ஸ்வரம் 21

 



ஸ்வரம் 21..


மாடிப்படியில் இருந்து வேகமாக இறங்கிய விக்ராந்த் வெளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருக்க, மகன் இந்நேரத்தில் வெளியே செல்வதைப் பார்த்த மோகனா, "விக்கி.." என்று அவனை அழைத்தாள்.


அவனோ அன்னையின் அழைப்பில் அப்படியே நின்றானே தவிர, அவரைத் திரும்பியும் பார்க்கவில்லை.. என்னவென்றும் கேட்கவில்லை.. 


"மணி என்னாகுது? இப்ப இந்த நேரத்தில எங்க கிளம்பிட்டே விக்கி?" என்று கேட்டாள் மோகனா.


"நான் பெங்களூர் போறேன் மோஹிமா" என்றான் இறுகிய குரலில்.


"பெங்களூருக்கா? இப்ப எதுக்கு அங்கே போறே? ஏதாவது முக்கியமான வேலையா?" என்று அவள் புரியாமல் கேட்க,


"ஆமா மோஹிமா, ரொம்ப ரொம்ப முக்கியமான வேலை தான்.." என்றான் பல்லைக் கடித்தபடி.


"அதெல்லாம் ரெண்டு நாளைக்குத் தள்ளி வை விக்கி. நாளைக்கு நேகாக்கு ரிசப்ஷன் இருக்குல, ஒரு அண்ணனா அவளுக்குச் சீர் செய்ய நீ இருக்கணும்" என்று கூறவும்,


"ஏன் மோஹிமா.. உங்களுக்கு நேகா மட்டும் தான் பொண்ணா? அப்போ ஸ்னேகா யாரு?" என்று அவன் அடக்கப்பட்ட கோபத்துடன் தாயிடம் கேட்டான்.


"ஏன்டா இப்படிச் சொல்றே? எனக்கு நீங்க நாலு பேரும் ஒன்னுதான்டா! ஸ்னேகா ரிசப்ஷனுக்கு வரலனு சொல்லிட்டால்ல.. அதான் ரெண்டு நாள் கழிச்சு பெங்களூர் போனா, அப்படியே நம்ம ஸ்னேகாவையும் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாமேன்னு தான் அப்படிச் சொன்னேன்" என்றாள் மோகனா.


தாயை முறைத்துப் பார்த்த விக்ராந்த், "அதுவரைக்கும் என் தங்கச்சி உயிரோட இருப்பானு நினைக்கிறீங்களா மோஹிமா?" என்று அவன் கோபம் குறையாமல் கேட்டான்.


மகன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த மோகனா, "விக்கி! என்ன பேச்சு பேசுற?" என்று அதட்டினாள்.


"பின்ன.. எப்படிப் பேச சொல்றிங்க மோஹிமா? நேத்து ஸ்னேகாக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு எல்லோரும் எப்படித் துடிச்சு போய்ட்டோம்? அவனுக்குப் போன் பண்ணா பெரிய இவன் மாதிரி போனே எடுக்கல. அதான் என் தங்கச்சி எப்படி இருக்கானு பார்க்கப் போறேன்" என்று அவன் கூறி முடிக்கவில்லை..


"விக்கி! என்னதான் இருந்தாலும் ரிஷி உன் தங்கச்சி புருஷன். இப்படி அவன் இவன்னு பேசக் கூடாது!" என்று மகனை அதட்ட,


"இப்ப கூட உங்களுக்கு உங்க பொண்ணு பத்தி கவலை இல்ல. உங்க மருமகனை மரியாதை இல்லாம பேசினது தான் குத்தம், அப்படித்தானே?" என்று கடுப்புடன் கேட்க,


"இன்னைக்கு உனக்கு என்னதான்டா ஆச்சு? அதான் நேத்து நைட் ரவி போன் பண்ணி, ஸ்னேகாக்கு ஒன்னும் இல்ல நல்லா இருக்கானு சொன்னார் தானே? இதோ, காலையிலேயே ஸ்னேகாவும் நம்மகிட்ட பேசிட்டா. அப்புறம் எதுக்கு நீ இப்படி டென்ஷன் ஆகுறே?" என்று புரியாமல் கேட்டாள் மோகனா.


