ஸ்வரம் 19

 



ஸ்வரம் 19..


கோபத்தின் பிடியில் இருந்த ரிஷிவர்மன் மனைவியின், "அத்து.." என்ற அழைப்பைக் கேட்டு அவளது கையை உதறிவன், தனது பின்னந்தலையை அழுந்த கோதிக் கொண்டான். பின்பு நேரே கிச்சனுக்குள் சென்று பிரிட்ஜைத் திறந்து டின்பீர் ஒன்றை எடுத்தவன், அப்படியே தொண்டையில் மடமடவென சரித்தான். 


நிமிடத்திற்குள் எத்தனை டின்பீரை காலி செய்தானோ?? அவனுக்கே தெரியாது..!! இறுதியாகக் குடித்த டின்னை அங்கே தரையில் விசிறியடித்து விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தவன், அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், தன் அறைக்குள் சென்று விட்டான்.


தனது வலது கையைக் கணவன் அழுத்திப் பிடித்திருந்ததால் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தினை இடது கைக் கொண்டு தடவியபடி, பூட்டி இருந்த கணவனின் அறையைப் பார்த்த ஸ்னேகாவின் மனதிலோ மகிழ்ச்சி குமிழியிட்டது. 


ஆம்! சிறுவயதில் அவள் மட்டுமே அவனை அழைக்கும் பிரத்யேக அழைப்பு அல்லவா..? “அத்து” என்ற சொல் கணவனின் மனதில் இன்றளவும் ஆழ பதிந்துள்ளதை நினைத்து, அவளது நெஞ்சம் பூரித்துத்தான் போனது. அதே சமயம், அந்த அழைப்பு அவனையும் தடுமாற செய்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஸ்னேகாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாக, அந்தச் சந்தோஷத்தில் அவள் கண்கள் கூடக் கலங்கியது. 


அதே நேரம் அவளது இழதோ புன்னகையில் மலர்ந்திருக்க, சொல்ல முடியாத உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் என்று சொன்னால் அது மிகையாகாது!! அதனால் சற்று முன் கணவன் தன்னிடத்தில் நடந்து கொண்டதைப் புறம் தள்ளியவள், தானும் தனது அறைக்குச் சென்று விட்டாள்.  


மறுநாள் கணவன் அலுவலகம் சென்றதும், தானும் கிளம்பி வெளியே சென்றாள் ஸ்னேகா. தனது காலேஜ் எங்கிருக்கிறது, எந்த பஸ்ஸில் போக வேண்டும் எல்லாம் ஓரளவுக்கு விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொண்டவள், அப்படியே சமையல் செய்வதற்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வந்திருந்தாள்.


அதன் பிறகு வந்த நாட்களில் ஸ்னேகா மூன்று வேளையும் கணவனுக்காகப் பார்த்து பார்த்துச் சமைத்து வைக்க, அவனோ மனைவி செய்து வைத்த உணவைத் தொட்டும் பார்க்கவில்லை. அதே நேரம் அவளை அன்று போல் திட்டவும் இல்லை. 


அதைப் பற்றி அவள் எந்தக் கவலையும் படாமல் தனது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருந்தாள். 


இவர்களின் வாழ்க்கை இப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருக்க, அஜித் - நேகாவின் வாழ்க்கையோ, எதிரும் புதிருமாகச் சென்று கொண்டிருந்தது.


அன்று காலை, டைனிங் டேபிளில் வேலைக்காரியின் உதவியோடு பலகாரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் நேகா.


அலுவலகம் செல்ல கிளம்பி வந்த தனுஷா நேகாவைப் பார்த்ததும், "நேகா!" என்றபடி அவளிடம் பேச முயல, அவளோ தனுஷாவின் அழைப்பைச் சட்டை செய்யாமல் கிச்சனை நோக்கி நடந்தாள். 


அவளை மேற்கொண்டு நடக்க விடாமல் தோழியின் கையைப் பிடித்து நிறுத்தியவள், "நேகா ப்ளீஸ்! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடி!" என்று தனுஷா தோழியிடம் கெஞ்சினாள்.


நின்று நிதானமாகத் திரும்பித் தனுஷாவைப் பார்த்த நேகா, "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! என்கிட்ட அடி வாங்கியும் எப்படிடி கொஞ்சம் கூட வெட்கமில்லாம என்கிட்ட மறுபடியும் பேச வர்ற? அட ச்சி! கையை விடு!" என்று வீரியமான வார்த்தைகளை வீச, தனுஷாவோ தோழியின் பேச்சில் கண்கள் கலங்க நின்றிருந்தாள்.


