ஸ்வரம் 14

 




ஸ்வரம் 14..


இப்படி ஒரு திடீர் திருப்பத்தை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவே இல்லை. முகூர்த்த நேரம் நெருங்கியும் ரிஷி மண்டபத்துக்கு வராததால், இனியும் வர மாட்டான் என எண்ணி எல்லோரும் அவர்களுக்குள் ஒரு முடிவை எடுத்திருக்க, அவனோ 'இதோ வருகிறேன்!' என்று சொல்லி விட்டான். 


இப்பொழுது யார் யாரிடம் என்ன பேசுவது? என்று யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லோர் முகத்திலும் அப்படி ஒரு அதிர்ச்சி அப்பட்டமாகத் தென்பட்டது. 


அவன் வந்த உடன் விஷயத்தைக் கூறினால் என்ன மாதிரி ரியாக்ட் செய்வானோ? என்ற கலக்கம் தான் அங்குள்ள அனைவர் முகத்திலும் தெரிந்தது. ஏனெனில் ‘எப்போ? எப்போ?' என்று காத்திருப்பவன் கையில் சிலம்பத்தைக் கொடுத்தால் ஆடித் தீர்த்து விட மாட்டானா..??


ரிஷிவர்மன் இங்கு இல்லை தான்! ஆனாலும் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான்.


ஓவியாவோ கணவனின் கையை இறுக பிடித்துக் கொள்ள, ரவிவர்மனோ மனைவியை அணைத்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான்.


கார்த்திக்கிற்கும் என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் திணறி கொண்டிருக்க, முதலில் தெளிந்தது மோகனா தான்.


"இப்ப என்ன நடந்து போச்சுன்னு எல்லாரும் இப்படி இடி விழுந்த மாதிரி நிக்கிறீங்க? ரிஷி தானே வரான், வரட்டுமே??" என்று எல்லோரையும் பார்த்தபடி சாதாரணமாகக் கேட்டாள்.


ராதாவோ, "தெரிஞ்சி தான் பேசுறியா மோகனா? ரிஷி வந்ததும் அவன்கிட்ட விஷயத்தைச் சொன்னா, என்ன மாதிரி நடந்துப்பானோனு இங்க எல்லோருக்கும் பக்கு பக்குன்னு இருக்கு. நீயென்னனா அவன் வந்தா வரட்டுமேனு சொல்றே?" என்று கடுப்புடன் கேட்டார்.


"ம்ப்ச்.. அத்தை அவன் கோபப்படுவான்தான்! இல்லன்னு நான் சொல்லல. ஆனா நாம எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்க மாட்டானா என்ன?" என்று கேட்டாள்.


அவனைப் பற்றி நன்றாக அறிந்தும், அவள் இப்படிப் பேசுவதற்கு, மற்றவர்கள் ஆம் என்பார்களா என்ன? அதனால் அமைதியாக இருந்தனர்.


எல்லோரின் அமைதி எதற்கென்று அவளுக்கும் புரிந்ததால் சட்டென ஓர் முடிவெடுத்து, "எனக்கு ஒரு யோசனை தோணுது. அதை சொன்னா நீங்க எல்லாரும் எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல" என்றாள் மோகனா.


'என்ன யோசனை?' என்பது போல் இப்பொழுது அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.


அவளோ, "நேகாவை ரிஷிக்குக் கல்யாணம் பண்ணி வச்சா.. அவன் கிட்ட ஒரு மாற்றம் வரும், என் ஓவிகிட்ட நல்லபடியா திரும்பி வருவான்னு நினைச்சி தான் இந்தக் கல்யாணத்துல இவ்வளவு ஆர்வம் காட்டினேன். இன்னும் சொல்லப் போனா, என்னோட பொண்ணுங்கள்ல ஒருத்தி ஓவியா வீட்டுக்கு மருமகளா போகணும்ங்கிறது தான் என் ஆசையும் கூட! அது நேகாதான்னு இல்லையே? ஏன் ஸ்னேகாவா இருக்கக் கூடாது?" என்று கூறி முடிக்கவும், கார்த்திக் உள்பட எல்லோரும் அவளை அதிர்ந்து பார்த்தனர். 


விக்ராந்த்தோ தாயின் பேச்சில் கோபம் கொண்டு பேச வாய் திறக்கும் முன்,


"மோனா! என்னடி பேச்சு இது? யாருக்கு யாரைக் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறே? உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?" என்று சத்தமாகக் கேட்டது, வேறு யாரும் அல்ல, ஓவியா தான்..!!


தோழியின் பேச்சில் அதிர்ந்த மோகனா, அவளைக் கூர்மையுடன் பார்த்தபடி ஓவியாவின் அருகே வந்தவள், "ஓவி! இப்ப என்ன சொன்னே?" என்று கேட்டாள். அவளது குரலில் ஆழ்கடலின் அமைதி தெரிந்தது.


அதை உணராமல், "ம்ப்ச்.. புரிஞ்சி தான் பேசுறியா மோனா? ரிஷிக்கு எப்படி ஸ்னேகா சரிவருவா? இதை நீ யோசிக்க மாட்டியா?" என்று ஓவியா கூறி முடிக்கும் முன்..


