ஸ்வரம் 30

 




ஸ்வரம் 30


பள்ளியின் ஒரு பகுதியில் அமைந்திருந்த மிகப் பெரிய கூடைப்பந்து மைதானத்தில் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றிருக்க, அதில் ஒருவன் மட்டும் மைதானத்தின் நடுவில் நின்று, தன் கையில் இருந்த பந்தை தன் அணியில் இருக்கும் இன்னொருவனிடம் தூக்கி எறிந்தான். அதை கைப்பற்றியவனோ கவனமாக எதிரணியிடம் பந்தை விட்டுக் கொடுக்காமல், அதை தரையில் தட்டி தட்டி மிக லாவகமாகக் கூடையின் அருகே சென்று, தன் முழு உயரத்துக்கும் எம்பி கையில் இருந்த பந்தை கூடைக்குள் போட்டு இருந்தான். 


அதில் "ஹேய்!!" என்று கூச்சலிட்டு ஆரவாரத்துடன் அவனது நண்பர்கள் அவனைத் தூக்கி மகிழ்ச்சியைத் தெரிவிக்க, அவர்களிடம் இருந்து விடுபட்டு, தங்கள் அணிக்கென்று ஒதுக்கி இருந்த இடத்தில் சென்று அமர்ந்தான், அவன் ரிஷிவர்மன்..


அவன் அருகில் வந்து அமர்ந்த அவனது அணியின் பயிற்சியாளர், "வெல்டன் ரிஷி! யூ ஹேவ் டன் அ க்ரேட் ஜாப்..!! அடுத்து நடக்கப் போற இன்டர்நேஷனல் காம்பட்டீஷன்ல நீ தான் டீம் கேப்டன்.." என்று கூறவும்,


"நோ கோச், நான் எந்த காம்பட்டீஷன்லையும் கலந்துக்கப் போறது இல்ல" எனச் சட்டென்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டான்.


ரிஷிவர்மன் எப்பொழுதும் அப்படித்தான் என்பதால் அவனது செயலில் வருத்தமோ கோபமோ கொள்ளாமல், "கைஸ்! வாங்க ப்ராக்டிஸ் பண்ணலாம்" என்று சத்தம் கொடுத்தவாறு மாணவர்களை நோக்கிச் சென்றார் டீம் பயிற்சியாளர். 


விளையாட்டு மைதானத்தில் இருந்து வெளியே வந்தவனை எதிர்கொண்டார் பள்ளியின் பியூன்.


அவரை அவன் கேள்வியாக நோக்க, அவரோ, "தம்பி! உன்னை மதர் வரச் சொன்னாங்க" என்று விட்டுச் செல்லவும், ஆபிஸ் அறையை நோக்கி நடந்தான்.


அலுவலக அறைக்கு வந்து மதரின் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான் ரிஷிவர்மன். அவனைப் பார்த்ததும்,


"ரிஷி! கம், ஹவ் அ சீட்.." என்று அவனை அமரச் சொன்னவர், அவன் முன் ஒரு கவரை நீட்டினார்.


அது என்னவென்று வாங்கிப் பிரித்துப் பார்த்தான்.


அவரோ, "இது உனக்கு வந்திருக்கும் அட்மிஷன் லெட்டர். இப்ப தான் ஃபேக்ஸ்ல வந்தது. எப்போ அப்ளை பண்ணினே ரிஷி? இந்த விஷயம் உங்க அப்பாக்குத் தெரியுமா..?" என்று கேட்டார்.


"அவர்கிட்ட ஏன் சொல்லணும்..?" என்று அவரிடம் திருப்பிக் கேட்டான் ரிஷிவர்மன்.


"இது என்ன பதில் ரிஷி? அவர் உன் அப்பா… அவரோட பெர்மிஷன் வேணாமா..?" அவரது குரலில் கண்டிப்பு இருந்தது. 


