ஸ்வரம் 17

 



ஸ்வரம் 17..


அதிகாலையில் விழிப்பு வரவும் நெற்றிச் சுருக்கி கண்களைத் திறந்து பார்த்தாள் நேகா. தான் இருப்பது புது இடம் என அவளுக்குப் புரியவும், வேகமாக எழுந்தமர்ந்தவளுக்கு அப்பொழுது தான் நேற்றைய நாள் நினைவுக்கு வந்தது.


"ம்பச்.." என்றபடி சிறிது நேரம் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள். அப்பொழுது அவளது பார்வையில் தன் மார்பில் படர்ந்திருந்த மாங்கல்யம் தான் கருத்தில் பட, அதை எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தாள்.


மாங்கல்யத்திற்கு உண்டான எந்த உணர்வும் தோன்றவில்லை. மாறாகக் கணவன் செய்த அன்றைய செயலும், நேற்றய நிகழ்வும் தான் நினைவுக்கு வந்து அவளை இன்னும் இறுக செய்தது.


பின்பு அறையைச் சுற்றி நோட்டம் விட்டவளுக்குக் கணவன் அங்கு இல்லை என்று புரியவும், தனது பெட்டியில் இருந்து ஒரு சேலையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.


குளித்து முடித்து உள்ளேயே சேலையை உடுத்திக் கொண்டு வந்த நேகா, ஈர தலை முடியை உலர்த்திச் சிறு பின்னலிட்டு, அந்த அறையில் இருந்து வெளியே வரும் வரை அஜித் வந்திருக்கவில்லை. 


வெளியே வந்தவள் கீழே செல்வதற்குப் படியில் இறங்கிய அதே நேரம், அங்கே இருந்த மற்றொரு அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் அஜித்குமார். உடற்பயிற்சி செய்திருப்பான் போல! தன் மேனியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி வந்தவனின் பார்வை, படியில் புத்தம் புது மலராக இறங்கிக் கொண்டிருந்த மனைவியின் மீது படிந்தது.


அவளை ரசனையுடன் பார்த்திருந்தபடி நின்றிருந்தவனின் முன் "அண்ணா!" என்று வந்து நின்றாள் தனுஷா.


அவளைப் பார்த்ததும் "ஏய் வாலு! மணி என்னாகுது? நீ இன்னும் ஆபிஸ்க்கு கிளம்பல? உன் எம்.டி உன்னைத் திட்ட போறான்" என்று விட்டுத் தங்கையின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்தான்.


அவளோ தலையைத் தடவியபடி, "அதெல்லாம் திட்ட மாட்டான். ஏன்னா, எங்க எம்.டி அதான் அந்த ஹிட்லருக்கு நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு. அதனால ஆபிசுக்கெல்லாம் வர மாட்டான். அதான் நானும் லீவு போட்டுட்டேன்" என்று அண்ணனைப் பார்த்துக் கண்ணடித்துக் கூறவும்,


"வர வர ஓவர் கொலஸ்ட்ரால் ஆகிப் போச்சு உனக்கு!!" என்று அவன் தங்கையைப் பொய்யாக முறைத்தான்.


"எங்க அண்ணா போடுற சாப்பாட்டை வஞ்சம் இல்லாம சாப்பிடுறேன்ல.. அதனால வந்த கொலஸ்ட்ரால்!" என்றவள், "சரி, உன் வைஃப் எங்க? எழுந்துட்டாளா?" என்று நேகாவைக் கேட்டாள் தனுஷா.


"ம்ம்ம்.. இப்ப தான் மேடம் ரெடியாகி கீழே போனாங்க" என்று அவன் கூறவும்,


அவளோ, "அண்ணா! உங்க மேடம் என் மேல் செம கோபத்துல இருக்காங்க, தெரியுமா?" என்று சொல்லிச் சிரிக்க,


"எதுக்கு?" என்று யோசித்தவன், "ஒஹ்! நான் அவளை லவ் பண்ற உண்மையை நீ அவகிட்ட மறைச்சதுக்காகவா?" என்று கேட்க,


அவளோ, "ஆமாண்ணா.." என்றவள், "ஆனா அந்தக் கோபம் எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம்தான். ஒரே ஒரு சாக்லெட் கொடுத்துக் கரைச்சிடுவேன்" என்று தனுஷா சிரித்துக் கொண்டு கூறவும்..


தங்கையின் பேச்சில் அவனுக்கும் புன்னகை தான் வர, சிரித்துக் கொண்டே "அன்னைக்கு மாதிரியா?" என்று கேட்டான் அஜித்… 


"ஆமா அண்ணா.. அமலா கல்யாணத்துக்கு அவளை உன் கூட அனுப்ப எப்படி எல்லாம் நடிக்க வேண்டியதா இருந்துச்சு? அவளைச் சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள எனக்குப் போதும் போதுன்னு ஆயிடுச்சு!!" என்று பெருமூச்சு விட்டவள்,


தன் அண்ணனை குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டே, "நான் ஜஸ்ட் ஒரு கோடு தான் போட்டேன். ஆனா நீ ரோடே போட்டு, என் பிரெண்ட்டை உன் வழிக்குக் கொண்டு வந்துட்ட. எப்படிண்ணா இந்த அதிசயம் நடந்தது?" என்று ஆர்வத்துடன் அவள் கேட்டாள்.