"என் பொண்ணு உன் பையனுக்கு ஏன் சரிவர மாட்டா?" என்று அழுத்தமாக அடுத்த கேள்வியைக் கேட்டாள் மோகனா.


"ஏன்னு உனக்குத் தெரியாதா?" எனக் கோபமாக பேசப் போன ஓவியாவிற்கு, அப்பொழுது தான் தோழியின் வார்த்தையில் இருந்த வேற்றுமை புரிந்தது.


தனது வார்த்தையைத் தன் தோழி தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்ட அடுத்த நிமிடம், "ஐயோ மோனா! நான்.. நான் அந்த அர்த்தத்துல சொல்லலடி.." என்று பதட்டத்துடன் கூறினாள்.


மோகனாவோ கோபம் சிறிதும் குறையாமல் ஓவியாவின் தோளை பிடித்து உலுக்கி, "சொல்லுடி! அப்போ எந்த அர்த்தத்துல அப்படிச் சொன்னே?" என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டிருக்க, 


அவளது அந்தக் கோபத்தைக் கண்டு பதறி, "மோகனா.. மோஹிமா…" கார்த்திக்கும், விக்ராந்த்தும் ஓடி வர, ரவியும் பதறிப் போய் மனைவியின் அருகே வேகமாக வந்தான்.


இதே நேரம் வெளியே மண்டபத்தில் தன் கையில் இருந்த பொருட்களை ரம்யாவிடம் கொடுக்க வாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் ஸ்னேகா. அப்பொழுது, 


"அக்கா.." என்று அழைத்தது ஒரு குழந்தை.


அந்தக் குழந்தையின் அழைப்பைக் கவனியாமல் ஸ்னேகா அவள் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, அந்தக் குழந்தையோ வேகமாக ஓடிச் சென்று அவளது சேலை முந்தானையைப் பிடித்து இழுத்தது.


அதில் பதறி திரும்பிப் பார்த்த ஸ்னேகா, தன் சேலையைப் பிடித்து இருந்தது குழந்தை என்றதும், ஏன் எனப் புரியாமல் நெற்றிச் சுருக்கிப் பார்க்க, 


அக்குழந்தையோ, "அக்கா, இது உங்களோடது தானே?" என்று கேட்டுத் தனது உள்ளங்கையில் இருந்த ஒரு சிறிய பொருளை அவளிடம் காட்டியது.


அந்தக் குழந்தையின் வாயசைவைத் தொடர்ந்து, அவளது கையில் இருந்த பொருளைப் பார்த்த ஸ்னேகாவின் வலது கை, சட்டென்று தானாக உயர்ந்து தன் வலது காதை தடவி பார்த்தது.


பின்பு சிறு புன்னகையை உதிர்த்த ஸ்னேகா, அந்தக் குழந்தையின் கையில் இருந்த பொருளைத் தன் கையில் வாங்கிக் கொண்டவள், "ஆமா செல்லம், என்னோடது தான்.. எங்க கிடைச்சுது?" என்று கேட்க,


குழந்தையோ, "நீங்க இப்ப நடந்து வரும் போது விழுந்தது. அதான் எடுத்துட்டு வந்தேன். அது என்னதுக்கா ப்ளூ டூத் ஆஹ்?" என்று கேட்க, "ம்ம்ம்.. ஆமா குட்டி, தேங்க்ஸ்டா.." என்று நன்றி கூறி, அவளது கன்னத்தில் தட்டி விட்டு ரம்யாவை நோக்கி நடந்தாள் ஸ்னேகா.


"இதை எடுத்துட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா?" என்று ஸ்னேகாவின் கையில் இருந்த தட்டை வாங்கி ரம்யா டேபிளில் வைத்தாள்.


அவளோ ரம்யாவின் வாயசைவை வைத்து அவள் கேட்டதைப் புரிந்து கொண்டு, "இல்லடி, என்னோட 'ஹியரிங் எயிட்' கழண்டு கீழே விழுந்துருச்சு போல, நான் கவனிக்கல. ஒரு சின்னப் பொண்ணு எடுத்துத் தந்தா. அதான் தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன்" என்று கூறவும்,


"நீ சரியா மாட்டலையா?" என்று கேட்டு ஸ்னேகாவின் கையில் இருந்த காது கேட்கும் கருவியை வாங்கி அவளது காதில் ஒழுங்காக மாட்டி விட்டாள் ரம்யா.


இங்கு அறையிலோ, "சொல்லுடி! எதுக்கு அப்படிச் சொன்னே? காது கேட்காத என் பொண்ணை உன் பையனுக்குக் கட்டி வைக்க நீ விரும்பல. அதான் உன் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வந்துருக்கு. அப்போ ஸ்னேகா மேல நீ வச்ச பாசம் எல்லாம் பொய், அப்படித்தானே?" என்று கோபத்தில் ஆரம்பித்து அழுகையுடன் கேட்டவள், இயலாமையுடன் அப்படியே பின்னால் சரிந்தாள்.


