ஸ்வரம் 29

 



ஸ்வரம் 29..


அந்த மலைப்பாதையில் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது, ரவிவர்மனின் வாகனம்


அவன் அருகில் அமர்ந்திருந்த ரிஷியோ, "டாடி! இந்த இடம் செம கூலா சூப்பரா இருக்கு. நெக்ஸ்ட் டைம் வரும் போது ரம்யாவையும் கூட்டிட்டு வரலாம் டாடி" என்று தந்தையிடம் கூறி விட்டு, மீண்டும் வெளியே பள்ளத்தாக்குகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 


'அப்போ கூட உங்க அம்மா வேண்டாம்..' என்று பெருமூச்சு விட்ட ரவிவர்மன், வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். 


ஒருவாரம் முன்பு, "நாம ரெண்டு பேரும் ஒரு இடத்துக்குச் செல்கிறோம்" என்று மகனிடம் கூற, அவனோ, எங்கே என்று கூடக் கேட்காமல், "பிக்னிக் போறோமா டாடி?" என்று குதூகலத்துடன் கேட்டான் ரிஷிவர்மன்.


"ம்ம்ம்.." என்று மட்டும் சொன்னவன், இதோ, மகனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.


சில மணித் துளிகள் கடக்க, ரிஷிவர்மன் படிக்கப் போகும் பள்ளியின் வளாகத்தினுள் தனது வாகனத்தைச் செலுத்தினான் ரவிவர்மன்.


தந்தை தன்னைச் சுற்றுலா அழைத்து வந்துள்ளார் என்று சந்தோஷத்தில் வந்த ரிஷிவர்மனுக்கோ, வாகனம் நுழைந்த இடத்தைக் கண்டு, "டாடி! இங்க எதுக்கு வந்துருக்கோம்?" என்று புரியாமல் கேட்டான்.


"சொல்றேன் ரிஷி, என் கூட வா!" என்று இறங்கி நிற்க, தானும் இறங்கிய ரிஷிவர்மன், தந்தையின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.


பள்ளியில் இடைவேளை நேரம் என்பதால் பிள்ளைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தவாறு தந்தையுடன் நடந்தான் ரிஷிவர்மன்.


தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்த ரவிவர்மன், தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு, "மேடம், நான் ரவிவர்மன், சென்னையில் இருந்து வரேன். உங்ககிட்ட போன்ல பேசினது நான் தான். இவன் தான் என் மகன் ரிஷிவர்மன். இவனைத்தான் உங்க ஸ்கூல்ல சேர்த்து விட வந்துருக்கேன்.." என்று கூற,


அந்த அறையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரிஷிவர்மன், தந்தையின் பேச்சில் அதிர்ந்து, "டாடி! நான் இனி இங்கேயா படிக்கப் போறேன்?" என்று கேட்டான்.


"எஸ் ரிஷி! உன்னை இங்க ஹாஸ்டல்ல சேர்த்து இருக்கேன். இனிமேல் இங்க தான் தங்கிப் படிக்கப் போறே" என்று கூற,


"நோ…" என்று கத்திய ரிஷிவர்மன், "டாடி! நான் இங்க படிக்க மாட்டேன். நான் உங்க கூடத்தான் வருவேன்" என்று அழ ஆரம்பித்தான்.


"சொன்னா கேட்கணும் ரிஷி. இப்படி அடம் பிடிக்கக் கூடாது! உன்னைப் பார்க்க டாடி அடிக்கடி வருவேன்" என்று மகனை அதட்டினான் ரவிவர்மன்.


"மாட்டேன் டாடி! என்னை விட்டுட்டுப் போகாதீங்க டாடி!" என்று சத்தம் போட்டு அழுதான் சிறுவன்.


தலைமை ஆசிரியரோ பியூனை அழைத்தார். பியூன் வரவும், "இந்தப் பையனை கூட்டிட்டுப் போங்க.." என்று ரிஷியின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.


