ஸ்வரம் 13

 



ஸ்வரம் 13…


மகள் கூறியதைக் கேட்டு அதிர்ந்த கார்த்திக், "நேகா! என்ன சொல்றே?" என்று அதிர்ச்சி விலகாமல் அவளிடம் கேட்டான்.


"ஆமாப்பா, எனக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பம் இல்ல" என்று அழுதபடி அவள் கூறவும்,


"ஏன்மா.. என்னாச்சு? எதுக்குத் திடீர்னு இப்படிச் சொல்றே? ஏதும் பிரச்சினையா? என்னனு அப்பாகிட்ட சொல்லுடா" என்று பதற்றத்துடன் கேட்டான் கார்த்திக்… 


"என்கிட்ட எதுவும் கேட்காதீங்கப்பா. ப்ளீஸ்! இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க" என்று மட்டுமே கூறி அவள் தந்தையிடம் மன்றாடினாள்.


காரணம் எதுவும் சொல்லாமல் திரும்ப திரும்பத் திருமணத்தை நிறுத்தும்படி கூறும் மகளின் மீது சிறு கோபம் எழ, "நேகா! இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதுவும் செய்ய முடியாது. இதுல உன்னோட வாழ்க்கை மட்டும் இல்லை, கூடவே ரெண்டு குடும்பத்தோட கௌரவமும் அடங்கி இருக்கு. ஊரெல்லாம் பத்திரிக்கை வச்சி அழைச்சு எல்லோரும் வந்துட்டு இருக்கிற நேரத்துல, நீ இப்படிச் சொன்னா நான் என்னன்னு எடுத்துக்கிறது?" என்று சற்றுக் கோபமாகவே கேட்டான் கார்த்திக்.


அவன் பாசமுள்ள தந்தை தான்! தன் பிள்ளைகளுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வான் தான்! ஆனால் இத்தனை நாட்கள் விட்டு விட்டுக் கடைசி நிமிடத்தில் மகள் இப்படிக் கூறினால்.. அவனுக்கும் கோபம் வரும் தானே??


"என்னை மன்னிச்சுடுங்கப்பா!! என்னால இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கவே முடியாது!" என்று அழுகையில் கரைந்தபடி அவள் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும் போது,


"நேகா!!" என்று அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் மோகனா.


உள்ளே வந்தவள், அங்குக் கணவனையும் அவர் நெஞ்சில் சாய்ந்திருந்த மகளையும் கண்டு, "என்ன அப்பாவும் பொண்ணும் கொஞ்சிட்டு இருக்கீங்க?" என்று சிரித்தபடி அவர்கள் அருகில் வந்தவள், அப்பொழுது தான் கவனித்தாள் மகள் அழுது கொண்டிருப்பதை..


அன்று போல் திருமணத்தை நினைத்துப் பயத்தில் அழுகிறாளோ என எண்ணி மகளின் தலையைக் கனிவுடன் தடவியவள்,


"நேகா!! இப்ப என்னாச்சுன்னு இப்படி அழுதுட்டு இருக்கே? என் பொண்ணு எவ்வளவு தைரியசாலினு நினைச்சிக்கிட்டு இருக்கேன். நீ என்னன்னா இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் அழுதுட்டு இருக்கே. பொண்ணா பிறந்தா கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போகத்தானே வேணும்? நீ யார் வீட்டுக்கு மருமகளா போகப் போறே.. உங்க ஓவிமா வீட்டுக்குத்தானே?" என மகளின் அழுகைக்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்து அவளைச் சமாதானம் செய்தாள் மோகனா.


ஆனால் மகளின் அழுகைக்குக் காரணம் புரிந்த கார்த்திக்கோ, அந்தக் காரணத்தை மனைவியிடம் எப்படிக் கூறுவது என்றும், அவளை எப்படிச் சமாளிப்பது என்றும் புரியாமல் யோசனையில் நின்றிருக்க,


"என்னங்க.. அவ தான் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்கான்னா, நீங்களும் மசமசன்னு நின்னுகிட்டு இருக்கீங்க. எவ்ளோ வேலை இருக்கு? வாங்க, அதைப் போய்ப் பார்க்கலாம்" என்று விட்டு வாசலை நோக்கித் திரும்பிய மனைவியை, "மோகனா! கொஞ்சம் நில்லு!" என்று அவளைத் தடுத்து நிறுத்தினான் கார்த்திக்.


