ஸ்வரம் 23

 



ஸ்வரம் 23..


கணவனை விலக்கவும் முடியாமல், அவன் கொடுத்துக் கொண்டிருக்கும் முத்தத்தைத் தாங்கிக் கொள்ளவும் முடியாமல் அவன் மீதே தொய்ந்து சரிந்தாள் நேகா.


தன் மேல் சரிந்தவளைக் கைகளில் அள்ளிக் கொண்ட அஜித்குமார், பூவாய் கட்டிலில் கிடத்தி அவள் அருகில் ஒட்டிப் படுத்துக் கொண்டவன், மனைவியின் நெற்றியில் மென்மையாக இதழ் பதிக்கவும், மூடி இருந்த நேகாவின் கண்ணோரம் கண்ணீர் வழிந்தது.


அதைப் பார்த்தவன், தனது பெருவிரல் கொண்டு அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு, "உனக்கு விருப்பம் இல்லாதது எதுவும் இங்க நடக்காது பேபி. எதையும் மனசில போட்டுக் குழப்பிக்காம நிம்மதியா தூங்கு!" என்று கூறியவன், அவளது மெல்லிடையில் கைக் கொடுத்து ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.


நேகாவோ கணவனின் கையை வெடுக்கென்று தள்ளி விட்டவள், கட்டிலின் ஓரம் நகர்ந்து மறுபக்கம் பார்த்தவாறு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.


அஜித்குமாரோ, பெருமூச்சுடன் தனது கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு மனைவியின் முதுகை வெறித்துப் பார்த்தான்.


ஒருநாள் இல்லை ஒருநாள் நிச்சயம் தன் மனைவி தன்னைப் புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் இருந்தவனுக்கு, சற்று முன் அவள் விவாகரத்துப் பத்திரத்தை நீட்டியது, அவன் மனதில் மிகுந்த வலியை உண்டாக்கியது.


என்னதான் அவன் தன் வலிகளை மறைத்துச் சாதாரணமாகத் தன் மனைவியிடம் நடந்து கொண்டாலும், காதல் கொண்ட மனம், அவளது வார்த்தையை ஜீரணிக்க முடியாமல் அன்றைய தூக்கத்தைத் தொலைத்திருந்தான் அஜித்குமார்.


அதே வீட்டில் இருந்த தனுஷாவோ, என்றும் இல்லாமல் இன்று நிம்மதியான தூக்கத்தில் இருந்தாள். அதற்குக் காரணம் விக்ராந்த் என்று சொன்னால் மிகையாகாது! தன்னவன் கண்டிப்பாகத் தன் காதலை புரிந்து கொள்வான், தன்னை நிச்சயம் ஒருநாள் கைப் பிடிப்பான் என்ற நம்பிக்கை அவள் மனதில் இன்று தோன்றியதாலோ என்னவோ?! அமைதியான தூக்கத்தைத் தழுவி இருந்தாள்.


அதே நேரம், தன் வீட்டில் தனது அறையில், பால்கனி கம்பியைப் பிடித்தவாறு வானில் மின்னி மறைந்து கொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்திருந்தான் விக்ராந்த்.


அவனது பார்வை வானில் இருந்தாலும் அவன் மனமோ தனுஷாவை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது. தான் இப்படி ஒரு பெண்ணை நினைத்துத் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்போம் என்று அவன் நேற்று வரை கனவிலும் நினைக்கவில்லை. காதல் என்னும் புதுவித உணர்வு அவனை ஆட்கொள்ள, அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்து கண்களை மூடிக் கொண்டவனின் இதழிலோ, தன்னவளை நினைத்து மந்தகாசப புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.


அவனது தங்கை ஸ்னேகாவோ, பெங்களூரில் தனது அறையில் கையில் இருந்த மொபைலில், ரம்யா அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் காணொளியை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளுக்கு அங்குச் செல்ல வேண்டும், தனது குடும்பத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அது முடியாத காரணத்தால், அன்னை அழைத்த போது கல்லூரியைக் காரணம் காட்டி வரவில்லை என்று கூறி இருந்தாள். ஆனாலும் நேரில் செல்லவில்லை என்றால் என்ன? அதான் எல்லோரிடமும் பேசியாகி விட்டதே, அதுவே போதும்! என்ற நிம்மதியில் தூங்க ஆரம்பித்தாள்


இதுதான் கடைசியாக அவள் உறங்கும் நிம்மதியான தூக்கம். ஏனெனில் வரும் நாட்களில் அவள் மட்டும் அல்ல, அவளின் ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியையும், அவளது கணவன் குலைக்கப் போகிறான் என்பதை அப்பொழுது அவள் அறிந்திருக்கவில்லை.

********


அன்று சனிக்கிழமை.. கல்லூரியும் விடுமுறை என்பதால் கணவன் அலுவலகம் கிளம்பவும், மெதுவாக எழுந்து வீட்டைச் சுத்தம் செய்த ஸ்னேகா குளிக்க ஆயத்தமானாள்.


அப்பொழுது ரம்யாவிடம் இருந்து அழைப்பு வரவும், அவளது அழைப்பை ஏற்று நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தவள்,


"சரி ரம்யா, நான் அப்புறம் பேசுறேன்டி. மணி பதினொன்னு ஆயிடுச்சு. நான் போய்க் குளிக்கணும்" என்று கூறி விட்டு மொபைலை அணைத்தவள், அடுத்ததாகக் காதில் மாட்டி இருந்த ஹியரிங் எயிடை கழட்டி மொபைல் அருகே வைத்தாள்.