அதைக் கண்டவள், "என்ன ஜென்மமோ? கொஞ்சம் கூடச் சூடு சொரணை இல்ல" என்று நேகா முணுமுணுத்தாள்.


தான் ஏன் அப்படிச் செய்தேன் என்று விளக்கம் சொல்ல, தனக்கு ஒரு வாய்ப்பளிக்காமல் பேசுபவளிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? என்று புரியாமல் திணறிய தனுஷாவுக்கோ, தோழியின் பேச்சும் அவளது புறக்கணிப்பும் அதிகம் வலித்தது. நேகாவை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சாப்பிடாமல் அங்கிருந்து அவள் நகரவும்,


"ஹலோ! ஒரு நிமிஷம் நில்லு.." என சொடக்கிட்டு நிறுத்தினாள் நேகா. தோழி அழைக்கவும், சற்று முன் அவள் பேசியதை எல்லாம் மறந்தவளாக முகம் மலர, "நேகா.." என்றபடி தனுஷா அவளைத் திரும்பிப் பார்த்தாள்.


அவளோ, "ஆமா.. நான் உனக்கு யாருடி? அண்ணன் பொண்டாட்டி தானே? பின்ன எதுக்கு என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுறே? இனிமேல் அண்ணினு மரியாதையா சொல்லிப் பழகு! நேகா லேகானு கூப்பிட்டே நான் பேச மாட்டேன், என் கைதான் பேசும்! சொல்லிட்டேன்.." என்று கோபமாகக் கூறி விட்டு கிச்சனுக்குள் சென்று விட்டாள் நேகா. 


தோழியின் பேச்சில் சோர்ந்து போன தனுஷா, தளர்ந்த நடையுடன் ஹாலுக்கு வர, தன் மகளைக் கண்ட லட்சுமி, "தனு! சாப்பிட்டியா..?" என்று கேட்டார்.


"ம்ம்ம்.. ஆச்சுமா, நான் கிளம்புறேன்" என்று அவர் முகம் பாராமல் கூறி விட்டு அவள் வெளியேற, செல்லும் மகளை யோசனையுடன் பார்த்திருந்தார் லட்சுமி. 


சிறிது நேரத்தில் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த அஜித் போன் பேசியபடி உணவு உண்ண செல்ல, அவன் முகம் பாராமல் தட்டு வைத்து, அவனுக்கு அதில் பூரியைப் பரிமாறினாள் நேகா.


போன் பேசி முடித்த அஜித், "சாப்பிடியா பேபி?" என்று கேட்டபடி அவளை ரசனையுடன் பார்த்தவாறு கேட்க,


அவளோ, யாரோ யாரிடமோ என்னவோ பேசுகிறார்கள் என்ற தினுசில் கணவனுக்கு கிளாசில் தண்ணீர் ஊற்றி அவன் முன் வைத்தாள்.


அவனோ, "நீயும் உக்கார் பேபி! சேர்ந்து சாப்பிடலாம்" என்று அவளையும் சாப்பிட அழைத்தான்.


கனவனை முறைத்த நேகா, அவனிடம் கோபமாகப் பேச ஆரம்பிக்கும் போது, "அஜித்.." என்று அழைத்தபடி அங்கு வந்தார் லட்சுமி. 


மாமியாரின் குரலில் அவள் அமைதியாகி விட, அஜித்தோ, "அம்மா!" என்றான். 


மகனின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்த லட்சுமி, "இன்னைக்கு நீ ஆபிஸ் போக வேணாம்டா. அதைச் சொல்லத்தான் வந்தேன்" என்று மகனிடம் கூறவும்,


"ஏன்மா?" எனப் புரியாமல் கேட்டான் அஜித்குமார்.


"ஏனா? ரிசப்ஷனுக்கு இன்னும் நாலு நாள் தான்டா இருக்கு. இன்னும் ஒரு வேலை பார்க்கல. நீ பாட்டுக்கு ஆபிசே கத்தினு இருந்தா என்னடா அர்த்தம்..?" என்று அவர் மகனை முறைக்க 


"என்னது ஒரு வேலை பார்க்கலயா? மண்டபம் பார்த்தாச்சு, எல்லோருக்கும் பத்திரிகை கொடுத்தாச்சு, ஊர்ல இருந்து வரவங்களுக்கு ஹோட்டல் புக் பண்ணியாச்சு, கேட்டரிங் கூட ரெடி! எல்லாம் பக்காவா இருக்கு. இதுல நான் என்ன வேலை பார்க்கணும்?" என்று புரியாமல் கேட்டவனிடம்,


"இதெல்லாம் பண்ணினா போதுமா? உனக்கும், உன் பொண்டாட்டிக்கும் ரிசப்ஷனுக்குத் துணிமணி எடுக்க வேணாமா? இப்பவே நேகாவைக் கூட்டிட்டுப் போய் அவளுக்கு என்னன்ன வாங்கணுமோ வாங்கிக் கொடு!" என்று கண்டிப்புடன் கூறினார் லட்சுமி.


மனைவியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற அஜித்தின் மனம் பரபரத்தாலும், வேலை அதிகமாக இருக்கவும், "அம்மா! எனக்குத் தலைக்கு மேலே வேலை இருக்கு. நீங்க, தனு, நேகா மூணு பேரும் போய் உங்களுக்குத் தேவையானதை முதல்ல வாங்கிடுங்க. நான் டைம் கிடைக்கும் போது எனக்கான டிரஸ்ஸை வாங்கிக்கிறேன்" என்றவன்,


"இந்தாங்க.. என்னோட கிரெடிட் கார்ட்.." என்று தாயிடம் அவன் தனது பண அட்டையை நீட்டினான்.


அவனை இன்னமும் நன்றாக முறைத்த லட்சுமி, "ஏன்டா, எப்ப பார்த்தாலும் வேலை வேலைனு ஓடுறே? முன்ன தான் அப்படி இருந்தே. சரி! கல்யாணம் தான் ஆகிருச்சே.. இனியாவது மாறுவேனு பார்த்தா, இப்பவும் அப்படியே தான் இருக்கே..?" என்று மகனைச் சாடியவர்,


"ஏம்மா நேகா.. இதெல்லாம் நீ என்னனு இவன்கிட்ட கேட்க மாட்டியா..?" என்று மருமகளிடம் கேட்டார்.


அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்று தாய் - மகன் பேச்சைக் கேட்டும் கேட்காதது போலும் நின்று கொண்டிருந்தவள், தன்னிடம் கேள்வி கேட்கும் மாமியாருக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் அவரைப் பார்த்தவள்,


"நீங்க சொல்லியே அவர் கேட்கல.. நான் சொன்னா மட்டும் கேட்டுருவாரா?" என்று அவள் கணவனைப் பார்த்துக் கேலியாக உதட்டை சுழித்தாள்.

 

அவனது பார்வையோ சுழித்த அவளது இதழின் மீது படிந்தது. "நீ சொல்லி நான் எதைக் கேட்கல நேகா?" என்று இருபொருள்பட கேட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான் அஜித்குமார். 


கணவன் எதைச் சொல்கிறான் என்று புரியவும் சட்டென்று கணவனை பார்த்து முறைத்தாள் நேகா. ஆம்! திருமணம் நடந்த அன்றில் இருந்து கடந்த இரண்டு வாரங்களாக, அவள் சொன்னதற்காக அவளை நெருங்காமல் அவளிடம் இருந்து தள்ளித் தானே இருக்கிறான்..??


"என்னமா அமைதியா இருக்கே? சீக்கிரம் போய் ரெடியாகி வா! இன்னைக்கு புல்லா நான் உனக்குத்தான்!! ஓகேவா? இப்ப ஹேப்பி தானே?" என்று கூறி அவன் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும்..


'ச்ச! நானே வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேன்' என மானசீகமாகத் தன் தலையில் அடித்துக் கொண்ட நேகா, நகராமல் அப்படியே நின்றாள்.


அவள் அசையாமல் நிற்பதைக் கண்டு, "அம்மாடி! அவன் மனசு மாறுறதுக்குள்ள கிளம்பி வாம்மா" என்று லட்சுமி கூறவும், மனதில் கணவனை அர்ச்சித்தபடி மாடிப்படி ஏறினாள் நேகா. 


செல்லும் மனைவியைப் பார்த்த அஜித்க்கு வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது. அதை அடக்கிக் கொண்டவன், "அம்மா! தனு எங்கே? ஆபிஸ் கிளம்பிட்டாளா?" என்று தங்கையைக் கேட்டான்.


"ம்ம்ம்.. இப்ப தான் கிளம்பினா" என்றவர், "அஜித்! கொஞ்ச நாளாவே தனு சரியே இல்லப்பா. ரொம்ப அமைதியா இருக்கா.. யார் கூடவும் சரியா பேச மாட்டேன்கிறா.. ஆபிஸ்ல இருந்து வந்ததும் ரூம் உள்ள போய் அடைஞ்சிக்கிறா.. என்னனு கேட்டுப் பார்த்துட்டேன். ஒன்னும் இல்லன்னு சொல்லி மழுப்பிடுறா. ஆனா எனக்கு என்னமோ அவ பேச்சுல நம்பிக்கை இல்லப்பா. அவ மனசுல என்னமோ இருக்கு??" என்றவருக்கு ஒரு தாயாய் மகளை நினைத்துக் கவலை எழுந்தது.