அவனோ, "அது தெரிஞ்சி என்ன பண்ணப் போறே? இப்ப நேகா எனக்கு மனைவியா நம்ம வீட்டுக்கு வந்துட்டா, அதை மட்டும் பாரு!" எனக் கூறியவன்,


"உனக்கு ஹேப்பி தானே தனு?" என்று தங்கையிடம் கேட்டான் அஜித்குமார்.


அவளோ, "உன்னோட சந்தோஷம் தான் அண்ணா எனக்கு முக்கியம். நீ ஹேப்பின்னா நானும் ஹேப்பி" என்றவள், "நேத்து நீ நேகாக்குத் தாலி கட்டுற வரைக்கும் திக்கு திக்குன்னு தான் இருந்தது. இப்ப நிஜமா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?" என்றவள்,


"ஓகே அண்ணா.. நான் போய் நேகாவைப் பார்க்கிறேன்" என்ற தனுஷா அங்கிருந்து நகர, அஜித்தும் சிரிப்புடன் தனது அறைக்குச் சென்று விட்டான்.


சந்தோஷ மிகுதியில் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி படியில் இறங்கி வந்த தனுஷா, அங்கே பாதிப் படி நின்று தன்னை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்த நேகாவைக் கண்டு கண்களை விரித்தவள்,


"ஓய் நேகா! நீ இங்க தான் நிக்கிறியா?" என்று கேட்டு உற்சாகமாகத் தோழியின் அருகே செல்ல, தன் அருகில் வந்த தனுஷாவை ஒரு நொடி உறுத்து விழித்த நேகா, அடுத்த நொடி ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்து இருந்தாள்.


இதைச் சற்றும் எதிர்பாராத தனுஷா, "நேகா..!!" என்று தன் கன்னத்தைப் பிடித்தபடி தோழியை அதிர்ந்து பார்த்தாள்.


நேகாவோ, "பேசாதடி! என் பேரைச் சொல்ல கூட உனக்கு அருகதை இல்ல. நட்புன்னா உனக்கு என்னனு தெரியுமா? நம்பிக்கை!! ஆனா நீ, அந்த வார்த்தைக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத துரோகிடி!! அதுவும் பச்சை துரோகி!! நீ இவ்வளவு சுயநலமா இருப்பேனு நான் நினைச்சு கூடப் பார்க்கல. ச்சி! உன்னைப் போய்ப் பிரெண்டா இவ்வளவு நாள் நம்பி இருந்தேனேன்னு பாரு.. எனக்கே அசிங்கமா இருக்கு!!" என அவளிடம் சீறி விட்டாள்.


அஜித்குமார் தன் மேல் காதல் கொண்டுள்ள விஷயம் தனுஷாவிற்குத் தெரியாமல் இருக்காது. தெரிந்தும் ஒரு வார்த்தை கூடத் தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கத்தில் தான், தோழியிடம் அன்றைய சம்பவத்தில் இருந்து நேற்று வரை ஒதுக்கத்தைக் காட்டினாள் நேகா. ஆனால் சற்று முன் தன் கணவனிடம் தனுஷா பேசியதைக் கேட்ட போது தான்.. தனது இந்த நிலைமைக்கும், கடந்த ஒரு மாதமாகத் தான் பட்ட மனவலிக்கும் முக்கியக் காரணமே தன் தோழி தான் என்பதை அறிந்தவுடன், நேகாவால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் தான் கோபம் கொண்டு தோழி என்றும் பாராமல் அறைந்து விட்டாள்


தனுஷாவோ நேகாவின் செயலிலும், பேச்சிலும் திக்பிரம்மை பிடித்தவள் போல் அப்படியே அதிர்ந்து நிற்க, நேகாவோ அதற்கு மேல் அவளிடம் பேசப் பிடிக்காமல் படி இறங்கி விட்டாள்.


கீழே வந்தவளை சோபாவில் அமர்ந்தபடி எதிர்கொண்ட லட்சுமி, "குளிச்சிட்டியாமா? போ, போய்ச் சாமி ரூம்ல விளக்கு ஏத்திடு!" என்று கூறினார்.


அவர் சொன்னதைச் செய்ய அவளுக்கு மனமில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல், "சரி.." என்றுவிட்டு சாமியறைக்குச் சென்றாள் நேகா.


அதற்குள் குளித்து விட்டு வந்திருந்த அஜித்குமாரின் கண்கள் மனைவியைத்தான் தேடியது.


மகனைக் கண்டதும் "அஜித்.." என்று அழைத்தார் லட்சுமி.


