ஸ்வரம் 28

 



ஸ்வரம் 28


அந்தப் பிரபல மருத்துவமனையின் வளாகத்திற்குள் நுழைந்து, அதன் வாயிலில் தனது வாகனத்தை நிறுத்தினான் ரவிவர்மன். 


கார் நிற்கவும், அவன் அருகில் அமர்ந்திருந்த ஓவியா, "ரவி! ஹாஸ்பிட்டல் வந்துருச்சா..?" என்று கேட்க,


"ஆமா ஓவிமா.." என்றுவிட்டு காரில் இருந்து இறங்கி மறுபக்கம் வந்து மனைவி இறங்க உதவி புரிந்த ரவிவர்மன், அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று ரிசப்ஷனில் விசாரித்து, இரண்டாவது தளத்திற்கு வந்தார்கள்.


"ரவி! அண்ணனும், மோனாவும் எங்க இருக்காங்க பார்த்தீங்களா..?" என்று ஓவியா கேட்டாள். அங்கே இருந்த ஒரு அறையின் முன் மோகனாவும், கார்த்திக்கும் அமர்ந்திருப்பதைக் கண்ட ரவிவர்மன், "ஓவிமா! உங்க அண்ணா, அண்ணி இங்க தான் இருக்காங்க, வா.." என்று கூறியபடி மனைவியை அவர்கள் அருகில் அழைத்துச் சென்றான்.


யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மோகனா, "ஓவி.." என்று தோழியிடம் எழுந்து சென்றாள். 


தோழியின் கையைப் பிடித்துக் கொண்ட ஓவியா, "ஸ்னேகா எப்படி இருக்கா?" என்று தவிப்புடன் கேட்டாள்.


கார்த்திக்கின் அருகே அமர்ந்த ரவிவர்மனோ, "டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று விசாரித்தான்.


"ஸ்னேகா நல்லா இருக்கா. தலையில கொஞ்சம் ஆழமா அடி பட்டதால, நாலு தையல் போட்டு இருக்காங்க. வலி தெரியாம இருக்கிறதுக்கு ஊசியும் போட்டு இருக்காங்க. இப்ப தூங்கிட்டு இருக்கா. பயப்பட வேண்டாம், எழுந்ததும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போலாம்னு சொல்லிட்டாங்க" என்று கார்த்திக் கூறவும்,


தன் அண்ணன் கூறியதைக் கேட்ட ஓவியாவோ, "மோனா! ரிஷி இப்படிப் பண்ணுவான்னு நினைச்சு கூடப் பார்க்கலடி. அவ மேலே அவ்ளோ பாசம் வச்சிருக்கிறவன், எப்படி இப்படி நடந்துகிட்டான்னும் புரியல! ஸ்கூல்ல இருந்து போன் வரவும் ரொம்பவே பயந்துட்டோம். சாரி மோனா!" என்று தோழியின் கையை இறுக பற்றிக் கொண்டு மன்னிப்பு கேட்டாள் ஓவியா.


என்னதான் தன் தோழி தன் மேல் பாசம் வைத்திருந்தாலும், குழந்தை என்று வரும் பொழுது, அவளது குழந்தை தானே முதன்மையாகத் தெரியும்? ரிஷியின் செயலால், எங்கே தன் தோழி தன்னிடம் கோபம் கொண்டு விடுவாளோ? என்று பயந்தாள் ஓவியா.


மோகனாவோ, "ஏய் லூசு! இப்ப என்ன ஆகிப் போச்சுனு இப்படிப் பேசிட்டு இருக்கே? குழந்தைங்கன்னா இப்படிச் சண்டை போடுறதும், அடுத்த நிமிஷமே சேர்ந்து விளையாடுறதும் சகஜம்டி.. இதுக்குப் போய் நீ மன்னிப்பு அது இதுன்னு கேட்டுட்டு இருக்கே" என்று ஓவியாவை செல்லமாகக் கடிந்தவள்,


"இதுக்காக நீ என் மருமகனைச் சத்தம் போட்டேன்னு என் காதுக்கு வந்தது, அப்புறம் அவ்ளோ தான்..!!" என்று பொய்யாக மிரட்டிய மோகனா, "வா, இங்க உக்கார்" என்று தோழியை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள். மோகனாவின் பேச்சில் நிம்மதியுற்ற ஓவியா, ஸ்னேகா கண் விழிப்பதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். 


சிறிது நேரமே கடந்திருக்கும். ஸ்னேகாவை அனுமதித்து இருந்த அறையில் இருந்து திடீரென வேகமாக வெளியே வந்த செவிலி பெண் மருத்துவரை அழைக்கப் பதட்டத்துடன் ஓடினாள்.


