ஸ்வரம் 25

 



ஸ்வரம் 25


"அம்மா ஆ ஆ ஆ…" என்று அழுகையுடன் கூடிய அலறல் சத்தம் அந்த இடமெங்கும் எதிரொலிக்க, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் விளையாடுவதை நிறுத்தி விட்டு, சத்தம் வந்த திசையில் வேகமாகத் திரும்பிப் பார்த்தார்கள்.


அலறல் சத்தம் கேட்டு, "யாருக்கு என்னாச்சு?" என்றபடி கேட்டில் இருந்து வாட்ச்மேனும், அங்கிருந்த கட்டிடத்தின் உள்ளே இருந்து பியூனும் பதறியடித்து ஓடி வந்தார்கள்.


அங்கே பள்ளியின் மைதானத்தில், சற்றுத் தள்ளி, ரத்தம் வழியும் தனது இடது காதை பிடித்துக் கொண்டு ஒரு சிறுவன் வலியால் துடித்தபடி அழுது கொண்டிருக்க, அவன் எதிரே வலது கையில் ஒரு பெரிய கல்லுடன் அந்தச் சிறுவனை முறைத்தபடி நின்றிருந்தான், பத்து வயதான ரிஷிவர்மன்.


தனது காதை பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்த சிறுவனைப் பார்த்ததும் பதறிய பியூன், அவனைத் தூக்கிக் கொண்டு முதலுதவி செய்வதற்கு ஆபீஸ் ரூமை நோக்கி ஓடினார். வாட்ச்மேனோ ரிஷியின் அருகே வந்து, "எதுக்குடா அந்தப் பையனை அடிச்சே?" என்றவாறு அவன் கையில் இருந்த கல்லை பிடிங்கித் தூர போட்டு விட்டு அவனது கையைப் பிடித்தான்.


தன்னைப் பிடிக்க வந்த வாட்ச்மேனின் கையைச் சட்டென்று தட்டி விட்ட ரிஷிவர்மன், அவனை நன்றாக முறைத்து விட்டு, தனது அருகே நின்றிருந்த ஸ்னேகாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளது க்ளாஸ் ரூமை நோக்கி நடந்தான்.


செல்லும் ரிஷியைப் பார்த்த வாட்ச்மேனோ, "இவனுக்கு இதே வேலையா போச்சு!" என்று தன் தலையில் அடித்துக் கொண்டு தனது இடத்திற்குச் சென்றான்.


அடுத்தச் சில நிமிடங்களில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது ரவிவர்மனின் வாகனம். அதில் இருந்து இறங்கியவன், வேக நடையில் பள்ளியின் அலுவலக அறையை நோக்கி நடந்தான்.


அவனைப் பார்த்த பியூனோ, "சார், எல்லோரும் உள்ள தான் இருக்காங்க" என்று கூற, அவனும் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்.


"என்ன சார் ஸ்கூல் நடத்துறீங்க? எப்படி அடிச்சு இருக்கான்னு பாருங்க. இந்தப் பையனோட அப்பா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்ல. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தே ஆகணும்!" என அந்தச் சிறுவனின் பெற்றோர் தலைமை ஆசிரியருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.


அப்பொழுது உள்ளே நுழைந்த ரவிவர்மனைப் பார்த்ததும் எழுந்து நின்ற தலைமை ஆசிரியர். "வாங்க சார்!" என்று அவனை வரவேற்றார்.


அவருக்கு ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாகக் கொடுத்தவனது பார்வை, அடுத்து அங்கே தெனாவெட்டாக நின்றிருந்த தன் மகன் மீது படிந்தது. அவன் நின்றிருந்த தோரணையிலேயே விஷயத்தை ஓரளவுக்குப் புரிந்து கொண்டான் ரவிவர்மன். "எதுக்கு உடனே வரச் சொன்னிங்க?" என்று ப்ரின்சிபாலிடம் கேட்டான்.