"மோஹிமா…" என்று தாயைத் தாங்கி அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தான் விக்ராந்த்.


மனைவியின் அருகே அமர்ந்த கார்த்திக், "மோகனா! என்னமா இது?" என்று தவிப்புடன் கேட்டான்.


"என்னங்க.. என் ராஜாத்திக்குக் காது கேட்காதது ஒரு குறையாவே இதுவரைக்கும் நமக்குத் தோணலைங்க. ஆனா உங்க தங்கச்சிக்கு அப்படித் தோணிருக்குப் பாருங்க!!" என்று கணவனின் நெஞ்சில் சாய்ந்து மேலும் அழுகையில் கரைந்தாள். அவளது கண்ணீர் கார்த்திக்கை மட்டும் அல்ல அங்கிருந்த அனைவரையும் அழ வைத்தது.


ஆம்! மோகனா தனது நான்காவது மகவை சுமந்து கொண்டிருக்கும் போது, எட்டாம் மாதம் முடிவில் மாடிப்படியில் இறங்கும் போது கவனம் இல்லாமல் கால் தடுக்கி உருண்டு விழுந்து விட்டாள் அல்லவா? அதில் வயிற்றில் பலமாக அடிபட்டு ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. அந்நேரம் கார்த்திக் வீட்டில் இருந்ததால், ரத்தக்களரியாக மயங்கி கிடந்த மனைவியைக் கண்டு பதறித் துடித்து, அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான். 


அங்கோ, அவளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க, தாயும் சேயும் கடவுள் புண்ணியத்தில் பெரிய கண்டத்தில் இருந்து பிழைத்துக் கொண்டாலும், வயிற்றில் இருக்கும் குழந்தையோ தனது கேட்கும் திறனை இழந்திருந்தது. அதைப் பின்னாளில் தான் அவர்களே தெரிந்து கொண்டார்கள். இதுவரை ஸ்னேகாவின் அந்தக் குறையை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இன்றோ, அதை நினைத்துத் துடித்துப் போனாள் மோகனா.


ஓவியாவோ தோழியின் பேச்சில் அதிர்ந்து தனது இரு கைக் கொண்டு தன் வாயைப் பொத்தினாள். தான் கூற வந்ததைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசுபவளை எப்படிச் சமாதானம் செய்வது? என்று புரியாமல், தன் கைகளால் துழாவி மோகனாவின் அருகே வந்தவள், 


"மோனா! ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? சத்தியமா நான் அந்த அர்த்தத்தில சொல்லல. ஸ்னேகா என் செல்லம்டி! என் கண்மணியை நானே அப்படிச் சொல்லுவேனா?" எனக் கண்ணீருடன் தோழிக்குப் புரிய வைக்க நினைத்தாள் ஓவியா.


மோகனாவோ அதைப் புரிந்து கொள்ளாமல், "போடி!!" என்று ஓவியாவைப் பார்க்கப் பிடிக்காதது போல் வேதனையில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.


விக்ராந்த்தோ தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான். ஆம்! அவனுக்கு நேகாவையே ரிஷிக்கு மணம் முடிக்க விருப்பம் இல்லை எனும் போது, அவன் செல்ல தங்கை ஸ்னேகாவை ரிஷிக்குத் திருமணம் செய்து வைக்க எப்படி ஒத்துக் கொள்வான்? தாயின் மேல் அவனுக்கு அப்படி ஒரு கோபம் தான் வந்தது. அதே கோபத்துடன் அவன் தன் தந்தையைப் பார்த்தான். 


கார்த்திக்கிற்கும் இதில் விருப்பம் இல்லை என்பதை அவரது முகபாவனையிலேயே புரிந்து கொண்ட விக்ராந்த், தந்தையிடம் மெதுவாக, 


"அப்பா! அம்மா பண்றது எனக்குச் சுத்தமா பிடிக்கல. அவ குழந்தைப்பா! அவளைப் போய் அவனுக்குக் கல்யாணம் பேச நினைக்கிறாங்களே.. இதுக்கு நீங்க சம்மதிச்சாலும் நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்!!" என்று அவன் உறுதியாக கூறினான். 


கார்த்திக்கோ மகனை அமைதியாக இருக்கும்படி கூறினான். ஏனெனில், இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில், என்ன பேசினாலும் அதைத் தன் மனைவி தவறாக எடுத்துக் கொள்கிறாள் அல்லவா? அவளுக்குப் புரியும்படி எப்படிப் பேசுவது? என அவன் யோசித்துக் கொண்டிருநதான்.