அவளது அந்தப் பதட்டத்தைக் கவனித்த கார்த்திக், "சிஸ்டர்! என்னாச்சு? எதுக்கு இப்படி டென்ஷனா இருக்கீங்க..?" என்று அவளை நிறுத்தி வைத்துப் பரபரப்புடன் கேட்க,


அவளோ, "சார், உங்க டாட்டருக்கு பிட்ஸ் வந்துருச்சி. அதான் டாக்டரை கூப்பிட போறேன்" என்று அவசரமாகக் கூறி விட்டுச் சென்று விட்டாள்.


"என்ன.. ஸ்னேகாக்கு வலிப்பா?" என்று அதிர்ந்து கேட்ட மோகனா, அடுத்த நொடி மகள் அனுமதித்து இருந்த அறைக்குள் நுழைந்திருந்தாள். அவள் பின்னே கார்த்திக்கும் செல்ல, அவர்களைத் தொடர்ந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் ரவிவர்மன்.


அங்கே கட்டிலில் தலையில் போடப்பட்ட கட்டுடன், கைக் கால்களை வெட்டி வெட்டி இழுத்தபடி படுத்திருந்தாள் குழந்தை ஸ்னேகா.


மகளை அப்படி ஒரு நிலையில் பார்த்ததும் துடித்துப் போன மோகனா, "அயோ! என் குழந்தைக்கு என்னாச்சு?" என்று பரிதவித்தபடி மகளின் அருகே ஓடியவள்,


"குட்டிமா! ஸ்னேகா! என்னடா பண்ணுது உனக்கு?" என்று கேட்டு அழ ஆரம்பித்தவள், "என்னங்க.." என்று அழுகையூடே கணவனை அழைத்தாள். மகளை இப்படிப் பார்த்த கார்த்திக்கிற்கும் கண்கள் கலங்கித்தான் போனது.


அதற்குள் அங்கு வந்து விட்ட மருத்துவர் ஸ்னேகாவைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.


அவரைப் பார்த்ததும், "டாக்டர்! என் பொண்ணுக்கு என்னாச்சு? எதுக்கு இப்படி வெட்டி வெட்டி இழுக்குது..?" என்று பதட்டத்துடன் கேட்டான் கார்த்திக்.


"மிஸ்டர்.கார்த்திக்! அதான் செக் பண்ணிட்டு இருக்கேன். நீங்க எல்லோரும் கொஞ்சம் வெளியே இருங்க.." என்றவர், "நர்ஸ்! இவங்களை வெளியே கூட்டிட்டுப் போங்க" என்றுவிட்டு மீண்டும் ஸ்னேகாவைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.


மோகனாவோ, "இல்ல, நான் போக மாட்டேன். என் செல்லத்து கூட தான் இருப்பேன்" என்று அடம் பிடிக்கவும்,


"சார் ப்ளீஸ்! நாங்க ட்ரீட்மெண்ட் பண்ணனும். கொஞ்சம் புரிஞ்சிக்கங்க" என்று மருத்துவர் மீண்டும் அழுத்திக் கூற,


மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறினான் கார்த்திக். ஓவியாவோ, "ரவி! எனக்குப் பயமா இருக்கு" என்று கலக்கத்துடன் கூறவும்,


"வெளியே போய் பேசிக்கலாம் ஓவிமா.." என்ற ரவிவர்மனும், மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்


மனைவியை ஆறுதலாக அணைத்திருந்த கார்த்திக், "மோகனா! என்ன இது பச்ச புள்ள மாதிரி அழுதுட்டு இருக்கே? ஸ்னேகாக்கு ஒன்னும் இருக்காது. டாக்டர் பார்த்துட்டு இருக்காங்கள்ல.." என்று சமாதானம் செய்தாலும், மகளை நினைத்து கார்த்திக்கும் உள்ளுக்குள் கலங்கிப் போய்த்தான் இருந்தான்.


சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த மருத்துவர், "மிஸ்டர்.கார்த்திக்! உங்க பொண்ணு இப்ப நார்மலா இருக்காங்க. பயப்பட ஒன்னும் இல்ல. யாராவது ஒருத்தர் போய் பார்க்கலாம்" என்றவர், "தென் கார்த்திக், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். என்னோட கேபினுக்கு வாங்க" என்றுவிட்டு அவர் சென்று விட,


"நானும் வரேன்.." என்ற மனைவியிடம், "மோகனா! நம்ம குட்டிமா கண் முழிச்சதும் உன்னைத் தேடுவா. நீ இங்கேயே இரு! நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்" என்றவன், "ஓவிமா! இவளைக் கொஞ்சம் பார்த்துக்கோ!" என்று மனைவியைத் தங்கையிடம் ஒப்படைத்து விட்டு, "ரவி! என் கூட வாங்க.." என்று ரவிவர்மனையும் தன்னுடன் அழைத்துச் சென்றான் கார்த்திக்.  


