ஸ்வரம் 26


 

ஸ்வரம் 26


மருமகள் அவளது மகனைத் தன் பொறுப்பில் கேட்கவும், இதற்கு மேலும் மறுக்க முடியாமல், "ரிஷி கண்ணா! உங்க ராஜிமா சொன்னா கேட்பீங்க தானே? நீங்க அம்மா சொல்ற மாதிரி நடந்துகிட்டீங்கன்னா தான் உங்க ராஜிமாக்குப் பிடிக்கும். இல்லன்னா உங்ககிட்ட நான் பேசவே மாட்டேன்" என்று அவனிடம் ஏதேதோ பேசி, பேரனை மருமகளிடம் ஒப்படைத்தார் ராஜேஸ்வரி.


ரிஷியோ பாட்டியின் சொல்லைத் தட்ட முடியாமல் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு தாயை முறைத்தபடி நிற்க, ஓவியாவோ வெகுநாட்கள் கழித்துச் சந்தோசமாகத் தன் மகனைத் தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.


மகன் கிளம்பவும், "அத்தை! என்னை மன்னிச்சுருங்க! எனக்கு வேற வழி தெரியல" என்ற ஓவியாவின் குரலில் குற்றவுணர்வு அதிகம் இருந்தது.


அவரோ மென்புன்னகையுடன் அவளது தலையை ஆதுரமாகத் தடவி கொடுத்தவர், "இதுல நீ மன்னிப்பு கேட்கிறதுக்கு என்ன இருக்கு ஓவிமா..? அவன் உன் புள்ள. என்ன தான் நான் அவனைப் பார்த்துக்கிட்டாலும் தாய்க்கு ஈடாகுமா? இனி உன் மகன் உன் பொறுப்பு! கொஞ்ச நாள் முரண்டு பிடிப்பான். அப்புறம் உன் அன்பு நிச்சயம் அவனை உன்கிட்ட வர வைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு!" என்று கூறினார்.


உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவரே அவனை ஓவியாவிடம் ஒப்படைக்கத்தான் நினைத்து இருந்தார். காரணம், கடந்த சில மாதங்களாக அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. இப்பொழுதே பேரனை அவனது தாயிடம் ஒப்படைத்து விட்டால் நல்லது. இல்லையேல் தாயன்பை உணராமல் போய் விடுவான் என்று அவருக்குப் புரிந்ததனால்தான், மருமகள் கேட்கவும், அவருக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. 


ஓவியாவுக்கோ மாமியாரிடம் இருந்து தன் மகனைப் பிரிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. மகனின் குணத்தை எண்ணித்தான் அவனைத் தன் பொறுப்பில் எடுக்க நினைத்தாள். ஆனால் மகனின் இன்றைய பேச்சில் உள்ளுக்குள் துடித்தவள், ‘எங்கே தன் மகன் தன்னை ஒரேடியாக விலக்கி வைத்து விடுவானோ?’ என்று பயந்து போனாள். அதனால் தான், எப்படியாவது தன் மகன் தன்னிடம் வந்து விட்டால் போதும் என்ற எண்ணம் மட்டுமே ஓவியாவின் மனதில் வலுப்பெற்றது. 


இப்படித் தங்களைப் பற்றி மட்டுமே யோசித்த இருவரும் ரிஷியின் மனதைப் பற்றிச் சிந்திக்க மறந்தார்கள். 


எப்பொழுதும் போல் பள்ளியில் இடைவேளையின் போது தன்னைத் தேடி வரும் அத்து இன்று வரவில்லை என்றதும், அவனைத் தேடிச் சென்றாள் ஸ்னேகா.


பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, ஸ்னேகாவோ சுற்றும் முற்றும் பார்த்தபடி ரிஷியின் வகுப்பை நோக்கிச் சென்றாள். அப்பொழுது அங்கே விளையாடிக் கொண்டிருந்த விக்ராந்த், தங்கையைப் பார்த்து விட்டு வேகமாக அவள் அருகில் ஓடி வந்தவன், "ஸ்னேகா! எங்கே போறே?" என்று கேட்டான்.


"நான் அத்துவ பார்க்கப் போறேன்" என்று தன் அண்ணனிடம் ஸ்னேகா கூறவும்,


அவனோ, "அதோ! அங்கே உக்காந்து இருக்கான் பாரு" என்று சற்றுத் தொலைவில் கல் பெஞ்சில் அமர்ந்திருந்த ரிஷியைக் கைக் காட்டினான்.


"சரி அண்ணா" என்றுவிட்டு தனது அத்துவை நோக்கிச் செல்ல, விக்ராந்த்தோ மீண்டும் நண்பர்களுடன் விளையாடச் சென்று விட்டான்.


ரிஷியின் முன் வந்து நின்று, "அத்து…" என்று அழைத்தாள் ஸ்னேகா.


ஒரு நொடி அவளைப் பார்த்த ரிஷிவர்மன், மறுநொடி தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, குழந்தையோ, அவனது செயலில் நெற்றிச் சுருக்கி யோசனையுடன் அவனைப் பார்த்தவள், அவன் பார்க்கும் திசையில் வந்து நின்றாள்.


