ஸ்வரம் 24

 



ஸ்வரம் 24..



இருபது வருடங்களுக்கு முன்..


ஓவியாவின் வீடு சந்தோசத்தில் களைகட்டி இருந்தது. ஆம்! ரிஷிவர்மன் பிறந்ததும் அடுத்த குழந்தை வேண்டாம் என்று உறுதியாக இருந்த ரவிவர்மனின் மனதை கரைத்த ஓவியா, இதோ, ஆறு வருடங்கள் கழித்து இரண்டாவதாகக் கருவுற்றிருந்தாள். அதை அறிந்த மோகனாவின் குடும்பம் ஓவியாவைப் பார்க்க ரவிவர்மனின் வீட்டுக்கு வந்திருந்தார்கள். 


ராதா தன் மகளிடம் நலம் விசாரிக்க, மோகனாவோ, "ஓவி பேபி! இந்தத் தடவை என் பையனுக்கு ஒரு பொண்ணைப் பெத்து கொடுடி" என்றபடி தோழியைக் கட்டிக் கொண்டாள். கார்த்திக்கும் ரவிவர்மனை அணைத்துக் கொண்டு வாழ்த்து தெரிவிக்க, அங்கே அழகானதொரு மகிழ்ச்சியான சூழல் உருவானது.


அப்பொழுது தூங்கி எழுந்து வந்தான் ஆறு வயதே ஆன குழந்தை ரிஷிவர்மன். ஹாலில் இருந்த தங்களது மாமன் குடும்பத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அவன் அங்கு ஓடி வர, அவனைப் பார்த்த விக்ராந்த், மேகா, நேகா மூவரும் குஷியாகி விட்டனர்.


நேகாவோ, "ரிஷி அத்தான் எழுந்தாச்சு, வாங்க விளையாடலாம்" என்று குதிக்க, அடுத்த நொடி குழந்தைகள் நால்வரும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.


இங்கு ஓவியாவின் அறையிலோ, "இப்ப தான்டி எனக்கு நிம்மதியா இருக்கு. எங்கே என் ஓவி பேபி ஒரே பேபியோட நிறுத்திருவாளோனு, தினம் தினம் உங்க அண்ணன்கிட்ட புலம்பிட்டு இருந்தேன் தெரியுமா..?" என்று தோழியின் கன்னம் கிள்ளி மோகனா தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.


ஓவியாவோ மோகனாவின் கையைப் பிடித்துக் கொண்டு, "மோனா! இப்ப கூட எனக்கு ரெண்டு மனசா தான்டி இருக்கு" என்றாள் சற்று இறங்கிய குரலில்.


அவளது பேச்சில், "ஏன்டி இப்படிச் சொல்றே? இந்த பேபியை பெத்துக்கிறதுல உனக்கு விருப்பம் இல்லையா?" என்று கேட்க,


"அப்படிலாம் இல்ல மோனா, ஆனா.." என்று ஓவியா இழுக்கவும்,


"நீ ஆனான்னு இழுக்கிறதைப் பார்த்தா அப்போ ஏதோ ஒன்னு உன் மனசுல இருக்கு. அது என்னனு மொதல்ல என்கிட்ட சொல்லு!" என்று அதட்டினாள் மோகனா.


ஓவியாவோ, "ரிஷியை நினைச்சுத்தான் கொஞ்சம் கவலையா இருக்கு மோனா" என்று தோழியிடம் அவள் வருத்தத்துடன் கூற,


"ரிஷியா? அவன் என்னடி பண்ணினான்?" என்று புரியாமல் கேட்டாள் மோகனா.

 

"ஆமா மோனா, அவன் என்கிட்ட ஒட்டவே மாட்டேன்கிறான்டி. ஏதோ பேருக்குத்தான் நான் அவனுக்கு அம்மாவா இருக்கேன். எனக்கும் எல்லோரையும் போல என் மகனைக் கொஞ்சணும். அவனுக்குச் சாப்பாடு ஊட்டணும். தலை வாரி ஸ்கூலுக்கு அனுப்பணும்னு.. இப்படி நிறைய ஆசைகள் இருக்கு. ஆனா ஒரு அம்மாவா அவனுக்கு இது எதுவும் என்னால செய்ய முடியல. அவனும் அதுக்கு அனுமதிக்க மாட்டேங்கிறான். 


சில நேரம் அதை நினைச்சு அழ ஆரம்பிப்பேன். என் கஷ்டத்தைப் பார்க்க முடியாம தான் ரவி அடுத்த குழந்தை வேணாம்னு முடிவில இருந்தாங்க. ஆனா ரெண்டாவது குழந்தை வேணும்ன்னு நான்தான் பிடிவாதம் பிடிச்சேன். 


இப்ப அடுத்த குழந்தை உருவானதை நினைச்சு ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்தக் குழந்தையும் ரிஷி மாதிரி என்கிட்ட ஒட்டாம போயிருமோனு ஒரு பயம் வருதுடி!" என்று தன் மனதில் இருந்ததைத் தோழியிடம் கொட்டினாள் ஓவியா.


மோகனாவோ, "ஏய் லூசு! அவனுக்கு இப்ப என்ன தெரியும்னு இப்படிப் பேசுற. அவன் பிறந்ததில இருந்தே அவனுக்கான தேவைகள் எல்லாத்தையும் உன் மாமியார் பார்த்துக்கிறதால, அவன் அவங்ககிட்ட அதிகம் பாசம் வச்சிருக்கான். அவங்கதான் எல்லாமே பண்ணணும்ன்னு நினைக்கிறான்.


