் கொண்டே ஸ்கூட்டியின் அருகே செல்ல,


"ஆமா ரம்யா, கனடால காலேஜ் பார்த்து அப்ளிகேஷன் போட்டு அட்மிஷனும் கிடைச்சுருச்சு. அண்ணாகிட்ட விசாக்கு அப்ளை பண்ணச் சொல்லணும். நேகாக்கா கல்யாணம் முடிஞ்சதும் கிளம்புற மாதிரி ஏற்பாடு பண்ணனும்" என்று ஏதோ பக்கத்து ஊரில் போய்ப் படிக்கப் போவது போல் அவள் அசால்டாகக் கூறினாள்.


அதில் ஏகத்துக்கும் அதிர்ந்த ரம்யா, "அடிப்பாவி!! ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துட்டு சைலண்ட்டா என்ன வேலை பார்த்து இருக்கே..!! என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியாடி..?" என்று பல்லைக் கடித்தவள், "இந்த விஷயம் மோஹிமாக்குத் தெரியுமா..?" என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டாள்.


"ஏற்கனவே அண்ணாகிட்ட சொல்லி வச்சிருக்கேன். பட் அப்ளிகேஷன் போட்டது சொல்லல. அட்மிஷன் கிடைச்சது கூட யாருக்கும் தெரியாது. உன்கிட்ட தான் மொதல்ல சொல்றேன். வீட்ல லாஸ்ட் மினிட்ஸ்ல தான் சொல்லணும். இப்பவே சொன்னா மோஹிமா கண்டிப்பா விட மாட்டாங்க. ஆனா நான் நிச்சயம் கனடா போயே ஆகணும் ரம்யா..!!" என்றவளின் குரலில் அவ்வளவு உறுதி இருந்தது.


அதன்பிறகு நாட்கள் யாருக்கும் காத்திராமல் வேகமாகக் கடந்தது. ரிஷிவர்மன் - நேகா திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில்.. குலதெய்வ வழிபாடு, பத்திரிக்கை விநியோகம், நேகாவிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவது என மோகனாவின் குடும்பம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, தங்கையின் திருமணத்திற்கு மேகாவும் தன் கணவனுடன் வந்து விட்டாள்.


இப்படி எல்லோரும் சந்தோஷமும் மகிழ்ச்சியாக இந்தத் திருமண வைபோகத்தில் ஆர்வமாக இருக்க, இதில் எதிலுமே கலந்து கொள்ளாமல் தனது அறையின் உள்ளே அடைந்து கிடந்தாள் நேகா.


அவளது இந்த மாற்றம் இப்பொழுது வந்ததில்லை! என்று அவளது தோழி அமலாவின் திருமணத்திற்குச் சென்று வந்தாளோ, அன்றில் இருந்து அவள் இப்படித்தான் இருக்கிறாள்!


ஆம்! தோழியின் திருமணத்திற்காகச் சென்ற அந்த இரண்டு நாட்கள், அவள் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தது.


தோழியின் திருமணத்திற்குச் சென்ற நேகா, இரண்டாம் நாள் இரவு ஒன்பது மணியளவில் வீட்டுக்குள் நுழைந்தாள்.


அவளைப் பார்த்ததும் முகம் மலர, "அக்கா! உங்க பிரென்ட் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிதா? நல்லா எஞ்சாய் பண்ணினிங்களா?" என்று ஸ்னேகா கேட்டாள்.


தங்கைக்குச் சிறு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து விட்டு, "ரொம்பத் தூரம் டிராவல் பண்ணி வந்தது எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு, நான் ரெஸ்ட் எடுக்குறேன்" என்றவள், யாருடைய முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்காமல் அவளது அறைக்குச் சென்றாள்.


மகளைக் கேள்வியாகப் பார்த்தாள் மோகனா. ஏனெனில் என்னதான் டயர்டாக இருந்தாலும் இவ்வளவு அமைதியாக இருப்பவள் இல்லை தன் மகள் என்பதால், 'என்னாச்சு இவளுக்கு?' என்பது போல் அவள் யோசனையுடன் தன் கணவனைப் பார்த்தாள்.


