ஸ்வரம் 15


 


ஸ்வரம் 15


ரிஷிவர்மன் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவும், மற்ற நால்வரும் அவனை அதிர்ந்து தான் பார்த்தார்கள். ஏனெனில் சற்று நேரத்திற்கு முன் அவன் பேசிய பேச்சு என்ன..? இப்பொழுது அவன் திருமணத்திற்குச் சம்மதம் சொல்வது என்ன..? என்று அவர்கள் திகைத்து நின்றனர்.


அவனோ தன் கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்து விட்டு, "முகூர்த்தத்துக்கு நேரம் ஆகலையா? இப்படிச் சும்மா என்னையே பார்த்துட்டு நின்னா என்ன அர்த்தம்? ம்ம்.. போங்க.. போய் ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!" என்று அதிகாரமாகக் கூறி விட்டுத் தனது மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.


அவனது பபேச்சிலும் செயலிலும் கோபம் கொண்ட விக்ராந்த், "இவனை…" என்று பல்லைக் கடித்தபடி ரிஷியை நோக்கி நகர போக, "விக்ரம்…" என்று மகனைத் தடுத்து நிறுத்தினான் கார்த்திக்.


"அப்பா! அவன்…" என்று மேற்கொண்டு பேச வந்த மகனை, 'வேணாம்' என்பது போல் கண்ணசைத்தவன், "வெளியே போய் பேசிக்கலாம் விக்ரம்" என்று கூறவும், 


"ச்ச!" என்று எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறினான் விக்ராந்த். 


தன் மகன் சம்மதம் சொன்னதே போதும் என்பது போல், வேறு எதைப் பற்றியும் இப்போதைக்கு யோசிக்காமல் "அண்ணா! அதான் ரிஷி சரின்னு சொல்லிட்டான்ல.. வாங்க, மொதல்ல மோகனாகிட்ட சொல்லுவோம். அப்போவாவது அவ என்னைப் புரிஞ்சிக்கிறாளான்னு பார்ப்போம்" எனத் தன் தோழியிடம் இப்பொழுதே விஷயத்தைச் சொல்லி அவளைச் சமாதானம் செய்ய வேண்டும் என்று பரபரத்தாள் ஓவியா.


ரிஷியை ஒரு பார்வை பார்த்த கார்த்திக், "ம்ம்ம்.." என்று விட்டுத் தங்கையை அழைத்துக் கொண்டு தானும் வெளியேறினான்.


ரவிவர்மனோ யோசனையுடன் மகனைப் பார்த்தபடி நின்றிருந்தான். ஏனெனில் சற்று முன்பு வரை திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகன், திடீரென சம்மதம் சொன்னதை இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை. மேலும் அவன் மனதாரச் சம்மதிக்க வாய்ப்பில்லை என்று நன்கு அறிவான். எது எப்படியோ.. அவன் பேசிய பேச்சுக்களில் இருந்து பாதிக்கப்படப் போவது ஸ்னேகா என்று நன்றாகவே அவனுக்குப் புரிந்தது. 


தன் மகனே ஆனாலும் அதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டான் ரவிவர்மன். இப்பொழுதே மகனிடம் இது பற்றிப் பேசி விட எண்ணி அவனைத் தீர்க்கமாகப் பார்த்தவன், "ரிஷி…" என்று அழுத்தமாக அழைத்தான்.


ரிஷியோ தந்தையின் அழைப்பில் 'என்ன?' என்பது போல் அவரை நிமிர்ந்து பார்க்க,


"உன்னோட பிளான் என்ன ரிஷி..?" என்று நேரடியாகக் கேட்டு விட்டான் ரவிவர்மன்.


