ஸ்வரம் 18

 


ஸ்வரம் 18


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெதுவாக எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்த ரிஷிவர்மன், கிச்சனுக்குள் நுழைந்து பிரிட்ஜில் இருந்த பாலை காய்ச்சி தனக்குக் காபி போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தவன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அதை அருந்தியபடி டீவியை உயிர்ப்பித்தான்.


சிறிது நேரம் கழித்து மதிய உணவை போன் மூலம் ஆர்டர் கொடுத்து விட்டு, எதிரே டீபாயின் மீதிருந்த தனது மடிக்கணினியில் தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது தான் அவனது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.


"இப்ப தானே லஞ்ச் ஆர்டர் பண்னேன், அதுக்குள்ள வந்துருச்சா?" என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்ட ரிஷிவர்மன் எழுந்து சென்று கதவை திறந்தான்.


அங்கே தந்தையையும், அவரது பின்னே நின்றிருந்த தனது மனைவியையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.


கதவை திறந்த கணவனைப் பார்த்ததும் அதிர்ந்து விழி விரித்த ஸ்னேகாவோ, வேகமாக ரவிவர்மனின் முதுகுக்குப் பின்னே தன்னை மறைத்துக் கொள்ள, அவனோ மனைவியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.


"ரிஷி! வீட்டுக்கு வந்தவங்களை உள்ள வாங்கன்னு கூப்பிட மாட்டியா?" என்ற தந்தையின் அழுத்தமான குரலில், ஏதும் பேசாமல் வழி விட்டு ஒதுங்கி நின்றவனின் பார்வை மனைவியின் மீதே நிலைத்து இருந்தது.


ரவிவர்மனோ, "ஸ்னேகா! இதான் உன்னோட வீடு. வலது காலை எடுத்து வச்சி உள்ள வாம்மா" என்று விட்டு அவன் முன்னே செல்ல, அவளோ குனிந்த தலை நிமிராமல் மாமனாரின் பின்னேயே சென்று விட்டாள்.


தந்தையின் பேச்சில் பல்லைக் கடித்த ரிஷிவர்மன், "என்ன டாட் இதெல்லாம்? எதுக்காக இப்ப இவளை இங்க கூட்டிட்டு வந்திங்க?" என்று எரிச்சலுடன் தந்தையிடம் கேட்டான்.


அவரோ "இதென்ன கேள்வி ரிஷி? புருஷன் எங்க இருக்கணுமா அங்கே தானே பொண்டாட்டியும் இருக்கணும். அதனாலதான் நீ எங்க இருக்கியோ, அங்கேயே உன் மனைவியைக் கூட்டிட்டு வந்துட்டேன்" என்று கூறியபடி அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த ரவிவர்மன்,


"ஸ்னேகா! மாமாக்குக் குடிக்கத் தண்ணி எடுத்துட்டு வாம்மா!" என்று மருமகளிடம் கூற, அவளோ திருதிருவென முழித்தபடி அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள்.


அவளும் தான் என்ன செய்வாள்? கடந்த இரண்டு வாரங்களாக எந்த ஒரு கவலையும் பயமும் இல்லாமல் ரம்யாவுடனும், ஓவியாவுடனும் கலகலப்பாக நிம்மதியாக இருந்தாள். அப்படி இருந்தவளை 'கல்லூரியில் சேர்க்கிறேன் வா' என்று கூறி அழைத்து வந்து, இப்படிக் கணவனின் முன் நிற்க வைப்பார் என அவள் கனவிலும் நினைக்கவில்லையே..??


அவள் சிலையாக நிற்பதைப் பார்த்து "ஸ்னேகா.." என்று மீண்டும் அழைத்தான் ரவிவர்மன்.


"ஹான்.. மாமா.. என்ன கேட்டீங்க?" என்று கனவில் இருந்து விழித்தவள் போல் கேட்க,


"தண்ணி கேட்டேன்மா" என்று ரவிவர்மன் கூறவும்,


"இதோ! எடுத்துட்டு வரேன் மாமா" என்ற ஸ்னேகா சுற்றும் முற்றும் பார்த்து, ஒருவழியாகச் சமையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டு கொண்டவள், வேகமாக அங்குச் சென்றாள்.


