ஸ்வரம் 22

 


ஸ்வரம் 22



ரிஷிவர்மனின் வாகனம் சாலையில் சீராகச் சென்று கொண்டிருக்க, அவன் அருகே பதுமை போல் அமர்ந்திருந்தாள் ஸ்னேகா. அவள் மனமோ, சற்று முன் நடந்த சம்பவத்திலேயே உழன்று கொண்டிருந்தது.


அவளுக்குச் சிறுவயதில் இருந்தே இருட்டு என்றால் பயம்! அவளது வீட்டிலோ இரவு முழுவதும் ராதா அவளுக்குத் துணையாக இருப்பார். இங்கு ரிஷிவர்மனின் வீட்டிலோ தனி அறை என்பதால் இரவு விளக்கை அணைக்கவே மாட்டாள். இங்கு வந்த நாளில் இருந்து அவள் தூங்கியதை விட விழித்திருந்த நாட்கள் தான் அதிகம்.


இன்று நூலகத்தில் தனியாக மாட்டிக் கொண்டாள். புத்தகங்களின் பாதுகாப்பு கருதி நூலகத்தின் ஜன்னல்கள் கூட இறுக மூடி வைத்திருக்க, அந்த இருட்டைக் கண்டு பயந்து மயங்கி விழுந்து விட்டாள். ஆனால் அவளை அழைத்துச் செல்ல கணவன் வந்தது மட்டும் அல்லாமல், தன்னைக் கைகளில் ஏந்திக் கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.


என்னதான் தன்னைப் பிடிக்கவில்லை என்று கணவன் கூறினாலும், தனக்கு ஏதாவது ஒன்று என்றதும் ஓடி வந்திருக்கிறானே என, அவன் மீது காதல் கொண்ட அந்தப் பேதையின் மனதுக்கு அதுவே போதுமானதாக இருக்க, அந்தப் பொன்னான பொக்கிஷ நிமிஷங்களைத் தனக்குள் பொத்தி பாதுகாக்க ஆரம்பித்தாள் ஸ்னேகா.


அவளது மனநிலை இப்படி இருக்க, ரிஷிவர்மனோ மனைவியை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தவன், தனது அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு, "இறங்கு!" என்றான்.


கணவனின் ஆளுமையான குரலில் ஸ்னேகா தனது பேக்கை எடுத்துக் கொண்டு வேகமாக இறங்கி நின்றவள், கார் கதவை மூடவும், "ஒரு நிமிஷம்.." என்று மனைவியை நிறுத்தினான் ரிஷிவர்மன்.


கனவன் திட்ட தான் அழைக்கிறானோ என எண்ணி அவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ மனைவியைத் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தபடி,


"லுக்! உன்னோட காலேஜ்க்கு வந்ததாலயோ, இல்ல உன்னைத் தூக்கினதுனாலயோ, உன் மேல் எனக்கு அக்கறை இருக்கறதா நீயா இமேஜின் பண்ணிக்காதே! மனிதாபிமான அடிப்படையில கூட உனக்கு ஹெல்ப் பண்ண எனக்கு விருப்பம் இல்ல. பட் உனக்கு ஒண்ணுன்னா உன் மாமனார் என்கிட்ட தான் வந்து கேள்வி கேட்பார். அவருக்குப் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. அதுக்காக மட்டும் தான் வந்தேன், புரிஞ்சிதா?" என்று சிறிதும் இரக்கம் இல்லாமல் கூறிய ரிஷிவர்மன்..


"தென், இன்னொரு விஷயம்.. என் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. ஒவ்வொரு தடவையும் உன்னைக் காவல் காக்க நான் ஆள் இல்ல. இதான் லாஸ்ட் வார்னிங்! இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது நடந்தது, நீ இங்க இருக்க முடியாது!" என்று அவளை எச்சரித்தவன், அவளது பதிலை எதிர்பாராமல் காரை கிளப்பிச் சென்று விட்டான்.


கணவனின் பேச்சில் ஸ்னேகா அதிரவில்லை. அவன் இப்படிச் சொல்லவில்லை என்றால் தானே ஆச்சரியப்பட வேண்டும்? அதனால் அமைதியாக வீட்டை நோக்கி நடந்தாள்.


வீட்டின் உள்ளே வந்ததும், தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு களைப்புப் போகத் தேநீர் தயாரித்துக் குடித்த ஸ்னேகா, தனது மொபைலை எடுத்துப் பார்த்தாள். அதில் ரம்யா மற்றும் அவளது வீட்டினர் இரண்டு மூன்று தடவை அழைத்து இருப்பது புரிந்தது.


"நான் காலேஜ்ல இருக்கும் போது போன் பண்ண மாட்டாங்களே?" என யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் அவளுக்கு இன்றய நாளே நினைவுக்கு வந்தது.


அதில், "அச்சோ! இன்னைக்கு நேகாக்கா ரிசப்ஷன் இருக்குல. ம்ப்ச்! மறந்தே போய்ட்டேன்.." என்று தன் தலையில் தட்டிக் கொண்டவள், மொபைலை எடுத்து முதலில் ரம்யாவுக்கு அழைத்தாள்.


அந்தப் பக்கம் இருந்த ரம்யாவோ எடுத்த எடுப்பில், "அடியேய் படிப்பாளி! வீட்டுக்கு வந்துட்டியா?" என்று கேட்டாள்.


