ஸ்வரம் 16

 



ஸ்வரம் 16..


திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் இருந்து அஜித் தன் குடும்பத்துடன் தனது வாகனத்தில் கிளம்ப, அவனைப் பின்தொடர்ந்து இன்னொரு வாகனத்தில் சென்றனர் மேகாவும், அவளது கணவன் சஞ்சீவும்.


வீட்டிற்கு வந்ததும் காரில் இருந்து முதலில் இறங்கிய தனுஷாவிடம் ஆரத்தி கரைத்து எடுத்து வருமாறு அவளது தாய் கூறவும், "சரி" என்று வீட்டுக்குள் ஓடினாள்.


தன் அருகில் தலை குனிந்து பதுமை போல் அமர்ந்திருந்த மருமகளிடம் "அம்மாடி! நம்ம வீட்டுக்கு வந்தாச்சு, இறங்குமா" என்று அஜித்தின் அன்னை லட்சுமி கனிவுடன் கூற, அவர் கூறியது நேகாவின் காதில் விழுந்தாலும் அசையாமல் அப்படியே சிலை போல் அமர்ந்திருந்தாள்.


ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, ரியர்வ்யூ மிரர் வழியாக மணப்பெண் கோலத்தில் புதுத் தாலி மின்ன இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்த அஜித்குமார், "நேகா! அம்மா சொல்றாங்கள்ல.. இறங்கு!" என்று சற்று அழுத்தமாக கூறவும், சட்டென்று நிமிர்ந்த நேகா, அவனை அனல் தெறிக்கப் பார்த்தாள்.


அவளது அந்தப் பார்வையை அசராமல் எதிர் கொண்ட அஜித், 'உனது இந்தப் பார்வை என்னை ஒன்றும் செய்யாதடி பெண்ணே!!' என்பது போல் அவளை ஆழ்ந்து பார்த்தவன், "இறங்குன்னு சொன்னேன்.." என்றுவிட்டு இறங்கி நிற்க, கணவனை மனதில் அர்ச்சித்தபடி இறங்கி நின்றாள் நேகா.


அதற்குள் கையில் ஆரத்தித் தட்டுடன் வந்து விட்ட தனுஷா, "அண்ணா! எதுக்கு இப்படித் தள்ளி நின்னுட்டு இருக்கே? உன் வைஃப் பக்கத்துல நல்லா நெருங்கி நில்லு" என்று எரிகிற தீயில் இன்னும் அதிகமாக எண்ணெய்யை ஊற்ற, அது பற்றி எரிய காத்திருப்பதை அறியாமல் மனைவியை மேலும் நெருங்கி, அவளின் தோளில் கைப் போட்டு, தன்னோடு ஒட்டி நிற்க வைத்துக் கொண்ட அஜித்குமார், "ம்ம்.. இப்ப ஓகேவா?" என்று தங்கையிடம் கண் சிமிட்டிக் கேட்டான்.


"டபுள் ஓகேண்ணா..!!" என்ற தனுஷா சந்தோஷமாக இருவருக்கும் ஆரத்தியைச் சுற்றி முடிக்க. தன்னை அணைத்தார் போன்று நின்றிருந்த கணவனை முறைத்துப் பார்த்தாள் நேகா.


அவனோ, "வா பேபி, போகலாம்" என்று மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டு அவளை அணைத்தபடியே வீட்டுக்குள் அழைத்து வந்தான்.


மருமகளைப் பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற லட்சுமி அவளை விளக்கேற்ற சொல்ல, அவர் கூறியதை எல்லாம் கீ கொடுத்த பொம்மை போல் செய்து முடித்தாள் நேகா.


அதன் பிறகு மணமக்கள் இருவரும் பால் பழம் சாப்பிட்டு முடிக்கவும் அஜித்தின் மொபைல் ஒலி எழுப்பியது. எடுத்து யார் என்று பார்த்தவன், அதைக் காதுக்குக் கொடுத்தபடி தனது அறைக்குச் சென்று விட்டான்.


