ஸ்வரம் 32

 


அத்தியாயம் 32


அனைவரையும் அழுத்தமாக பார்த்தபடி வந்த ரிஷியின் விழிகள் சுற்றி சுழன்று ஸ்னேகாவின் மீது வந்து நிலைத்து நின்றது. 


அந்தச் சிறுமியும் அப்பொழுது அவனைத்தான் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்றைய நிகழ்வு மீண்டும் அவள் மனதில் வலம் வர, அவள் உடலோ பயத்தில் தூக்கிப் போட்டது.


கீழே வந்த மகனை ரவிவர்மன் யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றான்.


அந்த மூத்த பெண்மணியோ, "அப்படியே அப்பனாட்டம் ஜம்முன்னு இருக்கே ராசா! வா, வந்து உன் மொறபொண்ணுக்கு சந்தனம் பூசி, குங்குமம் வை.." என்று கூற, அவனோ அசையாமல் அலட்சியமாக அப்படியே நின்றிருந்தான்.


"என்ன ராசா அமைதியா நிக்கிறே? எல்லாம் நீ கட்டிக்கப் போற பொண்ணு தான்..! நீ இங்க வந்த நேரம் தான் அவளும் சமைஞ்சு இருக்கா. நீதானே முறைமாமங்கிற முறையில குச்சி கட்டணும்.." என்று அவர் மீண்டும் கூற, அங்கே சிரிப்பலை எழுந்தது.


இந்த மாதிரி பேச்சுக்கள் எல்லாம் கிராமத்தில் சகஜம் என்பதால், அவரது பேச்சில் அங்கிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, ரிஷிக்கோ அவர்களின் பேச்சு சுத்தமாக பிடிக்கவே இல்லை. இப்பொழுது அவன் கீழே இறங்கி வந்தது கூட, வெளியே சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான். ஆனால் பிடித்து நிறுத்தி இப்படிச் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. மேலும் அவர்களின் இந்தப் பேச்சு வேறு அவனது கோபத்தை இரட்டிப்பாக்க, இறுக்கத்துடன் மீண்டும் படியேற போனான். சட்டென்று மகனின் கையைப் பிடித்துத் தடுத்த ரவிவர்மன்,


"எங்கே போறே ரிஷி? பாட்டி சொல்றாங்கள்ல, அத செஞ்சிட்டு அதுக்கு அப்புறம் மேல போ!" என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி அழுத்தமாக கூற, தந்தையை நன்றாக முறைத்தவன், பின்பு என்ன நினைத்தானோ? அடிமேல் அடி எடுத்து வைத்து ஸ்னேகாவை நெருங்கினான். 


அவனையே விழி விரித்துப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்னேகா, அவன் தன்னை நோக்கி வரவும், சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். 


"அடியாத்தி! புள்ளைக்கு இப்பவே வெட்கத்தைப் பாருங்களேன்…" என்று அதற்கும் சிரித்து வைத்தார்கள் கிராமவாசிகள்.


மகளின் அருகில் நின்றிருந்த மோகனாவும் புன்னகையுடன் ஸ்னேகாவின் நாடி தொட்டு முகத்தை நிமிர்த்த, கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை எடுத்து மாமன் மகளின் இரு கன்னத்தில் தடவி விட்ட ரிஷிவர்மன், குங்குமத்தையும் எடுத்து அவள் நெற்றியில் இட்டு விட்டான்.


"அம்மாடி மோகனா! உன் பொண்ணை அதோ அங்க கிழக்கு பார்த்து உக்கார் வை..!" என்று அவர் ஹாலில் ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டி கூறவும்,


மகளை எழுப்பி அவர் கூறியது போல் கீழே புது பாய் விரித்து அதில் அமர வைத்த மோகனா, அவள் அருகே பெரிய உலக்கை ஒன்றை வைத்தாள்.


அதன்பிறகு வெளியில் இருந்து தென்னை ஓலையில் பின்னிய இரண்டு ஓலைதட்டியை இருவர் தூக்கி வர, அதை ரிஷியின் கையில் கொடுத்தவர்கள், எப்படிக் கட்ட வேண்டும் என்றும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.