தாய் கூறியதைக் கேட்டு யோசனையானான் அஜித்குமார். ஏனெனில் அவனுமே தங்கையின் நடவடிக்கையைச் சில நாட்களாகப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்? அதைப் பற்றி அவளிடம் அலுவலகத்தில் கேட்க முடியாது. சரி, வீட்டில் வைத்துப் பேசலாம் என்று எண்ணி வந்தால், அவன் வரும் முன் தங்கை தூங்கி விடுகிறாள். சரி, நாளைக்குத் தங்கையிடம் எப்படியாவது பேசி விட வேண்டும் என முடிவெடுத்த அஜித்மார்,


"நான் அவகிட்ட பேசுறேன்மா" என்று அவன் அன்னையிடம் கூறினான். 


அவரோ, "இன்னொரு விஷயம்பா, அவளுக்குச் சீக்கிரமா வரன் பார்க்க ஆரம்பி! என் பொண்ணை ஒரு நல்லவன் கையில் பிடிச்சு குடுத்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்" என்று கூறவும்,


"என்னம்மா நீங்க? அவ சின்னப் பொண்ணு! அவளுக்குப் போய் இப்பவே கல்யாணம் பண்ணனும்னு சொல்றிங்க. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்று அவன் கூற,


அவரோ மகனை முறைத்தவர், "டேய்! நியாயமா பார்த்தா அவளுக்குக் கல்யாணத்தை முடிச்சுட்டுத்தான் நீ கல்யாணம் பண்ணி இருக்கணும். நீ என்னன்னா அவளைச் சின்னப் பொண்ணுனு சொல்றே. அவளுக்கும் நேகாக்கும் ஒரே வயசுதான்! மறந்துட்டியா?" என்று மகனைச் சத்தம் போட்டவர்,


"இன்னும் அவ அஞ்சு வயசு குழந்தை இல்லப்பா. ஒழுங்கா நல்ல வரனா பாரு! வர்ற தையில அவளுக்குக் கல்யாணத்தை முடிக்கணும், சொல்லிட்டேன்.." என்று லட்சுமி கண்டிப்புடன் கூறிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்தாள் நேகா.


"சரிமா, நான் பார்த்துக்கிறேன்" என்று கூறிய அஜித்குமார், மனைவியை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான்.


அஜித்தின் வாகனம் சாலையில் சீராகச் சென்று கொண்டிருக்க, அதைச் செலுத்திக் கொண்டிருந்தவனின் பார்வையோ, நிமிடத்திற்கு ஒரு முறை தன் மனைவியைத் தொட்டு மீண்டு கொண்டிருந்தது. 


நேகாவோ, எக்காரணம் கொண்டும் கணவனின் புறம் திரும்பி விடக் கூடாது என்ற பிடிவாதத்தில் வெளியே பார்த்துக் கொண்டிருக்க, 'உன்னை இப்பொழுது திரும்பிப் பார்க்க வைக்கிறேன் பார்!' என்று எண்ணிக் கொண்ட அஜித் காரில் இருந்த பிளேயரில் பாட்டை ஒலிக்க விட, அதிலோ,


மானே தேனே கட்டிப்புடி

கட்டிப்புடி

மாமன் தோளை தொட்டுக்கடி

தொட்டுக்கடி


மல்லிக வாசனை

மந்திரம் போடுது

மன்மத ராசனின்

மையலை தேடுது


மானே தேனே கட்டிப்புடி

மாமன் தோளை தொட்டுக்கடி


என்ற பாடல் ஒலித்தது. அதில் வேகமாகத் திரும்பிக் கணவனைப் பார்த்த நேகாவின் கண்ணில் கொலைவெறி தாண்டவம் ஆடியது.


அதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட அஜித், "ஹேய்! நான் வேணும்னு போடல. இந்தப் பாட்டு இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை நேகா" என்று மனதாரப் பொய்யுரைத்தான்.


அவளோ, 'நான் உன்னை நம்பவில்லை!' என்பது போல் கணவனை முறைத்தவள், பிளேயரையும் அணைத்து இருந்தாள்.


"ஊஃப்! இப்ப எதுக்கு ஆப் பண்ணினே..?" என்று அவன் கேட்க, 


"எனக்குப் பிடிக்கல" எனப் பட்டென்று கூறினாள் நேகா. 