அவன் உன்கிட்ட எதுவும் கேட்கிறது இல்லைங்கிறதுக்காக அவன் உன் புள்ள இல்லன்னு ஆகிருமா? சொல்லு! அவன் குழந்தைடி.. வளர வளர  அவனுக்கு விபரம் தெரியவும் கண்டிப்பா உன்னைப் புரிஞ்சிக்கிட்டு உன்கிட்ட வருவான்" என்று தோழிக்கு எடுத்துக் கூறியவள், அவள் மனதை மாற்றும் பொருட்டு,


"ஓவி! இந்த மாதிரி நேரத்தில நீ ரிலாக்ஸா இருக்கணும். மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காம நிம்மதியா மெலடிஸ் சாங்ஸ் கேளுடி!" என்று கூறிய மோகனா, திடீரென, "ம்மா.." என்று முனகியபடி தன் இடுப்பை பிடித்துக் கொண்டாள்.


தோழியின் சத்தத்தில் தன் கவலையை மறந்து, "மோனா! என்னாச்சுடி? வலி வந்துருச்சா?" என்று பதட்டத்துடன் ஓவியா கேட்க,


"ஹா ஹா.. இல்ல, உன் மருமக உதைக்கிறா" என மோகனா சிரித்துக் கொண்டே கூறவும்,


தோழியின் நிறைமாத வயிற்றை தடவிய ஓவியா, "மோனா! கேட்கணும்னு நினைச்சேன். அடுத்து என்னடி முடிவு பண்ணிருக்கே?" என்று கேட்டாள்.


"என்ன முடிவு? என்ன கேட்கிறே?" என்று மோகனா புரியாமல் கேட்க,


"இந்தக் குழந்தையோட நிறுத்திக்கப் போறியா? இல்ல இன்னும் பெத்துக்கப் போறியா?" என்று அவள் குறும்புடன் கேட்டது தான் தாமதம்! சற்று முன் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி விட்டு,


"உங்க நொண்ணனுக்குக் கொஞ்சம் கூட என் மேல இரக்கமே இல்லடி. நாலு குழந்தை போதும்னு மிரட்டி என்கிட்ட கையெழுத்து வாங்கிட்டார். நான் விட்ட சாபம் பலிக்கக் கூடாதுன்னுதான் இப்படிப் பண்ணிட்டார்" என்று மோகனா பொய் கோபத்துடன் கூற..


"அடிப்பாவி! ஏன்டி ரெண்டு மாசம் முன்ன நடந்தது உனக்கு மறந்து போச்சா? இன்னுமாடி உனக்கு குழந்தை ஆசை போகல?" என்று ஓவியா வியந்து கேட்டாள்.


"அது எப்படிப் போகும்? எனக்குத்தான் குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும்ன்னு உனக்குத் தெரியுமே? இன்னும் இன்னும் நிறைய குழந்தைகள் வேணும்னு தான் ஆசையா இருக்கு ஓவி. அதும் உங்க அண்ணன் குழந்தையைப் பெத்துக்க எனக்குக் கசக்குமா என்ன? ம்பச்.. என்ன பண்றது? உங்க அண்ணன் போதும் போதும்னு கெஞ்சுறாரே? அவரைப் பார்க்கவும் பாவமா இருந்தது. சரி, இந்த ஒரு விஷயத்திலையாவது அவர் பேச்சைக் கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று கூறிய மோகனாவின் வயிற்றில் மீண்டும் ‘சுளீர்’ என வலி வந்தது. இப்பொழுது சற்றுச் சத்தமாக அவள் கத்தி விட,


அதில் பயந்து போன ஓவியா, "மோனா! உனக்குப் பிரசவ வலி வந்துருச்சுனு நினைக்கிறேன்டி" என்றவள், "அம்மா.. அண்ணா.." என்று தாயையும், தமையனையும் கத்தி அழைத்தாள்.


அங்கே ஹாலில் குழந்தைகள் நால்வரும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஓவியாவின் பதட்டம் நிறைந்த குரல் கேட்கவும், ஹாலில் இருந்த அனைவரும் அறைக்குள் ஓடி வந்தனர். 


கார்த்திக்கோ, "ஓவிமா என்னாச்சுடா?" என்று சிறிது பதட்டத்துடன் கேட்கவும்,


"அண்ணா! மோனாக்கு லேபர் பெயின் வந்துருச்சுன்னு நினைக்கிறேன்" என்று ஓவியா கூறவும், மனைவியைப் பார்த்தான் கார்த்திக். அவளது முகம் வியர்த்து இருக்க, அவள் வலியைத் தாங்கிக் கொண்டு இருப்பது நன்றாகப் புரிந்தது.


"கார்த்திக்! மோகனாவைத் தூக்கு! ஹாஸ்பிட்டல் போகலாம்" என்ற ராதா மகனை அவசரப்படுத்தவும், சிறிதும் தாமதிக்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினான் கார்த்திக். ராதா மருமகளின் துணைக்கு அவளுடன் செல்ல, மற்றவர்களை அழைத்துக் கொண்டு தனது காரில் கிளம்பினான் ரவிவர்மன்.


அடுத்தச் சில மணி துளிகளில் பிரபல மருத்துவமனை ஒன்றில் பிரசவ அறையில் அனுமதிக்கப்பட்டாள் மோகனா. மேலும் ஒரு மணிநேரம் கடக்க, அவர்களது பெண்ணரசி இப்பூவுலகில் தனது பாதத்தைப் பதித்தாள். 


பிரசவ அறையின் வாசலில் பதட்டத்துடன் காத்திருந்தவர்களிடம் வந்த மருத்துவர், "மிஸ்டர் கார்த்திக்! உங்களுக்குப் பெண் குழந்தை பிறந்து இருக்கு" என்று கூறவும், எல்லோர் முகத்திலும் புன்னகை பூத்தது. 