"இப்ப தான் வந்தேன் ரம்யா. நீங்க எல்லோரும் ரிசப்ஷன் போயாச்சா?" என்று கேட்க,


"வந்தாச்சு வந்தாச்சு.. நீ வீடியோ கால்க்கு வா, எல்லோரும் உன்கிட்ட பேசணுமாம்" என்று ரம்யா கூறவும்,


"இதோ வரேன்…" என்ற ஸ்னேகா அழைப்பைத் துண்டித்து விட்டு வீடியோ கால் செய்தாள். அங்கே முதலில் வந்தது மோகனா தான். அவள் மகளிடம் நலம் விசாரித்து விட்டுச் சிறிது நேரம் பேசியவள் கணவனிடம் கொடுக்க, அடுத்து அடுத்து அவளது குடும்பத்தாரிடமும் ஓவியாவிடமும் பேசிய ஸ்னேகா, இறுதியாக, "ரம்யா! விக்ரம் அண்ணா எங்கடி..?" என்று கேட்டாள்.


"அத்தான் இங்க தான் இருக்காங்க, ஆனா என்னனு தெரியல உம்முன்னு இருக்காங்க" என்று கூறவும்,


"ஏன்டி என்னாச்சு?" என்று ஸ்னேகா கேட்க,


"தெரியலடி.. வந்ததுல இருந்து அப்படித்தான் இருக்காங்க" என்றதும்,


"சரி, ஏதாவது வேலை டென்ஷனா இருக்கும்" என்றவள், "ரம்யா! எனக்கு ரிசப்ஷன் ஃபங்ஷனை வீடியோ எடுத்து அனுப்புடி" என்றாள் ஆசையாக.


அவள் குரலில் இருந்த ஏக்கத்தைப் புரிந்து கொண்ட ரம்யா, "சொல்லிட்டேல்ல, இப்ப பாரு.. நீ போதும் போதும்னு சொல்ற வரைக்கும் வீடியோவா எடுத்துத் தள்ளுறேன்" என்றவள், அழைப்பைத் துண்டித்து விட்டு ஸ்னேகாவுக்காக விழாவினை வீடியோ எடுக்க ஆரம்பித்தாள்.


முதலில் மணமக்களை வீடியோவில் பதிவு செய்தவள், அப்படியே தங்களது குடும்பத்தினர் என ஒவ்வொருவரையும் எடுத்து விட்டு, அடுத்துச் சென்றது சற்றுத் தள்ளி கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு இறுகிய முகத்துடன் நின்றிருந்த விக்ராந்த்திடம்தான்!


"அத்தான்.." என்று அவனை அழைத்தாள் ரம்யா. அவளது குரலில் தன் கவனம் கலைந்தவன், "என்ன ரம்யா..?" என்று கேட்டான்.


"ஒரு செல்பி வீடியோ அத்தான். ஸ்னேகா கேட்டா" என்று அவள் கூறினாள்.


தங்கைக்காக என்றதும் தன் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டவன், ரம்யாவின் கையில் இருந்த மொபைலைப் பார்த்தான்.


கைப்பேசியின் திரையில் விக்ராந்த்தின் முகம் சரியாக விழவில்லை என்பதைக் கவனித்தவள், "ம்ப்ச்! அத்தான், இப்படிப் பனைமரம் மாதிரி நின்னா நான் எப்படி வீடியோ எடுக்கிறது? இங்க பாருங்க, உங்க பேஸ் தெரியவே இல்ல. கொஞ்சம் குனிங்க" என்று கூற,


அவனோ, "மொபைல் என்கிட்ட குடு, நானே எடுக்கிறேன்" என்றுவிட்டு அவளது கையில் இருந்த மொபைலை வாங்க முயன்றான்.


அதில் சட்டெனத் தன் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்ட ரம்யா, "அதெல்லாம் தர முடியாது! நான் தான் எடுப்பேன். நீங்க என் வளர்த்திக்கு வாங்க போதும்!" என்று அவனை முறைத்தாள்.


அவளது பேச்சில் அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் இறுக்கம் தளர்ந்த விக்ராந்த், புன்னகைத்தபடி அவளது தலையில் வலிக்காமல் கொட்டியவன், "வர வர உனக்கு ஓவர் வாய் ஆகிப் போச்சு" என்றுவிட்டு அவளது தோளில் கைப் போட்டு அவள் உயரத்திற்குச் சற்றுக் குனிந்தான்.


அதுவரை எப்பொழுதும் போல் இருந்த ரம்யாவிற்கோ, விக்ராந்த்தின் இந்த அருகாமை என்னவோ செய்ய ஆரம்பித்தது. ஆம்! அவளது கன்னத்தை அவனது கன்னம் ஒட்டி உரசி விடும் இடைவெளி தூரத்தில் குனிந்து நின்றிருந்தான் விக்ராந்த்.


அதில் பெண்ணவளின் மனம் படபடக்க, மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள் ரம்யா.


அவளது பார்வையை உணர்ந்த விக்ராந்த், "ரம்யா! இங்க என்ன பார்க்கிறே? கேமரா என் முகத்தில் இல்ல, அங்கே பாரு!" என்று அவளது நாடி தொட்டு அவள் முகத்தை மொபைலை நோக்கித் திருப்பினான். அவளோ அவனது தொடுகையில் அவளாகவே இல்லை.


