ஸ்வரம் 33

 



ஸ்வரம் 33



அந்தப் பிரபல மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் ஓவியா. அவளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். வெளியே அவளது மகனைத் தவிர மொத்தக் குடும்பமும் ஓவியாவின் நலனைக் காண தவித்துக் கொண்டிருந்தார்கள்.


ரவிவர்மனோ, கைகள் இரண்டையும் கோர்த்துக் குனிந்தவாறு கவலையுடன் அமர்ந்திருக்க, அவன் அருகே அமர்ந்திருந்த கார்த்திக், அவனுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டிருந்தான். 


மற்றொரு பக்கம் ராதா தன் மகளை நினைத்து அழுது கொண்டிருக்க, அவர் அருகே அமர்ந்திருந்த மோகனாவோ, தோழியை நினைத்துக் கலங்கினாலும் மாமியாரை மடிதாங்கிக் கொண்டாள். 


சற்றுத் தள்ளி கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு கண்களை மூடி சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் ஸ்னேகா. அவள் மனதிலோ, நடந்த அனைத்தும் மின்னல் வேகமாக ஒருமுறை வலம் வந்தது. கணவனின் வெறுப்பு, கோபம் என எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டவளால், இறுதியாக அவன் நடந்து கொண்டதை மட்டும் இன்னமும் ஜீரணிக்கவே முடியவில்லை. என்னதான் கோபம் என்றாலும், தாய் என்றும் பாராமல், இப்படியா இரக்கம் இல்லாமல் ஒரு மனிதன் வெறுப்பை உமிழ்வான்? முதன் முறையாக கணவன் மீது அவளுக்கு வெறுப்பு மண்டியது. 


அப்பொழுது அங்கே அழுத்தமான காலடியோசை கேட்கவும், கண்களைத் திறந்து பார்த்தாள் ஸ்னேகா. பதட்டத்துடன் வந்து கொண்டிருந்த தன் அண்ணனைப் பார்த்ததும், "அண்ணா.." என்று ஓடிச் சென்று அவனின் நெஞ்சில் விழுந்து கதறினாள்.


தங்கையை ஆதரவாக அணைத்துக் கொண்ட விக்ராந்த், "ஓவிமா எப்படி இருக்காங்க ஸ்னேகா?" என்று தன் பதட்டம் சிறிதும் குறையாமல் அவன் கேட்க,


"டாக்டர்ஸ் பார்த்துட்டு இருக்காங்கண்ணா. இன்னும் ஒன்னுமே சொல்லல. எனக்குப் பயமா இருக்கு.." என்று மேலும் அழுகையில் கரைந்தாள்.


"ஓவிமாக்கு ஒன்னும் ஆகாதுடா, நீ அழாதே!" என்று தங்கையைச் சமாதானம் செய்தாலும், தனது அத்தையை நினைத்துக் கவலையும் ஒருங்கே எழுந்தது.


அதே நேரம் அங்குத் தன் மாமியாருடன் வந்து சேர்ந்தாள் நேகா. "ஸ்னேகா! ஓவிமாக்கு என்னாச்சுடி? அவங்களை ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கிறதா நீ போன் பண்ணவும் ஒன்னும் ஓடல. உடனே கிளம்பி வந்துட்டேன்" என்று தங்கையிடம் கூறினாலும், அவளது பார்வை அங்கே கவலையுடன் அமர்ந்திருந்த தன் குடும்பத்தினர் அனைவரின் மீதும் படிந்தது.


ஸ்னேகா நேகாவிடம் பேச ஆரம்பிக்க, அஜித்தின் அன்னை லட்சுமி மோகனாவின் அருகே சென்று அமர்ந்தார்.


விக்ராந்த்தோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன், மருத்துவரின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான். அப்பொழுது அவன் காதில் விசும்பல் சத்தம் கேட்க, யார் என்று நெற்றிச் சுருக்கி சுற்றிப் பார்த்தவன் கண்ணில், சற்றுத் தள்ளி தனியாக அமர்ந்து கண்களில் கண்ணீர் வழிய அழுது கொண்டிருந்த ரம்யா விழுந்தாள். 


இங்கிருந்த அனைவரும் ஓவியாவை நினைத்துத் தங்களுக்குள் தவித்துக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் தைரியமாகத்தான் இருந்தார்கள். ஆனால் ரம்யாவோ, ‘எங்கே தன் அன்னைக்கு ஏதாவது ஆகி விடுமோ? தன்னை விட்டுப் போய்விடுவாரோ?’ என்று உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தாள். ஏனெனில் வீட்டில் அவர் மூர்ச்சையாகி விழுந்த போது அருகில் இருந்து பார்த்தவளாயிற்றே! அதனால் குழந்தை போல், "அம்மா அம்மா" என்று அரற்றியபடி விசும்பிக் கொண்டிருந்தாள். எல்லோரும் தங்களுக்குள் உழன்று கொண்டிருந்ததால் ரம்யாயை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை.


அவளது நிலையைப் பார்த்த விக்ராந்த் சட்டென எழுந்து அவள் அருகில் சென்று அமர்ந்தவன், "ரம்யா.." என்று அவளது தலையை ஆதுரத்துடன் தடவ, அழுகையூடே நிமிர்ந்து பார்த்தவள், அடுத்த நொடி "அத்தான்!" என்று அவனது மார்பில் விழுந்து கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.


அவளை மென்மையாக அணைத்துக் கொண்ட விக்ராந்த், "ரம்யா! என்ன இது? குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்கே? ஓவிமாவுக்கு ஒன்னும் ஆகாது. அவங்க நல்லாகிடுவாங்க.." என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்குத் தன் தங்கையுடன் வந்து சேர்ந்தான் அஜித்குமார்.


சிறிது நேரத்திற்கு முன் லட்சுமி போன் செய்து மகனிடம் விபரம் சொன்னவர், "நானும் நேகாவும் மருத்துவமனை செல்கிறோம்" என்று கூறி இருந்தார். 


அஜித்தோ தங்கையை அழைத்து விஷயத்தைக் கூறியவன், தானும் கிளம்புவதாகக் கூற, "நானும் வரேன்ண்ணா…" என்றாள் தனுஷா.