குழந்தைகளோ, "ஹேய்! எங்களுக்கு இன்னொரு பாப்பா வந்தாச்சு" என்று சந்தோசக் கூச்சலிட்டுக் கத்தினார்கள். நேகாவோ, "ரிஷி அத்தான்! பார்த்தீங்களா? எங்க வீட்டுக்கு இன்னொரு பாப்பா வந்தாச்சு" என்று கூற,


ரிஷியோ, "எனக்கும் ஒரு தங்கச்சி பாப்பா வரப் போகுதுன்னு எங்க ராஜிமா சொன்னாங்க" என்று அவளிடம் கூறியவன், "அப்படித்தானே ராஜிமா?" என்று தாயிடம் அல்லாமல் தனது பாட்டியிடம் கேட்டு உறுதி படுத்திக் கொண்டான். 


அந்த மகிழ்ச்சியான தருணத்தில் கூட மகன் தன்னிடம் கேட்கவில்லை என்றதில் ஓவியாவின் மனம் சற்றுக் கலங்கித்தான் போனது.


அதைக் கவனித்த ரவிவர்மனோ, மனைவியின் அருகே வந்து அவள் தோளில் சற்று அழுத்தம் கொடுத்தவன், "ஓவிமா! என்ன இது? ம்ம்ம்…" எனச் சற்று அதட்டலுடன் கேட்க,


"இல்லைங்க.. ஒன்னும் இல்ல.." என்றவள், "அண்ணா! மோனா எப்படி இருக்கான்னு கேளுங்க" என்று கூறவும்,


மருத்துவரோ, "அவங்க மயக்கத்தில இருக்காங்க, நார்மல் வார்டுக்கு மாத்தினதும் எல்லோரும் போய்ப் பாருங்க. இப்ப குழந்தையை க்ளீன் பண்ணி நர்ஸ் கொண்டு வருவாங்க" என்றுவிட்டு அவர் உள்ளே சென்றார். 


அவர் சொல்லியது போல் அடுத்தச் சில நிமிடங்களில் வெள்ளைப் பூத்துவாலையில் ஒரு ரோஜா குவியலைப் பொதிந்து எடுத்து வந்த செவிலி பெண், "சார், இந்தாங்க உங்க குழந்தை.." என்று கார்த்திக்கிடம் குழந்தையை நீட்டினார், 


அவனோ புன்னகையுடன் தனது விரல் கொண்டு குழந்தையின் கன்னத்தைப் பாசத்துடன் வருடி விட்டு, "அம்மா! நீங்க வாங்குங்க" என்று தனது தாயிடம் கூறினான்.


ராதாவும் குழந்தையை வாங்கிக் கொஞ்ச ஆரம்பிக்க, சின்னவர்களோ, "பாப்பாவை எங்களுக்குக் காட்டுங்க" என்று அவரிடம் அடம் பிடிக்கவும், அவர்களிடம் காட்டி விட்டு, "சம்பந்தியம்மா இந்தாங்க.." என்று ராஜேஸ்வரியிடம் குழந்தையைக் கொடுத்தார் ராதா.


தன் கையில் வாங்கிக் குழந்தையின் நெற்றியில் முத்தம் பதித்த ராஜேஸ்வரி, "எங்க வீட்டுக்கு வரப் போற மகாலட்சுமி.. அப்படியே எங்க ஓவியா மாதிரி இருக்கா" என்று உள்ளம் பூரிக்கக் கூறவும், அதை எல்லோரும் சிரிப்புடன் ரசித்தனர். 


ராதாவோ, "அதென்ன சம்பந்தியம்மா இப்படிச் சொல்லிட்டீங்க? அப்போ எங்க நேகா யாருக்காம்? நீங்க சொன்னதை மட்டும் மோகனா கேட்டு இருக்கணும்.. உங்ககிட்ட சண்டைக்கு வந்துருப்பா" என்று சொல்லவும், 


ராஜேஸ்வரியோ, "எனக்கு என்னவோ இந்தச் சின்னக் குட்டிதான் என் பேரன் ரிஷிக்குப் பொருத்தமா இருப்பான்னு தோணுது சம்பந்தி" என்றவர், தன் அருகில் நின்றிருந்த தனது பேரனிடம் குழந்தையைக் காட்டி,


"ரிஷி கண்ணா! இங்க பாருங்க.. இவ தான் உனக்கானவ! இவளை வேற யாருக்கும் நீ விட்டுக் கொடுக்க கூடாது. நீதான் பத்திரமா பார்த்துக்கணும், சரியா?" என்று பேரனிடம் கூறினார்.


கண்களை மூடி ராஜேஸ்வரியின் கையில் சயனித்துக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்த ரிஷிவர்மனுக்கு, அவனது ராஜிமா சொன்ன சொல்லில் என்ன புரிந்ததோ? அல்லது அவர் கூறிய அந்த வார்த்தை அப்பொழுதே அவன் மனதில் ஆழ பதிந்து போனதோ? "நீ என்னோட பாப்பாவா?" என்றுவிட்டு சட்டென குழந்தையின் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டான். அவனது செயலில் அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.


அன்று மட்டும் அல்ல, அடுத்து வந்த நாட்களில் கூட அவன் குழந்தையை விட்டு அங்கும் இங்கும் எங்கும் நகரவில்லை. பள்ளி செல்லும் நேரமும் தூங்கும் நேரமும் தவிர்த்து, மற்ற நேரங்களில் மோகனாவின் தாய் வீட்டில் குழந்தையுடனே தான் இருந்தான் ரிஷிவர்மன்.