"டென்ஷன் ஆகாம என்ன பண்ணச் சொல்றிங்க? இங்க நேகாக்கும், மேகாக்கும் அரணா சுத்தி நாம எல்லோரும் இருக்கோம். அங்கே ஸ்னேகாவுக்கு யார் இருக்கா? அவ குழந்தை மோஹிமா! ரொம்பப் பாவம்! அவளை அவன் என்ன பாடு படுத்துறானோ?" என்று தங்கையை நினைத்துத் தவிப்புடன் கூறிய விக்ராந்த், 


"போதும் மோஹிமா! நீங்க அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சதும் போதும், அவ அவன் கூட வாழ்ந்ததும் போதும்! நான் பெங்களூர் போகத்தான் போறேன்! ஸ்னேகாவை இங்க கூட்டிட்டு வரத்தான் போறேன்!" என்று சத்தமாக அவன் கூறிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்தான் கார்த்திக்.


"என்ன விக்ரம்? உன் சத்தம் ரோடு வரைக்கும் கேட்குது. என்னாச்சு? எதுக்கு இப்ப உங்க அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு இருக்கே?" என்று மகனிடம் கேட்டான்.


விக்ராந்த்தோ தந்தைக்குப் பதில் அளிக்காமல் விறைப்புடன் நின்றான்.


மோகனாவோ, மகன் தன்னிடம் பேசியதைக் கணவனிடம் கூறி விட்டு, "எதுக்கு இப்படிப் பேசுறானு நீங்களே கேளுங்க.. இன்னைக்கு இவனுக்கு என்னமோ ஆகி போச்சுங்க" என்று கூறவும்,


"எனக்கு ஒன்னும் ஆகல மோஹிமா.. உங்களுக்குத்தான் அன்னைக்கு ஏதோ ஆகி போச்சு. இல்லனா அவனுக்குப் போய் ஸ்னேகாவைக் கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?" என அன்றைய தினத்தை நினைத்து இன்னமும் கோபம் குறையாமல் அன்னையைச் சாடினான் விக்ராந்த்.


கார்த்திக்கோ, "விக்ரம் போதும்! நீ உன்னோட ரூம்க்கு போ, எதுனாலும் காலையில் பேசிக்கலாம்" என மகனை அனுப்ப முயன்றான்.


"முடியாதுப்பா, என் தங்கச்சி அவன்கிட்ட இருந்து கஷ்டப்படுறதைச் சும்மா கைக் கட்டி வேடிக்கை பார்க்கிறதுக்கா, அவளுக்கு அண்ணனா நான் இருக்கேன்?" ஏனோ அவனது கோபம் அடங்க மறுத்தது.


"ஸ்னேகா கஷ்டப்படுறான்னு உன்கிட்ட சொன்னாளா விக்ரம்?" என்று அமைதியாகக் கேட்டான் கார்த்திக்.


"அவ சொன்னா தான் எனக்குத் தெரியணுமாப்பா? அதான் நேத்தே பார்த்தோமே.. கொஞ்சமும் இரக்கம் இல்லாதவன்ப்பா அவன். அவன் கூட வாழணும்னு ஒன்னும் என் தங்கச்சிக்கு அவசியம் இல்ல" என்று அவன் அவன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனான்.


"எப்படிப் பேசுறான்னு பாருங்க! அப்போ இருந்து இப்படித்தான் சொல்லிட்டு இருக்கான்" என்று கோபத்துடன் மோகனா கணவனிடம் கூறினாள்.


கார்த்திக்கோ, "மோகனா! எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணி வேணும், கொண்டு வா போ!" என்று மனைவியை அங்கிருந்து அனுப்ப முயன்றான். 


அவளும் மகனை முறைத்துக் கொண்டே கணவனுக்குத் தண்ணீர் எடுத்து வரச் செல்ல, மகனிடம் திரும்பிய கார்த்திக், அவன் தோளில் சற்று அழுத்தி, "விக்ரம்! நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. எனக்கு ரிஷி மேல நம்பிக்கை இருக்கு. அதனால அவசரப்படாம பொறுமையா இரு!" என்று மகனுக்கு எடுத்துக் கூறினான்.


அவனோ இப்பொழுது தந்தையை முறைத்தவன், "ரிஷியை இன்னும் நம்புறீங்க பார்த்தீங்களா? நிஜமா வருத்தமா இருக்குப்பா. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். அவனால ஸ்னேகாக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்..!!" என்று கோபம் குறையா குரலில் கூறி விட்டுத் தனது அறைக்குச் சென்று விட்டான்.


மகன் சென்றதும் ஒரு பெருமூச்சை வெளியேற்றிய கார்த்திக் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். 


அதற்குள் தண்ணீர் எடுத்து வந்த மோகனா, மகன் அங்கு இல்லாதிருப்பது கண்டு பதற்றத்துடன், "அவன் எங்கேங்க..?" என்று கேட்டபடி கணவனிடம் தண்ணீரைக் கொடுத்தாள்.