அவனோ அவளை முறைத்தவன், மீண்டும் தன் பார்வையை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். அவன் எண்ணம் முழுவதும் தாயிடம் மட்டுமே இருந்ததாலும், இப்பொழுது ஸ்னேகாவிடம் விளையாடும் மனநிலையில் அவன் இல்லை என்பதாலும், அமைதியாக அமர்ந்து இருந்தான். 


அதை உணராமல், அத்து தன்னிடம் கண்ணாமூச்சி விளையாடுகிறான் என்று எண்ணிக் கொண்டு, மீண்டும் அவன் முன் வந்து நின்ற குழந்தை, "அத்து!" என்று அவன் முகம் பார்த்து அரிசிப்பல் தெரிய சிரித்தாள். 


ரிஷியோ அவளது செயலில் கடுப்புற்றவன், "என்ன வேணும் உனக்கு? எதுக்கு என்னை டிஸ்டர்ப் பண்ற? பேசாம போ இங்க இருந்து.." என்று தாயின் மீதிருந்த கோபத்தை ஸ்னேகாவிடம் காட்டி விட்டான்.


எப்பொழுதும் தன்னிடம் கனிவாகப் பேசும் அவளது அத்துவின் இந்தப் பரிமாணம் ஸ்னேகாவுக்குப் புதிது. அவனது குரலில் இருந்த கடுமையையும், தன்னை 'போ' என்று சொன்ன வார்த்தையையும் கேட்ட குழந்தையின் முகம் சுருங்கிப் போனாலும், அங்கிருந்து நகராமல், அவன் திட்டியதில் உதடு பிதுக்கி அழும் நிலைக்குச் சென்றாள். அதையும் எரிச்சலுடன் பார்த்த ரிஷிவர்மன் அவளை மேலும் முறைத்தான்.  


எதற்காகத் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறான் என்று குழந்தைக்குப் புரியாவிட்டாலும், அவன் கூறியது போல் அவளது அத்துவைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், தன் கையில் இருந்த டிபன்பாக்ஸை அவன் அருகில் வைத்து விட்டு, "அத்து! உங்களுக்காகக் கொண்டு வந்தேன்" என்றுவிட்டு அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்தவாறு அங்கிருந்து சென்று விட்டாள் ஸ்னேகா.


அதே நேரம் உணவு இடைவேளையின் நேரம் முடிந்ததற்கான மணி ஒலிக்க, எல்லா குழந்தைகளும் அவரவர் வகுப்பிற்குச் செல்லவும், ரிஷிவர்மனும் எழுந்தான். அப்பொழுது அவன் கையில் தட்டுப்பட்டது ஸ்னேகா வைத்து விட்டுச் சென்ற டிபன்பாக்ஸ். அதை எடுத்துத் திறந்து பார்த்த ரிஷியின் முகம் மலர்ந்து விட்டது.


மாலை பள்ளி முடியவும், முதல் ஆளாக வகுப்பில் இருந்து வெளியே வந்த ரிஷிவர்மன், ஸ்னேகாவைக் காணத்தான் ஓடினான்.


அதற்குள் தங்கைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு தங்களது காரை நோக்கி விக்ராந்த் சென்று கொண்டிருக்க, அவர்களைப் பார்த்து விட்ட ரிஷிவர்மன், வேகமாக அவர்கள் அருகில் ஓடி வந்தவன்..


"விக்ரம்! இன்னைக்குப் பாப்பாவை நான் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்" என்று கூறி விட்டு அவனது பதிலை எதிர்பாராமல், "பாப்பா! என் கூட வீட்டுக்கு வரியா?" என்று கேட்டு அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.


உணவு இடைவேளையின் போது தன்னைத் திட்டிய அத்து இப்பொழுது தன்னிடம் பேசி சிரிக்கவும், இவ்வளவு நேரமும் வாடியிருந்த குழந்தையின் முகம் கூட மலர்ந்து விட்டது. அதில் சந்தோஷமாகத் தலையை ஆட்டிய ஸ்னேகா, "வரேன் அத்து.." என்று அவனது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். 


விக்ரமோ, "நோ ரிஷி! நான் ஸ்னேகாவை அனுப்ப மாட்டேன். பாப்பாவை யார் கூடவும் தனியா அனுப்பக் கூடாதுன்னு மோஹிமா சொல்லியிருக்காங்க" என்று ரிஷியை முறைத்துக் கொண்டே அவன் கூறவும்,


 "நான் யாரோ இல்ல… பாப்பாவோட அத்து… நான் கூட்டிட்டுத்தான் போவேன்" என்றவன், விக்ரம் தடுத்தும் கேளாமல் ஸ்னேகாவை அழைத்துக் கொண்டு தனது காருக்குச் சென்றான் ரிஷிவர்மன்.


அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நேகா, "ஏய் மேகா! ரிஷி அத்தான் நமக்கும் அத்தான் தானேடி??" என்று தன்னுடன் ஒட்டிப் பிறந்த மேகாவிடம் கேட்டாள்.


"ஆமாடி.. அப்படித்தான் கூப்பிடணும்னு மோஹிமா நாம பேபிஸா இருக்கும் போது இருந்தே சொல்லி சொல்லி வளர்த்தாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு" என்றாள் மேகா. (கண்ணுங்களா! இப்பவும் நீங்க பேபிஸ் தான்..)