"அம்மா.." என்று தாயின் அருகே அவன் அமரவும்,


"அஜித்! ரிசப்ஷன் எப்போ வைக்கலாம்னு ஏதும் முடிவு பண்ணிருக்கியா?" என்று கேட்டார் அவர்.


"சீக்கிரமே வச்சிடலாம்மா.. நீங்க வேணா டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க, மத்த ஏற்பாடெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று அவன் தாயிடம் பேசிக் கொண்டிருக்க, அப்பொழுது பூஜையை முடித்து விட்டு அங்கு வந்தாள் நேகா.


அவளைப் பார்த்ததும் அஜித்தின் பார்வையில் மின்னல் வந்தது. எப்பொழுதும் அவள் அறியாமல் ரசிப்பவன்.. இன்றோ கழுத்தில் புதுத் தாலி மின்ன, நெற்றி வகிட்டில் குங்குமம் ஜொலிக்கப் பேரழகுடன் மிளிர்ந்து கொண்டிருந்த தன்னவளை உரிமையுடன் வஞ்சம் இல்லாமல் ரசித்து உள்வாங்கினான்.


கணவனின் பார்வையை உணர்ந்த நேகாவுக்கோ, உடல் முழுவதும் பற்றி எரிந்தாலும், கணவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அப்படியே நின்றாள்.


அவனோ இதழில் பூத்த புன்னகையுடன், "நேகா! காபி ப்ளீஸ்..!!" என்று கேட்க, சட்டென்று விழி உயர்த்தி அவனை வெட்டும் பார்வை பார்த்தாள், அவன் மனைவி.


மகன் காபி கேட்டும் மருமகள் அமைதியாக நிற்பது கண்டு, "அம்மாடி! அஜித் காபி கேக்குறான்ல, போய்ப் போட்டு எடுத்துட்டு வாம்மா" என்று மருமகளிடம் கூறி விட்டு மகனிடம் ரிசப்ஷன் பற்றிப் பேச ஆரம்பித்தார் லட்சுமி.


அஜித்தின் கவனம் தாயின் பேச்சில் இருந்தாலும் பார்வையோ மனைவியின் மீதே இருந்தது. தன்னை முறைத்தபடி நின்றிருந்தவளைப் பார்த்துக் கண் சிமிட்டி வைத்தான் அவன்.


அதில் பல்லைக் கடித்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் நேகா.


மகனிடம் பேசி முடித்து விட்டு, "ஆமா, இந்தத் தனு இன்னுமா எழுந்துக்கல?" என்று மகளைத் தேடினார் லட்சுமி.


"அவ அப்பவே கீழே வந்துட்டாளேம்மா?" என்று அஜித் கூற,


"இல்லப்பா, இன்னும் வரல. இரு, நான் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று எழப் போன தாயை, "நீங்க இருங்கம்மா, நான் அவளுக்குப் போன் போடுறேன்" என்று அவரைத் தடுத்த அஜித் தங்கையின் கைப்பேசிக்கு அழைத்தான்.


அங்கே தனது அறையில் கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்த தனுஷாவின் கண்கள் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருக்க, அவள் அருகில் கிடந்த மொபைல் ஒலி எழுப்பியது.


யார் என்று எடுத்துப் பார்த்தவள், அழைப்பது அண்ணன் என்றதும், கண்ணீரை அழுத்தித் துடைத்துக் கொண்டு மூச்சை இழுத்து விட்டுத் தன்னைச் சமன் செய்தவள், மொபைலை எடுத்துக் காதுக்குக் கொடுத்து "அண்ணா.." என்றாள்.


"தனு! எங்கே இருக்கே? ரூம்லலயா?" என்று அஜித் கேட்க,


"ஆமா அண்ணா, எனக்குக் கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருந்தது. அதான் வந்து படுத்துட்டேன்" என்று அவள் கூறவும்,


'சற்று முன் தன்னிடம் பேசும் பொழுது உற்சாகமாக இருந்த தங்கைக்கு இப்பொழுது திடீரென என்ன ஆனது?' என யோசித்த அஜித், "சரிடா, நீ ரெஸ்ட் எடு!" என்று விட்டு வைத்தவன், "தலைவலினு படுத்துருக்காம்மா" என்று தாயிடம் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது காபியை கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள் நேகா.


அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே காபி கப்பை வாங்கிக் கொண்ட அஜித், ஒரு வாய் அருந்தியவன், "ஸ்வீட்டா இருக்கு, உன்னை மாதிரியே!!" என்றான் மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில்.


கணவனின் பேச்சில் அவனை 'வெட்டவா குத்தவா' என்ற ரீதியில் பார்த்தவள், "சூடான காபியை உன் கையில் கொடுத்தது தப்புன்னு இப்ப தான் எனக்குப் புரியுது" என்று அடிக்குரலில் அவனிடம் சீறி விட்டுத் தள்ளி நிற்க,


"அம்மாடி! உங்க வீட்ல இருந்து போன் ஏதும் வந்ததா?" என்று கேட்டார் லட்சுமி.