கணவனின் அழைப்பில் கேள்வியாக அவனைத் திரும்பிப் பார்த்தவளிடம் எப்படிக் கூறுவது என்று சிறிது தயங்கிய கார்த்திக், பின்பு, தன் மகளின் மனது தான் முக்கியம் என்று முடிவுக்கு வந்தவனாக விஷயத்தை அவளிடம் கூறினான்.


கணவன் கூறியதைக் கேட்டு அவனை முறைத்தவள், "கல்யாணம்ங்கிறது அவளுக்கு விளையாட்டா போச்சா?" என்று கேட்டு மகளையும் முறைத்தாள்.


கார்த்திக்கோ அழுத்தமாகத் தன் மனைவியைப் பார்த்து, "இங்க யாரும் விளையாடல, உண்மையைத்தான் சொல்றேன். நம்ம பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்தில விருப்பம் இல்லைனு சொல்றா" என்று கூறவும், மோகனாவிற்கு அப்படியொரு கோபம் வந்தது.


தந்தையிடம் ஆதரவு தேடி அவர் நெஞ்சில் சாய்ந்திருந்த மகளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துத் தன்னைப் பார்க்கச் செய்த மோகனா, "நேகா! என்ன இது? உங்க அப்பா என்னன்னமோ சொல்றாரு. நீயும் அதைக் கேட்டுட்டு கல்லு மாதிரி இருக்கே, பதில் சொல்லு!!" என்று கேட்டவளுக்கோ கோபம் கொஞ்சம் கூடக் குறையவே இல்லை.


ஏற்கனவே மாப்பிள்ளையான ரிஷி இன்னும் வரவில்லை என்ற டென்ஷனில் அவள் இருக்க, இதில் கணவனும் மகளும் சேர்ந்து இன்னும் அதிகமாக டென்ஷன் படுத்தினால் கோபம் வரும் தானே??


நேகாவோ தாயின் முகத்தைப் பார்க்க சக்தி இல்லாமல் குற்ற உணர்வில் தலையைக் குனிந்து கொண்டவள், "ஆ..ஆமா மோஹிமா, அப்பா சொல்றது உண்மைதான்" என்று அவள் சிறு தடுமாற்றத்துடன் கூறி விட, தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து கணவனைப் பார்த்தாள் மோகனா.


அதே நேரம் தாயை தேடி வந்த மேகாவோ, அங்கு நடந்து கொண்டிருந்த வாக்குவாதத்தைக் கவனித்தவள், நிலைமையைப் புரிந்து கொண்டு தன் அண்ணனைத் தேடிச் சென்றாள்.


கார்த்திக்கோ, "கோபப்படாம கொஞ்சம் அமைதியா இரு மோகனா. அவகிட்ட பொறுமையா விசாரிப்போம்" என்று அவன் கூற,


"என்னங்க சொல்றிங்க..? பொறுமையா விசாரிக்கணுமா?? மண்டபம் முழுக்க ஆட்கள் வந்தாச்சுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம் வந்திடும். அப்படி இருக்கும் போது கடைசி நேரத்தில இவ இப்படிச் சொன்னா என்னங்க அர்த்தம்?" என்று அவள் கோபத்தில் பொரிய ஆரம்பித்தாள்.


"மோகனா! மறுபடியும் சொல்றேன், அமைதியா இரு! ரிஷி இன்னும் மண்டபத்துக்கே வரல. முகூர்த்தத்துக்கு நேரம் ஆகுதுன்னா ஆகிட்டுப் போகட்டும். எனக்கு அது பத்தி கவலை இல்ல. நமக்கு நம்ம பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியணும். அவ மனசுதான் முக்கியம்! அவளுக்குப் பிடிக்காதது எதுவும் இங்க நடக்கக் கூடாது! ஏன்னா வாழப் போறது அவதான். அது மாதிரி இந்த முகூர்த்தம் போனா அடுத்த முகூர்த்தத்துல கண்டிப்பா கல்யாணம் வைச்சிடலாம்" என்று மகளைத் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன்.


"ஆனா அது யார் கூட என்பதுதான் இப்ப கேள்வி?" என்று கார்த்திக் கூற, நேகாவோ அதிர்ந்து தந்தையைப் பார்த்தாள். மகளின் அதிர்ந்த பார்வையே அவனுக்குச் சொல்லாமல் சொன்னது அவளது மனதை.