"அப்போ ஏன்டி ரிஷி அத்தான் எப்ப பார்த்தாலும் ஸ்னேக் பேபி கூடவே இருக்காங்க..?" என்று அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டாள் ஏழு வயது நேகா.


"அதுவாடி, ஸ்னேக் பேபி நம்மளை விட ரொம்பக் குட்டி பாப்பால்ல, அதான்.." என்றாள் மேகா.


"அப்படியா சொல்றே?" என்று கேட்டாள் நேகா.


"ஆமாடி, ஆனா நான் பெரியவ ஆனதும், அத்தான் என் கூட தான் பேசுவாங்க, விளையாடுவாங்க, என்னைத்தான் கல்யாணமும் பண்ணுவாங்க" என்று மேகா கூறவும்,


"நோ! நானும் பெரியவ ஆனதும் அத்தான் என் கூடத்தான் விளையாடுவாங்க என்னைத்தான் கல்யாணம் பண்ணுவாங்க" என்று தமக்கையை முறைத்தாள் நேகா.


"நோ நோ! அத்தான் எனக்குத்தான்…" என்று மேகா-நேகா இருவரும் ரிஷிக்காக தங்களுக்குள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.


"சரி, நாம பைட் பண்ண வேண்டாம்டி. ரிஷி அத்தான் யாருக்குன்னு இங்கி பிங்கி போட்டுப் பார்ப்போமா?" என்று நேகா வெள்ளை கொடியைப் பறக்க விட்டாள்.


"ம்ம்ம்.. சரி, போட்டுப் பார்போம்" என்று குதூகலித்தாள் மேகா.


உடனே "இங்கி பிங்கி பாங்கி…" என்று நேகா ஆரம்பித்தாள்.


ஏற்கனவே ரிஷியின் மேல் கோபத்தில் இருந்த விக்ராந்த், தங்கைகளின் பேச்சில் மேலும் கடுப்பானவன், அவர்கள் இருவரின் தலையிலும் ஓங்கிக் கொட்டி, "ரெண்டு பேரும் என்ன பண்றிங்க?" அவர்களிடம் கோபமாகக் கேட்டான்.

 

"ஆ ஆ…" என்று வலியில் கத்திய நேகா, "எதுக்கு அண்ணா என்னைக் கொட்டினே?" என்று அவனைக் கோபத்துடன் முறைக்க,


"ஆமா, என்னையும் எதுக்குக் கொட்டினே?" என்று தன் அண்ணனிடம் பாவமாகக் கேட்டாள் மேகா.


அவனோ, "ரெண்டு பேரும் செக்கன்ட் ஸ்டாண்டார்ட் தான் படிக்கிறீங்க. ஆனா என்ன பேச்சு பேசுறீங்க..? இருங்க, உங்க ரெண்டு பேரையும் மோஹிமாகிட்ட சொல்லித் தலையில் இன்னும் நல்லா கொட்ட சொல்றேன்" 


அதில் தனது அண்ணனை முறைத்த நேகா, "நாங்க ஒன்னும் பேடா பேசல. மோஹிமா தான் ராதா பாட்டிகிட்ட எப்பவும் இப்படிச் சொல்லிட்டே இருப்பாங்க. அதை நான் லிசன் பண்ணி இருக்கேன் தெரியுமா? கொட்டணும்ன்னா பர்ஸ்ட் மோஹிமாவைத்தான் கொட்டணும்" என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தாள். எங்கே தன் அண்ணன் மீண்டும் தன்னைக் கொட்டி விடுவானோ என்று பயந்த மேகா, "நில்லுடி! நானும் வரேன்" என்றபடி தங்கையைப் பின்தொடர்ந்தாள். 


இங்கு காரில் ஸ்னேகாவுடன் பின்னிருகையில் அமர்ந்து கொண்ட ரிஷிவர்மன், "ட்ரைவர் அங்கிள்! அப்பாவோட ஆபிசுக்குப் போங்க" என்று உத்தரவிட்டு, ஸ்னேகாவைப் பார்த்தவாறு அமர்ந்தான்.


அவள் அமைதியாக வெளியே பார்த்தவாறு அமர்ந்து இருக்க, ரிஷியோ, "பாப்பா! எதுக்கு சைலெண்டா இருக்கே?" என்று கேட்டான்.


அவனைத் திரும்பிப் பார்த்த ஸ்னேகா, "நீங்க தானே டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொன்னீங்க அத்து" என்றாள் மெதுவாக.


அவள் குரலில் இருந்த வருத்தத்தைப் புரிந்து கொண்டவனோ, "சாரி பாப்பா! இனி உன்னை எதுக்கும் திட்டவே மாட்டேன், சரியா?" என்று அவளிடம் மன்னிப்பை வேண்டினான் ரிஷிவர்மன். அப்பொழுது அந்தப் பாலகன் அறியவில்லை, அவளை வெறுத்து ஒதுக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை..!! 


"பாப்பா! என்னை உனக்குப் பிடிக்கும் தானே..?" என்று கேட்டான் ரிஷிவர்மன்.


எதற்காக இப்படிக் கேட்கிறான் என்று அவளுக்குப் புரியாவிட்டாலும், அவன் கேட்ட கேள்வி புரிந்தமையால், "ஆமா அத்து, உங்களை எனக்குப் பிடிக்கும்" என்றாள் ஸ்னேகா.