"இல்ல.." என்று அவள் பதில் சொல்லவும்,


"உங்க அம்மாக்கு ஒரு போன் பண்ணிப் பேசுமா. அவங்களுக்கு உன் நினைப்பாவே இருக்கும்ல" என்று அவர் கூற,


"நான் என் போன் கொண்டு வரல" என்றாள் வெடுக்கென்று.


"இதோ! என்னோட போன் இருக்கே, இதுல பேசு!" என்று தனது மொபைலை மனைவியிடம் நீட்டினான் அஜித்குமார்.


அவளோ அதை வாங்காமல் அழுத்தத்துடன் நின்று கொண்டிருக்க,


அந்த நேரம் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வருவது யார் என்ற யோசனையுடன் மூவரும் வாசலைப் பார்க்க, வந்தது வேறு யாரும் அல்ல மோகனாவும், விக்ராந்த்தும் தான்.


அவர்களைப் பார்த்ததும், "மோஹிமா.." என்று கூவியபடி தாயிடம் ஓடினாள் நேகா.


லட்சுமியோ முகம் மலர எழுந்து வாசலுக்குச் சென்றவர், "வாங்க! வாங்க! இப்ப தான் உங்களைப் பத்தி என் மருமககிட்ட கேட்டுட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க.." என்று வரவேற்றவர், "வாங்க தம்பி.." என்று விக்ராந்த்தையும் வரவேற்று உள்ளே அழைத்து வந்தார்.


மோகனாவுக்கோ இங்கு வர சிறு சங்கடம் இருந்தாலும் மகளுக்காக வந்து விட்டாள்தான். ஆனால் லட்சுமியின் வரவேற்பு அவளது மனதின் சங்கடத்தைப் போக்கி இருக்க, தானும் அவரைப் பார்த்துச் சிரித்தபடி, "நேத்து மண்டபத்துல வச்சி உங்ககிட்ட சரியா பேச முடியல, தப்பா எடுத்துக்காதீங்க!" என்று மோகனா கூறவும்,


"இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? கல்யாண வீடுன்னா அப்படித்தான். அதும் ரெண்டு கல்யாணம்ன்னா சும்மாவா??" என்று கூறிய லட்சுமி இருவரையும் அழைத்து அமர வைத்தார்.


நேகாவோ அன்னையிடம் இருந்து விலகி, "ப்ரோ.." என்று தன் அண்ணனிடம் செல்ல. அவனோ "நேகா! எப்படி இருக்கே?" என்று கேட்டான்.


அதற்கு "ம்ம்.." என்று கூறிய தங்கையின் கண்களில் ஜீவன் இல்லை என்பதைக் குறித்துக் கொண்ட விக்ராந்த்தின் மனமோ, "லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணின பீல் கொஞ்சம் கூட நேகா முகத்தில் இல்லையே..?" என்று யோசனையானது.


அவர்களின் கவனத்தைக் கலைக்கும் பொருட்டு, "அம்மாடி நேகா! உங்க அம்மாக்கும், அண்ணனுக்கும் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா" என்று மருமகளிடம் கூற, அண்ணனிடம் இருந்து அவள் விலகிச் சென்றாள்.


அதுவரை அமைதியாக நின்றிருந்த அஜித், "வெல்கம் விக்ராந்த்!" என்று அவனை வரவேற்று தனது இருப்பை உணர்த்தவும்,


அவனைப் பார்த்த விக்ராந்த்தோ சிறு தலையசைப்பை மட்டும் தான் பதிலாகக் கொடுத்தான். என்னதான் கடைசி நேரத்தில் தங்கையின் கணவனாக அஜித்குமார் ஆகி இருந்தாலும், அவனது மனதில் இருவருக்கும் இடையே வேறு ஏதோ இருக்கிறது என்று உள்மனம் அடித்துச் சொன்னதாலோ என்னவோ..?? அஜித்திடம் ஒட்டுதல் ஏற்படவில்லை.


மோகனாவுக்கு அப்படி ஏதும் மகளின் மீதும் மருமகனின் மீதும் சந்தேகம் இல்லாததாலும், லட்சுமியை ரொம்பவே பிடித்துப் போனதாலும் அவருடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரத்தில் கையில் காபி கப்புக்கள் அடங்கிய ட்ரேயுடன் அங்கு வந்த நேகா தாய்க்கும், தமையனுக்கும் அதைக் கொடுக்க,


மோகனாவோ, "பரவா இல்ல! என் பொண்ணுக்குக் காபில்லாம் போட தெரியும்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். வீட்ல ஒரு வேலை பார்க்க மாட்டா சம்பந்தி. சாப்பிட சொல்லுங்க.. விதவிதமா அதுபாட்டுக்கு வெளுத்து வாங்குவா. நான் தான் அவ சாப்பாட்டு விஷயத்துல கவனமா இருப்பேன்" என்று சிரிப்புடன் கூறி மகளின் காலை வாரினாள்.