சிறிது யோசித்த அஜித், "சரி, நீ வந்தா நேகாக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்" என்று மனைவியின் மனம் அறியாமல் அவன் கூற, அண்ணனுக்குப் பதில் அளிக்காமல் சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுத்து விட்டு அவனுடன் கிளம்பி இருந்தாள். 


மருத்துவமனை வந்ததும் அஜித்தின் பார்வை மனைவியைத் தீண்ட, கணவன் வந்ததை அறிந்தாலும் அவன் புறம் அவள் திரும்பினாள் இல்லை. ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் சுவரில் சாய்ந்து நின்று கொண்டான்.


தனுஷாவுக்கோ தோழியின் அருகே செல்ல ஆசைதான்! ஆனால் தன் மேல் உள்ள கோபத்தை இங்கும் காட்டி விட்டால்? அதனால் அவளும் அதே இடத்தில் அப்படியே நின்றிருந்தாள். ஆனால் அவளது பார்வையோ அவளையும் அறியாமல் தன்னவனைத் தேடியது. சுற்றி முற்றிப் பார்த்தவளின் பார்வையில் ரம்யாவை அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்த விக்ராந்த் தான் தென்பட்டான். அவர்கள் இருவரின் நெருக்கத்தையும், ரம்யாவின் உரிமையான செயலையும் பார்த்துக் கொண்டிருந்த தனுஷாவின் இதயமோ வெகுவாகத் துடித்தது. 


விக்ராந்த்தோ சற்று முன் தங்கையை அணைத்து எப்படி ஆறுதல் கூறினானோ, அதே உணர்வுடன் தான் இப்பொழுது ரம்யாவையும் அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் தனுஷாவுக்குத் தான் அவர்களைப் பார்க்க பார்க்க மனதில் ஒருவித பயம் வந்தது.


அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்க, அனைவரின் பார்வையும் ஓவியா அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.சி.யூவில் பதிந்தது. உள்ளே இருந்து வெளியே வந்த மருத்துவரை கண்டதும் எல்லோரிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


ரவிவர்மனோ ஒரே எட்டில் அவரை நெருங்கியவன், "டாக்டர்! ஓவியா எப்படி இருக்கா?" என்று தவிப்புடன் கேட்டான்.


அவரோ, "மிஸ்டர்.ரவிவர்மன்! உங்க மனைவிக்குக் கொஞ்சம் சிவியர் அட்டாக் தான்! இது தான் முதல் தடவைனு நினைக்கிறேன். ஏற்கனவே அவங்க ஏதோ மன அழுத்தத்துல இருந்து இருக்காங்க, அதனால் கூட இந்த அட்டாக் வந்திருக்கலாம். இனி அவங்களைக் கவனமா பார்த்துக்கணும். அவங்க மனசு பாதிக்கப்படுற மாதிரி எந்த விஷயமும் அவங்களை நெருங்காம பார்த்துக்கோங்க. இப்ப மயக்கத்துல தான் இருக்காங்க, நீங்க மட்டும் போய் பாருங்க. பேஷண்ட் கண் முழிக்கவும் நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க. அப்போ எல்லோரும் பாருங்க" என்றுவிட்டு அவர் நகர்ந்து விட, அடுத்த நொடி மனைவியைக் காண அறைக்குள் நுழைந்தான் ரவிவர்மன்.


அங்கே கட்டிலில் மருத்துவ உபகரணங்களோடு கண்களை மூடிப் படுத்திருந்தாள் ஓவியா. மனைவியின் அருகே சென்ற ரவிவர்மன், அவளது கையைப் பிடித்துக் கொண்டு அவள் முகம் பார்த்தவன், "ஓவிமா!" என்று கண்கள் கலங்க அழைத்தான். 


அவன் மனையாளோ ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள். மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தவன், "இதுக்காகத்தான்டி பயந்தேன்! இதுக்காகத்தான் நம்ம மகனைக் கூடத் தள்ளி வச்சேன். ஆனா கடைசியில நான் பயந்த மாதிரியே நடந்துருச்சு. கொஞ்ச நேரத்தில என்னைத் தவிக்க வச்சுட்டியே ஓவிமா.." என்று குரல் தழுதழுக்க கூறியவன், அவளது கையைப் பிடித்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, மனைவி கண் விழிக்கக் காத்திருந்தான்.


அன்று மாலையில் மெதுவாகக் கண் விழுத்த ஓவியாவுக்கோ, தன் கையை அழுத்தி பிடித்திருந்ததிலேயே தெரிந்தது தன் கணவன் என்று.. மெதுவாக அவனிடம் இருந்து தனது கையை உருவி கொள்ள முயன்றாள். அவனோ, "ஓவிமா.." என்று பதட்டத்துடன் அழைக்க, அதற்குள் அவள் விழித்து விட்டதைக் கவனித்த செவிலி பெண்,


"சார், கொஞ்சம் பார்த்துக்கோங்க, நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்" என்றுவிட்டு நகர்ந்தாள். மருத்துவரும் வந்து ஓவியாவைப் பரிசோதித்து விட்டு, "இன்னைக்கு ஒருநாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். நாளைக்கு நார்மல் வார்டுக்கு மாத்திடலாம்" என்று கூறி விட்டுச் சென்றிருந்தார். 


அன்றைய நாள் அப்படியே கழிய, மறுநாள் ஓவியா தனி அறைக்கு மாற்றப்பட்டாள். நேற்று போல் மொத்தக் குடும்பமும் இன்று அங்கு வந்திருக்க, எல்லோரும் அவளைச் சூழ்ந்து நின்றார்கள்.


"அம்மா.." என்று அழுகையுடன் ரம்யா தாயின் அருகே அமர்ந்து கொள்ள, "ஓவிமா ராஜாத்தி" என்று ராதா மகளின் கையைப் பிடித்துக் கொண்டார். மோகனாவோ, "எங்களை எல்லாம் இப்படிப் பயமுறுத்திட்டியே ஓவி?!" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாலும் அவள் கண்களிலும் கண்ணீர்! 


ஓவியாவோ அனைவரிடத்திலும், "எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா இருக்கேன்" என்று கூறியவள், "மோனா! அம்மாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போடி. அவங்களுக்கு என்னை நினைச்சு ஏதாவது வந்துட போகுது" என்று தாயின் நலனில் அக்கறை கொண்டு கூற,


"இல்ல, நான் என் பொண்ணு பக்கத்துல தான் இருப்பேன்" என்றார் ராதா.