அதே நேரம் கூட்டத்தில் இருந்து விலகி சற்று ஒதுங்கி, தன் பார்வையை எங்கோ பதித்தபடி அமந்திருந்தாள் தனுஷா. எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்து இருந்தாளோ? எதேர்ச்சையாகத் திரும்பிப் பார்த்தவளது கண்ணில் பட்டார்கள், ஒட்டி உரசியபடி நின்றிருந்த ரம்யாவும் விக்ராந்த்தும். அவர்களைப் பார்த்ததும் அவளுக்குக் கண்ணில் கண்ணீர் கோர்த்தது.


அவளது கண்ணீருக்குக் காரணம்.. அவர்கள் இருவரின் நெருக்கம் மட்டும் அல்ல, சற்று முன் மோகனாவும் ஓவியாவும், விக்ராந்த் - ரம்யா இருவரின் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைத் தனுஷா கேட்க நேர்ந்தது. ஏற்கனவே நேகாவின் பாராமுகத்திலும், கடுமையான பேச்சுகளிலும் ரணமாகி இருந்தவளின் மனம், இதைக் கேட்டதும் இன்னும் அதிகமாக வலித்தது.


அங்கு நிற்க முடியாமல் அங்கிருந்து தோட்டத்திற்கு வந்தவள், அங்கே போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து விட்டாள். அவளது மனவலியை அதிகமாக்குவது போல், விக்ராந்த் - ரம்யா இருவரின் நெருக்கம் வேறு அவளை இன்னும் பாதித்தது.


"எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்கு நிரந்தரம் இல்லையா?" எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவளுக்கு, வாய் விட்டு அழ வேண்டும் போல் இருக்க, இருக்கும் இடம் மற்றும் சூழ்நிலை உணர்ந்து தன்னை அடக்கிக் கொண்டாள் தனுஷா.


இதை அறியாமல் சிரித்த முகமாக வீடியோவில் நின்று கொண்டிருந்த விக்ராந்த்தின் மொபைல் ஒலி எழுப்ப, அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தபடி தோட்டத்துப் பக்கம் நகர்ந்து விட்டான்.


ரம்யாவோ, எடுத்த போட்டோஸ், வீடியோஸ் எல்லாவற்றையும் ஸ்னேகாவுக்கு அனுப்பி வைத்தவள், தானும் விக்ராந்த்தும் சேர்ந்து எடுத்த வீடியோவை, தான் மட்டும் கண்டு ரசிக்கத் தனியாகப் பத்திரப்படுத்திக் கொண்டாள்.


மொபைலில் பேசியபடி தோட்டத்துப் பக்கம் வந்த விக்ராந்த், "சரி, நாளைக்கு ஆபிசுக்கு வாங்க பேசிக்கலாம்" என்றுவிட்டு மொபைலை அணைத்தவனின் பார்வை தனியாக அமர்ந்திருந்த தனுஷாவின் மீது படிந்தது.


வெள்ளை கற்கள் பதித்த தங்க நிற டிசைனர் சேலையில், மிதமான அலங்காரத்தில், மல்லிகை பூ சூடி கோட்டோவியம் போல் வடிவாக அமர்ந்திருந்த பெண்ணவளின் பேரழகு ஆணவனின் மனதில் ஆழ பதிந்தது.


அவன் மனமோ, "இவ எதுக்குத் தனியா உக்காந்து இருக்கா? இவளோட அண்ணனுக்குத் தானே ரிசப்ஷன்? போதாக்குறைக்கு நேகா இவ பிரென்ட் வேற! ஆனா இவ முகத்துல கொஞ்சமும் சந்தோஷம் இல்லையே. என்னாச்சு..?" என்று யோசனையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவள் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் அவளது கன்னத்தில் கோடாக வழிந்தது.


அதைப் பார்த்த விக்ராந்த்தின் மனமோ, அவனையும் அறியாமல் அந்தக் கண்ணீரை துடைத்து, "உனக்கு என்னடி ஆச்சு?" என்று கேட்டு, அவளைத் தன் தோளில் சாய்த்து, அவளுக்கு ஆறுதல் கூற மனம் பரபரத்தது. அவன் அப்படி நினைத்தது ஒரு நிமிடம்தான்! அடுத்த நொடி அவன் தன் மனம் எண்ணியதை நினைத்துத் துணுக்குற்றான்.


"அவள் கண்ணீர் என்னைப் பாதிக்கிறதா? ஏன்?" என மீண்டும் யோசித்தபடி இப்பொழுது நிதானமாகத் தனுஷாவை பார்வை இட்டான் விக்ராந்த்.


எத்தனையோ தடவை அவளைத் தன் தங்கையுடன் அவன் பார்த்திருக்கிறான். ஏன், அன்றொரு நாள் அவனது வீட்டில் கூட அவள் மேல் விழுந்து வைத்தான் தானே? அந்த நிகழ்வின் பிறகு அவளது பெயரைக் கேட்டால், தன்னையும் அறியாமல் அவனது கண்கள் அவளைத் தேட ஆரம்பித்ததே! அதெல்லாம் இப்பொழுது யோசித்துப் பார்த்தவன் உணர்ந்து கொண்ட விஷயம், அவனது மனதை மயிலிறகாய் வருடியது. அந்த உணர்வால் அவன் இதழில் புன்னகை மலர, யாரும் அறியாமல் முதன் முறையாக அவளை ரசிக்க ஆரம்பித்தான் விக்ராந்த்.


