ஸ்வரம் 27





ஸ்வரம் 27....


ராஜேஸ்வரி இவ்வுலத்தை விட்டுச் சென்று இன்றோடு பதினாறு நாட்கள் ஆகி இருந்தது.


பதினாறாம் நாள் காரியம் முடிந்து சொந்தங்கள் அனைவரும் மதியமே கிளம்பிச் சென்றிருந்தனர். குழந்தைளுக்குப் பரீட்சை இருப்பதால் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி இருந்தார்கள் ராதாவும், கார்த்திக்கும். மோகனாவோ, இரண்டு நாட்கள் கழித்து வருவதாகக் கூறி விட்டவள், ஸ்னேகாவை மட்டும் தன்னுடன் நிறுத்திக் கொண்டாள்.


எல்லோரையும் அனுப்பி வைத்து விட்டுத் தனது பி.ஏ வாசுவிடம் அலுவலக சம்பந்தமாகத் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தான் ரவிவர்மன்.


அப்பொழுது அங்கே கையில் காபி கப்புகளுடன் வந்த மோகனா, அதை இருவருக்கும் கொடுத்து விட்டு வீட்டுக்குள் செல்ல திரும்பினாள்.


"மோகனா.." என்று அவளைத் தடுத்து நிறுத்திய ரவிவர்மன், "ஓவியா சாப்பிட்டாளா?" என்று கேட்டான்.


"இல்லண்ணா.. இனி தான் அவளையும், குழந்தைகளையும் சாப்பிட வைக்கணும்" என்றவள் வீட்டுக்குள் சென்று விட்டாள்.


உள்ளே வந்த மோகனா, ஹாலில் சுவரில் ரோஜா மாலைக்கு நடுவே சட்டத்தினுள் சாந்தமான புன்னகையுடன் இருந்த ராஜேஸ்வரியின் புகைப்படத்தின் கீழே கண் கலங்க சோர்வுடன் அமர்ந்திருந்த ஓவியாவைப் பார்த்தாள்.


ஓவியாவின் அருகே கையில் இருந்த பொம்மையுடன் ஸ்னேகாவும், ரம்யாவும் விளையாடிக் கொண்டிருந்தனர்.


அவர்கள் அருகில் வந்து அமர்ந்த மோகனா, "ஓவி! எழுந்திரு, முகம் கழுவிட்டு ரெண்டு வாய் சாப்பிடு" என்றாள். 


ஓவியாவோ, "இல்ல, எனக்கு வேணாம்" என்று மறுக்கவும்,


"இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே உக்காந்து இருக்கப் போறே? எழுந்துருடி!" என்று சற்று அதட்டினாள். 


அவளோ, "முடியல மோனா.. இப்ப வரை அத்தையோட இழப்பை என்னால ஜீரணிக்கவே முடியல. ஹாஸ்பிட்டல் போறதுக்கு முன்ன என்கிட்ட பேசினதுதான் கடைசி. அவங்க வந்ததும் ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறாங்கன்னு தான் நினைச்சேன். ஆனா.. இப்படி எங்களை எல்லாம் விட்டுட்டுப் போவாங்கன்னு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல!" என்றவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.


"ஓவி! என்ன இது?" என்று தோழியின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள் மோகனா.


"ரிஷி பிறந்ததில இருந்து அவங்க தான் அவனைப் பார்த்துக்கிட்டாங்க. ஆனா அவனை என் பொறுப்பில எடுக்கிறேன்னு அவங்ககிட்ட இருந்து பறிச்சுட்டேன். ஒ..ஒருவேளை அதை நினைச்சு உடம்பு சரி இல்லாம போய், இப்படி ஆகி இருக்குமோன்னு எனக்கு ஒரே குற்ற உணர்வா இருக்குடி" என்றவள் அழ ஆரம்பிக்க,


"ஓவி! நீயா ஏதையாவது மனசுல போட்டுக் குழப்பிக்காதேடி!" என்று தோழியைத் தேற்ற முயன்றாள் மோகனா.


"இல்லடி, என்னை ஒரு மருமகளா இல்லாம அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாங்க. ஆனா நான் அவங்களோட கடைசி நாட்கள்ல அவங்களுக்கு மனக் கஷ்டத்தைத் தான் கொடுத்துருக்கேன்" என்று கண்களில் கண்ணீர் வழிய, சொன்னதையே சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள் ஓவியா. 