தன்னைக் கண்டுகொண்ட தந்தையைக் கேலிச் சிரிப்புடன் பார்த்த ரிஷிவர்மன், "ஸ்மார்ட் டாட் நீங்க! சும்மாவா பிஸ்னெஸ் உலகில் கொடி கட்டிப் பறக்குறீங்க?" என்று தன் ஒற்றைப் புருவம் தூக்கிக் கேட்க,


"கேட்டதுக்குப் பதில் சொல்லு ரிஷி..!!" என்று மீண்டும் கேட்க,


"அதான் நீங்களே சொல்லிட்டீங்களே பிளான்னு.. பின்ன எதுக்கு என்கிட்ட கேட்குறீங்க? அப்படியே கேட்டாலும் பதில் வராதுன்னு உங்களுக்கே தெரியும். அப்புறம் எதுக்கு டைம் வேஸ்ட் பண்றீங்க?" என்று கிண்டலுடன் கேட்கவும்.. 


மகனின் பதிலில், "தப்பு ரிஷி! ஸ்னேகா சின்னப் பொண்ணு!" என்று எச்சரித்தான் ரவிவர்மன்.


"அதை அவளுக்கு என்னைக் கல்யாணம் பேசும் போது யோசிச்சு இருக்கணும்!" என்று அவன் கோபமாகக் கூறினான்.


"பட் இட்ஸ் ட்டூ லேட் டாட்… இனி நான் முடிவு பண்ணுனதை நானே மாத்திக்கிறதா இல்லை!!" என்று பிடிவாதமாகக் கூறியவனிடம், மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாமல் குழம்பி நின்ற ரவிவர்மன், பின்பு ஓர் முடிவுடன், 


"ஓகே ரிஷி! உன் வாழ்க்கை உன் விருப்பம்! நான் என்ன சொல்ல வரேன்னு கேட்குற மனநிலைமையில இப்ப நீ இல்ல. பட் காலம் ஒருநாள் வாழ்க்கைன்னா என்னன்னு உனக்கு உணர்த்தும்!" என்று கூறி விட்டு வெளியேறினான்.


செல்லும் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்த ரிஷியின் முகம் இறுகி இருந்தது. அவரது பேச்சு அவனுக்கு மேலும் கோபத்தைத்தான் கொடுத்தது. சொல்லப் போனால், இந்தத் திருமணத்திற்கு வராமல் எல்லோரையும் தலை குனிய வைக்க வேண்டும் என்பது தான் அவனின் எண்ணமாக இருந்தது. அதனால் தான் நேகாவைத் திருமணம் செய்ய சம்மதம் சொல்லி இருந்தான். ஆனால் அந்தத் தலை குனிவு அவனது தந்தைக்கும் அல்லவா ஏற்படும்? அதை விரும்பாமல், அதே சமயம் கடைசி நிமிடம் வரை அனைவரையும் பதற்றத்தில் வைத்து விட்டுக் கிளம்பி வந்து விட்டான். 


அவன் ஒன்று நினைத்திருக்க, இங்கு நடப்பதோ வேறாக இருக்கவும், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபத்தில் பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தான். 


இங்கே தோழியின் அருகே சென்ற ஓவியா மோகனாவின் கைப் பிடித்து, "மோனா! ரிஷி ஸ்னேகாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சரின்னு சொல்லிட்டான்டி. இப்பாவது என்கிட்ட பேசுடி!" என்று கண்ணீர் மல்க கேட்க, தோழியை அணைத்துக் கொண்டாள் மோகனா. 


"என்னை மன்னிச்சுரு ஓவி! நா...நான் எதை வேணாலும் தாங்கிப்பேன். ஆனா என் பொண்ணைக் குறை சொன்னா என்னால சத்தியமா தாங்கிக்க முடியாது. அதான் என்னென்னமோ பேசிட்டேன்" என்று அவளும் அழுகையில் கரைய, மனைவியை இறுக்கத்துடன் பார்த்திருந்தான் கார்த்திக்.


"உன் பொண்ண, ம்ம்ம்.. என் மருமகளை யாரும் எதுவும் சொல்லல போதுமா?? வா! புள்ளைக்கு அலங்காரம் பண்ணலாம்" என்று சந்தோஷ சிரிப்புடன் ஓவியா கூறவும், அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் பலவிதமான பாவனைகள் வந்து போனது.