"தம்பி! வாப்பா.." என்று அவர் அழைக்கவும், அவரது கையைத் தட்டி விட்ட ரிஷிவர்மன், தந்தையின் காலை கட்டிக் கொண்டு, "நோ டாடி! ப்ளீஸ் டாடி! என்னை விட்டுட்டுப் போகாதீங்க டாடி. இங்க இருக்க மாட்டேன்" என்று கெஞ்ச கெஞ்ச அந்த பியூன் அவனை இழுத்துச் சென்றார்.


மகனின் கதறல் ரவிவர்மனின் மனதை அசைத்துப் பார்த்தது. அதே நேரம், மனைவியின் முகம் கண் முன் வர, தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, "மேடம், என் பையன் பத்திரம்..!!" என்றான் கலங்கிய குரலில்.


"மிஸ்டர் ரவிவர்மன்! உங்க பையன் மாதிரி இங்க நிறைய பசங்க வேற வேற ஊர்ல இருந்து வந்து தங்கிப் படிக்கிறாங்க. ரிஷி ரெண்டு நாள் அழுவான். அப்புறம் அவனுக்கே இங்க இருக்கப் பிடிச்சுப் போகும். நெக்ஸ்ட் டைம் நீங்க வந்து கூப்பிட்டா கூட, வரலனு சொல்லுவான் பாருங்க.. சோ கவலைப்படாமல் போய்ட்டு வாங்க, உங்க பையனுக்கும் அவன் படிப்புக்கும் நான் பொறுப்பு!" என்று அவர் சிறு புன்னகையுடன் கூறவும்,


"தேங்க்ஸ் மேடம்.." என்றுவிட்டு கனத்த இதயத்துடன் ஊட்டியில் இருந்து கிளம்பினான் ரவிவர்மன்.


மகனின் மனமாற்றத்துக்காக அவனை வெளியே அழைத்துச் செல்கிறேன் என்று கூறி விட்டுச் சென்ற கணவன், மகன் இல்லாமல் தனியாக வந்திருப்பது கண்டு பதைபதைத்துப் போன ஓவியா, "ரவி! ரிஷி எங்கே..?" என்று கணவனிடம் கேட்டாள்.


"ரிஷியை ஊட்டியில் ஹாஸ்டல்ல சேர்த்துட்டேன் ஓவிமா" என்று மனைவியின் தலையில் இடியை இறக்கினான் ரவிவர்மன்.


"என்ன..? என்ன சொன்னிங்க..? என் பையனை ஹாஸ்டல்ல சேர்த்துட்டீங்களா..? யாரை கேட்டு சேர்த்திங்க..?" என்று கணவனின் சட்டை பிடித்து ஆக்ரோஷமாக உலுக்கினாள் ஓவியா.


மனைவியின் கையைப் பிடித்துக் கொண்ட ரவிவர்மன், "நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு ஓவிமா!" என்றான். 


"என்ன சொல்ல போறீங்க ரவி? என்கிட்ட சொன்னா நான் சம்மதிக்க மாட்டேன்ன்னு, பொய் சொல்லி அவனைக் கூட்டிட்டுப் போயிருக்கீங்க, அப்படித்தானே?" என்று கோபம் குறையாமல் கேட்க,


"ரிஷியோட நல்லதுக்குத்தான் ஓவிமா.." என்று அவன் கூறி முடிக்கவில்லை. 


"எது அவனோட நல்லது? என் பிள்ளையை என்கிட்ட இருந்து முழுசா பிரிக்கிறது தான் நல்லதா? உங்க அம்மாகிட்ட இருந்து அவனைப் பிரிச்சுட்டேன்னுதானே, நீங்க இப்ப இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்கீங்க?" என்று கேட்க


ரவிவர்மனோ "அப்படி இல்ல ஓவிமா.." என்று மனைவியைச் சமாதானம் செய்ய முயன்றான்.


அவளோ, "என் கிட்ட பேசாதீங்க ரவி..!!" என்றுவிட்டு கோபத்தில் அந்த அறையில் இருந்து வேகமாக வெளியேறி இருந்தாள். 