பின்பு மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைய போனவள், ஏதோ நினைவு வந்தவளாகக் கையில் இருந்த உடைகளைக் கட்டிலில் போட்டு விட்டு அறையில் இருந்து வெளியே வந்த ஸ்னேகா, சமையல் அறைக்குள் நுழைந்தாள்.


அங்கே கேஸ் சிலிண்டரின் அருகே சென்றவள், ரெகுலேட்டர் திறந்து இருப்பது கண்டு, "நினைச்சேன்!" என்றபடி அதை அணைத்து விட்டு மீண்டும் தனது அறைக்குச் செல்ல, வெளியே வந்தவளின் பார்வையில் பட்டது திறந்து இருந்த அலுவலக அறை.


அதைப் பார்த்ததும், "ம்பச்! அத்து ஆபிஸ் ரூமை பூட்டாம மறந்து போய்ட்டாங்க போல.." என்று தனக்குத்தானே கூறியபடி அந்த அறையின் அருகே சென்றவள், அதன் கதவை இழுத்து மூடி, கதவில் இருந்த சாவியின் உதவியால் நன்றாகப் பூட்டி விட்டு, அந்தச் சாவியைக் கணவன் வைக்கும் இடத்தில் வைத்தவள், தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


அவள் குளித்து முடித்து, தனது ஈர துணிகளைத் துவைத்து, அதை உலர்த்தி எனத் தனது வேலைகளை அவள் முடிக்கும் போது, சரியாக ஒருமணி நேரம் கடந்து இருந்தது. அதன்பிறகே தனது ஹியரிங் எயிட்டை கையில் எடுத்தாள் ஸ்னேகா.


அதை அவள் தனது காதில் பொறுத்தவும் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருக்க, "இந்த நேரத்துல யார் வந்துருப்பாங்க?" என்று யோசித்தபடி கதவின் அருகே சென்று அதில் இருந்த லென்ஸ் வழியாகப் பார்த்தவள், வெளியே நிற்பது கணவனின் பி.ஏ ராபர்ட் என்றதும் வேகமாகக் கதவைத் திறந்தாள்.


அவனோ, "மேடம்! பாஸ் எங்கே?" என்று கேட்டான். அவனது குரலிலும் முகத்திலும் அப்படி ஒரு பதட்டம் இருந்தது.


அதை உணர்ந்தவளோ, "அவங்க வீட்ல இல்லயே? அப்பவே ஆபிஸ் போய்ட்டாங்க" என்றவள், "ஆமா, நீங்க எதுக்கு இப்படி டென்ஷனா இருக்கீங்க? என்னாச்சு?" என்று அவனிடம் திருப்பிக் கேட்டாள்.


அவனோ, "இல்ல மேடம், பாஸ் ஆபிசுக்கு வரல. அதான் நான் அவரைத் தேடி வந்தேன். கிட்டத்தட்ட அரைமணி நேரமா கதவை தட்டிட்டு இருக்கேன் மேடம்" என்று அவன் சிறிதும் பதற்றம் குறையா குரலில் சொல்லவும்,


"அரைமணி நேரமாவா?" என்று அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.


அவனோ, "ஆமா மேடம், இன்னைக்கு ரொம்பவே முக்கியமான மீட்டிங் இருந்தது. இது பலகோடி ரூபாய் மதிப்புள்ள பிஸ்னெஸ் டீலிங், அதை விட இது பாஸோட பல வருஷ கனவு! இதுக்காக எவ்வளவோ ஹார்ட் வொர்க் பண்ணி இருக்கார். இந்த ப்ராஜெக்ட் தான் அவரோட எயிம்!" என்று கூறவும்,


அவனது பதட்டத்துக்கான காரணம் புரிந்தது. அதே நேரம் மீட்டிங்க்குச் செல்லாமல் கணவன் எங்குச் சென்றான் என்று யோசித்தவள்,


"அவங்க போன்க்கு கால் பண்ணிப் பார்த்திங்களா?" என்று கேட்டாள்.


"ட்ரை பண்ணேன் மேடம். ரிங் போகுது ஆனா எடுக்கல" என்றவன், தனது முதலாளியின் எண்ணிற்கு மீண்டும் அழைத்தான். அடுத்த நிமிடம் மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது.


தனது பின்னே கேட்ட மொபைலின் சத்தத்தில் வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் ஸ்னேகா. அங்கே சோபாவில் ஒலி எழுப்பியபடி இருந்தது அவளது கணவனின் மொபைல்..


