ஸ்வரம் 20

 



ஸ்வரம் 20..


அன்றைய தினத்திற்குப் பிறகு ரிஷிவர்மன், 'நீ இந்த வீட்டில் இருந்தாலும் ஒன்றுதான்.. இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்..' என்பது போல் தன் மனைவியிடம் நடந்து கொண்டான். அதுபோல் அவனது மனைவி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்து இருப்பதை அறிந்திருந்தாலும், அவளுக்காக அவன் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. 


ஸ்னேகாவுக்கோ, கணவனின் அருகாமையில் இருப்பதே போதுமானதாக இருக்க, அவளும் அவனிடம் எந்த ஒரு சலுகையும் எதிர்பாராமல் கல்லூரிக்குச் சென்று வர ஆரம்பித்தாள்.


அன்றும் அவள் எப்பொழுதும் போல் கணவன் கிளம்பவும் கல்லூரிக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். 


அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, "இப்ப யாரு வந்துருப்பா? அத்துவா? அவங்கன்னா சாவி வச்சிருப்பாங்களே..?" என்று யோசித்துக் கொண்டே கதவின் அருகே வந்தவள், லென்ஸ் வழியாக வந்திருப்பது யார் என்று பார்த்தாள்..


அங்கு வெளியே ஒரு பெண் நிற்பது தெரியவும், 'யாராக இருக்கும்..?' என்று நினைத்தபடி கதவை திறந்தவள், அங்கே வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்து, "யார் நீங்க?” என்று கேட்டாள்.


அந்தப் பெண்ணோ, "சார் இல்லைங்களா? நான் இந்த வீட்டைச் சுத்தம் பண்றவம்மா. என் புருசனுக்கு உடம்புக்கு முடியலனு ஒரு வாரம் வேலைக்கு வரல. இப்ப அந்த ஆளுக்குக் கொஞ்சம் பரவா இல்ல, அதான் வந்துட்டேன்" என்றவள், "ஆமா, நீங்க யாருமா? இதுக்கு முன்ன உங்களை நான் பார்த்தது இல்லையே..?" என்று ஸ்னேகாவிடம் கேட்க,


"நான் அவரோட வைஃப்.." என்று அவள் கூறவும்..


"அப்படிங்களா!" என்று திகைப்புடன் கேட்டவள் பின்பு, "சரிமா, நான் என் வேலையைப் பார்க்கிறேன்" என்றுவிட்டு அவள் வீட்டின் உள்ளே நுழைந்து, எப்பொழுதும் போல் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.


ஆனால் ஏற்கனவே வீடு சிறு தூசி துரும்பு இல்லாதிருப்பதைக் கண்டு, "வீடு சுத்தமா இருக்கே.. எல்லாம் வேலையும் நீங்களே முடிச்சிட்டீங்களாமா?" என்று கேட்டவள்,


"நாளையில் இருந்து சீக்கிரமே வந்து நானே சுத்தம் பண்ணுறேன். இப்ப நான் கிளம்புறேன்மா" என்று விட்டு வெளியே செல்ல போன அந்தப் பெண்ணை, "ஒரு நிமிஷம்!" என்று தடுத்து நிறுத்தினாள் ஸ்னேகா.


"என்னமா?" என்று கேட்டவளிடம்,


"நாளையில் இருந்து நீங்க வர வேணாம்" என்றாள் ஸ்னேகா.


"எதுக்குமா வர வேண்டாம்ன்னு சொல்றிங்க? இனி இப்படி லீவெல்லாம் எடுக்க மாட்டேன்!" வேலை போய் விடுமோ என்ற பயத்தில் அந்தப் பெண் பேசினாள்.


ஸ்னேகாவோ, "அவர்தான் உங்களை இனி வேலைக்கு வர வேணாம்னு சொல்ல சொன்னார்" என்று கூறவும்,


"சரிமா.." என்று அந்தப் பெண்ணின் குரலில் ஒரு நல்ல வேலை போய் விட்ட கவலை தெரிந்தது.


அவள் செல்லவும் கதவைச் சாற்றிய ஸ்னேகாவுகோ, அந்தப் பெண்ணை நினைத்து வருத்தம் எழுந்தாலும், தன் வீட்டில் வேறு ஒரு பெண்ணின் நடமாட்டம் இருப்பதை அவளது மனம் விரும்பவில்லை. மேலும் கணவன் தன்னைத் திட்டினாலும் பரவாயில்லை. தன்னவனுக்காக எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்று அவளது காதல் மனம் ஆசை கொண்டது. அதனால்தான் கணவனை மீறி, ஏதோ ஒரு தைரியத்தில், அந்தப் பெண்ணை வேலைக்கு வர வேண்டாம் என மறுத்து விட்டாள். 