"ம்ப்ச்.. இங்க பாரு நேகா.. நாம போற கடைக்குப் போய் சேர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். நீயும் என்கிட்ட பேச மாட்டேங்கிறே. என்னையும் பாட்டு கேட்க விட மாட்டேன்னா என்ன அர்த்தம்? எனக்குப் போர் அடிக்கும்ல. இந்தப் பாட்டு பிடிக்கலன்னா வேற பாட்டு போடுறேன். அதைக் கேளு!" என்று தனக்குள் சிரித்தபடி மீண்டும் பிளேயரை ஆன் செய்ய, அதிலோ, 


கண்ணே 

ம்ம்ம்ம்

தொட்டுக்கவா கட்டிக்கவா

ஹ்ஹீம் 

கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா


தொட்டுகிட்டா பத்திக்குமே

பத்திகிட்டா பத்தட்டுமே

ம்ம்ம்ம்

அஞ்சுகமே நெஞ்சு என்ன

விட்டு விட்டு துடிக்குது

கட்டழகி உன்ன எண்ணி

கண்ணு முழி பிதுங்குது


கொத்தி விட வேண்டுமென்று

கொக்கு என்ன துடிக்குது

தப்பிவிட வேண்டுமென்று

கெண்டை மீனு தவிக்கிது


ஹாஹா குளிக்கிற

மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது

பசி தாங்குமா இளமை

இனி பரிமாற வா ஹ இளமாங்கனி


என்ற அடுத்த பாடலில் அவளது கோபம் ஏகத்துக்கும் ஏகிற, கணவனை உக்கிரமாகப் பார்த்து, "இனிமேல் இந்த மாதிரி கண்ட கண்ட பாட்டு ஏதும் போட்டீங்க, நான் ஓடுற கார்ல இருந்து குதிச்சிருவேன்!!" என்று கணவனை எச்சரித்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 


இம்முறை அஜித்தோ காரில் ஓடிக் கொண்டிருந்த பிளேயரை அணைத்தவன், முக்கியமாக கார் கதவையும் சேர்த்து லாக் பண்ணி விட்டு, மேற்கொண்டு மனைவியைச் சீண்டாமல் சாலையில் கவனத்தைப் பதித்து வாகனத்தைச் செலுத்தினான்.


சிறிது நேரத்தில் அஜித்தின் வாகனம் ஒரு பிரம்மாண்ட ஜவுளிக்கடையின் முன் நிற்க, "நேகா! நீ இறங்கு, நான் பார்க் பண்ணிட்டு வரேன்!" என்றவன், அவள் இறங்கி நிற்கவும் காரை அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டு வர, இருவரும் ஜோடியாக அந்தக் கடைக்குள் நுழைந்தனர்.


அவர்கள் உள்ளே சென்ற அடுத்த நிமிடம் இன்னொரு வாகனம் வந்து நிற்க, அதில் இருந்து இறங்கினாள் அமலா. "என்னங்க.. நான் கடைக்குள்ள போறேன். நீங்க வண்டியை பார்க் பண்ணிட்டு வாங்க" என்று தன் கணவனிடம் கூறி விட்டு உள்ளே சென்றாள்.


அஜித் - நேகா இருவரும் பட்டுபுடவை செக்ஷனுக்குச் செல்ல, அவர்களைப் பார்த்ததும் அங்கு வேலை செய்யும் பெண், "சொல்லுங்க மேடம், என்ன விலையில் சேலை எடுத்துக் காட்டட்டும்?" என்று கேட்டாள்.


நேகாவோ, அந்தப் பெண்ணுக்குப் பதில் அளிக்காமல் வேறு எங்கோ தன் பார்வையைப் பதிக்க, அதைக் கண்ட அஜித் மனைவியை நெருங்கி, அவள் இடையில் கைக் கொடுத்து தன்னை நெருங்கி நிற்கச் செய்தவன், "பேபி! அவங்க கேக்குறாங்கள்ல, பதில் சொல்லு.." என்று கூற, கணவனின் செயலில் அதிர்ந்து அவனைப் பார்த்த நேகா, தன் இடையில் பதிந்திருந்த அவனது கையை எடுக்க முயற்சி செய்தபடி, "கையை எடு!" என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.


அவனோ, "அப்போ சேலை செலக்ட் பண்ணு!" என்று புன்னகை மாறாமல் கூறவும்,


பொது இடத்தில் பிரச்சனை வேண்டாம் என எண்ணியவள், "பண்ணித் தொலைக்கிறேன்டா!!" எனக் கடுகடுத்து விட்டு, ஏனோ தானோவென்று சேலையயைப் பார்க்க ஆரம்பித்தாள்.