அதைப் பார்த்ததும், "அதோ பாஸோட மொபைல்.." என்று கூறிய ராபர்ட்,


"இன்னைக்கு மீட்டிங்க்குத் தேவையான எல்லாத்தையும் பாஸ் அவரோட லேப்டாப்ல சேவ் பண்ணி வச்சி இருகிறதா தான் சொல்லிட்டு இருந்தார். சோ ரொம்பவே கேர்புல்லா இருக்கணும்ங்கிறதுக்காக ஆபிஸ் கம்பியூட்டர்ல கூட அப்டேட் பண்ணி வைக்கல. நான் காலையில் போன் பண்ணும் போது கிளம்பிட்டேன்னு சொன்னார். ஆனா பாதி வழியில் வரும் போது, 'லேப்டாப் மறந்துட்டேன், எடுத்துட்டு இன்னும் அஞ்சி நிமிஷத்துல ஆபீஸ்ல இருப்பேன்னு' எனக்கு லாஸ்ட்டா கால் பண்ணினார். அதுக்கு அப்புறம் இப்ப வரை அவரைக் காணோம்" என்று அவன் சொல்லி முடிக்கவும்,


"லேப்டாப் மறந்துட்டாங்கன்னா? அதை எடுக்க வீட்டுக்குத் தானே வந்து இருப்பாங்க?" என்று யோசித்துப் பார்த்த ஸ்னேகாவுகோ, சட்டென மனதில் மின்னல் வெட்டியது. குளிக்கச் செல்லும் முன் அலுவலக அறை திறந்து இருந்ததும், அதை அவள் பூட்டியதும் அவளுக்கு நினைவுக்கு வர, என்ன நடந்திருக்கும் எனப் புரிந்து கொண்டவளுக்கு நெஞ்சு கூடு உலர்ந்து போனது. பயத்தில் வேகமாகத் துடித்த இதயத்தை வலது கைக் கொண்டு தன் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்ட ஸ்னேகாவின் முகம் முத்து முத்தாக வியர்க்க, அவளது கால்களோ பயத்தில் தானாக நடுங்க, ஓரடி பின்னால் நகர்ந்தது.


ஸ்னேகாவின் வியர்த்த முகத்தைக் கண்டு, "என்னாச்சு மேடம்?" என்று கேட்டான் ராபர்ட்.


அவளோ அங்குத் தொங்கிக் கொண்டிருந்த சாவியையும், அலுவலக அறையையும் மிரட்சியுடன் மாறி மாறி பார்த்தாள்.


அவள் பார்வை செல்லும் திசையைக் கவனித்தவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்கவும், வேகமாகச் சென்று சாவியை எடுத்தவன், அதன் உதவியால் அந்த அலுவலக அறையின் கதவைத் திறந்து பார்த்தான்.


அறையின் உள்ளே இருந்த இருக்கையில் கண்கள் சிவக்க, ருத்ர மூர்த்தி அவதாரம் எடுத்திருந்தவனாக அமர்ந்திருந்தான் ரிஷிவர்மன்.


ஆம்! ஸ்னேகா சிலிண்டரின் ரெகுலேட்டர் சரியாகப் பூட்டி இருக்கிறதா இல்லையா எனச் சரி பார்க்க சமையல் அறைக்குள் நுழைந்த நேரம் தான் ரிஷிவர்மன் தனது லேப்டாப்பை எடுக்க வீட்டுக்கு வந்தான். வந்தவன் மொபைலை அங்கிருந்த சோபாவில் போட்டு விட்டுத் தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.


கணவன் வந்ததை அறியாத ஸ்னேகாவோ திறந்திருந்த அலுவலக அறையைத் தெரியாமல் பூட்டி விட்டாள். கதவு பூட்டும் சத்தம் கேட்டு ரிஷிவர்மன், "ஏய்! கதவைத் திற! நான் உள்ளே இருக்கேன்" என்று அவன் சத்தம் போட, அவள் காது கேட்கும் கருவியைக் கழட்டி வைத்திருந்ததால் உள்ளிருந்து கணவன் கத்திய சத்தம் எதுவும் அவள் காதில் விழவே இல்லை.


தனது பி.ஏ ராபர்ட்க்கு உடனே அழைத்து விஷயத்தைச் சொல்ல நினைத்தவன், தனது மொபைலைத் தேடினான். அது தன்னிடம் இல்லை என்றதும், அப்பொழுதுதான் வெளியே சோபாவில் தூக்கி எறிந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது.


"ஷிட்!!" எனக் கோபம் கொண்டவன், மீண்டும் வேகமாகக் கதவைத் தட்டி ஸ்னேகாவை அழைத்தான். பல வருடங்கள் காத்திருந்து கிடைக்க இருந்த அந்தப் பிஸ்னஸ் கான்ட்ராக்ட் இப்பொழுது கைவிட்டுப் போய் விடுமோ? எனப் பதற்றம் கொண்டான் ரிஷிவர்மன். நேரம் வேறு கடந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் கத்தி கத்தி ஓய்ந்தே போனான்!


நேரம் செல்ல செல்ல, பிஸ்னஸ் கான்ட்ராக்ட் கிடைக்கும் என்ற அவனது நம்பிக்கையும் காணாமல் போய் விட்டது. இதற்கெல்லாம் காரணம் ஸ்னேகா என்றதும், அவனது கோபம் அவள் மீது அதிகரித்துக் கொண்டே போனது.


சும்மாவே அவளைப் பாடாய்ப்படுத்த காத்திருப்பவனிடம் இப்பொழுது தானாய் வந்து சிக்கி இருந்தாள் ஸ்னேகா.


கணவனின் கோப முகத்தைப் பார்த்ததும் பாவையவளுக்கு நெஞ்சில் நீர் வற்றி போக, பயத்துடன் நின்றிருந்தாள் ஸ்னேகா.


ரிஷியின் பார்வையோ மனைவியிடம் இருந்து இப்பொழுது அங்கு நின்றிருந்த ராபர்டிடம் நிலைத்தது.