அந்தப் பெண்ணோ, தனது பாக்கி சம்பளத்தை வாங்குவதற்காக, அவளை வேலைக்கு அமர்த்திய ரிஷியின் பி.ஏ ராபர்ட்க்கு பொது தொலைபேசியில் இருந்து அழைத்தவள், அவனிடம் விஷயத்தைச் சொல்ல, அவனோ சிறிது யோசித்து விட்டு ரிஷியிடம் விஷயத்தைக் கூறவும்,


தன் நெற்றியை விரல் கொண்டு நீவிய ரிஷிவர்மன், "சரி, செட்டில் பண்ணி அனுப்பிடு!" என்றவனின் மனமோ, 'சம்பளம் இல்லாத வேலைக்காரியா இருக்க  அவ ஆசைப்படும் போது, எனக்கென்ன வந்தது..?' என்று சொல்லிக் கொண்டது.


மறுநாள் காலை சீக்கிரமே அலுவலகத்திற்குக் கிளம்பி இருந்தான் ரிஷிவர்மன். 


ஆர்.வி குரூப்ஸ் ஆப் கம்பெனி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அன்று முக்கியமான மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. அது பல கோடி ரூபாய் லாபம் தர கூடிய புராஜெக்ட் என்பதால், அவன் கவனம் முழுவதும் அங்கு தான் இருந்தது. அந்த மீட்டிங் முடிய கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஆனது. பின்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட ரிஷிவர்மன், மதிய உணவிற்கு அவர்களுடன் வெளியே சென்று விட்டான்.


இரவு வெகுநேரம் கழித்தே வீட்டுக்கு வந்த ரிஷிவர்மன், தனது மொபைலை சோபாவில் போட்டு விட்டு, கிச்சனுக்குள் சென்று பிரிட்ஜை திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்தவனின் பார்வை தானாக டைனிங் டேபிளைப் பார்த்தது. அது வெறுமையாக இருப்பது கண்டு யோசனையாகத் தனது ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான். ஏனெனில் காலையிலும் அவனுக்கான தேநீரும், உணவும் டேபிளின் மேல் இல்லாமல் வெறுமையாகத்தான் இருந்தது. 


இப்பொழுதும் அப்படியே இருக்கவும், அதே யோசனையுடன் பார்த்தவாறு தனது அறைக்குச் சென்றவன், தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு மடிக்கணினியை எடுத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்து விட்டான்.


எவ்வளவு நேரம் கடந்ததோ..? அவனது மொபைல் ஒலி எழுப்பவும் தான் அவனது கவனம் கலைந்தது. அதை எடுத்துப் பார்த்தவன், தொடுதிரையில் தெரிந்த விக்ராந்த்தின் எண்களைப் பார்த்து நெற்றிச் சுருக்கினான். "இவன் எதுக்கு எனக்கு போன் பண்றான்..?" என்று நினைத்தபடி விக்ராந்தின் அழைப்பை ஏற்காமல் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். 


மீண்டும் அவனது மொபைல் ஒலிக்க, கடுப்புடன் மொபைலைப் பார்க்க, அழைப்பது தந்தை என்றதும், அதை ஏற்று, "சொல்லுங்க டாட்…"' என்றான்.


"ரிஷி! எப்படி இருக்க? ஸ்னேகா எப்படி இருக்கா?" என்ற தந்தையின் கேள்விக்கு,


"நான் நல்லா இருக்கேன். இதைக் கேட்கவா கால் பண்ணீங்க?" என்றான் கிண்டலுடன்.. 


"ஸ்னேகா எங்கே ரிஷி..?" என்று கேட்டான் ரவிவர்மன்.


அவனோ, "என்னைக் கேட்டா.. எனக்கென்ன தெரியும்..?" என்று அலட்சியமாகப் பதில் கூறினான்.