அங்கு நடப்பதை இறுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரவிவர்மனுக்கோ, தன் மனைவியைப் புரிந்து கொள்ளாமல் மோகனா குற்றம் சொல்வது பிடிக்கவில்லை. மனைவியை நெருங்கி அவளை எழுப்பி ஆதரவாக அணைத்துக் கொண்டவன், அனைவரையும் ஒரு பார்வை பார்த்து,


"எல்லாரும் ஓவியாவைப் புரிஞ்சிக்கிட்டது இவ்ளோதானா? ஸ்னேகாவுக்கும் ரிஷியோட குணத்துக்கும் எப்படி ஒத்து வரும்? எப்படி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்னு தான் கேட்க வந்தா. ஆனா நீங்க அவ என்ன சொல்ல வரான்னு புரிஞ்சிக்காம, நீங்களே ஏதோ தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டா எப்படி?" என்று அனைவரையும் சாடியவன், 


"எங்களுக்கு ரம்யா எப்படியோ அப்படித்தான் ஸ்னேகாவும். ஸ்னேகாவுக்கு அப்படி ஒரு குறை இருக்கிறது இதுவரைக்கும் எங்களுக்குப் பெருசா தெரியல, இனியும் தெரியாது!" என்று அழுத்தமாக கூறியவன், மோகனாவை அழுத்தமாக பார்த்து,


"கல்யாணம்ங்கிறது பண்டமாற்றம் வியாபாரம் கிடையாது. ஒரு பொருள் இல்லனா இன்னொரு பொருள் வாங்குறதுக்கு. இது ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம்ன்னு ஏன் உங்களுக்குப் புரியல?" என்று கூற, மோகனாவோ முகம் இறுக அப்பொழுதும் தன் பிடிவாதத்திலேயே அமர்ந்திருந்தாள். 


அதைக் கண்டவன், "ஓகே பைன்! இவ்ளோ தூரம் பேச்சு வந்த பிறகு நானும் ஒரு முடிவு எடுத்துட்டேன். எஸ்! ஸ்னேகா தான் எங்க வீட்டு மருமக. என் பையன்கிட்ட பேசி அவன் சம்மதத்தை வாங்க வேண்டியது என் பொறுப்பு! அதுக்கு முன்னாடி ஸ்னேகாவோட சம்மதமும் எனக்கு முக்கியம்! அவளோட விருப்பம் இருந்தால் மட்டுமே நான் மேற்கொண்டு என் பையன்கிட்ட பேசுவேன்" என்று அழுத்தமாக கூறிய ரவிவர்மன், ‘இதுக்கு மேல உங்க விருப்பம்' என்பது போல் அமைதியானான்.


ரவிவர்மனின் பேச்சு கார்த்திக்கிற்கும் சரியாகப் பட்டது. விக்ராந்த்திற்கும் அதே எண்ணம்தான்! மேலும் ஸ்னேகா இதற்கு எப்படியும் சம்மதிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை, அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகவே இருப்பதால்,


"மாமா சொல்றது தான் சரி! ஸ்னேகா ஓகே சொன்னா மட்டும் மேற்கொண்டு பேசலாம். அவ தன் பார்வையால் கூட மறுப்பை தெரிவிச்சான்னா, அதுக்கு அப்புறம் யாரும் எக்காரணம் கொண்டும் அவளை வற்புறுத்த கூடாது! இந்தப் பேச்சை இதோட நிறுத்திக்கணும்!" என்று ரவிவர்மனை விட அழுத்தமாகக் கூறி விட்டுத் தங்கையை அழைத்து வரச் சென்றான். மற்றவர்களுக்கும் அவள் மீது அதே நம்பிக்கை தான் என்பதால் ஸ்னேகாவின் வரவுக்காக அமைதியாக நின்றனர்.


ரிசப்ஷனில் ரம்யாவுடன் நின்றிருந்தவளிடம் வந்த விக்ராந்த், "ஒரு முக்கியமான விஷயம்டா, அண்ணா கூட வா!" என்று கூறி அழைக்க, என்ன ஏது என்று கூடக் கேட்காமல் அவனுடன் சென்றாள் ஸ்னேகா.


அவள் அறைக்குள் வந்ததும், எல்லோரும் அங்கே கூடி இருப்பதையும், அவர்கள் வெவ்வேறு முகபாவனைகளைச் சுமந்து கொண்டு நிற்பதையும் கண்டு ஏதும் புரியாமல் அவள் அனைவரையும் பார்க்க, விக்ராந்த்தோ தங்கையிடம் மெதுவாக, 


"ஸ்னேகா! உன்கிட்ட ஒன்னு கேட்கணும் கண்ணம்மா" என்றான். 


அவளோ நடப்பது ஏதும் புரியாமல், "கேளுங்க அண்ணா.." என்றதும்,


நேகா - அஜித் காதல் முதல் சற்று முன் நடந்த எல்லா விஷயத்தையும் தங்கையிடம் கூறி விட்டு, "மோஹிமா உனக்கும் ரிஷிக்கும் கல்யாணம் பேசணும்ன்னு நினைக்கிறாங்க. நீ என்ன சொல்ற ஸ்னேகா?" என்று கேட்டான்.


அண்ணனின் கேள்வியில் அதிர்ந்த ஸ்னேகாவின் பார்வையோ சுற்றி நின்ற அனைவரையும் மீண்டும் ஒரு பார்வை பார்த்தது.