"எவ்வளவு பிடிக்கும்..?" என்று அடுத்தக் கேள்வி கேட்டான் ரிஷிவர்மன்


"உங்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? நீங்க என்னோட அத்து! நான் அத்துவோட பாப்பா!" என்று தன் பிஞ்சு விரல் கொண்டு அவனைத் தொட்டுச் சுட்டிக் காட்டிய ஸ்னேகா கைத் தட்டிச் சிரித்தாள்.


"அப்போ நான் உன்னைத் திட்டினா நீ உம்முன்னு இருக்க கூடாது, ஓகேவா? உடனே என்கிட்ட வந்து பேசிடணும்" என்றான் ரிஷிவர்மன்.


அதற்கும், "சரி அத்து…" என்று மறுத்துப் பேசாமல் உடனே ஒத்துக் கொண்ட ஸ்னேகா, திடீரென ஞாபகம் வந்தவளாக, "அத்து! நீங்க ரவா லட்டு சாப்பிட்டீங்களா..?" என்று கேட்டாள்.


"இதோ இருக்கு.." என்று தனது கையில் இருந்த டப்பாவைத் திறந்து, ரவா லட்டை அவளுக்கும் கொடுத்து விட்டுத் தானும் உண்ண ஆரம்பித்தான் ரிஷிவர்மன்.


சிறிது நேரத்தில் ரவிவர்மனின் அலுவலக வளாகத்தில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர், குழந்தைகள் இருவரும் இறங்கி உள்ளே சென்றதும், ராஜேஸ்வரிக்கு அழைத்து விபரத்தைக் கூறினான். அந்தப் பக்கம் இருந்த ராஜேஸ்வரியோ,


 "சரி, நான் ரவிகிட்ட பேசிக்கிறேன்" என்றுவிட்டு வைத்தவருக்குப் பேரனின் எண்ணம் நன்றாகவே புரிந்தது. 


"அத்தை! போன்ல யாரு? ரிஷி ஏன் இன்னும் வரல? டிரைவருக்கு போன் பண்ணிக் கேளுங்க அத்தை" என்றபடி அங்கு வந்தாள் ஓவியா.


"ரிஷி ஸ்னேகாவைக் கூட்டிட்டு நம்ம ஆபிசுக்குப் போயிருக்கானாம். இப்ப தான் ட்ரைவர் போன் பண்ணிச் சொன்னான்" என்று ஒரு பெருமூச்சுடன் அவர் கூறினார்.


ஓவியாவோ முகம் வாட சோபாவில் அமர்ந்தவள், "என்னை அவாய்ட் பண்ணத்தானே அத்தை அவன் இப்படி நடந்துக்கிறான்? இன்னைக்குக் காலையில வலுக்கட்டாயமா அவனுக்கு நான் எல்லாம் பண்ணினாலும் போக போகச் சரி ஆகிருவான்னு நினைச்சேன். ஆனா.." என்று தழுதழுத்தவளுக்கு மேற்கொண்டு வார்த்தை வரவில்லை.


மருமகளின் அருகே வந்தமர்ந்த ராஜேஸ்வரி, "ஆனா என்ன.. அதான் நீயே சொல்லிட்டியே, போக போக சரி ஆகிருவான்னு.. கவலைப்படாத ஓவிமா! நீ கவலைப்பட்டா எனக்குத்தான் அதிகமா குற்றவுணர்வா இருக்கும். இன்னைக்குப் பண்ணினதை நான் முன்னமே பண்ணி இருக்கணும். ம்பச்! எல்லாம் என் தப்பு! இதுக்கெல்லாம் சீக்கிரமே ஒரு முடிவு வரும். நான் சொல்றதை நம்பு!" என்றார்.


அதே நேரம் தந்தையின் கேபினுக்குள் ஸ்னேகாவுடன் நுழைந்தான் ரிஷிவர்மன்.


பள்ளிச் சீருடையில் வந்திருக்கும் இருவரையும் வியந்து பார்த்த ரவிவர்மன், "என்ன ரிஷி, வீட்டுக்குப் போகாம இங்க வந்து இருக்கே..?" என்று மகனிடம் கேட்க,


அவனோ, "ஏன் நான் வர கூடாதா டாடி? இன் பியூசர்ல நான் தானே இந்த ஆபிஸ் எம்.டி?" என்று கேட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.


மகனின் பேச்சில் வாய் விட்டுச் சிரித்த ரவிவர்மன், "நீங்க வருங்கால எம்.டி! சோ இங்க வந்துருக்கீங்க. மேடம் எதுக்கு வந்துருக்காங்க..?" என்று ஸ்னேகாவை சுட்டிக் காட்டிக் கேட்டான்.


