ஸ்வரம் 31

 



ஸ்வரம் 31.


"ஸ்னேகா! கொஞ்சம் இங்க வா!" என்று வீட்டுக்குள் இருந்து மகளை அழைத்தாள் மோகனா.


ரம்யாவுடன் சேர்ந்து சின்ன சின்னச் செடிகளை ஆங்காங்கே நட்டு வைத்துக் கொண்டிருந்த ஸ்னேகா, அன்னையின் அழைப்பில், "ரம்யா! அம்மா கூப்பிடுறாங்க.. நீ இது எல்லாத்துக்கும் தண்ணி ஊத்திட்டு இரு! நான் போய் என்னனு கேட்டுட்டு வரேன்" என்றுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் பன்னிரெண்டு வயது பூஞ்சிட்டு.


அதே நேரம், வாசல் கேட்டைத் தாண்டி வாகனம் ஒன்று வந்து நின்றது. சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த ரம்யா, வந்தது தந்தையின் வாகனம் என்று புரிந்ததும், "அப்பா…" என்று காரை நோக்கி ஓடினாள்.


அதற்குள் காரில் இருந்து இறங்கிய ரவிவர்மன், ஓடி வந்த மகளைக் கையில் அள்ளிக் கொண்டவன்,


"ரம்யா குட்டி! என்ன பண்றிங்க?" என்று மகளிடம் கேட்க,


"அத்தை குட்டி குட்டி செடி வாங்கித் தந்தாங்க அப்பா. அத நானும் ஸ்னேகாவும் நட்டு வச்சிட்டு இருக்கோம்.." என்று கூறிக் கொண்டு இருக்கும் போது, மறுபக்க கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கினான் ரிஷிவர்மன்.


தந்தையைப் போல் நெடுநெடுவென்ற உயரத்தில் நின்றிருந்த தன் அண்ணனைக் கண்டு, "அண்ணா.." என்று பாசத்துடன் அழைத்தாள், அவனது தங்கை.


அவனோ தங்கையை ஒரு நொடி பார்த்தவன், அடுத்த நிமிடம், "நான் என் ரூமுக்குப் போறேன் டாட்.." என்றுவிட்டுத் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விட்டான்.


அண்ணனின் உதாசீனத்தில் ரம்யாவின் முகம் சுருங்கி விட்டது. அதைக் கவனித்த தந்தையோ, "குட்டிமா! உன் அண்ணா டயர்டா இருக்குனு சொன்னான். அதான் ரெஸ்ட் எடுக்கப் போய்ட்டான். அவன் பிரெஷ் ஆகட்டும், அதுக்கு அப்புறம் உன் கூட விளையாடுவான்.." என்று கூறி மகளைச் சமாதானப் படுத்தினான்.


ரம்யா கைக்குழந்தையாக இருக்கும் பொழுதே, அவளிடம் அவன் அவ்வளவாக நெருங்கிப் பேசியதும் இல்லை, அவளுடன் சேர்ந்து விளையாடியதும் இல்லை. காரணம், அவள் எப்பொழுதும் தாயுடன் இருப்பதால்.. அதன் பிறகு ரிஷிவர்மன் ஹாஸ்டலில் சேர்ந்து விட, அண்ணன்-தங்கையின் இடைவெளி அதிகம் ஆனது. வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு வரும் ரிஷிவர்மனோ உம்மென்று இருப்பானே தவிர, தங்கை என்று அவளிடம் ஒரு வார்த்தை பேசியது இல்லை. கடந்த சில வருடங்கள் அவன் இங்கு வருவது நின்று போனாலும், ஓவியா மகனைப் பற்றி ஏதாவது மகளிடம் பேசிக் கொண்டே இருப்பதால், அதைக் கேட்டே வளர்ந்த அந்தச் சிறுமி, தன் அண்ணன் மீது அதிக பாசத்தைக் கொண்டிருந்தாள். அதை ரிஷிவர்மன் தான் அறியவில்லை.


அதற்குள் அன்னை சொன்ன வேலையை முடித்து விட்டு வெளியே வந்த ஸ்னேகா, அங்கே ரவிவர்மன் நிற்பதைக் கண்டு முகம் மலர, "மாமா…" என்று ஓடினாலும், அவளது பார்வை என்னவோ காருக்குள் தான் எட்டிப் பார்த்தது.


அதைக் கவனிக்காமல் மருமகளின் தலையை வாஞ்சையுடன் தடவிய ரவிவர்மன், "ரம்யா! நாம இங்க இருக்குற வரை நீ எப்பவும் ஸ்னேகா கூடத்தான் இருக்கணும். அவளை விட்டு அங்கே இங்க நகர கூடாது! சரியா?" என்று எச்சரிக்கை போல் கூறவும்,


எதற்காக தந்தை இப்படிக் கூறுகிறார் என்று அவளுக்குப் புரியா விட்டாலும், "சரிப்பா…" என்றவள், அவரின் கையில் இருந்து இறங்கி, "அப்பா! நாங்க செடி நட்டு வைக்கப் போறோம்" என்று விட்டு ஸ்னேகாவை அழைத்துக் கொண்டு சென்றாள் ரம்யா.