"அம்மா! எனக்கு ஒன்னும் இல்ல, நாளைக்கே வீட்டுக்கு வந்துருவேன்" என்றவள், "அண்ணா.." என்று தன் கைகளை நீட்ட, "ஓவிமா.." என்று தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டான் கார்த்திக்.


"நீங்களாவது சொல்லுங்க.." என்று அண்ணனிடம் முறையிட, "சரிடா, நீ ரெஸ்ட் எடு! ஈவினிங் வந்து உன்னைப் பார்க்கிறேன்" என்றவன் தாயையும், மனைவியும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.


அஜித்தும் தன் பங்கிற்கு நலம் விசாரித்து விட்டுத் தன் அன்னையையும், தங்கையையும் அழைத்துக் கொண்டு கிளம்ப, நேகாவோ பிறகு வருவதாக மாமியாரிடம் கூறி விட்டாள்.


கடைசியாக கிளம்பிய விக்ராந்த்தோ, யோசனையுடன் தன் சின்னத் தங்கையைத் தனியாக அழைத்துச் சென்றவன், "ஸ்னேகா! நீ பெங்களூர்ல இருந்து எப்போ வந்தே? தனியாவா இல்ல ரிஷி கூட்டிட்டு வந்தானா? அப்படி அவன் உன்னைக் கூட்டிகிட்டு வந்திருந்தா, ரிஷி இப்ப எங்கே? வீட்ல என்ன நடந்தது? ஓவிமாகிட்ட அவன் என்ன சொன்னான்?" என்று அடுக்கடுக்காக கேள்விகளைத் தங்கையிடம் தொடுக்க ஆரம்பித்தான்.


"அண்ணா.." என்றவளுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று புரியவில்லை. அத்தையை மருத்துவமனையில் சேர்த்து இருப்பது குறித்து அவள் தான் அனைவருக்கும் தகவல் கூறினாள். அது கூடச் சொந்தங்கள் அருகில் இருந்தால் தெம்பாக இருக்கும் என்று எண்ணித்தான்! அதற்கு மேல் அவள் எதையும் யோசிக்கவில்லை. அதே நேரம் ஓவியாவின் நிலையைக் கேட்டதும், அன்னையோ தந்தையோ அவளிடம் எதுவும் கேட்காமல் உடனே கிளம்பி வந்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது அண்ணன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? நடந்த அனைத்தையும் கூறினால் அண்ணனின் கோபம் எப்படி இருக்கும் என்று அவளுக்கு நன்றாகவே விளங்க.. 


"இப்ப என்கிட்ட எதுவும்கேட்காதீங்கண்ணா!" என்ற ஸ்னேகா ஓவியாவின் அருகே சென்று நின்று கொள்ள, தங்கை தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்று புரிந்து கொண்ட விக்ராந்த், 'நிலைமை சரியாகட்டும், பிறகு அதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம்' என்று நினைத்து அப்போதைக்கு அமைதி காத்தவன், உடனே கிளம்பி விட்டான்.


இப்பொழுது அங்கே ஓவியா, ரவிவர்மன், ரம்யா, ஸ்னேகா, நேகா மட்டுமே இருந்தனர். 


தனது கையை அழுத்திப் பிடித்து இருந்த மகளின் கையை தடவி கொடுத்த ஓவியா, "குட்டிமா! பயந்துட்டியா?" என்று சிறு புன்னகையுடன் கேட்க, "அம்மா.." என்று அவள் மேல் விழுந்து கதறி விட்டாள் ரம்யா.


மகளை அணைத்து அவள் முதுகை மென்மையாகத் தடவி கொடுத்த ஓவியா, "அழாதே குட்டிமா.." என்று மகளைச் சமாதானம் செய்தாள்.


ரவிவர்மனோ மனைவியையே இமைக்காமல் பார்த்திருந்தான். ஏனெனில் இவ்வளவு நேரம் ஆகியும், அவள் அவனிடம் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசவே இல்லை. மனைவி தன் மேல் கோபத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு, "ஓவிமா.." என்று அவன் அழைக்க, மகளிடம் பேசிக் கொண்டிருந்த ஓவியாவின் முகம் சட்டென இறுக்கமானது. 


அதைக் கவனித்தவன் "என் மேல கோபமா ஓவிமா?" என்று தவிப்புடன் அவன் கேட்க,


அவளோ, "இப்பவாவது என்ன நடந்ததுனு உண்மையைச் சொல்லுவீங்களா? இல்ல இவளுக்குத்தான் கண்ணு தெரியாதேனு மறுபடியும் என்னை ஏமாத்த போறீங்களா?" என்று இறுகிய குரலில் கேட்க,


சட்டென்று மனைவியின் கையைப் பிடித்துக் கொண்ட ரவிவர்மன், "அப்படில்லாம் பேசாதே ஓவிமா.. இந்த விஷயம் எல்லாம் உனக்குத் தெரிஞ்சா நீ தாங்க மாட்டேனு எனக்குத் தெரியும். அதனாலதான் உன்கிட்ட உண்மையை மறைச்சேன். என் அம்மாவின் இறப்பு உனக்கே தெரியாம நீயே அறியாம நடந்ததுமா. அப்படி இருக்கும் போது உன்னை எப்படிக் குற்றவாளியாக்க முடியும்?" என்றவன், பதினேழு வருடத்துக்கு முன்பு நடந்த அனைத்தையும் மனைவிக்குப் புரியும்படி கூறி முடிக்க, அங்கே அப்படி ஒரு அமைதி நிலவியது.. 


யாரெல்லாம் எப்படி உணர்ந்தார்களோ தெரியாது?! ஆனால் ஸ்னேகாவின் மனம் மட்டும் கணவனிடத்தில் சென்றது. 


கணவன் கூறியதைக் கேட்ட ஓவியாவோ, "எல்லாம் என்னால தானே ரவி?" என்று முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.


மனைவியைத் தன்னோடு அணைத்துக் கொண்ட ரவிவர்மன், "இல்ல ஓவிமா, உன் மேல எந்த தப்பும் இல்ல.." என்று சமாதானம் செய்தான்.


"ஏன் ரவி என்னை லவ் பண்ணிங்க? எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணினீங்க? என்னால உங்களுக்கு ஆரம்பத்துல இருந்தே எவ்வளவு கஷ்டம்! நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் அத்தையோட இறப்புக்கு நான்தான் காரணம்!" என்று அழுகையில் கரைந்தாள் ஓவியா.