அஜித்தோ, அவள் இடையில் இருந்த தனது கையை எடுக்காமல் மேலும் அழுத்தம் கொடுத்தவன், மற்றொரு கையால் ஒரு சேலையை எடுத்து அவள் மீது வைத்தவன், "நல்லா இருக்குல?" என்று ரசித்துக் கூறினான்.


அவன் சேலையைச் சொன்னானா..? இல்ல அவளைச் சொன்னானா..? அவனுக்கே வெளிச்சம்..!!


தன் மேனியில் இருந்த சேலையைப் பார்த்து விட்டு, "எனக்குப் பிடிக்கல" என்று அவள் சொல்லவும்,


அதைக் கீழே வைத்து விட்டு வேறொரு சேலையை எடுத்து அவள் மேல் வைத்தவன், "இது ஓகேவா..?" என்று அவன் கேட்கும் நேரம் அஜித்தின் மொபைல் ஒலித்தது. "நீ பார்த்துட்டு இரு, இதோ வந்துறேன்!" என்றவன் போனை காதுக்குக் கொடுத்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றான்.


"மேடம், இந்தச் சேலை பாருங்க! இது லேட்டஸ்ட்டா வந்த டிசைன்" என்று புதிதாக வந்த ஒரு சேலையை எடுத்துக் காட்டினாள் அந்தப் பெண்.


அதைச் சரியாக கூடப் பாராமல், "ம்பச்.. அதையே பில் போடுங்க" என வேண்டா வெறுப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தவளின் காதில், "நேகா.." என்ற அழைப்பு விழுந்தது. அந்தக் குரலில் முகம் மலர, குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தாள் நேகா.


அங்கே மோகனாவும், விக்ராந்த்தும் நின்றிருந்தார்கள். தாயைக் கண்டதும் "மோஹிமா.." என்று அழைத்தபடி அவரிடம் பாய்ந்தாள் நேகா. மகளை அணைத்துக் கொண்ட மோகனாவும், "எப்படிடா இருக்கே?" என்று கேட்க,


"ம்ம்.. இருக்கேன் மோஹிமா.. நீங்க எப்படி இருக்கீங்க? இங்க என்ன பண்றிங்க?" என்று அவள் கேட்க,


"சும்மா வீட்ல போர் அடிச்சுது. அதான் சாமி கும்பிட்டு போலாம்னு இங்க வந்தோம்" என்று விக்ராந்த் சிரிக்காமல் கூறினான்.


தன் அண்ணனை முறைத்த நேகாவோ, அவனை அடித்தபடி, "என்ன ப்ரோ நக்கலா?" என்று கேட்க,


"உன்கிட்ட அடி வாங்கி ரொம்ப நாள் ஆச்சுல்ல! அதான் அவனுக்குக் குளிர் விட்டுப் போச்சு" என்று சிரித்தபடி கூறிய மோகனா, "ரிசப்ஷனுக்கு உனக்கும் மாப்பிள்ளைக்கும் துணி எடுக்க வந்தோம்டா" என்று விட்டு, "நீ என்ன தனியா நின்னுட்டு இருக்கே? யார் கூட வந்த? தனுஷா கூடவா..?" என்று கேட்டாள்.


"இல்ல மோஹிமா, நானும் அவரும் தான் வந்தோம்" என்றவள், "மோஹிமா! ஸ்னேகா எப்படி இருக்கா? போன் பண்ணாளா..?" என்று கேட்ட நேகாவின் குரலில் தங்கையை நினைத்துக் குற்றவுணர்வு அதிகமாக இருந்தது.


"ம்ம்.. பேசினா, நல்லா இருக்கேன்னு சொன்னா." என்று கூறிய மோகனா, "ட்ரெஸ் எடுத்தாச்சா?" என்று கேட்க,


"எனக்கு எடுத்தாச்சு மோஹிமா. அவருக்குத்தான்.." என்று சொல்ல வந்த நேகா, தாயின் பின்னே சற்றுத் தள்ளித் தன் கணவனுடன் வந்து கொண்டிருந்த அமலாவைப் பார்த்து விட்டாள். அவளை இங்கு எதிர்பாராத நேகாவின் முகம் வெளுக்க, இதயம் தொண்டைக்குழியில் வந்து துடித்தது.


இவ்வளவு நேரம் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த தங்கையின் முகம் திடீரென மாறியதைக் கண்ட விக்ராந்த் யோசனையுடன், "நேகா! என்னாச்சு?" என்று கேட்டான்.