"தேவை இல்ல மதர்.. ஏன்னா நான் ஸ்காலர்ஷிப்ல தான் படிக்கப் போறேன். யாரோட உதவியும் எனக்கு வேணாம். இது என் லைஃப்! என் இஷ்டப்படி தான் இருப்பேன். இதுல வேற யார் இன்டெர்ஃபியர் ஆகுறதையும் நான் விரும்ப மாட்டேன்!" என்று கூறி விட, 


அவரோ அவனைப் பார்த்து மென்புன்னகை ஒன்றை உதிர்த்து, "காட் ப்ளஸ் யூ மை சைல்டு..!!" என்று ஆசீர்வதித்தார்.


"தேங்க்யூ மதர்! நான் வரேன்.." என்று எழுந்து வெளியே சென்று விட்டான்.


ரிஷிவர்மன் பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதியில் இருக்கிறான். அவனது வயதோ பதினெட்டு. ஆனால் ஒல்லியான உருவத்திலும் கம்பீரமாக, அப்படியே ரவிவர்மனின் மறுபிம்பமாக, அதுவும் தந்தையை விட அரையடி அதிகமாக வளர்ந்து நின்றான். அதே நேரம் அவன் முகத்தில் எப்பொழுதும் இருக்கும் இறுக்கம் மட்டும் மாறவே இல்லை. சுருங்கச் சொல்ல போனால், பத்து வயதில் இங்கு வரும் பொழுது அவன் என்ன மனநிலையில் இருந்தானோ, இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறான். எந்த ஒரு மாற்றமும் அவனிடம் காணப்படவில்லை. முன்பாவது அவனிடம் பேச அவன் நண்பன் குமார் அருகில் இருந்தான். மூன்று வருடம் முன்பு, அவன் தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரியில் சேர இங்கிருந்து சென்று விட, ரிஷியோ தனது தனிமையைப் போக்க விளையாட்டில் பங்கேற்று, தனது மனதை திசை திருப்ப ஆரம்பித்தான். படிப்பிலோ சொல்லவே வேண்டாம்! படு கெட்டி!! அந்த ஒரு காரணத்தால் மட்டுமே யாராலும் அவனை எதுவும் சொல்ல முடியவில்லை. 


அந்த மாத இறுதியில் தனது இறுதி பரீட்சையை எழுதி முடித்த ரிஷிவர்மன், அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். அவனுடன் படித்தவர்களை அவர்களின் வீட்டில் இருந்து வந்து அழைத்துச் சென்று கொண்டிருக்க, ரிஷியோ தந்தை வரும் முன் தன் நண்பன் வீட்டிற்குக் கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில், எல்லாவற்றையும் வேகமாக செயல்படுத்த ஆரம்பித்தான்.


மறுநாள் காலையில் கையில் தனது உடமைகளுடன் ஹாஸ்டலில் இருந்து வெளியே வந்தவனை, தனது காரில் சாய்ந்து நின்ற ரவிவர்மன் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.


தந்தையைப் பார்த்ததும், "ம்பச்…" என்று சலித்துக் கொண்ட ரிஷிவர்மன், வேண்டா வெறுப்பாக அவரை நோக்கி நடந்தான்.


மகனைப் புன்னகையுடன் எதிர்கொண்ட ரவிவர்மனோ, "கிளம்பலாமா ரிஷி..?" என்று அதே புன்னகை மாறாமல் கேட்டான்.


"எங்க கிளம்பச் சொல்றிங்க?" கடுப்புடன் கேட்டான் மகன்.


"நம்ம வீட்டுக்கு…" எனத் தந்தை கூற,


"நான் அங்கே வர மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா..?" என்று இப்பொழுது அவன் அவரை முறைக்கவும்..