ஓவியாவோ, "மோனா! ஸ்னேகாக்கு ஒன்னும் இல்லடி. நீ அழாதே!" என்றவளுக்கும் அழுகை தான் வந்தது. 'தன் மகனால் அல்லவா தன் அண்ணன் மகளுக்கு இப்படி ஒரு நிலை..??' என்று நினைத்துத் தவித்துத்தான் போனாள் ஓவியா


இங்கு மருத்துவரின் அறையிலோ, "மிஸ்டர்.கார்த்திக்! உங்க டாட்டருக்கு இதுக்கு முன்னாடி இப்படி வலிப்பு ஏதும் வந்திருக்கா?" என்று கேட்டார் மருத்துவர்.


"இல்ல டாக்டர், அப்படி எதுவும் அவளுக்கு வந்தது இல்ல. அவளுக்குக் காது மட்டும் தான் கேட்காது. மத்தபடி ஆரோக்கியமான குழந்தை தான்!" என்று கார்த்திக் கூறவும்,


"அப்போ தலையில் அடி பட்டதுல தான் சம்திங் ராங். உடனே ஸ்கேன் பண்ணிப் பார்க்கணும். டெஸ்ட் எடுத்ததும் உங்களைக் கூப்பிடுறேன். இப்ப நீங்க போகலாம்" என்று கூறிய மருத்துவர், அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்ய ஆரம்பித்தார். 


அடுத்த சில நிமிடங்கள் அங்கிருந்தவர்களுக்கு ஒரு யுகமாய் கழிய, மீண்டும் கார்த்திக்கை அழைத்தார் மருத்துவர். உடன் ரவிவர்மனும் இருந்தான்.


தனது கையில் இருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை அங்கிருந்த ஒரு கருவியில் பொருத்தி, "மிஸ்டர்.கார்த்திக்! இது உங்க பொண்ணோட ஸ்கேன் ரிப்போர்ட். குழந்தையின் தலையில் வலது பக்கம் அடிபட்டு இருந்ததால அதுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். பட் எதற்காக இந்த வலிப்புன்னு ஸ்கேன் பண்ணி பார்த்ததில தான், காயம் எந்த அளவுக்கு ஆழம்ன்னு தெரிஞ்சுது. எஸ்! குழந்தையின் பிரெயின் வரைக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு. அதனால் தான் இந்த வலிப்பு! இதுக்கு மருந்து, மாத்திரைகள் எவ்வளவோ வந்திருந்தாலும், முழுமையான தீர்வு இப்ப வரை இல்லைன்னு தான் நான் சொல்லுவேன்" என்று மருத்துவர் கூறினார்.


கார்த்திக்கோ பதைபதைத்துக் கண்கள் கலங்க அப்படியே அமர்ந்திருந்தான். ரவிவர்மனோ அவனது மனநிலையை உணர்ந்து, "டாக்டர்! ஸ்னேகாவை பாரின் கூட்டிட்டுப் போய் ட்ரீட்மெண்ட் பண்ணினா என்ன..?" என்று கேட்க,


"சார், அதான் சொன்னேனே? இதுக்கு முழுமையான தீர்வு இல்ல. நீங்க எங்க கூட்டிட்டுப் போனாலும், அங்க இருக்கிற டாக்டர்ஸூம் இதைத்தான் சொல்லுவாங்க. இனிமேலும் குழந்தைக்கு வலிப்பு வராம இருக்கணும்ன்னா நம்ம கையில் தான் இருக்கு. இப்ப இருந்தே குழந்தையைக் கவனமா பார்த்துக்கணும். எந்த விதத்திலும் அவளுக்கு மனதளவில் அழுத்தம் கொடுக்க கூடாது! பத்திரமா பார்த்துக்கோங்க! தனியா எங்கேயும் விடாதீங்க! வெளிக்காயம் சீக்கிரம் ஆறிடும். உள்காயம் ஆற நாள் எடுக்கும். நான் மருந்து மாத்திரை எழுதி தரேன். அதை மறக்காம ரெகுலரா எடுத்துகிட்டா போதும்! ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்" என்று மருத்துவர் கூறி முடிக்க,