மனைவியின் பார்வையைப் புரிந்து கொண்ட கார்த்திக், "நிஜமாவே அவளுக்கு டயர்டா இருக்கும். அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு போய்க் கொடு!" என்க..


"ம்ம்ம்.. சரிங்க.." என்றபடி சமையல் அறைக்குச் சென்றாள் மோகனா.


இங்குத் தனது அறைக்கு வந்து கதவை அடைத்து அதில் சாய்ந்து நின்ற நேகாவுக்கோ, அப்படி ஒரு கோபம்.. ஆற்றாமை.. அழுகை வந்தது. தன்னை நினைத்து அவளுக்கே அருவருப்பாக இருக்க, எதையாவது போட்டு உடைத்து நொறுக்க வேண்டும் என்ற ஆத்திரம் எழ, தன் கையில் இருந்த பேக்கை தூக்கி எறிந்தவள், முயன்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து ஷவரை திறந்து விட்டு அதன் அடியில் நின்றாள்.


மனதில் அனலாய் தகித்துக் கொண்டிருந்தவளை நீரின் குளுமையால் கூடக் குளிர்விக்க முடியவில்லை. அப்படியே தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் நெஞ்சோடு ஒட்டி வைத்து அதில் முகம் புதைத்தவள், அடுத்த நொடி கதறி அழுதாள். அவளது அழுகை வெளியே யாருக்கும் கேட்கவில்லை. அவள் கண்ணீரோ நீருடன் சேர்ந்து கரைந்து காணாமல் போனது.


அன்றில் இருந்து அவள் யாரிடமும் பேசுவது இல்லை, சரியாகச் சாப்பிடுவது இல்லை. அப்படியே அவளது அறையை விட்டு வெளியே வந்தாலோ, அவளது கவனம் அங்கிருக்காது. எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். அவளது இந்த மாற்றத்தை எல்லோரும் வேறு விதமாக எண்ணிக் கொண்டனர். மேகாவின் திருமணத்தின் போது அவள் அழுத அழுகையை நினைத்துப் பார்த்தவர்கள், திருமணத்தினால் வரும் பிரிவை எண்ணிக் கலங்குகிறாள் என்று எண்ணி அனைவரும் அவளைச் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.


அவர்களிடம் எதேதோ சொல்லிச் சமாளித்தவள், தன்னைச் சாதாரணமாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்தாள். என்ன தான் அப்படி முயன்றாலும் அவளது மனம் ரணமாய் வலிக்கும். தனது வேதனையை மற்றவர்கள் முன் காட்ட விரும்பாமல், தன் அறையே தஞ்சம் என்று உள்ளுக்குள் இருக்க ஆரம்பித்தாள்.


அன்றும் அப்படித்தான்.. வீட்டில் உள்ள அனைவரும் கல்யாண வேலைகளில் மும்முரமாக இருக்க, நேகாவோ தன் அறைக்குள் விட்டத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அப்பொழுது அவள் அருகில் கிடந்த அவளது மொபைல் ஒலி எழுப்பியது. யார் என்று தலையை மட்டும் திருப்பிப் பார்க்க, அதில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டு அவளது தேகம் இறுகியது.


ஒரு முறை அடித்து ஓய்ந்த மொபைல் மீண்டும் ஒலிக்க, வேகமாக அழைப்பைத் துண்டித்து விட்டாள். அடுத்த நொடி மறுபடியும் விடாமல் ஒலிக்க, உதட்டை கடித்துக் கொண்டு, மொபைலை எடுத்து முழுமையாக அணைத்து விட்டுக் கட்டிலில் தூக்கி போடும் நேரம்.. அவளது அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மோகனா.


தாயைப் பார்த்ததும் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டவள், அருகில் கிடந்த ஒரு புத்தகத்தை எடுத்து அதில் தன் பார்வையைப் பதித்தபடி அமர்ந்திருந்தாள் நேகா.


