ஸ்வரம் 34

 



ஸ்வரம் 34


ஏ.கே ஸ்பேர் பார்ட்ஸ் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தனது கேபினில் அமர்ந்திருந்த அஜித்குமாரின் முகம் யோசனையில் இருந்தது. அவனது அந்த யோசனைக்குக் காரணம், அவன் தங்கை தனுஷா.


ஏனெனில் சில நாட்களாக அவள் ரொம்பவே அமைதியாகி விட்டது போல் அவனுக்குத் தோன்றியது. அவனது தங்கை இப்படி இருப்பவள் கிடையாது. எப்பொழுதும் துறுதுறுவென்று ஒரு இடத்தில் இருக்க மாட்டாள். இப்பொழுதோ தங்கையின் முகத்தில் சிறு புன்னகை கூட இல்லாமல், எதையோ பறிகொடுத்தவள் போல், அறையின் உள்ளே அடைந்து கிடப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் அஜித்குமார். 


இன்று காலையில் கூட எல்லோரும் சேர்ந்து உணவருந்த உணவு மேஜையில் அமர்ந்து இருக்க, நேகாவோ மாமியாருக்கும் கணவனுக்கும் காலை உணவைப் பரிமாறியவள், தனுஷாவைக் கண்டுகொள்ளாமல், "அத்தை! சட்னி எடுத்துட்டு வரேன்.." என்றுவிட்டு கிச்சனுக்குள் செல்ல, அஜித்தும் அவனது அன்னையும் பேசியபடி உண்டதால் தனுஷாவை முதலில் கவனிக்கவில்லை. 


சிறிது நேரம் கழித்தே, "தனு! சாப்பிடாம என்ன பண்றே? ஆபிசுக்கு நேரம் ஆச்சு பாரு! நேகா சட்னி எடுக்க போயிருக்காள்ல, நீயே எடுத்து வச்சி சாப்பிடுடா.." என்று லட்சுமி கூறவும்,


"ம்ம்ம்.. சாப்பிடுறேன்மா.." என்றவளின் பார்வை கிச்சனில் இருந்து கையில் கிண்ணத்துடன் வந்து கொண்டிருந்த தோழியின் மீது படிந்தது. 'நேகா தன்னை மன்னிக்கவே மாட்டாளா? தன்னைப் புரிந்து கொள்ளவே மாட்டாளா?' என்று மனதில் ஏக்கத்துடன் நினைத்துக் கொண்ட தனுஷாவுக்கு உணவு தொண்டைக்குழியில் இறங்க மறுத்தது. பின்பு, ‘சாப்பிட்டேன் பேர்வழி' எனப் பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டவள், அன்னையிடம், அண்ணனிடமும் கூறி விட்டுக் கிளம்பி விட்டாள்.


செல்லும் மகளைப் பார்த்த லட்சுமி, "பார்த்தியா அஜித்து.. இப்படித்தான் சரியாவே சாப்பிட மாட்டேன்கிறா. நாளுக்கு நாள் மெலிஞ்சிட்டே போறா. என்னனு கேட்டா ஒன்னும் இல்லன்னு சொல்றா. நீ கொஞ்சம் அவகிட்ட பேசி பாருப்பா.." என்றவருக்கு மகளை நினைத்துக் கவலை எழுந்தது.


அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தாலும் தங்கை மற்றும் மனைவி இருவரையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் அஜித்குமார். தனுஷாவும், நேகாவும் சேர்ந்து விட்டால் போதும்! அந்த இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது. அப்படி இருந்தவர்கள், தனது திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாகப் பேசி சிரித்து அவன் ஒரு நாள் கூடப் பார்த்தது இல்லை. ‘தனது மனைவி ஏன் தன் தங்கையிடம் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை? தோழிகள் இருவருக்கும் ஏதும் சண்டையோ? ஒருவேளை நேகாவைத் தான் காதலித்த விஷயத்தைத் தனுஷா அவளிடம் சொல்லவில்லை என்பதால், இன்னமும் தன் மனைவி கோபமாக இருக்கிறாளா?’ என்று பலவாறு யோசித்தவன், 


"நான் தனுகிட்ட என்னனு கேட்டுப் பார்க்கிறேன்மா.." என்றவன் எழுந்து கொண்டான்.