தன் வீட்டில் உரிமையாக நடமாடும் மனைவியைக் கண்டு கொதித்தெழுந்த ரிஷியோ, "டாட்! திஸ் இஸ் டூ மச்!! இது என் வீடு! என் வீட்ல யார் இருக்கணும்ன்னு நான்தான் முடிவு பண்ணணும். நான் வேண்டாம்னு விட்டுட்டு வந்தவளை இப்ப எதுக்காக இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க?" என்று கோபத்துடன் அவன் தந்தையிடம் கேட்டான்.


மகனை அமர்த்தலாகப் பார்த்த ரவிவர்மன், "நான் அன்னைக்கே சொன்னேன் ரிஷி.. நீ வேணும்னு சொன்னா சரின்னு சொல்றதுக்கும், நீ வேணாம்னு சொன்னா விலக்கி வைக்கிறதுக்கும் இது விளையாட்டு இல்ல.. உன்னோட வாழ்க்கை!! இப்ப ஸ்னேகாவின் வாழ்க்கையும் அதுல அடங்கி இருக்கு" என்று கண்டிப்புடன் ஒலித்தது ரவிவர்மனின் குரல்.


"எனக்கு அவ இங்க இருக்கிறது பிடிக்கல" என்றான் பட்டென்று..


"உனக்குப் பிடிக்கலனாலும் என் மருமக இங்கதான் இருப்பா" என்று ரவிவர்மனும் கண்டிப்புடன் கூறினான்.


தந்தையை அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்த ரிஷி, "சோ, ஒரு முடிவோட தான் அவளைக் கூட்டிட்டு வந்துருக்கிங்க, ரைட்..?" என்று கேட்டான்.


"அஃகோர்ஸ் மை சன்! இனி ஸ்னேகா இங்க தான் இருப்பா, அதுவும் உன்னோட பொறுப்பில்.. இதுல எந்த மாற்றமும் இல்ல!" என்று மகனுக்குப் பதில் சொன்ன ரவிவர்மன் கிளம்புவதற்குத் தயாராகி எழுந்து நிற்க, அவன் முன் தண்ணீரை நீட்டினாள் ஸ்னேகா.


மனைவியை ஆழ்ந்து பார்த்த ரிஷிவர்மன், "நான் சொல்ல சொல்ல காதுலயே வாங்காம உங்க மருமகளை இங்க விட்டுட்டுப் போறீங்கள்ல.. ஓகே பைன்! எத்தனை நாளைக்கு என்கிட்ட தாக்குப் பிடிக்கிறான்னு நீங்களும் பார்க்கத்தானே போறீங்க?" என்று குரூரமாகக் கூறியவன், வேகமாகத் தனது அறைக்குள் நுழைய போனான்.


அப்பொழுது "ரிஷி! ஒரு நிமிஷம்!" என்று மகனை நிறுத்தினான் ரவிவர்மன்.


'இன்னும் என்ன..?' என்பது போல் அவன் தந்தையை முறைத்தபடி திரும்பிப் பார்க்க,


"ஸ்னேகா இங்க இருக்கிற காலேஜ்ல தான் ஹையர் ஸ்டடிஸ் பண்ணப் போறா. அதுக்கான ஏற்பாடெல்லாம் நான் ஏற்கனவே பார்த்துட்டேன். பட் அவ காலேஜ் போய்ட்டு வர்றதுக்கு ட்ரான்ஸ்போர்ட்டேஷன் நீதான் அரேஞ்ச் பண்ணணும்!" என்று மகனுக்கு உத்தரவு பிறப்பித்தான்.


ரிஷியின் கோபம் ஏகத்துக்கும் எகிறியது. தந்தைக்குப் பதில் அளிக்காமல் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாற்ற, அதன் சத்தத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள் ஸ்னேகா.