சிறிது நேரம் தன் தங்கையின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மேகா, அவள் புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை அவளுக்கு வழங்கி விட்டு, தங்கையின் உடைமைகளையும் கொடுத்து விட்டுத் தன் கணவனுடன் கிளம்பி விட.. நேகாவுக்கோ ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.


மருமகளின் மனநிலையைப் புரிந்து கொண்ட லட்சுமி, "தனு! நேகாவை உன்னோட ரூம்க்குக் கூட்டிட்டுப் போய் ரெஸ்ட் எடுக்க வைமா" என்று கூறவும்,


"சரிமா.." என்றவள், "வா நேகா.." என்று அவளது கையைப் பிடிக்க, தோழியின் கையை உதறி விட்டாள் நேகா. அவளது அந்தச் செயலில் கோபத்தை உணர்ந்து கொண்ட தனுஷாவிற்கு, அப்பொழுது தான் தோழி இதுவரை தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது புரிந்தது. ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் தன் மேல் எப்படியும் கோபம் இருக்கும் தானே? கோபம் தணியவும், எடுத்துச் சொன்னால் தன்னை அவள் புரிந்து கொள்வாள் என நேகாவின் மனம் அறியாமல் எண்ணிக் கொண்டாள் தனுஷா.


நேரம் யாருக்காவும் காத்திருக்காமல் அது பாட்டுக்குக் கடக்க, புதுமணத் தம்பதிகளுக்கான பிரத்யேக நேரமும் வந்து சேர்ந்தது. அன்று இரவு நேகாவின் கையில் பால் சொம்பைக் கொடுத்த லட்சுமி,


"அம்மாடி! இதுவரைக்கும் என் மகன் அவனுக்குன்னு எதுவும் ஆசைப்பட்டது கிடையாது. உன்னைத்தான் விரும்பிக் கல்யாணம் பண்ணி இருக்கான். அவனோட சந்தோஷம் தான் எங்க நிம்மதி! நீயும் அவனும் சந்தோஷமா உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும். அடுத்தப் பத்தாம் மாசம் இந்த வீட்ல தொட்டில் ஆடணும்" என்று ஒரு சராசரி மாமியாராக மருமகளிடம் எடுத்துக் கூறியவர், "தனு! கூட்டிட்டுப் போ!" என்று மருமகளை மகனின் அறைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை மகளிடம் ஒப்படைத்தார்.


தோழியை அழைத்து வந்து அண்ணனின் அறை வாசலில் நிறுத்திய தனுஷா, "ஆல் தி பெஸ்ட் டி!" என்று வாழ்த்தியவள் அண்ணனின் அறை கதவை திறந்து, அவளை உள்ளே அனுப்பி வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


கையில் பால் செம்புடன் அடி மேல் அடியெடுத்து வைத்துக் கணவனின் அறைக்குள் வந்த நேகா, அதற்கு மேல் செல்லாமல் அங்கேயே நின்று அந்த அறையைப் பார்வையிட்டாள். அங்கே அவள் கணவன் இருப்பதற்கான அறிகுறி இல்லை. எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாளோ..?? அவள் முதுகுக்குப் பின்னே கதவு தாழிடும் சத்தமும், அதைத் தொடர்ந்து அழுத்தமான காலடியோசையும் கேட்க, அவளது உடல் விறைத்தது.


மனைவியை நெருங்கிய அஜித்குமார், "வந்து ரொம்ப நேரம் ஆச்சா?" என்று சாதாரணமாகக் கேட்டபடி அவள் கையில் இருந்த பாலை வாங்கி அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு, ஆசையுடன் அவளது தோள் தழுவி அணைத்தபடி கட்டிலை நோக்கி நகர்த்த, அவளோ இம்மியளவு கூட நகராமல் இரும்பாக நின்றிருநதாள்.