மெதுவாக எழுந்த கார்த்திக், "தேங்க்ஸ் டாக்டர்!" என்றுவிட்டு அங்கிருந்து வெளியேற, அவனைத் தொடர்ந்து வெளியே வந்த ரவிவர்மன்,


"கார்த்திக்! டோன்ட் கெட் அப்செட்! இன்னும் வேற டாக்டர்ஸ்கிட்ட ஸ்னேகாவோட ரிப்போர்ட் காட்டலாம். இல்லயா, பாரின் கூட்டிட்டுப் போகலாம்" என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேச,


"ம்ம்ம்.." என்ற கார்த்திக், ரவிவர்மனின் கையைப் பிடித்துக் கொண்டு, "ரவி! எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா..?" என்று கேட்டான்.


"உதவின்னு எதுக்குப் பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க. என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க.." என்று ரவிவர்மன் கூற,


"இந்த விஷயம் எக்காரணம் கொண்டும் மோகனாவுக்குத் தெரிய கூடாது. ஏற்கனவே ஸ்னேகாவின் குறையை நினைச்சு தினம் தினம் அழுதுட்டு இருக்கா. இப்ப இப்படின்னு தெரிஞ்சா அவளால தாங்கிக்கவே முடியாது.." என்று கூறவும்,


"நான் ஓவியாகிட்ட கூடச் சொல்ல மாட்டேன்!!" என்ற ரவிவர்மன் கார்த்திக்கின் கையில் அழுத்தம் கொடுக்க, "தேங்க்ஸ்..!!" என்றான் கார்த்திக். 


ரவிவர்மனோ, "தேங்க்ஸ் சொல்லாதீங்க கார்த்திக்! எனக்குக் குற்றவுணர்வா இருக்கு. ஏன்னா ஸ்னேகாவோட இந்த நிலைமைக்குக் காரணம் ரிஷி! உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்கு கூடத் தயக்கமா இருக்கு" என்று கூறவும்,


"ம்பச்! என் பொண்ணுக்கு இப்படி ஆகணும்னு இருக்கும் போது, யாரையும் குத்தம் சொல்ல முடியாது ரவி. ரிஷி சின்னப் பையன். வேணும்னு தள்ளி விட்டிருக்க மாட்டான். இதுக்காக எல்லாம் நீங்க மன்னிப்பு கேட்கணும்னு அவசியமே இல்ல.." என்று சிறு புன்னகையை உதிர்த்தான்.


கார்த்திக்கின் பெருந்தன்மையை நினைத்து வியந்துதான் போனான் ரவிவர்மன். பின்பு இருவரும் ஸ்னேகாவை அனுமதித்து இருக்கும் அறைக்குச் சென்றார்கள்.


அங்கே கண் விழித்ததும், தாயின் மடியில் படுத்திருந்த ஸ்னேகா தந்தையைப் பார்த்ததும், "அப்பா.." என்று எழ, அதற்குள் மகளை அணுகிய கார்த்திக், அவளைக் கைகளில் அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.


"என்னங்க.. டாக்டர் என்ன சொன்னாங்க? வலிப்பு எதுக்காக வந்துச்சாம்?" என்று மோகனா பரிதவித்துக் கேட்க,


மனைவியைப் பார்த்துச் சிரித்த கார்த்திக், "தலையில அடிப்பட்டதுனால ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்ல வந்திருக்காம்.. மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ம பொண்ணு ஆரோக்கியமா இருக்கா. தலையில ஏற்பட்ட காயம் கூடச் சீக்கிரம் ஆறிடும்னு சொன்னாங்க" என்று கூறவும்,


"ஹப்பா! இப்ப தான் நிம்மதியா இருக்குண்ணா. டாக்டர் என்ன சொல்லுவாரோன்னு பயந்துட்டே இருந்தோம்" என்றாள் ஓவியா. 


அடுத்து வந்த நாட்களில் ஸ்னேகாவை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டனர் கார்த்திக்-மோகனா தம்பதியர். குழந்தைக்குத் தலையில் ஏற்பட்ட காயம் நன்றாக ஆறி இருக்க, பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்தாள் ஸ்னேகா.


வீட்டில் அவளைத் தாய்-தந்தை இருவரும் பார்த்துக் கொள்ள, பள்ளியில் அவளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை மகன் விக்ராந்த்திடம் ஒப்படைத்து இருந்தான் கார்த்திக்.