"தெரியும்! அதான் சென்னைக்குப் போகாம உன்னை நம்ம ஊருக்குக் கூட்டிட்டுப் போக வந்தேன். அங்க போய் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறம் உன்னோட காலேஜ் பத்தி பேசலாம்" என்று கூறிய தந்தையை புருவம் தூக்கிப் பார்த்தவன்,


"நான் எங்க படிக்கணும், எந்த காலஜில் படிக்கணும்னு நானே முடிவு பண்ணிட்டேன்" என்று வீம்புடன் கூற,


"தெரியும் ரிஷி! நீ எப்பவோ வளர்ந்துட்டேனும் தெரியும். வா, கார்ல போய்ட்டே பேசலாம்" என்றுவிட்டு மகனின் கையில் இருந்த உடைமைகளை வாங்கி, காரின் பின்பக்கம் வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.


ரிஷியோ தந்தையின் அருகே வந்து அமர்ந்தான். மறந்தும் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் மகனைக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரவிவர்மனோ, "எப்படி இருக்கே ரிஷி?" என்று கேட்டு மகனை பாசத்துடன் அணைத்துக் கொண்டான்.


அவனோ அவரைப் பதிலுக்கு அணைக்காமல், "இப்ப வரை நல்லா தான் இருந்தேன். இனி எப்படின்னு தான் தெரியல.." என்றுவிட்டு தனது பார்வையை வெளிப்பக்கம் பதிக்க..


மகனின் வார்த்தையில் கிண்டல் இருந்தாலும், அவன் குரலில் தெரிந்த வலி, தந்தையாய் அவனுக்குமே அதிகம் வலித்தது. 


"சாரி ராஜா! உன்னை நான் நிரந்தரமா ஹாஸ்டல்லயே விட்டுட்டேன்னு என் மேல கோபம் இருக்கும்" என்றதும்,


"உங்க நிலைமை எனக்குப் புரியுது டாடி. பாவம்! நீங்களும் என்னதான் செய்விங்க? மொதல்ல உங்க வைஃப்க்காக என்னை ஒதுக்கி வச்சிங்க. அப்புறம்.." என்று பல்லைக் கடித்தவன், "அந்த டப்பா காது வச்சிருக்கிறவளுக்காக என்னை நாலு வருஷம் தள்ளி வச்சிட்டிங்க. ரியலி நீங்க க்ரேட் டாடி! இப்படி ஒரு அப்பா யாருக்கும் கிடைச்சிருக்க மாட்டாங்க" என்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கூறினான் ரிஷிவர்மன்.


மகனின் வார்த்தையில் தன் கண்களை மூடித் திறந்த ரவிவர்மனின் மனம், நான்கு வருடங்களுக்கு முன் சென்றது.


அன்று ரயில் தண்டவாளத்தில் வலிப்பு வந்து விழுந்து துடித்துக் கொண்டிருந்த ஸ்னேகாவைக் காப்பாற்றிய ரவிவர்மன், அங்கு நின்ற மகனைப் பார்த்து வியந்தான். ஏனெனில், அவன் அங்கு நின்றிருந்தும், ஏன் ஸ்னேகாவை அவன் காப்பாற்ற முயலவில்லை? என்ற கேள்வி அவனுள் எழுந்தது. அதே நேரம், 'அவனும் சிறுவன் தானே!! பயந்து போயிருப்பான்' என்று அவனாக எண்ணிக் கொண்டான். 


ஆனால் அவன் மகனோ, 'வேண்டும் என்று தான் அப்படி நின்றிருந்தேன்..' என்று கூறி விட்டுச் செல்லவும், அவனது பதிலில் அதிர்ந்து நின்று விட்டான் ரவிவர்மன். அவனது மனதிலோ யோசனை படர்ந்தது.


மறுநாள் கார்த்திக்கும் மேகா, நேகா, விக்ராந்த் அனைவரையும் அழைத்து வந்திருக்க, மதியம் பூஜை காரியம் எல்லாம் முடிந்தது. இரவில் பெரியவர்கள் அனைவரும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, குழந்தைகளோ மாடியில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


ரிஷியும் மாடியில் தான் இருந்தான். ஆனால் அவனிடம் பேசக் கூடாது என்று தன் தங்கைகளுக்கு ஏற்கனவே விக்ராந்த் கூறி இருந்ததால், அவனிடம் யாரும் சென்று பேசவும் இல்லை, அவனை விளையாட கூப்பிடவும் இல்லை. அவனும் அவர்கள் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை.