அவரோ, "அப்படியே அவ கல்யாணத்தைப் பத்தியும் பேசிடுப்பா. கேட்டா பிடியே கொடுக்க மாட்டேன்கிறா. சாந்தி எனக்கு போன் பண்ணி எப்போ வீட்டுக்கு வரட்டும்னு கேட்டுட்டே இருக்கா. அந்தப் பையன் ரோஹனுக்கு நம்ம தனுவை ரொம்பப் பிடிச்சு போச்சாம். சீக்கிரமே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிட்டே இருக்கா.." என்று கூறி முடிக்க, "இது பத்தியும் பேசுறேன்மா.." என்றுவிட்டு அலுவலகம் கிளம்பி வந்தான்.


மனைவிக்கும், தங்கைக்கும் அப்படி என்ன தான் பிரச்சினை என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, அவனது யோசனையைக் கலைப்பது போல் கேபின் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தாள் தனுஷா.


"அண்ணா! இதுல உன் சைன் வேணும். அப்புறம் நம்ம குடோன்ல வொர்க்கர்ஸ் ஏதோ பிரச்சினை பண்றதா சூப்பர்வைசர் இப்ப தான் போன் பண்ணினார். அது என்னனு விசாரி!" என்று அவள் வேலை விஷயமாகப் பேச ஆரம்பித்தாள். 


அஜித்தோ தங்கையை ஆராய்ச்சியுடன் பார்த்தான். அவள் கண்களில் முன்பு இருக்கும் ஜீவன் இப்பொழுது சுத்தமாக இல்லை. அவன் இருக்கும் பொழுது அவனது தங்கைக்கு மனக்கவலையா? அப்படி இருக்கலாமா? என்று நினைத்தவன்,


"தனு.." என்று தங்கையை அழைத்தான்.


"என்னண்ணா?" என்று கேட்டவளை,


"உக்கார்டா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று இருக்கையைச் சுட்டிக் காட்டினான்.


அவள் உட்காரவும், "உனக்கும், நேகாக்கும் நடுவில என்ன பிரச்சினை? ஏன் நீங்க ரெண்டு பேரும் முகம் கொடுத்துப் பேசிக்க மாட்டீங்கிறீங்க?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அஜித்.


அண்ணனின் கேள்வியில் ஒரு நொடி திகைத்த தனுஷா, சட்டென்று சுதாரித்து, "இல்லன்னா.. எனக்கும அவளுக்கும் என்ன பிரச்சனை இருக்கப் போகுது? நாங்க எ..எப்பவும் போல தான் இருக்கோம்.." என்று கூற,


"எப்போ இருந்து அண்ணன்கிட்ட பொய் சொல்ல கத்துக்கிட்ட தனு?" என்று அழுத்தமாக கேட்டான் அஜித்குமார்.


"நிஜமா தான் அண்ணா! எங்களுக்குள்ள எந்தப் பிரச்சினையும் இல்ல.." என்றவளின் பார்வை அண்ணனின் முகத்தைக் காணத் தயங்கியது.


அவளைக் கூர்ந்து பார்த்த அஜித், மேற்கொண்டு அது பற்றிக் கேட்காமல், "ஓகே, நீ சொல்றதை நம்புறேன்" என்றவன், "ரோஹன் பத்தி என்ன நினைக்கிறே?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.


யாரைப பற்றிக் கேட்கிறான் என்று புரியாமல் நிமிர்ந்து நெற்றிச் சுருக்கி அவள் தனது அண்ணனைப் பார்க்க,

 

அவனோ, "ரிசப்ஷனுக்கு வந்துருந்தாங்களே சாந்தி அத்தை, அவங்க பையன் ரோஹனைப் பத்திதான் பேசுறேன். அவனுக்கு உன்னைப் பிடிச்சு இருக்காம். அதான் உன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சா, அடுத்த ஸ்டெப் எடுக்கலாம்ன்னு தான் உன்னைக் கேட்கிறேன்" என்று முடிக்க, தனுஷாவுக்கோ சற்றுப் படப்படப்பு வந்தது. இதை எப்படி மறந்தாள்?


மேலும் அவள் மனதில் விக்ராந்த் இருக்கும் பொழுது வேறு ஒருவனை எப்படித் திருமணம் செய்ய முடியும்? அதனால், "இல்லண்ணா, எனக்கு விருப்பமில்லை.." எனப் பட்டென்று கூறி விட்டாள்.


"ஏன் தனு? ரோஹன் நல்ல பையன், பாரின்ல செட்டில்ட்.." என்று அவன் கூறி முடிக்கவில்லை..