அவனும் தட்டியை எடுத்துக் கொண்டு ஸ்னேகா அமர்ந்திருந்த பக்கம் சென்றவன், அவளை வேண்டா வெறுப்பாகப் பார்த்துக் கொண்டே ஓலை தட்டிகள் இரண்டையும் சேர்த்து நிற்க வைத்து கட்ட ஆரம்பித்தான். 


ஸ்னேகாவுக்கோ, அவனைப் பார்த்ததும் மனதில் ஒருவித பயம் எழுந்ததால், மீண்டும் அவனை நிமிர்ந்து பார்க்கவே அஞ்சினாள்.  


"நேத்தே செத்திருப்பன்னு நினைச்சேனே! ஆனா இன்னும் சாகாம உயிரோடதான் இருக்கியா?" என்று திடீரென கேட்ட ரிஷியின் குரலில் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஸ்னேகா.


அவனது வார்த்தையில் நேற்றைய நிகழ்வு அவளுக்கு நினைவுக்கு வர, அந்தப் பூஞ்சிட்டோ நடுங்கித்தான் போனது.


அதை ஒருவித குரூரத்துடன் ரசித்துப் பார்த்த ரிஷிவர்மன், அவளது பயத்தை மேலும் அதிகரிக்கும் எண்ணத்துடன், "நேத்து மட்டும் இல்ல, ஏற்கெனவே ரெண்டு தடவையும் தப்பிச்சிட்ட.." என்று கூறவும்,


அவளோ, என்ன சொல்கிறான் எனப் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.


"என்ன புரியலையா? நாலு வருஷம் முன்ன வலிப்பு வந்து தண்டவாளத்துல விழுந்து ட்ரெயின்ல அடி பட இருந்தியே.. ஞாபகம் இருக்கா? அப்போ நானும் அங்கே தான் இருந்தேன். அந்த டிரைன் உன்னைத் தூக்கி எறியணும்ன்னு ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தேன். ம்ப்ச்! ஜஸ்ட் மிஸ்ஸு! அதுக்குள்ள எங்க அப்பா வந்து உன்னைக் காப்பாத்திட்டார்.." என்று அவன் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கூற, அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்து அவனைப் பார்த்தாள் ஸ்னேகா.


"தென் அடுத்த நாளே ஸ்டோர் ரூம்குள்ள இருட்டுல மயங்கி கிடந்தியே, ஞாபகம் இருக்கா?" என்று கேட்டான் ரிஷிவர்மன். 


அந்த நாள் அவளுக்கு மறக்குமா? ஏனெனில் இன்றைய பொழுதிலும் இருட்டைக் கண்டால் பயப்படும் நிகழ்வாயிற்றே!


"அன்னைக்குக் கதவு தானா பூட்டிருச்சுன்னா நினைச்ச? உன்னை உள்ள வச்சி பூட்டினதே நான் தான்!" என அவளைப் பயப்பட வைக்க வேண்டும் என்றே பொய் சொன்னான் ரிஷிவர்மன். 


இவன் இங்கு அவளைப் பயமுறுத்திக் கொண்டிருக்க, "என்ன ராசா.. தட்டியைக் கட்டி முடிக்கச் சொன்னா, உன் வருங்கால பொண்டாட்டிகிட்ட ரகசியம் பேசிகிட்டு இருக்க?" என்ற கனத்த ஆண் குரல் பின்னாடி கேலியாக ஒலிக்க, அதைத் தொடர்ந்து அனைவரின் சிரிப்பு சத்தமும் கேட்டது.


'என்னது பொண்டாட்டியா?' அந்த வார்த்தையில் மேலும் பல்லைக் கடித்த ரிஷிவர்மன், "ஏய்! இவங்க சொல்ற மாதிரி என்னைக் கல்யாணம் பண்ணி பொண்டாட்டி ஆகணும்ன்னு ஆசையா இருக்கா என்ன?" என்று அவளிடம் அடிக்குரலில் சீறினான். அந்தச் சிறுமியோ, அவனது முகபாவனையில் "இல்லை" என்று வேகமாகத் தலையாட்டினாள்.