மருமகள் கொடுத்த நீரை ஒரு வாய் அருந்திய ரவிவர்மன், "அப்புறம் ஸ்னேகா, பத்திரமா இருந்துக்கோ. நான் கிளம்புறேன்" என்று கூறவும்,


அதில் அதிர்ந்து கண்களைத் திறந்தவள், "மாமா.." என்று அவனைப் பதட்டத்துடன் அழைத்தாள்.


"என்னமா?" என்று கேட்டவனிடம்,


"மாமா! நான் இங்க தனியா எப்படி?" என்று அவள் திக்கித் திணறி கூறவும்,


"தனியாவா? இல்லையே..? உனக்குத் துணையா ரிஷியும் இங்க தானே இருக்கான்?" என அவள் கேட்க வருவது புரிந்தும் புரியாதது போல் அவன் கேட்டான்.


'அயோ! இவர் தெரிஞ்சி தான் பேசுறாரா?' என்று தவித்துப் போனவள், எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்க,


சிறு புன்னகையுடன் மருமகளின் தலையை ஆதுரமாகத் தடவிய ரவிவர்மன், "ஸ்னேகா! உன்னோட பயம் எனக்குப் புரியுதும்மா. அதே நேரம் உன் மனசும் எனக்குப் புரிஞ்சிது" என்று அவன் கூறவும்..


'எப்படித் தெரியும்?' என்பது போல் அதிர்ச்சியும், திகைப்புமாக அவள் தன் மாமனைப் பார்த்தாள்.


அவனோ, "எனக்கு எல்லாம் தெரியும்டா. அதனாலதான் உன்னை இங்க கூட்டிக்கிட்டு வந்தேன்" என்றவன்,


"ஸ்னேகா! முள்ளை முள்ளால எடுக்கிற மாதிரி, எந்த இடத்துல யார்கிட்ட உன் பயம் ஆரம்பிச்சிதோ, அதே இடத்துலதான் உன் பயத்தைத் தொலைக்கணும். நான் எது செய்தாலும் உன்னோட நல்லதுக்காக மட்டும் தான்!!" என்றவன், "எதுனாலும் எனக்குக் கால் பண்ணுடா!" என்று விட்டு அவன் அங்கிருந்து சென்று விட்டான்.


ஸ்னேகாவோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பூட்டி இருந்த கணவனின் அறையையே பார்த்தபடி நின்றிருந்தாள். அப்பொழுது திடீரெனத் தனது அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ரிஷிவர்மன், அங்கே நடு ஹாலில் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்த மனைவியைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் வெளியே சென்று விட்டான்.


அவன் வெளியேறவும் தான் ஸ்னேகாவின் மூச்சு சீரானது. அதன் பிறகே அந்த வீட்டை நிதானமாகச் சுற்றிப் பார்த்தாள். வாசல் கதவை திறந்து உள்ளே வந்தால் பெரிய ஹால், அதை ஒட்டி பெரிய பால்கனியும் வலது பக்கம் இரண்டு பெரிய அறைகளும் ஒரு சின்ன அறையும் இருக்க.. இடதுபுறம் சமையல் அறை, உடற்பயிற்சியறை என எல்லாம் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்க, அந்தத் தளத்தில் இருந்த நான்கு வீடுகளையும் வாங்கி ஒரே வீடாக மாற்றி இருந்ததால், பார்க்க ஒரு குட்டி பங்களாவைப் போலவே இருந்தது.


அந்த வீட்டை சுற்றிப் பார்க்க ஆர்வம் கொண்டவள் முதலில் சமையல் அறைக்குள் நுழைந்தாள். சற்று முன் அவள் தண்ணீர் எடுக்க அங்கு வந்தாள் தான்.. ஆனால் அப்பொழுது கிச்சனை சரியாகக் கவனிக்கவில்லை. இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வும், காபி மற்றும் தேநீர் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் மட்டுமே அங்கு இருந்தது.