மகனின் பதிலில் சிறு பதட்டம் வர, "ரிஷி! என்ன பேசுற? காலையில் இருந்து அவளுக்கு ட்ரை பண்ணிட்டே இருக்கோம். அவ போனை எடுக்கவே இல்ல" என்ற தந்தையிடம்,


"அவ போனை எடுக்கலன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும் டாட்? உங்களுக்கு உங்க மருமக கூடப் பேசணும்ன்னு ஆசையா இருந்தா தாராளமா இங்க வாங்க.. வந்த கையோட அவளைக் கூட்டிக்கிட்டும் போயிடுங்க. அதை விட்டுட்டு அவ என்ன பண்றா, ஏது பண்றான்னு என்கிட்ட கேட்காதீங்க. எனக்கு வேலை இருக்கு. அப்புறம் பேசுறேன், இப்ப போனை வச்சிடுறேன்" என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டான். 


ஏதோ ஒரு வேகத்தில் தந்தையிடம் அப்படி அலட்சியமாகக் கூறி விட்டாலும், அவனது மனமோ அவளுக்கு என்னானது என்று யோசிக்கவும் தவறவில்லை. ஏனெனில் அவன் அவளை ஒதுக்கி வைத்தாலும், தினமும் அவனுக்காகச் சமைத்து வைத்து என கடமையே கண்ணாக இருப்பவளாயிற்றே..!! வீட்டினர் அழைப்பையும் அவள் ஏற்கவில்லை. பதிலுக்கு அவளும் வீட்டிற்கு அழைக்கவில்லை என்றதும், ஏன் என்ற கேள்வியும் பிறந்தது.


தன் தாடையைத் தடவியபடி யோசனையுடன் மனைவியின் அறையை பார்த்தவாறு அமர்ந்திருந்தவனுக்கு, அவனது முதலிரவு அன்று நடந்த சம்பவம் நினைவுக்கு வர, என்ன நினைத்தானோ..? அடுத்த நொடி மனைவியின் அறை முன் வந்து நின்ற ரிஷிவர்மன் கதவைத் தட்டி, "ஏய்!" என்று குரல் கொடுத்தான். 


ஆனால் உள்ளிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. அதில் அவனுள் முதன் முதலாக சிறு பதட்டம் வந்தது. அது ஏன் என்று ஆராயும் மன நிலையில் அவன் இல்லையே..? 


இரண்டு மூன்று முறை வேகமாகத் தட்டிய ரிஷிவர்மன், "ஏய் ஸ்னேகா! கதவைத் திறடி!" என்று மீண்டும் அழைத்தான். ஆனால் கதவு திறக்கும் வழியைக் காணோம் என்றதும், கதவின் கைப்பிடியைத் திருக்கிப் பார்க்க, அது ஆட்டோமேட்டிக் லாக் ஆகி இருப்பதைக் கண்டவன்..


உடனே தனது அறைக்குச் சென்று ஒரு சாவியுடன் வெளியே வந்தவன், அதன் உதவியால் அவளது அறைகதவைத் திறக்கவும் ஸ்னேகா எழுந்து வரவும் சரியாக இருந்தது.


அறை வாசலில் நின்றிருந்த மனைவியைப் பார்த்த ரிஷியின் கோபம் ஏகத்துக்கும எகிறியது. அவள் நின்ற நிலையைக் கருத்தில் கொள்ளாமல் அவளைத் திட்ட வாய் திறக்கவும்..


இவ்வளவு நேரம் நின்றதே பெரிய விஷயம் என்பது போல், கண்கள் சொருக, கால்கள் நடுங்க, நிற்க முடியாமல் தொய்ந்து அவன் மீது சரிந்தாள் ஸ்னேகா. அதை உணர்ந்து, "ஏய்!!" என்றபடி அவன் பின்னால் நகர முற்படும் முன், அவன் மீது முழுவதுமாக விழுந்து விட, தன்னிச்சை செயலாக அவனது வலிய கரங்கள் மனைவியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டது.


இடது கையால் அவளை வளைத்துப் பிடித்தவன் வலது கையில் மனைவியின் கன்னத்தில் தட்டி, "ஸ்னேகா..!!" என்றான் அதட்டலுடன்.. ஆனால் அவள் தான் எப்பொழுதோ மயக்கத்துக்குச் சென்றிருந்தாளே..?? 


அதை உணர்ந்தவனோ, "ம்ப்ச்… சரியான இம்சை!" என்றபடி மனைவியைக் கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலில் படுக்க வைத்தவன், அவளை ஆழ்ந்து பார்த்தான். 