தனது முதலாளியின் பார்வைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ராபர்ட்டோ, 'இல்லை' எனும் விதமாகத் தலையை இடம் வலம் ஆட்ட, அடுத்த நிமிடம் ஆக்ரோஷமாக எழுந்த ரிஷிவர்மன், அதே வேகத்துடன் வெளியே வந்தான்.


அவன் வந்த வேகத்திலேயே அவனது கோபமும், கூடவே தான் செய்த மிகப் பெரிய தவறும் ஸ்னேகாவுக்குப் புரிந்தது. தான் அறியாமல் செய்த தவறுக்குக் காரணம் சொல்ல நினைத்தவள், "அத்து.. நா..நான்…" என்று அவள் வாய் திறக்கும் நேரம்,


அவளை உறுத்து விழித்தவன், தனது இடது கையின் ஆள்காட்டி விரலை தன் இதழில் வைத்து, 'மூச்! எதுவும் பேசாதே!' என்பது போல் அவளின் பேச்சை நிறுத்தியவன், அடுத்த நொடி அவளது கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு தரதரவென்று வெளியே இழுத்துச் சென்றான்.


கணவனின் பிடி இரும்பாக இருக்க, அது அவளுக்கு வலித்தாலும், அவன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள் ஸ்னேகா.


அவனோ நேரே தனது காரின் அருகே வந்து நின்றவன், பின்பக்க கதவைத் திறந்து அவளை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி விட்டு ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்தான். ஒருநொடி ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்த ரிஷிவர்மன், அடுத்த நொடி வாகனத்தைப் புயலை விட வேகமாகக் கிளப்ப, அதுவோ சாலையில் சீறிப் பாய்ந்தது.


கார் சென்ற வேகத்திலேயே அவனது கோபத்தை உணர்ந்த ஸ்னேகாவின் உள்ளுணர்வோ, ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்று எடுத்துக் கூறியது. மேலும் கணவன் தன்னை எங்கு அழைத்துச் செல்கிறான் என அவளுக்குப் புரியாவிட்டாலும், அவனிடம் கேட்கத் தைரியம் இல்லாததால், 'திக் திக்' இதயத்துடன் அமைதியாக இருந்தாள்.


அவள் பயந்தது போலவே சில மணி நேர பயணத்திற்குப் பின் சென்னையில் அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றது ரிஷியின் வாகனம். அவனது வாகனத்தைப் பார்த்ததும் காவலாளி ஓடி வந்து கேட்டை திறந்தான். உள்ளே போர்டிக்கோவில் காரை நிறுத்திய ரிஷிவர்மன், சிறிதும் கோபம் குறையாமல் காரில் இருந்து இறங்கியவன், ஸ்னேகாவை உக்கிரமாகப் பார்க்க, அவளோ நெஞ்சம் படபடக்கக் கணவனைத்தான் பயத்துடன் பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள்.


அவளைப் பார்க்க பார்க்க அவனுள் அப்படி ஒரு கோபம் தான் எழுந்தது. சொடக்கிட்டு அவளை, "ஏய்! கீழே இறங்கு!" என்று அவன் கூற,


"ப்ளீஸ் அத்து! நான் வேணும்ன்னு பண்ணல" என்றவளைச் சட்டை செய்யாமல் அவளது கையைப் பிடித்து வெளியே இழுத்தவன், அதே வேகத்தில் அவளை இழுத்துக் கொண்டு தனது வீட்டின் உள்ளே சென்றான் ரிஷிவர்மன்.


மாலை நேரம், அவனின் வீடு ரொம்பவே அமைதியாக இருந்தது. ரவிவர்மன் இன்னும் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கவில்லை. ரம்யா அவளது அறையில் படித்துக் கொண்டு இருக்க, கணவன் வரும் நேரம் என்பதால் தங்களது அறையில் இருந்து வெளியே வந்த ஓவியா, மெதுவாகப் படி இறங்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் காதில்,


"அத்து! நான் சொல்றதை ஒரு தடவையாவது கேளுங்க" என்ற ஸ்னேகாவின் கெஞ்சல் குரலும்,


"என்னடி சொல்ல போற? அதான் எல்லாம் போச்சே! டேமிட்! உன்னால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா?" என்ற கர்ஜனை குரலும் விழுந்தது.


மேலும், "காசு பணத்தை விடு! என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே நாசமா போயிடுச்சி! இதெல்லாம் யாரால? உன்னால..!! உன்னோட இந்த டப்பா காதால தானே..!! அப்பவே சொன்னேன்.. ‘உன்னை எனக்குப் பிடிக்கல. உன்னை மாதிரி ஒருத்தி கூட என்னால வாழ முடியாது’ன்னு மண்டையில உரைக்கிற மாதிரி சொன்னேனே, கேட்டியா?" என்று சிங்கமாய் அவன் சிலிர்த்துக் கொண்டு கர்ஜித்தான்.


அப்பொழுதும் அவள் தன் பக்க காரணத்தை அவனுக்குச் சொல்லி விடும் பொருட்டு, "அத்து! ப்ளீஸ்! என்ன நடந்ததுன்னு என்னைச் சொல்ல விடுங்களேன்" அவள் கெஞ்ச,


"இனி பேசுறதுக்கு ஒன்னும் இல்ல. உன்னைப் பார்த்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு. என்னைப் பிடிச்ச சனியன் நீ! நீ என்னை விட்டுப் போனா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்" என்று வார்த்தைகளை அனலாய் கக்க, ஸ்னேகாவோ அவனது பேச்சைக் கேட்டு அதிர்ந்து கண்களில் கண்ணீர் வழிய அப்படியே நின்றாள். அவன் மீது காதல் கொண்ட அவளது மனமோ அவன் பேச்சில் ஊமையாய் அழுதது.