"அண்ணா ப்ளீஸ்! எனக்கு உங்களையும், அம்மாவையும் விட்டு இருக்க முடியாது. அதும் அவ்ளோ தூரம்! சத்தியமா என்னால முடியவே முடியாது. ப்ளீஸ்ண்ணா! இனிமேல் இது பத்தி பேச வேணாம்.." என்ற தனுஷா வேகமாக மறுத்து விட, தங்கையைக் கூர்ந்து பார்த்த அஜித் குமார்,


"தனு! நீ யாரையாவது லவ் பண்றியா?" என்று பட்டென கேட்டு விட்டான்.


அண்ணனின் கேள்வியில் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் தனுஷா. தான் காதலிக்கும் விஷயம் அண்ணனுக்குத் தெரிந்து இருக்குமோ? இருக்காதே! தன்னவனுக்கே தனது காதல் தெரியாது எனும் பொழுது, வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லையே? என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்க,


தங்கையின் யோசனை படிந்த முகத்தைப் பார்த்து, "எதுனாலும் அண்ணாகிட்ட சொல்லுடா.. அது யாரா இருந்தாலும், அவங்ககிட்ட நான் பேசுறேன். எனக்கு உன் சந்தோஷம் ரொம்ப முக்கியம்!" என்று கனிவுடன் கூறிய அண்ணனைக் கண்கள் கலங்கப் பார்த்தாள் தனுஷா.


அதைக் கண்டு, "என்னடா?" என்று அவன் தங்கையிடம் கேட்க, கலங்கிய விழிகளை சரிசெய்து கொண்டு, "அ..அப்படிலாம் யாரும் இ..இல்லண்ணா.." என்றாள் சற்றுத் தடுமாற்றத்துடன்..


தங்கையின் தடுமாற்றத்தை உள்வாங்கிக் கொண்ட அஜித்குமார், "ஓகேடா, நீ கிளம்பு!" என்று கூற,


"சரிண்ணா…" என்றவள் அங்கிருந்து கிளம்ப, செல்லும் தங்கையையே பார்த்திருந்தான் அஜித்குமார்.


அண்ணனிடம் பேசி விட்டுத் தனது இடத்துக்கு வந்த தனுஷாவின் மனமோ படபடவென அடித்துக் கொண்டது. ஏன் அண்ணன் அப்படிக் கேட்டான் என்று அவளுக்குப் புரியவில்லை. அதே நேரம் தன்னவனின் மனதில் என்ன இருக்கிறது என்றும் தெரியவில்லை. மேலும் ரிசப்ஷன் அன்று அவன் தன் கையைப் பிடித்ததும், அவன் கண்ணில் தன் மேல் ஒருவித ஆர்வம் படிந்ததையும் அவள் உணர்ந்தே இருந்தாலும், அவனின் வாய் வார்த்தையாகக் காதலை அறியும் முன்பு, தன் மனதை யாரிடமும் சொல்ல அவளுக்கு விருப்பம் இல்லை. 


அதன் பிறகு அவளுக்கு வேலையில் கவனம் செல்லவில்லை. ஒருவழியாக மாலை வரை நேரத்தைக் கடத்தியவள், மணி ஆறை நெருங்க தனது கணினியை அணைத்து விட்டு வீட்டுக்குக் கிளப்பினாள். அன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நிச்சயம் மழை வெளுத்து வாங்கப் போகிறது என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே, சடசடவென்று மழைத்துளிகள் சிந்த ஆரம்பிக்க, அடுத்த பத்து வினாடிக்குள் தொப்பலாக நனைந்து இருந்தாள் தனுஷா. மேலும் சிறிது தூரமே சென்றிருப்பாள். அவளது ஸ்கூட்டி திடீரென நடுவழியில் நின்று விட்டது.


"என்னாச்சு?" என்று மீண்டும் மீண்டும் இயக்க முயற்சித்துப் பார்த்தாள் தனுஷா. பலன் என்னவோ பூஜ்யமாக இருக்க, "ம்பச்!" என்றபடி வண்டியை சாலையின் ஓரம் தள்ளிக் கொண்டு சென்றவளுக்கு, அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. பின்பு அண்ணனுக்கு அழைக்கலாம் என நினைத்துத் தனது கைப்பையில் இருந்து மொபைலை எடுத்தவள், பதட்டத்திலும் குளிரில் கை நடுங்கியதால் போனை கீழே தவற விட்டு இருந்தாள்.