ஸ்னேகா - ரிஷியின் திருமண விஷயத்தில் சிலருக்கு விருப்பம் இல்லை என்றாலும், கடவுள் மேல் பாரத்தை போட்டு அவர்களை மனதார வாழ்த்த முடிவெடுத்து அமைதி காத்தனர். அந்தச் சில பேரில் முக்கியமாக கார்த்திக் மற்றும் விக்ராந்த்தும் அடக்கம். 


ரிஷியின் பேச்சு ஸ்னேகாவின் தந்தையான கார்த்திக்கிற்குக் கோபத்தைக் கொடுத்த அதே சமயம் ஸ்னேகாவின் சம்மதம் அவனை யோசிக்க வைத்தது. தன் மகள் மறுத்து இருந்தால் கதையே வேறாக மாறியிருக்கும் அல்லவா? ஆனால் அவள் சம்மதம் சொன்னதோடு மட்டும் அல்லாமல், இந்தத் திருமணத்தை ஆர்வத்துடன் எதிர்கொள்கிறாள் அல்லவா? மகளின் சந்தோஷம்தான் முக்கியம் என நினைத்த கார்த்திக், தன் மகனைச் சமாதானம் செய்தான்.


அதன் பிறகு துரிதகதியில் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. அஜித்தோ, நேகாவின் குடும்பத்தினரிடம் பேசி விட்டு, தன் அன்னை மற்றும் தங்கையை வெளியே தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விஷயத்தைக் கூறி இருந்தான்.


தனுஷாவிற்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. "வாவ்! எப்படிண்ணா? இதோ போன் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டுத்தானே போன? இப்ப என்னன்னா இப்படிச் சொல்றே? இதை எதிர்பார்க்கவே இல்ல!" என்று தன் அண்ணனின் காதல் நிறைவேறப் போகும் மகிழ்ச்சியில் திளைத்த தனுஷா தன் நட்பை மறந்து போனாள். 


அவனது அன்னையோ, "அஜித்! என்னப்பா இதெல்லாம்?" என்று புரியாமல் கேட்டார். என்ன இருந்தாலும் அவன் அவருக்கு ஒரே மகன்! அவனது திருமணத்தில் அவருக்கு என்று சில ஆசைகள் இருக்கும். ஆனால் அவனோ இப்படிச் சொந்தபந்தம் யாரும் இல்லாமல், திடீரென திருமணம் செய்யப் போகிறேன் என்கிறான். அவரால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை


அவரது கைகளைப் பிடித்துக் கொண்ட அஜித், நேகாவின் குடும்பத்தினரிடம் கூறிய அதே காதல் கதையை தாயிடமும் கூறி விட்டு, "அம்மா! நேகாவை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். அவ இல்லாமல் நான் இல்ல. ப்ளீஸ்! என்னைப் புரிஞ்சிகோங்க" என்று தாய்க்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயன்றான்.


அவரோ, "அதெல்லாம் சரிப்பா.. ஆனா இப்படிக் கடைசி நேரத்தில் ஏன்னு தான் எனக்குப் புரியல. அந்தப் பொண்ணுக்கு வேற பையன் கூட கல்யாணம் நடக்க இருக்கு. அப்போ அந்தப் பையனுக்கு இது கௌரவ  பிரச்சினை ஆகாதா..?" என்று கேட்க,


"அந்த மாப்பிள்ளை இன்னும் மண்டபத்துக்கே வரலம்மா. சொல்ல போனா வருவானா இல்லையானு கூடத் தெரியல. எல்லாம் விசாரிச்சுட்டேன்.." என்று அஜித் அன்னையிடம் கூறிக் கொண்டு இருக்கும் போது தான் ரிஷி வந்தது, மீதி நடந்தது எல்லாம்..