அவனோ சிறிதும் கோபம் குறையாமல், "இதுதான் நான் உன்னைக் கடைசியா பார்க்கிறதா இருக்கணும். புருஷன்னு என்னைச் சொந்தம் கொண்டாடிகிட்டு இனி நீ பெங்களூர் பக்கம் வந்துடலாம்னு கனவுல கூட நினைக்காதே! அப்படி வந்தே.." என்று சீறியவன், மனைவியின் அதிர்ந்த முகத்தைக் கண்டு கொஞ்சமும் இளகாமல் வாசலை நோக்கி நடந்தவன், சட்டென நின்றான். அவனால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. காரணம், அவனது கையைப் பிடித்து நிறுத்தி இருந்தது ஒரு கரம்!


'மனைவி தானோ?' என எண்ணியவன் பல்லைக் கடித்தபடி கோபத்துடன் திரும்பிப் பார்த்தான் ரிஷிவர்மன். ஆனால் அவனைப் பிடித்து நிறுத்தியது, ஸ்னேகா அல்ல அவனது அன்னனை ஓவியா.


ஆம்! மெதுவாகப் படியிறங்கிக் கொண்டிருந்த ஓவியாவின் செவியில் மகன் மற்றும் மருமகளின் குரல் விழவும், உள்ளம் பூரிக்க, "என் புள்ள வீட்டுக்கு வந்திருக்கானா?" எனச் சந்தோஷப்பட்ட அதே நேரம், அவன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவள் காதில் விழ, ஏதோ பெரிய விஷயம் என்று புரியவும் தட்டுத் தடுமாறி இறங்கி வந்தவள், மகனின் குரல் கேட்ட திசையில் வந்து அவனது கையைப் பிடித்து இருந்தாள்.


தனது கையையும், அதைப் பிடித்திருந்த அன்னையின் கையையும் பார்த்த ரிஷியின் பார்வை மெதுவாக உயர்ந்து அன்னையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது. அவனது கண்களில் இரையைக் கண்டு விட்ட புலியின் சீற்றம் தான் தெரிந்தது.


கணவனின் செயலிலும், பேச்சிலும் அதிர்ந்து அவனையே பார்த்தபடி நின்றிருந்த ஸ்னேகாவுக்கோ, இப்பொழுது கணவனது கண்ணில் தெரிந்த எரிமலையின் சீற்றத்தைக் கண்டு உள்ளம் பதைபதைத்தவள், வேகமாகத் தனது அத்தையின் அருகே சென்று நின்று கொண்டாள்.


ஓவியாவோ மகனின் மனநிலையை அறியாமல், "ராஜா! என்னாச்சுப்பா? எதுக்கு ஸ்னேகா மேல இவ்ளோ கோபமா இருக்க?" என்று கேட்கவும்,


அவனோ, அன்னையிடம் இருந்து தன் கைகளை உதறிக் கொண்டு, தன் கண்களை மூடி முடிந்தவரை தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றவன், "ரம்யா..!!" என்று அந்த வீடே அதிர கத்தினான்.


திடீரெனக் கேட்ட தனது அண்ணனின் சத்தத்தில் படித்துக் கொண்டிருந்த ரம்யா அடித்துப் பிடித்துத் தனது அறையில் இருந்து ஓடி வந்தாள்.


அங்கே ஹாலில் ருத்ர மூர்த்தியாக நின்றிருந்த தன் அண்ணனும், அவன் அருகில் நின்றிருந்த அன்னையும், கூடவே கண் கலங்க நின்றிருந்த ஸ்னேகாவையும் பார்த்தவள், என்னவோ ஏதோ என்று பதறி அண்ணனை நோக்க,


ரிஷியோ தங்கையைப் பார்த்ததும், "இவங்களை என்கிட்ட பேச வேணாம்ன்னு சொல்லு!!" என்று கர்ஜித்தான்.


ஓவியாவோ மகன் தன்னைத் தான் சொல்கிறான் என்று புரியவும், "ஏன் பேசக் கூடாது? நான் பேசுவேன்! இப்ப எதுக்கு நீ ஸ்னேகாகிட்ட இப்படிக் கோபமா பேசிட்டு இருக்கே? அவ உன் பொண்டாட்டி. இப்படித்தான் அவ மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுவியா?" என்று கண்டிப்புடன் மகனிடம் கேள்வி கேட்டாள்.


அதில் மேலும் கோபம் கொண்டவன், தாயை நேருக்கு நேர் பார்த்து, "அதைச் சொல்ல நீங்க யார்? உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" என்று சீறினான்.


ஓவியாவோ அவனது பேச்சில் நிதானமாக, "ரிஷி! நான் உன் அம்மாடா.. உன்கிட்ட பேச எனக்கு முழு உரிமை இருக்கு!" என்று ஓவியா கூறி முடிக்கவில்லை! உடனே அவன் கோபம் முழுவதும் இப்பொழுது தாயிடம் திரும்ப,


"யாருக்கு யார் அம்மா? நீங்க என் அம்மா இல்ல.." என்று கூறி தாயை உறுத்து விழித்தான்.