"இன் பியூச்சர்ல பாப்பா தான் என் பி.ஏ டாடி. இப்ப மாதிரி எப்பவும் என் கூடத்தான் இருப்பா. அதான் அவளுக்கும் நம்ம ஆபிசை சுத்திக் காட்ட கூட்டிட்டு வந்தேன்" என்றவன், "அப்படித்தானே பாப்பா?" என்று ஸ்னேகாவிடம் கேட்க,


"ஆமா அத்து.. நான் உங்க கூடத்தான் இருப்பேன்" என்று கூறி விட்டு அவனை ஒட்டி நிற்கவும்,


"சரியான அத்து கோண்டு..!!" என்று ரவிவர்மன் சிரித்தபடி கூறிக் கொண்டு இருக்கும் போது, அவனது மொபைல் ஒலி எழுப்பியது. எடுத்துப் பார்த்தவன், அழைப்பது அன்னை என்றதும், உடனே அட்டன்ட் செய்தான்.


"ரவி! பசங்க ரெண்டு பேரும் அங்கே ஆபிஸூக்கு வர்றதா டிரைவர் சொன்னான், வந்துட்டாங்களா?" என்று கேட்டார் ராஜேஸ்வரி.


"எஸ் மா! இப்ப தான் ரெண்டு பேரும் வந்தாங்க. இங்கதான் இருக்காங்க" என்று இவன் கூறவும்,


காலையில் நடந்ததை மகனிடம் கூறி விட்டு, "ரிஷிகிட்ட நீ கொஞ்சம் பேசிப் பார்க்கிறியா..?" என்று அவர் கேட்க,


அவனோ, "ஒஹ்! சரிமா, நான் பார்த்துக்கிறேன்" என்று தாயிடம் கூறி விட்டு மொபைலை அணைத்த ரவிவர்மனுக்கு, மகனின் திடீர் ஆபிஸ் விஜயம் எதற்கென்று நன்றாகவே புரிந்தது. ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு,


"ரிஷி! நீ ஸ்னேகாவுக்கு ஆபிஸ் சுத்திக் காட்டு. அப்பா வேலை முடியவும் வீட்டுக்குக் கிளம்பலாம்" என்று ரவிவர்மன் மகனிடம் கூறவும்,


ரிஷிவர்மனும் இருக்கையில் இருந்து இறங்கி, "வா பாப்பா…" என்றபடி எழுந்து ஸ்னேகாவின் கைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.


ஸ்னேகாவை அழைத்துக் கொண்டு மகன் வெளியேறவும், மீண்டும் மொபைலை எடுத்து மனைவிக்கு அழைத்தான் ரவிவர்மன். அவள் அந்தப் பக்கம் எடுத்ததும் "ஓவிமா.." என்றான்.


அவளோ, "ரவி! ரிஷியைப் பார்த்தீங்களா? ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்கு வராம ஆபிஸூக்கு வந்துருக்கான்னா, என்னைப் பார்க்கப் பிடிக்காம தானே..?" என்று கவலை கொண்டு கேட்டாள்.


மனைவியின் பேச்சில் சிறிது நேரம் அமைதியாக இருந்த ரவிவர்மன், "ஓவிமா! கொஞ்சம் பொறுமையா இருன்னு அன்னைக்குச் சொன்னேன் தானே? நீ இப்ப இப்படி அவனைக் கட்டாயப்படுத்தவும், உன்னை வெறுக்க வாய்ப்பு இருக்கு ஓவிமா, புரிஞ்சிக்கோ!" என்று மனைவிக்குப் புரிய வைக்க முயன்றான்.


"என்னால முடியல ரவி! எனக்கு என் பையன் வேணும். இவ்வளவு நாளும் ஏன்டா அவனை விட்டுத் தள்ளி இருந்தோம்ன்னு இப்ப தவிக்கிறேன் ரவி. இன்னைக்கு என்னல்லாம் பேசிட்டான் தெரியுமா..?" என்றவளின் குரலில் வலியும், அழுகையும் அப்பட்டமாகத் தெரிந்தது.


மேற்கொண்டு மனைவியை வருத்தப்பட செய்ய விரும்பாமல், "சரி, நான் வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்" என்றுவிட்டு அழைப்பை அணைத்தவன், யோசனையுடன் அமர்ந்து விட்டான்.


சிறிது நேரம் கழித்து கேபினின் உள்ளே வந்த ரிஷிவர்மன், "டாடி! இன்னைக்கு நான் பாப்பா கூட மாமா வீட்டுக்குப் போறேன். எங்களை அங்கே ட்ராப் பண்ணிடுங்க" என்று கூறவும்,


மகனின் பேச்சில் அவனை அழுத்தமாக பார்த்தான் ரவிவர்மன். வீட்டுக்குச் செல்ல பிடிக்காமல் தான் இப்படிக் கூறுகிறான் என்று புரியவும், 'இதை இப்படியே விட கூடாது! விட்டால் மனைவிக்கு அநியாயம் செய்தது போல் ஆகி விடும்' என்பதை உணர்ந்தவன், இப்பொழுதே இதைச் சரி செய்ய வேண்டும் என்று ஒரு முடிவெடுத்தபடி,


"நோ ரிஷி.. உன் பாட்டி.." என்று சொல்ல வந்தவன் அதை விடுத்து, "உன் அம்மா உன்னைத் தேடுவா. கம் லெட்ஸ் கோ!" என்றுவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டவன், குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். ரிஷிவர்மனோ உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டான்.