மகளின் அருகே வந்த மோகனா அவளது தலையைத் தடவி, "நேகா.." என்று அழைக்க,


"ஹான்.. மோஹிமா.." என்று நிமிர்ந்து பார்த்தாள் நேகா. எப்பொழுதும் துடிப்பாக இருக்கும் தன் மகள், இன்று அந்தத் துடிப்பில்லாமல் கண்ணில் உயிர்ப்பையும் இழந்து இருப்பதைக் கண்டு அந்தத் தாயின் உள்ளம் பரிதவித்துத் தான் போனது.


மகளின் அருகே அமர்ந்து அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தவள், "நேகா! அம்மாகிட்ட ஏதாவது மறைக்கிறியாடா?" என்று நேரடியாகக் கேட்டாள் மோகனா.


தாயின் இந்தத் திடீர் கேள்வியில் நேகாவின் உடல் நடுங்கிப் போயிற்று. அதை நொடியில் உணர்ந்து கொண்ட மோகனா பதைபதைப்புடன்,


"நேகா! உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையா..? அதான் எப்படிச் சொல்றதுன்னு தெரியாம இப்படி இருக்கியா..? நான் உன் மேல இந்தத் திருமணப் பந்தத்தைத் திணிக்கிறேனா..?" என்று கேட்டவள் மகளின் கன்னம் தொட்டு நிமிர்த்தினாள்.


தாயின் கையை இறுக பற்றிக் கொண்ட நேகா, எதையோ சொல்லத் துடித்தவள், அது முடியாமல் போக, எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் அவளது கண்கள் கண்ணீரைப் பொழிய ஆரம்பித்தது.


விளையாட்டுக்குக் கூட அழாத தன் மகளின் இந்தக் கண்ணீரை கண்டு அந்தத் தாயின் மனம் துணுக்குற்றது. உடனே தன் மகளை மார்போடு அணைத்துக் கொண்டு, "நேகா! எனக்கு ஓவியா முக்கியம் தான். அதை விட என் குழந்தைங்க சந்தோஷம் ரொம்ப ரொம்ப முக்கியம். உனக்கு விருப்பம் இல்லாதது இங்க எதுவும் நடக்காது. எதுவா இருந்தாலும் இந்த அம்மாகிட்ட சொல்லுடா!" என்று கலக்கத்துடன் கேட்டாள்.


தாயின் கலக்கம் மகளையும் பாதிக்க, முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட நேகா, தாயின் அணைப்பில் இருந்து விலகாமல், "அ..அதெல்லாம் இல்ல மோஹிமா. கல்யாணம் முடிஞ்சதும் எல்லாரையும் விட்டுட்டுத் தனியா பெங்களூர் போகணுமே..? அ..அத்தான் வேற என்கிட்ட எப்படி நடந்துப்பாங்களோ..? மறுபடியும் என்னை இங்க கூட்டிட்டு வருவாங்களோ மாட்டாங்களா..? இ..இதெல்லாம் நினைச்சு மனசுக்குள்ள சின்னப் பயம்.. அதான்.." எனத் தாயின் முகம் பாராமல் மனதறிந்து பொய்யுரைத்தாள் நேகா.


மகளின் நாடி தொட்டு நிமிர்த்தியவள், "உன் வாய் தான் அப்படிச் சொல்லுது. ஆனா உன் கண்கள் வேற சொல்லுதே?" என்று அழுத்தமாகக் கேட்கவும்,


"இல்ல மோஹிமா, நான் எப்பவும் போலத் தான் இருக்கேன்" என்று கண்களுக்கு எட்டாத சிரிப்பை அவள் உதிர்த்தாள்.


அப்பொழுதும் மகளை நம்பாத பார்வை பார்த்த மோகனா, "நிஜமா ஒன்னும் இல்ல தானே கண்ணம்மா..?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.


அவளோ இல்லை என்று தலையாட்டியவள், "உங்க மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா மோஹிமா..?" என்று குழந்தையாய் கேட்ட மகளை அடுத்த நொடி மடிதாங்கினாள் மோகனா.


தாயின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அன்னையின் மடியில் படுத்துக் கொண்டாள் நேகா. எவ்வளவு நேரம் மகளின் தலையை மோகனா கோதி கொடுத்தாளோ..?! நேகா உறங்கி விட்டது தெரிந்ததும், அவளை மெதுவாகக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு, போர்வை ஒன்றை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டவள், மகளின் நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.