தோழியின் புலம்பலைக் கேட்ட மோகனா, 'இவளை இப்படியே விட்டால் இப்படித்தான் தேவையில்லாததைப் போட்டு மனசைக் குழப்பி கொண்டு இருப்பாள். முதலில் ஓவியாவின் மனதைச் சரி பண்ண வேண்டும்' என்று முடிவெடுத்தவள்,


"இங்க பாரு ஓவிமா.. நீ இப்படிப் புலம்பிக்கிட்டும், அழுதுகிட்டும் இருந்தா ராஜிமா மனசு சந்தோஷப்படுமா?? சொல்லு! இதை நிச்சயம் அவங்க விரும்ப மாட்டாங்க. அதோட உன்னோட புருஷன் ரவியைக் கொஞ்சம் நினைச்சுப் பாருடி. நீ இப்படி இருந்தா அவருக்கு யார் துணையா இருக்கிறது? ஆம்பளங்கிறதால அவரோட துக்கத்தை, வலியை வெளியே காட்டிக்கலை. ஆனா அவரோட மனசு இந்த நேரத்தில ஆறுதல் தேடும்டி. அதை நீ தான் அவருக்குக் கொடுக்க முடியும். மொதல்ல எழுந்துரு.." என அவளைத் தேற்றியவள்,


"ரிஷி காலையிலும் சாப்பிடல, ரூம் விட்டும் அவன் வெளியே வரல. அவனையும் பார்க்கணுமா இல்லையா? ராஜிமாக்குப் படைச்ச படையல் ஒன்னை தட்டுல எடுத்து வச்சிருக்கேன். அதை அவனுக்கு ஊட்டி விடு! வா.." என்று மோகனா கூறியதைக் கேட்டு ஓவியா எழுந்தாளோ இல்லையோ.. 


ரிஷியின் பெயரைக் கேட்டதும் சட்டென்று எழுந்து கொண்டாள் குழந்தை ஸ்னேகா. அவளும் இந்தப் பதினாறு நாட்களும் அங்குத்தான் இருக்கிறாள். ஆனால் ரிஷியைத்தான் அவளால் பார்க்க முடியவில்லை.


அவளுக்கு அவளது அத்துவைக் காண வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவன் தான் வேற யாரையும் அவனை நெருங்க விடவில்லை. ரொம்பவே அமைதியாக இருந்தான். வீடு இருந்த நிலையில் அவனை யாரும் உற்றுக் கவனிக்கவில்லை. இத்தனை நாட்களும் மோகனா தான் அவனை அதட்டி ஒருவாறு சாப்பிட வைப்பாள். அவனது ராஜிமாவின் இழப்பால் இப்படி இருக்கிறான் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.


இப்பொழுது தனது அத்துவைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் எழுந்து நின்ற ஸ்னேகா, "மோஹிமா, அத்துக்கு நான்.." என்று அவள் தாயிடம் கையை நீட்ட, "என்ன ஸ்னேகா?" என்று புரியாமல் கேட்டாள் மோகனா. 


குழந்தையோ, "அத்துக்கு நான் சாப்பாடு ஊட்டணும்" என்று கூற, மகளின் பேச்சில் இதழில் புன்னகை அரும்ப,


"அதை உங்க ஓவிமா பார்த்துக்குவா. உனக்கும், ரம்யா குட்டிக்கும் நான் ஊட்டி விடுறேன்" என்று சொன்னவள், ரிஷிக்கான உணவை எடுத்து வந்து தோழியின் கையில் கொடுத்து விட்டு,


"ஓவி! ரிஷி ராஜிமா ரூம்ல தான் படுத்து இருக்கான். நீயா போயிடுவியா இல்ல நான் உன்னைக் கொண்டு போய் விடவா?" என்று மோகனா கேட்க,


"நானே போய்க்கிறேன். நீ ரம்யாவையும், ஸ்னேகாவையும் கவனி!" என்ற ஓவியா தளர்ந்த நடையில் மாமியாரின் அறையை நோக்கி நடந்தாள்.