"சொல்லும்மா! இந்தக் கல்யாணம் உனக்குப் பிடிக்கலன்னா, அப்ப உன் மனசுக்கு வேற யாரையோ பிடிச்சி இருக்குன்னுதானே அர்த்தம்? அது யாருன்னு சொல்லு!!" என்று அழுத்தத்துடன் கார்த்திக் கேட்க, நேகாவோ தந்தை கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள்.


கணவனின் கேள்வியிலும், மகளின் தவிப்பிலும் விஷயத்தை யூகித்த மோகனாவுக்கு மேலும் கோபம்தான் பெருகியது. கணவனையும், மகளையும் அனல் தெறிக்கப் பார்த்தவள், "என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா?? இவகிட்ட சம்மதம் கேட்டுத்தானே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினோம். பிடிக்கலன்னா அப்பவே சொல்லியிருக்க வேண்டியதுதானே? எதுக்குத் தலையைத் தலையை ஆட்டினா?


சரி, அப்ப பிடிச்சது இப்ப பிடிக்கலன்னு கூட வச்சிக்கலாம். கல்யாணத்துக்கு ஒரு மாசம் இருந்ததுல, அப்ப எல்லாம் இவ என்ன பண்ணிட்டு இருந்தா? ஹான்..‌ நான் கூட இவ சோர்ந்து இருக்கிறதை பார்த்து என்ன விஷயம்ன்னு கேட்டேன்தானே? அப்பவாச்சும் அவ மனசுல இருக்கிறதை சொல்லி இருக்கலாம்ல. ஏன் நேத்து நைட் வரைக்கும் இவளுக்கு டைம் இருந்ததா இல்லையா? அப்ப எல்லாம் விட்டுட்டு, தாலி கட்டுற நேரத்தில் வந்து.. என் மனசுல இன்னொருத்தன் இருக்கான், அதுனால கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு சொன்னா என்னங்க அர்த்தம்..??" என்று கத்தி விட்டு மகளையும், கணவனையும் சேர்த்தே முறைத்தாள்.


"மோகனா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு" என்ற கணவனைக் கை நீட்டித் தடுத்தவள்,


"நீங்க என்னதான் சொன்னாலும், இவ இஷ்டப்படி எல்லாம் ஆட முடியாதுங்க. இவளுக்குப் பிடிக்கிதோ இல்லையோ இந்தக் கல்யாணம் நடக்கும்! நடந்தே ஆகணும்!!" என்று உறுதியாகக் கூறிய அன்னையை அதே உறுதியுடன் ஏறிட்டுப் பார்த்த நேகா,


"இல்ல மோஹிமா, என்னால முடியாது!!" என்று தீர்க்கமாக மறுத்தவளைப் பார்க்க பார்க்க மோகனாவின் கோபம் தலைக்கேற, மகளை அடிக்கக் கையை ஓங்கி விட்டாள்.


அப்பொழுது, "நிறுத்துங்க!!" என்று கர்ஜனை குரல் வாசல் பக்கம் கேட்டது. யார் அது என்று மூவரும் திரும்பிப் பார்க்க, அங்கே நேகாவை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் அஜித்குமார்.


அவனைப் பார்த்ததும் நேகாவின் கண்கள் அதிர்ச்சியை அப்பட்டமாக எடுத்துக் காட்டினாலும், அடுத்த நொடி, உடல் இறுக அவனைப் பார்க்கப் பிடிக்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆனாலும் அவன் இப்பொழுது என்ன பிரச்சனை செய்யப் போகிறானோ?? என நினைத்து அவளது உள்ளம் பதைத்துப் போனது என்னவோ உண்மை.


கார்த்திக்கும், மோகனாவும் அவனைக் கேள்வியாகப் பார்க்க, அவனோ நேகாவை நிதானமாகப் பார்த்தபடி அறையின் உள்ளே வந்தவன், மற்ற இருவரையும் ஏறிட்டுப் பார்த்து,


"அவ மனசுல இருக்கிறது நான்தான். அப்படி நான் இருக்கும் போது அவ எப்படி இன்னொருத்தன் கையால தாலி கட்டிப்பா??" நிறுத்தி நிதானமாக அவன் கேட்க,


அவனது அந்தப் பதிலிலும், கேள்வியிலும் அதிர்ந்தது கார்த்திக் - மோகனா மட்டும் அல்ல அங்கு வந்த விக்ராந்த்தும், மேகாவும் தான்!! 


மண்டபத்தில் கல்யாண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தவனிடம் வந்த மேகா விஷயத்தைக் கூறவும், அடுத்த நிமிடம் இங்கு வந்து விட்டான்.