அவரோ, "சார், உங்க பையன் இவங்க பையனை அடிச்சுட்டான். எதுக்கு அடிச்சேன்னு கேட்டா அப்படித்தான் அடிப்பேன்னு சொல்றான். நல்லா படிக்கிற பையன் சார். அதனால அவனை அதட்டவும் முடியல. அதான் உங்களை வரச் சொன்னேன்" என்று அவர் முடிக்க..


"என்ன சார் பேசுறீங்க? நல்லா படிக்கிற பையன்னா இப்படி அடிக்கலாம்னு உங்க ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்குறீங்களா என்ன?" என்று அந்தச் சிறுவனின் தாய் சண்டைக்கு வந்தாள்.


"என் பையன் பண்ணினதுக்கு உங்ககிட்ட நான் சாரி கேட்டுக்கிறேன். இனி இப்படி நடக்காது. உங்க பையன் ட்ரீட்மெண்ட் செலவு முழுக்க என்னோடது" என்றான் ரவிவர்மன். ஆனால் இது முதல்முறை அல்ல என்று அவனுக்குத்தானே தெரியும்?


எதிர்த்துப் பேசினால் சண்டை போடலாம். ஆனால் ரவிவர்மனின் அமைதியான பேச்சில் அவர்களுக்கு அவனிடம் வாதாடவும் முடியவில்லை. அதனால், "இன்னொரு தடவை இப்படி நடந்தா நாங்க சும்மா இருக்க மாட்டோம் சார்" என்றுவிட்டு மகனை அழைத்துக் கொண்டு அவர்கள் வெளியேறினர். ரவிவர்மனும் பிரின்சிபலிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தவன், தன் மகனிடம்,


"ரிஷி! அவன் உன்னோட பிரென்ட் தானே, எதுக்கு அடிச்சே?" என்று கேட்க, அவன் மகனோ தந்தையை முறைத்துக் கொண்டு,


"நீங்க எதுக்கு டாடி இப்ப அவங்ககிட்ட சாரி கேட்டீங்க? தப்பு பண்ணினது அவன். சோ நான் பனிஷ் பண்ணினேன்" என்றான் கோபமாக.


"தப்பு ராஜா! இப்படிப் பிகேவ் பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? எதுனாலும் உன்னோட க்ளாஸ் டீச்சர்கிட்ட தானே சொல்லணும். இல்லனா உன்னை எல்லோரும் பேட் பாய் சொல்லுவாங்க" மகனுக்குப் புரிய வைக்க முயன்றான்.


ரிஷியோ, "ஐ டோன்ட் கேர் டாடி! பாப்பாவை யார் டீஸ் பண்ணினாலும் நான் இப்படித்தான் அடிப்பேன்னு உங்களுக்குத் தெரியும் தானே டாடி? இன்னைக்கு அவன் "உனக்கு டப்பா காது"ன்னு சொல்லி பாப்பாவை டீஸ் பண்ணினான். பாப்பா அழுதுட்டா, அதுனாலதான் நான் அடிச்சுட்டேன்" என்றவன்,


"நான் க்ளாஸுக்கு போறேன் டாடி" என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.


ரவிவர்மனுக்கோ, மகன் தன் மாமன் மகளின் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்துச் சந்தோசப்படுவதா? அல்லது இந்த வயதிலேயே இப்படி அடாவடிக்காரனாக இருப்பதை நினைத்து வருத்தப்படுவதா? தெரியவில்லை! ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.


அன்று மாலை ரவிவர்மனின் வீட்டில், "திடீர்னு யாரோ கத்தும் சத்தம் கேட்டது ஓவிமா. எல்லாரும் பயந்தே போய்ட்டோம். அப்புறம் வேகமா திரும்பிப் பார்த்தோமா, அங்கே ரிஷி அத்தான் கையில பெரிய கல்லு வச்சிட்டு நின்னுட்டு இருந்தாங்க. அத வச்சி ராகேஷை அடிச்சிட்டாங்க போல! அப்புறம் மாமா வந்து தான் ராகேஷ் பேரெண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணினாங்க" என்று தங்களது அத்தையின் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அன்று பள்ளியில் நடந்ததை நேகா, மேகா, விக்ராந்த் மூவரும் ஓவியாவிடம் கூறிக் கொண்டிருந்தார்கள்


அதைக் கேட்ட ஓவியாவோ மகனின் குணத்தை நினைத்து எப்பொழுதும் போல் கலங்க ஆரம்பிக்க, அவளின் அருகே இருந்த ராஜேஸ்வரியோ, "நிஜமாவா கண்ணுங்களா?" என்று ஆர்வத்துடன் கேட்டார்.