"நீ சொல்றது புரியுதுப்பா. ஆனா இதை மொதல்லயே சொல்லி இருந்தா, இவ்ளோ தூரத்துக்கு வந்து இருக்காதுல? உன் கல்யாணத்தை ஊரறிய நம்ம சொந்தக்காரங்க முன்னாடி ஜாம் ஜாம்னு பண்ணி வச்சி இருப்பேன்ல..?" என்று மனக்குறையுடன் கூறவும்,


தாயின் மனதை புரிந்து கொண்ட அஜித், "இப்ப என்ன.. நம்ம ரிலேஷன்ஸ் இங்க இல்லாதது தானே உங்க கவலை? கல்யாணம் முடிச்ச கையோடு ரிசப்ஷனை கிராண்டா வச்சிடலாம்மா" என்றதும், 


"அதெல்லாம் சரிப்பா.. ஆனா நம்ம சைட்ல இருந்து தாலியாச்சும் பொண்ணுக்கு வாங்கணுமே?" என்று அவர் கூறினார்.


அவனோ, "நான் ஏற்கனவே வாங்கிட்டேன்ம்மா" என்றவன், தன் பேன்ட் பேக்கெட்டில் இருந்து வெல்வெட்டிலான பாக்ஸ் ஒன்றை எடுத்து அன்னையிடம் நீட்ட, அவரோ தன் மகனை அதிர்ந்து பார்த்தார்.


தனுஷாவோ, "ஹை! இது கூட சூப்பர் அண்ணா!" என்று சந்தோஷத்தில் குதித்தாள்.


"என் மனைவிக்குத் தாலி என் பணத்தில் தான் வாங்கியதா இருக்கணும்!!" என்று கூறி விட்டுத் தன் அன்னையின் முகம் பார்க்க, அவரோ தன் மகன் முன்பே தயாராகத்தான் இங்கு வந்துள்ளான் எனப் புரிந்து கொண்டவருக்கு, அவனது விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவிப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.


ஏனெனில் அவரது மகன் ஒரு முடிவெடுத்து விட்டால், அதை யார் சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதால், "சரிப்பா! உன் விருப்பம் தான் என் விருப்பம்" என்று கூறி விட,


"தேங்க்ஸ்மா..!!" என்று அன்னையைக் அணைத்துக் கொண்டவன், தாயையும், தங்கையையும் அழைத்துக் கொண்டு மண்டபத்தின் உள்ளே சென்றான்.


அப்பொழுது கீழே வந்த கார்த்திக்கிடம் தன் அன்னையை அறிமுகம் செய்து வைத்தான் அஜித்குமார். அவனது அன்னையோ, தன் மகனின் செயலுக்கு முதலில் கார்த்திக்கிடம் மன்னிப்பு தான் கேட்டார்.


கார்த்திக்கோ, "இதில  யார் மீதும் தப்பு சொல்ல முடியாது. இதனால நீங்க மன்னிப்பு கேட்கணும்ன்னு அவசியம் இல்ல. இதுதான் விதின்னு இருக்கும் போது அதை மாற்ற நாம யாரு? நம்ம பிள்ளைகள் சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்! யாரையும் குறை சொல்லி ஒன்னும் ஆகப் போறது இல்ல" என்றவன்,


"என் தங்கை பையனுக்கும், என் சின்னப் பொண்ணுக்கும் கல்யாணம் பேசிட்டோம். ஒரே மேடையில இரண்டு கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். அதனால இனி ஆக வேண்டிய வேலையைப் பார்க்கலாம்" என்று முடித்து விட, அதன் பிறகே சற்று நிம்மதியானார், அஜித்தின் அன்னை.


அங்கே ஏற்கனவே ஒரு மணமேடை தயாராக இருக்க, அதன் அருகில், இன்னொரு மணமேடை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தவர்கள், பின்பு 'பெரிய இடத்து விவகாரம் நமக்கெதுக்கு?' என்று அமைதியாகி விட்டனர்.


அதே நேரம்..