அந்த அறைக்குள் நுழைந்த ஓவியாவுக்கோ மாமியாரின் நினைவுகள் வந்து மனதில் அழுத்தியது. மெதுவாக நடந்து கட்டிலின் அருகே வந்தவள், "ரிஷி! ரிஷி கண்ணா!" என்று அழைத்தாள்.


கட்டிலில் கண் மூடிப் படுத்திருந்த ரிஷியோ அன்னையின் குரல் கேட்டு, வேகமாகக் கட்டிலில் இருந்து இறங்கி நின்று தாயை முறைத்தானே தவிர என்னவென்று கேட்கவில்லை.


மகன் சத்தம் கொடுக்காமல் இருக்கவும், ஒருவேளை தூங்குகிறானோ என்று எண்ணிக் கட்டிலில் கைகளால் துழாவிய ஓவியா, மகன் கட்டிலில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டவள், "ரிஷி! எங்க இருக்கே? அம்மா உனக்குச் சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன், சாப்பிடு ராஜா" என்று கூறவும்,


தாயையும், அவள் கையில் இருந்த தட்டையும் மாறி மாறிப் பார்த்த அந்தப் பாலகனின் கண் முன், அன்று நடந்த காட்சிகள் படமாக விரிய, அடுத்த நிமிடம் ஓவியாவின் கையில் இருந்த உணவுத்தட்டு எங்கோ பறந்தது. ஆம்! தாயின் மீதிருந்த கோபத்தில் அவன்தான் உணவைத் தட்டி விட்டிருந்தான்.


அதில் அதிர்ந்த ஓவியா, "ரிஷி! நீ..யா தட்டி விட்ட? எதுக்கு ராஜா..?" என்று அதிர்ச்சி விலகாமல் மகனிடம் கேட்டாள்.


அவனோ, அப்பொழுதும் தாயை முறைத்துக் கொண்டு தான் நின்றிருந்தானே தவிர, அன்னையின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.


மகனின் அமைதியில் பதற்றம் கொண்ட ஓவியா, "ரிஷிமா.." என்றபடி கைகளால் துழாவி மகனை நோக்கி நெருங்கினாள். ஆனால் ரிஷியோ, அன்னையின் கை தன் மீது படும் முன் அவளது கையைத் தட்டியவன், அதே வேகத்தில் தாயையும் தள்ளி விட்டிருந்தான்.


மகனின் செயலை எதிர்பாராத ஓவியா, "ரிஷி..!!" என்று கத்தியபடி தடுமாறி கீழே விழப் போனாள். ஆனால் அவள் விழும் முன் தாங்கிப் பிடித்து இருந்தான், தாயின் அறையில் சத்தம் கேட்டு வேகமாக உள்ளே வந்த ரவிவர்மன்.


"என்னாச்சு ஓவிமா..?" என்று கேட்டு மனைவியை நேராக நிற்க வைத்தவன், அங்கே சிதறி கிடந்த உணவைப் பார்த்து விட்டு மகனை கேள்வியாக நோக்கினான்.


ஓவியாவோ, "என்னனு தெரியலங்க, அவனுக்குச் சாப்பாடு தான் கொண்டு வந்தேன். அதைத் தட்டி விட்டு என்னையும் தள்ளி விட்டுட்டான்" என்று ஓவியா கூற,


"ரிஷி!!" என்று அழுத்தமாக மகனை அழைத்த ரவிவர்மன், "அம்மாவை எதுக்குத் தள்ளி விட்டே?" என்று அவனிடம் கேட்டான்.


ரிஷியோ, தந்தைக்குப் பதில் அளிக்க விருப்பம் இல்லாதது போல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, "ரிஷி! உங்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்" என்று மகனை அதட்டினான்.


தந்தையைத் திரும்பிப் பார்த்த ரிஷிவர்மன், "ஐ ஹேட் ஹெர் டாடி! அதான் தள்ளி விட்டேன்" என்றான், தந்தையை விட அழுத்தமாக!!


அவன் கூறியதைக் கேட்டு ஓவியா அதிர்ந்து நிற்க, "ரிஷி! என்ன பேசுறே?" என்று சற்றுக் கடுமையான குரலில் கேட்டான் ரவிவர்மன்.