"ஆமா பாட்டி, அந்த ராகேஷ் நம்ம ஸ்னேக் பேபியை உனக்குக் காது கேட்காதா? நீ செவுடா?ன்னு கேட்டு டீஸ் பண்ணினான். அதுக்கு விக்ரம் அண்ணா அவனைச் சத்தம் போட்டாங்க. ஆனா ரிஷி அத்தான் அவன் காதுல அடிச்சுட்டாங்க" என்று நேகா சொல்லி முடிக்க,


அங்கே மற்றொரு சோபாவில் அமர்ந்து அன்றைய வீட்டுப் பாடம் செய்தபடி ஸ்னேகாவுடன் பேசிக் கொண்டிருந்த தன் பேரனைப் பெருமை பொங்கப் பார்த்தார் ராஜேஷ்வரி


குழந்தைகள் கூறியதைக் கேட்டுத் தன் மாமியார் அமைதியாக இருப்பது உணர்ந்து, "அத்தை, ரிஷியை சத்தம் போடுவீங்கன்னு பார்த்தா நீங்க சைலெண்டா இருக்கீங்க." என்று அவள் குற்றம் சாட்டும் குரலில் கேட்டாள்.


அவரோ, "என் பேரன் இப்ப என்ன தப்பு பண்ணிட்டானு அவனைத் திட்ட சொல்றே? அவன் அப்படிச் செய்யாம வந்து இருந்தா தான், அவனைச் சத்தம் போட்டு இருப்பேன்" என்று அவர் கூறவும்


"அத்தை!!" என்று அதிர்ந்தாள் ஓவியா. தவறு செய்யும் குழந்தையைத் தட்டிக் கேட்காமல் தட்டிக் கொடுக்கும் மாமியாரை என்ன சொல்வது என்று அவளுக்குப் புரியவில்லை. அவர் ரிஷிக்கு அளவுக்கு அதிகமாகச் செல்லமும், ஊக்கமும் கொடுப்பதை நினைத்து மேலும் கலங்கித்தான் போனாள்.


ஏனெனில் இது போல் சம்பவம் இன்று மட்டும் நடக்கவில்லை. என்று ஸ்னேகா ரிஷிவர்மனின் கைப் பிடித்துப் பள்ளியில் காலடி எடுத்து வைத்தாளோ, அன்றில் இருந்து இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. ஆம்! ஸ்னேகா எல்.கேஜியில் சேர்ந்த முதல் நாள் அன்று உணவு இடைவேளையில் அவளைப் பார்க்க ரிஷிவர்மன் ஓடி வர, அவளோ அழுது கொண்டு நின்றிருந்தாள்.


அவள் முகம் வாடினாலே அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படி இருக்கும் பொழுது அவளது கண்ணீர் கண்டு அவன் சும்மா இருப்பானா? துடித்துப் போனவன், "பாப்பா! என்னாச்சு? எதுக்கு அழறே? டீச்சர் அடிச்சாங்களா? உனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலயா?" என்று பெரியவன் போல் அவளிடம் கேட்டான்.


குழந்தையோ, "அத்து! அத்து!" என்று கேவி கேவி அழுததே தவிர, அவன் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.


"என்னாச்சு பாப்பா? என்கிட்ட சொல்லு!" என்று கேட்ட ரிஷிவர்மனின் பார்வை அவளது காதில் படிய, அப்பொழுது தான் கவனித்தான், அவளது காது வெறுமையாக இருப்பதை!