'இப்ப இத சொல்றதுக்குத் தான் இவ்ளோ தூரம் வந்தீங்களா மோஹிமா?' என்று தாயைப் பார்த்து பல்லைக் கடித்தாள் நேகா.


மகளின் மனநிலையை அறியாமல், "உங்க பொண்ணு தனுஷா எங்க? ஆளையே காணோம்?" என்று மோகனா கேட்க,


அதுவரை யோசனையுடன் அமர்ந்திருந்த விக்ராந்ததோ, தனுஷா என்ற பெயரைக் கேட்டதும், அவனது கண்களும் அவளைத் தேடியது.


"தலைவலினு சொன்னா, ரூமல் படுத்து இருக்கா" என்ற லட்சுமி "இருங்க, அவளை வரச் சொல்றேன்" என்று கூற,


"இல்ல இல்ல.. அவ ரெஸ்ட் எடுக்கட்டும். இன்னொரு நாள் பார்த்துக்கிறேன். என் சின்னப் பொண்ணு வீட்டுக்கும் போகணும். இப்ப நாங்க கிளம்புறோம்" என்றவள்,


"சம்பந்தி! நாளைக்கு மருமகனையும், என் பொண்ணையும் மறுவீட்டுக்கு நீங்க அனுப்பி வைக்கணும். அதைச் சொல்லத்தான் வந்தோம்" என்று மோகனா கூறினாள்.


அவரோ, "தப்பா எடுத்துக்காதீங்க சம்பந்தி! இன்னும் நாங்க எங்க சொந்த பந்தம் யாருக்கும் இந்தக் கல்யாணத்தைப் பத்தி சொல்லல. இப்ப தான் ரிசப்ஷன் வைக்கிறது பத்தி என் பையன்கிட்ட பேசிட்டு இருந்தேன். ரிசப்ஷன் முடியட்டும், அதுக்கு அப்புறம் ரெண்டு பேரையும் மறுவீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று தயங்கியபடி லட்சுமி கூறினார்.


அதில் மோகனாவுக்குச் சிறு வருத்தம் இருந்தாலும் மறுக்கத் தோன்றாமல், "சரி, அப்படியே பண்ணிடலாம்" என்றவள், மகளைக் கட்டி அணைத்து விடுவித்து அஜித்திடம் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.


நேகாவோ அவர்களின் வாகனம் கேட்டை தாண்டி வெளியே செல்லும் வரை அப்படியே பார்த்திருந்தாள்.


அதே நேரம் ஓவியாவின் வீட்டில் தங்களது அறையில் தூக்கத்தில் இருந்து படக்கெனக் கண் விழித்த ஸ்னேகா, அதே வேகத்தில் எழுந்தமர்ந்து அந்த அறையைச் சுற்றிப் பார்வையிட்டாள். அங்கே கணவன் இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று அவளுக்குப் புரிந்ததும் தான் அவளால் சற்று நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.


மெதுவாக நேற்று நடந்த அனைத்தையும் மனதில் ஓட்டிப் பார்த்தவளுகோ, இந்த அறைக்குள் நுழைந்தது முதல் இறுதியாக வலிப்பு வந்து கீழே விழுந்தது வரை தான் நினைவில் இருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்று சுத்தமாக அவளுக்கு நினைவில் இல்லை.


தன் உள்ளங்கையில் ஏதோ அழுத்துவது போல் இருக்கவும், அது என்னவென்று கையைப் பிரித்துப் பார்த்தாள். அதில் நேற்று அவள் தவற விட்ட இரும்பு சாவி இருந்தது.

ஸ்னேகா அதீத பயம் கொண்டால், அவளுக்கு வலிப்பு வரும். அதனால்தான் எதற்கும் இருக்கட்டும் என்று இரும்பு சாவி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டாள்.


அதைப் பார்த்ததும் நெற்றிச் சுருக்கியவள், "இதை நான் கீழே போட்டுட்டேன் தானே? யார் என் கையில கொடுத்து இருப்பா?" என்று யோசனையுடன் எழுந்து நின்றவளின் கண்ணில் பட்டது, டீபாயின் மீதிருந்த அந்தக் காகிதம்..


கைகள் நடுங்க அதை எடுத்தாள் ஸ்னேகா. அது அவளுக்கும், அவள் கணவனுக்குமான விவாகரத்துப் பத்திரம்.. நேற்று இரவு அதைத்தான் அவளிடம் நீட்டி ரிஷிவர்மன் கையெழுத்து கேட்டது.