அதில் யோசனையாக நெற்றிச் சுருக்கியவன், "என்னாச்சு பேபி?" என்றபடி மனைவியின் முகம் பார்த்தான்.


அவளோ தன் தோளைத் தழுவி இருந்த கணவனின் கையை வேகமாகத் தட்டி விட்டு, அவனிடம் இருந்து விலகி நின்று அவனை அக்கினியாகச் சுட்டெரித்தாள்.


அவனோ அவளது இந்தக் கோபத்தை ஏற்கனவே எதிர்பார்த்ததால், அதைச் சட்டை செய்யாமல், இதழில் பூத்த புன்சிரிப்புடன் மனைவியின் கைப் பிடித்து அவளைச் சுண்டி இழுக்க, கணவனின் செயலை எதிர்பாராத நேகா அவன் மீது பூப்பந்தாய் வந்து விழுந்தாள்.


தன் மீது வந்து விழுந்தவளை இறுக்கி அணைத்துக் கொண்ட அஜித்குமார், "என் மேல கோபமா இருப்பேன்னு எனக்குத் தெரியும். அந்தக் கோபத்தை எப்படிப் போக்குறதுன்னும் எனக்குத் தெரியும் பேபி" எனச் சரசமாகக் கூறி பெண்ணவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தம் பதித்தான்.


ஏற்கனவே எரிமலையாய் தகித்துக் கொண்டிருந்த நேகாவுக்கு அவனின் இந்தச் செயல் அருவெறுப்பைக் கொடுக்க, தன் பலம் மொத்தத்தையும் திரட்டி வேகமாகக் கணவனைத் தள்ளி விட்டவள், "நீயெல்லாம் மனுசனாடா?? உனக்கு மனசாட்சின்னு ஒன்னு கிடையவே கிடையாதா?? அது எப்படிடா.. கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாம மறுபடியும் என்னை நெருங்க உனக்கு மனசு வருது? ச்ச!!" என்று அவன் முகம் பார்த்து வெறுப்புடன் கேட்டாள்.


அவளது மரியாதை அற்ற விளிப்பில் அவனுக்கு மேலும் சிரிப்பு வர, "மனசாட்சி இருந்ததால தான், உன் வீட்ல உள்ளவங்க சம்மதத்தோட ஊரறிய உனக்குத் தாலி கட்டி என் மனைவி ஆக்கி இருக்கேன்" என்ற அஜித்குமார், "இப்போ நீ என் மனைவியான பிறகு உன்னை மறுபடியும் நெருங்க எனக்கு என்ன தடை இருக்கு பேபி?" என்று கண் சிமிட்டியவன், அவள் சுதாரிக்கும் முன் மீண்டும் அவளது கையைப் பிடித்து இழுத்துத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொள்ள,


"நினைச்சத்தைச் சாதிச்சுட்டேங்கிற திமிரா? விடுடா என்னை!!" என்று கணவனிடம் இருந்து திமிறினாள் நேகா.


அவனோ, "விடுறேன் பேபி! அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நான் சொல்றதைப் பொறுமையா கேளு!" என்று அமைதியாகவே கூறினான் அஜித்.


"இன்னும் என்னடா பேசணும்? அதான் மண்டபத்தில வச்சி பேச வேண்டியது எல்லாம் பேசிட்டியே? எப்படி எப்படி?? நானும் நீயும் அஞ்சு வருசமா லவ் பண்றோமா?? மண்ணாங்கட்டி..!!" என்று பொரிந்தவள், கணவனிடம் இருந்து விடுபடப் போராடினாள்.


திமிறிக் கொண்டிருந்த மனைவியை மேலும் சோதிக்காமல் தன்னிடம் இருந்து விடுவித்தவன், தனது கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, "உண்மையைத்தான் பேசினேன் பேபி. ஏன்னா நான் உன்னை அஞ்சு வருசமா லவ் பண்றது நிஜம்!!" என்று தன்னை, தன் மனதை அவளுக்குப் புரிய வைக்க முயன்றான் அஜித்.