எப்படி மனைவியைத் தேற்றுவது என்று புரியாமல் ரவிவர்மன் தவிப்புடன் நின்று கொண்டிருக்க, தாய்-தந்தை இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ரம்யாவுக்கும் அழுகை வந்தது. ஆனால் நேகாவோ, இவர்களை இப்படியே விட்டால் தனது ஓவிமாவுக்கு மீண்டும் உடல்நிலை கெட்டு விடும் என்று புரிந்ததால், அந்தச் சூழலை மற்றும் பொருட்டு, "ஓவிமா! இட்ஸ் ட்டு லேட்.. இப்ப நீங்க பீல் பண்ணி ஒன்னும் ஆகப்‌ போறது இல்லை.." என்றாள் சம்பந்தம் இல்லாமல். அவளது பேச்சு புரியாமல் அனைவரும் நேகாவைத் திரும்பிப் பார்த்தனர்.


அவளோ, "பின்ன என்ன ஓவிமா? இந்த வயசுல மாமாக்கு ரெண்டாவதா யாரு பொண்ணு கொடுப்பாங்க? அதான் அப்படிச் சொன்னேன்.." என்று அவள் சிரிக்காமல் கூறவும்,


மருமகள் என்ன கூற வருகிறாள் என்று நொடியில் புரிந்து கொண்ட ரவிவர்மனின் இதழில் புன்னகை அரும்பியது.


"ப்பா.. ரெண்டாவது கல்யாணம்னு சொன்னதும் மாமா முகத்தில அப்படியே நூறு வால்ட்ஸ் பல்பு பிரகாசமா எரியுது பாருங்க ஓவிமா.." என்று நேகா கூற,


"நேகா! சும்மா இருடா.." என்று சிரித்துக் கொண்டே மருமகளை அதட்டினான் ரவிவர்மன்.


"ஆனா மாமா.. உங்களுக்கு வயசானாலும் இன்னும் அப்படியே ஹேண்ட்சம்மா தான் இருக்கீங்க. என்ன.. காது பக்கத்துல ரெண்டே ரெண்டு வெள்ளை முடி மட்டும் இருக்கு. டை அடிச்சுட்டா அதும் சரியா போயிரும். சோ ஓவிமா ஆசைப்பட்ட மாதிரி வேற பொண்ணு பார்க்குறோம், மாமா கல்யாணத்தை முடிக்கிறோம்.." என்று ரவிவர்மனைப் பார்த்துக் கண் சிமிட்டிய நேகா, "ஓவிமா! உங்களுக்கு ஓகேதானே? பின்னாடி பேச்சு மாற மாட்டிங்க தானே?" என்று கேட்டாள்.


தன் வாயில் கை வைத்து அதிர்ந்த ஓவியா, "அடிப்பாவி! என்ன பேச்சு பேசுற? நான் இருக்கும் போது என் புருஷனுக்கு நீ இன்னொரு பொண்ணு பார்ப்பியா?" என்று நேகாவை முறைக்க,


"இது என்ன அநியாயமா இருக்கு ஓவிமா? பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயசுல, ஏன் லவ் பண்ணீங்க, எதுக்கு கல்யாணம் பண்ணீங்கன்னு நீங்க தான் மாமாகிட்ட பீல் பண்ணிச் சொல்லிட்டு இருக்கீங்க. உங்க வேலையை குறைக்கத்தான் நானும் ஐடியா கொடுத்தேன்" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் கூறவும்,


"என்னங்க! இவ என்ன பேசிட்டு இருக்கா.. நீங்க என்னன்னா ஒன்னுமே சொல்லாம அமைதியா இருக்கீங்க. அவளுக்கு ரெண்டு அடி போடுங்க.." என்று கோபத்துடன் கணவனிடம் முறையிட்டாள் ஓவியா.


ரவிவர்மனோ, "எனக்கு இந்த ஜென்மத்தில் மட்டும் இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் இருக்கோ, அத்தனையிலும் என் ஓவிமா மட்டுமே போதும்!" என்று கொஞ்சமும் காதல் குறையா குரலில் கூறி விட்டு மனைவியைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.


அவர்களின் காதல் எப்பொழுதும் போல் நேகாவை மெய் சிலிர்க்க வைத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், "இப்படிக் கவுத்திட்டிங்களே மாமா!" என்று தலையில் கை வைத்துக் கொள்ள, அங்கே சிரிப்பலை அடங்க வெகுநேரம் எடுத்தது.


அதே நேரம் பெங்களூரை நோக்கிச் சீறியபடி சென்று கொண்டிருந்தது, ரிஷிவர்மனின் வாகனம். வலது கையால் வாகனத்தைச் செலுத்தியவன், இடது கையில் இருந்த டின் பீரை வாயில் சரித்து, அதை காரின் ஜன்னல் வழி வெளியே தூக்கி எறிந்தான். அவன் முகமோ பாறையாய் இறுகிப் போய் இருந்தது. 


சிறிது நேரத்திற்கு முன் வீட்டில் நடந்தது அனைத்தும் அவனைச் சுற்றி சுழன்று வந்தது. இது ஏற்கனவே அவன் எதிர்பார்த்த ஒன்று தான்! என்றாவது ஒருநாள் இப்படி நடக்கும் என்று எண்ணியவன்தான்! இத்தனை வருடங்களாக மனதில் உள்ள கோபத்தை, வெறுப்பை கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் தாயிடம் காட்டி இருந்தான்தான்! ஆனால் ஏனோ அவனால் முழுமையாகச் சந்தோசம் அடைய முடியவில்லை. மாறாக ஏதோ ஒன்று, சொல்ல முடியாத வெறுமை, அவன் மனதை சூழ்ந்தது.


அவனின் பார்வை நேராக சாலையில் இருந்தாலும், அவனது கவனமோ, பக்கத்து இருக்கையில் கிடந்த காகிதத்தில் இருந்தது. அது அவன் மனைவி கையெழுத்திட்டு அவன் முகத்தில் விட்டெறிந்த விவாகரத்துப் பத்திரம்! அதைப் பார்க்க பார்க்க, "உனக்கு அவ்வளவு திமிராடி?" என்று பல்லைக் கடித்தவன், அந்தப் பத்திரத்தை எடுத்து டேஷ் போர்டைத் திறந்து அதன் உள்ளே எறிந்தவன், கோபத்தில் வாகனத்தின் வேகத்தை இன்னும் அதிகரித்தான்.