தந்தையின் கோபத்தில் சிறிதும் பயம் கொள்ளாமல், "எஸ் டாடி! எனக்கு இவங்களைப் பிடிக்கல. வெளியே போகச் சொல்லுங்க. ஐ ஹேட் ஹெர்! ஐ ஹேட் ஹெர்!" என்று கத்திய ரிஷிவர்மன், அங்குச் சுவரோரம் மேஜையில் இருந்த பிளவர் வாஸை எடுத்துச் சிறிதும் யோசிக்காமல் தாயை நோக்கி எறிந்து இருந்தான்.


மகனது பேச்சில் அதிர்ந்து நின்ற ரவிவர்மன், அடுத்து அவன் பிளவர் வாஸைத் தூக்கி எறியவும், அது மனைவியின் மீது பட்டு விடாமல் அவளை மறுபக்கம் சட்டென்று இழுத்து நிறுத்தினான். ரிஷி எறிந்த பிளவர் வாஸ் கீழே விழுந்து நொறுங்கியது.


கணவன் சட்டென்று இழுத்ததிலும், கீழே எதுவோ விழுந்து நொறுங்கிய சத்தத்திலும் மேலும் அதிர்ந்த ஓவியா, மகன் எதையோ தன் மீது வீசி இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள். அன்னை என்றும் பாராமல் தன்னைக் காயப்படுத்தும் அளவிற்குத் தன் மகனின் கோபம் உச்சத்தில் இருப்பதை எண்ணி, அன்னையாய் அவளது மனம் பயத்தில் பிசைய ஆரம்பித்தது. 


வெளியே உணவு மேஜையில் குழந்தைகள் இருவருக்கும் உணவை ஊட்டிக் கொண்டிருந்த மோகனா, ரிஷிவர்மனின் கத்தும் சத்தமும் அதைத் தொடர்ந்து ஏதோ விழுந்து நொறுங்கும் சத்தமும் கேட்க, வேகமாக அங்கு விரைந்தவள், அங்கு நிலவிய சூழ்நிலையைக் கண்டு, "என்னாச்சு?" என்றாள் சற்றுப் பதற்றமாக.


ரவிவர்மனோ மோகனாவின் கேள்விக்குப் பதிலளிக்காமல் கலங்கி நின்ற மனைவியை ஒரு பார்வை பார்த்தவன், மோகனாவிடம், "ஒன்னும் பிரச்சினை இல்ல மோகனா.." என்றவன், மனைவியின் மனநிலையை உணர்ந்து,


"இவளைக் கொஞ்சம் வெளியே கூட்டிட்டுப் போம்மா, நான் ரிஷிகிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கூறி மனைவியை வெளியே அனுப்பி வைத்த ரவிவர்மன் மகனை நோக்கித் திரும்பினான். 


தோழியை வெளியே அழைத்து வந்த மோகனா, தோழியின் கலங்கிய கண்களைப் பார்த்து, "என்னடி ஆச்சு?" என்று கேட்க, ஓவியாவிற்கே பதில் தெரியவில்லை எனும் பொழுது தோழியிடம் என்னவென்று கூறுவாள்..??


இங்கு ரவிவர்மனோ சிறிதும் கோபம் குறையாமல் மகனின் அருகே சென்றவன், அவனது தோளைப் பிடித்து உலுக்கி, "ரிஷி! எதுக்கு இப்படி பிகேவ் பண்றே..? அவ உன் அம்மா! உனக்குச் சாப்பாடு தானே கொண்டு வந்தா?" என்று அதட்டிக் கேட்டான்.


அவனோ, "அவங்க என் அம்மா இல்ல.. ராஜிமா தான் என் அம்மா. இவங்க எனக்கு வேணாம். ஐ ஹேட் ஹெர் டாடி!" என்று அதையே கூற,


மகனின் பேச்சில் உள்ள கோபத்தை உணர்ந்து, மகனை மென்மையாகக் கையாள நினைத்தவன், "ரிஷி! அப்படிச் சொல்ல கூடாது! அம்மா மனசு கஷ்டப்படும்ல?" என்று ரவிவர்மன் தன்மையாகக் கூறவும்,


"அப்படித்தான் சொல்லுவேன் டாடி! எனக்கு இவங்க வேணாம்" என்று பிடிவாதமாகக் கூறினான்.