அன்று இரவு அனைவரும் உணவு அருந்திக் கொண்டிருக்க, ரவிவர்மன் உண்டு முடித்ததும், மகனுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு அவனது அறையை நோக்கிச் சென்றான்.


மோகனாவோ, "நம்ம ரிஷி கொஞ்சம் கூட மாறவே இல்லல்ல. உங்க அண்ணா கூட அவன் ஏன் இப்படி இருக்கான்னு புலம்பாத நாளே இல்ல…" என்று கூற, ஓவியாவிடம் இருந்து பெருமூச்சுதான் வந்தது.


இங்கே சிறுமிகள் இருவரும், "அம்மா! நாங்க  வெளியே விளையாட போறோம்.." என்று கூறி விட்டுச் செல்ல,


"ஸ்னேகா! ரம்யா! ரெண்டு பேரும் பின்னாடி போகாதீங்க! கிணறு திறந்து இருக்கு" என்று எச்சரிக்கை செய்து அனுப்பினாள் ஓவியா.


"அதான் போர் போட்டாச்சுல, இன்னும் அந்தக் கிணறு வேணுமா ஓவி? மொத்தமா மூடிடலாம் தானே?" என்று மோகனா கேட்க,


"நீ சொன்னதைத்தான் ரவியும் சொன்னார். நான் தான் கிணத்தைத் தூர் வாரினா, அந்த தண்ணியை தோட்டத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம், அது அப்படியே இருக்கட்டும் சொன்னேன். தூர் வார வந்த ஆட்கள் கிணத்தைப் பார்த்துட்டு, நாளைக்குக் காலையிலே வந்து வேலையை ஆரம்பிக்கிறோம்ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்க" என்று கூறிய ஓவியா, சாப்பிட்டு முடித்த கையைக் கழுவினாள்.


இங்கு மகனுக்கு உணவை எடுத்து வந்த ரவிவர்மன், "ரிஷி! சாப்பிடு.." என்றான்.


"ம்பச்.. எனக்கு வேண்டாம்.." என்றான், எங்கோ பார்த்துக் கொண்டு.


"ஏன்? என்னாச்சு பசிக்கலையா?" என்று அவன் கேட்க,


மகனோ, "எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் எதுக்காக இவங்களை எல்லாம் இங்க கூட்டிட்டு வந்திங்க?" என்று சிறிதும் கோபம் குறையாமல் கேட்டான்.


"இப்ப அவங்க இங்க வந்ததில உனக்கு என்ன பிரச்சனை?" என்று ரவிவர்மன் கேட்க,


"பிரச்சினையே அவங்க தானே..!" தந்தை என்றும் பாராமல் எரிந்து விழுந்தான் ரிஷி.


"ரிஷி! இப்ப உனக்கு பதினெட்டு வயசு ஆகுது. நல்லது எது கெட்டது எதுன்னு புரியும் வயசு கூட.. ஆனா நீ எதையும் புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா எப்பிடிப்பா?" என்று ஆதங்கத்துடன் கேட்டான் ரவிவர்மன்.


"எனக்கு எதுவும் புரிய வேண்டாம்! காலேஜ் போற வரை நிம்மதியா இருக்கணும்னு தான் என் பிரென்ட் வீட்டுக்குக் கிளம்பினேன். ஆனா கரெக்ட்டா வந்து இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க. சரின்னு இங்க வந்து பார்த்தா.. ம்பச்…" என்று எரிச்சலுடன் கூறினான்.


மகனிடம் மேலும் வாதம் செய்யாமல், "சரி, மொதல்ல சாப்பிட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு! அப்புறம் பேசலாம்" என்றுவிட்டு மகனின் அறையில் இருந்து வெளியேறினான் ரவிவர்மன்.


ரிஷியோ உணவை உண்ணாமல், பல்லைக் கடித்தபடி கட்டிலில் படுத்துக் கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு விட்டத்தை வெறித்தான்.


அதே நேரம், "ரம்யா! நாம மாடிக்குப் போய் விளையாடலாமா?" என்று தன் அத்துவைப் பார்க்கும் ஆவலில் கேட்டாள் ஸ்னேகா.


"சரி, வா ஔிஞ்சு விளையாடுவோம்…" என்று ஸ்னேகாவை ரம்யா அழைக்க..