"அச்சோ!" என்று சலித்துக் கொண்டு மொபைலை எடுக்க, அது மழை நீரில் நனைந்து தனது உயிரை விட்டு இருந்தது.


"ச்ச!" என்றபடி சாலையின் இருபக்கமும் பார்வையை ஓட்டினாள். சில வாகனங்கள் மட்டும் சென்று கொண்டிருக்க, தன் பின்னால் சற்றுத் தள்ளி இருந்த ஒரு மரத்தின் கீழே சென்று நின்று கொண்டாள். மழையில் நனைந்ததாலும், குளிர் காற்று வேகமாக வீசுவதாலும் குளிரில் அவளுக்கு உடல் வெடவெடக்க ஆரம்பித்தது. 


நேரம் கடந்து இருள் சூழ ஆரம்பிக்க, அவளுக்கு உள்ளுக்குள் சிறிது பயம் பிடித்தது. சாலையில் சென்று கொண்டிருக்கும் ஏதாவது ஒரு வண்டியை நிறுத்தி லிப்ட் கேட்கவும் மனம் இல்லை. எவ்வளவு நேரம் அப்படியே நடுங்கியபடி நின்றிருந்தாளோ? அவளைக் கடந்து சென்றது ஒரு கார். 


சிறிது தூரம் முன்னோக்கிச் சென்ற அந்த வாகனம், சட்டென்று நின்று, பின்பு திடீரென பின்னோக்கித் தனுஷா நின்றிருந்த பக்கம் வந்து நின்றது.


அந்த காரின் ஜன்னல் மூடி இருந்ததாலும் வேகமாகப் பெய்து கொண்டிருந்த மழையாலும், அது யார் வாகனம் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. பயத்தில் மெதுவாக நகர்ந்து மரத்தின் பின்னே சென்று அவள் தன்னை மறைத்துக் கொள்ள, அதற்குள் காரில் இருந்து இறங்கிக் குடையைப் பிடித்தபடி அவளை நோக்கி வந்தவனோ, அவளுக்கும் சேர்த்துக் குடையைப் பிடித்தான்.


வெகு அருகே யாரோ ஒருவன் வந்து நிற்பதைக் கண்டு அரண்டு போய் சற்றுப் பின்னோக்கி நகர்ந்த தனுஷா, மரத்தின் வேர் தடுக்கிக் கீழே விழ போனாள்.


"ஹேய்! கவனம்!" என்று அவளைப் பிடித்துத் தன்னோடு நெருங்கி நிற்கச் செய்தவன், "எதுக்கு இப்படி மழையில நனைஞ்சிட்டு நிக்கிறே? வண்டிக்கு என்னாச்சு?" என்ற ஆளுமையான குரலில் வேகமாக நிமிர்ந்து பார்த்தாள் தனுஷா. அவளது இதழோ, "விக்ரம்.." என்றது நிம்மதியுடன்!


எப்பொழுதும் போல் அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்குக் கிளம்பிய விக்ராந்த் பாதி வழி தான் சென்றிருப்பான். வேகமாக வீசிய மழை காற்றில் ஒரு மரம் விழுந்து, அந்தச் சாலையில் போக்குவரத்து தடைபட்டு இருந்தது. அதனால் வேறு பாதையில் வந்து கொண்டிருந்தவனின் கண்ணில், மழைக்காக ஒதுங்கி நின்ற தனுஷா விழுந்ததும், சிறிதும் தாமதிக்காமல் இறங்கி அவள் அருகே வந்து விட்டான்.


தன்னவனின் வருகையை அவள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அந்நேரம் பெரும் நிம்மதியாக உணர்ந்த தனுஷா, "அது.. வந்து வண்டி ஸ்டாப் அகிருச்சு. என்ன பி..ரச்சனைன்னு தெரியல. போன் கை தவறி தண்ணியில விழுந்ததால அ..ண்ணாக்கு போன் பண்ண முடியல. லிப்ட் கேட்டுப் போகவும் ப..யமா இருந்தது. அதான் இங்கேயே நி..ன்னுட்டேன்.." என்று அவள் குளிரில் நடுங்கியபடி கூறினாள்.