தன் மனம் கவர்ந்தவன் தன்னை ஒரு தடவை பார்க்க மாட்டானா? தன் மனதைப் புரிந்து கொண்டு தன்னிடம் காதல் கொள்ள மாட்டானா? எனத் தினம் தினம் அவன் மீதான காதலைத் தனக்குள்ளே பொத்தி பொத்திப் பாதுகாத்து வைத்து, ஏங்கி தவித்துக் கொண்டிருந்தவளின் மனத்திற்கினியவன், இதோ! இப்பொழுது அவளை மட்டுமே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதை உணராமல் எங்கோ பார்வையை வெறித்தப்படி அமர்ந்திருந்தாள் தனுஷா.


அப்பொழுது "தனு அக்கா! லட்சுமி பெரியம்மா உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க, வாங்க!" என்றவாறு அங்கு வந்த இளம்பெண் ஒருத்தி தனுஷாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.


அதில் சட்டென்று தன் தலையைக் குனிந்து கொண்ட தனுஷா, கண்ணீரைத் துடைத்து விட்டு, அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தவள், "நீ போ, நான் வரேன்.." என்று கூறினாள்.


அதைக் கவனித்த அந்தப் பெண்ணோ, "எதுக்குக்கா அழறீங்க..?" என்று கேட்டு விட்டாள்.


சட்டெனத் தன் கண்களைச் சிமிட்டி, "அழறேனா? இல்லையே.!! கண்ணுல தூசி விழுந்துருச்சு, அதான் கண் கலங்கிருச்சு. வேற ஒன்னும் இல்ல, வா போகலாம்" என்று கூறி விட்டு அவள் அன்னையை நோக்கி நடந்தாள்.


அவள் கூறியதைக் கேட்டு அந்தப் பெண் நம்பினாலும், விக்ராந்த் நம்பவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிய, "எதுக்குப் பொய் சொல்றா? அழற அளவுக்கு இவளுக்கு என்னதான் பிரச்சனை?" என்ற யோசனையுடன் செல்லும் தனுஷாவையே பார்த்திருந்தான் விக்ராந்த்.


அன்னையிடம் வந்த தனுஷா, "அம்மா! கூப்பிட்டிங்களா?" என்று கேட்க,


"ஆமா தனு, இங்க வா!" என்று பூரிப்புடன் தன் மகளை அழைத்துக் கொண்டு, அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் அருகே அவளை அமர வைத்த லட்சுமி,


"சாந்தி! இவதான் என் பொண்ணு தனுஷா" என்று மகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.


அந்தப் பெண்மணியோ தனுஷாவின் நாடி தொட்டு, "உன்னைக் குழந்தையா இருக்கும் போது பார்த்தது. எப்படி வளர்ந்துட்ட! ரொம்ப அழகா இருக்கமா" என்றவர், தன் அருகில் அமர்ந்திருந்த தன் மகனிடம் கண் ஜாடை காட்ட, அவனோ தனுஷாவைத்தான் ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


அங்கு என்ன நடக்கிறது என்பதை உணராமல் பதுமை போல் அமர்ந்திருந்தாள் தனுஷா. லட்சுமியோ, "சாந்தி.." என்று தன் மகளைச் சுட்டிக் காட்டி ஏதோ கேட்டார்.


அவரோ தன் கண்களை மூடித் திறந்து, "டேய்! பேசிட்டு இரு, இப்ப வந்துறேன்" என்று மகனிடம் கூறியவர், எழுந்து லட்சுமியின் கையைப் பிடித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.


சற்றுத் தள்ளி வந்ததும், "என்ன சாந்தி? ஒன்னுமே சொல்லாம வர்றே?" என்று லட்சுமி சிறு படபடப்புடன் கேட்க,


சாந்தியோ, "உன் பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்காடி. அவளை யாருக்குத்தான் பிடிக்காது? நாளை கடத்தாம சீக்கிரமே நல்ல நாள் பார்த்து, என் பையனுக்கும் உன் பொண்ணுக்கும் கல்யாணத்தை வச்சிக்கலாம்" என்று கூறவும்,


அதில் மனம் குளிர்ந்த லட்சுமி, "சாந்தி! எ..என் பொண்ணு பத்தி உனக்கு.." என்று ஏதோ கூற வரவும்,


அவரது கையில் சிறு அழுத்தம் கொடுத்த சாந்தி, "எல்லாம் எனக்குத் தெரியும் லட்சுமி. இப்ப எதுக்கு அதைப் பத்தி பேசிக்கிட்டு? உன் பொண்ணு தான் என் வீட்டு மருமக, போதுமா?" என்று மனதாரக் கூறியவர் தன் மகனைப் பார்க்க, அவனோ தனுஷாவின் மீதிருந்த பார்வையை இம்மியும் அகற்றாமல் அமர்ந்திருப்பதிலேயே அவனது மனதைப் புரிந்து கொண்டவருக்கு மனம் நிறைந்தது.


அவரது மகனோ, தனுஷாவிடம் பேசும் பொருட்டு, "ஹாய்!" என்றபடி தனது வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.


இவ்வளவு நேரமும் தன்னவனின் நினைவில் இருந்த தனுஷா, தனது வெகு அருகே கேட்ட குரலில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவள் முன் வசீகரமாகச் சிரித்தபடி அமர்ந்திருந்தான் ஒரு ஆணழகன்.