அவள் அப்படிக் கூறவும், ஸ்னேகாவின் மனதிலோ, சில வருடங்களுக்கு முன் இருட்டு அறைக்குள் மாட்டிக் கொண்டு பயந்து அலறி மயங்கி விழுந்தது நினைவுக்கு வர, "வேணாம்! வேணாம்! ஒளிஞ்சி விளையாட வேணாம்…" என்று அவசரமாக மறுத்தாள்.


"சரி, அப்போ வேற என்ன விளையாடலாம்? நீயே சொல்லு..!" என்று ரம்யா யோசித்துக் கொண்டு இருக்கும் போழுது, ஸ்னேகாவின் முகம் திடீரென சுருங்கியது.


அதைக் கவனித்த ரம்யா, "என்னாச்சுடி? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று புரியாமல் கேட்ட அடுத்த நொடி, "அம்மா! வயிறு வலிக்குது.." என்று வலியில் துடித்தபடி தன் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள் ஸ்னேகா.


அவளது துடிப்பில் பயந்து போன ரம்யா, "அம்மா! அத்தை! ஸ்னேகாக்கு என்னமோ ஆகிப் போச்சி…" என்று பயத்தில் கத்தவும்,


மகளின் காட்டுக் கத்தலில் பயந்து போன ஓவியா, "ஸ்னேகாக்கு என்னாச்சு?" என்று பதட்டம் கொள்ள, அதற்குள் வேகமாக வெளியே சென்ற மோகனா, "ஸ்னேகா.." என்று மகளிடம் ஓடினாள்.


அவளோ தாயைப் பார்த்ததும், "மோஹிமா! வயிறு வலிக்கிது.." என்று அழுதபடி அவரை இடுப்போடு கட்டிக் கொள்ள,


"என்ன திடீர்னு வயிறு வலின்னு சொல்றே? விளையாடுறேனு எங்கேயாவது விழுந்துட்டியா? வயித்துல அடி பட்டுருச்சா?" என்று கேட்க,


"இல்ல அத்தை, நாங்க இன்னும் விளையாடவே ஆரம்பிக்கல" என்று ரம்யா கூறவும், என்ன நினைத்தாளோ? மகளை அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே வந்தாள்.


"மோனா! என்னடி? எதுக்கு ஸ்னேகா அழறா?" என்று ஓவியா கேட்க, அவளிடம்,

 

"ஒரு நிமிஷம் ஓவி! இதோ வந்துடுறேன்.." என்றவள் அறைக்குள் சென்றாள்.


அப்பொழுது அங்கு வந்த ரவிவர்மன், "என்ன ஓவிமா.. தனியா உக்காந்து இருக்கே? மோகனா எங்கே?" என்று கேட்டபடி மனைவியின் அருகே அமர்ந்தான். கணவனுக்குப் பதில் சொல்லும் முன் அறையில் இருந்து வெளியே வந்த மோகனா சந்தோஷத்துடன்,


"ஓவி! ஸ்னேகா பெரிய மனுஷி ஆகிட்டா" என்று கூற,


"என்னடி சொல்ற? ஸ்னேகாவுக்குப் பன்னெண்டு வயசு தாண்டி ஆகுது. அவ குழந்தைடி..!" என்று ஓவியா கூறவும்,


"இப்பல்லாம் பிள்ளைங்க பத்து வயசுலேயே வயசுக்கு வந்துடுறாங்க.." என்ற மோகனா, "நான் அத்தைக்கும், உன் அண்ணனுக்கும் சொல்லிட்டு வரேன்.." என்றவள் மொபைலுடன் வெளியே சென்றாள்.


ஓவியாவோ கணவனிடம், "பாருங்களேன்! நேத்து தான் அவளைக் கையில தூக்கிக் கொஞ்சின மாதிரி இருந்தது. இப்ப பெரிய மனுஷி ஆகிட்டா.." என்று தன் அண்ணன் மகளை நினைத்துப் பூரிப்புடன் கூறிக் கொண்டிருக்கும் நேரம், போன் பேசி முடித்து விட்டு வந்த மோகனா,


"ஓவி! அத்தை இங்கேயே தண்ணி ஊத்திட சொன்னாங்க. உங்க அண்ணா நாளைக்குக் கிளம்பி வரேன் சொன்னார். எங்க அண்ணாக்கு போன் பண்ணேன். அவன் கேரளா வரைக்கும் வேலை விஷயமா போயிருக்கானாம். அண்ணியை அனுப்பி வைக்கிறேன், முடிஞ்ச வரை வர ட்ரை பண்றேன்னு சொன்னான். ஆனாலும் டவுட்டு தான்! அவன் வரலன்னா என்னடி பண்றது?" என்று புரியாமல் கேட்க,


"இப்ப எதுக்குக் கவலைப்படுறே? அதான் மேகா-நேகாக்கு உங்க அண்ணா வந்து எல்லாம் பண்ணினார்ல. இப்ப என் செல்லத்துக்கு நாங்க பண்றோம். மாமா முறைக்கு ரவி இருக்கார். குச்சி கட்ட அவளோட முறை பையன் ரிஷி இருக்கான். வேற என்ன வேணும்?" என்று ஓவியா கூறவும்,


"ஆமால்ல.. இது எனக்குத் தோணவே இல்ல பாரேன்..!" என்றாள் மோகனா.