அவனோ, "சரி வா, நான் உன்னை வீட்ல ட்ராப் பண்றேன்.." என்று அணைத்தபடி அவன் அவளை அழைத்துச் செல்ல, 


அப்பொழுதுதான் அவனது அணைப்புக்குள் இருக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்தது. அதே நேரம், அன்று ரம்யா அவனது நெஞ்சில் சாய்ந்து இருந்த காட்சி தேவை இல்லாமல் இப்பொழுது ஞாபகத்துக்கு வர, சட்டென்று அவனிடம் இருந்து விலக முயன்றாள்.


"எதுக்குத் தள்ளிப் போறே, கீழே விழுறதுக்கா?" என்று அவன் அவளை அதட்ட,


"இல்ல, வேண்டாம்…" என மறுத்தவள்,


"உங்க போன் குடுங்க, நான் அண்ணாக்கு போன் பண்ணி அவரை வந்து என்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்" என்று 'நான் உன் காரில் வரவில்லை' என்பதை மறைமுகமாக அவள் கூற,


அதைப் புரிந்து கொண்ட விக்ராந்த், "ஏன் நான் உன்னைக் கூட்டிட்டுப் போக கூடாதா? இல்ல என் கூடத் தனியா வரப் பயமா?" என்று இருபொருள் பட கேட்டான்.


அவனது கேள்வி புரிந்து, அவள் தனது இழதை மடித்துக் கடித்துக் கொள்ள, அவனின் பார்வை அவளது இதழில் படிந்தது.


"எவ்வளவு நேரம் இப்படியே நடுங்கிட்டு நிக்க போறே? என் கூட வா.." என்றவன், மீண்டும் அவளைத் தன்னோடு அணைத்தவாறு நடத்திச் செல்ல முயன்றான்.


ஆனால் அவளோ, "இல்ல.." என்று மறுத்துக் கூறவும்,


அவளை முறைத்தவன், அவளை வலுக்கட்டாயமாகத் தன்னோடு இழுத்துக் கொண்டு சென்ற அடுத்த நொடி, பளீரென ஒரு மின்னல் அந்த மரத்தின் மீது விழ, அந்த மின்சார தாக்கத்தின் விளைவு, அந்த மரம் வேரோடு கீழே தனுஷாவின் ஸ்கூட்டியின் மீது சாய்ந்தது. அதைக் கண்டு, "ஆ.ஆ.ஆ.." என்று பயத்தில் கத்தியபடி விக்ராந்த்தைக் கட்டிக் கொண்டாள் தனுஷா.


அவனுக்குமே சற்று அதிர்வு தான்! நொடி நேரம் தாமதித்து இருந்தால், அந்த மின்னல் தன்னவள் மேல் அல்லவா விழுந்திருக்கும்? அதை நினைக்கவே அவன் நெஞ்சம் சற்று நடுங்கித்தான் போனது. பயத்தில் தன்னைக் கட்டிக் கொண்டவளைத் தானும் இறுக்கிக் கட்டிக் கொண்டான் விக்ராந்த். பின்பு அவளின் உடல் நடுக்கத்தில் தன்னிலைக்கு மீண்ட விக்ராந்த், "ஒன்னும் இல்ல தனு" என்று அவளைச் சமாதானம் செய்து காரில் அமர வைத்து விட்டு, தானும் ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்து வாகனத்தைக் கிளப்பினான்.


பயத்திலும், மழையில் நனைந்ததால் ஏற்பட்ட குளிரிலும் அவள் நடுங்கிக் கொண்டிருக்க, அதைக் கவனித்த விக்ராந்த் சற்றுத் தள்ளி வந்து மீண்டும் வாகனத்தை நிறுத்தியவன், டேஷ் போர்டைத் திறந்து ஒரு சிறிய துவாலையை எடுத்து, "இந்தா துடைச்சுக்கோ!" என்று அவளிடம் நீட்ட, அவன் கையில் இருந்து அதை வாங்கினாலும், அவளது உடல் குளிரிலும், பயத்திலும் தூக்கித்தான் போட்டது.


"தனு! பயப்படாதே!" என்று அவளது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்ட விக்ராந்த், தனது கைக் கொண்டு அவளது உள்ளங்கையைச் சூடு பறக்கத் தேய்த்து ஆரம்பித்தான்.


எவ்வளவு தான் சூடு பறக்க தேய்த்தாலும், அவளது ஈர உடை அவளை மேலும் நடுங்கத்தான் வைத்தது.