"ஹான்.. ஒன்னும் இல்ல ப்ரோ.. எனக்குச் சேலை எடுத்தாச்சு. அவருக்கு இனி தான் எடுக்கணும். ஜென்ட்ஸ் செக்ஷன் மேல மாடில இருக்குனு சொன்னாங்க. அங்கே போகலாமா?" என்று சிறு பதட்டத்துடன் சொன்னவள், தாயையும் தமையனையும் அழைத்துக் கொண்டு வேகமாகப் படியேறினாள். விக்ராந்த்தோ யோசனையுடன் திரும்பிப் பார்த்து விட்டு அவர்களைப் பின்தொடர்ந்தான். 


சற்றுத் தள்ளி நின்று மனைவியையும், அவளது குடும்பத்தினரையும் பார்த்தபடி போன் பேசிக் கொண்டிருந்த அஜித், "ஓகே! ஐ வில் கால் யு லேட்டர்" என்று விட்டுத் தானும் மேல் மாடிக்குச் சென்றான்.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லோருக்கும் துணி எடுத்து முடித்து விட்டு, அதற்கான பில்லை கட்டி விட்டு கடையில் இருந்து அவர்கள் வெளியேறவும்..


தன் கணவனுடன் துணி எடுத்து முடித்த அமலா பில் கவுண்டர் அருகே வரவும் சரியாக இருக்க, எதேர்ச்சையாக வாசலைப் பார்த்த அமலா, அங்கே காரில் ஏறிக் கொண்டிருந்த நேகாவையும் பார்த்து விட்டாள்.


"ஏய் நேகா!" என்று வெளியே செல்லப் போன அமலாவைத் தடுத்துப் பிடித்த அவள் கணவன், "என்னாச்சு? எதுக்கு இப்படி ஓடுறே? இந்த மாதிரி நேரத்துல மெதுவா தான் நடக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காங்களா இல்லையா?" என்று கடிந்து கொண்டான்.


"என்னங்க.. அதோ போறாளே, அவ என் பிரெண்டுங்க! நம்ம கல்யாணத்துக்கு வரேன் வரேன் சொல்லி வராம ஏமாத்திட்டா. எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? தனு கூடக் கால்ல சுளுக்கு வரலனு சொன்னா. ஆனா இவ இப்ப வரை எனக்கு ஒரு போன் கூடப் பண்ணல. வாங்க, இப்பவே போய் அவகிட்ட நான் சண்டை போடணும். அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும்" என்று கூற


"இப்பவா? இன்னும் ஒரு மணி நேரத்தில நமக்கு பிளைட் அமலா. நீ பர்சேஸ் பண்ணியே ஆகணும்னு தொல்லை பண்ணினதால தான், இங்கே கூட்டிட்டு வந்தேன். இப்ப என்னன்னா, உன் பிரென்ட் கூடச் சண்டை போட கிளம்பிட்டே.. அடுத்த தடவை வரும் போது அவங்களைப் பார்க்கலாம். இப்ப வேணா அவங்ககிட்ட போன் பண்ணி பேசு!" என்று கூற,


"என்ன தேவைக்கு..?? இதை அப்பவே பண்ணி இருக்க மாட்டேனா? நேர்ல பார்த்துத் திட்டணும்னு தான் அமைதியா இருந்தேன். இப்ப பார்த்தும் அவளை விட்டுட்டேன். நீங்க சொன்ன மாதிரி அடுத்த தடவை வந்து இவளையும், தனுஷாவையும் உண்டு இல்லன்னு ஆக்குறேன்" என்று கடுப்புடன் கூறி விட்டு, தாங்கள் எடுத்த துணிக்கான பணத்தைக் கட்டி விட்டுக் கிளம்பினார்கள் அமலாவும், அவள் கணவனும்..


அஜித்தின் வாகனம் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியின் முகத்தை யோசனையுடன் பார்த்தான். அவளது முகம் கடையில் வைத்தே சரி இல்லை என்று உணர்ந்து கொண்டிருந்த அஜித், “சரி, பிறகு கேட்டுக் கொள்ளலாம்” என எண்ணி, அப்பொழுது அமைதி காத்தவன் இப்பொழுது, "நேகா! ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்று கேட்டான்.


அவளோ வெளியே பார்வையைப் பதித்து இருந்தாளே தவிர, கணவனின் புறம் திரும்பவில்லை, அவன் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.