அவளது வெளுத்த முகத்தைக் கண்ட விக்ராந்த், "எதுக்கும் பயப்படாத! உன்னை மீறி இங்க எதுவும் நடக்காது! அண்ணன் நான் இருக்கேன். உனக்கு விருப்பம் இல்லைன்னா அதைத் தைரியமா சொல்லு!" என்று விக்ராந்த் கேட்டு முடிக்கும் முன், "எனக்குச் சம்மதம் அண்ணா..!!" என்று கூறி விட்டாள் ஸ்னேகா.


அவளது பதிலில் எல்லோரும் அதிர்ந்து அவளைப் பார்த்தனர் என்றால், விக்ராந்த்தோ தன் தங்கையிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காததால், "ஸ்னேகா! என்னமா சொல்ற?" என்று மீண்டும் கேட்க,


"ஆமாண்ணா.. ரிஷி அத்தானைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழுச் சம்மதம்!!" என்று நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அவள் அழுத்திக் கூற, அவனோ தன் தங்கையை அதிர்ச்சி விலகாமல் பார்த்தான். 


ரவிவர்மனுக்குமே ஸ்னேகாவின் பதில் அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. அதே சமயம் ஆச்சர்யமும் கொண்டது. அவனது மனமோ, சில விஷயங்களைக் கணக்கு போட்டுப் பார்க்க, அவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. எப்படிச் சாத்தியம்? என அவன் ஆச்சர்யமாக நினைத்தாலும், கடவுள் போட்ட முடிச்சை எண்ணி வியந்துதான் போனான். 


ஸ்னேகாவின் சம்மதம் கிடைத்த பின்னர் சிறிதும் தாமதிக்காமல், "ஒரே மணமேடையில் ரெண்டு கல்யாணம் கண்டிப்பா நடக்கும். ரிஷிகிட்ட நான் பேசிக்கிறேன்" என்று ரவிவர்மன் முடிவாகக் கூறிய அதே நேரம், மண்டபத்தின் முன் சீறிக் கொண்டு வந்து நின்றது, ரிஷிவர்மனின் வாகனம். அதில் இருந்து பட்டு வேஷ்டி சட்டையில் மிக மிகக் கம்பீரமாக, ஆண்மையின் அழகில், மாப்பிள்ளையின் தோரணையுடன் இறங்கி நின்றான் ரிஷிவர்மன்.


அவனது விழிகளோ, தன்னை வரவேற்க யாரும் இல்லை என்பதைக் குறித்துக் கொண்டது. அப்படியே யாரும் அவனை வரவேற்றாலும், அதை அவன் விரும்ப மாட்டான் அல்லவா? அதனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேக எட்டுக்கள் எடுத்து வைத்து மண்டபத்தின் உள்ளே சென்றான்.


அவனைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பிக்க, அங்கே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அந்தச் சலசலப்பு மாடியில் அறையில் இருந்த அனைவரின் காதிலும் எதிரொலித்ததைத் தொடர்ந்து, 'மாப்பிள்ளை வந்தாச்சு' என்ற ஓர் பெரியவரின் குரலும் அவர்களைத் தீண்டியது.


மகன் வந்து விட்டதை உணர்ந்து ஒரு பெருமூச்சை வெளியேற்றிய ரவிவர்மன், "நீங்க மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!" என்று பொதுவாகக் கூறி விட்டு மகனைக் காணச் சென்றான்.


கீழே மணமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த மகனின் முன்னே வந்து நின்ற ரவிவர்மன், "வா ரிஷி!!" என்று வரவேற்றான்.


'அதான் வந்துட்டேனே?' என்பது போல் அலட்சியமாகத் தன் தந்தையைப் பார்க்க, 


மகன் ஏற்கனவே தயாராகி வந்திருப்பதைக் கண்டவன் "ரிஷி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான்.


அவனோ, தன் கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு தந்தையைக் கேள்வியாகப் பார்க்க, அதைப் புரிந்து கொண்ட ரவிவர்மன், 


"முகூர்த்தத்துக்கு இன்னும் நேரம் இருக்கு ரிஷி. அதுக்கு முன்னாடி உன்கிட்ட கண்டிப்பா பேசியே ஆகணும். இங்க வேண்டாம், மணமகன் அறைக்குப் போய்ப் பேசலாம்" என்று கூறி முன்னால் செல்ல, ரிஷிவர்மனோ யோசனையுடன் தந்தையின் பின்னால் சென்றான். 


அறைக்குள் வந்ததும் கதவை சாற்றி விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்த ரவிவர்மன், கைகளைக் கோர்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான். 


தந்தையின் அமைதி எதற்காக என்று தெரியாவிட்டாலும், அவரே பேசட்டும் என நினைத்து, அவனும் தன் கைகளை கட்டிக் கொண்டு தந்தையை அழுத்தமாக பார்த்தபடி நின்றிருந்தான்.


ஒரு பெருமூச்சுடன் மகனை ஏறிட்டுப் பார்த்த ரவிவர்மன், "ரிஷி! இந்தக் கல்யாணத்துல ஒரு சின்ன மாற்றம்" என்று ஆரம்பிக்க, 


நெற்றிச் சுருக்கி தந்தையைப் பார்த்தவன், "மாற்றமா?" என்று கேட்டான்.