"எக்ஸ்கியூஸ் மீ! எங்க வந்து யார்கிட்ட என்ன பேசறீங்க?" என்று கோபத்துடன் கேட்டபடி உள்ளே வந்தான் விக்ராந்த்.


அவனை அமர்த்தலாகப் பார்த்த அஜித்குமார், "உண்மையைச் சொல்ல வந்தேன் மிஸ்டர்.விக்ரம்" என்று கூறவும்,


"என்ன சார் உண்மை?" என்று அவனிடம் எகிறினான் விக்ராந்த்.


"நானும் நேகாவும் லவ் பண்ற உண்மை.. எஸ்! வீ ஆர் லவ்வர்ஸ். வேணும்ன்னா உங்க தங்கைகிட்ட கேட்டுப் பாருங்க" என்று நேகாவை அவன் கைக் காட்டினான்.


விக்ராந்த்தின் பார்வை இப்பொழுது தங்கையைத் துளைத்தது. அண்ணனின் பார்வையை உணர்ந்த நேகா தலை குனிந்து நின்றாள்.


தங்கையின் அருகே வந்த விக்ராந்த், "நேகா! என்ன இதெல்லாம்??" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.


அதில் நிமிர்ந்த நேகா அண்ணனைப் பாராமல், அங்கே தன் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்த அஜித்தை அனல் தெறிக்கப் பார்த்தவள், 'இது நீ ஆரம்பிச்ச விளையாட்டு தானே? இதுக்கு நீ தான் பதில் சொல்லணும்!!' என்பது போல் நின்றாள்.


அவளது பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட அஜித் தனக்குள் சிரித்தபடி, "நான் சொல்றேன் விக்ரம்.." என்றவன், "நாங்க ஐந்து வருசமா உயிருக்கு உயிரா லவ் பண்ணிட்டு இருக்கோம். இன்பேக்ட் அவ கல்யாணத்தை ரெண்டு வருஷம் தள்ளிப் போட்டது கூட இதுக்காகத்தான். சரி! சமயம் வரும் போது எங்க காதலை எல்லார்கிட்டயும் சொல்லிடலாம்னு பிளான் பண்ணி இருந்தோம். ஆனா திடீர்னு நீங்க எல்லாரும் சேர்ந்து அவளுக்கு இன்னொருத்தனோட மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டீங்க.


அவளுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னாலும், பேமிலிக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்னோட காதலை முறிச்சிட்டு, வேலையையும் ரிசைன் பண்ணிட்டு வந்துட்டா. உங்க வீட்ல நான் வந்து பேசுறேன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். ஆனா அவ 'என் மோஹிமாவின் சந்தோஷம்தான் முக்கியம்’ன்னு சொல்லி, ‘எக்காரணம் கொண்டும் நம்ம லவ் மேட்டர் எங்க வீட்டுக்குத் தெரிய கூடாது'ன்னு என்கிட்ட சத்தியம் வாங்கிட்டா.


பட் என்னால அவ்ளோ ஈஸியா நேகாவை விட்டுக் கொடுக்க முடியல. ஏன்னா அவ எனக்கானவள்! அவளுக்கு லாஸ்ட் மினிட் வரைக்கும் டைம் கொடுத்து இருந்தேன். ஆனா அவ அவளோட முடிவில் ஸ்ட்ராங்கா இருந்தா. அதான் நானே இந்தக் கல்யாணத்தை நிறுத்தி, உங்க எல்லார்கிட்டயும் உண்மையைச் சொல்லி, நேகாவை என்னுடையவளா ஆக்கிக்க இங்க வந்தேன்.


ஆனா அதுக்கு அவசியமே இல்லாம, இதோ நேகாவே, கடைசி நிமிஷத்துல தன் காதலை உணர்ந்து உங்ககிட்ட வெளிப்படுத்திட்டா. இனி நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல" என்று கூறி அஜித்குமார் தோளைக் குலுக்கினான்.


விக்ராந்த்திற்கோ, அஜித் கூறியதில் உண்மை இருக்குமோ? என்ற எண்ணம் அவனது மனதில் உருவானது. ஏனெனில் தங்கை வேலையை விட்டதுக்கு அப்புறம் தானே தனக்குள் ஒடுங்கிப் போனாள்? ஆனாலும் தீர விசாரிப்பது நல்லதல்லவா?? அதனால், "நேகா! இவர் சொல்றது உண்மையா?" என்று தங்கைடம் மீண்டும் கேட்டான்.