"ரவி! எல்லா ஏற்பாடும் பண்ணிடலாம் தானே?" என்று ஓவியா கணவனிடம் கேட்க,


"ஜாம் ஜாம்னு பண்ணிடலாம் ஓவிமா.." என்று புன்னகையுடன் கூறினான் ரவிவர்மன்.


இங்கு ஸ்னேகாவுடன் துணைக்கு அமர்ந்திருந்த ரம்யா, "வயசுக்கு வர்றதுன்னா என்னடி?" என்று அவளிடம் சந்தேகம் கேட்டாள்.


அவளோ ரம்யாவின் காதில் ஏதோ கூறி விட்டு, "இப்படித்தான் மேகாக்கா-நேகாக்கா வயசுக்கு வரும் போது வயிறு வலிக்குதுனு சொன்னாங்க. அப்புறம் அவங்களுக்குப் பட்டு சேலை கட்டி, தலை நிறைய பூ வச்சி, கழுத்துல மாலை போட்டு பெரிய்ய சேர்ல உக்கார வச்சாங்கல்ல.. அப்படி எனக்கும் பண்ணுவாங்க போல.." என்று ஸ்னேகா தனக்குத் தெரிந்ததைக் கூற,


"அப்போ நானும் வயசுக்கு வந்தா, எனக்கும் இப்படித்தான் வயிறு வலிக்குமா?" என்று ரம்யா அப்பாவியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போது,


அங்கு வந்த மோகனா, "ரெண்டு பேரும் படுக்காம என்ன பண்றீங்க?" என்று கேட்டவாறு, இருவரும் தூங்க கீழே பாய் விரித்துக் கொடுக்க, ஸ்னேகாவும் ரம்யாவும் உறங்க ஆரம்பித்தார்கள்.


மறுநாள் காலையிலேயே கார்த்திக் வந்து விட, தந்தையைப் பார்த்ததும், "அப்பா…" என்று ஓடி வந்த மகளை அவன் தூக்கிக் கொண்டான். 


"ஸ்னேகா! உன்னை ரூம் உள்ள தானே உக்கார சொன்னேன். வெளியே எதுக்கு வந்தே?" என்று மகளைச் சத்தம் போட்டாள் மோகனா.


கார்த்திக்கோ, "மோகனா! எதுக்கு இப்ப பிள்ளையை அதட்டுறே? அவ குழந்தைடி..!" என்று மனைவியை அதட்டியவன், மகளின் கன்னத்தில் முத்தம் வைத்து, அவளது தலையைப் பாசமாகத் தடவி கொடுத்தவன், "நீ போய் விளையாடு குட்டிமா.." என்று மென்மையாகக் கூறவும்,


"சரிப்பா.." என்றவள் அங்கிருந்து செல்ல, அதன் பிறகு வேலைகள் மடமடவென நடக்க ஆரம்பித்தது.


மறுநாள் ரவிவர்மனின் வீட்டின் முன்புறம் பந்தல்கள் போடப்பட்டிருக்க, வாசலில் வாழைமரம் கட்டிக் கொண்டிருந்தார்கள். 


"ஓவி! ஸ்னேகாக்குத் தண்ணி தானே ஊத்த போறோம்? அதுக்கு எதுக்குடி இவ்வளவு செலவு பண்றே?" என்று மோகனா கேட்க,


"போடி..! நாங்க என் மருமகளுக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்ய போறோம்? எல்லாம் க்ராண்டா தான் செய்யணும்னு ரவி சொல்லிட்டார். சோ கம்மனுன்னு இரு..!" என்றாள் ஓவியா.


அங்கு நடப்பதையும், அவர்களின் பேச்சுகள் அத்தனையையும் மாடி பால்கனியில் இருந்து ஒருவித கோபம் கலந்த எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.


அன்று இரவு, மறுநாளுக்குத் தேவையானது அனைத்தையும் ஓவியா-மோகனா இருவரும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, ரவிவர்மனும் கார்த்திக்கும் வாசலில் பந்தலுக்கு கீழ் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 


ரம்யா அன்று விரைவாகவே தூங்கி விட, ஸ்னேகாவோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் சலிப்புடன் எழுந்து அமர்ந்தவள், தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்து அங்கிருந்த டேபிளில் பார்க்க, அதுவோ வெறுமையாக இருந்தது. "ம்பச்.." என்றபடி எழுந்து அறையில் இருந்து வெளியே வந்தாள். 