"எஸ்! நீ கல்யாணம் பண்ணிக்கப் போறது நேகாவை இல்ல ஸ்னேகாவை.." என்று அவன் பேசி முடிக்கும் முன்..


"வாட் தி ஹெல்..?!!" என்ற கோபத்துடன் அந்த அறையே அதிரும்படி கத்தினான். 


மகனின் இந்தக் கோபத்தை எதிர்பார்த்ததால் ரவிவர்மன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், தன் மகனிடம் நிலைமையைப் புரிய வைக்கும் பொருட்டு, நேகா - அஜித் காதல் விஷயத்தை மட்டும் சொல்லியவன், 


"நேகா மனசுல இன்னொருத்தர் இருக்கார்ன்னு எங்களுக்கு கடைசி நேரத்துலதான் தெரிஞ்சிது ரிஷி. அதான் அவ இஷ்டப்பட்டவனையே அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டோம். அதே மாதிரி என் பையன் கல்யாணமும் நடக்கணும். சோ கார்த்திக்கோட மூனாவது பொண்ணு ஸ்னேகாவை உனக்குப் பேசிட்டோம்" என்று நடந்ததைக் கூறி முடித்தான் ரவிவர்மன். 


ரிஷிவர்மனோ கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு தந்தை பேசுவதை உக்கிரமாகப் பார்த்தவன், "சோ திஸ் ஆர் தட் மாதிரி என் லைஃப் உங்களுக்கு ஆப்ஷனா போயிடுச்சு, ரைட்??" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.


"அப்படி இல்ல ரிஷி…" என ரவிவர்மன் மேலும் பேசுவதற்குள் அவரை கை நீட்டி தடுத்தவன், 


"எத்தனை நாளா என்னை இப்படி இன்சல்ட் பண்ணணும்ன்னு பிளான் பண்ணிட்டு இருந்தீங்க டாட்?" என்று எரிமலையின் சீற்றத்துடன் கேட்க,


"நான் சொல்ல வர்றதை முழுசா கேளு ரிஷி. நியாயமா பார்த்தா ஸ்னேகாவைத்தான் உனக்குப் பேசியிருக்கணும். ஆனா கார்த்திக் - மோகனா ரெண்டு பேரும் நேகாவை உனக்குக் கேட்கவும், எங்களால மறுக்க முடியல. ஆனா கடவுளோட முடிச்சை யாரும் மாத்த முடியாதுன்னு இப்ப நல்லாவே புரிஞ்சிகிட்டேன். ஏன், உன் பாட்டியோட ஆசையும் அதுதானே??" என்று ரவிவர்மன் கூறவும்,

 

ரிஷியின் கண் முன் சில நிகழ்வுகள் நிழல் படங்களாக வந்து போக, அவனது கோபமும் ஏகத்துக்கும் எகிற, "என்னால அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது டாட்!!" என்று கோபத்துடனும், அழுத்தமாகவும் கூறினான். 


"ஏன் முடியாது? ஸ்னேகாவைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை?" என்று அதே அழுத்தத்துடன் கேட்டான் ரவிவர்மன்.


"ஏன்னு உங்களுக்குத் தெரியாது? நான் வேணா ஞாபகப்படுத்தவா?" என்று நக்கலாகச் சிரிப்புடன் தந்தையிடம் கேட்டவன்,


"பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி "வேஸ்ட் டாடி.. ட்ராக்ல வீசிருங்க.. ட்ரெயின் ஒரேடியா தூக்கி எறியட்டும்னு" நான் சொன்ன அந்த..” என்று தன் காதில் தனது ஆள்காட்டி விரலை வைத்து இல்லை என்பது போல் செய்கை செய்து காட்டியவன், "அவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும்.. ம்ம்ம்??" என்று கேட்ட ரிஷியின் முகத்தில் கோபம் நன்றாகவே தெரிந்தது.


மேகாவின் திருமணத்தின் போது நேகாவைப் பார்த்த ரிஷிவர்மனுக்கு அவளைச் சிறிதும் அடையாளம் தெரியவில்லை. ஆனால் சிறு வயது ஸ்னேகா, அவன் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளாள் என்பதற்கு இதுவே சான்று..!!


மகனின் பேச்சில் அன்றைய நாள் ரவிவர்மனுக்கும் நினைவுக்கு வந்ததோ? "ரிஷி!!" என்று மகனை அதட்டியபடி எழுந்து நின்றான்.


தந்தையின் அதட்டலை புறம் தள்ளிய ரிஷி, "அதை விடுங்க.. என்னைக் கேட்காம எந்தத் தைரியத்துல நீங்க இந்த முடிவு எடுத்தீங்க? இந்த ரிஷிவர்மன் அவ்ளோ சீப்பா போயிட்டானா உங்க எல்லாருக்கும்??" என்று சீற, 


ரவிவர்மனோ மகனை நேருக்கு நேராகப் பார்த்து, "என் பையன் மேல இருக்கிற நம்பிக்கையிலதான் இந்த முடிவு எடுத்தேன்" என்றான்.