நேகாவிற்கோ கண்களில் கண்ணீர் குளம் கட்ட பரிதவிப்புடன், "அ…அண்ணா…" என்றவள் மேலும் ஏதோ பேசுவதற்குள்,


"உங்க அண்ணாதான் கேட்கிறார்ல.. பதில் சொல்லு நேகா!" என்ற அஜித்குமாரின் அழுத்தமான குரலில், பேச வந்ததைச் சட்டென நிறுத்தி அவனை முறைத்துப் பார்த்தவள், 'நீ மனுஷனே இல்லடா!!' என்பது போல் கண்களால் சுட்டெரித்தாள்.


அவனோ தனது வலது கையில் இருந்த மொபைலைச் சுழற்றியபடி, ஒற்றைப் புருவம் மேலோங்க, அசராமல் அவளைப் பதில் பார்வை பார்த்தான்.


அவன் பார்வையிலும், செயலிலும் பதட்டம் தோன்ற, வேறு வழியில்லாமல் தன் அண்ணனிடம், 'ஆம்!' என்பது போல் மேலும் கீழும் தலையை ஆட்டினாள் நேகா.


மகளின் பதிலில் ஓய்ந்து போன மோகனா தொப்பென்று கட்டிலில் அமர்ந்து விட்டாள்.


அதைக் கண்டு "மோகனா.." என்று பதறியபடி கார்த்திக் வேகமாக மனைவியின் அருகே செல்ல, "மோஹிமா.." என்று மேகாவும் விக்ராந்த்தும் அன்னையிடம் சென்றார்கள்.


நேகாவை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கணவனிடம், "நான் ஓவியாவுக்கு என்னங்க பதில் சொல்லுவேன்?" என்று குரல் தழுதழுக்கக் கேட்டாள் மோகனா.


தாயின் கலக்கம் கண்டு அவர் அருகே ஓடி வந்த நேகா, "என்னை மன்னிச்சுருங்க மோஹிமா!!" என்று அன்னையின் மடியில் விழுந்து கதறி விட்டாள்.


மகளின் அழுகையைக் கண்டு உள்ளம் வலித்தாலும் வெளியே இறுக்கமாக அமர்ந்திருந்தாள் மோகனா. அவள் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லையே?? இதே மகள்.. அவளது காதலைப் பற்றி முன்னமே ஒரு வார்த்தை கூறி இருந்தால்.. நிச்சயம் மகளின் ஆசைக்கு ஒருநாளும் குறுக்கே நின்றிருக்க மாட்டாள். அவள் விரும்பியவனுக்கே கல்யாணம் செய்து சந்தோசமாகப் புகுந்த வீட்டிற்கு அனுப்பியும் வைத்து இருப்பாள்.


ஆனால் அதைச் செய்யாமல், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன் குடும்பத்தை நிறுத்துவாள் தனது மகள் என்று கனவிலும் நினைக்கவில்லை. இது ஒரு புறம் என்றால்.. ஓவியாவிடமும், ரவிவர்மனிடமும் எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்வது? என்று தெரியாமல் மோகனா தவித்தாள்.


கார்த்திக்கோ, மனைவியின் தவிப்பைப் புரிந்து கொண்டு அவள் கைகளில் அழுத்தம் கொடுத்தவன், "நான் ஓவியாகிட்டயும், ரவிகிட்டயும் பேசுறேன்" என்று கூறினான்.


"ம்ம்ம்.." என்ற மோகனா பின்பு ஒரு முடிவெடுத்தவளாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள், கணவனிடம், "நேகா அவ இஷ்டப்பட்ட வாழ்க்கையே வாழட்டும், அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க!" என்று கூற,


அன்னையின் பேச்சில் நேகா அதிர, விக்ராந்த்தோ யோசனையுடன் தன் தாயை பார்த்தவன், தங்கையின் கண்ணீரைக் கண்டு,


"மோஹிமா அவசரப்படாதீங்க! எதுக்கும் இன்னொரு தடவை தீர விசாரிப்போம்" என்றான். ஏனெனில் அவனால் தங்கை 'ஆம்' என்று கூறியதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.