ரவிவர்மனோ, "அம்மா பாவம் ராஜா!!" மனைவியை விட்டுக் கொடுக்காமல் அவன் பேச,


"அவங்க பாவம் இல்ல.. என் ராஜிமாதான் பாவம் டாடி!!" என்றவன், சட்டென்று தந்தையை இடுப்போடு கட்டிக் கொண்டு, "ப்ளீஸ் டாடி! எனக்கு ராஜிமாதான் வேணும்! அவங்களை கூட்டிட்டு வாங்க" என்றபடி அழ ஆரம்பித்தான் ரிஷிவர்மன்.


பாட்டியின் இழப்பை ஏற்க முடியாமல் தான் இப்படி நடந்து கொள்கிறான் எனப் புரிந்து கொண்ட ரவிவர்மன், மகனுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கும் பொருட்டு, அவனுக்கு நிகராக மண்டியிட்டு மகனின் கண்ணீரைத் துடைத்தவன், மகனைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டு, 


"உன்னோட ராஜிமா உடம்பு சரி இல்லாம சாமிக்கிட்ட போய்ட்டாங்க ரிஷி. அவங்க இனி திரும்பி வர மாட்டாங்க. ராஜிமா உன்னைப் பார்த்துக்கிட்ட மாதிரி இனிமேல் உங்க அம்மா ஓவியா உன்னை நல்லா பார்த்துப்பா ராஜா" என்று ரவிவர்மன் கூறி முடிக்கவில்லை..


"இல்ல டாடி, ராஜிமா சாமிக்கிட்ட போகல. அம்மா தான் என்னோட ராஜிமாவைக் கொன்னுட்டாங்க" என்று ஆக்ரோஷமாகக் கத்தினான் ரிஷிவர்மன்.


"வாட்..??!!!" என்று அதிர்ந்த ரவிவர்மன், "ரிஷி! இப்படி எல்லாம் பேசக் கூடாது!!" என்று மகனை மீண்டும் அதட்டினான்.


"ஏன் பேசக் கூடாது டாடி? அன்னைக்கு ராஜிமா நெஞ்சு வலிக்குதுனு சொல்லி அம்மாவைக் கூப்பிடச் சொன்னாங்க. நானும் கூப்பிட்டேன் டாடி. அம்மா அம்மான்னு கத்தி கத்திக் கூப்பிட்டேன். ஆனா அவங்களுக்குக் கேட்கவே இல்லை. நான் கூப்பிட கூப்பிட ரூம் உள்ள போய் கதவைப் பூட்டிட்டாங்க. அவங்க பின்னாடியே போய்க் கதவைத் தட்டினேன் டாடி. அப்பவும் திறக்கவே இல்ல" என்று விசும்பலுடன் கூறிய அந்தச் சிறுவன் தந்தையின் கழுத்தை இறுக கட்டிக் கொண்டான்.


பதினாறு நாட்களாகத் தன் மனதில் இருந்ததை எல்லாம் தன் தந்தையிடம் கொட்டி விட்டு, விடாமல் கேவி கேவி அழ ஆரம்பித்தான் ரிஷிவர்மன்.


மகன் கூற கூற அதைக் கேட்டுக் கொண்டிருந்த ரவிவர்மனுக்கோ, அந்த விஷயத்தைக் கிரகிக்கச் சிறிது நேரம் எடுத்தது.  


"அம்மாக்குக் கண்ணுதானே தெரியாது? ஆனா காது கேட்கும் தானே டாடி? ஆனா அன்னைக்கு அவங்களுக்குக் காது கேட்கவே இல்லை டாடி. ராஜிமா வலியில ரொம்ப அழுதாங்க தெரியுமா?" என்று சொல்லி அழுகையில் ரிஷிவர்மன் கரைய, அதைக் கேட்டு ரவிவர்மன் கண்களிலும் கண்ணீர்! தன் அன்னையின் இறுதி நிமிடங்களை நினைத்து..!!