அதன் பிறகு வந்த நாட்களில், ஓவியா கணவனுடன் முகம் கொடுத்துப் பேசுவதை நிறுத்தி இருந்தாள். மனைவியின் கோபம் நியாயமானது என்பதால் அமைதி காத்த ரவிவர்மன், மெதுமெதுவாக மனைவிக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி, 'இரண்டு வருடம் தான் ஓவிமா..' என்று கூறி, ஓரளவுக்கு அவளைச் சமாதானம் செய்து இருந்தான் 


ஓவியாவும், "இன்னும் இரண்டு வருடங்கள் தானே..?" என்று தன் மனதை தேற்றிக் கொண்டு, ரம்யாவின் மீது தனது கவனத்தைத் திருப்பி இருந்தாள்.


*******


ரிஷி ஊட்டியில் கான்வென்ட் பள்ளியில் சேர்ந்து ஒரு மாதம் கடந்து இருந்தது. பெரும் புள்ளிகளின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி என்பதால் ஹாஸ்டல் எல்லாம் தரமானதாகவே இருந்தது. ஆனால் ரிஷிவர்மன் தான் யாரிடமும் ஒட்டாமல் தினம் தினம் அழுது கொண்டே இருந்தான்.


அன்று ஞாயிற்றுகிழமை.. பள்ளி விடுமுறை என்பதால், ஹாஸ்டலில் இருக்கும் பிள்ளைகள் எல்லோரும், சீக்கிரமே காலை உணவு அருந்த டைனிங் ஹாலுக்குச் சென்றார்கள்.


அனைவரும் அவரவர் இடத்தில் அமர, ரிஷிவர்மனும் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தான். எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட, அதை மாணவர்கள் உண்ண ஆரம்பித்தனர். 


ரிஷிவர்மன் மட்டும் எப்பொழுதும் போல் உண்ணாமல், உணவு தட்டை தள்ளி வைத்து விட்டு, எழுந்து வாசலை நோக்கி நடந்தான். அதைக் கவனித்த வார்டன், 


"இவனுக்கு இதே வேலையா போச்சு! சின்னப் பையன், பாவம், சத்தம் போட கூடாதுனு பார்த்தா ரொம்ப ஓவரா பண்றான்" என்று பல்லைக் கடித்தவர், "டேய் நில்லுடா!" என்றபடித் தன் கையில் இருந்த குச்சியை கொண்டு அவனை அடிக்கச் சென்றார்


அதற்குள் அவரது கையை பிடித்த ஒரு மாணவன், "அங்கிள்! இப்ப எதுக்கு அவனை அடிக்கப் போறீங்க? இந்த மாதிரி நடந்துகிட்டீங்கன்னா நான் மேடம்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி இருக்கும்" என்று எச்சரிக்கை செய்தான்.


அந்த வார்டனோ, "அவனை அடிச்சு திட்டு வாங்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? இந்தப் பையன் சரியாவே சாப்பிட மாட்டேன்கிறான். நேத்து நைட்டு கூடச் சாப்பிடவே இல்ல, இப்பவும் சாப்பிடாம போறான். இவனுக்கு ஏதாவது ஆச்சின்னா என்னைத்தானே கேள்வி கேட்பாங்க..?" என்று சலிப்புடன் கூறி விட்டு மற்றவர்களைக் கண்காணிக்கச் செல்ல, அந்த மாணவனோ ரிஷியைத் தேடிச் சென்றான்.


ரிஷியோ, அங்கிருந்த கிரவுண்ட்டில், ஒரு ஓரமாக சோகமே வடிவாக அமர்ந்திருக்க, அவனின் அருகே சென்று அமர்ந்தான், அந்த மாணவன்


தன் அருகே வந்து அமர்ந்தவனை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு, மீண்டும் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரிஷிவர்மன். 


அந்த மாணவனோ, "ஹாய்! உன் பேர் ரிஷிவர்மன் தானே? சிக்ஸ்த் படிக்கிற ரைட்டா..?" என்று கேட்டான்.  