"அப்படி ஒரு எண்ணம் இருந்தா இப்பவே அதை அழிச்சிடு. நீ எனக்கு பொண்டாட்டியா? நெவர்! எனக்கு உன்னைப் பிடிக்கவே இல்ல. நீயும், உன் மூஞ்சியும், அதோட உன் செவிட்டு காதும்..." என்று முகத்தை அஷ்டகோணலாக்கியவன், பின்பு கடுமையான குரலில்,


"இது தான் நான் உன்னைக் கடைசியா பார்க்கிறதா இருக்கணும். இனி மேல் தப்பித் தவறி கூட என் கண்ணு முன்னாடி வந்துராதே! அப்படி மட்டும் வந்தே, அது தான் உனக்குக் கடைசி நாள்! கிணத்துக்குள்ள தள்ளி விட்டவனுக்கு, நம்ம ஊர் மலை உச்சிக்குக் கூட்டிட்டுப் போய், உன்னைத் தள்ளி விடுறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது. என்னை மறுபடி மறுபடி கொலைகாரனா ஆக்காத! என் பேரைக் கேட்டாலே நான் சொன்ன சம்பவங்கள்தான் உனக்கு ஞாபகம் வரணும். என் முன்னே வரவே நீ பயப்படணும்டி!" என்று அவளைத் தன் பேச்சிலேயே நடுங்க வைத்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.


ரிஷிவர்மன் அவளைப் பார்த்தவாறு முட்டி போட்டு அமர்ந்து இருந்ததாலும். தென்னை ஓலை ஸ்னேகாவை மறைத்து இருந்ததாலும், அவன் அவளிடம் அடிக்குரலில் கோபமாகப் பேசுவதும், அதற்கு அவள் அதிர்ந்து பயத்தில் நடுங்குவதும் என இங்கு நடந்து கொண்டிருந்த எதுவும் மற்றவர் கண்களுக்குத் தெரியவே இல்லை.


சிறுமி என்றும் பாராமல், அவளை நன்றாக மிரட்டி விட்டு, ஓலை கட்டும் வேலையையும் முடித்த ரிஷிவர்மன், அடுத்த நிமிடம் அங்கு நிற்காமல் மாடிக்குச் சென்று விட்டான். 


சடங்குகள் முடியவும் உறவினர்கள் சாப்பிட செல்ல, மகளின் அருகே வந்த மோகனா, ஸ்னேகா ஒருவித பயத்துடன் அமர்ந்து இருந்ததைக் கவனித்து, "ஸ்னேகா! என்னடா?" என்று மகளின் நாடி தொட்டுக் கேட்டாள்.


தாயின் குரலில் சட்டென்று சுயநினைவுக்கு வந்தவளோ, ரிஷிவர்மன் கூறிய அனைத்தையும் நினைவு கூர்ந்தவளாக, "மோஹிமா! எனக்குப் பயமா இருக்கு" என்று குரல் நடுங்க தாயை இடுப்போடு கட்டிக் கொண்டாள். அவள் முதுகோ அழுகையில் குலுங்கியது.


சடங்கு சம்பிரதாயங்களைக் கண்டு பயந்து அழுகிறாளோ என்று எண்ணிக் கொண்ட மோகனா, "குட்டிமா! இப்ப நீங்க பெரிய பொண்ணு ஆகிட்டீங்க, இப்படிப் பயப்பட கூடாது!" என்று மகளைச் சமாதானம் செய்தவள், மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்.


அன்று இரவு விருந்தினர்கள் செல்லவும், மற்ற வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டு, அனைத்தையும் ஒதுக்கி வைத்த மோகனா, மகளுக்குத் துணையாக ரம்யாவைப் படுக்க வைத்தவள், அதே ஹாலில் சற்றுத் தள்ளி தானும் படுத்துக் கொண்டாள்.


வீடே அமைதியாக இருக்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஸ்னேகாவின் காதிலோ, பேரிரைச்சலுடன் ரயில் ஒன்று வேகமாக வந்து அவளைத் தூக்கி வீசுவது போலக் காட்சிகள் தோன்றவும், பயத்தில் சட்டென கண்களைத் திறந்து கொண்டு, "அம்மா…" என்று அலறி அடித்து வேகமாக எழுந்து அமர்ந்தாள்.