விக்ராந்த் கண்ணைப் பொத்திக் கொள்ள, மேகாவும் - நேகாவும் ஒளிவதற்கு மெதுவாகக் கீழே சென்று விட, ரம்யாவும் தனக்குக் கிடைத்த இடத்தில் ஒளிந்து கொண்டாள். ஸ்னேகாவோ ஓடிச் சென்று அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கொள்ள, அடுத்த நிமிடம் அந்த அறையின் தானியங்கி கதவு பூட்டிக் கொண்டது.  


கண்களைப் பொத்தி இருந்த விக்ராந்த்தோ, தங்கைகளைத் தேடிக் கீழே படியிறங்கி சென்று விட்டான்.


ஒளிந்து கொள்வதற்காக அறைக்குள் சென்ற ஸ்னேகா, கதவு பூட்டிக் கொண்டதை கண்டு அதிர்ந்தவள், பயத்தில் வேகமாக ஓடி வந்து, "அண்ணா! அக்கா! நான் உள்ள இருக்கேன்.." கதவை வேகமாகத் தட்டினாள். 


அவளது சத்தத்தில் வெளியே நின்றிருந்த ரிஷி தன் தோளை குலுக்கினானே தவிர, அந்தக் கதவைத் திறந்து ஸ்னேகாவை வெளியே அழைத்து வர வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், அந்தக் கதவையே பார்த்தபடி பால்கனியில் அப்படியே நின்றிருந்தான்.


அவள் இருந்த அறையோ பழைய வேண்டாத பொருட்கள் எல்லாம் போட்டு வைக்கும் அறை என்பதால், விளக்குகள் அணைக்கப்பட்டு, எப்பொழுதும் இருட்டாக இருந்தது.


கீழே வந்த விக்ராந்த், ரம்யா மற்றும் தங்கைகள் இருவரையும் கண்டு பிடிக்கவும், அதே நேரம் மின்சாரம் நிற்கவும் சரியாக இருந்தது. 


இருட்டுக்குப் பயந்து நேகா, மேகா, ரம்யா மூவரும் ஓடி வந்து பெரியவர்கள் அருகில் அமர்ந்து கொள்ள, விக்ராந்த்தும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.


மோகனாவோ கரெண்ட் இல்லாததால் எமெர்ஜென்சி விளக்கை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தவள், அங்கே ஸ்னேகா இல்லாமல் இருப்பது கண்டு,


"விக்கி! ஸ்னேகா எங்கே?" என்று மகனைக் கேட்க,


"மாடியில இருந்தா மோஹிமா…" என்றவன், சட்டென்று, "அச்சச்சோ! இருட்டுல பயந்திடுவா, நான் போய் கூட்டிட்டு வரேன்.." என்று சொல்லி மாடிப்படி ஏறிய விக்ராந்த், "ஸ்னேகா! எங்கே இருக்கே?" என்று சத்தம் கொடுத்தான்..


அதற்குத் தங்கையிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றதும், "குட்டிமா! பயப்படாதே! அண்ணா வந்துட்டேன், எங்க இருக்கே?" என்று மீண்டும் சத்தமாக அழைத்துப் பார்த்தான் விக்ராந்த்.

 

தங்கை பதில் சொல்லாமல் இருக்கவும், எங்கு போனாள் என்று புரியாமல் பயந்து போனவன், "மோஹிமா! அப்பா! ஸ்னேகாவைக் காணோம்" என்று கத்தியபடி கீழே இறங்கி ஓடினான்.


"ஸ்னேகாவைக் காணோமா? மேல உங்க கூடத் தானே விளையாட்டிட்டு இருந்தா, சரியா பார்த்தியா?" என்று கார்த்திக் மகனிடம் கேட்க,


"இருட்டுல ஒன்னும் தெரியலப்பா.. ஆனா நான் கூப்பிட்டுப் பார்தேன். அவ சத்தமே கொடுக்கல" என்று அவன் கூறவும்,


"மேல தான் இருப்பா. நான் போய்க் கூட்டிட்டு வரேன்" என்று ரவிவர்மன் செல்ல, அவனைத் தொடர்ந்து மகளைத் தேடி கார்த்திக்கும் சென்றான்.