மணமகளே மணமகளே 

வாழும் காலம் சூழும் 

மங்களமே மங்களமே 

குணமகளே குலமகளே 

பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே


குற்றம் குறை இல்லா 

ஒரு கொங்கு மணிச்சரமே

மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே


மணமகளே மணமகளே 

வாழும் காலம் சூழும் 

மங்களமே மங்களமே 


என்ற பாடல் சத்தமாக ஒலிக்க, மணமகள் அறையில் ஸ்னேகாவிற்கு மணப்பெண் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.


அவளது நிறத்திற்கு ஏற்றவாறு மாம்பழ வண்ணக் காஞ்சி பட்டில் ஜரிகை இழையோட, வைர நகைகள் மின்ன கண்ணாடியின் முன் ஸ்னேகா அமர்ந்திருக்க, தன் சின்ன மகளுக்குப் பார்த்து பார்த்துத் தன் கையாலயே அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் மோகனா. 


இறுதி அலங்காரமாக நெருக்கித் தொடுத்த மல்லிகை சரத்தை மகளின் கூந்தலில் சூடி, அவளது முகம் பார்த்தவள் பூரித்துத்தான் போனாள்.


ஸ்னேகா எப்பொழுதுமே தன் அழகில் கவனம் கொள்ள மாட்டாள். இன்றோ அழகு தேவதையாக மிளிர்ந்து கொண்டிருந்த மகளின் நெற்றியில் இதழ் பதித்த மோகனாவிற்கு, சந்தோஷத்தில் கண்ணில் கண்ணீர் துளிகள் அரும்பியது.


தன் தங்கை ஸ்னேகாவைப் பார்த்துக் கொண்டிருந்த நேகாவுக்கோ மனம் கனத்துப் போனது. தன்னால் தானே, தனக்குப் பதில் அவள் இப்பொழுது ரிஷியைத் திருமணம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தவித்துப் போனவள், 'என்னை மன்னிச்சுரு ஸ்னேக் பேபி!!' என மானசீகமாகத் தங்கையிடம் மன்னிப்பை வேண்டிய நேகாவுக்குக் கண்கள் கலங்கியது


ஆனால் அவள் அறியாத ஒன்று! ஸ்னேகாவின் சம்மதத்தோடு தான் எல்லா ஏற்பாடும் நடக்கிறது என்று.. அதைப் பற்றி யாரும் அவளிடம் சொல்லவில்லை என்பதால், தங்கையின் இந்த நிலைமைக்கு அஜித் தான் காரணம் என்றும், இதையும் சேர்த்து அவனைப் பழித்தாள் நேகா. 


சிறிது நேரத்தில் மணமகன்கள் இருவரும் மணையில் வந்து கம்பீரமாக அமர்ந்தனர். அஜித்தோ, தன் மனதிற்கினியவளையே கைப்பிடிக்கப் போகிறோம் என்ற உல்லாச மனநிலையில் இருக்க, ரிஷியோ இறுகிய மனநிலையுடன் அமர்ந்திருந்தான்.


அப்பொழுது, "சீக்கிரம் பொண்ணுங்களை அழைச்சுட்டு வாங்கோ!" என்று அய்யர் குரல் கொடுக்கவும்,


முதலில் நேகாவை அழைத்து வந்த மேகா, அவளை அஜித்தின் அருகே அமர வைக்க, அஜித்தோ தன் அருகில் அழகுடன் ஜொலித்துக் கொண்டிருந்த தன்னவளை வஞ்சனை இல்லாமல் அணுஅணுவாய் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தான். அவன் பார்வையை உணர்ந்து உள்ளுக்குள் எரிமலையாய் தகித்துக் கொண்டிருந்தாள் நேகா. 


அடுத்து ஸ்னேகாவை அழைத்து வந்தாள் ரம்யா. தன் தோழியே தனக்கு அண்ணியாக வரப் போவதை தன் தந்தையின் மூலம் கேள்விப்பட்டவள், சந்தோஷ மிகுதியில் துள்ளிக் குதித்தாள். அதன் பிறகு மனப்பெண் தோழியாக மாறியவள், ஸ்னேகாவை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை. 