மகனை வேதனையுடன் பார்த்த மோகனா, "இனி விசாரிச்சி எந்தப் பிரயோஜனமும் இல்ல விக்கி. அதான் தெளிவா சொல்லிட்டாளே.. அவரைக் காதலிக்கிறதா.. அதனால அவருக்கே இவளைக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம். அவ ஆசைக்கு நாம குறுக்கே நிக்க வேண்டாம்" என்று மகளைப் பாராமல் மகனிடம் கூறினாள்.


அன்னையின் பேச்சிலும், அவர் வார்த்தையில் தெரிந்த ஒதுக்கத்திலும் நேகாவின் மனதில் சுருக்கென்ற வலி உண்டானது. பின்பு அந்த வலி மொத்தமும் அஜித் மேல் திரும்ப, அவன் மீது கட்டுக்கடங்கா கோபம் பெருக்கெடுத்தது.


கார்த்திக்கோ, மனைவியின் சம்மதம் கிடைத்தவுடன், நிம்மதியுடன் தன் மகளை எழுப்பி அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டு அஜித்தைப் பார்த்தவன்,


"உங்க வீட்ல உள்ள பெரியவங்ககளை சீக்கிரம் இங்க வரச் சொல்லுங்க! குறிச்ச நேரத்துல நேரத்தில் உங்களுக்கும் என் பொண்ணு நேகாவுக்கும் கல்யாணம்" என்று தங்களது சம்மதத்தைக் கார்த்திக் தெரிவிக்க..


'உஃப்!!' என்று நிம்மதி பெருமூச்சு விட்ட அஜித், நேகாவை ஒரு பார்வை பார்த்தவன், அடுத்த நொடி அந்த அறையில் இருந்து வெளியேறினான்.


அவன் செல்லவும் தன் பெரிய மகளிடம், "மேகா! பாட்டியையும், உங்க அத்தை - மாமா, சஞ்சீவ் மாப்பிள்ளையையும் உங்க அத்தை ரூம்க்கு கூட்டிட்டு வாம்மா" என்று மகளை அனுப்பி விட்டு,


தன் மகன் விக்ராந்த்திடம், "என் கூட வா விக்கி! ஓவியாகிட்டயும், ரவிகிட்டயும் பேசிட்டு வரலாம்" என்று கார்த்திக் மகனையும் துணைக்கு அழைக்க, மோகனாவோ, "நானும் வரேன்" என்றபடி அவர்களுடன் செல்ல, தனித்து விடப்பட்டாள் நேகா.


அவள் மனமோ, தன்னைக் கையறு நிலையில் வைத்திருக்கும் அஜித்தை நினைத்து எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது.


இவர்கள் மூவரும் ரவியிடமும், ஓவியாவிடமும் 'என்ன சொல்வது? எப்படி அவர்களைச் சமாளிப்பது?' என்று தெரியாமல் கவலையுடன் அவர்களைக் காணச் சென்றனர்.


அங்கோ "ரவி! ரிஷி ஏன் இன்னும் வரல? எங்க இருக்கான், என்ன பண்ணிகிடடு இருக்கான்னு அவனுக்குப் போன் பண்ணிப் பாருங்களேன்" என்று காலையில் இருந்து ஒருவித தவிப்புடன் ஓவியா கூறிக் கொண்டே இருக்க..


ரவிவர்மனும் தான் என்ன செய்வான்? நேற்றில் இருந்து மகனுக்கு அலைபேசியில் அழைத்து அழைத்துக் களைத்துப் போனான். ஒரு சமயம் மகனது அலைபேசி ரிங் போய்க் கொண்டே இருக்கும். இல்லையென்றால் அணைத்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் அவனது பி.ஏ ராபர்ட்க்கு அழைத்து ரிஷியைப் பற்றி விசாரித்தால், அவனும் சரியாகப் பதில் கூறவில்லை.


திருமணம் வேண்டாம் என்ற மகன் திடீரென வந்து சம்மதம் சொல்லவும், அவனது மனம் யோசனையில் உழன்று கொண்டு தான் இருந்தது. அதே சமயம் மகன் மேல் சிறு நம்பிக்கையும் இருந்தது. ஆனால் இப்பொழுதோ அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது.


இந்நேரம் வரை அவன் வராமல் இருப்பதில் இருந்தே தெரிகிறதே? மகன் திட்டமிட்டு சதி செய்கிறான் என்று!! இப்படிச் செய்வான் என்று ரவிவர்மன் எதிர்பார்க்கவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, கார்த்திக் வந்து 'ரிஷி எங்கே?' என்று கேட்டால், என்ன பதில் சொல்வது என யோசித்து ஒரு முடிவெடுத்த நேரம், அவர்கள் இருந்த அறை கதவை திறந்து உள்ளே வந்தார்கள் கார்த்திக், மோகனா, விக்ராந்த் மூவரும்.