அது போல் தங்கையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் இருந்து, வீட்டுக்கு அழைத்து வருவது முதல் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட விக்ராந்த், தப்பித் தவறி கூடத் தங்கையின் பார்வை ரிஷியின் மேல் விழாமல் பார்த்துக் கொண்டான். அன்று, அவனது தங்கை ரத்தம் வழிய வலியால் துடித்த துடிப்பைக் கண்களால் நேரில் கண்டவனாயிற்றே! அப்பொழுதே ரிஷியின் செயலில் அவனை வெறுக்கவும் ஆரம்பித்து இருந்தான் விக்ராந்த். 


ரிஷிவர்மனின் பார்வையோ, தன் அண்ணனின் பாதுகாப்பில் செல்லும் ஸ்னேகாவை அழுத்தமாக பார்க்கும், அவ்வளவு தான்! அதற்கு மேல் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை அவன். ஆனால் ஸ்னேகாவோ, தனது அண்ணன் கூறியதற்காக ரிஷியைத் திரும்பியும் பார்க்கவில்லை என்றாலும், அவள் தனது அத்துவை யாரும் அறியாமல் பார்ப்பதை, மற்றவர்கள் மட்டும் அல்ல ரிஷியும் உணரவே இல்லை! 


இப்படியே நாட்கள் நகர.. அன்று தன் தந்தையிடம் வந்த ரிஷிவர்மன், "டாடி! எங்க ஸ்கூல்ல ஆனுவல் ப்ரோக்ராம் இருக்கு. நான் பார்டிசிபேட் பண்றேன், ஈவினிங் நீங்க வரணும்" என்றான்.


ரவிவர்மனோ, "ஸ்யூர் ரிஷி! நானும், உன் அம்மாவும் கண்டிப்பா வரோம்" என்று கூற,


"நோ டாடி! நீங்க மட்டும் வந்தா போதும்.." என்று கூறி விட்டுப் பள்ளிக்குச் சென்று விட்டான் ரிஷிவர்மன்.


அன்று மாலை ரிஷிவர்மனின் பள்ளிக்கு மனைவியுடன்தான் வந்து இறங்கினான் ரவிவர்மன். சற்று நேரத்தில் கார்த்திக்கின் குடும்பமும் வந்து இறங்க, அனைவரும் பள்ளிக்குள் விழா நடக்கும் இடத்திற்குச் சென்றார்கள்.


தூரத்தில் இருந்தே அவர்களைப் பார்த்து விட்ட ரிஷி, தாயும் வருவது கண்டு தந்தையை முறைத்துப் பார்த்தவன், உள்ளே சென்று விட்டான்.


அவர்களைப் பார்த்த பள்ளி மேலாளரோ, "வாங்க சார்…" என்று கார்த்திக்கையும், ரவிவர்மனையும் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று முன்வரிசையில் அமர வைத்தார். சில நிமிடங்களில் விழாவும் ஆரம்பம் ஆகி இருந்தது. 


பள்ளியின் குழந்தைகள் ஒரு பக்கமும், பெற்றோர்கள் ஒரு பக்கமும் அமர்ந்து இருக்க, ரிஷிவர்மனின் பின்னே நின்றிருந்தார்கள் சில சிறுவர்கள்.


அதில், "டேய்! நம்ம ரிஷியோட அம்மாவும் வந்து இருக்காங்கடா பார்த்தீங்களா..?" என்று அவனிடம் எப்பொழுதோ அடி வாங்கின சிறுவன் ஒருவன் ரிஷியை வம்பிழுக்க ஆரம்பித்தான்.


"ஆமாடா பார்த்தேன்.. ஆனா அவங்க எதுக்கு இங்க வந்துருக்காங்க? அவங்களுக்குத்தான் கண்ணு குருடாச்சே? எதையும் பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது இந்த ப்ரோக்ராம் மட்டும் பார்க்க முடியுமா என்ன?" என்று கேலி செய்து சிரிக்க, 


"இவனோட வீட்ல எல்லோரும் இப்படித்தான் போல! அவனோட அம்மாவுக்குக் கண்ணு தெரியாது, அவனோட மாமா பொண்ணுக்கு காது கேட்காது. ஒருவேளை இவன் தங்கச்சிக்கு வாய் பேச வராதோ என்னவோ? ஹா ஹா.." என்று கூறிச் சிரிக்க, மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து சிரித்தார்கள்.


தன்னைத்தான் அவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்று ரிஷிவர்மனுக்கு நன்றாகப் புரியவும், கோபத்திலும், அவர்களை மறுத்துப் பேச முடியாத இயலாமையிலும், சட்டென்று எழுந்து வெளியே சென்று விட்டான். மகன் வெளியேறுவதை யோசனையுடன் பார்த்த ரவிவர்மன், "ஒரு முக்கியமான போன் கால் ஓவிமா, பேசிட்டு வரேன்.." என்று மனைவியிடம் கூறி விட்டு வெளியே வந்தவன், அங்கே தங்களது காரை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்த மகனை இரண்டே எட்டில் அடைந்து,


"ரிஷி! எங்கே போறே..?" என்று கேட்டான்.