வீடே அமைதியாக இருந்தது. "மோஹிமா.." என்று தன் அன்னையை அழைக்கக் குரல் கொடுக்கப் போகும் நேரம், மாடியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த ரிஷிவர்மனைப் பார்த்து விட்டாள் ஸ்னேகா.


அவனைப் பார்த்தும் முகம் மலர, "என்னோட அத்து.." என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். எத்தனை வருடங்கள் ஆகிற்று அவளது அத்துவை பார்த்து..! அவன் இங்கு வந்த அன்று அவனைப் பார்க்க அவள் மனம் ஏங்கியது. ஆனால் முடியவில்லை! காரணம், அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. அன்றே அவள் வயதுக்கு வந்து விடவும், அறையை விட்டு வெளியே செல்ல அன்னை அனுமதிக்கவில்லை. இதோ! இன்று அவனைப் பார்த்ததும் மனம் பூரிக்க, 


"என் அத்து எவ்ளோ ஹைட்டா இருக்காங்க..!" என வியந்தபடி அவன் சென்ற திசையை நோக்கித் தானும் நடந்தாள் ஸ்னேகா, சற்று நேரத்தில் நடக்கப் போகும் விபரீதம் அறியாமல்…!


ரிஷிவர்மனோ, தன் பின்னே வந்து கொண்டிருந்த ஸ்னேகாவை கவனிக்காமல் தனது மொபைலை நோண்டியபடி வீட்டின் பின்பக்கம் சென்றான். காவலாளியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த ரவியும், கார்த்திக்கும் பின்னாடி சென்ற தங்களது பிள்ளைகளைக் கவனிக்கவில்லை.


தனது அத்துவைப் பின்தொடர்ந்து சென்ற ஸ்னேகாவோ, "அத்து…" என்றபடி அவனது கையைப் பிடிக்க, தனது கையை ஒரு மென்கரம் பிடிக்கவும், யார் என்று வேகமாகத் திரும்பிப் பார்த்தான் ரிஷிவர்மன். 


முன்பக்கம் இருந்து வந்த லைட் வெளிச்சத்தில், அவன் அருகே குட்டிப் பெண்ணாக பாவாடை சட்டையில் நின்றிருந்த ஸ்னேகாவை அவன் கேள்வியாகப் பார்க்க,


"அத்து! நான்தான் ஸ்னேகா, உங்க பாப்பா! நீங்க எப்படி இருக்கீங்க அத்து?" என்று கள்ளமில்லா புன்னகையுடன் கேட்டாள் சிறுமி.


அவள் யாரென்று புரிந்ததிலும், அவளது தொடுகையிலும், அவளது "அத்து" என்ற அழைப்பிலும் கோபம் தலைக்கேற, "என் கையை விடு..!" என்றான் அதட்டலாக.


"ம்ம்ம்.. மாட்டேன் அத்து.. நீங்க எதுக்கு என்னை இத்தனை வருசமா பார்க்க வரல? உங்க பேச்சு கா…" என்று பொய்யாகக் கோபம் கொண்டாள்  குழந்தை, அவனது கோபத்தை அறியாமல்!


அவனோ அவளை உறுத்து விழிக்க, அவன் பார்வையில் அவள் காதில் மாட்டி இருந்த கருவி தென்பட்ட அடுத்த நொடி,


"என்னை அத்துனு சொல்லாதே! எனக்குப் பிடிக்கலை" என்று அவளிடம் சீறினான்.


அவனது அந்தக் குரலில் அச்சிறுமிக்குச் சிறு பயம் தோன்றினாலும், 'என் அத்து..' என்று மனதில் நினைத்துக் கொண்டவளுக்குப் பயம் பறந்தோட, "மாட்டேன் அத்து! நான் உங்க பாப்பா.. உங்க கூடத்தான் இருப்பேன். நீங்க தானே சொன்னிங்க, நான் கோபப்பட்டா, திட்டினா என்கிட்ட பேசாம இருக்கக் கூடாதுனு.. அதான் பேச வந்தேன்" என்று ஸ்னேகா கூறினாள்.


அவளது பேச்சில் மேலும் கோபம் கொண்ட ரிஷிவர்மன் பொறுமையிழந்து, "அத்துன்னு கூப்பிடாதேன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்… ஆனா நீ திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்க.." என்று கத்தியவன்,  அவள் பிடித்து இருந்த தனது கையை வேகமாக உதறினான்.  


அவனது இச்செயலை எதிர்பாராத ஸ்னேகா தடுமாறி இரண்டெட்டு பின்னால் சென்றவள், "அத்து!" என்ற அலறலுடன் அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து இருந்தாள். 