அவள் காதை தடவிய ரிஷிவர்மன், "மிஷின் எங்கே?" என்று செய்கையில் அவளிடம் கேட்க, அவளோ, தனது வலது கை ஆள்காட்டி விரலை வேறு பக்கம் நோக்கி நீட்டினாள்.


அவள் காட்டிய திசையில் சில மாணவர்கள் நின்றிருக்க, அவர்களில் ஒரு மாணவனின் கையில் ஸ்னேகாவின் காது கேட்கும் கருவி இருந்தது. அதை அவன் மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.


அதைப் பார்த்த ரிஷிவர்மனோ வேகமாக அவர்களின் அருகே சென்று, "அண்ணா, நீங்க வச்சிருக்கிறது என் பாப்பாவோடது. என்கிட்ட தாங்க.." என்று கை நீட்டிக் கேட்டான்.


அந்த அடாவடிக்கார சிறுவனோ, "தர முடியாது! என்னடா பண்ணுவே? இந்த மாதிரி காது கேட்காத செவிடு பசங்களுக்கு வேற ஸ்கூல் இருக்கு. அங்கே போய்ப் படிக்க வேண்டியது தானே? இங்க வந்தா இப்படித்தான் டீஸ் பண்ணுவோம். ஹா ஹா!" என்று சொல்லி சிரிக்க, கூடவே அவனது நண்பர்களும் அவனுடன் சேர்ந்து சிரித்து மேலும் மேலும் ஸ்னேகாவின் ஊனத்தைக் கிண்டல் செய்தனர்.


அவர்களையும், அவர்களின் பேச்சையும் கேட்க கேட்க ரிஷிவர்மனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ..?! சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்ணில் அங்கே நட்டு வைத்திருக்கும் செடிகளுக்கு அலங்காரமாக வைத்திருந்த செங்கல் தென்பட, அதை எடுத்துத் தன்னை விடப் பெரியவன் என்றும் பாராமல், அவன் மீது ஓங்கி எறிந்து இருந்தான்.


அதில் அந்தச் சிறுவன் அலறிய அலறல் சத்ததைக் கேட்டு அந்தப் பள்ளியே ஒரு நொடி ஸ்தம்பித்துத்தான் போனது.


அதன்பிறகு ரவிவர்மனை அழைத்து விஷயத்தை ப்ரின்சிபல் கூற, அவனோ மகனைக் கண்டித்து வைப்பதாகக் கூறினான். ஆனால் எவ்வளவு தான் மகனுக்கு எடுத்துக் கூறி புரிய வைக்க முயன்றாலும், என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு மாணவன் ஸ்னேகாவைக் கிண்டல் செய்ய, ரிஷிவர்மனும் அவர்களின் காதை பஞ்சர் ஆக்கிக் கொண்டு தான் இருந்தான். கேட்டால், "என் பாப்பாவை டீஸ் பண்ணினா நான் பனிஷ் பண்ணத்தான் செய்வேன்!" என்று எதிர்த்துப் பதில் கூறுவான்.


அதே நேரம், காது கேட்கும் கருவி இல்லாமலே மற்றவர்களின் பேச்சை அவர்களின் வாயசைவை வைத்து, எப்படிக் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்கு அந்த வயதிலேயே அவனுக்குத் தெரிந்த வகையில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான் ரிஷிவர்மன்


மகன் பள்ளியில் செய்யும் இந்தக் காரியத்தைக் கணவன் மூலம் கேள்விப்பட்ட ஓவியா, வீட்டில் வைத்து அவனைக் கண்டித்தாள் என்றால், ராஜேஸ்வரியோ பேரனுக்குத் துணையாகப் பேசி அவனை ஒரு சொல் சொல்ல விடாமல் தடுத்து விடுவார். மேலும் அவன் ராஜேஸ்வரியின் வளர்ப்பு என்பதால், தாய்-தந்தை கூறுவதை விடத் தனது பாட்டியின் பேச்சிற்குத் தான் அதிக மதிப்பளித்தான்.