அன்று மட்டும் அல்ல, அதன் பின்பு வந்த நாட்கள் கூட எந்த மாற்றமும் இல்லாமல் தான் கடந்தது. ரிஷிவர்மன் தான் ஓவியாவிடம் ஒட்டாமல் ரொம்பவே முரண்டு பிடித்தான். அவனது பிடிவாத குணம் அறிந்தாலும், அவனை மீண்டும் மாமியாரிடம் விட்டுக் கொடுக்கும் எண்ணம் சிறிதும் அவளுக்கு இல்லை.  


ராஜேஸ்வரிக்கு அதில் சிறு வருத்தம் இருந்தாலும், அவன் தாயின் அன்பை ஏற்று, அவளைப் புரிந்து கொண்டாலே போதும் என்று தள்ளி நின்று கொண்டார். 


ரிஷிவர்மனும் குழந்தை தானே? நாட்கள் செல்ல செல்ல முரண்டு பிடிப்பதை நிறுத்திக் கொண்டான். மேலும் அவன் மனதிலோ, தாய் தன்னைத் தனது ராஜிமாவிடம் இருந்து பிரிக்க நினைக்கிறார் என்று ஆழ பதிந்து போக, அவனது கோபம் முழுக்கத் தாயிடம் மட்டுமே இருந்தது. மகனின் மனநிலையை உணராமல், மகன் தன்னிடம் முழுதாக வந்து விட்டான் என்று எண்ணி மகிழ்ந்து போனாள் ஓவியா. 


இப்படியே மேலும் நாட்கள் நகர, அன்று அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த கணவனிடம் வந்த ஓவியா, "என்னங்க.. ரம்யாவை அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்க்கணும். ஞாபகம் இருக்குல? அதுக்கு இப்பவே அட்மிஷன் வாங்கணும்" என்று நினைவு படுத்தினாள்.


"நல்லா ஞாபகம் இருக்கு பேபி. இன்னைக்கு மறக்காம ஃபார்ம் வாங்கிட்டு வரேன், ஓகேவா?" என்று விட்டு மனைவியின் இதழில் அழுத்தி முத்தமிட்டான்.


அவளோ, "என்னங்க, குட்டிமா இருக்கா" என்று கணவனைச் செல்லமாக அதட்ட,  


"ஏய்! அவ விளையாடிட்டு இருக்கா" என்று சிரித்த ரவிவர்மன், கட்டிலில் அமர்ந்து கையில் இருந்த பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த மகளின் அருகே சென்று அவளது கன்னத்தில் முத்தம் வைத்தவன், "அப்பா ஆபிஸ் போய்ட்டு வரேன் குட்டிமா.." என்றுவிட்டுக் கிளம்பிச் சென்றான்.


தானும் சிரித்தபடி மகளின் அருகே வந்த ஓவியா, "குட்டிமா! குளிக்கலாமா?" என்று கேட்க,


"ஷவர் ஷவர்.." என்று குதித்தாள் குழந்தை ரம்யா.


மகளின் மூக்கை பிடித்து ஆட்டிய ஓவியா, "ஷவர்லேயே குளிக்கலாம்" என்று கூறியபடி குழந்தையுடன் குளியல் அறைக்குள் நுழைய போனாள்.


அப்பொழுது, "ஓவிமா! என்ன பண்றே? நான் ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொஞ்சம் போய்ட்டு வரேன்" என்றபடி அறையின் உள்ளே வந்தார் ராஜேஸ்வரி.


மருத்துவமனை என்றதும் பதறிய ஓவியா, "என்னாச்சு அத்தை? எதுக்கு ஹாஸ்பிட்டல்? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?" என்று கேட்டாள்.


"இப்ப எதுக்கு இப்படிப் பதட்டப்படுறே? எனக்கு ஒன்னும் இல்ல. எல்லாம் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பண்ற செக்கப் தான் ஓவிமா. போன மாசமே பண்ண வேண்டியது. எனக்கு மறந்தே போச்சு! நேத்து ரவி தான் ஞாபகப்படுத்தினான். அப்பவே டாக்டர்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கிட்டான்" என்று கூறி விட்டு அவர் வெளியேற போகவும்,


"அத்தை! நீங்க தனியா போக வேணாம். இப்ப தான் அவர் கிளம்பிப் போனார். அவருக்கு போன் பண்றேன், உடனே வந்துருவார்" என்று அவள் கூறவும்..


"அவனை எதுக்குத் தொந்தரவு பண்ணிகிட்டு? அதெல்லாம் வேணாம்.." என்றதும்,


மனமே இல்லாமல், "சரி அத்தை, போய்ட்டுச் சீக்கிரம் வந்துருங்க" என்றாள் ஓவியா.


பேத்தியின் கன்னத்தில் முத்தமிட குனிந்த ராஜேஸ்வரி, "ரம்யா குட்டி! பாட்டி டாக்டர்கிட்ட போய்ட்டு வரேன். அதுவரை உங்க அம்மாவை நீ தான் பத்திரமா பார்த்துக்கணும், சரியா?" என்று கூறினார்.


குழந்தைக்கு என்ன புரிந்ததோ? "சரி பாத்தி" என்று மழலை குரலில் வாக்கு கொடுத்தாள் ரம்யா. சிரித்தபடி பேத்தியின் கன்னத்தில் தட்டி விட்டுக் கிளம்பி விட்டார் ராஜேஸ்வரி.