ஸ்னேகாவோ மணமேடையை நெருங்கும் வரை சாதாரணமாக இருந்தவள், ரிஷிவர்மனின் அருகே அமரப் போகிறோம் என்றதும், அவளது கைக் கால்கள் தானாக உதறல் எடுக்க ஆரம்பித்தது.  


அவளது நடுக்கத்தை உணர்ந்து கொண்ட ரம்யா, "ஆர் யூ ஓகே?" என்று பதட்டமாகக் கேட்க, 


"நா..நான் ஓகேதான் ரம்யா…" என்றாள் ஸ்னேகா. 


அவளது கையில் அழுத்தம் கொடுத்து, "அப்போ வா ஸ்னேகா!" என்று கூறி அழைத்து வந்தவள், தன் அண்ணனின் அருகே அமர வைத்தாள்.


அதுவரை இறுக்கத்துடன் அமர்ந்திருந்த ரிஷியோ, தன் பக்கத்தில் வந்து அமர்ந்திருந்தவளைத் தன்னிச்சையாகத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். அவன் பார்வை வட்டத்திற்குள் பேரழகுடன் அமர்ந்திருந்த ஸ்னேகாவின் அழகிய முகம் விழவில்லை. மாறாக, அவள் காதில் அணிந்திருந்த காது கேட்கும் கருவி தான் அவனது கண்ணில் பட்டது. அதைக் கண்டதும் வெறுப்புடன் சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டவன், ஐயர் கூறும் மந்திரங்களைக் கோபத்துடன் உச்சரிக்க ஆரம்பித்தான். 


முகூர்த்த நேரம் நெருங்கியதும், "கெட்டி மேளம்! கெட்டி மேளம்!" என்று கூறிய ஐயர் தங்கத் தாலியை எடுத்து முதலில் ரிஷியின் கையில் கொடுக்க, அதை வாங்கி வெறித்துப் பார்த்த ரிஷிவர்மன் ஸ்னேகாவின் முகம் பாராமல் அவள் கழுத்தில் பூட்டினான். 


மற்றொரு ஐயர் தாலியை அஜித்குமாரிடம் நீட்ட, அவனோ தன் கையில் கொடுத்த பொன் தாலியை ஆசையுடன் வாங்கிக் கொண்டவன், தன்னவளின் கழுத்தில் காதலுடன் பூட்டி, அவன் மனதின்படியே அவளை அவனவளாக ஆக்கிக் கொண்டான்.


மனையில் அமர்ந்திருந்த  இரண்டு ஜோடிகளையும் பெரியவர்கள் அனைவரும் அட்சதை தூவி மனதார வாழ்த்த, ஓவியாவோ சந்தோசத்துடனும், நிம்மதியுடனும் கணவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.


"மாப்பிள்ளைவாள்! உங்க ஆம்படையா கையை இறுக்கிப் பிடிச்சுட்டு அக்கினியை மூணு முறை சுத்தி வாங்கோ!" என்று ரிஷியிடம் ஐயர் கூற, அவனோ அவரைப் பார்த்த உக்கிரப் பார்வையில், அந்த ஐயரோ வாயை கப்பென்று இறுக மூடிக் கொண்டார்.


அஜித்தோ, தன் கையை நீட்ட மாட்டேன் என்ற அடம்பிடித்த நேகாவின் கையைத் தானே பிடித்து இழுத்து, தன் கைக்குள் பொருத்திக் கொண்டு தானும் எழுந்து நின்றவன், தன்னவளையும் எழுப்பினான். (டேய்! ரொம்ப பண்றே.. உனக்கு இருக்குடா மவனே..!!)


அதன் பிறகு நடந்த சடங்கு சம்பிரதாயங்களை அஜித் விருப்பத்துடன் செய்ய, ரிஷியோ வேண்டா வெறுப்புடன் செய்து கொண்டிருந்தான். 