தானும் மகனை இறுக அணைத்துக் கொண்ட ரவிவர்மன், ஒருமுறை கண்களை மூடித் திறந்து தன் வேதனையை கண்ணீராய் வெளியிட்டான். அதே நேரம், எதனால் ஓவியா அப்படி நடந்து கொண்டாள் என்று அவனுக்குப் புரியவில்லை. மேலும் இப்படி ஆகும் என்று அவளும் எதிர்பார்த்திருக்க மாட்டாள் என்று நம்பியவனின் மனம் மனைவிக்குச் சாதகமாகவே யோசித்தது. அதே நேரம் 'மகன் அவனது தாயைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளான். இதை இப்பொழுதே அவன் மனதில் இருந்து எடுக்க வேண்டும்' என்ற ஒரு முடிவுடன், 


"ரிஷி கண்ணா! அ...அம்மா வேணும்னு அன்னைக்கு அப்படி நடந்து இருக்க மாட்டா.." என்று மகனின் மனதை மாற்ற முயன்றான்.


ஆனால் அவனோ, "அப்போ ஏன் டாடி அன்னைக்கு நான் கூப்பிட கூப்பிட ராஜிமாவைப் பார்க்க வரல? அவங்களால தான் என் ராஜிமா சாமிகிட்ட போயிட்டாங்க. எனக்கு அவங்களைப் பார்க்கவே பிடிக்கல டாடி. ஐ ஹேட் ஹெர்!" என்று நடுக்கத்துடன் தந்தையை மேலும் இறுக்கிக் கட்டிக் கொண்டான். அப்போதைக்கு மகனின் முதுகை ஆதரவாகத் தடவி கொடுக்க மட்டுமே ரவிவர்மனால் முடிந்தது. 


ஆம்! இப்பொழுது ரிஷி இருக்கும் மனநிலையில், தான் என்ன எடுத்துச் சொன்னாலும், அவன் புரிந்து கொள்வது கடினம். கொஞ்சம் விட்டுப் பிடிக்க முடிவு செய்தான் ரவிவர்மன். 


மகனின் முகத்தைத் தன் தோளில் இருந்து நிமிர்த்தி, அவனது கண்களைத் துடைத்து விட்ட ரவிவர்மன், "என்ன நடந்ததுன்னு நான் அம்மாகிட்ட கேக்குறேன். இப்ப சாப்பிட வா!" என்று கூறவும்,


"எனக்குச் சாப்பாடு வேணாம் டாடி. நான் வெளியே வர மாட்டேன்!" என்று அழுத்தமாக கூறிய ரிஷிவர்மன் கட்டிலில் ஏறி படுத்துக் கொள்ள, மகனின் மனதில் அவன் பார்த்த விஷயங்கள் ஆழ பதிந்து விட்டது என்று நன்றாகவே புரிந்து கொண்டான் ரவிவர்மன். 


மகனின் மனதை எவ்வாறு மாற்ற போகிறோம்? என்று புரியாமல், பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியேறி மனைவியை தேடிச் சென்றான்.


ஹாலுக்கு வந்தவன், அங்கே மனைவி இல்லாதது கண்டு அவர்களின் அறைக்குச் செல்ல, அங்கே கட்டிலில் படுத்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் ஓவியா.


அவள் அருகே சென்ற ரவிவர்மன், "ஓவியா.." என்று அழைத்தான்.


கணவனின் குரலில் சட்டென்று எழுந்து அமர்ந்தவளோ, "ரவி! ரிஷி.. ரிஷி என்ன சொல்றான் பார்த்தீங்களா? அவன் சுத்தமா என்னை வெறுத்துட்டான். எனக்குப் பயமா இருக்கு ரவி" என்று மேலும் அழுகையில் கரைந்தாள்.


மனைவியின் அருகே அமர்ந்த ரவிவர்மன், "ம்பச்.. நீ நினைக்கிற மாதிரில்லாம் ஒன்னும் இல்ல. அவனோட ராஜிமா இப்ப இல்லன்னதும், அதை அவனால ஏத்துக்க முடியாம இப்படி பிகேவ் பண்றான். சீக்கிரமே சரி ஆகிருவான்" என்று அவளைச் சமாதானப் படுத்தினான்.


அவளோ, "நிஜமா தானே சொல்றிங்க? சீக்கிரம் சரி ஆகி என்னைப் புரிஞ்சிப்பான் தானே?" என ஏக்கத்துடன் கேட்டாள் ஓவியா.