விழி மூடி படுத்திருந்த பெண்ணவளின் மாசு மருவில்லா அழகு முகம் அவனைக் கவரவில்லை. மாறாக எரிச்சலுடன் தன் நெற்றியை நீவிய ரிஷிவர்மன், அங்கு ஜக்கில் இருந்த நீரை எடுத்து ஸ்னேகாவின் முகத்தில் தெளிக்க, அவளோ அப்பொழுதும் விழி திறக்கவில்லை என்றதும், அங்கிருந்து வெளியேறி தனது மொபைலை எடுத்துச் சில எண்களை அழுத்திக் காதில் வைத்தான். அந்தப் பக்கம் எடுத்ததும், 


"ஆனந்த்! எங்கடா இருக்கே..?" என்று கேட்டான்.


"வீட்டுக்குப் போய்ட்டு இருக்கேன் ரிஷி. என்ன இந்த நேரத்தில கால் பண்ணி இருக்கே? என்னடா விஷயம்?" என்றான் ரிஷியின் ஹாஸ்ட்டல் தோழன் ஆனந்த்.


அவன் கேட்டதுக்குப் பதில் அளிக்காமல், "சரி, அப்படியே இங்க கொஞ்சம் வீடு வரைக்கும் வந்துட்டுப் போ!" என்றான் ரிஷிவர்மன். 


"இப்பவா? அதுவும் உன் வீட்டுக்கா? எதுக்குடா?" என்று அவன் புரியாமல் கேட்க,


"டேய்! வான்னு சொன்னா வரணும். தட்ஸ் இட்!" என்ற ரிஷியின் குரலில் கோபத்தை உணர்ந்த ஆனந்தோ, "சரிடா வரேன், பத்து நிமிஷம் டைம் கொடு! ரேஷ்மியை வீட்ல ட்ராப் பண்ணிட்டு வரேன்" என்று கூறவும்,


"டேய்! முக்கியமா அவ தான்டா வரணும். வளவளனு பேசாம  ரெண்டு பேரும் உடனே வந்து சேருங்க" என்றுவிட்டு வைத்தான் ரிஷிவர்மன். 


சரியாகப் பத்து நிமிடத்தில் அவனது வீட்டின் காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்த ரிஷிவர்மன், வாசலில் ஜோடியாக நின்றிருந்த இருவரையும் உள்ளே அழைத்தவன், ஸ்னேகாவின் அறையை நோக்கி நடந்தான்.


"ரிஷி! என்னடா திடீர்னு வரச் சொன்னே? வந்தா விஷயம் என்னனு ஒன்னும் சொல்லாம நீ பாட்டுக்குப் போறே" என்று கேட்டான் ஆனந்த்.


அவனோ அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் ஸ்னேகாவின் அறைக்குள் செல்லவும்.. 


கணவன் - மனைவி இருவரும் தங்களுக்குள் ஒருமுறை பார்த்து விட்டு அவனைத் தொடர்ந்து சென்றவர்கள், அங்கு அறையில் கட்டிலில் படுத்து இருந்த பெண்ணைப் பார்த்து அதிர்ந்து தான் போனார்கள்.


"டேய்! யார்ரா இது?" என்று ஆனந்த் திகைப்புடன் கேட்க,


"அது எதுக்கு உனக்கு..?" என்ற ரிஷிவர்மன் நண்பனின் மனைவியிடம், "என்னனு தெரியல.. திடீரென மயங்கி விழுந்துட்டா. நீ டாக்டர் தானே? அவளுக்கு என்னாச்சுனு போய் பாரு.." என்று கூறவும்..


ரேஷ்மியோ கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு ஸ்னேகாவின் அருகே சென்றவள், அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். பின்பு தன் கணவனிடம், "என்னங்க.. கார்ல என்னோட மெடிக்கல் கிட் இருக்குல, அது எடுத்துட்டு வாங்க.." என்று கூற,


மனைவி சொன்னதைச் செய்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்த ஆனந்த், "ரிஷி! அந்தப் பொண்ணு யாருடா? கழுத்துல தாலி வேற இருக்கு" என்று புரியாமல் நண்பனிடம் கேட்டான்.


ரிஷியோ, "அது நான் கட்டின தாலி தான்.." என்றான் இறுகிய குரலில்.


அதைக் கேட்டு, "மாப்ள…!! உனக்குக் கல்யாணம் ஆகிருச்சாடா..? அப்ப அந்தப் பொண்ணு உன்னோட  மனைவியா? நான் உன் பிரென்ட் தானேடா? என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியாடா நீ?" என்ற கேட்டு நண்பனை முறைக்க,


அவனோ, "தாலி நான் தான் கட்டினேன், ஆனா அவ என் பொண்டாட்டி இல்ல!!" எனப் பல்லைக் கடித்தபடி சொன்னான் ரிஷிவர்மன்.