தாய் - தந்தை இருவரின் பாதம் பணிந்த போது கூடத் தந்தையின் பாதம் தொட்ட ரிஷி, தாயை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஓவியாவோ தன் மருமகளைக் கண்ணீர் மல்க அணைத்துக் கொண்டாள். 


எல்லா சடங்குகளும் முடிந்து மணமகள்கள் புகுந்த வீடு கிளம்பும் நேரம் நெருங்கவும், ரிஷியோ, "நான் வீட்டுக்கு வரல, பெங்களூர் கிளம்புறேன்" என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.  


அதைக் கேட்ட அனைவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொள்ள, ஸ்னேகாவின் முகமோ பயத்தில் வெளுத்தது. 


மகன் அப்படிக் கூறவும் "என்னங்க.." என்று ஓவியா பதற, 


"நான் அவன்கிட்ட பேசுறேன் ஓவிமா" என்ற ரவிவர்மன் 

மகனின் அருகே வந்து, "ரிஷி! முதல்ல நம்ம வீட்டுக்கு வந்துட்டு அப்புறம் நீ எங்க வேணும்னாலும் போ!" என்று அழுத்தமாக கூறினான்.


தந்தையை முறைத்துப் பார்த்த ரிஷிவர்மன், "அந்த வீட்டுக்கு நான் வர மாட்டேன் டாட்!" என்றவனின் குரல் இறுக்கமாக ஒலித்தாலும், அந்த வார்த்தையில் இருந்த வலியைப் புரிந்து கொண்ட ரவிவர்மன், 


மகனின் தோளில் ஆதரவாக கை வைத்து, "உன் பாட்டிகிட்ட நீ ஆசீர்வாதம் வாங்க வேணாமா ராஜா?" என்று கனிவுடன் கேட்க, அந்த வார்த்தையில் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக நின்று விட்டான்.


மகன் மனது மாறும் முன் இங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட வேண்டும் என எண்ணிய ரவிவர்மன், அங்கிருந்து அனைவரையும் கிளப்ப முனைந்தான்.


"போய்ட்டு வரேன் மோஹிமா!!" என்ற கண் கலங்க  கூறிய சின்ன மகளின் நெற்றியில் இதழ் பதித்து அணைத்துக் கொண்டாள் மோகனா. இதுவரை இருந்த பயம், பதட்டம் எல்லாம் விடுத்துத் தானும் தாயைக் கட்டிக் கொண்டு அழுது விட்டாள் ஸ்னேகா.


அவர்களை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த நேகாவும் குரல் தழுதழுக்க, "மோஹிமா.." என்று தாயை அழைக்க, மகளின் அழைப்பில் திரும்பிப் பார்த்த மோகனாவால் நேகாவின் மீது உண்டான  கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. புகுந்த வீடு செல்லும் மகள் சந்தோஷமாகச் செல்ல வேண்டும் என்பதால், தன் மனவருத்தம் மறந்து மகளை அணைத்துக் கொள்ள, தாயின் தோளில் சாய்ந்து கதறி விட்டாள் நேகா.


பின்பு ஒருவாறு சமாதானமாகி நேகாவுடன் அவளது துணைக்கு மேகாவின் குடும்பத்தை அனுப்பி வைக்க, ஸ்னேகாவுடன் மோகனாவின் குடும்பம் ஓவியாவின் வீட்டுக்குச் சென்றார்கள். 


ரிஷிவர்மன் தனது காரில் தான் வருவேன் என்று கூறி விட, அதை யாரும் மறுக்கவில்லை. அவன் ஓட்டுநர் இருக்கையில் அமரவும், பின்பக்க இருக்கையில் ஸ்னேகாவுடன் ஏறி கொண்டாள் ரம்யா. அவனது வாகனம் அவன் கையில் சீறிக் கொண்டு கிளம்ப, மற்றவர்கள் தத்தமது காரில் ஓவியாவின் வீட்டை நோக்கிப் பயணித்தார்கள்.