மாமியார் கிளம்பவும், ஓவியாவோ மகளைக் குளிக்க வைத்து அவளுக்கு உண்ணக் கொடுத்தவள், சிறிது நேரம் தோட்டத்தில் மகளுடன் விளையாடினாள். பின்பு வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பிக்கவும், மகளை அறைக்கு அழைத்து வந்தவள், குழந்தையை உறங்க வைத்து விட்டுத் தானும் மகளை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனாள்.


எவ்வளவு நேரம் கடந்ததோ? திடீரென ஓவியாவுக்கு முழிப்பு வரவும் வேகமாக எழுந்து அமர்ந்தவள், கட்டிலில் கைகளால் துழாவி பார்க்க, குழந்தை இன்னும் உறங்கிக் கொண்டு இருப்பது உணர்ந்து, "அத்தை வந்துருப்பாங்க. டாக்டர் என்ன சொன்னாங்கன்னு கேட்டுட்டு வருவோம்" என்று தனக்குத்தானே கூறியபடி கையில் மொபைலுடன் வெளியே வந்தவள், மாமியாரின் அறையை நோக்கிச் சென்றாள்.


அப்பொழுது, "சின்னம்மா.." என்றபடி வந்தாள் அவ்வீட்டின் வேலைக்காரப் பெண்.


"லக்ஷ்மி! அத்தை வந்துட்டாங்களா..?" என்று அவளிடம் ஓவியா கேட்க,


"ஆமா சின்னம்மா, நம்ம பெரியம்மா ஹாஸ்பிட்டல் போய்ட்டு அப்பவே வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் தூங்குறேன், யாரும் தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லிட்டுப் போய்ப் படுத்துட்டாங்க" என்றவள், "நான் போய் ராத்திரிக்குச் சமைக்க காய் வாங்கிட்டு வந்துறேன் சின்னம்மா" என்றுவிட்டு வேலைக்காரப் பெண் வெளியேறினாள்.


ஓவியாவும் மாமிரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, கையில் இருந்த ஹெட்போனை மொபைலில் பொருத்தி அதைக் காதில் வைத்த அதே நேரம், 


ராஜேஸ்வரிக்கு வெகுவாக இருமல் எடுக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து அவரது உடல் திடீரென வியர்வையில் முக்குளிக்க, அவரது இடது கையோ தானாக எழும்பி அவரது நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டது.


ஆம்! சில நாட்களாகவே அவருக்கு இதயத்தில் 'சுருக் சுருக்' என்று வலி வந்து கொண்டு இருந்தது. ஏற்கனவே இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்து விட்டதால், மிகவும் கவனமாக இருக்கச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தி இருந்தார். 


மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரை மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொண்டு இருந்தவர், ஆறுமாதத்திற்கு ஒரு முறை பரிசோதனையும் செய்து வந்தார். இதோ, இன்றும் உடல் பரிசோதனை செய்து விட்டு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவருக்குத் திடீரென நெஞ்சில் வலி ஆரம்பித்தது.


எப்பொழுதும் வரும் வலி என நினைத்த ராஜேஸ்வரி, மெதுவாக எழுந்து அங்கே டேபிளில் இருந்த இதய வடிவிலான மாத்திரை ஒன்றை எடுத்து நாவிற்கு அடியில் வைத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து படுத்துக் கண் மூடினார். 


அந்த மாத்திரை உட்கொண்ட சிறிது நேரத்தில் வலி குறைய வேண்டும். ஆனால் வலி குறையாமல் அதிகமாகவும் அவரால் சீராக மூச்சு விட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு எழுந்து வாசல் வரை வந்த ராஜேஸ்வரி, அதற்கு மேல் நடக்க முடியாமல், அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் விழுந்து விட்டார்.


கீழே விழுந்த ராஜேஸ்வரியோ, அங்கே அமர்ந்திருந்த மருமகளைக் கண்டுவிட்டவர் முயன்று, "ஓ..ஓவிமா…" என்று ஈனசுவரத்தில் அழைத்தார். அவர் அழைத்தது அவருக்கே கேட்க வாய்ப்பில்லை எனும் போது ஓவியாவிற்கு மட்டும் எப்படிக் கேட்டிருக்கும்?


இங்கே ஒரு உயிர் துடித்துக் கொண்டிருப்பதை அறியாமல், காதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலில் லயித்து இருந்தாள் ஓவியா.


நெஞ்சின் வலி தாங்க முடியாமல் ராஜேஸ்வரி துடித்துக் கொண்டிருந்த நேரம், அவர்கள் வீட்டு வாசலில் வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.


அதில் இருந்து இறங்கிய ரிஷிவர்மன் வீட்டுக்குள் நுழைய போகும் நேரம், ஓட்டுநரோ அவனை அழைத்து, "தம்பி! நான் அப்பாவைக் கூப்பிட ஆபிசுக்குப் போறேன். நீங்க அம்மாகிட்ட சொல்லிருங்க" என்றுவிட்டு அவன் வாகனத்தைக் கிளப்பிச் சென்று விட்டான்.


வீட்டுக்குள் வந்த ரிஷிவர்மனின் பார்வையில் கண்களை மூடிக் கொண்டு, காதில் ஹெட்போனை மாட்டி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த அவனது அன்னை தான் விழுந்தாள்.