அவனைப் பார்த்ததும் சற்று மிரண்டு விழித்தவள், சுற்றும் முற்றும் பார்த்துத் தன் அன்னையைத் தேடினாள்.


அவளது அந்தப் பதட்டத்தை உணர்ந்து, "ஹேய்! ஜஸ்ட் ரிலாக்ஸ்! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றவன், "ஐ அம் ரோஹன், யு.கேல ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் ஜி.எம் போஸ்ட்ல இருக்கேன். அங்கே க்ரீன் கார்டும் வாங்கிட்டேன்" என்று தன்னைப் பற்றிப் பெருமையாகக் கூறியவன், "யு ஆர் லுக்கிங் சோ கார்ஜியஸ் இன் திஸ் சாரீ!" என்று அவன் அவளை ரசித்தபடி கூறினான்.


அவனது அந்தப் பேச்சு அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏதோ முள்ளில் மேல் இருப்பது போன்று உணர்ந்த தனுஷா, "எக்ஸ்க்யூ மீ!" என்றுவிட்டு எழுந்தவள், வேகமாக அங்கிருந்து நகரப் போனாள்.


"ஹலோ மிஸ்! ஒரு நிமிஷம் உக்காருங்க, நான் இன்னும் பேசி முடிக்கல" என்றான் சற்று அழுத்தமாக.


அவளோ அவனுக்கும் மேல் அழுத்தமாக அவனைப் பார்த்தவள், "உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை மிஸ்டர்" என்று யாருக்கும் கேட்காத வண்ணம் அவனிடம் கூறி விட்டு, அவனது பதிலை எதிர்பாராமல் திரும்பி நடந்து விட்டாள்.


செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரோஹனோ, "இன்ட்ரெஸ்ட்டிங்..!!" என்று சொல்லித் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.


கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தோட்டத்திற்கு வந்த தனுஷா, தன் சேலை முந்தானையின் நுனியைப் பிடித்துத் திருகி கொண்டிருந்தாள். அவள் மனமோ, 'இருக்கிற பிரச்சினை போதாதுன்னு இது என்ன புதுத் தலைவலி?' என்று கொதித்துக் கொண்டிருக்க, அப்பொழுது அவள் காதருகே, "ஹாய்..!!" என்ற கிசுகிசுப்பான குரல் கேட்டது.


அதில் உடல் தூக்கி வாரிப் போட, அந்த ரோஹன் தானோ என எண்ணிப் பல்லைக் கடித்தபடி, அவனைத் திட்டுவதற்குச் சட்டென்று திரும்பிய தனுஷா, தன்னருகே தன்னை நெருங்கி நின்றிருந்தவன் மீது மோதி விட்டாள்.


அவள் அப்படி மோதி விட்டுப் பதட்டத்தில் நேராக நிற்க முடியாமல் தடுமாறவும், "பார்த்து! பார்த்து!" என்று அவளது கையைப் பிடித்து நிறுத்தி, அவளையே ஊடுருவி பார்த்தபடி நின்றிருந்தான் விக்ராந்த்.


யாருடைய பார்வை தன் மேல் ஒருமுறையேனும் படாதா என்று ஏங்கிக் கொண்டிருந்தாளோ, அவனே அவள் எதிரே அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, அவளை இமைக்காமல் பார்த்தபடி நிற்கிறான். 'இது நிஜம் தானா? கனவில்லையே?!!' என்று தனுஷாவின் கண்கள் ஒருவித எதிர்பார்ப்பு கலந்த பரவசத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.


விக்ராந்த்திற்கோ, அவளது கண்களில் தெரிந்த அந்த ஆர்வமான பார்வையே அவளது மனதை எடுத்துரைக்க, சற்று முன் தன்னிடம் தோன்றிய அவள் மீதான காதல் உணர்வு அவளிடமும் பிரதிபலித்ததைக் கண்டு காதல் மயக்கத்தில் உணர்ச்சி வசப்பட்டவன், அதைக் கட்டுப்படுத்த தன் பின்னந்தலையை அழுத்தமாக கோதி கொண்டான்.


பின்பு அவளிடம், "இங்க என்ன பண்றே?" என்று கேட்டான்.


அவளிடம் முதன் முதலாகப் பேசுகிறான். என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.


அவளுக்கோ, தன்னவன் தன்னிடம் பேசியதை நம்ப முடியாமல், ஒருவித பரிதவிப்புடன், அவன் மீதான பார்வையை விலக்காமல் அப்படியே நின்றிருந்தாள். அப்பொழுது,


"அத்தான்! நீங்க இங்கேயா நிக்கிறீங்க.. உங்களை எங்கெல்லாம் தேடிட்டு இருக்கேன் தெரியுமா..?" என்றபடி அங்கு வந்தாள் ரம்யா.


அவளது வரவில் தனுஷாவின் மனமும், முகமும் சுருங்கிப் போனது. சட்டென்று அவனது கையில் அகப்பட்டு இருந்த தனது கரத்தை வேகமாக இழுத்துக் கொண்டாள்


அவனுக்கோ சொல்லவும் வேண்டாம்..!! இனிய கனவு ஒன்று கலைந்தது போல் உணர்ந்தவன், "என்ன ரம்யா? எதுக்கு என்னைத் தேடி வந்தே?" என்று கேட்டான்.