அவளது அந்த அலறல் சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவரும் அவளிடம் வந்து விட்டனர். மோகனாவோ, "ஸ்னேகா! என்னாச்சு?" என்று மகளிடம் கேட்க,


அவளோ, "மோஹிமா! ரெயில் மோஹிமா.. வேகமாக வருது.. என் மேல என் மேலே.." என்றவள், அதற்கு மேல் பேச முடியாமல் தாயை இறுக கட்டிக் கொண்டாள்.


"ஏதோ கனவு கண்டு இருப்பா போல, குடிக்க தண்ணி கொடுத்து தட்டி கொடு மோகனா!" என்று கார்த்திக் கூற, ஓவியாவும் அதையே கூறினாள்.


ஆனால் ரவிவர்மன் மட்டும் யோசனையுடன் ஸ்னேகாவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.


ஒருவாரம் கழித்து அனைவரும் சென்னைக்கு கிளம்ப, ரிஷியோ தனது மேற்படிப்பை தொடர லண்டன் கிளம்பி இருந்தான். அதில் ஓவியாவுக்கு வருத்தம் என்றாலும், மகனின் எதிர்காலம் முக்கியம் என்பதால், இந்த தடவை மறுப்பு ஏதும் சொல்லாமல் அவனை அனுப்ப சம்மதித்து இருந்தாள்.


அவன் என்னவோ நிம்மதியாகச் சென்று விட்டான். ஆனால் ஸ்னேகாவின் மனதில் அவன் விதைத்த வார்த்தைகளின் விளைவு, தினம் தினம் அவளை வதைத்துக் கொண்டிருந்தது.


நடுஇரவில் எழுந்து பயத்தில் ஏதேதோ சொல்லி அழ ஆரம்பித்து இருந்தாள். ரெயிலின் சத்தத்தையும், இருட்டையும் கண்டால் பயந்து அலறினாள். அவளைப் பார்த்துக் கொள்வதே அவளது குடும்பத்தாருக்கு மிக முக்கிய வேலையாக இருந்தது. அன்று கிணத்தில் விழுந்ததால், அதை நினைத்துப் பயந்து அழுகிறாள் என்று எண்ணினார்களே தவிர, அதற்குக் காரணம் ரிஷிவர்மன் என்று யாரும் ஆராயவே இல்லை.


இப்படியே இரண்டு வருடங்கள் கடந்து இருந்தது. ஸ்னேகா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஒருமுறை அவளை அவளது பள்ளியில் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். முதலில் இந்தச் சுற்றுலாவுக்கு மகளை அனுப்ப மறுத்த கார்த்திக், பின்பு மகளின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தில் ஒத்துக் கொண்டான்.


பள்ளியில் ஒருவாரம் சுற்றுலா என்று ஏற்பாடு செய்திருக்க, ஸ்னேகாவை மறுநாளே கார்த்திக் சென்று அழைத்து வரும்படி ஆகி இருந்தது. 


வீட்டுக்கு வந்ததும் ஸ்னேகாவோ அறைக்குள் சுருண்டு படுத்துக் கொள்ள, அவனிடம் என்னவென்று கேட்ட குடும்பத்தினரிடம், 'மலை உச்சியிலிருந்து பள்ளதாக்கைப் பார்த்ததும் அவளுக்குத் திடீரென வலிப்பு வந்து விட்டதாகவும், அதனால் தான் தன்னை அழைத்ததாகவும்' ஆசிரியர் கூறியதாகக் கூறினான் கார்த்திக். 


அன்றைய இரவில் இருந்து ஸ்னேகாவின் நிலைமையோ மிகவும் மோசமானது. எப்பொழுதும் போல் பயத்தில் தாயை இறுக கட்டிக் கொண்டு விடிய விடிய தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தாள்.


ஸ்னேகாவிற்கு என்னானது என்று கார்த்திக் குடும்பத்தினர் யோசனையுடன் குழம்பிக் கொண்டிருந்தனர். ரவிவர்மனோ அவளின் நிலை புரிந்தவன், இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாமல், தனக்குத் தெரிந்த மனோதத்துவ மருத்துவரை பார்க்கலாம் என்று கார்த்திக்கிடம் கூற, அது சரியெனப்பட்டதால், மறுநாளே மகளை அழைத்துக் கொண்டு மருத்துவரை காணச் சென்றான் கார்த்திக்.