இரண்டு மாதங்கள் கடந்திருக்க, குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவை விமரிசையாக நடத்தி தங்களது நான்காம் மகவுக்கு, "ஸ்னேகா" என்று பெயர் வைத்த கார்த்திக், மனைவியையும் குழந்தையையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்தான்.


ஒருநாள் குழந்தைக்குப் பசியாற்றி விட்டுத் தொட்டிலில் கிடத்திய மோகனா, தூங்கும் தனது குழந்தையின் அழகை ரசித்தவள் பின்பு குளிக்கச் செல்ல, அப்பொழுது எப்பொழுதும் போல் மாமன் வீட்டுக்கு ராஜேஸ்வரியுடன் வந்தான் ரிஷிவர்மன்.


தனது பேரனைப் பார்த்த ராதா, "ரிஷி! இங்க பாட்டிகிட்ட வாப்பா" என்று பாசத்துடன் இருகரம் நீட்டி அவனை அழைத்தார்.


அவனோ, பெரிய மனிதன் தோரணையில் அவரைப் பார்த்தவன், "நான் உங்களைப் பார்க்க வரல" என்று விட்டு குழந்தையைக் காண மோகனாவின் அறைக்குச் சென்று விட்டான்.


ராதாவோ, 'ம்ம்ம்.. என் பிள்ளைக்கு(பொண்ணுக்கு) இப்படி ஒரு பிள்ளை!! இப்பவே இப்படி இருக்கான்.. வளர்ந்தா ஒருத்தரையும் மதிக்க மாட்டான் போல..' என மனதில் புலம்பியவர், ராஜேஸ்வரியை, "வாங்க சம்பந்தி!" என்று வரவேற்றார்.


இங்கு மாடிக்கு வந்த ரிஷிவர்மனோ, "அத்தை.." என்று குரல் கொடுத்து விட்டு கதவையும் சேர்த்துத் தட்ட, அதுவோ திறந்து கொண்டது. அறையின் உள்ளே வந்த ரிஷிவர்மன், ஸ்னேகா எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்ணில் ஆடிக் கொண்டிருந்த தொட்டில் பட்டது. அதன் அருகே வந்தவன் உள்ளே எட்டிப் பார்த்தான். 


குழந்தையோ தூக்கத்தில் இருந்து விழித்துத் தனது கால் கட்டை விரலை வாயில் வைத்துச் சூப்பிக் கொண்டு கொட்ட கொட்ட முழித்திருக்க, அதைக் கண்டதும் இவனுக்குச் சிரிப்பு வந்தது. 


ரிஷியோ, "பாப்பா! முழிச்சிட்டுத்தான் இருக்கியா? நான் வேணா தொட்டிலை ஆட்டி விடவா? நீ தூங்குறியா?" என்று கேட்டுத் தொட்டிலை ஆட்ட ஆரம்பித்தான்.


குழந்தையோ அவனைக் கண்டதும் தன் கையையும் காலையும் வேகமாக ஆட்டி ஆட்டி, "ங்கா ங்கா.." என்று தன்னைத் தூக்கும்படி சத்தமாகக் குரல் கொடுத்தது. 


குழந்தை ஸ்னேகா பிறந்து இரண்டு மாதமே ஆனாலும், தாயின் அருகாமையில் இருந்ததை விட, ரிஷியின் அருகாமையில் இருந்தது தான் அதிகம் என்று சொல்லலாம். ஏனெனில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் குழந்தை விடியும் நேரம் தான் தூங்குவாள். விடிய விடிய குழந்தையுடன் விழித்திருக்கும் மோகனா, பகலில் குழந்தைக்குப் பசியாற்றி விட்டுத் தொட்டிலில் தூங்க வைப்பவள், தானும் தூங்கிப் போவாள். 


ரிஷிவர்மனோ, பள்ளி செல்லும் முன் இங்கு வருபவன் குழந்தையைப் பார்த்தபடி அமர்ந்து இருப்பான். குழந்தையோ தூங்கி விழித்துப் பார்க்கும் முகம் ரிஷியுடையதாகத் தான் இருக்கும்.


அவனும் குழந்தையிடம் அவனுக்குத் தெரிந்த பாஷையில் பேசி விட்டு, தனது மாமன் பிள்ளைகளுடன் பள்ளிக்குச் சென்று விடுபவன், மாலையில் சரியாக நான்கு மணிக்கு அவர்களுடன் இங்கு வந்து விடுவான். 


சில நேரங்களில் மோகனா, "ரிஷி! பாப்பாவைப் பார்த்துக்கோ!" என்று மருமகனின் பொறுப்பில் மகளை ஒப்படைக்கும் அளவுக்கு குழந்தையின் கூடவே இருந்தான் ரிஷிவர்மன்.


விக்ராந்த், நேகா, மேகா மூவரும் அவனை விளையாடக் கூப்பிட்டால் கூட வரவில்லை என்று சொல்லி விட்டு, ஸ்னேகாவின் பக்கத்திலேயே இருப்பான். அதனால் தானோ என்னவோ, ரிஷியைப் பார்த்ததும் குழந்தை ஸ்னேகாவின் விழிகள் விரியும். அவள் இதழோ, தன்னைத் தூக்கு என்பது போல் "ங்கா ங்கா…" என்று சத்தம் எழுப்பும். 


இன்றும் அது போல் தொட்டிலில் கிடந்த குழந்தையிடம் ரிஷிவர்மன் விளையாடிக் கொண்டிருக்க,


"ரிஷி! எப்போ வந்தே?" என்று கேட்டபடி குளியல் அறையில் இருந்து வந்தாள் மோகனா.