அவனோ, "நான் உங்களை மட்டும் தானே வரச் சொன்னேன். எதுக்கு அவங்களைக் கூட்டிட்டு வந்திங்க டாடி?" என்று தந்தையை முறைத்தான்.


"ரிஷி! உன் அம்மா உன் டான்ஸ் பார்க்க ஆசை பட்டாடா.. அதான் கூட்டிட்டு வந்தேன்" என்று அவன் கூற,


தந்தையைக் கேலியாகப் பார்த்த சிறுவனோ, "அவங்களுக்குத்தான் கண்ணு குருடாச்சே! அப்புறம் எப்படி என் டான்ஸைப் பார்ப்பாங்க?" என்று கேட்டு முடிக்கவில்லை. "ரிஷி..!!" என்று மகனை அடிக்க கை ஓங்கி இருந்தான் ரவிவர்மன்.


ரிஷியோ தந்தைக்குப் பயப்படாமல் அவரைத் தைரியமாகவே எதிர்நோக்கி நின்றான்.


ஓங்கிய கையை கீழே இறக்கிய ரவிவர்மன், "தப்பு ரிஷி! அம்மாவை அப்படில்லாம் சொல்ல கூடாது!" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது, ரிஷியின் பெயர் ஒலி பெருக்கியில் ஒலிக்க ஆரம்பித்தது.


தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட ரவிவர்மன், "இதெல்லாம் அப்புறம் பேசலாம். இப்ப உள்ள வா, அடுத்து உன் டான்ஸ் தான்" என்று கூற,


"நோ டாடி! அவங்க இங்க இருந்தா நான் உள்ள வர மாட்டேன்! மொதல்ல அவங்களை வெளியே போகச் சொல்லுங்க" பிடிவாதம் பிடித்தான் ரிஷிவர்மன்.


என்ன சொல்லி, எப்படிச் சொல்லி மகனுக்குப் புரிய வைப்பது என்று தெரியாமல் ரவிவர்மன் நின்றிருக்க, அப்பொழுது, "ரவி! எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு. நான் ரம்யா கூட வீட்டுக்குக் கிளம்புறேன். நீங்க இருந்து ரிஷி ப்ரோக்ராம் முடியவும் அவனைக் கூட்டிட்டு வாங்க.." என்ற குரல் அவர்களின் பின்னே ஒலித்தது.


சட்டென்று திரும்பிப் பார்த்த ரவிவர்மன், "ஓவிமா.." என்று மேலும் பேசுவதற்குள், 


"பிளீஸ் ரவி! எங்களை வீட்டுக்கு அனுப்பி வைங்க" என்று ஓவியா பிடிவாதமாகக் கூற, ரவிவர்மனோ மகனின் பேச்சை மனைவி கேட்டு விட்டதால்தான் அவள் வீட்டிற்குச் செல்ல எண்ணுகிறாள் என்று புரிந்து கொண்டான். 


தாயின் பேச்சைக் கேட்ட ரிஷிவர்மன், முகத்தைத் திருப்பிக் கொண்டு மீண்டும் விழா நடக்கும் இடத்துக்குச் சென்று விட, ரவிவர்மனோ, 


"ஓவிமா! அவன் சின்னப் பையன், ஏதோ சொல்றான்னு நீயும் கிளம்புறேன்னு நிக்கிறே" என்றான் வருத்தமாய். 


"ரவி! அவன் சின்னப் பையன் தான்! ஆனா நான் வேண்டாங்கிறதுல தெளிவா இருக்கான். ப்ளீஸ்! எனக்கு வீட்டுக்குப் போகணும்" என்று தழுதழுத்த குரலில் கூறவும்,


மனைவியின் மனநிலையைப் புரிந்த ரவிவர்மன், "சரி வா.." என்றுவிட்டு மனைவியையும், மகளையும் அழைத்து காரின் அருகே சென்றான். 


ஓவியா உள்ளே அமர்ந்ததும், "ஓவிமா! வீட்டுக்குப் போய்ட்டு போன் பண்ணு" என்று அவன் கூற,


அவளோ, "என் பையன் என்னை முழுசா வெறுத்துட்டான்ல ரவி??!!" என்று கேட்டவளுக்கு அழுகை பொங்கி வந்தது.