அவளோ, "ஹான்..!! அப்படிங்களா சார்..??" என்று நக்கலாகக் கேட்டவள், "அப்படி லவ் பண்ணி இருந்தா, அதை நேருக்கு நேர் என்கிட்ட தைரியமா சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு கோழை மாதிரி என் முதுகுல குத்தி இருக்கக் கூடாது!" என்று சீறியவள்,


"என் வாயாலேயே கல்யாணத்தை நிறுத்தி, எல்லாரையும் என்னைத் தப்பா நினைக்க வச்சு, என் குடும்பத்துக்கு முன்னாடி என்னைத் தலை குனிய வச்சிட்டில?? உன்னை என்னைக்கும் நான் மன்னிக்கவும் மாட்டேன்..!! நீ செஞ்சதை மறக்கவும் மாட்டேன்..!!" என அவள் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் ஆக்ரோஷமாகக் கொட்டித் தீர்த்து விட்டுத் தன் கைகளால் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.


அவளது அழுகையைக் காண முடியாமல், "பேபி..!!" என்று மனைவியைச் சமாதானம் செய்ய அவளை நெருங்கினான் அஜித்குமார்.


கணவன் தன்னை நெருங்கி வரவும், அவன் முன் தனது வலது கையை நீட்டித் தடுத்து நிறுத்திய நேகா, "என்னைத் தொடாதே!!! நீ தொட்டாலே எனக்கு அருவெறுப்பா இருக்கு" என்று முகத்தைச் சுளிக்க, அவளை நெருங்காமல் பின்வாங்கினான் அஜித்.


"அதான் கல்யாணம் ஆயிடுச்சே.. இவளை என்ன வேணா பண்ணலாம்ன்னு என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க நினைக்காதே! உன் சுண்டு விரல் கூட என் மேல படக் கூடாது! அப்படிப் பட்டுச்சு, நடக்கிறதே வேற..!!" என்று எச்சரித்தவள்,


"மத்தவங்களைப் பொறுத்தவரை தான் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. ஆனா இந்த நாலு சுவத்துக்குள்ள நீ எனக்கு யாரோ, நான் உனக்கு யாரோ தான்" என்று குரூரமாகக் கூறியவள், விறுவிறுவெனக் கட்டிலின் அருகே சென்று அதில் படுத்துக் கொண்டாள்.


அஜித்தோ தன்னவளின் இந்த அவதாரத்தை எதிர்பார்த்ததாலோ என்னவோ, அவளது இந்தப் பேச்சுக்கள் பெரிதாக அவனைக் காயப்படுத்தவில்லை. சிறிது நேரம் மனைவியை ஆழ்ந்து பார்த்தவன், மனைவியின் கோபம் தணியும் வரை காத்திருக்க முடிவெடுத்தான். பின்பு ஒரு பெருமூச்சுடன் பால்கனி கதவை திறந்து கொண்டு அங்குச் செல்ல, நேகாவோ கட்டிலில் படுத்துக் கண்களை இறுக மூடிக் கொண்டாலும், அவளது கண்ணில் இருந்து கண்ணீர் காதோரம் வழிந்து கொண்டிருந்தது.


அதே நேரம் இங்கு ஓவியாவின் வீட்டில், கணவனின் அறைக்குச் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்த ஸ்னேகாவை ஒருவாறு சமாதானம் செய்திருந்தாள் ஓவியா.


மருமகளின் நாடி தொட்டு, "ஸ்னேகா! என் பையன் கோபக்காரன் தான், ஆனா ரொம்ப நல்லவன் கண்ணம்மா. இப்ப அவன் உன் கணவன்! அவன்கிட்ட எந்தப் பயமும் உனக்கு வேணாம்!" என்று எடுத்துக் கூறி அவளது நெற்றியில் இதழ் பதிக்க,


"ஓவிமா.." என்று ஏதோ சொல்ல வந்தவள், பின்பு அந்த வார்த்தையைத் தனக்குள் விழுங்கி விட்டு "சரி ஓவிமா!" என்றுவிட்டாள்.