அவனோ குழந்தையின் முகத்தில் இருந்த தனது பார்வையை விலக்காமல், "இப்ப தான் அத்தை நானும் ராஜிமாவும் வந்தோம்" என்றான் ரிஷிவர்மன்.


"பாப்பா என்ன பண்றா? முழிச்சுட்டாளா?" என்று கேட்ட மோகனா தொட்டிலில் இருந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டவள்,


"கீழே போகலாமா?" என்ற கேட்டபடி வெளியே செல்ல, தனது அத்தையைப் பின்தொடர்ந்தான் ரிஷிவர்மன்.


இப்படியே மேலும் ஒரு மாதம் கடக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை, எப்பொழுதும் போல் ரிஷிவர்மன், "ராஜிமா! வாங்க.. ஸ்னேகா பாப்பாவைப் பார்க்கப் போகலாம்" என்று அடம்பிடித்துக் கொண்டிருக்க,


ராஜேஸ்வரியோ, "நாளைக்குப் போகலாம் கண்ணா. இன்னைக்கு பாட்டிக்கு உடம்புக்கு முடியல" என்று சொல்லிச் சோர்வாகப் படுத்திருந்தார்.


அப்பொழுது, "அத்தை.." என்று அங்கு வந்தாள் ஓவியா. "என்னம்மா?" என்று கேட்ட மாமியாரின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து,


"அத்தை! என்னாச்சு உங்களுக்கு? ஏன் உங்க குரல் டல்லா இருக்கு? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?" என்று பதட்டம் கொண்டு அவள் கேட்க,


"என்னனு தெரியலமா.. உடம்பெல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்கிது. அதான் மாத்திரை போட்டுப் படுத்திருக்கேன். ரிஷி என்னன்னா அந்தச் சின்னக் குட்டியைப் பார்க்கப் போகணும்னு சொல்லிட்டு இருக்கான்" என்று அவர் பேச முடியாமல் மூச்சு வாங்கினார்.


அவளோ, "ரிஷி! பாப்பாவை நாளைக்குப் போய்ப் பார்க்கலாம் ராஜா. பாட்டிக்கு உடம்புக்கு முடியல பாரு" என்று மகனிடம் கூற, ரிஷியோ தாயை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.


அதை அறியாமல், "அத்தை! அவரை வரச் சொல்லவா? டாக்டர்கிட்ட போகலாம்" என்று அவள் மாமியாரின் நலனில் அக்கறை கொண்டு கேட்க,


அவரோ, "வேணாம் ஓவிமா.. ரவி இப்ப தான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனான். அவனைத் தொந்தரவு பண்ண வேணாம். கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிரும்" என்றவர்,


"ரிஷி இன்னும் சாப்பிடல. அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடும்மா" என்று அவர் கூற,


தனது பாட்டி சொன்னதைக் கேட்ட ரிஷியோ, "நோ, எனக்கு நீங்க தான் ஊட்டி விடணும்" என்று தனது பாட்டியின் கையைப் பிடித்து இழுத்தான்.


அவரோ, "ரிஷி கண்ணா! இப்ப நீ சமத்தா உங்க அம்மாகிட்ட சாப்பிடுவியாம், அவ உன்னை ஸ்னேகாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போவாளாம்" என்றதும், உடனே, "சரி ராஜிமா.." என்றவன் தன் தாயிடம், "அம்மா! சீக்கிரம் சாப்பாடு ஊட்டி விடுங்க. நான் இப்பவே பாப்பாவைப் பார்க்கணும்" என்று பரபரத்தான். 


மகனுக்குத் தன் கையால் உணவு அள்ளிக் கொடுக்கப் போவதை நினைத்த ஓவியாவின் மனம் நெகிழ, மகனின் கைப் பிடித்து இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். 


மருமகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியின் மனதிலோ குற்ற உணர்வு வந்தது. தாயிடம் இருந்து அவளது குழந்தையைப் பிரித்து விட்டோமோ என்று வருத்தம் கொண்டார். ஆனால் அதை அவர் வேண்டும் என்று செய்யவில்லையே? அவளால் முடியாத காரணத்தால் தானே ரிஷியைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அதை நினைத்து மனதை தேற்றிக் கொண்டவர் கண்களை மூடிக் கொண்டார்.


ஓவியாவோ, வெகு நாட்கள் கழித்து மகனுக்கு உணவு ஊட்டி விட்ட சந்தோச நிறைவுடன் தனது தாய் வீட்டுக்கு மகனுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்பொழுது டீபாயின் மீதிருந்த அலைபேசி ஒலி எழுப்பியது.


ஓடி சென்று எடுத்த ரிஷிவர்மன் ரீசீவரை காதில் வைத்து, "ஹலோ ரிஷிவர்மன் ஸ்பீக்கிங்.." என்று தந்தை சொல்லிக் கொடுத்தது போல் பேச, அந்தப் பக்கம் இருந்து என்ன சொல்லப்பட்டதோ? 


"அம்மா! ராதா பாட்டி உங்ககிட்ட பேசணுமாம்" என்றான்.


மகனிடம் இருந்து வாங்கிய ஓவியா, "அம்மா! அங்கே தான் கிளம்பிட்டு இருக்கோம்" என்று கூற,


அதற்கு ராதா என்ன சொன்னாரோ? "என்னம்மா சொல்றிங்க?" என்ற ஓவியாவின் குரலில் அதிர்ச்சி கலந்த பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.