ரிஷியின் மேல் எவ்வளவு பயம் இருக்கிறதோ, அதற்குக் குறையாமல் அவன் மேல் காதலும் வைத்திருந்தாள் ஸ்னேகா. அதனால் தான் அவனைத் திருமணம் செய்ய சொல்லி விக்ராந்த் கேட்ட போது சிறிதும் யோசிக்காமல் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள். நினைவு தெரிந்த வயதில் இருந்து தன் மனதுக்குள் பொத்தி பொத்திப் பாதுகாத்த காதலை, ஒரே கையெழுத்தில், முறித்து விடச் சொன்னால் அவளால் தாங்க முடியுமா என்ன? அதன் தாக்கம்தானே நேற்று அவளுக்கு வந்த வலிப்பு..!!


இப்பொழுது அதை நினைத்துப் பார்த்தவள், அந்தப் பத்திரத்தைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி அங்கே இருந்த கணவனின் ஆளுயரப் புகைப்படத்தைப் பார்த்தாள். பின்பு தன் கையில் இருப்பதை எங்கு வைப்பது என யோசித்தவள், அங்கிருந்த ஒரு கப்போர்டை திறந்து அதன் அடியில் காலியாக இருந்த இடத்தில் அதை வைத்து விட்டு, அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள்.


அவளைத் தேடி வந்து கொண்டிருந்த ரம்யா ஸ்னேகாவைப் பார்த்ததும்,


"ஸ்னேகா! எழுந்துட்டியா? மணி பத்து ஆகப் போகுது. மோஹிமாவும், அத்தானும் உங்ககளை மறுவீட்டுக்குக் கூட்டிட்டுப் போக இங்க வந்துட்டு இருக்கிறதா இப்ப தான் போன் பண்ணினாங்க. அம்மா நீ என்ன பண்றேனு பார்த்துட்டு வரச் சொன்னாங்க" என்றவள்..


"அண்ணா எங்கே? ரூம்ல இருக்கானா?" என்று ரகசியமாகக் கேட்டாள்.


"இல்ல, எனக்குத் தெரியாது" என்றவள், "ரம்யா! நான் குளிக்கணும். என்னோட ட்ரெஸ் ஏதும் இங்க இல்லல? எனக்கு உன்னோட ட்ரெஸ் தர்றியா?" என்று கேட்டாள்.


"உனக்கில்லாதா? வா, தர்றேன்" என்ற ரம்யா தனது அறைக்கு ஸ்னேகாவை அழைத்துச் சென்றாள்.


ஸ்னேகா குளித்து விட்டு வரவும், ரம்யாவும் அவளுடன் இணைந்து கொள்ள, இருவரும் கீழே இறங்கி வந்தனர்.


அப்பொழுது, "என்னங்க சொல்றிங்க? ரிஷி நைட்டே கார் எடுத்துட்டுக் கிளம்பிட்டானா?" என்ற ஓவியாவின் குரல் தான் ஹாலில் கேட்டது.


"ம்ம்ம்.. வாட்ச்மேன் சொல்லவும் தான் எனக்கே தெரியும்" என்ற ரவிவர்மன் உடனே மகனுக்கு அழைத்தான்.


பெங்களூரில் ரிஷியின் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அலுவலகத்தில் தனது கேபினில் கணினியில் கண் பதித்து அமர்ந்திருந்தான் ரிஷி. அப்பொழுது அவனது மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தவன், அழைப்பது தந்தை என்றதும் அட்டென்ட் செய்து, "எஸ் டாட்..' என்றான்.


"ரிஷி! எங்கே இருக்க?" என்று கேட்டான் ரவிவர்மன்.


"இதென்ன கேள்வி டாட்? நான் எங்கே இருப்பேன்? என்னோட ஆபிசிலதானே.." என்றான் சாதாரணமாக.


"பெங்களூர்லயா? எப்போ கிளம்புனே?" என்று கேட்க,


"ஏன் இந்நேரம் உங்க அருமை மருமக மூலம் தெரிஞ்சிருக்குமே?" என்று கிண்டலுடன் கூறவும்,


"ரிஷி! உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆகிருக்கு. நினைவு இருக்கா இல்லையா? ஸ்னேகாவை இங்க விட்டுட்டு நீ மட்டும் தனியா கிளம்பிப் போனா என்ன அர்த்தம்?" என்று கண்டிப்புடன் ரவிவர்மன் கேட்கவும்,


"அவளை என் கூடக் கூட்டிட்டுப் போக விருப்பம் இல்லன்னு அர்த்தம்!!" என்றுவிட்டு மொபைலை அணைத்து விட்டான் ரிஷிவர்மன்.


"என்னங்க சொன்னான் ரிஷி?" என்று ஓவியா கேட்க,


"ரொம்ப அர்ஜென்ட் வேலையாம், அதை முடிச்சுட்டு ரெண்டு நாள்ல வரேன்னு சொன்னான்" என்றான் ரவிவர்மன்.


அவளோ, "என்னங்க இது? கல்யாணம் பண்ணி வச்சா அவன் மாறிடுவான், இங்கேயே இருப்பான்னு ரொம்ப எதிர்பார்த்தேன்" என்ற ஓவியாவின் குரலில் ஏக்கம் நிறைந்திருந்தது.