ஆனால் ஸ்னேகாவின் மீது அவன் வைத்திருக்கும் இந்த அதீத பாசம் பின்னாளில் வெறுப்பாக மாறும் என்றும், அதற்கு ராஜேஸ்வரியே காரணமாகப் போகிறார் என அக்கணம் அவர் அறியாமல் போனார்.


இன்றும் பேரன் செய்த காரியத்தைக் கண்டிக்காமல் அவனுக்குத் தான் பரிந்து மருமகளிடம் பேசினார்.


அப்பொழுது மாலை சிற்றுண்டியுடன் அங்கு வந்த வேலைக்கார பெண்ணோ, தனது கையில் இருந்த உணவு பதார்த்தங்களை டீபாயின் மீது அடுக்கி வைத்து விட்டுச் செல்ல,


ராஜேஸ்வரியோ, "கண்ணுங்களா! அப்புறம் பேசலாம், உங்களுக்குப் பிடிச்ச ஸ்பிரிங் ரோல் இருக்கு. எடுத்துச் சாப்பிடுங்க!" என்று கூறவும்..


ரிஷியின் அருகே அமர்ந்து இருந்த ஸ்னேகாவோ, பாட்டி சொன்னதைக் கேட்டு வேகமாக வந்து ஒரு தட்டை கையில் எடுத்துக் கொண்டவள், மெதுவாக நடந்து ரிஷியின் அருகே சென்று "அத்து!" என்று அவன் முன் நீட்டினாள்.


"என்ன பாப்பா?" என்று கேட்ட ரிஷியோ அவள் வைத்திருந்த தட்டில் இருந்து ஒரு ஸ்பிரிங் ரோலை எடுத்துச் சாப்பிட்டபடி படிக்க ஆரம்பித்தான். ஸ்னேகாவோ அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அப்படியே நின்றிருந்தாள். அவன் முடித்ததும் திரும்பி தட்டை டீபாயின் மீது வைத்து விட்டு மீண்டும் அவன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். அவனின் மீதான அவளின் அந்த அக்கறையான செயலை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.


அப்பொழுது வாசலில் வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்க, அதைத் தொடர்ந்து அழுத்தமான காலடியோசையில் உள்ளே வந்தான் ரவிவர்மன்.


கார்த்திக்கின் பிள்ளைகளைப் பார்த்ததும், "பசங்க எப்போ வந்தாங்கம்மா?" என்று கேட்டபடி அவன் தாயின் அருகே அமர்ந்தான்.


அவரோ, "இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்தாங்க" என்றவர், "உனக்குக் காபி கொண்டு வரச் சொல்லவா?" என்று மகனிடம் கேட்டுவிட்டு "ஓவியா.." என்று அழைத்தார்.


அவளோ மாமியாரின் அழைப்புக்குச் செவி சாய்க்காமல் சட்டென்று எழுந்து அறைக்குள் சென்று விட்டாள். அவளின் செயலில் ரவிவர்மன் நெற்றி சுருக்க,


ராஜேஸ்வரியோ சிறு புன்னகையுடன், "உன் பொண்டாட்டிக்கு என் மேல கோபம்டா" என்றார்.


"என்னமா, என்னாச்சு? எதுக்குக் கோபம்?" என்று அவன் கேட்க,


"அது ஒன்னும் இல்ல ரவி.. நம்ம ரிஷியை நான் கண்டிக்க மாட்டேன்கிறேன்னு கோச்சுட்டு போறா" என்று கூற,


ரவிவர்மனோ, "அவ கோபப்படுறதும் சரி தானேமா? இன்னைக்குக் கூட அவன் ஸ்கூல்ல அப்படித்தான் நடந்துகிட்டான்" என்று ரவிவர்மன் ஆதங்கத்துடன் கூறினான்.