ஓவியாவோ, "ரிஷி.." என்று அதிர,


அவனோ, "எனக்கு அம்மான்னா அது என்னோட ராஜிமா மட்டும் தான்! நீங்க இல்ல.. உங்களைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல. இந்த உலகத்திலேயே நான் அதிகமா வெறுக்கிறது யார் தெரியுமா? நீங்க தான்! உங்களை மட்டும்தான்..!!" என்று ஆக்ரோஷமாகக் கூறிய ரிஷிவர்மன், தாயைப் பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.


ஓவியாவோ மகனின் பேச்சில் இதயம் வலிக்க, அவனது முந்தைய கோபத்தை விடுத்து, "இப்படி வெறுக்கிற அளவுக்கு இந்த அம்மா என்னப்பா தப்பு பண்ணினேன்?" என்று கேட்டது தான் தாமதம்! அங்கிருந்த சோபாவை ஒரே உதையில் உதைத்துத் தள்ளிய ரிஷிவர்மன்,


"என்ன பண்ணல நீங்க? ஹான்.. சொல்லுங்க! என்ன பண்ணலை? என் ராஜிமாவைக் கொன்ன கொலைகாரி நீங்கதான்..!!" என்று இத்தனை வருடங்களாய் தன் மனதில் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்த ரிஷிவர்மன் இன்று வெடித்து விட்டான்.


அவனது குற்றச்சாட்டில் "ராஜா!!" என்று அதிர்ந்தது ஓவியா மட்டும் அல்ல, அங்கு நின்றிருந்த ரம்யாவும் ஸ்னேகாவும் ஒரு சேர ஸ்தம்பித்துப் போனார்கள்.


எது நடக்கக் கூடாது என்று ரவிவர்மன் பயந்தானோ, எது மனைவிக்குத் தெரிய கூடாது என்று இத்தனை வருடங்களாகத் தன் மகனையே தள்ளி வைத்தானோ, அந்த நிகழ்வு இப்பொழுது அங்கே நடந்து கொண்டிருந்தது.


தனது அண்ணனின் பேச்சில் அதிர்ந்து நின்றிருந்த ரம்யா, நிலைமை மோசமாவதை உணர்ந்து அவன் அருகே ஓடியவள், "அண்ணா! உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன். நீ பேசினது எல்லாம் போதும்! தயவு செஞ்சு இங்க இருந்து போயிரு, ப்ளீஸ்!" என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.


அவனோ, அவளைச் சட்டை செய்யாமல் தாயை மேலும் நோகடிக்கும் எண்ணத்தில், "என்ன அதிர்ச்சியா இருக்கா? எனக்கும் அன்னைக்கு அப்படித்தான் இருந்துச்சு. அம்மா அம்மானு கதறினேனே? உங்களுக்குக் கேட்கவே இல்லையே! உங்களால நான் என் ராஜிமாவை இழந்தது தான் மிச்சம்!" என்றவனின் குரல் சற்று கரகரத்து ஒலித்ததோ..??


அதை மற்றவர்கள் அறியும் முன் சட்டென மாற்றிக் கொண்டவன், "உங்களுக்குக் கண்ணு மட்டும் தான் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா காதும் கேட்காதுனு அன்னைக்குத் தான் எனக்குத் தெரிஞ்சுது" என்றவன் தாயென்றும் பாராமல் வீரியமான வார்த்தைகளை வீசிக் கொண்டே இருக்க, ஓவியாவின் நிலைமை தான் மகனின் பேச்சில் இன்னும் இன்னும் மோசமாகிக் கொண்டே போனது.


ஓவியாவின் மனநிலையை உணர்ந்து கொண்ட ஸ்னேகாவோ, "அத்து! உங்களுக்கு என் மேல தானே கோபம். இப்ப என்ன? உங்களுக்கு என் கூட வாழ விருப்பம் இல்ல, நான் உங்க முன்னாடி வரக் கூடாது! அவ்வளவு தானே? நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். ப்ளீஸ்! ஓவிமாவை எதுவும் சொல்லாதீங்க! அவங்களை வருத்தப்பட வைக்காதீங்க!" என்று தன்னால் தான் கணவன் இப்படி நடந்து கொள்கிறானோ? என எண்ணித் தன் பங்கிற்கு அவனிடம் கெஞ்சினாள்.


அவனோ, "உன்னைப் பேச வேண்டாம்ன்னு அப்பவே சொல்லிட்டேன்" என்று அவளிடமும் சீறினான்.


ரம்யாவோ, "அண்ணா! வேணாம்ண்ணா.. அம்மா பாவம்!" என்று ரம்யா கெஞ்ச கெஞ்ச, அவன் மேலும் மேலும் பேசிக் கொண்டே போனான். அண்ணனின் பேச்சை எப்படித் தடுத்து நிறுத்துவது? என்று தெரியாமல் தவித்துப் போன ரம்யாவுக்குச் சட்டெனத் தந்தையின் நினைவு வந்தது.


"அ..அப்பா.. அப்பா…" என்று கதறியவள், அடுத்து ஓடியது தனது அறைக்குத்தான். அங்கே கட்டிலில் கிடந்த தனது மொபைலில் இருந்து தந்தைக்கு அழைத்தாள் ரம்யா.