சிறிது நேர பயணத்திற்குப் பின் ரவிவர்மனின் வீடும் வந்து விட, மணமக்கள் இருவரையும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைக்க, ரிஷியோ அசையாமல் நின்றிருந்தான். அவனது மனம் எதையோ நினைத்துக் கலங்கிப் போனது. மகனின் மனநிலையைப் புரிந்து கொண்ட ரவிவர்மன், 


"உள்ள வா ரிஷி!!" என்று அன்புடன் அழைக்க, தந்தையை ஏறிட்டுப் பார்த்தவனின் கண்கள் சற்றுக் கலங்கி இருந்ததோ..?! அதைத் தந்தையிடம் கூடக் காட்ட விரும்பாதவன், சட்டென அந்தக் கண்ணீரைத் தன் கண்களை இறுக்க மூடி உள்ளுக்கிழுத்தான்.


பதினேழு வருடங்களுக்கு முன் இந்த வீட்டை விட்டு வெளியேறிய ரிஷிவர்மன், இத்தனை வருடங்கள் கழித்துத் தன் துணையுடன் அதே வீட்டில் காலடி எடுத்து வைத்தான். 


மாலை மயங்கி இரவு கவிழ தொடங்க, புதுமண தம்பதிகள் பரவசத்துடன் எதிர்பார்க்கும் நேரமும் வந்து சேர்ந்தது. 


அன்று இரவு சந்தன நிற பட்டு சேலையில் தங்க நகைகள் ஜொலிக்க, மல்லிப்பூ சூடி மிதமான அலங்காரத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் ஸ்னேகா. 


அவள் அருகில் அமர்ந்து அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவோ, "என்னால இன்னுமே நம்பவே முடியலடி.. நீ எங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணியிருக்கன்னு.." நிறுத்தி நிதானமாகக் கூறியவள், 


"எப்படிடி இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொன்ன?" என்று ஆர்வம் தாளாமல் கேட்க, ஸ்னேகாவிடம் பதில் இல்லை. 


ஸ்னேகாவின் மௌனத்தை வேறுவிதமாக எண்ணிக் கொண்ட ரம்யாவோ, "என்னடி? எதுவும் பேச மாட்டேங்கிற? வெட்கமா?" என்று கேட்டபடி ஸ்னேகாவின் நாடி தொட்டு நிமிர்த்த, அவள் கண்களில் தெரிந்த மிரட்சியில் பதட்டம் கொண்டவள், "என்னாச்சு?" என்று கேட்டாள். 


அதற்கு அவள் பதில் அளிக்கும் முன் அங்கே வந்த ஓவியா, "குட்டிமா! ஸ்னேகாவைக் கூட்டிட்டுப் போய் உங்க அண்ணா ரூம்ல விட்டுட்டு வரியா?" என்று கேட்ட நொடி ஸ்னேகாவின் உடல் நடுக்கத்துடன் தூக்கிவாரிப் போட்டது. 


அவள் மனதிலோ, பூட்டிய ஓர் அறையில் காரிருள் சூழ்ந்திருக்க, ராட்சசன் போல் ஒரு உருவம் தோன்றி, அவளை அலற வைத்த சம்பவம் இப்பொழுது அவள் கண் முன் தோன்றியது. 


அதே பயத்துடன், "ஓவிமா! நான் போக மாட்டேன்.!!" என்று அலறிய  ஸ்னேகா, ஓவியாவின் இடுப்பை இறுக கட்டிக் கொண்டு அவளது வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, அவளது செயலில் மற்ற இருவரும் அதிர்ந்து போனார்கள்.

***

1 comment:

  1. En ma Oviya eppo par ennamga nu solradu illa na azhuguradu ide un velai ah vechiruka Avan vera naa parthukiraen nu terror piece kitta pesuran Avan enga pechu kekuran sneha neeye pei ku vaaka pattu iruka maipo poi bayanda summa viduvaan

    ReplyDelete