அதை வாங்கி டீபாயின் மீது வைத்த கார்த்திக், "அவன் ரூமுக்குப் போயிட்டான்" என்றவன்,


"அம்மா போன் பண்ணாங்களா மோகனா?" என்று அன்னையைக் கேட்டான்.


"ம்ம்ம்.. ஓவி கூட நாளைக்கு அப்படியே ரிசப்ஷனுக்கு வந்துறேன்னு சொன்னாங்க" என்றவள், கணவனைத் தயக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்.


மனைவியின் பார்வையையும், அவள் முகத்தில் தெரிந்த தயக்கத்தையும் உணர்ந்து அவளது கையை ஆதரவாகப் பிடித்த கார்த்திக், "என்ன மோகனா..?" என்று கனிவுடன் கேட்க,


அவளோ, "என்னங்க.. விக்கி சொன்ன மாதிரி நான் எடுத்த முடிவு தப்பாங்க?" என்று ஒருவித அலைப்புறுதலுடன் கேட்டாள் மோகனா.


மனைவியைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்த கார்த்திக், தனது மொபைலை எடுத்துச் சில எண்களை அழுத்தினான். 


"நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், நீங்க என்னன்னா யாருக்கோ போன் பண்ணிட்டு இருக்கீங்க?" என்று அவள் புரியாமல் கேட்க,


"ஒரு நிமிஷம் இரு மோகனா.." என்று கார்த்திக் கூறிக் கொண்டிருக்கும் போது அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றிருந்த ஸ்னேகாவின் குரல், "அப்பா..!!" என்று உற்சாகமாக ஒலித்தது.


"குட்டிமா! எப்படிடா இருக்கே..? இப்ப உனக்குப் பரவா இல்லையா? ரிஷி எங்கேடா?" என்று கார்த்திக் கேட்டான்.


"எனக்கு நைட்டே சரி ஆகிருச்சுப்பா. காலையில் போன் பண்ணேன் தானே? காலேஜுக்கும் போய்ட்டு வந்துட்டேன். அத்தான் ரூம்ல இருக்காங்க, நான் நைட்க்குச் சமைச்சுட்டு இருக்கேன்" என்ற மகளின் துள்ளலான குரலில் கார்த்திக்கிற்குப் புன்னகை அரும்பியது. 


"அடடே! என் குட்டிமா எவ்வளவு பொறுப்பா இருக்காங்க..!!" என்று சொல்லிச் சிரித்தவன், "உங்க அம்மா பேசணுமாம், இதோ கொடுக்குறேன்" என்று மனைவியிடம் மொபைலை கொடுக்க, மோகனாவும் சிறிது நேரம் மகளிடம் பேசி விட்டு வைத்தாள்.


கார்த்திக்கோ, "மோகனா! நம்ம ஸ்னேகா நம்ம வீட்ல இருந்தவரை ரொம்ப அமைதியா இருந்து தானே நாம பார்த்திருக்கோம்? ஆனா இப்ப அவ குரல்ல ஒருவித சந்தோஷம், துள்ளல் இருக்கிறதை நீ கவனிச்சியா?" என்று கேட்டான்.


அதற்கு "ம்ம்ம்.." என்று மட்டும் மோகனா பதில் கூற,


அவனோ, "மண்டபத்துல வச்சி ரிஷிக்கு நீ ஸ்னேகாவைப் பேசும் போது எனக்கும் அப்படியொரு கோபம் வந்தது தான். ஆனா அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஸ்னேகா சரின்னு சொல்லும் போது, அவ முகத்துல ஒருவித பிரகாசம் இருந்தது. சப்போஸ் வேணாம்ங்கிற மாதிரி என் பொண்ணு ஒரு பார்வை பார்த்து இருந்தா கூடப் போதும்! அந்தக் கல்யாணத்தை அப்பவே நிறுத்தி இருப்பேன்.


அவ சந்தோஷத்தைப் பார்த்து, ரிஷி மேல அவளுக்கு இருந்த பயத்தையும் மீறி அவ மனசுல அவன் மீதான காதலும் இருக்குன்னு புரிஞ்சிது. ஒருவேளை மேகா, நேகா மாதிரி துடுக்குத்தனமா இருந்திருந்தா, நிச்சயம் அவளே அவ மனசுல உள்ளதை நம்மகிட்ட சொல்லி இருப்பாளோ என்னவோ? அதை விட்டுட்டுக் கனடா போக நினைச்சிருக்க மாட்டா" என்று கூறவும்,


"என்னங்க சொல்றிங்க? நம்ம ஸ்னேகா கனடா போக நினைச்சு இருந்தாளா?" என்று மோகனா அதிர்ந்து கேட்டாள்.