அதற்கு ரிஷியிடம் எந்த எதிர்வினையும் இல்லை என்றதும், "எதுக்கு இப்படி உம்முன்னு இருக்கே? உனக்கு இங்க படிக்கப் பிடிக்கலயா..?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.


அதில் அவனைத் திரும்பிப் பார்த்த ரிஷிவர்மனோ, "எனக்கு டாடி கூட வீட்டுக்குப் போகணும்" என்றான் சிறு குழந்தையாய்.


அதில் சிரித்த அந்த மானவனோ, "இவ்வளவு பெரிய பையனா இருந்துட்டு இப்படி அழுதுட்டு இருக்கியே? அங்க பாரு.. உன்னை விடச் சின்னப் பசங்க எல்லோரும் எப்படி விளையாடிட்டு இருக்காங்க?" என்று ஒரு திசையை சுட்டிக் காட்டியவன்,


"மொதல்ல கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் ரிஷி. அப்புறம் போக போக உனக்கு இங்க இருக்கப் பிடிச்சுப் போகும்" என்று அவனுக்குப் புரியும்படி எடுத்துக் கூறினான்.


அவனது பேச்சு ரிஷிவர்மனை கவர்ந்ததோ? "உங்களை இங்க யாரு கொண்டு வந்து விட்டா, உங்க அப்பாவா?" என்று கேட்டான். 


"ம்ஹூம்.. எனக்கு அப்பா இல்ல, அவங்க சாமிக்கிட்ட போய்ட்டாங்க. எனக்கு எங்க அம்மான்னா உயிர்! நானா தான் இங்கே படிக்க வந்தேன். காரணம் என் சிஸ்டர்.." என்று கூறவும்,


'ஏன்?' என்பது போல் புரியாமல் பார்த்த ரிஷிவர்மனிடம்,


"ஏன்னா? எங்க அம்மாவோட பாசம் முழுக்க முழுக்க என் தங்கைச்சிக்கு மட்டுமே கிடைக்கணும். அதுக்காகத்தான் நான் இங்க வந்துட்டேன்" என்று அவன் கூறவும்,


அப்பொழுதும் புரியாமல், "எதுக்கு..?" என்று கேட்க,


"அது அப்படித்தான்..!!" என்று கூறிய அந்த மாணவன், "பிரெண்ட்ஸ்..??" என்று ரிஷிவர்மனிடம் தனது கையை நீட்டினான். 


"பிரெண்ட்சா? நான் உங்களை விடச் சின்னப் பையன்" என்றான் ரிஷிவர்மன்.


"ஏன் சின்னப் பையன்னா பிரெண்டா இருக்கக் கூடாதா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் அந்த மாணவன்.


அதன் பிறகு மறுக்காமல் அவனது கையைப் பற்றிக் கொண்ட ரிஷிவர்மன், "உங்க பேர் என்ன? எந்த கிளாஸ் படிக்கிறீங்க?" என்று கேட்க,


"நான் நைன்த் ஸ்டாண்டார்ட் படிக்கிறேன். என் நேம் குமார். என் பிரெண்ட்ஸ் எல்லாரும் என்னை ஏ.கேன்னு கூப்பிடுவாங்க. சோ நீயும் அப்படியே கூப்பிடு!" என்று தோளைக் குலுக்கினான்.


"சரி.." என்று அந்த மாணவனின் நட்பை ஏற்றுக் கொண்டான் ரிஷிவர்மன்.


அதன்பிறகு வந்த நாட்களில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டு, நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.


ரிஷிவர்மனும் சிறிது சிறிதாக ஹாஸ்டல் வாழ்க்கைக்குப் பழகி இருந்தான். ஆனால் அவன் மனதில் இருந்த இறுக்கமும், கோபமும் குறையவே இல்லை. நாட்கள் வாரங்களாக மாறி மாதங்களாக நகர்ந்து கடந்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகி இருந்தது. இன்னும் சில நாட்களில் தீபாவளி வர இருந்ததால், பத்து நாட்கள் பள்ளியில் விடுமுறை விட்டு இருந்தார்கள்.