மனைவியின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவனுக்கு அதற்கான தீர்வு தான் எப்பொழுது என்று தெரியவில்லையே?? ஆனாலும் அப்போதைக்குச் சமாளிக்கும் பொருட்டு,


"ஓவிமா! நேத்து மண்டபத்தில் வச்சே கிளம்பறேன்னு துடிச்சவன், ராத்திரி வரைக்கும் இங்க இருந்தது பெரிய விஷயம் இல்லையா? மாற்றம் ஒரே நாளில் வந்துடாதுடா.. புரிஞ்சிக்கோ!" என்று மனதறிந்து பொய் சொல்லி மனைவியைச் சமாதானம் செய்தான் ரவிவர்மன்.


ஆனால் அது பொய் என்று ஸ்னேகாவிற்குத் தெரியுமே? எதற்காக இரவு வரை கணவன் இங்குத் தங்கினான் என்றும், இரவோடு இரவாக ஏன் சென்று விட்டான் என்ற விஷயம் அவளுக்குத் தெரிந்ததால் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.


ரவிவர்மனோ ஸ்னேகாவைப் பார்த்து, "ஏன்மா, இங்க நின்னுகிட்டு இருக்க? போ, போய்ச் சாப்பிடு! நேத்து கூட நீ சரியா சாப்பிடலயே?" என்று அக்கறையாகக் கூறினான்.


அப்பொழுதுதான் ஓவியாவிற்கும் ஸ்னேகா அங்கிருப்பது புரிய, "ஸ்னேகா! ரம்யா! நீங்க ரெண்டு பேரும் போய்ச் சாப்பிடுங்க" என்று அவர்களை அனுப்பி வைக்க, ரவிவர்மனோ அடுத்து என்ன என்ற யோசனையில் ஆழ்ந்தான்.


அன்று மதியம் மறுவீட்டுக்கு அழைக்க வந்த மோகனாவிடம் கூட, ரிஷி ஏதோ முக்கிய வேலையாகக் கிளம்பிச் சென்றுள்ளதாகவும், இரண்டு நாளில் திரும்பி வந்து ஸ்னேகாவை அழைத்துச் செல்வதாகத் தன் கணவன் தன்னிடம் கூறியதை அப்படியே தோழியிடம் சொல்லிச் சமாளித்தாள் ஓவியா. மோகனா அதை நம்பினாளோ இல்லையோ? விக்ராந்த் நம்பத் தயாராக இல்லை.


தனது இரண்டு தங்கைகளின் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற அச்சம், ஒரு அண்ணனாக அவனைக் கவலைக்கு உள்ளாக்கி இருந்தது.


அதன்பிறகு வந்த நாட்களில் ஸ்னேகா ரம்யாவின் அறையிலேயே தங்கிக் கொண்டாள். தப்பித் தவறி கூட அவள் ரிஷியின் அறை பக்கம் செல்லவே இல்லை. ஏற்கனவே சொந்தத்தைத் தாண்டிய நட்பு ஸ்னேகா மற்றும் ரம்யா இருவரிடமும் இருந்தது. இப்பொழுது சொல்லவும் வேண்டுமா? ரம்யா கல்லூரியில் இருந்து வந்ததும் அவர்களின் உலகுக்குச் சென்று விடுவார்கள். சில சமயம் தங்களுடன் ஓவியாவையும் சேர்த்துக் கொண்டனர்.


அவளோ, "நான் என்ன சின்னக் குழந்தையா? என்னை ஏன்டி படுத்துறீங்க?" என்று பொய்யாகக் கோபம் கொண்டு இருவருக்கும் இரண்டு அடி போடுவாள். இப்படியே இரு வாரங்கள் கடந்திருக்க, ரிஷியோ இந்தப் பக்கமே வரும் வழியைக் காணோம் என்றதும், கணவனிடம் மீண்டும் புலம்ப ஆரம்பித்து விட்டாள் ஓவியா.


அன்று அலுவலகம் செல்ல கிளம்பி வந்த ரவிவர்மன், அங்கே ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த ஸ்னேகாவின் எதிர்பக்கம் இருந்த சோபாவில் அமர்ந்தவன் "ஸ்னேகா.." என்று அழைக்க,


ரவிவர்மனின் குரலில் டீவியை அணைத்து விட்டு, "மாமா, ஆபிஸ் கிளம்பிட்டீங்களா? டிபன் எடுத்து வைக்கவா?" என்று கேட்டபடி எழுந்தவள், டைனிங் அறையை நோக்கி நகர,


"இல்ல ஸ்னேகா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வா!" என்று அழைத்தான்.


"என்ன மாமா?" என்று கேட்டவள் அவன் அருகில் வந்தாள்.


"உட்காரு!" என்று தன் அருகில் அவளை அமர சொன்னவன், "அப்புறம் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கப் போறே? உன் மனசுல வேற ஏதாவது எண்ணம் இருக்கா? ஐ மீன் வேலைக்குப் போறது இல்லனா மேல படிக்கிறது இப்படி ஏதாவது.." என்று கேட்டு மருமகளின் முகம் பார்த்தான்.