அவரோ, "ரவி! இப்ப என்ன நடந்து போச்சுன்னு ஆள் ஆளுக்கு இப்படிப் பேசிட்டு இருக்கீங்க. அவன் குழந்தைடா! சின்ன வயசுல நீயும் இப்படிக் கோபக்காரனா தானே இருந்தே. உன்னை மாத்த எவ்வளவு பாடுபட்டேன்? என்னால முடிஞ்சிதா? ஆனா என்னைக்கு நீ ஓவியாவைப் பார்த்தியோ அன்னையில இருந்து உன்னை நீயே மாத்திக்கிட்ட தானே? அதுமாதிரி என் பேரனும் வளர வளர சரி ஆகுவான். இந்தச் சின்னக் குட்டி நிச்சயம் அவனை மாத்துவா, எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று அப்பொழுதும் பேரனை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.


ரவியோ தாயை சலிப்பாகப் பார்த்தவன், "ம்ம்ம்…" என்று மட்டும் கூறி விட்டு, "ரம்யாக்கு இப்ப காச்சல் பரவா இல்லையாம்மா?" என்று கேட்டான்.


"மருந்து கொடுத்தேன். நல்லா தூங்கிட்டு இருக்கா" என்று அவர் சொல்ல,


"சரிமா, நான் போய்ப் பார்க்கிறேன்" என்றுவிட்டு எழுந்து தங்களது அறைக்குச் செல்ல, அவரோ சின்னவர்களிடம் பேச ஆரம்பித்தார்.


அறைக்கு வந்த ரவிவர்மன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் ரம்யாவின் கன்னத்தை மென்மையாக வருடியவன் மனைவியைத் தேட, அவளோ ஜன்னலில் முகம் புதைத்து நின்றிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டும், வந்தது கணவன் என்று புரிந்தும் அவள் திரும்பவில்லை.


மனைவியின் அருகே சென்ற ரவிவர்மன், "ஓவிமா…" என்று அழைத்து அவளது தோளைத் தொட,


அவளோ, "ரவி! நாம நம்ம ரிஷியை ஹாஸ்டல்ல சேர்த்துட்டா என்ன?" என்று கேட்டாள்.


அவளுக்கோ, 'இப்படியே போனால் எங்கே மகன் கை மீறி போய் விடுவானோ?' என்ற அச்சம் தான் அதிகம் இருந்தது.


மனைவியின் மனம் அறிந்தாலும், "எங்க அம்மாவோட வளர்ப்பு சரி இல்லன்னு இப்படிச் சொல்றியா ஓவிமா?" என்று நிதானமாகக் கேட்டான் ரவிவர்மன்.


"அயோ! என்ன பேசுறீங்க? நான் எப்போ அப்படிச் சொன்னேன்?" என்று அவள் பதற,


"இப்ப எதுக்கு இப்படிப் பதறுரே? நான் விளையாட்டுக்குத்தான் கேட்டேன்" என்றவன், அவளைத் தன்னோடு அனைத்துக் கொண்டு, "உன்னோட பயம் எனக்குப் புரியுது. ஆனா அவன் இப்ப குழந்தை. ஏதோ ஸ்னேகா மேல உள்ள பாசத்தில அப்படி நடந்துக்கிறான். எங்க அம்மா சொன்ன மாதிரி போக போகச் சரி ஆகிருவான். நீ மனசை போட்டுக் குழப்பிக்காம இருமா!" என்று கூறி மனைவியைச் சமாதானம் செய்து விட்டு மகளின் அருகே சென்றான். ஓவியாவின் மனமோ யோசனையில் உழன்று கொண்டிருந்தது. அவள் வெகுநேரம் யோசித்து எடுத்த முடிவை சீக்கிரமே செயல்படுத்த காத்திருந்தாள்.


சனி-ஞாயிறு விடுமுறைக்காக ஓவியாவின் வீட்டுக்கு வந்திருந்த கார்த்திக்கின் குழந்தைகள், மறுநாள் பள்ளி இருப்பதால் அன்று இரவே கிளம்பி இருக்க, மறுநாள் சீக்கிரமே எழுந்து விட்ட ஓவியா மகனைத் தேடி மாமியாரின் அறைக்குச் சென்றாள்.