கார்த்திக் அழைத்து வந்தது டாக்டர் செழியனிடம்தான். ரவிவர்மன் முன்பே ஸ்னேகாவின் விஷயத்தை அவரிடம் கூறி இருந்ததால், அவளை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர், 


கார்த்திக்கிடம் தனிமையில், "மிஸ்டர் கார்த்திக்! ரெண்டு வருஷம் முன்னாடி உங்க பொண்ணு கிணத்துக்குள்ள விழுந்தாங்களா?"


"ஆமா டாக்டர், தவறி விழுந்துட்டதா தான் சொன்னா..." என்று கார்த்திக் கூறவும்,


"எனக்குத் தெரிஞ்சி அந்த நிகழ்வு தான் அவங்க மனசுல ஒருவித பயத்தை உருவாக்கி இருக்கு. அதுனாலதான் பள்ளத்தைக் கண்டும், இருட்டைக் கண்டும் பயப்படுறாங்க. டூருக்குப் போன போது கூடப் பள்ளத்தைப் பார்த்து மயங்கி விழுந்ததும் இதனாலதான். 


அதுமாதிரி ஆழ்மனசுல தேங்கி நிக்கிற சில சம்பவங்கள் இப்படிக் கனவா வர்றது இயற்கைதான். அதனால் ஏற்படும் அழுத்தம்தான் வலிப்பு வரக் காரணம். அதே சமயம் இந்த வலிப்பு தொடர்ந்து வர்றதும் நல்லதுக்கில்ல. அவங்க உயிருக்கு ஆபத்தா கூட முடியலாம்" என்று மருத்துவர் கூற, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், 


"இதைச் சரிபண்ணிடலாம் தானே டாக்டர்?" என்று தவிப்புடன் கேட்டான். 


"நிச்சயம் சரிபண்ணிடலாம். இதுக்கான ட்ரீட்மெண்ட் இருக்கு. உங்க பொண்ணோட மனநிலையை சரிபண்ணிட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்திடும். அவங்களும் நார்மல் ஆகிடுவாங்க. நான் சொல்றவரை ஸ்னேகாவை இங்க கவுன்சிலிங்கிற்கு கூட்டிட்டு வாங்க. உங்க பொண்ணைத் தனியா விடாதீங்க! எப்பவும் அவங்க கூட யாராவது இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க! சப்போஸ் அவங்க அதிர்ச்சியில் தன்னிலை இழக்கும் சூழ்நிலை வந்தா, உடனே அதட்டி அவங்களைச் சுயநினைவுக்கு கொண்டு வாங்க!" என்று முடித்த மருத்துவர் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.


மகள் இன்னும் என்னவெல்லாம் துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருக்குமோ? எனத் தந்தையாய் கவலை கொண்ட கார்த்திக், மகளை அழைத்துக் கொண்டு சென்றதும்தான் தாமதம்! அடுத்தச் சில நிமிடங்களில் மருத்துவரின் எதிரே வந்து அமர்ந்து இருந்தான் ரவிவர்மன்.


அவரோ "மிஸ்டர் ரவி.." என்று ஆரம்பித்து அனைத்து விபரங்களையும் அவனிடம் கூறியவர், "ஸ்னேகாவின் இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்கக் காரணம் உங்க பையன் மட்டுமே!" என்று கூற,


இது அவன் அறிந்த விஷயம் என்பதால் அமைதியாக அமர்ந்து இருந்தான் ரவிவர்மன். 


அவரோ, "நீங்க கேட்டுக்கிட்டதால் மட்டுமே நான் கார்த்திக்கிட்ட உண்மையைச் சொல்லல. ஹிப்னாடிசம் செஞ்சப்போ ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிது. என்னன்னா.. ஸ்னேகா மனசுல எவ்வளவுக்கு எவ்வளவு உங்க பையன் மேல பயம் இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு அன்பும் இருக்கு. ஏன் அதுக்கு மேலே அவளோட அத்து மேல உயிரையே வச்சி இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டேன். அந்த அன்பே கொஞ்ச கொஞ்சமா உங்க மகன் மீதான பயத்தைப் போக்கும். டோன்ட் வொரி!" என்று கூறி முடித்தார்.