"ஆமா, நேகா - ரிஷி கல்யாணம் முடிஞ்ச மறுநாளே கனடா கிளம்புற மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கா. ஆனா அவளே எதிர்பாராம ரிஷிக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்துருச்சு. இப்ப சொல்லு! உன்னோட முடிவு சரியா இல்லையா?" என்று கேட்க,


"புரியுதுங்க, அன்னைக்கு எனக்கு ஏதோ ஒரு வேகம்! என்னனு எனக்கே தெரியல. ஆனா இப்ப நடக்கிறது எல்லாம் பார்க்கும் போதும், விக்கி சொல்லும் போதும் ‘தப்பு பண்ணிட்டேனோ.. என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனோ’னு கஷ்டமா இருக்குங்க.." என்று தவிப்புடன் கூறிய மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டவன் 


"நீ உன் மனசை போட்டுக் குழப்பிக்காதே மோகனா. விக்ரம் அவன் தங்கச்சி மேல உள்ள பாசத்துல அப்படிப் பேசிட்டுப் போறான். ஆனா எனக்கு ரிஷி மேல நம்பிக்கை இருக்கு. ஸ்னேகா ரிஷி கூடச் சந்தோஷமா இருப்பா. ஸ்னேகா மட்டும் இல்ல, நம்ம புள்ளைங்க நாலு பேர் வாழ்க்கையும் சந்தோஷமா நிறைவா தான் அமையும்" என்று கூறி சமாதானம் செய்தான் கார்த்திக்.


ஆனால் அவன் அறியவில்லை..?? தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையை விதி வேறு மாதிரி எழுதி இருப்பதை..!! அதை அறிந்தால் கார்த்திக் இப்படிப் பேசி இருக்க மாட்டானோ? நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் விதி என்ற ஒன்று எதற்கு இருக்கிறது?


மறுநாள் ஆர்.ஆர் குரூப்ஸ் ஆப் கம்பெனி எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, தனது கேபினில் அமர்ந்து கணினியில் கண் பதித்திருந்த ரிஷிவர்மனின் கவனத்தைக் கலைப்பது போல் இன்டெர்காம் ஒலி எழுப்பியது. அதை ஆன் செய்து இவன், "எஸ்.." என்க,


"சார், உங்களைப் பார்க்க ஆனந்த் சார் வந்துருக்கார்" என்று கூறினாள் ரிசப்ஷனிஸ்ட்.


"உள்ள அனுப்பு.." என்றுவிட்டுக் கட் செய்யவும், ரிஷியின் கேபினைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஆனந்த்.


"ஹாய் ரிஷி! எப்படி இருக்கே?" என்று கேட்டபடி இருக்கையில் அவன் அமர,


"ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ பார்க்கும் போது எப்படி இருந்தேனோ, இன்னைக்கும் அப்படியே தான் இருக்கேன்" என்று நக்கலாகப் பதில் வந்தது ரிஷிவர்மனிடம் இருந்து..


"ஏன்டா, ஒரு கர்ட்டஸிக்கு நலம் விசாரிச்சா இப்படித்தான் பதில் சொல்லுவியா..?" என்று ஆனந்த் நண்பனை முறைக்க..


"ஹா ஹா.. சும்மாடா.. சொல்லு! என்ன திடீர்னு இந்தப் பக்கம் காத்து வீசுது, க்ளினிக்குப் போகலையா?" என்று ரிஷி கேட்கவும்,


"க்ளினிக்கைப் பார்த்துக்கதான் ரேஷ் இருக்காளே? நான் ஒரு முக்கியமான விஷயமா உன்னைப் பார்க்க வந்தேன்" என்று கூறவும்,


"என்னடா..?" என்று ரிஷி கேட்க,


"நான் ஹாஸ்பிட்டல் கட்டிட்டு இருக்கேன்ல, அது ஓரளவுக்கு முடியும் ஸ்டேஜ்ல இருக்கு. அதுக்குத்தான் உன்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்துருக்கேன்" என்று ஆனந்த் சொல்லவும்,


"பணம் ஏதும் தேவைப்படுதா? சொல்லுடா! எவ்வளவு வேணும்? நான் தரேன்" என்ற ரிஷியை நெகிழ்ந்து பார்த்த ஆனந்த்,