அந்தப் பக்கம் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த ரவிவர்மனோ, தனது மொபைல் ஒலிக்கவும் எடுத்துப் பார்த்தவன், அழைப்பது மகள் என்றதும் உடனே அட்டன்ட் செய்து, "சொல்லு குட்டிமா!" என்று கூறவும்,


ரம்யாவோ, "அப்பா.." என்றவள், மேற்கொண்டு பேச்சு வராமல் அழுகையில் விக்கிக் கொண்டு இருந்தாள்.


மகளின் அழுகையை நொடியில் உணர்ந்து கொண்ட ரவிவர்மன், வாகனத்தைச் சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு, "ரம்யா! என்னடா? எதுக்கு அழற? அம்மா எங்கே?" என்று பதட்டத்துடன் கேட்டான்.


அவளோ, "அப்பா.. அண்ணா அண்ணா.." என்றவளுக்குக் கோர்வையாக வார்த்தை வரவில்லை. மாறாக அன்னையின் ஸ்தம்பித்த நிலையை நினைத்து அழுகை தான் வந்தது.


"அண்ணனா? ரிஷி வந்துருக்கானா?" என்று கேட்ட ரவிவர்மனுக்கு மகளின் அழுகை ஏதோ விபரீதத்தை உணர்த்த, "அ..அம்மாவை ஏதும் சொன்னானா?" என்று இந்த ரெண்டு வார்த்தையைக் கேட்டு முடிப்பதற்குள் அவன் இதயத்தில் பிரளயமே வெடித்தது.


"ஆமாப்பா, என்னென்னமோ பேசிட்டான். அம்மா பாவம்பா! எனக்குப் பயமா இருக்கு. சீக்கிரம் வாங்கப்பா!" என்று அவள் சொல்லி முடிக்கவும், திடுக்கிட்டுத் தனது கையில் இருந்த மொபைலை நழுவ விட்ட ரவிவர்மன், அடுத்த நொடி காரை புயலை விட வேகமாகச் செலுத்தினான்.


தந்தையிடம் பேசி விட்டு ஹாலுக்கு ஓடி வந்தாள் ரம்யா. மகன் பேசியதைக் கேட்டுப் பாதி உயிராக நின்றிருந்த ஓவியா நிலைதடுமாறி கீழே சரியவும், "ஓவிமா! அம்மா!" என்று ரம்யாவும், ஸ்னேகாவும் இருபக்கமும் அவளைத் தாங்கி கொண்டனர்.


தாயின் கன்னத்தைத் தட்டி அவளது உறைந்த நிலையை மீட்டெடுக்க முயன்ற ரம்யா, "அம்மா! என்னைப் பாருங்க!" என்றாள். அன்னையிடம் எந்த அசைவும் இல்லை, மாற்றமும் இல்லை என்றதும்.. பதட்டம் கொண்டவள், தாயின் இந்த நிலைக்குக் காரணமான அண்ணனைக் கோபமாகப் பார்த்து,


"உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? அம்மாவை இப்படித்தான் பேசி நோகடிப்பியா? அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு…" என்று பேசி முடிப்பதற்குள்,


"என்ன பண்ணுவ?" என்று தெனாவெட்டாகக் கேட்டவன், "மனசாட்சி இருந்ததுனாலதான் இவ்ளோ நாள் அமைதியா இருந்தேன். ஆனா இவங்களுக்குத்தான் மனசுன்னு ஒன்னு இல்லவே இல்ல. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம என் ராஜிமாவைக் கொன்னவங்க. இவங்க எல்லாம் உயிரோட இருக்கிறதுக்குப் பதில்…" என்று அவன் மேலும் வார்த்தையை அனலாய் கக்கும் முன், அவன் கன்னத்தில் இடியாய் இறங்கியது ரவிவர்மனின் கரம்.


தன்னை அடித்த தந்தையை இறுக்கத்துடன் ரிஷிவர்மன் பார்த்தான் என்றால், ரவிவர்மனோ மகனை அனல் தெறிக்கப் பார்த்தவன்,


"என் பொண்டாட்டியைப் பேச நீ யாருடா? என் அம்மா மேல எனக்கில்லாத அக்கறை உனக்கு எதுக்கு? இத்தனை வருஷமா என் ஓவிமாக்கு எது தெரிய கூடாதுன்னு நினைச்சேனோ, எல்லாத்தையும் சொல்லி, அவ மனசை மொத்தமா சிதைச்சிட்டியேடா!!" என்று கூறி, மறுபடியும் மகனை அடிக்கக் கையை ஓங்கினான்.


அதற்குள் "அப்பா.." என்ற ரம்யாவின் அலறல் சத்தத்தில் சடாரெனத் திரும்பிய ரவிவர்மன், அங்கே திக்பிரம்மை பிடித்தார் போன்று அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்ததும் அவளிடம் ஓடினான்.


"ஓவிமா.." என்று மனைவியின் கன்னத்தை வேகமாகத் தட்ட, கணவனின் தவிப்பான குரலில் தன்னுணர்வுக்கு வந்த ஓவியா,


கணவனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள், "எ...என்...என்னை ம..மன்னிச்சுருங்க!!" என்றவளின் பேச்சு அத்தோடு நின்று போனது.