அடுத்து அங்கிருந்த இரண்டடுக்குக் கொண்ட பிரிட்ஜை திறந்து பார்த்தாள். அதில் பால் பாக்கெட்டுகள், பிரெட் பாக்கெட் மற்றும் முட்டைகள் மட்டுமே இருக்க, மீதி இருந்த காலி இடத்தை எல்லாம் விதவிதமான உயர்தரப் பீர் டின்கள் தான் கைப்பற்றி இருந்தது. மற்றபடி சமையல் செய்வதற்கான அத்தியாவசிய பொருட்கள் என்று வேறு எதுவும் அந்த அறையில் இல்லை.


ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியே வந்த ஸ்னேகா, தான் எங்குத் தங்குவது என யோசித்தபடி கணவனின் அறைக்கு அடுத்து இருந்த சின்ன அறையைத் திறந்து பார்த்தாள்.


அங்குப் பல பைல்கள் ஒரு பெரிய டேபிள் மீது வீற்றிருக்க, அந்த அறையே குட்டி அலுவலகம் போல் இருக்கவும், 'ஓ! இது ஆபிஸ் ரூம் போல..' என்று தனக்குத்தானே கூறியபடி அந்த அறை கதவை மூடி விட்டுத் திரும்பியவளுக்கு மூச்சே நின்று விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.


ஏனெனில் அவள் பின்னே கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டு அவளைக் கூர்ந்து பார்த்தபடி நின்றிருந்தான் அவள் கணவன்.


நெஞ்சம் வேகமாகத் துடிக்கக் கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விடும் அளவுக்கு விழிகளை விரித்தவளை, "இங்க என்ன பண்றே?" என்று அதட்டலுடன் கேட்டான் ரிஷிவர்மன்.


அவனது அந்த அதட்டலில் உடனே தன்னுணர்வுக்கு வந்தாள் ஸ்னேகா. இல்லையென்றால் அன்று போல் வலிப்பு வந்திருந்தால் கூட ஆச்சர்யபடுவதற்கில்லை!


அவனது கேள்விக்கு, "நா.நா..நா…" என்றாளே தவிர வேறு வார்த்தையும் அவளிடம் இருந்து வரவில்லை.


அதைக் கண்டு ஏளனமாக அவளைப் பார்த்தவன், "ஸ்பீக்கர்தான் அவுட்னு பார்த்தா மைக்கும் அவுட்டா?" என்று கேட்க,


அவளோ அவசரமாக, "இல்ல இல்ல.. எனக்கு நல்லாவே பேச வரும்" என்றாள், மிக மெல்லிய குரலில்..


"அப்ப நான் கேட்டதுக்குப் பதில் சொல்ல வேண்டியதுதானே? இங்க என்ன பண்ற?" என்றான் மீண்டும்.


"அது.. அது வந்து.." என்று மீண்டும் திணறியவளை அவன் ஏகத்துக்கும் முறைக்க, அவளோ அதைக் கண்டு வேகமாக, "நான் எங்க தங்குறதுன்னு பார்த்துட்டு இருந்தேன்" என ஒரே மூச்சாகச் சொல்லி முடித்தாள்.


அவனோ கிண்டலுடன், "அதான் உன் மாமனார் சொன்னாரே..? புருஷன் எங்க இருக்கானோ அங்கதான் பொண்டாட்டியும் இருக்கணும்ன்னு.." என்றவன் தனது அறையைக் கண்களால் சுட்டிக் காட்டி,


"இதான் என் ரூம், அதுவும் டபுள் பெட்ரூம்… இந்த ரூம் உனக்கு ஓகேவா?" என்று அவளிடம் கேட்க, அவளோ அவனை அதிர்ந்து பார்த்தவள், இல்லை என்று தலையாட்டினாள்.


"தட்ஸ் குட்! அந்த நினைப்பு உன் மனசுல எப்பவுமே வரக் கூடாது!!" என்று கடுமையாகக் கூறி விட்டுத் தனது அறைக்குள் சென்று விட்டான்.