"நீ கேட்டதே போதும்டா! கடன் அன்பை முறிக்கும்னு கேள்விப்பட்டது இல்லையா நீ? அதான் நான் நம்ம பிரெண்ட்ஸ் யார்கிட்டயும் இதுவரை கடன்னு வாங்கினதே இல்ல. இப்ப உன்கிட்ட கேட்க வந்தது கூடப் பேங்க்ல லோன் போட்டு இருக்கேன். கொஞ்சம் பெரிய தொகை! அதுக்குச் சூரிட்டி கேட்கிறாங்க. எனக்கு உன் ஞாபகம் தான் வந்தது. அதான் ஓடி வந்தேன்" என்று ஆனந்த் கூறி முடிக்கவும்,


"நான் கடனா தரேன்னு சொல்லலையே? டொனேஷன் மாதிரி கொடுக்கலாம்ன்னு இருந்தேன்" என்றவன், "சரி, எந்தப் பேங்க்னு சொல்லு, நான் மேனேஜர்கிட்ட பேசுறேன்" என்ற ரிஷி போன் ரிசீவரை கையில் எடுத்தான்.


"நான் மேனேஜர்கிட்ட பேசி பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டுத்தான் உன்கிட்ட வந்தேன். நீ அங்கே வந்து ஒரு கையெழுத்து மட்டும் போட்டா போதும்!" என்று ஆனந்த் கூற,


"வா, போகலாம்.." என்றபடி எழுந்தான் ரிஷி. அவன் கூடவே எழுந்த ஆனந்த்,


"ரிஷி! உன்னை எல்லோரும் டெரர் ரேஞ்சுக்குப் பேசுறாங்கடா. ஆனா உன் இளகின மனசு யாருக்கும் வராது" என்று நண்பனை நினைத்து ஆனந்த் பெருமையுடன் கூறவும்,


"டேய்! அதான் கையெழுத்து போட கிளம்பியாச்சுல்ல, பின்ன எதுக்கு எனக்கு ஐஸ் வச்சிட்டு இருக்கே?" என்று கேட்ட ரிஷிவர்மன் லிப்ட்டில் இருந்து வெளிப்பட்டுத் தனது கார் நிற்கும் இடத்துக்குச் செல்ல,


"ம்ம்ம்.. கொஞ்சம் சென்டிமென்டா பேச விட மாட்டானே? உடனே அசிங்கப்படுத்திடுறான்" என்று நொந்து போன ஆனந்த்,


"சரி, சிஸ்டர் எப்படி இருக்காங்க..?" என்று ஸ்னேகாவைப் பற்றி விசாரித்தான்.


"சிஸ்டரா? உன் பொண்டாட்டியைப் பத்தி என்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்?" என்று கூறியவாறு ரிஷிவர்மன் வாகனத்தைக் கிளப்பவும்,


"நான் உன் பொண்டாட்டியைப் பத்திக் கேட்டேன்டா…" என்று ஆனந்த் நண்பனை முறைக்க, 


"அவ என் மனைவி இல்லன்னு அன்னைக்கே சொல்லிட்டேன்" என இறுகிய குரலில் கூறிய ரிஷிவர்மன், "அப்புறம் சொல்லு! உன் புது ஹாஸ்பிட்டல் திறப்பு விழா எப்போ வச்சிருக்கே? என்ன என்ன ஸ்பெஷல் இருக்கு உன் ஹாஸ்பிட்டல்ல? பாமர மக்களுக்கு ஏதும் சலுகை வச்சிருக்கியா..? அதுக்கு ஏதும் உதவி வேணுமா? தயங்காம கேளுடா..!!" என்று பேச்சை மாற்ற, அதைப் புரிந்து கொண்ட ஆனந்த், மேலும் அவனது மனைவியைப் பற்றிப் பேசாமல் தனது மருத்துவமனை பற்றிக் கூற ஆரம்பித்தான்.


சிறிது நேரத்தில் ஆனந்த் கூறிய பேங்க் முன் தன் வாகனத்தை நிறுத்திய ரிஷிவர்மன், நண்பன் கேட்டது போல் மேனேஜரைப் பார்த்துப் பேசி கையெழுத்தும் இட்டவன், "போதுமாடா..?" என்று புன்னகை முகமாகக் கேட்க,


அவனது கைகளைப் பற்றிக் கொண்டு, "ரொம்பத் தேங்க்ஸ்டா..!!" என்று நன்றி கூறியவன், "ரிஷி! ஈவினிங் ஆகிருச்சில்ல, ஒரு கப் காபி சாப்பிட்டுக் கிளம்பலாமா?" என்று கூற,


"சரி.." என்றுவிட்டுக் கையில் இருந்த குளிர் கண்ணாடியை அணிந்து கொண்டு காரின் அருகே செல்லவும், ரிஷியின் மொபைல் ஒலித்தது. அழைப்பது யார் என எடுத்துப் பார்த்தவன், புது எண்ணில் இருந்து போன் வரவும், யோசனையுடன் அழைப்பை ஏற்று, "ரிஷி ஸ்பீக்கிங்!" என்றான்.