அங்கே அப்பொழுது தான் எழுந்து அமர்ந்த ரிஷிவர்மன் குளிக்கச் செல்ல, ராஜேஸ்வரியோ, "ரிஷி கண்ணா! யூனிபார்ம் எடுத்து வச்சிட்டேன். குளிச்சுட்டு வந்ததும் போட்டுட்டு ரெடியாகு! நான் டிபன் எடுத்து வைக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, "அத்தை!" என்றபடி உள்ளே வந்தாள்.


"வா ஓவியா, ரம்யா என்ன பண்றா? எழுந்துட்டாளா?" என்று பேத்தியை பற்றிக் கேட்டார்.


அவர் கேட்டதற்குப் பதில் அளிக்காமல், "அத்தை! இன்னைக்கு ரிஷியை நான் ரெடி பண்ணவா?" என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள் ஓவியா.


மருமகளின் பேச்சில் சிரித்தவர், "என்ன திடீர்னு? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ போய் ரம்யாவைக் கவனி!" என்றுவிட்டுத் தனது வேலையைக் கவனிக்க,


அவளோ, "இல்லத்தை.. இன்னைக்கு மட்டும் இல்ல, இனிமேலும் நானே ரிஷியை ஸ்கூல்க்கு அனுப்புறேன்" என்றாள் சற்று அழுத்தமாக.


அவளைத் திரும்பி யோசனையாகப் பார்த்தார் ராஜேஸ்வரி. ஓவியாவின் இந்தத் திடீர் மாற்றம் ஏனென்று அவருக்குப் புரிந்தது. அதே நேரம் கடந்த சில வருடங்களாகத் தாய்-மகன் இருவரையும் பிரித்து விட்டோமோ? என்று மனதில் தவித்துக் கொண்டிருந்தவருக்கு, இப்பொழுது அவளாகவே வந்து மகனின் பொறுப்பை எடுத்துக் கொள்வதாகக் கூறவும், மறுக்க மனது வருமா? அதனால் தான் பேரனை அவன் அம்மாவிடமே ஒப்படைக்கும் பொருட்டு, "சரிமா, நீ அவனை ரெடி பண்ணு! நான் அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றுவிட்டு அறையில் இருந்து வெளியே சென்றார்.


சிறிது நேரத்தில் இடுப்பில் சின்ன டவல் மட்டும் கட்டிக் கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்த ரிஷிவர்மன், அங்கே தனது ராஜிமா அல்லாமல் தாய் அமர்ந்து இருப்பது கண்டு நெற்றிச் சுருக்கியவன் அப்படியே நிற்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டு, "ரிஷி!" என்று அழைத்தாள் ஓவியா.


அவனோ, "என்னம்மா?" என்று தாயைப் புரியாமல் பார்க்க,


ஓவியாவோ, "ராஜா! குளிச்சுட்டியா? அம்மாகிட்ட வா, உனக்குத் துவட்டி விடுறேன்" என்று புன்னகையுடன் தன் கைகளால் துழாவி மகனை நோக்கி நகர, அவனோ தாயின் கையில் சிக்காமல் தள்ளி நின்று கொண்டு, "ராஜிமா.." என்று குரல் கொடுத்தான்.


ஓவியாவோ, "ரிஷி! அதான் அம்மா துவட்டி விடுறேன்னு சொல்றேன்ல. ரொம்ப நேரம் ஈர தலையா இருந்தா ஜலதோஷம் பிடிச்சுக்கும், என்கிட்ட வாடா" என்று அவள் அழைக்கவும்,


தாயின் பேச்சை செவிமடுக்காமல் அப்பொழுதும், "ராஜிமா.." என்று உரக்க கத்தினான் ரிஷிவர்மன்.


அதில் கோபம் கொண்ட ஓவியா, மகனைச் சட்டென்று எட்டிப் பிடித்து, "நான் சொல்லிட்டே இருக்கேன், நீ என்ன ராஜிமா ராஜிமான்னுட்டு இருக்கே. இனி உனக்குச் சாப்பாடு ஊட்டுறதுல இருந்து நைட் தூங்க வைக்கிறது எல்லாம் நான்தான் பண்ணுவேன் ரிஷி. ஒழுங்கா அம்மா சொல்றதை மட்டும் தான் நீ இனி கேட்கணும்!" என்று மகனை அதட்டினாள்.