நண்பன் கூறிய பதிலில் ஜெர்க் ஆன ஆனந்த், "அடேய்! நீ தாலி கட்டினா அப்ப அந்தப் பொண்ணுக்கு நீ புருஷன் தானேடா??" 


"அப்படியும் வச்சிக்கலாம்.. ஆனா அவ என் பொண்டாட்டி இல்ல, அவ்ளோ தான்!!" என எங்கோ பார்த்தபடி ரிஷிவர்மன் அழுத்திக் கூறவும்..


நண்பனை ஒரு மார்க்கமாகப் பார்த்த  ஆனந்த், "உனக்கு என்னாச்சு ரிஷி? நல்லா தானே இருக்கே… நீ ஒன்னு பண்ணு! நாளைக்கு என்னோட க்ளினிக்கு வா, ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்ட் இன்ட்ரோ பண்றேன். அவர்கிட்ட ஒரு செக்கப் பண்ணிக்கலாம்" என்று அவன் கூறி முடிக்கவில்லை..


"அப்போ என்னை பைத்தியம்னு சொல்றியா? உன்னை.." என்று நண்பனை நோக்கிக் கோபமாக ரிஷிவர்மன் அடிக்க வரவும், கணவனைக் காக்க ஸ்னேகாவின் அறையில் இருந்து வெளியே வந்தாள் ரேஷ்மி.


அவளைப் பார்த்ததும் ரிஷியின் கவனம் அவளிடம் செல்ல, அவர்கள் அருகில் வந்த ரேஷ்மி, "ரிஷி! அந்தப் பொண்ணு யாரு? உங்க மனைவியா?" என்று கேட்டாள்.


அதற்கு அவன் பதில் அளிக்கும் முன், "ரேஷ்! அதை மட்டும் அவன் கிட்ட கேட்காதடி. படையப்பா ஸ்டைல்ல டைலாக் சொல்லுவான். நமக்கு வேற புரியாது. சோ அந்தப் பொண்ணுக்கு என்னாச்சின்னு மட்டும் சொல்லு" என்று நண்பனைப் பார்த்தவாறு கூறினான் ஆனந்த்.


ரிஷியோ நண்பனை முறைக்க, ரேஷ்மியோ, "ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல.. மாசா மாசம் எல்லா பொண்ணுங்களும் பேஸ் பண்ற விஷயம் தான். என்ன இந்தப் பொண்ணுக்கு மாதாந்திர வலி கொஞ்சம் ஹெவியா இருக்கும் போல இருக்கு. தென் அவங்க ரெண்டு நாளா சாப்பிடவே இல்லன்னு நினைக்கிறேன். அது அவங்களை ரொம்பவே வீக்கா ஆக்கிருக்கு. அதனால வந்த மயக்கம் தான்..


வலி குறைய இன்ஜெக்சன் போட்டுருக்கேன். இந்த மாதிரி நேரத்தில் அவங்களுக்குத் துணையா யாரும் இருந்தா பெட்டரா இருக்கும். அவங்க எழுந்ததும் மொதல்ல அவங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்க.." என்று மருத்துவராய் கூறியவள்,


"ஆனந்த்! கிளம்பலாமா? லேட் நைட் ஆகிருச்சி, பப்பு தேடுவான்" என்று கணவனிடம் கூற, அவனும் தன் நண்பனிடம் பிறகு பேசிக் கொள்ளலாம் என எண்ணி ரிஷிவர்மனிடம் கூறி விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் ஆனந்த். 


ரிஷிவர்மனோ தந்தைக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு, இறுகிய முகத்துடன் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான்..


ஆம்! ஸ்னேகாவுக்கு இந்த மாதாந்திர வலி சற்று அதிகமாகவே இருக்கும். எப்படியும் மூன்று நாட்கள் அவளால் எழுந்து கொள்ளவே முடியாது. ராதா அல்லது மோகனா இருவரில் ஒருவர் அவள் அருகில் இருந்து பார்த்துக் கொள்வார்கள். இங்கோ அவளைக் கவனிக்க ஆள் இல்லை. ஆதரவாக இருக்க வேண்டியவனோ, அவளை வெறுப்புடன் பார்க்கிறான். அவளும் என்ன தான் செய்வாள்? அதனால் தான் அன்று எழ முடியாமல அப்படியே படுத்திருந்தாள்.