அதைக் கேட்டு முகம் மலர்ந்த ஓவியா, ஸ்னேகாவைத் தன் மகள் ரம்யாவுடன் அனுப்பி வைத்து விட்டு, கணவனைத் தேடி தங்களது அறைக்கு வந்தாள். இவ்வளவு நேரமும் என்னதான் சாதாரணமாக அவள் காட்டிக் கொண்டாலும், அவளது மனதில் கணவனிடம் கேட்க எண்ணற்ற கேள்விகள் இருந்தன.


ரவியோ பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டிருக்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன், "சரி! எல்லாம் முடிச்சுட்டு எனக்குக் கால் பண்ணுங்க" என்று போனில் சொல்லி விட்டு அதை அணைத்தவன் அறையின் உள்ளே வந்தான்.


ஓவியாவோ அமைதியாக வந்து கட்டிலில் அமர்ந்திருக்க, மனைவியின் அருகே அமர்ந்த ரவிவர்மன், "ஓவிமா.." என்று அவளது தோளில் கை வைத்தான்.


அவளோ, "பதினேழு வருஷத்துக்கு முன்ன என்ன நடந்தது ரவி..?" என்று கணவனிடம் இறுகிய குரலில் கேட்டாள்.


மனைவியின் இந்தக் கேள்வியில் அவன் அதிரவில்லை. மாறாக மண்டபத்தில் வைத்து ரிஷிவர்மன் பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் கேட்ட பின், மனைவி இவ்வளவு நேரம் அமைதியாக இருந்ததே பெரிய விஷயம் என்று அவனுக்குத் தெரியாதா?? ஆனாலும் சமாளிக்கும் பொருட்டு,


"இப்ப அதெல்லாம் எதுக்கு ஓவிமா? நீ ஆசைப்பட்ட மாதிரி நம்ம பையனுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. அவனும் நம்ம வீட்டுக்கு வந்துட்டான். அதை மட்டும் நினைச்சு சந்தோஷப்படு!" என்று கூறவும்,


"எதுக்கா!? என்ன ரவி சாதாரணமா சொல்றிங்க?? ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்ல பதினேழு வருஷம் என் புள்ள என்னைப் பிரிஞ்சி இருந்து இருக்கான். ஏன் அப்படி இருக்கிறான்னு உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கு. ஆனா நீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலை. ஒவ்வொரு நாளும் என் பையனை நினைச்சி நான் எப்படித் துடிச்சேன்னு உங்களுக்குத் தெரியும் தானே ரவி?" கணவனின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்டவள், அவனது நெஞ்சில் விழுந்து கதறினாள்.


மனைவியின் முதுகை ஆதரவாகத் தடவி கொடுத்த ரவிவர்மன், 'சொன்னா நீ தாங்க மாட்டே ஓவிமா..' என்று மனதில் வலியுடன் கூறி விட்டு,


"இப்ப எதுக்குப் பழசு எல்லாம் கேட்டுட்டு இருக்கே? அதெல்லாம் முடிஞ்சி போன கதை! அதைப் பத்தி நினைக்காதே ஓவிமா!" என்று கூறி மனைவியைச் சமாதானம் செய்ய முயன்றான்.


அவளோ, "அப்போ என்ன நடந்ததுன்னு நீங்க சொல்ல மாட்டீங்க, அப்படித்தானே? சரி, சொல்ல வேணாம்.. இன்னும் எவ்வளவு நாளைக்கு என்கிட்ட இருந்து மறைக்கப் போறீங்கன்னு நானும் பார்க்கிறேன். என்னைக்காவது எனக்குத் தெரிஞ்சி தானே ஆகணும்?" என்று கூற, ரவிவர்மனோ பதில் ஏதும் பேசாமல் அமைதி காத்தான்.