தாய் அழுவது பார்த்து ரம்யாவுக்கும் அழுகை வர, அதைப் பார்த்த ரவிவர்மன், "ம்பச்! ஓவிமா! குட்டிமா அழறா பாரு..!!" என்று அதட்டிச் சொல்ல, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் ஓவியா. 


ஓட்டுநரை அழைத்து அவர்களை வீட்டில் விடுமாறு கூறிய ரவிவர்மன், வாகனம் கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்றவன், பின்பு விழா நடக்கும் அரங்கிற்குச் சென்றான். 


மறுநாள் பள்ளி விடுமுறை என்பதால் ரிஷிவர்மன் வீட்டில் தான் இருந்தான். ரவிவர்மனோ, அன்று சீக்கிரமே அலுவலகத்திற்குச் சென்றிருந்தான். மதிய வேளையில் ரம்யாவைச் சாப்பிட வைத்து அவளை உறங்க வைத்த ஓவியா, மகனை தேடிச் சென்றாள். 


அவள் மனமோ நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. எதற்காகத் தன் மகன் தன் மீது இவ்வளவு வெறுப்பைக் கொண்டுள்ளான் என்று அவளுக்குத் தெரிந்து கொண்டே ஆக வேண்டி இருந்தது. அதனால் ஒரு முடிவுடன் மகனின் அறைக்குள் நுழைந்தாள் ஓவியா.


பரிட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த ரிஷிவர்மன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வருவது யார் என்று நிமிர்ந்து பார்க்க, அது அன்னை என்றதும், அவன் முகமே மாறி போனது.


ஓவியாவோ, "ரிஷி..!!" என்று அழைக்க, அவனோ தாயின் அழைப்புக்கு பதில் அளிக்காமல், அன்னையை வெறித்துப் பார்த்தான்.


மகனின் மனநிலையை உணர்ந்து கொண்ட ஓவியா, "ரிஷி! என்கிட்ட நீ பேச மாட்டேன்னு எனக்குத் தெரியும். எதுக்கோ அம்மா மேல ரொம்பக் கோபமா இருக்கே. என்னனு சொல்லு ராஜா! அம்மா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?" என்று கண் கலங்கக் கேட்டாள் ஓவியா.


அவனோ, அப்பொழுதும் அமைதியாக நிற்க, "எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லு கண்ணா..!!" என்று பரிதவிப்புடன் கேட்டாள்.


தாயை அழுத்தமாக பார்த்த ரிஷிவர்மன், "எனக்கு என்னோட ராஜிமா வேணும், உங்களால கூட்டிட்டு வர முடியுமா?" என்றவனின் குரலில் என்ன மறைபொருள் இருந்தது? அவன் மட்டுமே அறிவான்!!


ஆனால் அதை வேறு விதமாகப் புரிந்து கொண்ட ஓவியா, "உன்னை உன் பாட்டிகிட்ட இருந்து நான் பிரிச்சிட்டேன்னு தான் என் மேல கோபமா இருக்கியா ராஜா?" என்று கேட்டவள்.. 


"தப்பு தான்! அதுக்காக அம்மாக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாம் ராஜா! ப்ளீஸ் என்கிட்டயே வந்திடு!" என்றவளின் கண்ணீர் கன்னத்தில் வழிந்து கொண்டே இருந்தது.


அவனோ தாயின் கண்ணீரை கருத்தில் கொள்ளாமல், "வர மாட்டேன்! நீங்க எனக்கு வேண்டாம்!" என்றான் வெறுப்புடன். 


மகனின் பேச்சிலும், அவன் குரலில் தெரிந்த வெறுப்பிலும் மனதளவில் பெரிய அடி வாங்கினாள் ஓவியா.  


"அம்மா வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிகிட்டே இருக்கியே.. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு ராஜா!" என்று ஓவியா வேதனையுடன் கூறவும், 


"என் ராஜிமாவை என்கிட்ட இருந்து பிரிக்கும் போது எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு. அதே மாதிரி என் ராஜிமாவை நீங்க கொ.." என்று அவனை மேற்கொண்டு பேச விடாமல், ரிஷியின் வாயை ஒரு கரம் அழுத்தி மூடி இருந்தது.


மகன் ஏதோ சொல்ல வந்து அதை முழுமையாகச் சொல்லாமல் பாதியில் நிறுத்தவும், "ரிஷி..!!" என்று ஓவியா அழைக்க,


"அவன் வெளியே போய்ட்டான் ஓவிமா" என்றான் ரவிவர்மன். ஆம்! மகனை மேற்கொண்டு பேச விடாமல் அவன் வாயைப் பொத்தியது ரவிவர்மன் தான்..!!