அடுத்த இரண்டு நாட்களில் ஓவியாவை வீட்டுக்கு அழைத்து வந்த ரவிவர்மன், மனைவியைத் தானே கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான். எப்பொழுதும் அவள் அருகிலேயே இருந்தான். ஓவியாவின் மனமோ, 'மகன் மகன்' என்று அடித்துக் கொண்டாலும், கணவனுக்காகத் தன் மனதை மறைத்து அவனிடம் சிரித்துப பேசினாள்.


இப்படியே நாட்கள் செல்ல மூன்று மாதங்கள் கடந்தது. அன்று அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதால், அதற்கு ரவிவர்மன் வந்தே ஆக வேண்டும் என்று அவனது ஜெனரல் மேனேஜரான வாசு கூறி இருந்தான். அதனால் அவன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவும், மனைவியை மகளின் பொறுப்பில் விட்டுவிட்டு, அலுவலகம் கிளம்பி இருந்தான்.


அன்றைய மீட்டிங் முடியவும் தனது கேபினுக்கு வந்த ரவிவர்மன், இன்டர்காமின் மூலம் தனது பி.ஏவை அழைத்தான். சற்று நேரத்தில் அவனது அனுமதி பெற்று உள்ளே வந்தாள் ஸ்னேகா.


மருமகளைப் புன்னகையுடன் எதிர்கொண்ட ரவிவர்மன், "என்கிட்ட அனுமதி கேட்டுட்டுத்தான் நீ இந்த கேபினுக்குள்ள வரணும்னு இல்ல ஸ்னேகா.." என்று கூற, 


"மாமா! இது நான் வொர்க் பண்ற ஆபிஸ், நீங்க என்னோட பாஸ். சோ இங்க நான் இப்படித்தான் இருக்கணும்.." என்று புன்னகை மாறாமல் அவள் கூறவும்,


"சொன்னா கேட்கவா போறே?" என்று அலுத்துக் கொண்ட ரவிவர்மன், "இன்னைக்கு மீட்டிங் பத்தின டீட்டைல்ஸ் கேட்கத்தான்டா உன்னைக் கூப்பிட்டேன்.." என்றவரின் முன் ஒரு பென்ட்ரைவை வைத்த ஸ்னேகா, "இதில எல்லாமே இருக்கு மாமா. அப்புறம் உங்க மெயிலுக்கும் ஒரு காபி அனுப்பிட்டேன்.." என்றாள் பொறுப்பாக.


அதில் ஆச்சரியமாக அவளைப் பார்த்த ரவிவர்மன், "ஸ்னேகா! மீட்டிங் முடிஞ்சி அரைமணி நேரம் கூட ஆகலடா. அப்புறம் எப்படி இவ்வளவு சீக்கிரம் ரெடி பண்ணினே?" என்று கேட்க,


"மீட்டிங் நடக்கும் போதே நான் என் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டேன் மாமா. அதை அப்படியே பென்ட்ரைவ்ல காபி பண்ணினதால ஈஸியா இருந்தது" 


"ம்ம்ம்.. குட்!" என்று அவளை மெச்சிய ரவிவர்மன், அவள் கொடுத்த பென்ட்ரைவைக் கணினியில் பொருத்தினான். 


"நான் என் சீட்டுக்குப் போறேன் மாமா" என்றுவிட்டு எழுந்தவளை,


"ஸ்னேகா! ஒருநிமிசம்.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும், உக்கார்.." என்றான் ரவிவர்மன்.


"சொல்லுங்க மாமா.." என்றவள் மீண்டும் இருக்கையில் அமர,


சிறிது அமைதி காத்த ரவிவர்மன், "பெங்களூர்க்குக் கிளம்புற ஐடியா ஏதும் இருக்கா ஸ்னேகா?" என்று மருமகளிடம் கேட்டான். 


அவனது கேள்வியில் இவ்வளவு நேரம் ஸ்னேகாவின் முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று மறைய, "ஏன் மாமா.. நான் உங்க வீட்ல இருக்கிறது உங்களுக்குப் பாரமா இருக்கா?" என்று பதிலுக்குக் கேள்வி கேட்டாள்.


"ஸ்னேகா! என்ன பேசுற? நீ எங்களுக்குப் பாரமா? இன்னொரு தடவை இந்த மாதிரி வார்த்தை எதுவும் உன்கிட்ட இருந்து வரக் கூடாது!" என்றான் கண்டிப்புடன்.


"அப்போ இனிமேல் நான் பெங்களூர் போறதைப் பத்தின பேச்சை நீங்களும் எடுக்க வேண்டாம் மாமா…" என்று உறுதியுடன் கூறியவள், "நான் வீட்டுக்குக் கிளம்புறேன். 'இன்னைக்குக் கோவிலுக்குப் போகணும், சீக்கிரம் வா'ன்னு ஓவிமா சொன்னாங்க.." என்றவள் எழுந்து சென்று விட்டாள்.


செல்லும் மருமகளையே யோசனையுடன் பார்த்திருந்தான் ரவிவர்மன். ஏனெனில் ஒரு மாதம் முன்பு அவளாக வந்து, தனக்கு எதுவும் வேலை வாங்கித் தர முடியுமா? என்று அவனிடம் கேட்டிருந்தாள்.


"ஏன் ஸ்னேகா? உன்னோட படிப்பு இன்னும் முடியலடா.." என்று அவன் கூறவும்,


"நான் என்னோட படிப்பை இங்கேயே தொடர முடிவு பண்ணிட்டேன் மாமா" என்றவளிடம்,


"என்னாச்சு ஸ்னேகா? உனக்கு பெங்களூர் போக விருப்பம் இல்லையா? ரிஷியோட கோபத்தைப் பார்த்துப் பயந்துட்டியா? அவன் அப்படித்தான்னு உனக்குத் தெரியுமே? என்ன.. அன்னைக்கு அவன் கோபம் கொஞ்சம் எல்லை மீறிருச்சு, அவ்ளோ தான்!" என்றான், தன் மகனை விட்டுக் கொடுக்காமல்.