அவர்களைப் பார்த்ததும் ரவிவர்மன், "வாங்க கார்த்திக்!" என்று பதட்டத்துடன் அழைக்க,


ஓவியாவோ கணவனின் குரலில் அண்ணன் வந்திருப்பது உணர்ந்து, "அண்ணா.." என்றபடி எழுந்தவள் காற்றில் கைகளைத் துழாவ, தங்கையின் கையை ரெண்டே எட்டில் பிடித்துக் கொண்ட கார்த்திக், தங்கையிடம் எப்படி விஷயத்தைக் கூறுவது என்று யோசனையுடன் நின்றான்.


மோகனாவோ, "ஓவி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்டி" என்று குரல் கரகரக்க ஆரம்பித்தாள்.


தோழியின் குரலில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்து கொண்ட ஓவியா, "மோனா! ரிஷி இப்ப வந்திருவான். ரவி அவனுக்குத்தான் போன் பண்ணிகிட்டே இருக்காரு" என்று பதட்டத்துடன் கூறினாள். மகன் கடைசி நேரத்திலாவது வந்து விடுவான் என்று நம்பிக்கையில் அவள் கூற, ரவிவர்மனுக்கோ அந்த நம்பிக்கை இல்லை போலும்!!


அதனால் ஓர் முடிவுடன், மனைவியின் கையைப் பிடித்து அதில் சற்று அழுத்தம் கொடுத்த ரவிவர்மன், "ஓவிமா! கொஞ்சம் அமைதியா இரு!" என்றவன்,


கார்த்திக் மற்றும் மோகனாவைப் பார்த்து, "எங்க பையன் ரிஷி இப்ப வரை இங்க வரல, இனியும் வருவான்னு எங்களுக்கு நம்பிக்கை இல்ல. இதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு தான் புரியாம தயங்கிகிட்டு இருந்தேன். ரியலி அம் சாரி கார்த்திக்!! உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறதைத் தவிர எனக்கு வேற வழி இல்ல" என்று மகனால் ஏற்பட்ட அவமானத்தால் குற்றவுணர்வுடன் அவர்களிடம் அவன் பேசினான்.


ஓவியாவோ கணவனின் பேச்சைக் கேட்டு அதிர்ந்தவள், "என்ன ரவி இப்படிச் சொல்றீங்க? கண்டிப்பா நம்ம பையன் வந்துடுவான்" என்று மகனின் மேல் நம்பிக்கை கொண்டு அவள் பேசினாள்.


ரவிவர்மனோ, "அவன் வர மாட்டான் ஓவிமா. புரிஞ்சிக்கோ! அவன் நம்மளை நம்ப வச்சி ஏமாத்திட்டான்" என்று அழுத்தத்துடன் கூற, ஓவியாவோ அதைக் கேட்டு மேலும் அதிர்ந்தாள்.


அதிர்ந்து நின்ற மனைவியை ஒரு பார்வை பார்த்த ரவிவர்மன், "இப்பவே இந்தக் கல்யாணத்தை நிறுத்திடலாம் கார்த்திக்" என்று கூறியதுதான் தாமதம்!! ஓவியாவோ வெடித்து அழுதாள்.


அவளுக்கிருந்த ஒரே நம்பிக்கை மகனின் திருமணம்தான்!! இந்தத் திருமணத்தின் மூலம் மகனைத் தன்னிடமே வைத்துக் கொள்ளலாம் எனப் பேராசை கொண்டவளுக்கு, அது நிராசையாகப் போனதில் இன்னுமே அவளுக்கு அழுகை வந்தது. மேலும் மகனின் இந்தச் செயலினால் தன் கணவருக்கும், அண்ணனுக்கும் தலை குனிவு வந்து விட்டதே? என நினைத்து அதற்கும் வருந்தினாள்.


கார்த்திக்கிற்கும், மோகனாவிற்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தோழி அழுவதைக் கண்டு மோகனா அவளைச் சமாதானம் செய்ய,


ஓவியாவோ, "ரிஷி இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லடி" என்று அழ, மோகனாவோ தன் கணவனை ஒரு பார்வை பார்த்தாள்.