அதனால் மாணவர்களை அழைத்துச் செல்ல அவரவர் வீட்டில் இருந்து பெற்றோர்கள் வந்து, தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ரிஷியின் தோழன் குமார் கூடத் தனது அன்னையையும், தங்கையையும் காணச் சென்று விட்டான்.


மகனை அழைக்க வந்த ரவிவர்மன் மட்டும் தனியாகத்தான் சென்னைக்குக் கிளம்பினான். 


ஆம்! வாரா வாரம் அலைபேசியிலும் மாதம் ஒருமுறை நேரில் பார்க்க வரும் தந்தையிடம் பேச மறுப்பவன், இப்பொழுது விடுமுறைக்கு அவருடன் வீட்டுக்குச் செல்லவும் மறுத்து விட்டான். என்ன தான் அவன் இங்குள்ள சூழ்நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டாலும், தான் மறுக்க மறுக்க இங்கு விட்டுச் சென்ற தந்தையின் மீதும் இப்பொழுது அவனது கோபம் திரும்பி இருந்தது


அதன்பிறகும் நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் கடந்து இருக்க, இன்னும் சில நாளில் ராஜேஸ்வரியின் முதலாம் ஆண்டு திதி வர இருப்பதால், மகனை அழைத்து வருமாறு நச்சரிக்க ஆரம்பித்தாள் ஓவியா.


தனது தாயின் ஆத்ம சாந்திக்காக மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்ல ஊட்டிக்கு வந்தான் ரவிவர்மன். அப்பொழுதும் தந்தையுடன் ஊருக்குச் செல்ல மறுத்தவன், அவனிடம் பேசுவதை கூடத் தவிர்த்து விட்டான் ரிஷிவர்மன்.


இடம் மாறினால் மகனின் மனநிலை மாறும் என்று எண்ணித்தான் மகனை ஹாஸ்டலில் சேர்த்து விட்டான் ரவிவர்மன். ஆனால் அவன் அறியவில்லை!! அவனது மகன் மனதளவில் கூட எல்லோரையும் விலக்கி வைத்து விட்டான் என்ற உண்மையை.. 


தனியாகத் திரும்பி வந்த கணவனிடம், "இதுக்குத்தான் சொன்னேன்.. அவனை ஹாஸ்டல்ல சேர்க்காதீங்கன்னு.. நீங்க கேட்கவே இல்ல ரவி..!!" என்று எப்பொழுதும் போல் ஓவியா புலம்ப ஆரம்பித்தான்.


"இப்ப அவனுக்குப் பரிட்சை நடந்துட்டு இருக்கு ஓவிமா. அதான் வரலன்னு சொல்லிட்டான். அடுத்த வருஷம் கண்டிப்பா வருவான்" என்று சமாதானம் செய்ய, அதை நம்பினாளோ இல்லையோ, அடுத்த வருசத்துக்காக இப்பவே காத்திருக்க ஆரம்பித்தாள் ஓவியா.


அவளது நம்பிக்கை வீண் போகவில்லை. ஆம்! முதலாம் ஆண்டு வர மறுத்த ரிஷிவர்மன், அடுத்த ஆண்டு தன்னை அழைக்க வந்த தந்தையுடன், தனது ராஜிமாவின் திதிக்கு வரச் சம்மதித்தான். அதிலும் சென்னைக்கு வர மாட்டேன் என்று முடிவாகக் கூறியும் விட்டான்.


அது கூட அவனது நண்பன் குமார் கூறியதால் மட்டுமே! ஏனெனில் ஒவ்வொரு தடவையும் ரிஷியை பார்க்க வருபவரையும், அவருடன் பேச மறுக்கும் ரிஷியையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்? அது அவனுக்கு என்னவோ போல் இருக்க..