இப்படிக் கூறுபவரிடம் தனக்கும், தன் கணவனுக்கும் விவாகரத்து ஆகப் போகிறது என்பதை எப்படிக் கூறுவது என்று புரியாமல் தவித்தவள், பின்பு ஒரு முடிவுடன், "எனக்கு வேலை வாங்கித் தர விருப்பம் இல்லனா சொல்லிருங்க மாமா, நானே பார்த்துக்கிறேன்.." என்றவளின் பேச்சில்,


"அதாவது உன்னைக் கேள்வி கேட்க கூடாதுன்னு மறைமுகமா சொல்றே, அப்படித்தானே? சரி, நீ பெங்களூர் போகாம இங்கேயே இருந்தா, உங்க வீட்ல கேள்வி கேட்க மாட்டங்களா? அவங்களுக்கு நீ பதில் சொல்லித்தானே ஆகணும்.." என்று அவனும் கிடுக்கிப்பிடி போட,


இதெல்லாம் யோசிக்காமலா அவள் இந்த முடிவுக்கு வந்தாள்? அவர்கள் கேட்கும் போது ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தாள். 


மருமகள் அமைதியாக இருப்பது கண்டு, "ஓகே ஸ்னேகா, நீ நாளையில் இருந்து நம்ம ஆபிஸ்க்கு வா! இப்போதைக்கு என்னோட புது பி.ஏ நீதான். உன் படிப்பு முடியவும் மேற்கொண்டு பார்த்துக்கலாம்" என்றான் ரவிவர்மன். அதற்குள் அவளது மனதை மாற்றலாம் என்று நினைத்திருந்தான். 


"தேங்க்ஸ் மாமா.." என்று அவருக்கு நன்றி உரைத்தவள், மறுநாள் வேலைக்குக் கிளம்பவும்,


"என்னங்க.. இவ தான் வேலைக்கு வரேன்னு சொல்றான்னா, அவளுக்குப் புத்திமதி சொல்லி ரிஷிகிட்ட அனுப்பி வைப்பீங்கனு பார்த்தா, நீங்க என்னன்னா ஆபிசுக்கு அனுப்பி வைக்கிறீங்க. அண்ணா, மோகனா கேட்டா என்னங்க பதில் சொல்றது?" ஆட்சேபித்த மனைவியிடம், 


"அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்துப் பார்க்கலாம் ஓவிமா. அதுக்குள்ள ரிஷியும் கொஞ்சம் யோசிப்பான்ல. உங்க அண்ணா- அண்ணி கேட்டா, கொஞ்ச நாள் உன் கூட இருக்க ஆசைப்படுறானு சொல்லிக்கலாம்" என அவன் தான் மனைவியைச் சமாளித்து இருந்தான்..


ஸ்னேகா கிளம்பவும், அடுத்த சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தான் வாசு. "எஸ் வாசு.." என்ற ரவிவர்மனிடம்,


"சார், நம்ம ஆபிசில சீப் இன்ஜினியரா வேலை பார்த்த மிஸ்டர்.தேவ் வேலைக்கு வந்து ரொம்ப மாசம் ஆகுது. போன் பண்ணினா எந்த ரெஸ்பான்சும் இல்ல. சோ அவரை வேலையில் இருந்து ரிலீவ் பண்ணிட்டு, அந்த போஸ்ட்க்கு வேற ஆளை வேலைக்கு வைக்கணும். அதான் விளம்பரம் கொடுக்கிறது பத்தி உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்" என்று வாசு கூற,


அதில் சிறிது யோசனையான ரவிவர்மன், "ஓகே, இந்த வீக் வேண்டாம், நெக்ஸ்ட் வீக் ஆட் கொடு வாசு!" என்று முடித்தான்.


அதே நேரம் ஒரு அறையில் பல மாதங்களாக வெட்டப்படாத பரட்டை தலை முடியுடன்,


அவனது முகத்தைத் தேடும் அளவில் அடையாளம் தெரியாதவாறு வளர்ந்திருந்த தாடி மற்றும் மீசையுடன், டிஷர்ட் லுங்கி அணிந்து, போதை தலைக்கேற, "ஹனி! ஹனி!" என்று பிதற்றியவாறு வெற்றுத் தரையில் படுத்திருந்தான் தேவ்.


அப்பொழுது கதவைத் திறந்து உள்ளே வந்த அவனது நண்பன் விஷால், "டேய் மாப்ள! எந்திரிடா.. சாப்பாடு வாங்கிட்டு வந்துருக்கேன், சாப்பிடு.." என்று நண்பனை உலுக்கி எழுப்பினான்.


ஆனால் தேவ்வோ கண்களை கூடத் திறக்காமல், "என் ஹனி எங்கடா?" என்று கேட்க,


'அவ அவளோட புருஷன் கூட இருக்கா..' என வாய் வரை வந்த வார்த்தையை தனக்குள் முழுங்கிக் கொண்டு, "வருவா மாப்ள.. நீ மொத சாப்பிடு!" என்று எழுப்பி உட்கார வைக்க முயன்றான்.


நண்பனின் உதவியுடன் எழுந்து அமர்ந்த தேவ், தன் எதிரே இருந்த உணவைப் பார்த்தவன், "பாட்டில் எங்கடா?" என்று கேட்டான்.


"மாப்ள! இப்பவே நீ முழுப் போதையில தான்டா இருக்கே, இன்னும் குடிச்சா எப்படி மாப்ள? அதான் வாங்கிட்டு வரல. நைட் நிச்சயம் வாங்கித் தரேன், இப்ப சாப்பிடு.." என்று மீண்டும் கூற,


தலையைத் தூக்கி நிமிர்ந்து நண்பனை போதை ஏறிய உக்ர விழிகளால் முறைத்த தேவ், எழுந்து நிற்க முயற்சிக்கவும், "மாப்ள! என்னடா?" என்று புரியாமல் விஷால் கேட்க,


"நானே போய் வாங்கிக்கிறேன்.." என்று ஒரு எட்டு எடுத்து வைத்தவனால் மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், தன் ஆறடி உயர தேகத்தை அப்படியே தரையில் சரித்தான்.