வலது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்து வண்டியைச் செலுத்தியவன், இடது கைக் கொண்டு மனைவியின் கையைப் பிடித்து "உன்னைத்தான் கேட்கிறேன் நேகா.. என்னாச்சு..?" என்று மென்மையாகக் கேட்டான்.


கணவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவளது கண்களோ கலங்கி இருந்தது. அதைக் கண்டு துணுக்குற்று வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திய அஜித், "நேகா..!!" என்று பதற்றம் கொண்டு அழைத்தான்.


அவளோ சட்டென கணவனது சட்டை காலரை ஆவேசமாய்ப் பிடித்து உலுக்கி, "ஏன்டா அப்படிப் பண்ணினே? ஏன் அப்படிப் பண்ணினே?" என்று அழுகையுடன் அவனிடம் கேட்டாள் நேகா.


இரண்டு மாதங்களுக்கு முன் நடந்ததை அவள் மறக்கவில்லை என்றாலும், நினைவில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தாள். ஆனால் இன்று அமலாவைப் பார்த்ததும், அவளது ரணம் மீண்டும் மேலெழும்பி விட்டது. அந்த ரணத்திற்குக் காரணம் அவள் கணவன் அல்லவா..? 


அஜித்துக்கோ மனைவி எதைச் சொல்கிறாள் என நொடியில் புரிந்து கொண்டவனுக்குப் பெருமூச்சு தான் எழுந்தது. அவனும் தன் மனதினை அவளுக்கு உணர்த்தி விடும் எண்ணத்தில், "பிகாஸ் ஐ லவ் யு பேபி! என் லவ்வை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலடி, புரிஞ்சிக்கோ.." என்று தவிப்புடன் கூறினான்.


"லவ் பண்ணினா என்கிட்ட சொல்லித் தொலைச்சு இருக்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு என்னை அடைய உனக்கு என் உடம்பு தான் கிடைச்சுதா? ஹான்.." என்று கண்கள் கலங்க வலி நிறைந்த குரலில் அவனிடம் கேட்க,


"பேபி! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடி!" என்றான் சிறு கெஞ்சலுடன்..


அவளோ, "என்ன சொல்லப் போறே? அதான் கல்யாணம் ஆகிருச்சே, இன்னும் எதுக்காக அதையே நினைச்சுட்டு இருக்கே? வா, குடும்பம் நடத்தலாம்னு தானே சொல்லப் போறே? ஆனா என்னால மறக்க முடியலையே? என்னதான் நீ சமாதானம் பண்ணாலும், அதுக்கான விளக்கம் சொன்னாலும், நான் அப்போ இழந்தது இழந்தது தானே?? அதை நினைச்சு ஒவ்வொரு நாளும் நான் எப்படித் துடிச்சேன் தெரியுமா? அவமானம் தாங்காம நான் செத்துப் போயிருந்தா என்னடா பண்ணி இருப்பே?" என்று அவன் முகம் பார்த்து வேதனையுடன் கேட்டாள் நேகா.


மனைவியின் பேச்சில் அதிர்ந்த அஜித், சட்டென அவளை இழுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான். ஆம்! தான் செய்த காரியத்தால் தன்னவள் அப்படி ஒரு முடிவு எடுத்து இருந்தால்? அதை நினைக்கவே அவனது நெஞ்சம் பதறித்தான் போனது.


"சாரி பேபி!!" என்று அவன் கண் கலங்கக் கூற, கணவனின் குரலில் இருந்த வித்தியாசத்தை அவள் உணரும் நிலையில் இல்லாததால், அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக விலக முயற்சித்தவள்,  


"என்னை விடுடா! சாரி சொன்னா நடந்தது இல்லைன்னு ஆயிடுமா? இல்ல நீ செஞ்சதுதான் சரின்னு ஆயிடுமா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, அந்த நிலைமையில என்னை போட்டோ எடுத்து அதை ரசிச்ச சாடிஸ்ட்டு தானேடா நீ..?" என்று கூறிக் கோபமாக அவனது நெஞ்சில் மாறி மாறி அடித்தாள்.


மனைவியைத் தடுக்காமல், அவள் கொடுக்கும் அடிகளை விரும்பி ஏற்றுக் கொண்டு, அவள் திமற திமிற தன்னுள் இன்னும் ஆழமாக தன்னவளைப் புதைத்துக் கொண்ட அஜித், மனைவியை எப்படிச் சமாதானம் செய்வது என்று புரியாமல் தவித்துத்தான் போனான்


***

1 comment:

  1. Adapavi rape pannitana ah enda unna nallavan nu ninaihaen da nee nijama.l9ve panni irunda inda madiri panna Mata da loose pakki

    ReplyDelete