"உனக்கு உங்க ராஜிமாவைப் பிடிக்கும்னு சொல்றே, ஆனா அவங்க திதிக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கே. அப்போ உன் ராஜிமா மனசு கஷ்டப்படும் தானே..?" என்று அவனுக்குத் தெரிந்த வகையில் ரிஷியிடம் பேசி சமாதானம் செய்து, அவருடன் செல்ல சம்மதிக்க வைத்தான் ரிஷியின் நண்பன்.


ரவிவர்மனுக்கோ மகன் வருகிறேன் என்று கூறியதும் ரொம்பவே சந்தோசம்! ஊட்டியில் இருந்து அவனை அழைத்துக் கொண்டு நேரே அவர்களின் கிராமத்திற்குத்தான் வந்தான். 


அன்னையின் விருப்பப்படி, அவரது கல்லறையைக் கிராமத்து வீட்டின் பின்புறம், அவனது தந்தையின் கல்லறையில் அருகே தான் அமைத்திருந்தான் ரவிவர்மன்.   


ரவிவர்மனின் பூர்விக வீடு இரண்டு ஏக்கர் பரப்பளவில், சுற்றித் தென்னை மரங்கள், செடி, கொடிகள் எனப் பசுமை நிறைந்து இருக்க, அதன் நடுவில் ஒரு குட்டி பங்களாவைப் போலவே இருந்தது. அந்தக் காலத்து வீடு என்றாலும், சிறிது இன்றைய நாகரிகம் கலந்து மாற்றி இருந்தான் ரவிவர்மன். 


விக்ராந்த், மேகா, நேகா மூவருக்கும் பரீட்சை இருப்பதால், அவர்களை விசேஷத்து அன்று கூட்டிக் கொண்டு வருவதாக ராதாவும், கார்த்திக்கும் கூறி விட்டார்கள். அதனால் ஸ்னேகாவை மட்டுமே தன்னுடன் அழைத்துக் கொண்டு, ஓவியாவுடன் ஒரு வாரம் முன்பே அங்கு வந்திருந்தாள் மோகனா.


ஊருக்கு வந்த ரிஷியோ, யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே தான் இருந்தான். 


ஓவியாவுக்கோ மகன் தன்னிடம் பேசவில்லை என்றாலும், இப்பொழுது, இந்த நிமிடம் மகன் தன் அருகில் இருக்கிறான்.. அதுவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. 


ஸ்னேகாவுக்கோ சொல்லவே வேண்டாம்..!! இரண்டு வருடங்கள் கழித்துத் தனது அத்துவைப் பார்த்து விட்ட சந்தோஷம் மனதில் இருந்தாலும், அன்று அவன் தள்ளி விட்ட பயம் இன்றும் அவள் மனதில் ஆழ பதிந்து போனதால், அவனிடம் சென்று பேச பயந்தாள். அதனால் தூரத்தில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டாள்.


மறுநாள் ராஜேஸ்வரியின் திதி என்பதால், மோகனா-ஓவியா இருவரும் மறுநாளுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க, ரவிவர்மனோ ஐயருடன் போனில் பேசிக் கொண்டிருந்தான்.


தோட்டத்தில் அங்கும் இங்கும் இரை தேடி ஓடிக் கொண்டிருந்த கோழிக் குஞ்சுகளைப் பார்த்த ரம்யா-ஸ்னேகா இருவரின் முகத்தில் புன்னகை தோன்ற, இருவரும் சேர்ந்து அதனைத் துரத்தி விளையாட ஆரம்பித்தார்கள்.


கோழிக்குஞ்சுகளைத் துரத்தியபடி தோட்டத்தில் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்த ஸ்னேகா, அதனைப் பிடிக்க ஆசை கொண்டு மெதுவாக அந்த பின்னே செல்ல, அதுவோ அடுத்த நொடி வேகமாக ஓடி இருந்தது. 


"ஏய் நில்லு!" என்றபடி அதன் பின்னே சென்றவள் வந்ததோ, வீட்டின் பின்புறம்.. அப்பொழுது ரம்யா, "ஸ்னேகா! நான் தண்ணி குடிச்சிட்டு வரேன்" என்றவள், அவள் பதிலை எதிர்பாராமல் வீட்டுக்குள் ஓடி விட்டாள்.