ஒருவேளை என்ன நடந்தது என்று மனைவியிடம் எடுத்துக் கூறி இருந்தால்..?? பின்னால் நடக்க இருக்கும் அசம்பாவிதத்தைத் தடுத்துத் தன் மனைவியை எமனிடம் இருந்து காத்திருப்பானோ ரவிவர்மன்??


****


இங்கு ஸ்னேகாவை அழைத்துக் கொண்டு தன் அண்ணனின் அறையை நோக்கி நடந்தாள் ரம்யா. அறையின் முன்னே வந்து நின்ற ஸ்னேகாவிற்குக் கால்கள் பின்ன ஆரம்பித்தது. பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பிக்க, அதைக் கண்ட ரம்யா,


"பயப்படாதே ஸ்னேகா! என் அண்ணன் ஒன்னும் சிங்கம் புலி இல்ல, உன்னைக் கடிச்சு திங்க!" என்று கூறியவள், அண்ணனின் அறை கதவைத் திறந்து அவளை உள்ளே அனுப்பி விட்டுச் சென்று விட்டாள்.


கணவனின் அறைக்குள் நுழைந்த ஸ்னேகாவுக்கோ சிங்கத்தின் குகைக்குள் நுழைவது போல் உணர்வு ஏற்பட்டது. அவளது கால்கள் அதற்கு மேல் நகர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.


எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாளோ..? அவள் நாசியில் சிகரெட்டின் வாடையும் கூடவே மதுவின் நெடியும் அடிக்க, அவளது இதயம் ஏகத்துக்கும் எகிறிக் குதித்தது. குனிந்த தலை நிமிராமல் கண்களை இறுக மூடிக் கொண்டு கந்தசஷ்டி கவசத்தை மனதில் உச்சரித்தவள், தன் கையில் இருந்த சாவியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.


அங்கே சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ரிஷிவர்மனின் வலது கையில் மது கோப்பையும், இடது கை விரல்களுக்கிடையே சிகரெட்டும் இருந்தது. மதுவை ஒரு வாய் அருந்தியவன், கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மாதுவைத்தான் போதை நிரம்பிய விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தான்.


நேரம் கடந்து கொண்டே இருந்ததே தவிர, அவளும் உள்ளே வரும் வழியைக் காணோம்! அவனும் அவளை அழைக்கும் வழியைக் காணோம்!


கிளாசில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்து விட்டு மீண்டும் அதை நிரப்ப போன ரிஷிவர்மன், என்ன நினைத்தானோ?? அச்செயலை செய்யாமல் தலை சாய்த்து மனைவியைப் பார்த்தவன், "ஏய்! இங்க வா!" என்று அவளை நோக்கிச் சொடக்கிட்டான்.


கணவனது கர்ஜனை குரலிலும், சொடக்குச் சத்தத்திலும் வேகமாக இரண்டடி பின்னால் நகர்ந்தாளே தவிர, கணவனை இப்பொழுதும் அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை, அவன் அருகில் செல்லவும் இல்லை.


அதில் எரிச்சல் அடைந்த ரிஷிவர்மன், "ஏய்! கூப்பிடுறேன்ல.. வாடி இங்க!!" என்று அவன் கர்ஜிக்க, அதில் அவளது உடல் மேலும் தூக்கிப் போட, வேகமாக அவன் முன் வந்து நின்றாள் ஸ்னேகா. அவளது கைகள் இரண்டும் கோர்த்து இருந்தாலும் அது தந்தியடித்தபடி தான் இருந்தது.


கேலியாக அவளை மேலும் கீழும் பார்த்த ரிஷிவர்மன், எழுந்து அவள் அருகில் சென்று தனது பார்வையை அவள் மேல் பதித்தபடி அவளை ஒரு சுற்று சுற்றி வந்தான்.