ஆம்! அவர்கள் இருவரும் நின்றிருந்தது, தூர் வாருவதற்காகத் திறந்து வைத்திருந்த கிணற்றின் அருகில் தான்.. ரிஷி அவளை வேகமாக உதறி விடவும், மெல்லிய உடல் கொண்ட ஸ்னேகா, கிணற்றின் திண்டில் தட்டி உள்ளே விழுந்து இருந்தாள்.


இதைச் சற்றும் எதிர்பாராத ரிஷிவர்மனோ நிஜமாகவே அதிர்ந்து தான் போனான். அவன் அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான்! அடுத்த நொடி அவளை அவன் காப்பாற்ற நினைக்கும் நேரம், ஸ்னேகாவின் அலறல் சத்தம் கேட்டு, முன்பக்கம் பேசிக் கொண்டு இருந்த ரவிவர்மன், கார்த்திக் மற்றும் காவலாளி மூவரும் சத்தம் வந்த திசையில் ஓடி வரவும், ரிஷியோ சட்டென்று அங்கிருந்த மரத்திற்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான்.


"இங்க இருந்து தானே சத்தம் வந்துச்சு? யாரையும் காணோம்! ஒருவேளை பிரம்மையோ?" என்று கார்த்திக் எண்ணிக் கொண்டிருக்க, 


அதற்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி கிணற்றின் அருகே வந்த காவலாளி, உள்ளிருந்து கேட்ட முனகல் சத்தத்தில், "அய்யா, கிணத்துக்குள்ள தான் யாரோ விழுந்துட்டாங்க போல.." என்றவன், நொடியும் தாமதிக்காமல் சட்டென்று கிணற்றிற்குள் குதித்து விட்டான்.


காவலாளியின் செயலில் ரவிவர்மனும், கார்த்திக்கும் பதட்டத்துடன் கிணற்றின் அருகே விரைய, சற்று நேரத்தில் ஈரம் சொட்ட சொட்ட, மயங்கிய நிலையில் ஸ்னேகாவை அவன் மேலே தூக்கிக் கொண்டு வந்தான்.


அவன் கையில் தன் மகளைப் பார்த்ததும் அதிர்ந்த கார்த்திக், தாவி தன் மகளை வாங்கிக் கொண்டவன், "ஸ்னேகா! அம்மாடி.." என்று பதட்டத்துடன் அவளது கன்னம் தட்டினான். அவளோ மயக்கம் தெளிந்து, "அப்பா.." என முனகவும், அப்பொழுதுதான் கார்த்திக்கிற்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. 


கார்த்திக்கோ மகளைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கிச் செல்ல, காவலாளியோ அங்கே நின்றிருந்த ரவிவர்மனிடம், "அய்யா, இன்னைக்கு ஆளுங்க தூர் வார வருவாங்கன்னு திறந்து வச்சேன். இப்படி ஆகும்ன்னு நினைக்கல. என்னை மன்னிச்சுருங்கய்யா!" என்று தன் முதலாளியிடம் மன்னிப்பை வேண்டியவன், கிணத்தை மூடி விட்டே அங்கிருந்து சென்றான்.


ஆனால் ரவிவர்மனோ, கார்த்திக் பின்னே செல்லாமல் அங்கு இருந்த ஒரு மரத்தை நோக்கி நடந்தவன், "ரிஷி.." என்று மகனை அழைத்தான்.


தந்தை தன்னைக் கண்டுகொண்டதில் ரிஷி சற்று அதிர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக அவர் முன்னே வந்து நின்றவன், "எஸ் டாட்.." என்றான்.


மகனை அழுத்தமாக பார்த்த ரவிவர்மன், "நீ இங்க என்ன பண்றே?" என்று கேட்டான்.


"இது என்னோட வீடு! நான் எங்கேயும் இருப்பேன்.." என்று பதில் அளிக்க,


"சரி, ஸ்னேகா கிணத்துக்குள்ள எப்படி விழுந்தா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்க, 


"எப்படின்னு அவகிட்டதான் நீங்க கேட்கணும்" என்று தன் தோளைக் குலுக்கினாள் மகன்.


அவனது செயலில் கோபம் கொண்ட ரவிவர்மன், "பொய் சொல்லாத ரிஷி! நீ தான் அவளைத் தள்ளி விட்டுருக்கே?" என்று அழுத்தத்துடன் கேட்டான் ரவிவர்மன்.


அவனின் மகனோ, தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று தந்தையை பார்த்தவன், "எஸ் டாட்! கரெக்ட்டா சொல்லிட்டிங்களே? நான்தான் அவளை.." என்று கூறி முடிக்கவில்லை.. அவனின் கன்னத்தில் இடியாய் இறங்கியது ரவிவர்மனின் வலது கரம். 