"என்னது? ரிஷி வெளிய போய்ட்டானா? நிஜமாவா சொல்றீங்க?" என்று சந்தேகமாகக் கேட்டாள் ஓவியா.


"ஆமா…" என்று கூறிய ரவிவர்மனின் கையில் திமிறி கொண்டு நின்றிருந்தான் ரிஷிவர்மன்.


"சரி, நீ இங்க என்ன பண்றே..?" என்று ரவிவர்மன் கேட்க,


"நான் ரிஷிகிட்ட பேச வந்தேன். நீங்க எப்போ வந்தீங்க?" என்று அவள் கேட்கவும்,


அவனோ, "ரிஷிகிட்ட அப்புறம் பேசிக்கலாம். எனக்குத் தலைவலி ஓவிமா! அதான் சீக்கிரம் வந்தேன். ஒரு கப் காபியை நம்ம ரூமுக்குக் கொண்டு வா.." என்று அவளை அங்கிருந்து அனுப்ப முயன்றான்.


"சரிங்க.." என்று தளர்ந்த நடையுடன் சென்றாள் ஓவியா.


மனைவி வெளியேறவும், திமிறிக் கொண்டிருந்த மகனை விடுவித்த ரவிவர்மன், "ரிஷி..!!" என்று அழுத்தமாக அழைத்தான்.


மகனோ, "எதுக்கு டாடி என் வாயை க்ளோஸ் பண்ணினிங்க..?" என்று முறைத்தான்.


'எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? சொன்னால் புரிந்து கொள்வானா மகன்?' என்று பெருமூச்சை வெளியிட்டவன்..


"நீ அம்மாவைத் திட்டினா உன் அம்மாவால் அதைத் தாங்கிக்க முடியாது. அதான்.." என்ற ரவிவர்மன், "நீ படி!" என்று விட்டு வெளியே செல்ல போக, 


"அவங்க என்கிட்ட பேச வந்தா, நான் இப்படித்தான் திட்டுவேன்" என்று கூறிய ரிஷிவர்மன், கட்டிலில் ஏறி தனது பாட புத்தகத்தைக் கையில் எடுக்க, மகனை யோசனையுடன் பார்த்து விட்டு வெளியே வந்தான் ரவிவர்மன். 


இன்று முக்கியமான மீட்டிங் ஸ்டார் ஹோட்டலில் என்பதால் சீக்கிரம் கிளம்பிச் சென்றவன், மீட்டிங் முடியவும் அலுவலகம் செல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டான். உள்ளே வந்தவன், மகனின் அறையில் மனைவியின் குரல் கேட்கவும், அங்கு வந்தவன், மகன் கூறியதைக் கேட்டு மேற்கொண்டு ஏதும் கூறி விடாமல் தடுத்து, மனைவியைத் திசை திருப்பி விட்டான்.  


எப்பொழுதும் இப்படிச் செய்ய முடியுமா? என்ற கேள்வி தான் அவன் மனதில் எழுந்தது. என்றாவது ஒரு நாள் மகனின் மூலம் மனைவிக்கு விஷயம் தெரிந்தால், மனைவியின் மனது என்ன பாடுபடும் என்று அறிந்தவனாயிற்றே!! அதே சமயம், மகனுக்கு அவனது அன்னையின் மேல் இருக்கும் வெறுப்பு இப்படியே தொடர்ந்தால், மகனது மனநிலையே பாதிக்கப் படக்கூடும். இருவரும் அவனுக்கு முக்கியமாயிற்றே!!


மனைவியும் வேண்டும், மகனும் மனது மாற வேண்டும் என்று நினைத்தவன், மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஓர் முடிவு எடுத்தான். முடிவு எடுத்த நிமிடம் மானசீகமாக மனைவியிடம் மன்னிப்பும் கேட்டான்.


'என்னை மன்னிச்சிரு ஓவிமா! இந்த விஷயத்தில் உனக்கு நான் தெரிஞ்சே அநியாயம் பண்ணப் போறேன். எனக்கு நீயும் வேணும்! ரிஷியும் வேணும்! இப்ப அவன் சின்னப் பையன், வளர வளர நிச்சயம் உன்னைப் புரிஞ்சிப்பான். அதுவரை நாம காத்திருப்போம்.." என்று துயரத்துடன் நினைத்துக் கொண்டவன், அடுத்த சில நாட்களிலேயே மகனை ஊட்டி கான்வென்ட்டில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான்.


***

No comments:

Post a Comment