தன்னைச் சுற்றி வரும் கணவனின் நெருக்கத்திலும், அவனின் அழுத்தமான காலடியோசையிலும் அவளது இதயம் அதிவேகமாகத் துடித்தது. அவளது இதயத்தின் ஸ்வரம் அவளுக்கே தெளிவாகக் கேட்டதோ? தன் கைக் கொண்டு தனது நெஞ்சினை அழுத்திப் பிடித்துக் கொண்டாள் ஸ்னேகா.


சுற்றி வந்து மனைவியின் முன் நின்ற ரிஷிவர்மனின் கண்ணில் பட்டது, அவளது காது கேட்கும் கருவி. அதைப் பார்க்க பார்க்க அவனது கோபம் ஏகத்துக்கும் எகிற, தன் கையில் இருந்த கண்ணாடி க்ளாஸை ஓங்கி சுவரில் எறிந்தான். அதுவோ சுக்குநூறாக உடைந்து சிதறியது. அந்தச் சத்தத்தில் ஸ்னேகாவின் மேனி வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பிக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.


அவளது மனநிலையை அவன் உணர்ந்தாலும், அதைச் சட்டை செய்யாமல் டீபாயின் மீதிருந்த ஒரு பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டி, "சைன் இட்!" என்றான் கட்டளையாக.


அதில் கண்களை மெல்ல திறந்து கணவன் நீட்டிய காகிதத்தை இமை உயர்த்திப் பார்த்தாள். அந்தக் காகிதத்தில் முதன்மையாக எழுதியிருந்த வாக்கியத்தைப் படித்தவளது மனம் அதிர, மிரட்சியுடன் தன் எதிரே நின்றிருந்த கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.


அவனோ, "என்ன பார்க்கிறே? சொன்னது காதுல விழலையா? போடுடி கையெழுத்தை!!" என்று கர்ஜித்த ரிஷிவர்மன், அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவன் போல்..


தன் இடது கை ஆள்காட்டி விரலால் தனது நெற்றியை நீவியவன், "ஓஹ்! உனக்குத்தான் காது கேட்காதுல.." என்று ஏளனமாகக் கூற, ஸ்னேகாவின் கண்களோ கலங்க ஆரம்பித்தது.


அவளது கண்ணீரை இரக்கமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த ரிஷி, "இப்படி "டப்பா" காது வச்சிருக்க நீ எல்லாம் எனக்கு மனைவி ஆகத் தகுதியே இல்லாதவடி!! உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல. சோ சைன் இட்!" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்.


அவளுக்கோ கணவன் மேல் பயம் இருந்தாலும் தனது வாழ்க்கை முக்கியமாகப்பட, அவனுக்குப் பதில் கூறாமல் பிடிவாதமாக நின்றாள் ஸ்னேகா.


அதில் பொறுமையிழந்த ரிஷிவர்மன், "என்னடி?? திமிரா?? சொல்லிக்கிட்டே இருக்கேன், இப்படி மண்ணு மாதிரி நிக்கிற..??" என்று உச்சஸ்தாயில் கத்தியபடி அவளது கையைப் பிடித்து அவன் இழுத்தான்.


அவன் இழுத்த வேகத்தில் அவள் கையில் இருந்த இரும்பு சாவி எங்கோ தூரச் சென்றிருக்க, ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த ஸ்னேகா அவனது இச்செயலில் மேலும் அதிர்ச்சியானாள். அதன் விளைவாக, அவளது தலை ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அடுத்து அவளது வாய் கோணியதும் இல்லாமல் அவளது உடல் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிக்க, அப்படியே தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.


அவளது அந்த நிலையை ரிஷிவர்மன் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவளுக்கு உதவவும் இல்லை. மாறாக உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவளை வெறித்துப் பார்த்திருந்தான், அவளின் ராட்சசன்..!!


****

1 comment:

  1. Pavam Ava vazhkai ah avale keduthukita avalai kapathuvana illa poi seratum nu vittuduvana

    ReplyDelete