அப்படிப் படுத்திருந்தவளின் செவியில் அவளவனின் குரல் தேனாய் விழ, சோர்வுற்ற நிலையையும் மீறி மெதுவாக எழுந்து வந்து கதவைத் திறக்க முயன்றாள் ஸ்னேகா. அதற்குள் அவள் கணவனே திறந்திருக்க, அவன் மீதே மயங்கியும் விழுந்து விட்டாள். அது மட்டும் தான் அவள் நினைவில் இருக்கிறது. 


அதன்பிறகு தன் கணவன் மருத்துவரை அழைத்துத் தனக்கு வைத்தியம் பார்த்தது என நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாமல், மருந்தின் வீரியத்தில் சற்று வலி குறையவும் அமைதியான தூக்கத்தைத் தழுவி இருந்தாள் ஸ்னேகா.


காலையில் கண் விழித்த ஸ்னேகா மணியைப் பார்க்க, அது ஏழு என்று காட்டவும், மெதுவாக எழுந்து முதல் வேலையாக குளிக்கச் சென்றவள், குளித்து முடித்ததும் தன் போனை எடுத்துப் பார்த்தாள். பிறந்த வீட்டில் இருந்தும், புகுந்த வீட்டில் இருந்தும் மாறி மாறி ஏகப்பட்ட  அழைப்புகள் வந்திருப்பதைக் கண்டவள், உடனே அவர்களுக்கு அழைத்துப் பேசினாள். 


பின்பு தன் உடல் சோர்வைப் போக்குவதற்காக தேநீர் அருந்தலாம் என நினைத்து தன் அறையில் இருந்து வெளியே வந்தவள், அங்கே சோபாவில் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த கணவனைக் கண்டு தயக்கத்துடன் அப்படியே நின்று விட்டாள். 


இரவு முழுவதும் உறங்காமல் இருந்த ரிஷியோ, மனைவியை ஒரு உக்கிர  பார்வை பார்த்து விட்டு எழுந்து தனது அறைக்குச் சென்றவன், அடுத்த அரைமணி நேரத்தில் அலுவலகத்திற்கும் கிளம்பிச் சென்றிருந்தான்.


ஸ்னேகாவும் பெருமூச்சுடன் தனக்கான உணவைத் தயாரித்து சாப்பிட்டு முடித்தவள், நேற்று விடுமுறை எடுத்து விட்டதால் இன்று கல்லூரிக்குச் செல்ல நினைத்துத் தானும் கிளம்பினாள். 


மாலை கல்லூரி விட்டு வெளியே வந்த ஸ்னேகா பேரூந்துக்காக காத்திருக்க, அதுவோ ஏகப்பட்ட ஆட்களை நிரப்பிக் கொண்டு வந்து நின்றது. அதைப் பார்த்து மலைத்தவள், அதில் ஏறாமல் தவிர்த்து விட்டாள். 


அடுத்து வந்த இரண்டு பேருந்துகளும் அதே போல் கூட்டமாகவே வர, இன்று ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் சொல்லாம் என்று எண்ணி எதிர் பக்கம் சற்றுத் தள்ளி இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குச் செல்ல இரண்டு எட்டு தான் எடுத்து வைத்திருப்பாள். அதற்குள் எதிர்திசையில் இருந்து பேருந்தைப் பிடிக்க வேகமாக ஓடி வந்த ஒருவன் ஸ்னேகாவின் மேல் மோதி விட, அவன் மோதிய வேகத்தில் நிலைதடுமாறி நின்றவளின் காதில் இருந்த ஹியரிங் எயிட் கழண்டு தெறித்து விழுந்தது. 


அதை உணர்ந்த ஸ்னேகா, "ம்ப்ச்.." என்று அதை எடுக்கக் குனியவும், அவளைக் கிட்டதட்ட இடிப்பது போல் பின்னால் வந்து கெண்டிருந்தது ஒரு கார். ஸ்னேகாவோ காது கேட்கும் கருவியை எடுக்க முற்பட்டதால் காரின் ஹாரன் சத்தம் அவளுக்குக் கேட்கவே இல்லை. 