தன்னை அடித்த தந்தையை ரிஷிவர்மன் அதிர்ந்து பார்க்க, ரவிவர்மனோ அடங்காத கோபத்துடன், "நீ பண்ணினது தப்புன்னு உனக்குக் கொஞ்சம் கூடப் புரியவே இல்லையா ரிஷி? அன்னைக்கும் அப்படித்தான்.. ஸ்னேகாவை ரூம்குள்ள வச்சி பூட்டின.. இன்னைக்கும் கிணத்துக்குள்ள தள்ளி விட்டுருக்க.. மனுஷனாடா நீ? இப்ப கொடுத்த அடியை முதல் தடவையே உனக்குக் கொடுத்திருந்தா, இவ்ளோ தூரம் வந்திருக்காது. அப்படி என்னடா கோபம் உனக்கு?


அத்து அத்துன்னு உன் மேல பாசம் வச்சிருக்க அந்தக் குழந்தையை, இப்படிக் கொல்ற அளவுக்குத் துணிஞ்சிருக்கன்னா.. எவ்ளோ தைரியம் இருக்கணும்?" என்று மகனிடம் கோபத்தில் கொந்தளிக்க, அவனது மகனோ, தந்தை அடித்ததை ஜீரணிக்க முடியாமல், அதே சமயம் தந்தையின் பேச்சில் கல்லென இறுகி போய் நின்றான்.


அவன் மனமோ, "போயும் போயும் ஒரு டப்பா காதுக்காரிக்காக என்னை அடிச்சிட்டீங்கல்ல?!" என்று ஸ்னேகாவின் மேல் மேலும் கோபத்தை வளர்த்துக் கொண்டான் ரிஷிவர்மன்.


மகளுடன் வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக், "மோகனா.." என்று வேகமாக குரல் கொடுக்க,


கணவனின் சத்தத்தில், "என்னங்க.. என்னாச்சு? எதுக்குக் கூப்பிட்டிங்க?" என்றவள், மகளின் கோலத்தைக் கண்டு, "நீ என்னடி இப்படித் தொப்பலா நனைஞ்சிருக்க?" என்று கேட்க, 


மனைவியின் பேச்சில் கோபம் கொண்ட கார்த்திக், "பிள்ளையை பத்திரமா பார்த்துக்கறதை விட உனக்கு வேற என்ன வேலை?" என்று மனைவியிடம் எரிந்து விழுந்தான். 


"கார்த்திக்.." என்று ரவிவர்மன் அவனது தோளில் அழுத்தம் கொடுக்க,


அண்ணனின் சத்தம் கேட்டு வெளியே வந்த ஓவியா, "அண்ணா! எதுக்கு இப்படிக் கத்திட்டு இருக்கீங்க?" என்று கேட்க, அவன் தங்கையிடம் விஷயத்தைக் கூறவும், இருவருமே அதிர்ந்து தான் போனார்கள். 


அடுத்த நொடி பதற்றத்துடன் மகளைக் கணவனிடம் இருந்து பறித்து தன்னுடன் அணைத்துக் கொண்ட மோகனா, "தூங்கிட்டுத்தான் இருந்தா.. அதான் நாங்க மத்த வேலையைப் பார்த்துட்டு இருந்தோம். பின்னாடி தோட்டத்துக்கு எதுக்குப் போனான்னு தெரியலயே?" என்றவள், மகளுக்கு அடி ஏதும் பட்டிருக்கிறதா என்று ஆராய, குழந்தையோ, "மோஹிமா.." என்று முனகினாள்.


கார்த்திக்கோ, "என் பொண்ணு பெரிய கண்டத்தில இருந்து தப்பிச்சு இருக்கா. அவளைக் கவனமா பார்த்துக்க மோகனா. குளிர்ல நடுங்குறா பாரு! முதல்ல அவளுக்கு டிரஸ்ஸை மாத்து!" என்று கூறி விட்டு வெளியே செல்ல, மோகனாவோ மகளுடன் அறைக்குச் சென்றாள்.


ஓவியாவும் தோழியின் பின்னே செல்ல போக, "ஓவிமா! ஒரு நிமிஷம்.." என்று மனைவியை நிறுத்தி, அவளைத் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றான் ரவிவர்மன்.


"என்னங்க.. என்ன விஷயம்?" என்று கேட்டவள், "இந்த நேரத்தில ஸ்னேகா எதுக்குப் பின்பக்கம் போயிருப்பா?" என்று கணவனிடம் சந்தேகம் கேட்க,


"தெரியல ஓவிமா.. இப்ப அவ பயந்து இருக்கா. தூங்கி எழுந்ததும் கேட்கலாம்.." என்று அந்தப் பேச்சை அத்தோடு முடித்து விட்டான் ரவிவர்மன்.