கணவன் நகர்ந்ததும் தன் நெஞ்சில் கை வைத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள் ஸ்னேகா. ஆனால் அதற்குக் கூட நேரம் கொடுக்காமல் மீண்டும் வெளியே வந்த ரிஷிவர்மன்,


அவள் முன் சொடக்கிட்டு, "ஏய்! இன்னொரு விஷயம்.. இங்க இருக்கிற வரைக்கும் தப்பித் தவறி கூட என் கண் முன்னாடி நீ வரக் கூடாது!! புரிஞ்சிதா..?" என்று எச்சரிக்கை செய்து விட்டு, "இரிட்டேட்டிங்!!" என்று அவள் காதுபடவே கூறி விட்டுக் கதவை அறைந்து சாற்றினான்.


ஒரு நொடி கண்களை மூடித் திறந்த ஸ்னேகா, தனது பேக்கை எடுத்துக் கொண்டு அங்கு இருந்த மற்றொரு அறையை திறந்து வேகமாக நுழைந்து கொண்டாள்.


அவள் உள்ளே நுழையவும் அவளது பேக்கில் இருந்த மொபைல் சத்தம் கொடுத்தது. அதை எடுத்துப் பார்த்தவள், அழைப்பது அன்னை என்றதும் உடனே அட்டென்ட் செய்து, "மோஹிமா…" என்றாள்.


"ஸ்னேகா! பெங்களூர் போயாச்சாமா..?" என்று மோகனா விசாரிக்க,


"ம்ம்ம்.. வந்தாச்சு மோஹிமா. அப்பா எங்கே? பாட்டி பக்கத்துல இருக்காங்களா? நேகாக்கா போன் பண்ணினாங்களா? அண்ணா ஆபிஸ்ல இருந்து வந்தாச்சா?" என்று மடமடவெனத் தாய்க்குப் பேச வாய்ப்பளிக்காமல் அவள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனாள்.


மோகனாவோ, "உன் அண்ணன் இப்ப தான் வந்தான். உன்கிட்ட பேசணுமாம்" என்றவள் மகனிடம் கொடுக்க,


அவனோ, "ஸ்னேகா! எப்படிடா இருக்க? சாப்பிட்டியாடா..?" என்று தங்கையிடம் அக்கறையாகக் கேட்டான் விக்ராந்த்.


"அண்ணா!!" என்று உற்சாகமாக அழைத்தவள், "நான் நல்லா இருக்கேண்ணா.. வரும் போது ஹோட்டல்ல சாப்பிட்டோம். நைட்டுக்குத் தான் ஏதாவது சமைக்கணும்" என்று அவள் கூறவும்,


"ஸ்னேகா! ரிஷி ஏதும் சொன்னானா? உன்கிட்ட நல்ல மாதிரி நடந்துகிட்டானா?" என்று கேட்டான் விக்ராந்த். அவனுக்குத் தங்கை பெங்களூர் செல்கிறாள் என்று கேள்விப்பட்டதும் கவலையாகத்தான் இருந்தது.


"ஹான்.. ஆமாண்ணா.. அத்தான் என்கிட்ட ந..நல்லா பே..சினாங்க" என்று தன் மனதை மறைத்துப் பதில் கூறினாள் ஸ்னேகா.


என்னதான் தங்கை அப்படிக் கூறினாலும் அவளைப் பற்றி அவனுக்குத் தெரியாதா? அதனால் மேற்கொண்டு அவளிடம் ஏதும் கேட்காமல், "சரிடா, எதுனாலும் இந்த அண்ணன்கிட்ட மறைக்கக் கூடாது. எப்பவும் நான் உனக்கு உறுதுணையா இருப்பேன், சரியா?" என்று ஆதரவாகத் தங்கையிடம் பேசிய விக்ராந்த் ராதாவிடம் கொடுக்க, அடுத்த ஒரு மணி நேரம் தன் குடும்பத்தார் அனைவரிடமும் பேசி விட்டு வைத்த பிறகு தான் ஸ்னேகாவுக்குச் சற்றுத் தெம்பாக இருந்தது.