மனைவியின் பார்வையைப் புரிந்து கொண்ட கார்த்திக் ரவிவர்மனிடம், "ரவி! நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்ல. சொல்லப் போனா நாங்க தான் மன்னிப்பு கேட்கணும்" என்றவன், சற்று முன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறி விட்டு,


"இப்ப என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க?" எனக் கேட்க, அங்கே அமைதி நிலவியது.


அதற்குள் பாட்டியையும் தனது குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தாள் மேகா. அவர்களுக்கும் கார்த்திக் கூறியது கேட்டு அதிர்ச்சி தான்!!


ஓவியாவுக்கோ தன் மகனின் திருமணம் நடக்கவில்லை என்று மனதில் கவலை எழுந்தாலும், இப்பொழுது அண்ணன் மகளின் வாழ்க்கையாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தன் கவலையை மறைத்துக் கொண்டவள், அழுகையைச் சட்டென நிறுத்தி விட்டு,


"கேட்கவே ரொம்பச் சந்தோஷமா இருக்குண்ணா. நேகாவுக்குப் பிடிச்ச பையனையே அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்" என்று மனதார அவள் கூறவும்,


"ஓவி..!!" என்று சிறு விம்மலுடன் தன் தோழியை அணைத்துக் கொண்டாள் மோகனா.


"ஏய் லூசு! எதுக்குடி அழற? நம்ம பொண்ணோட மனசு இப்பவாவது தெரிஞ்சிதேன்னு சந்தோஷப்படு! மனசுல ஒருத்தனை வச்சிக்கிட்டு இந்தக் கல்யாணத்திக்குச் சம்மதம் சொல்ல அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா? இதுக்காக நீ புள்ளகிட்ட கோபப்பட்டேன்னு வை.. அவ்ளோ தான்..!!" என்று பொய்யாக மிரட்ட,


மோகனாவோ, "ஓவி! நிஜமா சொல்லு! உனக்கு இதுல வருத்தம் இல்லைதானே?" என்று தவிப்புடன் கேட்க,


"இதுல வருத்தபட என்ன இருக்கு? ரிஷிக்கு நேகான்னு நாம முடிச்சு போட நினைச்சோம். ஆனா கடவுள் வேற கணக்கு போட்டுருக்கார். அதை நாம தான் புரிஞ்சிக்கல. அதுமாதிரி கடவுள் போட்ட முடிச்சை மாத்த நாம யாரு?" என்றவள்,


"சரி, முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சு. இனியும் நேரத்தைக் கடத்த வேணாம். வாங்க! சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணி வச்சிடலாம்" என்று தன் வலியை மறைத்துச் சிரித்த முகமாக ஓவியா கூற, கார்த்திக்கிற்கும் மோகனாவிற்கும் மனதில் அப்படியொரு நிம்மதி எழுந்தது.


நேகாவின் விஷயத்தை எப்படிச் சொல்வது? அதைச் சொன்னால் இவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? என்று தவித்தபடி இருந்தவர்கள், இப்படிச் சுபமாக முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு ரிஷி வராதது கூட ஒரு காரணம் ஆயிற்றே?!


ராதாவுக்கோ பேத்தியின் திருமணம் ஒரு புறம் நிம்மதி தந்தாலும், பேரனின் திருமணம் நின்றது அவருக்கு வருத்தத்தைத் தந்தது. என்னதான் அவர் ரிஷியைத் திட்டினாலும் அவனும் அவரது பேரன் அல்லவா..??


மனைவி கூறியதைத் தொடர்ந்து, "ஆமா கார்த்திக், ஆக வேண்டிய வேலையைப் பார்க்கலாம்" என்று ரவி கூறிக் கொண்டிருக்கும் போது அவன் கையில் இருந்த மொபைல் ஒலி எழுப்பியது. அழைப்பது யார் என்று பார்த்தவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, அதை எடுத்துப் பேசி விட்டு வைத்தவனின் முகம் இறுகிப் போனது.


அதைக் கவனித்த கார்த்திக், "போன்ல யார் ரவி?" என்று கேட்டான்.


ரவியோ அங்கு நின்றிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன், "ரிஷி வந்துட்டு இருக்கானாம்" என்று கூறவும்,


அந்த இடத்தில் குண்டூசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு அமைதி நிலவியது.


****


1 comment:

  1. Enda oruthanuum olunga yosikarde illa da thiruttu pakkimgala irukimga oruthan love pannamale poi solli kalyanam panran innoruthan enna Panna porano

    ReplyDelete