என்ன சொல்வது என்றே ரவிவர்மனுக்குத் தெரியவில்லை! அதனால் "நன்றி டாக்டர்…" என்று மட்டும் கூறியவன் அங்கிருந்து கிளம்பினான்.


அதன்பிறகு தொடர்ந்து தன் மகளை கவுன்சிலிங்கிற்காக மருத்துவமனைக்கு அழைத்து வருவான் கார்த்திக். மருத்துவரின் தொடர் பேச்சில் ரயிலின் சத்தமும், அதன் தொடர்பான சம்பவம் மட்டுமே அவள் மனதில் இருந்து முழுமையாக நீங்கியிருந்தது.


நாட்கள் மாதங்களாகக் கடந்து வருடங்களாகவும் கடந்தது. விக்ராந்த் தன் படிப்பை முடித்ததும், தந்தையின் அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் அமர, படிப்பை முடித்து விட்டு வந்த ரிஷிவர்மனோ, தந்தையின் அலுவலகத்தின் பொறுப்பை ஏற்க மறுத்து, சுயமாக ஒரு கம்பெனியை நிறுவி, அதில் வெற்றியும் கண்டான். 


அடுத்தச் சில வருடங்களில் நேகா-மேகா இருவரும் தங்களது படிப்பை முடித்து அதற்கேற்ற வேலையில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். ஸ்னேகாவோ, தனது இரண்டாவது ஆண்டு கல்லூரி படிப்பில் அடி எடுத்து வைத்தாள். அவளுடன் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்தாள் ரம்யா. இருவரும் ஒன்றாக கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். 


தனது மகள் ரம்யாவிடம் ஸ்னேகாவின் பயத்தை லேசாக கோடிட்டுக் காட்டி, அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறி இருந்தான் ரவிவர்மன். 


இப்படியே நாட்கள் நகர, ஒருநாள் கார்த்திக்கின் வீட்டில் அனைவரும் உணவு மேஜையில் குழுமி இருந்தார்கள். அப்பொழுது மேகா-நேகா இருவரின் திருமண பேச்சை எடுத்தாள் மோகனா.


தனது அண்ணன் மகன் சஞ்சீவிற்கு மேகாவையும், நேகாவுக்கு ஓவியாவின் மகன் ரிஷிவர்மனை மணமுடிக்க விரும்புவதாகக் கூற, அங்கு யார் சந்தோசப்பட்டார்களோ இல்லையோ, அன்னை கூறியதைக் கேட்டு ஸ்னேகா அதிர்ந்து தான் போனாள்.


அவள் மனதோ ரிஷியின் மீதுள்ள பயத்தையும் மீறி, "அவங்க என் அத்து! எனக்கு மட்டுமே சொந்தம்!" என்று உரிமை கொண்டாடியது. அப்பொழுது தான் அவளே உணர்ந்தாள், ரிஷியின் மீது தான் கொண்டுள்ள நேசத்தை! நிச்சயம் அவன் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். நடக்காது என்று தெரிந்தே, அவளது ஆழ்மனதில் அவன் மீது காதலை வைத்து இருந்தாள் பெண்ணவள்.


அதற்குக் காரணம் டாக்டர் செழியன்! அவர் தான் கொஞ்சம் கொஞ்சமாக, அவள் மனதில் ஏற்பட்டுள்ள ரிஷியின் மீதான பயம் தேவையற்றது என்று புரிய வைத்துக் கொண்டே இருந்தார். ஓர் கட்டத்தில் அந்தப் பயம் சற்று விலகி, மறைந்திருந்த அவன் மீதான நேசம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.


ராதாவின் மனதிலோ, 'ரிஷிக்கு ஸ்னேகாதான்! அவன் அவளை நல்லா பார்த்துப்பான் சம்மந்தி' என்ற ராஜேஸ்வரியின் குரல் ஒலித்தது. ஆனால் தன் பேரனின் இன்றைய குணம் அறிந்தும், பேத்தியைக் கவனத்தில் கொண்டும் ராஜேஷ்வரியின் ஆசையைப் பற்றி அவர் வாயையே திறக்கவில்லை. அவனுக்கு நேகாவை மணம் முடிப்பதையே விரும்பாதவர், ஸ்னேகாவுக்கு எப்படிச் சம்மதிப்பார்?


நேகாவோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி விட, மேகாவின் திருமண வேலைகள் ஆரம்பம் ஆனது. அதில் ஸ்னேகா சிறு நிம்மதி அடையும் நேரம், திடீரென மேகாவின் திருமணத்தின் போதே நேகாவின் நிச்சயதார்த்தம் வைக்க வேண்டும் எனத் தாய் கூறவும், அதிர்ந்து தான் போனாள் ஸ்னேகா. 


ஒவ்வொரு தடவையும் நேகா-ரிஷி திருமணப் பேச்சு எழும் போதெல்லாம், அவள் அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும், உள்ளுக்குள், "அவங்க என்னோட அத்து!" என்று துடித்துக் கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை. 


மேலும் தனது அத்துவைத் தன் அக்காள் கணவனாக நினைத்துக் கூட அவளால் பார்க்க முடியவில்லை. அதே சமயம் தனது மனதை வெளியே சொல்ல அவளுக்குத் தைரியமும் இருக்கவில்லை. அதனால் தன்னுடைய மேற்படிப்பை வெளிநாடு சென்று படிக்க முடிவெடுத்தவள், திரும்பி இங்கு வரவே கூடாது என்ற முடிவில், யாரும் அறியாமல் அதற்கான வேலையில் இறங்கினாள் ஸ்னேகா. ஆனால் அவளே எதிர்பாராதது, ரிஷிவர்மனைத் திருமணம் செய்ய அவளிடம் விக்ராந்த் சம்மதம் கேட்டது தான்!


அந்த நிமிடம் அவள் எப்படி உணர்ந்தாள் என்று யாராலும் விவரிக்க முடியாது. நடக்காது என்று இத்தனை நாட்களாக உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்த ஸ்னேகா, தன் அண்ணன் கேட்கவும், உடனே தனது சம்மதத்தைக் கூறி திருமதி ரிஷிவர்மனாகவும் ஆகி இருந்தாள்.


முதல் இரவில் கூட கணவனை எதிர்கொள்ள பயம் இருந்தாலும் தைரியமாகச் சென்றவள், அவனது கோபம் கண்டு அஞ்சி நடுங்கினாலும், அவன் நீட்டிய விவாகரத்து பத்திரத்தில் அதிர்ந்து, அதனால் உண்டான மன அழுத்தத்தில் வலிப்பு வந்து விழுந்து விட்டாள்.


ஆனால் சிறுவயதில் நடந்தது போல், அவளது இந்த நிலையை ரசித்துப் பார்க்காமல், அவள் தவற விட்ட இரும்பை எடுத்து மனைவியின் கையில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்ட ரிஷிவர்மன், அவள் மயக்கத்துக்குச் செல்லவும், அந்த அறையில் இருந்து வெளியேறியவன், அடுத்த நாளே கிளம்பி பெங்களூர் சென்று இருந்தான்.


பின்பு மாமனார் ரவிவர்மனுடன் பெங்களூர் சென்றவள், தன் கணவனுடன் ஒரே வீட்டில் தங்கினாலும், அவன் அவளை வெறுத்து ஒதுக்கி உதாசீனம் செய்யும் போது பொறுத்துக் கொண்டு, என்றாவது ஒரு நாள் தன் காதலைப் புரிந்து கொண்டு முழுமனதுடன் தன்னை ஏற்றுக் கொள்வான் என்ற ஆசையிலும்… அதே சமயம், 'அந்த ஆசை நிராசையாகப் போனாலும் பரவாயில்லை, கணவன் தன் எதிரில் தன் பக்கத்தில் இருந்தால் போதும்!' என்றே வாழ்ந்து கொண்டிருந்தாள் ஸ்னேகா. 


அன்று அப்படி நினைத்தவள், இன்றோ அவனது செயலில் கோபம் கொண்டு, அவள் வாயாலேயே, 'நீ எனக்கு வேண்டாம்!' என்று கணவனிடம் கூறியது மட்டும் அல்லாமல், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டெறிந்து விட்டாள் ஸ்னேகா.


காலம் இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


***

No comments:

Post a Comment