தாய் வெளியேறவும் கண்களைத் திறந்த நேகாவோ, "என்னை மன்னிச்சுருங்க மோஹிமா..!!" என்று அழுதவளின் கண்ணீர் தலையணையை நனைத்தது.


********


மேகாவின் திருமணம் நடந்த அதே மண்டபம்..!! சொந்தத்தாலும், சுற்றத்தாராலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்னும் சில மணி நேரத்தில் நேகா - ரிஷியின் திருமணம் நடக்க இருக்கிறது.


வாசலில் நின்று திருமணத்திற்கு வருபவர்களைப் பன்னீர் தெளித்து வரவேற்றுக் கொண்டிருந்தாள் ரம்யா.


அப்பொழுது தன் நண்பனுடன் அந்தத் திருமணத்திற்கு வந்தான் பத்ரி. ரவிவர்மனின் கம்பெனியில் அவன் வேலை செய்வதால் அலுவலக ஊழியர்கள் சார்பில் அவனுக்கும் அழைப்பு சென்றிருந்தது.


அவனைப் பார்த்ததும், "ஹாய் சீனியர்! வெல்கம்!" என்று முகம் மலர ரம்யா அவனை வரவேற்க, சிறு புன்னகை ஒன்றை அவளுக்குப் பதிலாகத் தந்தான்.


"புது வேலை உங்களுக்குப் பிடிச்சிருக்கா சீனியர்..?" என்று அவள் கேட்க,


"எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உனக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்" என்றவன் "ஆமா, உன் பிரென்ட் எங்கே…?" என்று ஸ்னேகாவை கேட்க. 


"ரூம்ல இருக்கா, இப்ப வந்துருவா…" என்று ரம்யா கூறவும்,


"ம்ம்.." என்றவாறு உள்ளே சென்று விட்டான் பத்ரி


அதே நேரம் மண்டப வாசலில் வந்து நின்றது பி.எம்.டபிள்யூ வாகனம். அதில் இருந்து கோட் சூட் அணிந்து கம்பீரமாக இறங்கினான் அஜித்குமார். கூடவே தனுஷாவும் அவனது தாயும் இறங்க, குடும்பச் சகிதமாக உள்ளே வந்தவர்களை எதிர்கொண்டான் விக்ராந்த்.


"வாங்க! வாங்க!" என்று அவர்களை வரவேற்று முதல் வரிசையில் அமர வைத்து விட்டு, அவர்களுக்குக் குளிர்பானம் வரவழைத்துக் கொடுத்தவன், அடுத்து வந்த விருந்தினரை வரவேற்கச் சென்றான். எப்பொழுதும் தன்னவனைக் கண்டால் ஆவலுடன் பார்வையைச் செலுத்தும் தனுஷா, அன்று கலக்கத்துடன் அண்ணனைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.


காரணம்.. தன் அண்ணன் நேகாவின் திருமணத்தை நிறுத்த இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக அவளது திருமணத்திற்கு வந்தது மட்டும் அல்லாமல், சாதாரணமாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று தெரியாமல், அண்ணனின் வாழ்க்கையை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால் அவளின் கவனம் விக்ராந்த் மீது இல்லாமல் போனது. தங்கை தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது உணர்ந்து தனக்குள் சிரித்துக் கொண்ட அஜித்குமார்,


"என்ன தனு.. உன் பிரெண்டை பார்க்கப் போகாம என்னையே பார்த்துட்டு இருக்கே..?" என்று கண் சிமிட்டிக் கேட்டான்.


"ம்பச்.. எங்கண்ணா..‌? அமலா கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து என் போனையே அட்டென்ட் பண்ண மாட்டேன்கிறா. நானும் விடாம அடிச்சா, அடுத்த நிமிஷம் ஸ்விட்ச் ஆப்னு வருது. சரின்னு நேர்ல பார்க்கப் போனா, நான் போன நேரம், அவளுக்கு உடம்பு சரி இல்ல தூங்கிட்டு இருக்கானு சொல்லிட்டாங்க. ஏன் இப்படி இருக்கானு எனக்கு ஒன்னுமே புரியல.." என்று அலுத்துக் கொண்டவளை நிதானமாகப் பார்த்தவன்,


"இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சிடும்.." என்றவனின் குரலில் என்ன இருந்ததோ..?? திடுக்கிட்டுத் தன் அண்ணனைக் கலவரத்துடன் பார்த்தாள் தனுஷா.