அவளோ, "உங்களை மோஹிமா கூப்பிடுறாங்க. பேமிலி போட்டோ எடுக்கணுமாம்" என்று அவனிடம் கூறினாலும், ரம்யாவின் பார்வை என்னவோ தனுஷாவின் மீதே இருந்தது.


ஆம்! சற்று முன் விக்ராந்த்தை தேடியவளின் கண்ணில் இருவரும் கையைப் பிடித்தபடி நின்றிருந்த காட்சி விழ, அவள் மனமோ அதிர்ந்துதான் போனது. தனக்கு உரிமையான தனது அத்தான் வேறு ஒருத்தியின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்பதா? என்று வெகுண்டெழுந்தவள், அவனை அழைக்கும் சாக்கில் அங்கே வந்து விட்டாள்.


"வாங்க அத்தான்.." என்று ரம்யா அவனின் கைப் பிடித்து இழுக்க, அவனோ தனுஷாவைப் பார்த்துச் சிறு தலையசைப்புடன் அங்கிருந்து சென்று விட்டான்.


தனுஷாவுக்கோ அவனின் வரவிலும், அவனது பார்வையிலும், பேச்சிலும், செயலிலும் அவள் எப்படி உணர்கிறாள் என்றே தெரியவில்லை. மீண்டும் அதே கல் பெஞ்சில் அப்படியே அமர்ந்து விட்டாள்.


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, இங்கு மேடையில் தன் காதல் மனைவியுடன் நின்றிருந்த அஜித்தோ சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தான். அவனது இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் அவன் மனைவி நேகா தான்..


அவனைப் பார்க்கும் போதெல்லாம் உர்ரெனக் கோபத்துடன் முறைத்துக் கொண்டு இருப்பவள், இன்றோ கணவனுடன் இழைந்தபடி நின்றிருந்தாள் அல்லவா?


புகைப்படம் எடுப்பவர்களோ, "மேடம்! சார்கிட்ட நெருங்கி நில்லுங்க, அவர் நெஞ்சிலே சாஞ்சிக்கோங்க, அப்படியே அவர் கழுத்தை கட்டிகிட்டு அவர் முகத்தைக் காதலோடு பாருங்க" என்று ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்க, அவர்கள் எப்படியெல்லாம் நிற்க சொல்கிறார்களோ, அதை எல்லாம் கொஞ்சமும் மறுக்காமல் செய்து கொண்டிருந்தாள் நேகா.


அவளது இந்த இணக்கத்தில் அஜித்குமார் தான் திக்குமுக்காடிப் போனான். சும்மாவே அவள் மீது பித்தாகி இருப்பவனுக்கு இப்பொழுது சொல்லவும் வேண்டுமா..? எப்பொழுது விழா முடியும், எப்பொழுது வீட்டுக்குச் செல்லலாம் எனத் துடித்துக் கொண்டிருந்தான்.


ஒருவழியாக ரிசப்ஷன் முடிந்ததும் நேகாவின் வீட்டினரை வழியனுப்பி வைத்தவன், தாயையும் தங்கையையும் மற்றொரு காரில் அனுப்பி விட்டு, தனது காரில் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான் அஜித்குமார்.


வரவேற்புக்கெனப் பிரத்யேக அலங்காரத்தில் இருந்த மனைவியை விழுங்கி விடுவது போல் பார்த்தவாறு வாகனத்தை அவன் செலுத்திக் கொண்டிருக்க, நேகாவோ வெளியே தெரிந்த இருட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரத்தில் அவர்கள் வீடும் வந்து விட, நேகா அமைதியாக இறங்கி வீட்டுக்குள் சென்றாள். அஜித்தோ, உல்லாச மனநிலையுடன் புன்னகை முகமாக மனைவியைப் பின்தொடர்ந்தான்.


வீட்டின் உள்ளே வந்ததும் ஹாலில் அமர்ந்திருந்த மாமியாரைப் பார்த்து நேகா சற்றுத் தயங்கி நிற்க, அவரோ, "அம்மாடி! டயர்டா இருக்கும், துணி மாத்திட்டு படு போ!" என்று கூறவும், வேகமாகப் படியேறி விட்டாள்.


அஜித்தோ, "தனு எங்கேம்மா?" என்று கேட்டுத் தாயின் அருகில் அமர, அவரோ, "இப்ப தான் எனக்கு மாத்திரை எல்லாம் எடுத்து தந்துட்டுப் படுக்கப் போனாப்பா" என்று கூற,


"சரிம்மா, நானும் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்று கூறி எழுந்தவனை,


"அஜித்! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ப்பா" என்று கூறி அவனைத் தடுத்து நிறுத்தினார்.


"என்னமா?" என்று கேட்டபடி மீண்டும் அன்னையின் அருகே அமர்ந்தான் அஜித்.