கார்த்திக் ஒரு பக்கம் மகளைத் தேட, ரவிவர்மனோ இன்னொரு பக்கம் ஒவ்வொரு அறையாகத் திறந்து பார்த்தான். ஸ்னேகா இருந்த அறை பழைய பொருட்கள் போட்டு வைக்கும் இடம் என்பதால், அவள் அங்கு செல்ல வாய்ப்பில்லை என்று நினைத்த ரவிவர்மனுக்கோ, ஸ்னேகாவை எங்கும் காணவில்லை என்றதும் பதட்டம் உண்டாக, அதே நேரம் மின்சாரமும் வந்திருந்தது.


அப்பொழுது அங்கே பால்கனியில் நின்றிருந்த மகனைப் பார்த்த ரவிவர்மன், "ரிஷி! நீ இங்க என்ன பண்றே?" என்று யோசனையுடன் கேட்டவன், ஏதோ நினைத்தவனாக, "ஸ்னேகாவைப் பார்த்தியா?" என்று சந்தேகத்துடன் அவனிடம் கேட்டான்.


தந்தையின் கேள்வியில், அவனது பார்வையோ, ஸ்னேகா இருந்த அறையை ஒரு வினாடி தொட்டு மீண்டாலும், ரிஷியின் இதழோ, "எனக்குத் தெரியாது!" என்றது.


ஒரு நொடியே ஆனாலும், மகனின் பார்வையைக் கண்டுகொண்ட ரவிவர்மன் வேகமாக ரிஷிவர்மன் பார்வை தீண்டிய அறையை நெருங்கிச் சென்று, அதன் கைப்பிடியைத் திருகி கதவைத் திறந்தவன், அந்த அறையின் விளக்கை ஒளிர விட்டான். அங்கே அவன் தரையில் மயங்கிக் கிடந்த ஸ்னேகாவைத்தான் பார்த்தான்.


வேகமாக அவளை நெருங்கி, "ஸ்னேகா!" என்று தூக்கி அவள் கன்னத்தில் தட்ட, அதற்குள் ரவிவர்மனின் சத்தத்தில் அங்கு வந்த கார்த்திக், "குட்டிமா.." என்று மகளை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டவன்,


"என்னாச்சு ரவி? எங்க இருந்தா ஸ்னேகா..?" என்று கார்த்திக் கேட்க,


"ஸ்டோர் ரூம்ல வந்து ஒளிஞ்சி இருந்து இருந்திருக்கா போல! கரண்ட் போகவும் பயத்தில் மயங்கிட்டானு நினைக்கிறேன். அதான் விக்ராந்த் வந்து கூப்பிடும் போது அவளுக்குக் கேட்கல" என்றவன், "நீங்க ஸ்னேகாவைக் கீழே கொண்டு போய், முகத்தில் தண்ணி தெளிச்சு, மயக்கத்தை தெளிய வைங்க.." என்று ரவிவர்மன் கூறவும்,


மகளைத் தோளில் கிடத்திக் கொண்டு வேகமாகப் படியிறங்கினான் கார்த்திக்.


கார்த்திக் சென்று விட்டதை உறுதிபடுத்திக் கொண்ட ரவிவர்மன் மகனைத் தேட, அவன் நின்ற இடமோ காலியாக இருந்தது. அதே சமயம், மகனின் போக்கு சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், அவன் மனதை மாற்றும் வழியை மேற்கொள்ள ஆரம்பித்தான்.


மறுநாள் காலையில் கார்த்திக்கின் குடும்பம் சென்னைக்குக் கிளம்பிச் செல்ல, அவர்களுடன் மனைவியையும், மகளையும் அனுப்பி வைத்த ரவிவர்மன், மகனை அழைத்துக் கொண்டு தானும் கிளம்பினான்.