அவளோ எதற்காக இப்பொழுது திடீரெனக் கேட்கிறார் என்று புரியாவிட்டாலும், அவள் மனதில் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்து இருந்ததால், "நான் மேலே படிக்கணும் மாமா. இதை எப்படிச் சொல்லன்னு தான் தெரியாம இருந்தேன்" என்று தயக்கத்துடன் கூறினாள்.


"என்கிட்ட என்னம்மா தயக்கம்?" என்று கேட்டவன், "சரி, படிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்ட… எங்க படிக்கப் போறே? இங்கயோ இல்ல கனடா போகணுமா?" என்று கேட்டதும் அவனை அதிர்ந்து பார்த்தாள் ஸ்னேகா.


'தனக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்தது? ரம்யா சொல்லி இருப்பாளோ?' என்று அவள் யோசனையில் இருக்க


"என்ன ஸ்னேகா.. அமைதியாகிட்டே? எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறியா? அதைப் பத்தி அப்புறம் சொல்றேன். இப்ப நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு!" என்றான் ரவிவர்மன்.


"அது.. அது வந்து கனடா இல்ல மாமா இங்க தான்.." என்று இழுக்க,


"இங்கன்னா எங்கே?? சென்னையா?"


"இல்ல மாமா, பெங்களூர் போய்ப் படிக்கப் போறேன்" என்று கூறி அவள் தலை குனிந்து கொள்ள, ரவிவர்மன் இதழில் சிறுபுன்னகை..!!


அதே புன்னகையுடன், "ஒஹ்! எந்தக் காலேஜ்ன்னு நீயே முடிவு பண்ணிட்டியா? இல்ல நான் பார்க்கவா?" என்றதும்,


"இன்னும் டிசைட் பண்ணல மாமா. ரெண்டு மூனு காலேஜ்க்கு அப்ளிகேஷன் போட்டுருக்கேன் வித் ஹாஸ்ட்டலோட" என்றதும்,


கல்லூரியின் பெயர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ரவிவர்மன், அவளுக்கு எந்தக் கல்லூரியில் சேர விருப்பம் என்பதையும் அறிந்து கொண்டு, "ஓகேமா, இனி நான் பார்த்துக்கிறேன்" என்றான்.


சொன்னபடி அடுத்த இரண்டே நாட்களில் அதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டு, மருமகளை அழைத்துக் கொண்டு காரில் பெங்களூர் கிளம்பி விட்டான். ஓவியாவோ மருமகளிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தாள்.


சில மணிநேர பயணத்திற்குப் பின் ரவிவர்மனின் வாகனம் ஒர் பிரம்மாண்ட அப்பார்ட்மென்டின் வளாகத்திற்குள் நுழைந்தது.


அதைப் பார்த்த ஸ்னேகா, "இது ஹாஸ்ட்டல் மாதிரி இல்லையே மாமா?" என்று புரியாமல் கேட்க,


"நீ ஹாஸ்ட்டல்ல தங்க போறேனு யார் சொன்னது? அதுக்கு அவசியம் இல்ல ஸ்னேகா. நீ நம்ம வீட்ல கூடத் தங்கிக்கலாம்" என்று கூறி விட்டு ரவிவர்மன் இறங்கி நின்றான்.


அந்த அப்பார்ட்மென்டை பார்த்தவாறு தானும் இறங்கினாள். ஸ்னேகாவின் மனமோ, 'ஹாஸ்ட்டல்ன்னா கூட யாராவது கூட இருப்பாங்க. இங்கன்னா நான் தனியா இருக்கணுமே?' என்ற யோசனையுடன் ரவிவர்மனின் பின்னே நடந்தாள்.


அவனோ அவளது மனதை புரிந்தவன் போல், "இங்க நமக்குச் சொந்தமா ஒரு பிளாட் இருக்கு ஸ்னேகா. உன் துணைக்கும் ஆள் இருக்காங்க. சோ தனியா இருக்கணுமேன்னு பயம் வேண்டாம்!" என்றபடி அவளை அழைத்துக் கொண்டு அப்பார்ட்மென்டின் லிப்ட்டில் ஏற, அதுவோ அவர்களை மேலே கடைசித் தளத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.


அதில் இருந்து வெளிவந்த ரவிவர்மன் ஒரு வீட்டின் முன் நின்று காலிங் பெல்லை அழுத்த, சிறிது நேரம் கழித்துக் கதவை திறந்தவனைக் கண்டு விழி விரித்து அதிர்ந்து அப்படியே நின்று விட்டாள் ஸ்னேகா..!!


***


1 comment:

  1. Adipavi sneha bayanda pulla ah iruka nu partha terror ah love panra sari dan, Ivan kitta adi vanga vandu iruka

    ReplyDelete