தாயின் முகத்தைப் பார்த்த ரிஷிவர்மனோ, "அம்மா! என்னம்மா?" என்று அவள் சேலையைப் பிடித்து இழுத்தான்.


அவளோ தனது மகனைத் தன்னோடு அணைத்துக் கொண்டவள், "அம்மா! அப்படிலாம் இருக்காது. சரி, எந்த ஹாஸ்ப்பிட்டல் போயிருக்காங்க?" என்று விபரம் கேட்க,


"......."


"அம்மா! அழாதீங்க.. நான் தான் சொல்றேன்ல, அப்படியெல்லாம் எதுவும் இருக்காது. நான் உடனே வீட்டுக்கு வரேன்" என்றாள் ஓவியா.


அதற்குள் மருமகளின் பேச்சிலும், குரலிலும் இருந்த பதட்டத்தை உணர்ந்த ராஜேஸ்வரி, மெதுவாக எழுந்து அறையில் இருந்து வெளியே வந்தவர், "ஓவிமா! என்னாச்சு?" என்று கேட்க,


அவளோ, "அத்தை! நம்ம ஸ்னேகா குட்டி இருக்காள்ல, அவ கொஞ்ச நாளாவே நாம கூப்பிட்டாலோ சத்தம் கொடுத்தாலோ திரும்பிப் பார்க்க மாட்டேன்கிறா. முகத்துக்கு நேரா சொடக்கிட்டா மட்டும் தான் ஆள் பார்த்துச் சிரிக்கிறானு மோகனா சொல்லிட்டு இருந்தா. ஒருவேளை ஸ்னேகா குட்டிக்கு காதுல ஏதும் பிரச்சனை இருக்குமோன்னு எல்லோருக்கும் ஒரு சந்தேகம். 


அதான் எதுக்கும் ஒரு செக்கப் பண்ணிடலாம்னு அண்ணாவும், மோகனாவும் இன்னைக்குக் குழந்தையை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிருக்காங்களாம். அம்மா அதை நினைச்சு ஒரே புலம்பல்!" என்ற ஓவியாவுக்கும் தன் அண்ணன் மகளை நினைத்துக் கலக்கம் சூழ்ந்தது.


"கடவுளே! இது என்ன சோதனை?" என்று வாய் விட்டுக் கூறிய ராஜேஸ்வரி, "வா ஓவிமா, எதுக்கும் போய்க் குழந்தையை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாம்" என்றவர், தன் உடல்நிலையை நினைத்துக் கவலைப்படாமல் மருமகளையும் பேரனையும் அழைத்துக் கொண்டு கார்த்திக்கின் வீட்டுக்குச சென்றார்.


அங்கே மோகனாவின் வீட்டிலோ, குழந்தையின் நிலையை நினைத்து, அனைவரும் கலங்கிப் போயிருந்தனர்.


ஆம்! குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஸ்னேகாவிற்கு இனி காது கேட்காது என்றும், அன்று மோகனாவிற்கு நடந்த விபத்தால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் உள்ளது உள்ளபடி கூற, அதைக் கேட்டு மோகனா மருத்துவமனையிலேயே அழ ஆரம்பித்து விட்டாள்.


கார்த்திக்தான் மருத்துவரிடம் மேலும் விபரம் கேட்டுத் தன் மனைவியைச் சமாதானப்படுத்தி, வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றானது. 


விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து ராதா இடிந்து போய் சோபாவில் முடங்கி இருக்க, மோகனாவோ குழந்தை ஸ்னேகாவை மடியில் படுக்க வைத்தபடி கண் கலங்க கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.


அவள் அருகில் அமர்ந்த கார்த்திக், "மோகனா! இப்ப என்ன நடந்து போச்சுனு இப்படி உக்காந்து இருக்கே? இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லம்மா. 'இப்பதான் மெடிக்கல்ல அறிவியல் முன்னேற்றம் எவ்வளவோ வந்துருக்கு. சோ இது ஒரு குறையே இல்லை! அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்கனு' டாக்டர் சொன்னார் தானே?" என்று மனைவியை அவன் தேற்ற முயன்றாலும், தனது மகளின் நிலையை நினைத்து உள்ளுக்குள் துடித்துத்தான் போனான். 


ஆசை ஆசையாய் பெற்றுக் கொண்ட செல்ல மகளுக்கு, இப்படி ஒரு குறை இருப்பது அறிந்தால் யார் தான் தாங்கிக் கொள்வார்கள்? 


அவளோ, "எல்லாம் என்னால தானேங்க.. அன்னைக்கு நான் மட்டும் கொஞ்சம் கவனமா இருந்து இருந்தா, நம்ம குழந்தைக்கு இப்படி ஆகி இருக்காது தானே?" என்று கண்ணீர் வழிய கேட்கும் மனைவியை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் கார்த்திக் தவித்துக் கொண்டிருந்தான். 


தங்களது ராதா பாட்டி மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தாய் - தந்தையின் அறைக்கு வந்த விக்ராந்த், மேகா, நேகா மூவரும், "மோஹிமா! அழாதீங்க. பாப்பாக்கு ஒன்னும் இல்ல. நாங்க அவளை நல்லா பார்த்துப்போம்" என்று தைரியம் அளித்தார்கள்.


அதே நேரம் காரில் வந்து இறங்கிய ஓவியாவும், ராஜேஸ்வரியும் ரிஷியை அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே வர,


அங்கே சோபாவில் அமர்ந்திருந்த ராதாவைப் பார்த்ததும், "சம்பந்தி.." என்று ராஜேஸ்வரி அழைக்க,


"வாங்க சம்பந்தி.." என்று கண்ணீருடன் அவரை வரவேற்றார் ராதா. 