அவனோ "ஹ.. நம்பிக்கையா..? எப்ப இருந்து டேட் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வந்துச்சு?" என்று கேட்க, இப்பொழுது ரவிவர்மனிடம் மௌனம் மட்டுமே நிலவியது.


அவனே தொடர்ந்தான், "ஒவ்வொரு தடவையும் என்கிட்ட இருந்து அவளைக் காப்பாற்றிய நீங்களே, இப்ப எந்தத் தைரியத்துல எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறீங்க? எங்கேயோ லாஜிக் இடிக்கிதுல??" என்று கேலியுடன் தந்தையைப் பார்க்க,


"ரிஷி! ஸ்னேகா…" என்று ரவிவர்மன் ஏதோ கூற வருவதற்குள், 


"இனாப் டாட்! இனிமேல் நீங்க எதுவும் பேசக் கூடாது. இதுவரைக்கும் நீங்க எனக்குப் பண்ணதே போதும்! இனி என் வாழ்க்கையை நானே பார்த்துக்கிறேன். கண்ணு தெரியாத உங்க மனைவியால நான் இழந்தது ஏராளம். இப்ப காது கேட்காத ஒருத்தியைக் கட்டிக்கிட்டு இன்னும் என்னென்ன இழக்க வேண்டி இருக்குமோ? வேணாம் டாட்.. அவ எனக்கு வேணாம்!!" என்று உறுதியாகக் கூறியவன், 


"இதுக்கு மேல நான் இங்கே இருக்க விரும்பல" என்று தந்தையிடம் சீறி விட்டுத் திரும்பிய ரிஷிவர்மன் அசையாமல் அப்படியே நின்று விட்டான்.


ஏனெனில், அங்கே அறைவாசலில் அவன் பேசிய அனைத்தையும் கேட்டபடி நின்றிருந்தார்கள் கார்த்திக், விக்ராந்த் மற்றும் ஓவியா மூவரும்.


விக்ராந்த்திற்கோ, தங்கையை ரிஷிவர்மன் பேசிய பேச்சில் 'அவனை இப்பொழுதே ஏதாவது செய்ய வேண்டும்' என்ற ஆத்திரம் எழுந்தது. கார்த்திக்கிற்கோ சொல்லவே வேண்டாம்..!! தன் செல்ல மகளை அவன் இப்படிப் பேசியதைக் கேட்டு, 'இதற்கு மேலும் தன் மகளை இவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா?' என்று நினைத்தவனின் முகம் இறுகி போக, ஓவியாவோ மகன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றிருந்தாள்.


"அப்பா! இனி இங்க என்ன வேலை? வாங்க போகலாம்" என்று தந்தையை அழைத்த விக்ராந்த், தன் அத்தையையும் அங்கிருந்து கிளப்ப முயன்றான்.


ஆனால் ஓவியாவோ, "விக்ரம்! ரிஷி எந்தப் பக்கம் நிக்கிறான்?" என்று கண்ணீருடன் கேட்டாள்.


"எதுக்கு ஓவிமா..? இவ்வளவுக்கு அப்புறமும் அவன்கிட்ட நீங்க பேசப் போறீங்களா? ஸ்னேகா நம்ம வீட்டு தேவதை!! அவளோட அருமை இவனுக்குத் தெரியல. இதுக்கு மேலையும் இவனுக்கு நான் அவளைக் கட்டி வைப்பேன்னு எப்படி நினைக்கிறீங்க? நெவர்!!" என்று ரிஷியை முறைத்தவாறு தனது அத்தையிடம் அவன் கூறினான்.


அவளோ, "அவன்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போ விக்ரம்!!" என அழுத்தமாக கூறினாள்.


அவனும், "ம்ப்ச்..!!" என்று சலித்தபடி வேறு வழி இல்லாமல் ஓவியாவை ரிஷியின் அருகே நிறுத்தியவன், அவனைப் பார்க்கப் பிடிக்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.


ரவிவர்மனோ கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். மகனைப் பற்றி தெரிந்தும், அவனைச் சமாதானம் செய்ய நினைத்த தன் மடத்தனத்தை எண்ணி, தன்னைத்தானே நொந்து கொண்டான். மகனது பேச்சு அவனுக்கே பிடிக்கவில்லை எனும் பொழுது, பெற்றவருக்கும், கூடப் பிறந்தவனுக்கும் மட்டும் பிடிக்குமா என்ன..? நடப்பது நடக்கட்டும் என அமைதியாக இருந்தான். 


ரிஷிவர்மனோ தன் அருகே வந்த தாயை உறுத்து விழித்தபடி நின்றிருக்க, 


ஓவியாவோ, "இத்தனை வருசமா நீ எதுக்காக என்னை விட்டு விலகி இருக்கேன்னு எனக்குத் தெரியல கண்ணா. ஆனா இப்ப உன் பேச்சைக் கேட்ட பிறகு, அம்மா ஏதோ பெரிய தப்பு பண்ணியிருக்கேன்னு புரியுது. அதனால நீ இழந்தது ரொம்ப பெருசுனு உன் வார்த்தையில இருந்த வலியே எனக்கு உணர்த்திடுச்சு" என்றவள், 


"ஆனா, என்ன தப்பு பண்ணேன்னு இதுவரைக்கும் எனக்குத் தெரியலையே கண்ணா?" குரல் தழுதழுக்க அவள் கண்ணீருடன் கூறவும், ரவிவர்மனோ மனைவியை மனம் வலிக்கப் பார்த்திருந்தான். 