அதன் பிறகு அந்த அறையைப் பார்த்த ஸ்னேகா, அங்கிருந்த ஒரு கபோர்டில் தனது உடைமைகளை அடுக்கி முடித்து விட்டு, ஜன்னலின் திரைச்சீலையை ஒதுக்கி வெளியே பார்த்தாள். அது இருபத்தி இரண்டு மாடி கொண்ட கட்டிடம் என்பதால் கீழே பள்ளத்தைப் பார்த்தவளது தலை கிறுகிறுக்க, சட்டென்று திரைச்சீலையை இழுத்து மூடி விட்டுக் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள்.


ஏற்கனவே பள்ளம் என்றால் அவளுக்குப் பயம்! இப்பொழுது கேட்கவும் வேண்டுமா? கட்டிலில் சுருண்டு படுத்துக் கொள்ளத் தூக்கம் அவள் கண்களைத் தழுவியது


இங்கு அறைக்குள் கூண்டுப்புலியாக அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.


திருமணம் முடிந்த அன்று அவன் அவ்வளவு நேரம் அந்த வீட்டில் இருந்ததே, விவாகரத்துப் பத்திரத்தில் மனைவியிடம் கையெழுத்து வாங்குவதற்காகத் தான். ஆனால் அவளோ வலிப்பு வந்து விழுந்து விட்டாள். அதன் பிறகு சிறிது நேரம் கூட அங்கிருக்கப் பிடிக்காமல், யாரிடமும் சொல்லாமல் உடனே பெங்களூர் கிளம்பி வந்து விட்டான்.


மறுநாள் தந்தை போனில் கேட்ட போது கூட ஏட்டிக்குப் போட்டியாகத்தான் பதில் அளித்தான். அப்படியிருக்க, தன் சொல்லையும் மீறி இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று அவளை அழைத்து வந்து நிறுத்துவார் தந்தை என அவன் எதிர்பார்க்கவே இல்லை. இப்பொழுது அவனுக்கு ஸ்னேகாவை விட அவனது தந்தையின் மீது தான் அவ்வளவு கோபம் வந்தது. தன் கை முஷ்டியை மடக்கிக் காற்றில் வேகமாகக் குத்திய ரிஷிவர்மன், தன் இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்


"உங்களோட கடமையைச் சிறப்பா செஞ்சிட்டிங்க டாட். இனி நான் அவளை எப்படிப் பார்த்துக்கணுமோ அப்படிப் பார்த்துக்கிறேன்!!" என்றவனின் வார்த்தையில் இப்பொழுதே ஸ்னேகாவை வீட்டை விட்டு வெளியேற்றும் வெறி தெரிந்தது.


அவன் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, ஸ்னேகாவோ நிம்மதியான நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். ஆம்! கணவன் இருக்கும் இடத்தில் தான் இருந்தாலே போதும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கோ, இன்று கணவனின் வீட்டிலேயே அதுவும் அவன் அருகிலேயே அவள் தங்கியிருப்பது, அவளது காதல் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.


அவன் தன்னிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளவில்லை என்றாலும், அவன் பக்கத்தில் இருப்பதே போதுமானது என்று நினைத்தாள் ஸ்னேகா. அந்த எண்ணத்திலேயே வெகு நேரம் தூங்கி எழுந்தவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. மொபைலை எடுத்து மணியைப் பார்க்க அது இரவு எட்டு மணி என்று காட்டவும், "ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல.." என்றபடி வேகமாகக் கட்டிலில் இருந்து இறங்கியவள், தண்ணீர் குடிப்பதற்காக வெளியே செல்ல எண்ணி கதவை திறக்க கைப்பிடியில் கை வைக்கப் போனாள். அப்பொழுது வெளியே டீவியின் சத்தம் கேட்க, அதில் பட்டெனத் தன் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள் ஸ்னேகா.


கணவன் ஹாலில் தான் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டவளின் செவியில், 'இங்க இருக்கிற வரைக்கும் தப்பித் தவறி கூட என் கண் முன்னாடி வந்துடாதே!' என்ற கணவனின் எச்சரிக்கை குரல் ஒலிக்க, மீண்டும் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள்.


ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த ரிஷிவர்மனோ.. ‘தன் வீட்டில் ஒருத்தி இருக்கிறாள், அவள் என்ன செய்கிறாள்? ஏது செய்கிறாள்? பசியோடு இருக்கிறாளா?’ என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் மதியமும் நன்றாகச் சாப்பிட்டவன், இதோ! இப்பொழுது இரவு உணவையும் வெளுத்து வாங்கி விட்டு டீவி பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, ஸ்னேகாவோ பசியோடு மீண்டும் உறங்கியும் போனாள்.


மறுநாள் காலையில் எழுந்த ரிஷி எப்பொழுதும் போல் உடற்பயிற்சி அறைக்குள் நுழைய, அடுத்த ஒரு மணிநேரம் அங்குச் செலவிட்டவன், உடலில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அவன் கண்ணில் உணவு மேஜையில் ஆவி பறக்க இருந்த சூடான காபி தான் தென்பட்டது. அதைப் பார்த்ததும் முதலில் நெற்றிச் சுருக்கியவனுக்கு, இதை யார் வைத்து இருப்பார்கள் எனப் புரிந்ததும், மனைவி தங்கி இருந்த அறையை ஒரு பார்வை பார்த்தவன்..


உணவு மேஜையின் மீதிருந்த காபியை அலட்சியப்படுத்தி விட்டு, தனக்காக வேறு காபி போட்டு அருந்தியவன் குளிக்கச் சென்று விட்டான். குளித்து முடித்து அலுவலகம் செல்ல தயராகி வந்த ரிஷிவர்மனின் பார்வையில், அதே உணவு மேஜையில், இப்பொழுது சுடச்சுட பிரெட் டோஸ்ட்டும், அவித்த முட்டையும் இருப்பதைக் கண்டவன், அடுத்த நொடி கோபத்துடன் அதை எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டு விட்டு வெறியேறி விட்டான்.


இவ்வளவு நேரம் தனது அறைக்குள் அமர்ந்திருந்த ஸ்னேகாவோ, கணவன் கிளம்பிச் சென்று விட்டதை உறுதிபடுத்திக் கொண்டு மெதுவாக வெளியே வந்தாள். ஆம்! அவள் தான் கணவனுக்காக வீட்டில் இருந்த பொருட்களை வைத்து இதையெல்லாம் செய்து வைத்திருந்தாள். காபி தொடப்படாமல் அப்படியே இருப்பது கண்டு அவள் வருத்தம் எல்லாம் அடையவில்லை. மாறாகக் காலை உணவை தயார் செய்து அவள் மேஜையில் வைத்திருக்க, அதுவோ குப்பையில் கிடப்பதைக் கண்டு, அப்பொழுதும் வருத்தப்படாமல் இரவுக்கு என்ன சமைக்கலாம் என்று யோசனையில் ஆழ்ந்தாள்.


அன்று இரவு வெகுநேரம் கழித்தே வீட்டுக்கு வந்தான் ரிஷிவர்மன். தன்னிடம் இருந்த சாவியின் உதவியால் கதவை திறந்து உள்ளே வந்தவனின் பார்வை தன்னிச்சையாக உணவு மேஜையைப் பார்த்தது. அங்கே அவனுக்கான இரவு உணவும் தயாராக இருப்பதைக் கண்டு, காலையில் இருந்து இப்பொழுது வரை சற்று மட்டுப்பட்டிருந்த அவனது கோபம் தலைக்கேற, கையில் இருந்த மொபைலை சோபாவில் தூக்கி எறிந்தவன், அடுத்து வந்து நின்றது ஸ்னேகாவின் அறையின் முன்பு தான்!


"ஏய்..!!" என்று அவன் அவளது கதவை பலமாகத் தட்டிய அடுத்த நொடி கதவு திறந்து கொள்ள, அறை வாசலில் தலையைக் குனிந்தபடி நின்றிருந்தாள் ஸ்னேகா.