"கண்டிப்பா..!!" என்ற ரவிவர்மன், சில விநாடி அமைதி காத்தவன், பின்பு, "ஓ..ஓவிமா, அன்னைக்கு அம்மா உன்கிட்ட ஏதாவது சொன்னாங்களா?" என்று தடுமாற்றத்துடன் கேட்டான். மகன் கூறிய விஷயத்தை அவனால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதே நேரம், அன்று என்ன நடந்தது என்று மனைவியிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள நினைத்துத்தான் அப்படிக் கேட்டான்.


"எப்போங்க..? அத்தை இறந்த அன்னைக்கா?" என்று கேட்க,


"ம்ம்ம்.." என்றான் ரவிவர்மன்.


கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்ட ஓவியா, "ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரேன்னுதான் சொல்லிட்டுப் போனாங்க ரவி. கொஞ்ச நேரம் கழிச்சி அவங்க வந்தது லக்ஷ்மி சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவங்களைத் தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லிப் படுத்துட்டாங்கன்னு அவ தான் சொன்னா. நானும் அத்தையைத் தனியா விட மனசில்லாம, அதே நேரம் அவங்களைத் தொந்தரவும் பண்ணாம, ரிஷியும் ஸ்கூல்ல இருந்து வர்ற நேரம்ங்கிறதால. ஹெட்போன்ல பாட்டு கேட்டுட்டு ஹால்ல தான் உக்காந்து இருந்தேன். ஒரு பத்து நிமிஷம் கூட ஆகி இருக்காது. குட்டிமா எழுந்துட்டாளோன்னு பார்க்க ரூம்க்கு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் நீங்க வந்ததும் தான் விஷயம் தெரியும்" என்று கூறி வருந்தியவள்,


"அவங்களைத் தொந்தரவு பண்ணினாலும் பரவா இல்லன்னு அத்தையை நான் போய்ப் பார்த்திருக்கணும் ரவி. அவங்களோட கடைசி நிமிஷத்துல அவங்க மனசுல என்ன இருந்ததோ தெரியல? ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னே, அவங்ககிட்ட நான் நடந்துகிட்டது நினைச்சா எனக்குத்தான் மனசே கேட்க மாட்டேன்கிது ரவி.." என்றவளின் குரலில் குற்றவுணர்வு அதிகமாகவே இருந்தது.


மனைவி கூறியதைக் கேட்டதில் இருந்து நடந்தது என்னவென்று ஓரளவுக்குப் புரிந்து கொண்டான் ரவிவர்மன். தாயின் இழப்பு அவனுக்குமே வலிக்கிறது தான்! ஆனால் இதுவோ, தன் மனைவி அவள் அறியாமல் செய்த தவறு. அந்தத் தவறு எங்கே அவளையே பதம் பார்த்து விடுமோ? என்று அஞ்சினான். ஏனெனில் தனது அறியாமையில் ஒரு உயிர் இவ்வுலத்தை விட்டுச் சென்று விட்டது என்று தெரிந்தால், நிச்சயம் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் இவ்விஷயம் மனைவிக்குத் தெரிய கூடாது என்ற முடிவுக்கு வந்தான் ரவிவர்மன். 


அவனது மனதிலோ, ஒருபக்கம் அன்னையின் இறப்பு! இன்னொரு பக்கம் மனைவியும், மகனும்! கடவுள் தன்னை இப்படித் தண்டித்து இருக்க வேண்டாம் என்று வலியுடன் நினைத்தவன்,


"சரி ஓவிமா, நீ படுத்துக்கோ! நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்" என்று மனைவியைப் படுக்க வைத்து விட்டு அறையில் இருந்து வெளியேறினான்.


அன்றைய நாள் அப்படியே கழிய, மறுநாள் காலை மோகனாவும் ஸ்னேகாவை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்குக் கிளம்பி இருந்தாள்.


அதன் பிறகு வந்த நாட்களும் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து சென்றது. ஓவியா தான் ரிஷியை நெருங்க முடியாமல் தவித்துப் போனாள். காரணம்.. அவன்தான் தாயைக் கண்டாலே ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறானே? அதனால், "நீ ரம்யாவைக் கவனி ஓவிமா! கொஞ்ச நாளைக்கு நான் ரிஷியைப் பார்த்துக்கிறேன்" என்று மனைவியிடம் கூறி விட்டான் ரவிவர்மன்.