காரை செலுத்திக் கொண்டிருந்த ரவிவர்மனின் மனமோ யோசனையில் இருந்தது. என்ன நினைத்தானோ?? வாகனத்தை வேறு வழியில் திருப்பியவன், சில மணிநேர பயணத்திற்குப் பின் ஒரு மருத்துவமனை வாசலில் வந்து நிறுத்தினான்.


வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரிஷியோ, "டாடி! இங்க எதுக்கு வந்திருக்கோம்?" என்று கேட்க,


"டாடியோட பிரெண்டைப் பார்க்க ரிஷி. அவரைப் பார்த்துட்டுக் கிளம்பலாம்" என்றவன் மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.


ரிசப்ஷனில் தனது விசிட்டிங் கார்டை நீட்டி, "நான் டாக்டர் செழியனை மீட் பண்ணனும்.." என்று கூறவும்,


"ஜஸ்ட் அ மினிட்.." என்ற பெண்ணோ, போனில் டாக்டர் செழியனிடம் ரவிவர்மனைப் பற்றிக் கூற,


அந்தப் பக்கம் என்ன சொல்ல போட்டதோ.. "ஓகே டாக்டர்.." என்றவள்,


"சார், டாக்டர் உங்களை வரச் சொல்றார். செக்கேன்ட் பிளோர் தர்ட் ரூம்.." என்று கூற, அவளுக்கு நன்றி சொல்லி விட்டு, லிப்ட்டை நோக்கி மகனுடன் நடந்தான் ரவிவர்மன்.


"வாங்க மிஸ்டர் ரவிவர்மன்! எப்படி இருக்கீங்க? உக்காருங்க.." என்று அவனை வரவேற்று அமர சொன்ன மருத்துவர் செழியன், "சொல்லுங்க.." என்று ஆரம்பித்தார்.


"டாக்டர்! நான் நேத்து உங்ககிட்ட பேசின விஷயம் தான்.." என்ற ரவிவர்மன் தன் மகனைத் திரும்பிப் பார்க்க,


"எஸ்! ஞாபகம் இருக்கு.." என்ற மருத்துவர் ரிஷியை ஆழ்ந்து பார்த்தார். பின்பு, "ஹாய் ஜூனியர் ரவிவர்மன்! ஹவ் ஆர் யூ மேன்..?" என்று அவனிடம் நலம் விசாரித்தார்.


அவனோ, "என் பேர் ரிஷிவர்மன். என்னை அப்படியே கூப்பிடுங்க அங்கிள்.." என்று பட்டென கூறி விடவும்,


"ம்ம்ம்…" என்று வியப்புடன் புருவம் தூக்கி அவனைப் பார்த்துச் சிறு புன்னகை புரிந்தவர், "ஓகே ரிஷிவர்மன்! அப்புறம் என்ன படிக்கிறீங்க..?" என்று மேற்கொண்டு அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.


"நான் செவன்த் ஸ்டாண்டார்ட்.." என்று தான் படிக்கும் வகுப்பை கூற,


"குட்!" என்று மருத்துவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போது ரவிவர்மனின் மொபைல் ஒலி எழுப்பியது, "எக்ஸ்யூஸ் மீ!" என்று விட்டு அவன் வெளியேறவும்..


"ரிஷி! நான் இப்ப ஹாஸ்பிடலில் ரவுண்ட்ஸ் போற டைம், என் கூட வரியா?" என்று கேட்க,


"ஓகே அங்கிள்.." என்றவன் அவருடன் நடந்தான். 


அரைமணி நேரம் கடந்திருக்கும்.. மீண்டும் அவர்கள் கேபினுக்குள் வரவும், ரவிவர்மன் போன் பேசி விட்டு வரவும் சரியாக இருந்தது.