ஸ்னேகாவும் விழிகள் கலங்க அதிர்ந்து அவரைப் பார்க்க, ரவிவர்மனோ, "ஓவியா, ஓவிமா! பேபி!" என்று மனைவியின் கன்னம் தட்டி வேகமாக அவளை உலுக்க, அவளிடம் எந்த அசைவும் இல்லை என்றதும், "ஓவிமா!" என்று கதறியபடி தன் மனைவியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அன்று தாய்க்கு இந்த நிலைமை ஏற்பட்டதும், அந்தச் சூழ்நிலையைச் சட்டென கையில் எடுத்து அதைக் கடந்து வந்தவனுக்கு, மனைவி என்றதும் நிலைதடுமாறிப் போனான்.


மனைவியை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை மறந்து, "ஓவிமா! ஓவி!" என்று அவன் பிதற்றிக் கொண்டிருக்க, ரம்யாவோ மகளாய் அந்தச் சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள்.


"அப்பா! எழுந்திரிங்க.. அம்மாவைச் சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிடலாம்" என்று தந்தையைத் துரிதப்படுத்த, அதில் தன்னை மீட்டெடுத்தவன், அடுத்த நொடி மனைவியைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டு காரின் அருகே செல்ல, ரம்யாவும் தந்தையைப் பின்தெடர்ந்தாள்.


மனைவியை மகளின் அருகில் கிடத்தி விட்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன், காரை வேகமாகக் கிளப்பினான்.


இங்கு வீட்டிலோ, அந்த இடமே புயல் அடித்தது போல் ஓய்ந்திருக்க, 'யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன..?' என்பது போல் இரக்கம் இல்லாமல் இறுமாப்புடனும் நின்றிருந்தான் ரிஷிவர்மன்..!!


ஸ்னேகாவோ கண்ணீர் வழிய அவன் முன்பு வந்து நின்றவள், "இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க..? இப்படி நடக்கணும்னு தானே இவ்வளவு நாளும் காத்திருந்தீங்க.? நீங்க நினைச்சது நடந்துருச்சில.. போதுமா? இப்ப உங்களுக்குச் சந்தோஷமா?" என்று அழுகையுடன் கேட்டவளைக் கொஞ்சமும் மதிக்கவில்லை அவன்.


அவனது இந்தக் குணத்தைக் கண்டு, 'இவனையா உருகி உருகி உயிருக்கு உயிராகக் காதலித்தேன்..? இவனையா மனதில் பொத்தி பொத்தி வைத்துப் போற்றினேன்..? இவனுக்காகவா இவன் செய்த அனைத்தையும் பொறுத்துப் போனேன்..!!' என நினைத்து மனதுக்குள் வெறுத்துப் போனாள் ஸ்னேகா. அவள் கண்களிலோ கண்ணீர் பெருகியது.


'இப்படி இரக்கமற்ற கணவனுக்காக, தான் கண்ணீர் சிந்துவதா? இனி ஒரு சொட்டுக் கண்ணீர் கூட இவன் முன் சிந்தக் கூடாது!' என்று முடிவெடுத்தவள், கன்னத்தில் வழிந்த நீரை அழுத்தித் துடைத்து விட்டு, வேகமாகத் தங்களது அறைக்குச் சென்றாள்.


சென்ற வேகத்தில் திரும்பி வந்து, கணவனின் முன் நின்றவளின் கையில் ஒரு பேப்பர் இருந்தது. அதைக் கண்டு, அவன் தன் புருவத்தைத் தூக்கிக் கேள்வியாக அவளைப் பார்க்க,


"இது என்னன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா.? நமக்குக் கல்யாணம் ஆன அன்னைக்கு முதல் ராத்திரி அப்போ, கல்யாணப் பரிசா, நீங்க எனக்குக் கொடுத்த விவாகரத்துப் பத்திரம் தான்..!! இத்தனை நாளா என்னைக்காவது ஒரு நாள் நீங்க மனுஷனா மாறுவீங்க. என் காதல் உங்களை மாத்தும்ன்னு நம்பிக்கையில் காத்திருந்தேன். ஆனா இன்னைக்கு நீங்க ஓவிமாகிட்ட நடந்துகிட்டது.." என்று வாய் பொத்தித் தனது அழுகையை அடக்கியவள்,


"அம்மான்னு கூடப் பார்க்காம இன்னைக்கு நீங்க பேசுன பேச்சுல, உங்களை என்னால் எப்பவுமே மன்னிக்க முடியாது. மன்னிக்கவும் மாட்டேன்! உங்க கூட வாழவும் மாட்டேன்! அதான் அன்னைக்கு நீங்க என்கிட்ட கேட்ட டிவோர்ஸை, இப்ப இந்த நிமிஷம் தர முடிவு பண்ணிட்டேன். இனி நீங்க மாறினாலும் எனக்கு நீங்க வேண்டாம். ஐ ஹேட் யு அத்து! ஐ ஹேட் யு! இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. இனி நீங்க யாரோ, நான் யாரோ!" என்றவள், மடமடவென்று அந்த விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டு, கணவனின் மீதே அந்தப் பேப்பரை விட்டெறிந்தாள்.


அதில் ரிஷிவர்மனின் தன்மானம் சீண்டப்பட, கோபத்துடன், "ஏய்!" என்று அவளை அடிக்கக் கையை ஓங்கி விட்டான்.


ஸ்னேகாவோ அதற்குப் பயப்படாமல், "ஏன் கத்துறீங்க? எனக்குக் காது நல்லாவே கேட்கும்" என்று அழுத்தமாகக் கூறி விட்டு,


"குட் பை!!" என்றவள், கணவனைத் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள்


    *****

No comments:

Post a Comment