"......"


"வாட்? எப்போ?" என்று கேட்டவனின் குரலில் அதிர்வு கலந்த எரிச்சல் அப்பட்டமாகத் தென்பட்டது.


"...." 


"சரி, வரேன்" என்றுவிட்டு மொபைலை அணைத்தவன், "வண்டியில ஏறுடா!" என்றுவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர, மறுபக்கம் வந்த ஆனந்த் காரில் ஏறி அமரவும், தனது வாகனத்தை அதிவேகமாகக் கிளப்பினான் ரிஷிவர்மன்.


"என்னாச்சு ரிஷி? போன்ல யாரு? இப்ப நாம எங்கே போய்ட்டு இருக்கோம்?" என்று புரியாமல் ஆனந்த் கேட்க,


"எங்க போறோம்னு இன்னும் பத்து நிமிஷத்துல தெரிஞ்சிரும்.." என்ற ரிஷிவர்மன் சொன்னது போல் பத்து நிமிடத்தில் வந்து நின்ற இடம், ஸ்னேகா படிக்கும் கல்லூரியின் வாயிலில் தான்..


வாகனத்தை அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டு இறங்கிய ரிஷிவர்மன் வேக எட்டுக்கள் வைத்து முன்னே நடக்க, தானும் நண்பனின் பின்னே நடந்தான் ஆனந்த்.


சற்றுத் தள்ளி உள்ளே செல்லவும், ஓர் இடத்தில் கூட்டமாக இருக்க, அங்குச் சென்றதும் கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தான் ரிஷிவர்மன். அங்கே ஒரு பெஞ்சில் படுக்க வைக்கப் பட்டிருந்தாள் ஸ்னேகா.


சற்று முன் ஐந்து மணியளவில் தனது வகுப்பில் இருந்து தன் புதுத் தோழி நிஷாவுடன் வெளியே வந்த ஸ்னேகா, கல்லூரி வளாகத்தில் இருந்த நூலகத்தை நோக்கிச் சென்றாள்.


"ஏய் ஸ்னேகா! எங்க போறே? எனக்குப் பசிக்கிது.. வா, கேன்டீன் போய் ஏதாவது சாப்பிடலாம்" என்று அழைத்தாள் நிஷா.


ஸ்னேகாவோ, "எனக்குக் கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும் நிஷா. நான் லைப்ரரி போறேன். நீ போய்ச் சாப்பிடு, நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்" என்று விட்டு அவள் முன்னே நடக்க,


"சரியான படிப்ஸ்டி நீ.. சரி, சீக்கிரம் வந்துரு!" என்று சிரித்து விட்டுக் கேன்டீனை நோக்கி நடந்தாள் நிஷா.


அந்த நூலகம் இரண்டடுக்குக் கொண்டு சற்றுப் பெரியதாக இருந்தது. தனது என்ட்ரி அட்டையைக் காட்டி உள்ளே சென்ற ஸ்னேகா, முதல் தளத்துக்கு வந்து தனக்குத் தேவையான புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொண்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்தவள், அடுத்த நிமிடம் தனது காதில் பொருத்தி இருந்த காது கேட்கும் கருவியைக் கழட்டி தன் அருகே வைத்தாள். 


ஸ்னேகா எப்பொழுதும் அப்படித்தான். படிக்க அமர்ந்தாள் என்றால் அவளுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவளுக்குப் பாடத்தில் கவனம் செல்லும். அதனாலேயே படிக்கும் நேரங்களில் ஹியரிங் எயிடை கழட்டி வைத்து விடுவாள். இப்பொழுதும் அவ்வாறே செய்து விட்டுப் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.


திடீரென எல்லா விளக்குகளும் அணையவும், சட்டென்று நிமிர்ந்து சுற்றி பார்த்த ஸ்னேகா, என்னானது என யோசிக்கும் முன், அந்த இடமெங்கும் இருட்டாக ஆரம்பித்து இருந்தது. அதில் பதறியவள் வேகமாக எழுந்து படியின் அருகே செல்வதற்குள் முற்றிலும் விளக்குகள் அணைந்து இருக்க, "யாராவது இருக்கீங்களா? நான் உள்ளே இருக்கேன்" என்று பதறியபடி குரல் கொடுத்தாள். ஆனால் அவள் சத்தத்தைக் கேட்க அங்கே யாரும் இல்லை.