சுவிங்கத்தை மென்றவாறு அவளைக் கீழிருந்து மேல் பார்த்த ரிஷிவர்மன், கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, "என்னடி இதெல்லாம்?" என்று அழுத்தமாக கேட்டான்.


கணவன் எதைக் கேட்கிறான் என்று புரிந்தாலும் பதில் சொல்லாமல் அவள் மௌனமாக நின்றிருந்தாள்.


அவளது அந்த அமைதியைக் கண்டு பல்லைக் கடித்தபடி அவளை நெருங்கி, தனது இடது கையால் அவளது நாடியை அழுத்திப் பிடித்துத் தன் முகம் பார்க்கச் செய்தவன், "சாப்பாடு செஞ்சி கொடுத்து எனக்குப் பொண்டாட்டி ஆகலாம்னு பார்க்கிறியா?" என்று கேட்டான் அவள் கணவன்.


அவன் கேட்ட கேள்வியை விட அவன் அழுத்திப் பிடித்திருந்தது தான் அவளுக்கு வலித்தது


அவனோ, "சொல்லுடி! எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்கே? சாப்பாடு கொடுத்து என்னை மயக்கலாம்ன்னு நினைச்சியா..?" என்று உறும,


ஸ்னேகாவோ அதிர்ந்து அவனைப் பார்த்தவள், இல்லை எனும் விதமாகத் தலையை இடம் வலம் ஆட்டினாள்.


"வேற எதுக்கு? ஒருவேளை என் கூடக் குடும்பம் நடத்த ஆசைப் படுறியோ?" என்று கேட்டு நக்கல் சிரிப்பு சிரித்தவன்,


"சரி வா, உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்? பேஷா நடத்திடலாம்!!" என்றபடி அவளது வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்ட ரிஷிவர்மன்..


அவள் என்ன ஏது என்று யோசிக்கும் முன் அவளைத் தனது அறையை நோக்கி இழுத்துச் சென்றான். அவனது செயலில் பதைபதைத்துப் போன ஸ்னேகா, அவனின் இழுப்புக்குச் செல்லாமல் பின்தங்க முயன்றாள்.


அவனோ அவள் வராததைக் கண்டு, "என்னடி.. இங்கேயே நின்னுட்ட? இதுக்காகத்தானே இங்க வந்து இப்படிலாம் பண்ணிட்டு இருக்க. இல்லன்னு சொல்லி சீன் போடாம சீக்கிரமா வா! உன்னோட ஆசையைத் தீர்த்து வைக்கிறேன்" என்று இரக்கமில்லாமல் கூறி அவளைப் பிடித்து அவன் இழுக்கவும்..


அதில் என்ன புரிந்து கொண்டாளோ..? நெஞ்சம் படபடக்க, "வேணாம்.." என்றாள்.


"என்ன வேணாம்? என் ரூம் வேண்டாமா? அப்ப இங்கேயே வச்சிக்கலாமா? நான் ரெடி..!!" என்றவன், அவளது பிடரி முடியை பிடித்துக் கொண்டு அவள் முகத்தைத் தன் முகத்தை நோக்கி இழுக்கவும்,


அதில் மேலும் அதிர்ந்தவள் மிரட்சியுடன், "அத்து! பிளீஸ் வேணாம்!" என்று அலறி விட்டாள்.


இவ்வளவு நேரம் கோபத்தில் பிடியில் இருந்த ரிஷியின் செவியில், அவளது "அத்து!" என்ற அழைப்பு விழ, பட்டென அவளது முடியை விட்டு விட்டான்.


அவனது மனக்கண்ணிலோ, "அத்து பாப்பா, அத்து பாப்பா.." என்று கூறி கைத் தட்டி சிரித்தபடி வந்து நின்றாள் குழந்தை ஸ்னேகா..


***

1 comment:

  1. Ennamga da ithu chinna ponna terror piece ku kalyanam pannitu eppadi iruka nu kelvi ketutu irukimga unna adichana thittinana nu la kekanum, enya Ravi un pulla pathi terimji anda ponnai vittutu pora ithula vera Avan dan parthukanum ah nalla parthukuvan

    ReplyDelete