அந்த கார்க்காரனோ அவள் நகர்ந்து விடுவாள் என்று எண்ணி இருந்ததால் வேகத்தை குறைக்கவில்லை. ஆனால் அவளோ நகராமல் குனிந்து எதையோ தேடி எடுப்பதைக் கண்டு, கடைசி வினாடியில் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தி விட்டுக் கோபமாக காரில் இருந்து இறங்கியவன்,


"ஏன்மா.. அறிவில்ல? இப்படி கார் வர்றது கூடத் தெரியாம நடுரோட்ல வந்து நிக்கிற. நீ சாகுறதுக்கு என் கார்தான் கிடைச்சுதா..? அப்ப இருந்து ஹாரன் அடிச்சிகிட்டே இருக்கேனே, உனக்குக் கேக்கலயா? உன் காது என்ன செவிடா?" என்று அவன் திட்டிக் கொண்டே இருக்க.. 


தன்னை ஒருவன் திட்டுகிறான் என அறியாமல், தன் கையில் இருந்த கருவியை "உஃப்" என்று ஊதி அதில் இருந்த தூசியை துடைத்த ஸ்னேகா, அதைக் காதில் மாட்டவும், "அம்மா.." என்ற அலறல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. அந்த அலறல் சத்தத்தில் பதறி திரும்பிப் பார்த்தாள் ஸ்னேகா. 


அங்கே அவள் பின்னே யாரோ ஒருவன் அவனது கன்னத்தைப் பிடித்தபடி நின்றிருக்க, அவன் அருகே ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தான், அவள் கணவன் ரிஷிவர்மன்.


என்ன நடந்தது என்று புரியாமல் ஸ்னேகா இருவரையும் மாறி மாறி பார்க்க, ரிஷிவர்மன் கொடுத்த அறையில் 'ஊய்ய்ய்' என்ற சத்தத்துடன் காது ஜவ்வு கிழிய, ஏன் அடித்தான் என்று தெரியாமல் மலங்க மலங்க முழித்தபடி நின்றிருந்தான், சற்று முன் ஸ்னேகாவைத் திட்டிய அந்த கார்க்காரன். 


ரிஷியோ கர்ஜனை குரலில், "உன் கண்ணு என்ன குருடா? ஆள் நிக்கிறது கூடத் தெரியாம காரை அவ்ளோ வேகமா ஓட்டிட்டு வர்ற? நீ பண்ண தப்புக்கு அவளைத் திட்டுவியா நீ?" என்று கேட்டு மீண்டும் அவனை அடிக்கக் கையை ஓங்கினான்.


ஓங்கிய அவனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அந்த கார்க்காரனோ, "சார் சார்.. என்னை மன்னிச்சிடுங்க சார்! மறுபடியும் அடிச்சிடாதீங்க.. ஏற்கனவே நீங்க அடிச்சதுல, ஒரு காது ஊய்ய்ன்னு ஊளையிட ஆரம்பிச்சிடுச்சு. இதுல இன்னொரு அடிக்கு என் காது தாங்காது சார்" என்று அவன் கெஞ்சவும், 


சற்றும் குறையாத கோபத்துடன் தன் கையை அவனிடமிருந்து உதறியவன், ஸ்னேகாவை முறைத்துக் கொண்டே அங்கே வந்த ஆட்டோவை நிறுத்தி, "ம்ம்.. போ.." என்று சற்று அதட்டலுடன் கூறவும், அவனிடம் என்ன ஏது என்று கேட்காமல் ஆட்டோவில் ஏறி கொண்டாள் ஸ்னேகா.


அவள் மனமோ, "என்ன நடந்தது? அத்து எப்படி இங்க வந்தாங்க? எதுக்காக அந்த ஆளை அடிச்சாங்க?" என்று ஒன்றும் புரியாமல் வீடு வந்து சேர்ந்த ஸ்னேகா, தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறக்க முயற்சிக்க, அதுவோ ஏற்கனவே திறந்திருப்பதைக் கண்டு யோசனையுடன் உள்ளே நுழைந்தவள், அங்கே தனக்கு முன்னே வந்து ஹாலில் அமர்ந்த கணவனைக் கண்டு அமைதியாகத் தனது அறைக்குச் சென்றாள்.


சிறிது நேரத்தில் வெளியே வந்தவள், கணவனைப் பாராமல் சமையல் அறைக்குச் சென்று கணவனுக்கும் தனக்கும் தேநீரை தயாரித்த ஸ்னேகா, அதை இரண்டு கப்பில் ஊற்றிக் கொண்டு திரும்பியவள், அப்படியே அசைவற்று நின்று விட்டாள்.