"டாக்டர்…" என்று ரவிவர்மன் ஏதோ கேட்க வரவும், "ஒரு நிமிஷம்!" என்று பார்வையால் அவனைத் தடுத்த மருத்துவர்,


"ரிஷி! இங்க பின்னாடி பார்க் இருக்கு. அங்கே குட்டீஸ் விளையாடிட்டு இருப்பாங்க, நீங்களும் போய் விளையாடுறீங்களா? நானும் உங்க அப்பாவும் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணி இருக்கோம். சோ உங்க அப்பாகிட்ட நான் கொஞ்சம் பேசணும். உங்களுக்கு இங்க போர் அடிக்கும்.." என்று கூற,


"சரி அங்கிள்…" என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, மருத்துவரோ கம்பவுண்டர் ஒருவரை வரச் சொல்லி, அவருடன் அவனை அனுப்பி வைத்தார்.


அவன் செல்லவும், "டாக்டர்! ரிஷிகிட்ட பேசினிங்களா? என்ன சொன்னான்…?" என்று கேட்டான் ரவிவர்மன்.


மருத்துவரோ, "மிஸ்டர் ரவி! குழந்தைங்க இந்த வயசுல என்ன பார்க்கிறாங்களோ, கேட்கிறாங்களோ அதைத்தான் தங்களோட ஆழ்மனசுல அப்படியே பதிய வச்சிருவாங்க. அவன்கிட்ட பேசிப் பார்த்த போது நான் புரிஞ்சிகிட்டது ஒன்னே ஒன்னுதான்! அவனோட பாட்டி மேல உயிரா இருந்து இருக்கான். அவங்களைத்தான் தன் அம்மா ஸ்தானத்தில் வச்சி இருக்கான். அவங்களோட இழப்பை இன்னுமும் அவனால் ஏத்துக்க முடியல. அவங்க இறப்புக்குக் காரணம் அவனோட அம்மாதான்னும், அதும் அவங்களோட குறை தான் முக்கிய காரணம்னு அவன் மனசுல பதிஞ்சு போச்சு. அதோட எதிர்வினைதான் உங்க மகன் இப்படி நடந்துக்குறான்" என்று மருத்துவர் கூறவும்,


"டாக்டர், அவனோட அம்மா மேல கோபம் சரி. ஆனா இப்போ அவனோட கோபம் ஸ்னேகா மேலயும் திரும்பியிருக்கே, அதுக்கு என்ன காரணம்?" என்று ரவிவர்மன் கேட்கவும்,


"அதே குறைதான் காரணம் மிஸ்டர் ரவிவர்மன்… நீங்களே சொன்னீங்க, நேகா-மேகாவை உங்க மகன் கண்டுக்கிறது இல்ல, ஆனா ஸ்னேகாவை பார்த்தா வெறுக்க ஆரம்பிக்கிறான்னு. இதுல இருந்தே உங்களுக்குப் புரியலயா? அவன் வெறுக்கிறது ஸ்னேகாவை இல்ல, அந்தக் குழந்தையோட குறையைத்தான்…" என்று கூற,


"இதுக்கு என்ன சொல்யூசன் டாக்டர்?" என்று வருத்தத்துடன் கேட்டான் ரவிவர்மன்.


"அவன்கிட்ட எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கலாம் ரவிவர்மன். நாம சொல்ற விதத்துல சொன்னா கண்டிப்பா புரிஞ்சிக்குவான். எதுக்கும் ஒரு ரெண்டு மூனு செஷன் இங்க கவுன்சலிங் கூட்டிட்டு வாங்க. நிச்சயமா அவனைச் சரி பண்ணிடலாம்" என்று மருத்துவர் கூறவும்,


அவருக்கு நன்றி கூறி விட்டு மகனை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ரவிவர்மன். மருத்துவர் கூறியது போல் இரண்டு மூன்று முறை ரிஷி அறியாமல், சாதாரணமாக வருவது போல், மகனை கவுன்சிலிங் அழைத்து வந்தான். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்!!