தாயின் அதட்டலை புறம் தள்ளிய ரிஷிவர்மன், "என்னை விடுங்க.. நான் ராஜிமாகிட்ட போறேன்" என்றுவிட்டு அவளது கையை வேகமாக உதறியவன் வாசலை நோக்கி நடக்க, "ரிஷி!" என்றபடி அவனைப் பின்தொடர்ந்தாள் ஓவியா


அதற்குள் பேரனின் சத்தம் கேட்டு அங்கு வந்து விட்ட ராஜேஸ்வரி, "என்னாச்சு ரிஷி?" என்று பேரனிடமும், "என்னாச்சு ஓவியா..?" என்று மருமகளிடமும் அவர் கேட்க,


ரிஷியோ, "ராஜிமா, எப்பவும் நீங்க தானே எனக்குத் தலையைத் துவட்டி விடுவீங்க, ட்ரெஸ் பண்ணி விடுவீங்க. இன்னைக்கு என்ன புதுசா இவங்க பண்றேன் சொல்றாங்க? ஐ டோன்ட் லைக் இட்!" என்றான் தாயை முறைத்துக் கொண்டு.


மகனின் பேச்சில் ஓவியாவின் மனதில் வலி எடுக்க, அது அவளது கலங்கிய கண்கள் மூலம் பிரதிபலித்தது. அதைக் கவனித்த ராஜேஸ்வரி,


"ரிஷி! அம்மாகிட்ட போ!" என்றார்.


ஆனால் அவனோ, "நோ பாட்டி, அவங்களுக்குத்தான் கண்ணு தெரியாதே? அப்புறம் எப்படி எனக்குச் சரியா ட்ரெஸ் பண்ணி விடுவாங்க.. நான் போக மாட்டேன்!" என்றவன், அவரது இடுப்பை கட்டிக் கொள்ள, மகன் கூறியதைக் கேட்டு விக்கித்து நின்றாள் ஓவியா.


அதை உணர்ந்த ராஜேஸ்வரி, "அம்மாவை அப்படிச் சொல்ல கூடாது கண்ணா!" என்று மென்மையாகக் கண்டித்தவர், பேரனின் தலையைத் தடவி கொடுத்தவாறு,


"ஓவியா! உடனேன்னா ரிஷி இப்படித்தான் முரண்டு பிடிப்பான். நான் அவனுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கிறேன். சீக்கிரம் உன்னைப் புரிஞ்சிப்பான். கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம், சரியா?" என்றார் ராஜேஸ்வரி.


ஓவியாவோ, "இல்லத்தை.. இப்படி விட்டு விட்டுத் தான் என் பையன் என்னை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமா விலகி போய்ட்டே இருக்கான். இதோ! இப்ப என்னை வேணாம்ன்னு சொல்றான். இனியும் நான் விட்டேன்னா இவன் என்னை ஒரேடியா வெறுத்தாலும் வெறுத்துடுவான். ப்ளீஸ் அத்தை! எனக்கு என் பையன் வேணும்!" என்று அமைதியாகக் கூறினாலும், அவளது கண்ணில் கண்ணீரும், வார்த்தையில் புத்திர ஏக்கமும் கொட்டிக் கிடந்தது.


மருமகளையே இரக்கத்துடன் பார்த்திருந்தார் ராஜேஸ்வரி. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.


பெரியவர்கள் இருவரும் பேசிக் கொண்டது அந்தச் சின்னப் பாலகனுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும், தனது ராஜிமாவிடம் இருந்து தன்னைப் பிரிக்க நினைப்பதாக எண்ணி, தாயின் மீது முதன் முறையாகக் கோபம் கொண்டான் ரிஷிவர்மன்..


***

No comments:

Post a Comment