மறுநாள் பள்ளியில் இடைவேளையின் போது குழந்தைகள் அனைவரும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, ரிஷிவர்மனோ அமைதியாக அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து இருந்தான். அப்பொழுது அவனைத் தேடி அங்கு வந்தாள் குழந்தை ஸ்னேகா.


அவனோ அவள் வந்து நிற்பது அறிந்தும், அவள் புறம் திரும்பாமல் அப்படியே அமர்ந்திருக்க, அன்று போல் "அத்து.." என்று அழைத்து அவன் முன் தனது வலது கையை நீட்டினாள்.


அதில் நெற்றிச் சுருக்கி என்னவென்று ரிஷிவர்மன் திரும்பிப் பார்க்க, அவளது உள்ளங்கையிலோ ரவா லட்டு இரண்டு இருந்தது. 


"அத்து உங்களுக்குத்தான்.." என்றாள் ஸ்னேகா. கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரும் பொழுதும் சரி, பள்ளி விட்டு வீட்டுக்குச் செல்லும் பொழுதும் சரி, அவளும் அவனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் அவன்தான் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அவளை மட்டும் அல்ல, யாரையும் தன்னிடம் நெருங்க விடவில்லை. ரிஷியின் பாராமுகம் அந்தப் பிஞ்சு மனதில் சோகத்தை உண்டு பண்ணி இருந்தது. 


அதே நேரம், அன்றொரு நாள் 'தான் கோபப்பட்டாலும் தன்னிடம் வந்து பேச வேண்டும்' என்று ரிஷிவர்மன் கூறிய வார்த்தைகள் அவள் மனதில் ஆழ பதிந்து போனதால், அவன் கல் பெஞ்சில் அமர்ந்து இருப்பது கண்டு ஓடி வந்து விட்டாள். 


ரிஷியோ, "எனக்கு வேணாம், நீ இங்கிருந்து போ!" என்றான் அவளைப் பாராமல்.


"இல்ல! பாப்பா அத்து கூடத்தான் இருப்பேன்" என்ற ஸ்னேகா அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.


அதில் எரிச்சலைடைந்த ரிஷிவர்மன் பக்கவாட்டில் திரும்பி ஸ்னேகாவைப் பார்த்தான். பார்த்தவன் கண்ணில் விழுந்தது அவள் காதில் மாட்டி இருந்த ஹியரிங் எயிட்! அதைப் பார்க்க பார்க்க அவன் மறக்க நினைக்கும் விஷயமும், அன்றைய நாளில் தாயின் காதில் மாட்டி இருந்த ஹெட்போனும், தான் கத்தி அழைத்தும் அவருக்குக் கேட்காமல் போனதும், அதனால் தனது ராஜிமா தன்னை விட்டுப் போனதும் அவனுக்கு நினைவுக்கு வர, ஸ்னேகாவின் காதிலிருந்த ஹியரிங் எயிடை வெறித்துப் பார்த்தவன், அடுத்த நிமிடம், முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து எழுந்து நடக்கலானான்.


சட்டென்று அவன் எழுந்து செல்லவும், ஸ்னேகாவோ ஒன்றும் புரியாமல் விழித்தவள், தானும் பெஞ்சில் இருந்து இறங்கி, "அத்து.." என்று ஓடிச் சென்று அவனின் கையைப் பிடித்தாள். 


அவளது செயலில் கோபமுற்ற ரிஷிவர்மன், அவளது கையை உதறி விட்டதும் அல்லாமல், அவளை வேகமாகத் தள்ளியும் விட்டு இருந்தான். அதை எதிர்பாராத ஸ்னேகா, அவன் தள்ளி விட்ட வேகத்தில், "அம்மா..!!" என்று கத்தியபடி கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் குழந்தையின் தலையோ அந்தக் கல் பெஞ்சின் முனையில் நச்சென்று இடித்திருந்தது. 


அலறல் சத்தம் கேட்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் வேகமாகத் திரும்பிப் பார்க்க, அங்கே தலையில் அடி பட்டதால் ரத்தம் வெளியேற, வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் ஸ்னேகா.


எப்பொழுதும் அவளுக்காக மற்றவர்களைக் காயப்படுத்திய ரிஷிவர்மன், இன்று அவளையே காயப்படுத்தியதும் அல்லாமல், அவள் வலியில் துடிப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


****


No comments:

Post a Comment