மணமகள் அறையில் நேகாவுக்கு மணப்பெண் அலங்காரம் நடந்து கொண்டிருக்க, மேகாவோ அன்னை கொடுத்து விட்டுச் சென்ற வைர அணிகலன்களைத் தங்கைக்குப் போட்டு விட்டுக் கொண்டிருந்தாள்.


பச்சைநிற காஞ்சி பட்டில் வைர நகைகள் மின்ன அழகு நிலைய கலைஞர்களின் கை வண்ணத்தில் நேகா அழகுடன் மிளிர்ந்து கொண்டிருந்தாலும், அவள் கண்களோ ஜீவனைத் தொலைத்து இருந்தது.


"மேம், கொஞ்சம் மேல பாருங்க, கண்ணுக்கு மை தீட்டணும்" என்று பார்லர் பெண் கூற, அவளோ அதைக் காதில் வாங்காதது போல் அமர்ந்திருந்தாள்.


அந்தப் பெண்ணோ நேகாவின் நாடி தொட்டு நிமிர்த்தி அவள் கண்ணுக்கு மையைத் தீட்ட போகும் நேரம், அவளது கண்கள் கலங்கி இருப்பது கண்டு "மேம்.." என்றாள்.


அதில் "சாரி!!" என்றுவிட்டு தன் கண்களைச் சிமிட்டிக் கண்ணீரை உள்ளிழுத்தவள் அமைதியாக இருக்க, அந்தப் பெண்ணும் தன் வேலையை முடித்து விட்டு,


"மேம்.. எங்க வேலை முடிஞ்சிது, நாங்க கிளம்புறோம்" என்று மேகாவிடம் கூறி விட்டு அவர்கள் கிளம்பிச் செல்லவும்,


மேகாவோ, "ரொம்ப அழகா இருக்கடி!!" என்று கூற, அவளது வார்த்தையில் விரக்தி புன்னகை தான் வந்தது நேகாவிற்கு.


அப்பொழுது அந்த அறை வாசலில் நின்று "மேகா!" என்று அழைத்தான், அவளது கணவன் சஞ்சீவ்.


கணவன் அழைக்கவும், "இதோ வந்துடுறேன்.." என்று தங்கையிடம் கூறி விட்டுக் கணவனுடன் அவள் வெளியே சென்றாள்.


நேகாவோ எதிரே கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.


அவளது பிம்பமோ, 'என்ன நேகா.. நீ செய்யப் போறது சரியா?' என்று கேட்டு அவளைக் குற்றம் சாட்டியது.


"நான் எந்தத் தவறும் செய்யலையே..?" என்று அவள் மனதுக்குள் மறுக,


'அதுக்காக நடந்தது எதுவும் இல்லன்னு ஆகிடுமா என்ன?' என்று அவளைக் கேலி செய்து சிரித்தது. அதில் மனதால் கூனி குறுகி போனாள் நேகா.


அந்நேரம் அவளது மொபைல் ஒலி எழுப்ப, எடுத்து யார் என்று பார்த்தவளின் நெஞ்சு கூடு உலர்ந்து போனது. அந்த ஏசி அறையிலும் அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.


மொபைலின் அழைப்பு ஒருமுறை அடித்து ஓய்ந்து நின்றிருக்கத் தன் கண்களை மூடித் திறந்தாள் நேகா. அடுத்து அவளது மொபைலில் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்க, திறந்து பார்த்தவளின் கண்கள் அதில் எழுதி இருந்தவற்றைப் பார்த்ததும் அதிர்ந்து விரிந்தது.