"நம்ம சுந்தரி அத்தையோட அக்கா சாந்தி இருக்காள்ல…" என்று அவர் கூற,


"ஆமா, அவங்க யூ.எஸ் தானே இருக்காங்க. இன்னைக்கு ரிசப்ஷனுக்குக் கூட வந்துருந்தாங்கள்ல..?" என்றதும்,


"ம்ம்ம்.. சுந்தரிக்குப் பத்திரிகை வைக்கப் போகும் போது அவ வீட்ல வச்சி பார்த்தேன். சாந்தி இந்தியா வந்து ஒரு வாரம் ஆகுதாம். அப்படியே அவளுக்கும் பத்திரிகை வச்சேன்" என்று அவர் சொல்லவும்,


"சரிமா, இப்ப அதுக்கு என்ன?" என்று அஜித் புரியாமல் கேட்க,


"சாந்திக்கு ஒரே ஒரு பையன் இருக்கான். பேர் ரோஹன். நல்ல பையன்பா! கை நிறய சம்பளம். அவனுக்கு நம்ம தனுவைப் பேசலாம்னு எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. இன்னைக்கு அவளே இது பத்தி என்கிட்ட கேட்டுட்டா. அவளுக்குத் தனுவைப் பார்த்தும் பிடிச்சுருச்சு. இந்த வாரத்தில ஒரு நல்ல நாளா பார்த்து பேசி முடிக்க வரேன்னு சொல்லிட்டா. நீ என்னப்பா சொல்றே?" என்று கேட்ட தாயைத் தன் தாடையைத் தடவியபடி யோசனையுடன் பார்த்தவன்..


"நாம முடிவு பண்ணா போதுமா? தனுஷாகிட்ட கேட்கணும்மா.. அவளுக்குப் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம். இப்ப போய்ப் படுங்க!" என்றவன், எழுந்து மாடிப்படி ஏறினான்.


தங்களது அறைக்கு வந்த அஜித்குமார் கதவை தாழ் போட்டு விட்டு அதில் சாய்ந்து நின்றவன், அங்கே கண்ணாடியின் முன் அமர்ந்து தனது அலங்காரங்களைக் களைந்து கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான். சற்று முன் அவனிடம் இருந்து விலகி இருந்த மோகம், இப்பொழுது மனைவியைக் கண்டதும் மீண்டும் அவனிடம் வந்து ஒட்டிக் கொள்ள, மெதுவாக அடிமேல் அடியெடுத்து அழுத்தமான காலடியோசையுடன் அவளை நெருங்கினான்.


கணவனின் அழுத்தமான காலடியோசை தன்னை நெருங்குவதை உணர்ந்தாலும், அவனைச் சட்டை செய்யாமல், தனது கழுத்தில் இருந்த நகைகளை நேகா கழட்ட ஆரம்பிக்க, அதுவோ கழட்ட முடியாமல் சதி செய்தது. அதற்குள் மனைவியை நெருங்கி விட்ட அஜித், தன் கரம் கொண்டு அவளது கழுத்தை உரசியபடி அந்த நகையைக் கழட்ட உதவி செய்தான். இதை எதிர்பாராத நேகா கண்ணாடியின் வழியாகக் கணவனை அதிர்ந்து பார்த்தாள்.


அவனோ மனைவியின் அதிர்வை உணர்ந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல், சற்றுக் குனிந்து அவள் முதுகில் தன் மீசை உராய அழுத்தித் தன் முத்தத்தைப் பதித்தவன், பிறகு அவளது காது மடலை தீண்டி, "ஐ லவ் யு மை பார்பி டால்!!" என்று பிதற்ற, கணவனின் செயலில் கண்களை இறுக மூடிக் கொண்டு உடல் விறைக்க அமைதியாக அமர்ந்திருந்தாள் நேகா.


மனைவியின் அமைதியைச் சம்மதமாக எடுத்துக் கொண்ட அஜித்குமார், மனைவியின் தோள் தழுவி, அவளை எழுப்பித் தன் முகம் பார்க்கச் செய்தவன், அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், மனைவியை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான். அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவளது வாசத்தை நுகர்ந்தவனுக்கோ, தாம்பத்தியத்தின் அடுத்த எல்லையைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் பிறக்க, அவனது கைகள் மனைவியின் உடலில் அத்து மீறி, அவளது மென்மையின் தன்மையைச் சோதிக்க ஆரம்பித்தது.


அவ்வளவுதான்!! கணவனின் அத்துமீறலை ஏற்கவும் முடியாமல், அவனது தொடுகையைச் சகித்துக் கொள்ளவும் முடியாமல் தவித்தவள், அதனால் உண்டான கோபத்தினால், தன் பலம் மொத்தத்தையும் திரட்டிக் கணவனின் நெஞ்சில் கை வைத்து வேகமாகத் தள்ளி விட்டாள் நேகா.


இவ்வளவு நேரம் காதலும், காமமும் சேர்ந்த மோகம் என்னும் வலையில் தத்தளித்துக் கொண்டிருந்த அஜித்குமார், மனைவியின் செயலில் மோகம் அறுந்து விழ, நிலைதடுமாறி போனவன், பின்பு சட்டெனத் தன்னைச் சுதாரித்து நேராக நின்றான்.


அவளின் உதாசீனம் அவனுக்கு மிகுந்த கோபத்தைக் கொடுக்க, கண்களை மூடி அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், "என்னாச்சு நேகா?" என்று வரவழைத்த பொறுமையுடன் கேட்டான்.


அவளோ கணவனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவனை முறைத்தவள், "உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியவே புரியாதா? நீ தொட்டா எனக்கு அருவெறுப்பா இருக்குன்னு சொன்னேன்ல.. அப்படியும் ஏன்டா என்னை நெருங்கி நெருங்கி வர்ற?

சத்தியமா உன்னை எனக்குப் பிடிக்கல! பிடிக்கல! பிடிக்கல! உன்னோட தொடுகையையும் என்னால சகிச்சிக்க முடியலடா!" என்று ஆக்ரோஷமாக அவள் கத்தவும்..