அவனுக்குத் தெரியுமே என்ன விஷயம் என்று..!! அதில் மகன் மட்டும் பாதிக்கப்படவில்லையே.. தானும்தானே பாதிக்கப்பட்டோம்? மிகுந்த மன உளைச்சலுக்கும் உள்ளானோம்? ஒரு நிலையில் 'மனைவியா? மகனா?' என்று வரும் போது தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, மனைவிக்காகத் தன் மகனை தள்ளி வைத்தானே?? அதை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கும் கண்கள் கலங்கியது. 


ஓவியாவோ, "நீ இழந்ததை எல்லாம் உனக்குத் திருப்பிக் குடுக்க முடியுமானு எனக்குத் தெரியல கண்ணா. ஆனா இந்த அம்மா என்ன தப்பு பண்ணி இருந்தாலும் என்னை மன்னிச்சிடு ராஜா!" என்று கைக் கூப்பிக் கெஞ்சினாள்.


ஆனால் ரிஷியோ, எதற்கும் இளகாமல் மேலும் கோபம் கொண்டானே தவிர, அன்னையை மன்னிக்க அவன் தயாராக இல்லை. 


அதைக் கண்ட விக்ராந்த்தோ ரிஷிவர்மனை வெறுப்புடன் பார்த்தவன், தன் அத்தையிடம், "பேசிட்டீங்கள்ல.. வாங்க போகலாம்.." என்று அத்தையின் கைப் பிடித்து இழுக்க, 


ஓவியாவோ, "இரு விக்கி! நான் இன்னும் என் பையன்கிட்ட பேசி முடிக்கல" என்றவள், 


"உனக்கு என் மேலதானே கோபம்? எனக்கு நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு கண்ணா. ஆனா ஸ்னேகாவை மட்டும் வேண்டாம்ன்னு சொல்லிடாதே! உன் கால்ல வேணும்னாலும் விழுறேன்" என்றவள் யாரும் செய்யக் கூடாத காரியத்தைச் செய்திருந்தாள். ஆம்! சற்றும் யோசிக்காமல் மகனென்றும் பாராமல் அவன் காலில் விழுந்து இருந்தாள் ஓவியா.


அவளது அந்தச் செயலில் "ஓவியா.. ஓவிமா…" என அங்கிருந்த மூவருமே அலறி விட்டார்கள். 


ரிஷிவர்மன் கூடத் தாயின் இந்தச் செயலை எதிர்பார்க்கவே இல்லை என்பது அவனது அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.


விக்ராந்த் தன் அத்தையை எழுப்பும் முன் வேகமாக மனைவியின் அருகே வந்த ரவிவர்மன், "ஓவிமா! என்ன பண்ற?" என்று அதட்டியபடி அவளை எழுப்பி இருந்தான்.


கார்த்திக்கோ, "நீ உன் பையன் காலில் விழுந்து தான் என் பொண்ணுக்குக் கல்யாணம் நடக்கணும்ன்னா, அப்படிப்பட்ட கல்யாணமே அவளுக்கு வேணாம்!!" என்று கோபத்துடன் கூறினான். விக்ராந்த்தும் தந்தையின் பேச்சை ஆமோதித்தபடி ரிஷியை முறைத்துக் கொண்டிருக்க, 


ஓவியாவோ, "இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கணும் அண்ணா! இதை விட்டா எனக்கு வேற வழி தெரியல" என்று கூறி அழ ஆரம்பித்தாள்.


ரவிவர்மனோ, "அதுக்காக இப்படிப் பண்ணுவியா ஓவிமா?" என்று மனைவியை அதட்டியவன், மகனை முறைத்துக் கொண்டே, 


"கார்த்திக் சொன்னதுதான் நானும் சொல்றேன். இவன் கால்ல நீ விழுந்து தான் இந்தக் கல்யாணம் நடக்கணும்ன்னா, அப்படிப்பட்ட கல்யாணம் நடக்கவே வேண்டாம்!!" என்று கூறினான்.


தந்தையின் பேச்சில் கோபம் கொண்ட ரிஷிவர்மன், அவரை முறைத்துக் கொண்டே அங்கிருந்து இரண்டடி தான் எடுத்து வைத்திருப்பான். பின்பு என்ன நினைத்தானோ..? திரும்பித் தாயைப் பாதுகாத்தபடி இருந்த மூவரையும் ஒரு பார்வை பார்த்தவன், தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, அழுத்தமான நடையுடன் அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாக அமர்ந்தபடி,


"இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்!!" என்றான் கட்டளையாக..

******

No comments:

Post a Comment