அன்னையைப் பார்த்த ரிஷிவர்மனோ, 'தான் வந்தது தெரிந்தால் தன்னை அவர் விட மாட்டார்' என்று எண்ணியவன், சத்தம் எழுப்பாமல் தனது ராஜிமாவைக் காண அவரது அறை பக்கம் திரும்பினான். அவனது கண்ணில் அங்கே தரையில் விழுந்து கிடந்தவரைக் கண்டதும் அதிர்ச்சியானான்.


அவன் அப்படி அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான்! அடுத்த நொடி கையில் இருந்த புத்தகப் பையை தூக்கி எறிந்தவன், "ராஜிமா..!!" என்று கத்தியபடி வேகமாக அவர் அருகில் ஓடினான்.


அவரோ பேரனின் குரலில் சற்று ஆசுவாசமானவர், அவனது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "ரா...ஜா.." என்றார்.


ரிஷியோ, "ராஜிமா.. என்னாச்சு? எழுந்திரிங்க.. ராஜிமா.." என்று அவரை எழுப்ப முயல, 


அவரோ, "ரா...ஜா! அ..அம்மா கூ...ப்பி…" என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் திக்கித் திணறினார்.


அவர் சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட ரிஷியோ, அடுத்த நொடி தனது தாயைப் பார்த்து, "அம்மா…" என்று உரக்க கத்தினான்.


அதே நேரம் கண்மூடி பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ஓவியாவோ சட்டென்று கண் விழித்தாள்.


தான் அழைத்தது அன்னைக்கு கேட்டு விட்டது. இதோ, உடனே ராஜிமாவின் அருகே வர போகிறார் என்று அச்சிறுவன் எண்ணிக் கொண்டு தாயையே பார்த்திருக்க,


ஓவியாயோ, தனது மகள் ரம்யா எழுந்து விட்டாளா என்று பார்ப்பதற்காகப் பாட்டு கேட்டபடியே அவள் அறையை நோக்கிச் செல்லவும், தான் கூப்பிட்டும் தாய் இங்கு வராமல் அவள் அறைக்குச் செல்வதைக் கண்ட ரிஷி, "அம்மா! இங்க வாங்க, ராஜிமா..ம்மா…" என்று அழுகுரலில் மீண்டும் உரக்க கத்தினான்.


ஓவியாவின் காதில் தொடர்ந்து பாடல் ஒலித்துக் கொண்டிருந்ததால், இங்கு ஒரு உயிர் துடிப்பதையும், அந்தத் துடிப்பைக் கண்டு தன் மகன் தன்னை அழைப்பதையும் உணராமல் போனவள், அறைக்குள் சென்றதும் கதவடைத்துக் கொண்டாள்.


அதில் துணுக்குற்ற ரிஷிவர்மன் வேகமாகத் தாயின் அறையை நோக்கி ஓடி வந்து, "அம்மா, வெளியே வாங்கம்மா, ரா…ஜிமாம்மா, பாவம்மா… அம்மா வாங்கம்மா…" என்று அழுது கொண்டே கதவைத் தட்டினான்.


கட்டிலின் அருகே வந்த ஓவியாவோ மகளைத் தொட்டுப் பார்க்க, அவள் இன்னும் உறங்குவதை உணர்ந்து, இதழில் மென்புன்னகையுடன் மகளின் அருகே மீண்டும் படுத்துக் கொண்டாள்.


தாயின் ஸ்பரிசத்தினாலோ அல்லது கதவு தட்டும் சத்தத்தினாலோ என்னவோ, குழந்தை ரம்யா சின்னச் சிணுங்கலுடன் புரண்டு படுத்தாள். குழந்தையின் அசைவை உணர்ந்து, "ஒன்னும் இல்ல குட்டிமா.." என்று ஓவியா மகளைத் தட்டிக் கொடுத்தாள்.


இங்கே வெளியே கதவை தட்டி தட்டி ஓய்ந்து போன ரிஷிவர்மன் ராஜேஸ்வரியைப் பார்க்க, அவரோ சற்று முன்பு இருந்த சிறு அசைவும் இல்லாமல் இருப்பது கண்டு மீண்டும் அவரிடம் ஓடி வந்தவன், "ராஜிமா.. ராஜிமா.. எழுந்துருங்க.. எனக்குப் பயமா இருக்கு" என்று அவரை உலுக்கினான். பின்பு என்ன நினைத்தானோ? அடுத்த நிமிடம் வீட்டில் இருந்து வெளியே ஓடியவன், அங்கே வாசலில் நின்றிருந்த காவலாளியை அழைத்து வந்தான். 


"என்னாச்சு தம்பி?" என்று கேட்டபடி வீட்டின் உள்ளே வந்தவர், ராஜேஸ்வரியைப் பார்த்துப் பதறி உடனே ரவிவர்மனுக்கு அழைத்தார், அந்தக் காவலாளி. 


அடுத்தச் சில நிமிடங்களில் புயலென வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்த ரவிவர்மன் பார்த்தது என்னவோ, தங்களை எல்லாம் விட்டு விட்டு மேலோகம் சென்று விட்டிருந்த அன்னையைத்தான்..!! 



****



No comments:

Post a Comment