ஸ்னேகாவுக்கோ, ரம்யா வரும் முன் ஒரு கோழிக்குஞ்சையாவது பிடித்து விட வேண்டும் என்ற ஆர்வம் தோன்ற, அதன் பின்னேயே மெதுவாக நடந்தாள். ஆனால் தன்னைப் பிடிக்க வரும் ஸ்னேகாவைக் கண்டு விட்ட கோழிக்குஞ்சு, அவளிடம் சிக்கி விடக் கூடாது என்பதால், பின்பக்க கேட்டின் அடியில் புகுந்து வெளியே சென்றிருந்தது. 


"வெளியே போய்ட்டியா?? இரு, வரேன்.." என்றவள், பூட்டி இருந்த கேட்டின் கொண்டியை இழுத்துத் திறக்க முயன்றாள். அதுவோ சிக்கென்று மூடி இருக்க, தன் பலம் கொண்ட மட்டும் வேகமாக இழுக்கவும், கதவின் கொண்டி திறந்தது. "ஹை திறந்துருச்சு..!!" என்று அவள் கைத் தட்டி குதித்த நேரம், அவள் காதில் இருந்த ஹியரிங் எயிட் கழண்டு கீழே விழ, தான் இருந்த சந்தோசத்தில் அவள் அதை உணரவே இல்லை. 


வேகமாகக் கதவைத் திறந்தவள் கேட்டைத் தாண்டி வெளியே வந்தாள். சற்றுத் தள்ளி ரெயில்வே தண்டவாளங்கள் இருக்க, அதன் நடுவே கோழி குஞ்சு இரை தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு, "இங்க தான் இருக்கியா?" என்று குதூகலத்துடன் அதைப் பிடிக்க ஓடினாள். 


அதே நேரம், தூரத்தில் ஒரு ரயில் வேகமாக ஹாரன் அடித்தபடி வந்து கொண்டிருந்தது. ஸ்னேகாவின் காதில் காது கேட்கும் கருவி இல்லாததால், அந்தச் சத்தம் அவளுக்குக் கேட்கவே இல்லை. மெதுவாகப் பூனை நடையிட்டு கோழிக்குஞ்சை படக்கென்று பிடித்தவள், "நான் உன்னைப் பிடிச்சுட்டேனே??" என்று சந்தோசத்தில் கூச்சலிட்டபடி நிமிர்ந்து பார்த்தவளின் முகம் பேயறைந்தது போல் ஆனது.


ரயிலோ ஹாரன் சத்தத்துடன் அதிவேகமாக வந்து கொண்டிருக்க, அதிர்ச்சியில் நகர வேண்டும் என்பதை மறந்து, அப்படியே நின்று விட்டாள்.


அதிர்ச்சியில் நின்றிருந்த குழந்தைக்கோ பயத்தில் வியர்த்து வழிய, அடுத்த நொடி, அவளது கைக் கால்கள் வெட்டி வெட்டி இழுக்க, அப்படியே ரயில் தண்டவாளத்தில் விழுந்து இருந்தாள் ஸ்னேகா.


ரயிலோ ஸ்னேகாவை நெருங்க இன்னும் சில நொடிகளே இருக்க, மயிரிழையில் குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றித் தன்னோடு இறுக அணைத்து இருந்தான் ரவிவர்மன். 


ஐயருடன் நாளைய நாளில் செய்ய வேண்டிய பூஜைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ரவிவர்மன், பேசியபடி வீட்டின் பின்புறம் வந்தான். வந்தவன் கண்ணில் பின்பக்க கேட் திறந்து இருப்பது கண்டு, 'இதை யாரு திறந்தது?' என்று அங்கே சென்றவன், வெளியே பார்த்த காட்சியில், அவனது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அடுத்த நொடி, புயல் வேகத்தில் வந்து குழந்தையைக் காப்பாற்றி இருந்தான்.