இங்கு மகளுக்கு உடை மாற்றி, அவளைத் தன் மடியில் படுக்க வைத்த மோகனா, "ஏன்டா இந்த நேரம் பின்பக்கம் போன?" என்று மெதுவாக மகளிடம் விசாரிக்க,


எங்கே நடந்ததைச் சொன்னால், தன் அத்துவை எல்லாரும் திட்டி விடுவார்களோ என நினைத்த ஸ்னேகாவோ, "நானும், ரம்யாவும் நட்டு வச்ச செடிக்குத் தண்ணி ஊத்த மறந்துட்டோம். அதான் தண்ணி ஊத்தலாம்ன்னு போனேன் மோஹிமா. கிணறு இருக்கிறதை மறந்து கால் தட்டி விழுந்துட்டேன்" என்று பொய்யுரைத்தாலும், அவளது உடல் பயத்தில் நடுங்க, தாயை இறுக கட்டிக் கொண்டாள்.


மோகனாவும், 'இனி இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் தனியே செல்லக் கூடாது!' என அறிவுரை கூறியவள், தானும் மகளை அணைத்துக் கொண்டு படுத்து விட்டாள்.


மறுநாள் மாலை ரவிவர்மனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஊரில் உள்ள உறவினர்களுக்கு அவனே நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்ததால், ரவிவர்மனுக்கு மதிப்பளித்து எல்லோரும் ஸ்னேகாவின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தார்கள்.


அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் பட்டு பாவாடை, தாவணி உடுத்தி, தலை நிறய மல்லிகை பூச்சூடி, பொன் நகைகள் மின்ன, குட்டி தேவதை என ஸ்னேகா அமர்ந்திருக்க, அவளுக்குத் துணையாக மற்றொரு இருக்கையில் அமர்ந்து இருந்தாள் ரம்யா.


காலையில் ஸ்னேகா எழுந்ததும், கார்த்திக்கும் தன் பங்கிற்கு ஸ்னேகாவிடம் விசாரிக்க, அவளோ தாயிடம் கூறியதையே திரும்பக் கூறவும், எதற்கும் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று கார்த்திக் கூறினான். ரவிவர்மனோ மருத்துவரை வீட்டுக்கே வரவழைத்து இருந்தான். அவரும் வந்து அவளைப் பரிசோதித்து விட்டு, "உள்காயம் ஏதும் இல்ல, பயப்பட வேண்டாம்!" என்று சொல்லி விட்டுச் சென்ற பிறகே நிம்மதியானான் கார்த்திக்.


அதன்பிறகு வேலைகள் மடமடவென்று நடக்க ஆரம்பித்தது. மாலையில் ஓவியா மருமகளுக்கு வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்ற, அவள் கூறியது போல் ரவிவர்மன் வாங்கி வந்திருந்த பட்டு பாவாடை, தாவணியை மோகனாவின் உதவியோடு உடுத்தி விட்டவள், கூடவே அவன் வாங்கி இருந்த நகைகளையும் பூட்டி விட்டாள். பின்பு பூச்சூடி அவளை வெளியே அழைத்து வந்து மனையில் அமர வைத்தாள் ஓவியா.


அங்கே வந்திருந்த பெண்மணி ஒருவர், "ரவி! நீ தானே மாமங்காரன்.. உன் மருமகளுக்கு மாலை போட்டு, சந்தனம் குங்குமம் வச்சி, புள்ளைய ஆசீர்வாதம் பண்ணுயா" என்று கூற, அதன்படி செய்து முடித்த ரவிவர்மன், ஸ்னேகாவின் நெற்றியில் முத்தம் பதித்து, அவளின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ணி விட்டு நகரவும், அடுத்துப் பெற்றோர்கள் தங்கள் மகளை ஆசீர்வாதம் செய்தனர்.


அப்பொழுது அங்கிருந்த வயதான ஒருவர், "ரவி! எங்கே உன் புள்ள? அவன் தானே முறைமாமன்? அவன் தான் குச்சு கட்டணும்" என்று கூற, அங்கே சில நொடி அமைதி நிலவியது. 


"என்னப்பா.. அமைதியா நின்னுட்டு இருக்கே? நல்ல நேரம் முடியறதுக்குள்ள புள்ளைய குச்சுக்குள்ள உக்கார வைக்கணும்.." என்று அவர் அவசரப்படுத்தவும்,


கார்த்திக்கோ, "ரிஷி மாடியிலதானே இருக்கான்? நான் போய் கூட்டிட்டு வரேன்.." என்று நகர போக,


"ஒரு நிமிஷம் கார்த்திக்! நானே போய் கூட்டிட்டு வரேன்.." என்று கூறிக் கொண்டிருக்கும் போது ரிஷிவர்மனே கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். 


"இந்தா! அவனே வந்துட்டான்.." என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் குரல் கொடுக்க, எல்லோரின் பார்வையும் அவனைத் தீண்டியது. ஓவியா கூட ஒரு ஆர்வத்தில் நின்றிருந்தாள்.


***


No comments:

Post a Comment