கேன்டீன் சென்ற நிஷா அங்கிருந்த மற்ற தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட்டு முடியவும், கேன்டீன் மூடும் நேரம் ஆகவும் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர்.


நிஷாவோ, "இந்த ஸ்னேகா இன்னுமா லைப்ரரில இருந்து வரல? ம்ப்ச்.. இதுக்குத்தான் அங்க போகாதடினு சொன்னேன்" என்று தனக்குத்தானே கூறியவள், தோழியைத் தேடிச் சென்றாள்.


அப்பொழுது அவள் எதிரே வந்தார் நூலகத்தின் பொறுப்பாளர். அவரைப் பார்த்ததும், "சார், லைப்ரரி பூட்டிட்டீங்களா?" என்று கேட்க,


"ஆமா, எதுக்குக் கேக்குற? புக்ஸ் ஏதும் வேணுமா? நாளைக்கு வந்து எடுத்துக்கோ.." என்று அவர் கூறி விட்டு நடக்கவும், 


"சார், எனக்குப் புக்ஸ் வேண்டாம். என் பிரென்ட் ஸ்னேகா லைப்ரரி போறேன்னு வந்தா, அதான் அவளைத் தேடி வந்தேன்" என்று அவள் சொல்லவும்,


"இல்லம்மா, லைப்ரரில யாரும் இல்ல" என்று அவர் கூற,


"இல்ல சார், கண்டிப்பா அவ உள்ளதான் இருக்கணும்" என்று நிஷா கூறினாள். 


"ம்ஹூம்.. உள்ள யாரும் இல்லமா.. யாராவது இருக்கீங்களானு ரெண்டு மூணு தடவை குரல் கொடுத்ததுக்கு அப்புறம் தான் லைப்ரரியைப் பூட்டினேன்" என்று அவர் கூறவும்,


"என்னது உள்ள இல்லையா? அப்போ எங்க போயிருப்பா?" என்று அவள் யோசிக்க,


"அந்தப் பொண்ணு அப்பவே வீட்டுக்குக் கிளம்பி இருக்கும்மா. நீயும் கிளம்பு! மணி ஆறு ஆச்சு பாரு" என்று அவர் அவளிடம் சொல்ல,


அவளோ, "இல்ல சார், அவ வீட்டுக்குப் போயிருக்க வாய்ப்பு இல்ல. ஏன்னா அவ பேக் என்கிட்ட இருக்கு" என்று தன் கையில் இருந்த ஸ்னேகாவின் பேக்கை அவரிடம் காட்டியவள்,


"ப்ளீஸ் சார்! ஒரு தடவை அவ இருக்காளான்னு செக் பண்ணிடலாம்" என்றாள்.


அவரோ, "அந்தப் பொண்ணு உள்ள இருந்தா நான் சத்தம் கொடுத்ததுக்குப் பதில் சொல்லி இருக்கும்தானே மா?" என்று சிறு எரிச்சலுடன் கூறவும்,


"சார், ஒருவேளை நீங்க கூப்பிட்டது அவளுக்குக் கேட்டு இருக்காது. ஏன்னா அவளுக்குக் காது கேட்காது சார். எப்பவும் படிக்கும் போது ஹியரிங் எய்டை கழட்டி வச்சிருவா" என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.. 


"என்னமா? ம்ப்ச்.. சரி, வா போய்ப் பார்த்துடலாம்" என்றுவிட்டு லைப்ரரியை நோக்கித் திரும்பி நடக்க, அவரைத் தொடர்ந்து சென்றாள் நிஷா. அவர் லைப்ரரியின் கதவைத் திறந்து அங்குள்ள விளக்குகள் எல்லாவற்றையும் ஒளிர விட, நிஷாவோ தன் தோழியைத் தேடினாள். 


எங்குத் தேடியும் தன் தோழி தென்படாததால் வேகமாகப் படியேறி முதல் தளத்துக்குச் சென்ற நிஷா, அங்கே மயங்கி விழுந்து கிடந்த ஸ்னேகாவைக் கண்டு ஓடிச் சென்று, "ஸ்னேகா…" என்று அவள் கன்னத்தைத் தட்டவும்,


அதற்குள் படியேறி வந்த லைப்ரரியனோ, "ஆமா, இந்தப் பொண்ணு உள்ளதான் இருந்து இருக்கு" என்று அவரும் பதட்டத்துடன் கூறினார்.