அப்பொழுது கணவனிடம் பேசி விட்டு வந்த மேகா, "நேகா! அத்தை கூப்பிடுறாங்க, நான் போய் என்னனு கேட்டுட்டு வந்துடுறேன்" என்றவள், "ஹான்.. சொல்ல மறந்துட்டேன் பாரு! உன் பிரென்ட் தனுஷாவும் அவ பேமிலியும் வந்துருக்காங்க. அவளை உனக்குத் துணைக்கு இருக்க இங்க வரச் சொல்றேன், சரியா..?" என்று விட்டுச் செல்லவும், நேகாவின் இதயமோ வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. சட்டென்று மேகாவின் கையைப் பிடித்து, "ஒரு நிமிஷம்..!!" என்று அவளைத் தடுத்து நிறுத்தினாள் நேகா.


"என்ன நேகா ஏதும் வேணுமா..?" என்று கேட்க,


ஒரு நிமிடம் கண்களை மூடி எதையோ நினைத்தவள் அடுத்த நொடி, "நான் அப்பாகிட்ட பேசணும். பிளீஸ்! கொஞ்சம் வரச் சொல்லேன்" என்றாள்.


"இந்த நேரத்துலயா? எதுக்குடி?" என்று புரியாமல் மேகா கேட்க,


"ப்ளீஸ்! என்கிட்ட எதுவும் கேட்காதே! சீக்கிரம் அப்பாவை வரச் சொல்லு!" என்றவளின் கண்ணில் மன்றாடல் இருந்தது.


'என்னாச்சு இவளுக்கு?' என நேகாவைத் திரும்பி திரும்பிப் பார்த்தபடி தந்தையை அழைக்கச் சென்றாள் மேகா.


சிறிது நேரத்திலேயே மகளைக் காண வந்தான் கார்த்திக். "நேகா! என்னடா..? என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு வரச் சொன்னியாம், எதுக்குடா..?" என்று அவன் கேட்டான்.


அவளோ, எழுந்து சென்று அறைக்கதவை சாற்றி விட்டு எதுவும் பேசாமல் அமைதியாகத் தலை குனிந்து நின்றாள்.


மகளின் அருகே வந்த கார்த்திக், "நேகா..!!" என்று அழைக்க, நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கி இருக்க, பதறித்தான் போனான் அந்தத் தந்தை.


"நேகாமா! என்னடா..? சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல இப்ப எதுக்கு அழுகை..?" அவளது கண்ணீரைத் துடைத்தபடி கேட்டான் கார்த்திக்.


சில நாட்களாக மகளின் அமைதி அவனுக்கு ஏனோ சரியாகப் படவில்லை. அதைப் பற்றி மனைவியிடம் அவன் பேச, மோகனாவும் நேகாவிடம் பேசி, 'ஒன்னும் பிரச்சனை இல்லை.. அவள் மனதில் திருமணம் குறித்துச் சிறு பயம் மட்டுமே இருக்கிறது' என்று கூறவும் சற்று நிம்மதியாக இருந்ததான்.


ஆனால் இப்பொழுதோ மணமேடைக்குச் செல்ல இன்னும் சில மணி நேரமே இருக்க, அவன் மகளோ அவனை அழைத்தது மட்டும் அல்லாமல், என்ன ஏது என்று சொல்லாமல் அழுகையில் கரைகிறாள். என்னவாக இருக்கும் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,


"அப்பா..!!" என்று கதறியபடி தந்தையின் தோள் சாய்ந்தாள் நேகா.


மகளை ஆதரவாக அணைத்துக் கொண்டவன், "என்ன கண்ணம்மா..? எதுனாலும் அப்பாகிட்ட சொல்லுடா. நான் பார்த்துக்கிறேன்" என்று அவளை ஊக்குவித்தான்.


தந்தையை அண்ணாந்து பார்த்த நேகா, "அ..அப்பா.. எ..எனக்கு இ..இந்தக் கல்யாணம் வேண்டாம்ப்பா.." என்று கண்ணீர் மல்க கூற, அதைக் கேட்டு அதிர்ந்து நின்றான் கார்த்திக்!!


******


1 comment:

  1. Enda Ajith nee villain ah Marita Pola oruthan um olunga yosika matranumgale, nega nee kalyanam niruthinalum kalyanam nadakum aduku dan oruthan plan pannitu dan kalyaname panrane

    ReplyDelete