"மாப்ள.." என்று பதறியபடி நண்பனின் அருகே அமர்ந்தவன், "டேய்! நீ எப்படி இருந்தவன்டா! இப்ப எப்படி இருக்கே? உன்னை இப்படிப் பார்க்க ரொம்பக் கஷ்டமா இருக்குடா. உங்க அம்மா தினமும் போன் பண்ணி அழறாங்கடா, பாவமா இருக்கு. எவளோ ஒருத்திக்காக நீ இப்படி உன்னையே அழிச்சிக்கிட்டு இருக்கியே, இது நியாயமான்னு சொல்லு!" என்று அங்கே அப்பொழுதே உறங்கி விட்டவனிடம் புலம்பினான் விஷால். 


மறுநாள் காலை பத்து மணியளவில் கண் விழித்த தேவ் தலையை உலுக்கி எழுந்து அமர்ந்தான். நேற்று ஏற்றிய போதை எல்லாம் இறங்கி இருக்க, வேகமாக எழுந்து நின்றவன், அங்கே தொங்கிக் கொண்டிருந்த விஷாலின் சட்டையைத் துழாவி பணத்தையும், பைக் சாவியையும் எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான்.


அப்பொழுது தான் குளித்து விட்டுத் தலையைத் துண்டால் துவட்டியபடி வந்த விஷால், நண்பனைப் பார்த்துவிட்டு, "மாப்ள! எழுந்துட்டியா? எங்கடா போறே?" என்று அவன் அருகில் வந்து கேட்க, அவனோ நண்பனுக்குப் பதில் கூறாமல் வெளியே சென்றிருந்தான். 


"மாப்ள! நில்லுடா.." என்று அழைக்க அழைக்க வெளியே வந்தவன், அங்கு நின்றிருந்த விஷாலின் பைக்கில் ஏறி அமர்ந்து, அதைக் கிளப்பி ரோட்டுக்கு வரவும், அவனது இருசக்கர வாகனத்தை மறித்தவாறு வந்து நின்றது ஒரு வாகனம்.


அந்த வாகனத்தை தேவ் சற்று அதிர்ச்சியுடன் பார்த்தான் என்றால், நன்பனைத் தொடர்ந்து வந்த விஷாலும் அந்தக் காரை பார்த்து, "யார் வண்டிடா இது?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த வாகனத்தின் ஜன்னல் கதவு கீழே இறங்கியது.


உள்ளே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ரவிவர்மனைக் கண்டதும், சர்வமும் அடங்கியவனாக, வேகமாக பைக்கில் இருந்து இறங்கி காரின் அருகே சென்ற தேவ், "சா.. சார்.." என்று தயங்கி இழுத்தான்.


ரவிவர்மனோ தன் எதிரே நின்றிருந்தவனை மேலும் கீழும் பார்த்தவன், "கெட் இன்.." என்றான்.


அவரின் வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் மறுபக்கம் தேவ் ஏறி அமரவும், ரவிவர்மனின் வாகனம் சாலையில் வேகமெடுத்தது. 


காரின் உள்ளே அமைதி நிலவ, சில நிமிடங்கள் கழித்து, "ஏன் வேலைக்கு வரல?" என்று கேட்டான் ரவிவர்மன்.


அவனை நிமிர்ந்து பார்த்துப் பதில் சொல்ல தைரியம் அற்றவனாக தேவ் அப்படியே அமர்ந்து இருக்க,


"வெல்! எப்போ இருந்து மறுபடியும் வேலைக்கு வரப் போறே?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் ரவிவர்மன்.


அதில் சடாரென்று நிமிர்ந்து அவனைப் பார்த்த தேவ்வின் கண்கள் அதிர்ச்சியை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. ஏனெனில் அந்த அலுவலகத்தில் வேலை கிடைப்பதே அதிர்ஷ்டம்! அந்த அதிர்ஷ்டத்தை எப்பொழுதோ தொலைத்து இருந்தான். இவ்வளவு நாட்களும் அவன் வேலைக்குச் செல்லவில்லை. அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்புக்களை ஏற்று அவன் பதிலும் உரைக்கவில்லை. 


அப்பொழுதே தன்னை வேலையில் இருந்து தூக்கி இருப்பார்கள் என்று தான் நினைத்து இருந்தான். ஆனால் அவனது முதலாளியே நேரில் வருவார் என்றும், தன்னை வேலைக்கு அழைப்பார் என்றும் அவன் நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை. குற்றவுணர்வுடன் மீண்டும் அவன் தலையைக் குனிந்து கொண்டான்.


வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திய ரவிவர்மன், "தேவ்! என்னோட கம்பெனியில வேலைக்கு சேரணும்ன்னா அவ்ளோ ஈசி கிடையாது. பட் உனக்கு இன்டெர்வியூ கூட எடுக்காம, வேலை போட்டு கொடுத்தேன். அது ஏன்னு உனக்கே தெரியும். அதே சமயம் உன்னோட சின்சியாரிட்டி, நீ வேலையில் காட்டின ஒட்டுதல் எல்லாம் என்னை ஈர்த்துச்சு. அதான் அடுத்த மாசமே சீப் இன்ஜினியர் போஸ்ட்ல உக்கார வச்சேன். ஆனா நீ.." என்று அழுத்தமாக கூறி நிறுத்த,


"சாரி சார்.." என்றான் இறங்கிய குரலில்.


"இப்ப நான் உன்கிட்ட உன்னோட மன்னிப்பைக் கேட்டு வாங்கிட்டுப் போக இங்க வரல. நீ இல்லனா எனக்கு ஆயிரம் ஸ்டாப் கிடைப்பாங்க. ஆனா என்ன ரீசன்னு எனக்குத் தெரியணும்!" என்று விட்டு மீண்டும் அவனை மேலிருந்து கீழ் பார்த்தவன், என்ன புரிந்து கொண்டானோ, "லவ் பெயிலியரா?" என்று கேட்டான் ரவிவர்மன்.


அதற்கு தேவ்வின் தலை தானாக மேலும் கீழும் ஆட, "சோ சார் குடிச்சே உங்க வாழ்க்கையை அழிக்க முடிவு பண்ணிட்டீங்க, ரைட்?" என்று கிண்டலாகக் கேட்டவன், "எல்லாரோட முதல் காதலும் சக்ஸ்ஸ் ஆகிடும்ன்னு சொல்ல முடியாது தேவ். அப்படி நிறைவேறலைன்னா உன்னை மாதிரி தாடியும் மீசையுமா அலையணும்ன்னு அவசியமும் கிடையாது.