அவளது பேச்சில் மீண்டும் கோபம் துளிர்க்க, "பின்ன எதுக்குடி ஸ்டேஜ்ல என்னை ஒட்டி ஒட்டி நின்னு உசுப்பேத்துன? போட்டோக்குப் போஸெல்லாம் கொடுத்த…?" என்று சீற்றத்துடன் கேட்க,


"நடிச்சேன்டா.. என் குடும்பத்துக்காக உன் கூட இணக்கமா இருக்கிற மாதிரி நடிச்சேன். நம்ம பொண்ணு காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே, அவ சந்தோஷமா இருக்காளா இல்லையானு என் வீட்டு ஆளுங்க பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்காக மட்டும் தான் உன்னைப் பிடிக்காத போதும் உன் கூட நெருங்கி நின்னேன். அப்படி நிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேனு எனக்குத் தான்டா தெரியும்!" என்று ஆக்ரோஷம் சிறிதும் குறையாமல் அவள் கூறவும், மனதளவில் பெரும் அடி வாங்கினான் அஜித்குமார்.


அவளோ மேலும் பேசினாள். "போதும்! உன்னால நான் ஏற்கனவே மனதளவில அனுபவிச்ச சித்தரவதை எல்லாம் போதும்! பொண்டாட்டிங்கிற உரிமையில நீ என்னைத் தொடுறதை என்னால அனுமதிக்க முடியாது!" என்றவள்,


விறுவிறுவென்று கபோர்டின் அருகே சென்ற நேகா, அதன் உள்ளே இருந்து ஒரு காகிதம் ஒன்றை எடுத்து வந்து கணவனிடம் நீட்டினாள். அதை நெற்றிச் சுருக்கி என்னவென்று வாங்கிப் பார்த்த அஜித் அதிர்ந்தான்.


அதே அதிர்ச்சியுடன் அவன் தன் மனைவியைப் பார்க்க, அவளோ, "இது விவாகரத்துப் பத்திரம், இதுல ஒரு கையெழுத்து போட்டுட்டு என்னை விட்டுடு! நான் போறேன்" என்று உணர்ச்சி துடைத்த குரலில் கூறினாள்.


அவளது பேச்சில் தன் மனவலியை அவளுக்குக் காட்டாமல் மனைவியைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவன், தன் கையில் இருந்த விவாகரத்துப் பத்திரத்தை அவள் கண் முன்னால் சுக்குநூறாகக் கிழித்துப் போட்டு விட்டு, நொடியும் தாமதிக்காமல், அடுத்த நிமிடம் அவளைத் தன் கைகளில் சிறையெடுத்தான்.


கணவனின் இச்செயலை எதிர்பாராத நேகா அவனிடம் இருந்து விடுபடப் போராடினாள். ஆனால் அவனது பிடி இரும்பாக இருக்க, ஒரு கட்டத்தில் அவனை விலக்க முடியாமல் சோர்ந்து போனவள், "விடுடா என்னை!" என்றபடி கணவனின் நெஞ்சில் தன் கைக் கொண்டு அடித்தாள்.


மனைவியின் அடியைத் தாங்கிக் கொண்ட அஜித்குமார், அவளது முகத்தில் படர்ந்திருந்த முன்நெற்றி முடியை காதோரம் ஒதுக்கி விட்டபடி,


"விட முடியாது பேபி!! உன்னை இப்படிப் பாதியிலேயே விடுறதுக்கா, அன்னைக்கு உன்னைக் கட்டம் கட்டி தூக்கினேன்?" என்றவன்,


"என்ன சொன்ன? என்ன சொன்ன? என்னோட தொடுகை உனக்கு அருவெறுப்பா இருக்கா? என்னை உன்னால சகிச்சிக்க முடியலயா? இப்படியெல்லாம் பேசி என்னைக் கோபப்படுத்தினா நான் உனக்கு டைவர்ஸ் கொடுத்திடுவேனா? சில்லி கேர்ள்!!" என்றவன், மனைவியின் கீழுதட்டை தாபத்துடன் பார்த்துத் தன் பெருவிரலால் வருடியவன்,


"அருவெறுப்பா இருக்குன்னு சொன்னதைக் குறுகுறுப்பா மாத்திடலாமா பேபி?" என்று கேட்டுக் கண் சிமிட்டியவன், அவள் என்ன ஏது என்று யோசிக்கும் முன், மனைவியின் முகம் நோக்கிக் குனிந்து அவளது மென் இதழில் தன் முரட்டு இதழை பொருத்தி ஆழமான முத்தம் ஒன்றை பதிக்க, அதில் அதிர்ந்த நேகாவின் சத்தம் மொத்தமாக அடங்கி, அந்த அறையெங்கும் முத்த சத்தம் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது.



காதலில் மிதக்கும் அவனும்

கோபமெனும்

போர்வையில் அவளும்...

இறுதியில் வெல்லப் போவது

கோபமா? காதலா?


****

1 comment:

  1. Enda oruthanum love panna solli tholaika matimgala da eduku love panrimga loose pakkimga, inda parents pasamaga kitta eduvum kekama ivamga ishtathuku kalyanam panna vendiathu pasamga ketutu kalyanam panni tholaimga😂😂😂😂😂

    ReplyDelete