ஓவியாவோ, தாயின் கலக்கமான குரலில் என்ன உணர்ந்தாளோ? நேரே மோகனாவைத் தேடித் தன் மகனுடன் அவளது அறைக்குச் சென்றாள்.


ராதாவோ, "சம்மந்தியம்மா! எங்க குடும்பத்தோட சாபத்தைப் பார்த்தீங்களா? என் பொண்ணுக்குப் பிறவியிலே கண்ணு தெரியாம போயிடுச்சுன்னா, என் பேத்திக்குக் காது கேட்காம போயிடுச்சு" என்று கூற, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் ராஜேஸ்வரி. 


"என்ன சம்மந்தி சொல்றீங்க..?" என்று அதே அதிர்ச்சியுடன் கேட்க, 


"ஆமா சம்மந்திம்மா.. என் பேத்தி கேட்குற திறனை இழந்துட்டாளாம். டாக்டர் சொல்லியிருக்காங்க. பொம்பளை பிள்ளை சம்மந்தி.. அவ வாழ்க்கை என்னாகுமோ ஏதாகுமோ? இதெல்லாம் பார்க்கவா நான் இன்னும் உயிரோட இருக்கேன். அவர் போனப்பவே என்னையும் கூடவே கூட்டிட்டுப் போயிருக்கலாமே?" என்று அழுதபடி புலம்ப, 


"சம்பந்தி! என்ன இது சின்ன பிள்ளை மாதிரி? பிள்ளைகளுக்குத் தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே இப்படிக் கலங்கலாமா?" என்று அதட்டினார் ராஜேஸ்வரி.


"நான் என்ன பண்ணுவேன் சம்பந்தி? என் பேத்தி.." என்று ராதா கலங்க,


"அவளுக்கு என்ன ஆகிப் போச்சு இப்போ? ஒன்னும் இல்ல, அவ நல்லா இருக்கா. முதல்ல நீங்க இப்படிப் புலம்புறதை நிறுத்துங்க. உங்க பொண்ணுக்குக் கண்ணு தெரியாதது என்னைக்காவது நீங்க குறையா நினைச்சு இருக்கீங்களா? இல்ல தானே? அது மாதிரி காது கேட்காததும் குறையே கிடையாது சம்பந்தி" என்று ராதாவைத் தேற்றினார் ராஜேஸ்வரி.


ராதாவோ கசந்த முகத்துடன், "இதெல்லாம் பேசுறதுக்கும் கேட்குறதுக்கும் நல்லா இருக்கும் சம்மந்திம்மா. ஆனா நடைமுறைன்னு வரும் போது இது சாத்தியப்படாது. ஏன்னா எங்களுக்கு இதெல்லாம் குறையே கிடையாதுதான். ஆனா பார்க்கிறவங்களுக்கு அது பெரிய குறையா தானே தெரியும்?" என்று அவர் வருத்தத்துடன் கூற, 


ராஜேஸ்வரியிடம் சிறு மௌனம்! ராதா கூறுவதும் உண்மைதானே? பல வருடங்களுக்கு முன்பு ஓவியாவின் குறை தானே முதலில் தனக்குப் பெரிதாகத் தெரிந்தது. ராதாவின் வருத்தம் புரிய,


அவரது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு, "நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது சம்மந்தி. அன்னைக்கு ஓவியாவை அவளோட குறையை சுட்டிக்காட்டி வேணாம்ன்னு நான் மறுத்தேன்தான். ஆனா என் பையனோட விருப்பம் அவதான்னு தெரிஞ்சதும், ஓவியாவை மனசார மருமகளா, இல்ல இல்ல, மகளா நான் ஏத்துக்கலயா…?" என்று ராஜேஸ்வரி கேட்டதும்,


உடனே, "ஐயோ! நான் உங்களைச் சொல்லலை" எனப் பதறினார் ராதா.


"எனக்குத் தெரியும் சம்மந்தி" என்று அவரது கையைத் தட்டிக் கொடுத்த ராஜேஸ்வரி,


"கவலைப்படாதீங்க சம்பந்தி! உங்க பொண்ணு ஓவியாவைப் பத்திரமா பார்த்துக்க என் பையன் கிடைச்ச மாதிரி, உங்க பேத்தியைப் பத்திரமா பார்த்துக்க ஒருத்தன் வராமலா போயிட போறான்?" என்று கூறியவருக்கு சட்டென என்ன தோன்றியதோ? ஓர் முடிவெடுத்தவராக,


"அந்த ஒருத்தன் ஏன் என் பேரன் ரிஷியா இருக்க கூடாது?" என்று கூற, ராதாவோ, "சம்மந்தி!" என்றபடி திகைப்புடன் ராஜேஸ்வரியைப் பார்த்தார்.


"உங்க சம்மந்திதான் சொல்றேன், நல்லா கேட்டுக்கோங்க. என் பையன் ரவி உங்க பொண்ணை எப்படிப் பார்த்துக்கிறானோ, அதை விடப் பல  மடங்கு அக்கறையா ஸ்னேகா குட்டியைப் பார்த்துக்க என் பேரன் ரிஷி இருக்கான். ஸ்னேகா பிறந்த அன்னைக்கு ரிஷிக்கு அவதான்னு ஏதோ வாய் வார்த்தையா சொன்னேன்னு நீங்க நினைக்க வேண்டாம். நான் மனசார தான் அப்படிச் சொன்னேன்" என்று ராதாவிடம் கூறிய  ராஜேஸ்வரி,


"என் பேரன் இருக்க உங்களுக்கு என்ன கவலை? இப்பவே ஸ்னேகா குட்டி மேல அவ்ளோ பாசம் வச்சிருக்கான். வளர்ந்த பிறகு அவளை விட்டுடுவானா என்ன? ரிஷிக்குத்தான் ஸ்னேகா!! நான் முடிவு பண்ணிட்டேன். என் பேச்சை என்னைக்கும் என் பேரன் மீற மாட்டான்!" என்று ராஜேஸ்வரி ராதாவிடம் வாக்குறுதி கொடுத்தார். 