ஆம்! என்ன தான் மருத்துவர் அவனுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைத்து சிகிச்சை அளிக்க முயன்றாலும், அவனோ தான் பிடித்த பிடிவாதத்தை விடவே இல்லை. மருத்துவரே இந்த வயதில் ரிஷியின் மனஉறுதியை நினைத்துச் சற்று வியந்து தான் போனார். பின்பு ரவிவர்மனிடம், 


"ஹாஸ்டல் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் எக்ஸ்டன்ட் பண்ணுங்க ரவி. காலமும், இருக்கும் சூழலும் மாறும் போது மனசும் தானாய் மாற வாய்ப்பு இருக்கு. முக்கியமா கொஞ்ச நாளைக்கு ஸ்னேகாவை அவன் பார்க்காம இருக்கிறது நல்லதுன்னு எனக்குத் தோணுது" என்று அவர் கூறவும்,


"ம்ம்ம்.. புரியுது டாக்டர்…" என்று சோர்ந்த குரலில் கூறி விட்டு மகனுடன் கிளம்பினான் ரவிவர்மன். அன்று அவனை ஹாஸ்டலில் விட்டுவிட்டு வந்த ரவிவர்மன், அதன் பிறகு மாதம் ஒருமுறை மகனைக் காண ஊட்டிக்குச் செல்பவன், ஊருக்குக் கூட அழைத்து வரவே இல்லை. விடுமுறை நாட்களில் அங்கிருந்தே சுற்றுலா பயணம் போல் வேறு எங்காவது மகனை அழைத்துச் செல்வான். அப்படிச் செல்கையில், தன் மனைவியைச் சமாளிக்க முடியாமல் ரவிவர்மன் ரொம்பவே திண்டாடிப் போனான்.


இதோ! இப்போது பள்ளி படிப்பை முடித்து விட்ட மகனை, நான்கு வருடங்களுக்குப் பிறகு, மகன் கொஞ்சமேனும் மாறி இருப்பான் என்ற நம்பிக்கையில் ஊருக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறான் ரவிவர்மன். 


வாகனம் சீராக சென்று கொண்டிருக்க, அதை செலுத்திக் கொண்டு இருந்த ரவிவர்மன்,


"ரிஷி! என்ன குரூப் எடுக்கலாம்னு இருக்கே?" என்று பேச்சை ஆரம்பித்தான். அவனுக்குத் தெரியும் மகனின் முடிவு பற்றி.. ஏற்கனவே பிரின்சிபல் மூலம் விஷயத்தை அறிந்து கொண்டாலும், மகன் வாயால் கேட்க நினைத்தவன், அந்தக் கேள்வியைக் கேட்க,


"அது எதுக்கு உங்களுக்கு?" என்றான் மகன் வெடுக்கென்று.


"ஏன்.. நான் கேட்கக் கூடாதா?" என்று ரவிவர்மன் கேட்க,


"கேட்டு என்ன பண்ணப் போறீங்க? இதுவரை என் இஷ்டப்படி நடக்கல. சோ இனியும் உங்க பேச்சைக் கேட்கவே கூடாதுனு தான், நானே ஆன்லைன்ல அப்ளிகேஷன் போட்டு, லண்டன் யூனிவர்சிட்டில ஸ்காலர்ஷிப்ல அட்மிஷன் வாங்கிட்டேன். கூடவே அங்கே என்னோட செலவைச் சமாளிக்க பார்ட் டைம் ஜாப் கூடப் பார்த்து வச்சிட்டேன்" 'இதுதான் என் முடிவு' என்பது போல் முடிவாகக் கூறினான் ரிஷிவர்மன்.


மகனின் ஒதுக்கத்தையும், இனி தந்தையிடம் எந்த வழியிலும் பணத்திற்கு எதிர்பார்க்க கூடாது என்ற சுயகௌரவத்தையும் அவன் வார்த்தைகளில் புரிந்து கொண்ட ரவிவர்மனோ, "கோடி கோடியாய் நான் சம்பாதிப்பது எதற்காக..? யாருக்காக?" என்று விரக்தியாக நினைத்துக் கொண்டான்..

***

No comments:

Post a Comment