அவன் பார்த்த இந்தக் காட்சியை ஜென்மத்துக்கும் அவனால் மறக்கவே முடியாது! ஒரு நொடி தாமதித்து இருந்தாலும், ஸ்னேகா இந்நேரம் இவ்வுலகில் இருந்து இருக்க மாட்டாள் அல்லவா?? சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ரவிவர்மன், பின்பு குழந்தையைக் கீழே படுக்க வைத்து, அவள் கையில் இரும்பு சாவி ஒன்றை வைத்து, சற்று அழுத்திப் பிடித்துக் கொண்டான். 


கொஞ்சம் கொஞ்சமாக வலிப்பு நின்று மயக்கத்திற்குச் சென்றாள் ஸ்னேகா. அதன் பிறகே நிம்மதியாக உணர்ந்த ரவிவர்மன், மீண்டும் ஸ்னேகாவைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு, வீட்டுக்குள் செல்ல திரும்பவும் தான் கவனித்தான், அங்கே நின்றிருந்த மகனை. 


ஆம்! இவ்வளவு நேரம் அங்கு நடந்ததை எல்லாம், சற்றுத் தள்ளி நின்று, பார்த்துக் கொண்டு தான் நின்றிருந்தான் ரிஷிவர்மன். 


ஊட்டியில் இருந்து வந்ததில் இருந்து யாருடனும் பேசப் பிடிக்காமல் தோட்டத்தில் அமர்ந்திருந்த ரிஷிவர்மன், ஸ்னேகாவும், தன் தங்கையும் கோழிக்குஞ்சுடன் விளையாடுவதையும், பின்பு ஸ்னேகா மட்டும் அதைத் துரத்திக் கொண்டு பின்பக்கம் சென்றதையும், அவனும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். எதற்கோ வெளியே வந்த மோகனா, அங்கே மகள் இல்லாதிருப்பதைக் கண்டு, "ரிஷி! ஸ்னேகா எங்கே? பின்னாடி தோட்டத்துல இருக்காளா? கொஞ்சம் பாருப்பா..!!" என்று கூறி விட்டு செல்ல..


'நான் ஏன் பார்க்க வேண்டும்?' என்று நினைத்தாலும், எழுந்து பின்பக்கம் வரத்தான் செய்தான். வந்தவன் கண்ணில் அவள் கேட் திறந்து வெளியே சென்றது விழ, என்ன நினைத்தானோ, அவளைப் பின்தொடர்ந்து வந்தவனின் கண்ணில், எதிரே தூரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் தென்பட்டது 


அதைப் பார்த்து ஸ்னேகா அதிர்ச்சியில் நின்றதையும், அடுத்த நிமிடம், வலிப்பு வந்து தண்டவாளத்தில் விழுந்து வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தவளையும், ரயிலையும் பார்த்த ரிஷிவர்மன், அப்படியே கேட்டில் சாய்ந்து நின்றான். அவன் பார்வை ஸ்னேகாவை விட்டு இம்மியும் நகரவில்லை. அதே சமயம் அவளைக் காப்பாற்றவும் முயலவில்லை. 


மகனை அவ்விடத்தில் கண்டதும் யோசனையுடன், "ரிஷி! நீ இங்க என்ன பண்றே? உள்ள போ!" என்று ரவிவர்மன் கூறினான்.


ஆனால் அவனோ தந்தையின் கேள்விக்குப் பதிலளிக்காமல், "எதுக்கு டாடி இவளை சேவ் பண்ணினிங்க? இவளுக்குத்தான் காது கேட்காதே? அம்மா மாதிரி இவளும் வேஸ்ட் டாடி! தூக்கிப் போடுங்க! அடுத்த ட்ரெயின் வந்து தூக்கி எறியட்டும்" என்று அசால்ட்டாகக் கூறி விட்டு உள்ளே சென்று விட, மகனை அதிர்ந்து பார்த்தான் ரவிவர்மன்..!!


***

No comments:

Post a Comment