அதே நேரம் ரிஷியும் தன் அத்தை மோகனாவிடம், "அழாதீங்க அத்தை.. ஸ்னேகா பாப்பாவை நான் பத்திரமா பாத்துக்கிறேன்" என்று உறுதியளித்தான்.


அடுத்து வந்த நாட்களில் ஓரளவுக்குத் தேறியிருந்தார்கள் மோகனாவின் குடும்பத்தினர்.


மேலும் மூன்று மாதங்கள் கடக்க, அன்று அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த கணவனிடம், "என்னங்க, நம்ம ஸ்னேகாக்கு அன்ன பிராசனம் பண்ணனும். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க" என்றாள் மோகனா.


"சரிமா, நான் பார்த்துக்கிறேன்" என்று அவன் கூறவும்,


"அப்புறம் ஓவியாக்கு இப்ப எட்டாவது மாசம் நடக்குது. அவளையும் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும். ரவி அவளை விடுவாரான்னு தெரியல. ஆனாலும் அவர்கிட்ட பேசி சம்மதிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு!" என முன்பு போல் சுறுசுறுப்புடன் பொறுப்பாகப் பேசும் மனைவியைக் கனிவுடன் பார்த்தான் கார்த்திக்.


கணவனின் பார்வையை உணர்ந்து, "என்ன அப்படிப் பார்க்கிறீங்க?" என்று புன்னகையுடன் அவள் கேட்க,


மனைவியின் தோளை பிடித்த கார்த்திக், "மோகனா! உன்னை இப்படிப் பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? நீ எப்பவும் இப்படி இருந்தா தான்டி எனக்கு எனர்ஜி" என்று அவள் கன்னத்தை வருட, 


அவளோ, "என்ன ரொமான்சா..?" என்று தன் புருவம் தூக்கிக் கேட்டாள்.


"ஏன்? பண்ணக் கூடாதா?" என்று அவன் தன் மனைவியை நெருங்கும் நேரம், "அத்தை! பாப்பா என்ன பண்றா?" என்று கேட்டபடி அறையின் உள்ளே வந்தான் ரிஷிவர்மன்.


அதில் சட்டென்று இருவரும் விலகி நிற்க, ரிஷியோ அவர்களைக் கண்டுகொள்ளாமல் கட்டிலில் ஏறி, கையை காலை ஆட்டிக் கொண்டு படுத்திருந்த ஸ்னேகாவின் அருகே அமர்ந்து, அவளுக்கு விளையாட்டுக் காட்டினான்.


குழந்தை ஸ்னேகாவுக்கோ இது ஆறாம் மாதம் நடப்பதால், பக்கத்தில் இருந்த கிருஷ்ணர் கோவிலில் அன்ன பிராசனம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


ஓவியாவின் குடும்பம் மற்றும் சில சொந்தமும் சுற்றி இருக்க, சாஸ்திரப்படி குழந்தைக்கு பால்சாதம் ஊட்டி விட்டார்கள்.


பின்பு தரையில் உணவு நிரம்பிய வெள்ளிக் கிண்ணம், பாட புத்தகம், தங்க நகை, வஸ்திரம், பழங்கள், பூக்கள் என வரிசையாக அடுக்கி வைத்தனர். குழந்தை இதில் எதைத் தேர்வு செய்யப் போகிறாள் என்பதைப் பார்ப்பதற்காகக் குழந்தையைத் தரையில் கவிழ்ந்து படுக்க வைத்தாள் மோகனா.


அக்குழந்தையோ, தன் கையையும் காலையும் ஆட்டி அங்கிருந்த எல்லோரையும் பார்த்தவள், "ஊ ஊ" என்று சத்தமிட்டவாறு வயிற்றால் ஊர்ந்தபடி முன்னேறி நகர்ந்தாள்.


குழந்தை அங்கிருந்த ஏதாவது ஒரு பொருளைத்தான் எடுக்கப் போகிறது என எண்ணி அனைவரும் ஆர்வமாக அவளையே பார்த்திருக்க, ஸ்னேகாவின் கண்களோ, எதிரே தனது உடன்பிறந்தவர்களின் அருகே நின்றிருந்த ரிஷிவர்மனைத்தான் பார்த்தது. 


அவனைப் பார்த்ததும் குஷியான குழந்தை, தன் முன்னே இருந்த  பொருட்களை விடுத்துத் தன்னால் முயன்ற மட்டும் வேகமாக ஊர்ந்து ரிஷிவர்மனின் அருகே சென்றவள், அவனது காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தலையை மட்டும் தூக்கி அவனை அண்ணாந்து பார்த்து, தனது பொக்கை வாயால், "ஊ ஊ ங்கா ங்கா…" எனத் தன்னைத தூக்கு என்று சத்தம் எழுப்பியது. அதனைப் பார்த்த  அனைவரும், "பாருங்களேன்!" என ஆள் ஆளுக்கு ஸ்னேகாவைப் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருக்க, ராஜேஸ்வரியோ தான் எடுத்த முடிவு சரி தான் என்பது போல் மென்புன்னகையுடன் நின்றிருந்தார்.


*****


No comments:

Post a Comment