ஆம்! அங்கே சமையல் அறை வாசல் கதவில் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவளையே ஆழ்ந்து பார்த்தவாறு நின்றிருந்தான் அவள் கணவன்.


அவனைப் பார்த்ததும் அவளது தலை தானாகக் குனிந்து கொள்ள, அவனோ சொடக்கிட்டு அவளை அழைத்தான்.


கணவனின் அழைப்பில் அவள் மெதுவாக நிமிர்ந்து பார்க்க, அவனோ சுவிங்கத்தை மென்றவாறு அவளை நெருங்கி வந்தவன், "சென்னைக்குப் போறதுக்கு உனக்கு டிக்கெட் போட்டு இருக்கேன். நாளைக்கு காலையில் பிளைட். நான் ஆபிஸ்ல இருந்து வரும் போது நீ இங்க இருக்க கூடாது, புரியுதா?" என்று கூறிய ரிஷிவர்மன்,


"இங்க பார்.. நீ சாப்பிட்டியா சாப்பிடலயா.. உயிரோட இருக்கியா.. இல்லை உனக்கு என்னாகுமோன்னு உன் பின்னாடியே இருந்து காவல் காத்துட்டு என்னால இருக்க முடியாது. சாகுறதுன்னா உங்க வீட்ல போய் செத்துப் போ! இங்க இருந்து என் உயிரை எடுக்க நினைக்காதே!" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறி விட்டு, கையில் இருந்த  பிளைட் டிக்கெட்டை அவள் மேல் வீச, அதுவோ அவள் காலடியில் விழுந்தது.


கணவனின் பேச்சில் ஸ்னேகா அதிர்ந்தாலும், அந்தப் பேச்சின் ஊடே கசிந்து வந்த கரிசனையை உணர்ந்து கொண்டவளோ, மனம் நெகிழ்ந்து போனாள். அவன் கோபமாக இருந்த போதே அவனை விட்டுச் செல்லவில்லை அவள். அப்படியிருக்க, தன் மீது கணவன் காட்டும் மறைமுக அக்கறையைக் கண்டுகொண்ட பிறகு, அவள் சென்னை சென்று விடுவாளா என்ன? அதனால் கீழே கிடந்த டிக்கெட்டை குனிந்து எடுத்தவள், அவன் கண் முன்னாலேயே அதைக் கிழித்துக் குப்பை கூடையில் போட்டு விட்டாள்.


அவளது செயலில் பல்லைக் கடித்த ரிஷி கோபத்துடன் அவளின் தலைமுடியை பிடித்து இறுக்கியவன், "அவ்ளோ திமிராடி உனக்கு!! என்ன என் மேல உள்ள பயம் விட்டுப் போச்சா? நான் இன்னும் அதே ரிஷிவர்மன்தான்டி! ஒழுங்கு மரியாதையா இடத்தைக் காலி பண்ணு! இல்ல நடக்கிறதே வேற.." என்று எச்சரிக்கை செய்தான்.


அவளோ நிதானமாகக் கணவனை நிமிர்ந்து பார்த்தவள், "என்ன நடக்கும் அத்து? கோபத்துல இருபத்து ரெண்டாவது மாடியில இருந்து என்னைத் தள்ளி விட்டுடுவீங்களா?" என்று கேட்க, 


 "ஏன் தள்ளி விட மாட்டேன்னு நினைப்பா?" என்று அழுத்தத்துடன் தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான் ரிஷிவர்மன்.


அவளோ, "உங்க பூச்சாண்டிக்கு பயப்பட நான் இன்னும் அந்த பன்னிரெண்டு வயசு ஸ்னேகா இல்ல அத்து. அப்போ நீங்க என்னை பாழுங்கிணத்துல தள்ளி விடும் போது பயந்து தான் போனேன். ஆனா இப்ப என்னை இங்க இருந்து கீழே தள்ளி விட்டா, உங்க மனைவியா சந்தோஷமா விழுந்து செத்துப் போவேன்..!!" என்று காதலுடன் அவள் கூறவும், இப்பொழுது அதிர்வது அவனது முறையானது..!!


***



1 comment:

  1. Adi sandali Ivan ah solli kutram illa inda loose dan sollanum Avan thittitu irukan iva ennada na karisanai nu ninaichitu iruka Rishi ivala Maadi la irunthu thalli vidu da thollai vittuthu

    ReplyDelete