நிஷாவோ, தன் பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஸ்னேகாவின் முகத்தில் தெளித்தாள்.


குளிர்நீர் பட்டதும் மெதுவாகக் கண் திறந்து பார்த்த ஸ்னேகா மிரண்டு விழித்தாள்.


"ஸ்னேகா! ஆர் யு ஓகே?" என்று நிஷா கேட்க, தோழியின் வாயசைவை வைத்து, "ம்ம்ம்.." என்று தலையை ஆட்டியவள் எழுந்து கொள்ள முயன்றாள். ஆனால் அவளால் அது முடியவில்லை. ஏனெனில் அவளது உடலில் அப்படி ஒரு நடுக்கம் இருந்தது. 


தோழியின் கையைப் பிடித்து நிஷா உதவ மெதுவாகப் படியிறங்கியவள், லைப்ரரியில் இருந்து அவளை வெளியே அழைத்து வரவும், ஸ்னேகாவின் கால்கள் மீண்டும் நடுங்க, அப்படியே கீழே அமர்ந்து விட்டாள். 


"ஹேய்! ஸ்னேகா என்னாச்சு?" என்று அவள் பதற, அதற்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றிருந்த மாணவர்கள் என்ன ஏது என்று கேட்டபடி அங்குக் கூடி விட்டனர். அடுத்தச் சில நிமிடங்களில் காலேஜ் ப்ரின்சிபல் அங்கு வந்து விட்டார். என்ன விஷயம் என்று கேட்டு விட்டு ஸ்னேகாவின் கார்டியன் யார் என்று பார்த்து விட்டு, அவர் அழைத்தது ரிஷிவர்மனுக்கே!


அவனும் இதோ வந்து விட்டான்! கூட்டத்தை விலக்கி உள்ளே வந்தவன், மனைவியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கத்தைக் கண்டு, அவள் மீதிருந்த பார்வையை அகற்றாமல், "என்ன நடந்தது?" என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டான். நிஷாவோ நடந்ததைக் கூறவும்.. 


ஆனந்தோ மருத்துவராய் உடனே அவளைப் பரிசோதித்தவன் "ரிஷி! சிஸ்டர் ரொம்பப் பயந்து இருக்காங்கடா. மத்தபடி ஷீ இஸ் ஆல்ரைட். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா நார்மலா ஆகிருவாங்க" என்று கூற,


மனைவியை முறைத்துக் கொண்டே, "சரி, வா வீட்டுக்குப் போகலாம்" என்றான்.


ஸ்னேகாவோ எழுந்து நிற்க முயன்று பார்த்தாள். ஆனால் அவளால் முடியவில்லை.


அதைக் கண்டவன், "என்னாச்சு? நடக்க முடியலயா?" என்று அவளிடம் கேட்க, 


"நடக்க முடியும்…" என்றவள் மீண்டும் எழ முயற்சி செய்தாள். பலமிழந்த கால்களின் தள்ளாட்டத்தால் நிற்க முடியாமல் மீண்டும் அப்படியே அமர்ந்து விட, அவளது செயலில் தன் இடுப்பில் கை வைத்துத் தலையை இடம் வலம் ஆட்டிய ரிஷிவர்மன், 


அவள் மீண்டும் ஏழ முயற்சிக்கும் முன், கீழே குனிந்து மனைவியைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.


ஸ்னேகாவோ, கணவனிடம் இருந்து இப்படியொரு செயலை எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுக்க, அதற்கு நேர்மாறாக அவர்களைப் பார்த்த மாணவர்களின் கூட்டமோ, "ஓ ஓ ஓ ஹோ!" என்று கோரஸாகக் குரல் எழுப்பியது. 


அதில் ஒரு குறும்புக்கார மாணவனோ தன் மொபைலில் இருந்து, 


கையில் மிதக்கும் 

கனவா நீ!

கை கால் முளைத்த 

காற்றா நீ!

கையில் ஏந்தியும் 

கனக்கவில்லையே

நுரையால் செய்த 

சிலையா நீ!


என்ற சிட்டுவேஷன் பாடலை ஒலிக்க விட, சட்டென்று கணவனின் கைகளில் இருந்து கீழே இறங்க முயன்றாள் ஸ்னேகா.


ரிஷியோ, "இதுக்குத்தானே இவ்வளவு சீன் போட்டே? பின்ன என்ன.. இப்படியே இரு!" என்று யாருக்கும் கேட்காத வண்ணம் அவளிடம் சீறியவன், தனது மனைவியைத் தூக்கிக் கொண்டு காரை நோக்கி நடந்தான்.


****

No comments:

Post a Comment