நாம விரும்புற பொண்ணு கிடைக்கலனா, இந்த வாழ்க்கையே அவ்வளவு தான்னு நினைக்காம, அந்தப் பொண்ணுக்கு நீ கிடைக்கக் கொடுத்து வைக்கலன்னு நினைச்சு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்ட்டே இருக்கணும். நீ விரும்பின பொண்ணு கிடைக்கலன்னா என்ன? உன்னை விரும்பும் பெண்ணைத் தேடு! நிச்சயம் உன் லைஃப் நல்லா இருக்கும் தேவ். ஐ நோ.. அட்வைஸ் பண்றது ஈஸி, அதை பாலோ பண்றதுதான் கஷ்டம்ன்னு.. உன் வலி உனக்குத்தான் தெரியும். எதுனாலும் யோசிச்சு முடிவை எடு! இப்ப இறங்கு!" என்றான் ரவிவர்மன்.


"உன்னோட போஸ்டிங் உனக்காக ரெடியா இருக்கு. நாளைக்கே நீ வேலைக்கு வரணும்!" என்று அதிகாரமாகக் கூறியவன், அவனது பதிலை எதிர்பாராமல் காரை கிளப்பிச் சென்றிருந்தான்.


செல்லும் ரவிவர்மனை பிரமிப்புடன் பார்த்திருந்தான் தேவ். பின்பு தன்னை எங்கு இறக்கி விட்டிருக்கிறார் என சுற்றிப் பார்த்தவனின் கண்ணில் சலூன் கடை விழ, ரவிவர்மனின் எண்ணம் புரிந்து, இதழில் பூத்த புன்னகையுடன் அந்தக் கடைக்குள் நுழைந்தான், தன் தோற்றத்தை திருத்திக் கொள்ள..


மறுநாள் ப்ளூ ஜீன்ஸில் ஆகாய வண்ண முழுக்கை சட்டை அணிந்து, கண்ணாடியின் முன் நின்று, கையில் கைக்கடிகாரத்தை மாட்டிக் கொண்டிருந்தான் தேவ். இரவும் நேர வேலை முடிந்து மிகவும் களைப்பாகத் தனது அறையை திறந்து உள்ளே வந்த விஷால், "ஆ.ஆ.." என்று வாய் பிளந்து நின்று விட்டான்.


கண்ணாடியில் தெரிந்த நண்பனின் பிம்பத்தைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்ட தேவ், "டேய்! வாயை மூடுடா, உள்ள கொசு போய்ட போகுது.." என்று சொல்லிச் சிரிக்க,


சட்டென்று வாயை மூடி விட்டு வேகமாக நண்பனின் அருகே வந்தவன், "டேய் மாப்ள! இது நீயாடா?" என்று இன்னமும் ஆச்சரியம் அடங்காமல் கேட்டான் விஷால்.


"நான் தான்டா.." என்றவன் தனது பர்ஸை எடுத்து எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டு, "டேய்! கொஞ்சம் பணம் கொடுடா, இந்த மாசம் சம்பளம் வாங்கினதும் மொத்தமா திருப்பித் தரேன்.." என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்த விஷால்,


"மாப்ள! என்னைக்காவது பணத்தை நான் திருப்பிக் கொடுன்னு கேட்டு இருக்கேனாடா? இப்படிச் சொல்லி என்னை உன்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்காதே.. சொல்லிட்டேன்.. நீ எனக்குச் செஞ்சதில நான் உனக்கு கால்வாசி கூடச் செய்யல.." என்று முகத்தைச் சுருக்கியபடி கூறியவன், தனது பர்ஸை எடுத்து நண்பனின் கையில் வைத்தான்.


அதில் இருந்து சில ஆயிரங்களை எடுத்த தேவ், "உனக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்துட்டேன்ல, சாரிடா!" என்று அவனைக் கட்டிக் கொள்ள,


"அப்படிலாம் இல்லடா, உன்னை இப்படிப் பார்க்க மாட்டோமானு எத்தனை நாள் கவலைப்பட்டு இருக்கேன் தெரியுமா? அதுக்கு ரவி சார்க்குத்தான் நன்றி சொல்லணும்.." என்றவன், "இந்தாடா மாப்ள பைக் சாவி.." என்று கொடுத்து விட்டு, "போகும் போது உங்க அம்மாக்கு ஒரு போன் பண்ணிடுடா. பாவம் அவங்க!" என்று கூறவும்,


"சரிடா.." என்ற தேவ் விஷாலின் பைக்கை கிளப்பி ஆர்.வி கன்ஸ்ட்ரக்சனை நோக்கிச் செலுத்தினான். சில நிமிடங்களில் அலுவலகத்தின் பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கியவன், அலுவலக கட்டிடத்தின் உள்ளே நுழைந்தான். எதிர்ப்பட்ட சிலர், இவ்வளவு நாளும் எதற்காக வேலைக்கு வரவில்லை என்று கேள்வி கேட்க, அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்த தேவ், ரவிவர்மனைக் காணச் சென்றான்.


எம்.டியின் கேபினைத் தட்டி விட்டு அவரின் அழைப்புக்காகக் காத்திருந்தவன், ரவிவர்மன் உள்ளே அழைக்கவும், அவன் முன் வந்து நின்றான்.


அவனைப் பார்த்ததும், "என்ன முடிவு எடுத்து இருக்கே தேவ்?" என்று தெரிந்தே கேட்டான். ஏனெனில் நேற்றைய அவனது தோற்றத்துக்கும், இன்றைய அவனது தோற்றத்துக்கும் ஆயிரம் வித்தியாசம் இருந்தது!


"நான் இன்னையில் இருந்து என் வேலையில் ஜாயின் பண்றேன் சார்.." என்றுவிட்டு, "அன்ட் தேங்க்ஸ் சார்.." என்றான் மனதார.


"தேங்க்ஸ் எல்லாம் பத்திரமா வச்சிக்கோ தேவ்! கோ அஹெட் மை பாய்.." என்று ரவிவர்மன் கூறவும், அவரிடம் இருந்து விடைபெற்று வெளியேற போகவும், கதவைத் திறந்து ஸ்னேகா உள்ளே வரவும் சரியாக இருந்தது.


அவளை அங்கு எதிர்பாராத அதிர்ச்சி அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, அவனது இதழோ, "ஹனி.." என்றது.


***

No comments:

Post a Comment