அவளையே பார்த்திருந்தவன், என்ன நினைத்தானோ, சிறிதும் யோசிக்காமல் தனது சட்டையைக் கழட்டி அவளுக்குப் போர்த்தி விட்டான்.


அவனது செயலில் அவள் அதிர்ந்தாலும், தனது குளிர் தேகத்தில் தன்னவனின் கதகதப்பு நிறைந்த சட்டை இதமாக இருக்க, அதைத் தன்னோடு மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் தனுஷா. 


"இப்ப ஓகேவா? சீட் பெல்ட் போட்டுக்கோ, வீட்டுக்குப் போகலாம்.." என்றுவிட்டு காரை கிளப்பினான் விக்ராந்த். ஆனால் அவள் சீட் பெல்ட் போடாமல் அப்படியே இருப்பது கண்டு, அதைத் தானே போட்டு விட நினைத்து அவளை நெருங்கிய நேரம், மீண்டும் பயங்கர இடி மின்னல் சத்தம் கேட்டது. அதில் பயந்த தனுஷா, அவனது வெற்று தோளை இறுக பற்றிக் கொண்டாள்.


பெண்ணவள் தளிர் விரல்கள் கொடுத்த அழுத்தத்தில் விக்ராந்த் அவளை நிமிர்ந்து பார்க்க, பனியில் நனைந்த ரோஜா மலரை போல், முகத்தில் நீர்த்திவலைகள் மின்ன அமர்ந்திருந்தாள் தனுஷா.


அவனது ஆழ்ந்த பார்வையில் பட்டென்று தனது கைகளை விலக்கிக் கொண்டு, "சா..சாரி! நான் பயத்தில தெரியாம.." என்றவளுக்கு இப்பொழுது அவனது பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் உடலில் படபடப்பு ஏற்பட்டது.


அவளது படபடப்பைப் புரிந்து கொண்டு புன்னகைத்தவன், அவளின் பயத்தைப் போக்கும் பொருட்டு, அவளை மென்மையாக அணைத்துக் கொண்டு, அவளது உச்சந்தலையில் தன் முதல் முத்தத்தைப் பதித்தான் விக்ராந்த்.


அவனது செயலில் முதலில் திகைத்தாலும், அவன் அணைப்பில் அவளும் வாகாய் அடங்கிக் கொண்டவள், தானும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். 


அவனது முத்தத்தில் திளைத்துக் கண்களை மூடிக் கொண்ட தனுஷா, தனது கன்னத்தை அவனது முடியடர்ந்த வெற்று மார்பில் அழுத்தமாக பதித்துக் கொள்ள, அவளது இந்த ஒன்றுதலை உள்வாங்கிக் கொண்ட விக்ராந்த், தனது மார்பில் இருந்து அவளது முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தான். 


அவளோ கண்களை இறுக மூடி இருந்தாளே தவிர, அவன் முகத்தைப் பார்க்க விழையவில்லை. வெட்கம் அவளைத் தடுத்தது.


"தனு!" என்ற அவனது ஆழ்ந்த குரலில், அவளோ, "ம்ம்ம்.." என்று மட்டும் முனக, வெளியே கொட்டித் தீர்க்கும் மழையும், காரின் உள்ளே இதமான சூழலும், தன்னவளின் அருகாமை, இறுகிய அணைப்பும் என விக்ராந்த்தை வேறு உலகுக்கு அழைத்துச் செல்ல, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவளது செவ்விதழைத் தன் வசம் ஆக்கிக் கொண்டவனின் ஒரு கை காரின் உள்ளே ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து இருந்தது.


தன்னவனின் இதழ் முத்தத்தை எதிர்பாராத தனுஷாவின் கண்கள் விரிந்து கொண்டது. தன்னவளின் இதழ் சுவையில் தன்னைத் தொலைத்து, உணர்ச்சியின் பிடியில் இருந்த விக்ராந்த்தின் கைகள் அவளது மெல்லிடையில் அழுத்தமாக பதிய, அதில் அவளது உடலோ சிலிர்த்து அடங்கியது.


இருவர் மனதிலும் காதல் இருந்தாலும், அதை ஒருவருக்கொருவர் இதுவரை வாய் வார்த்தையாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், தன்னவனின் இந்த நெருக்கம், அவனது மனதை அவளுக்குப் புரிய வைத்துக் கொண்டு இருந்தது.


எவ்வளவு நேரம் அவர்களின் முத்த யுத்தம் நீண்டு கொண்டே போனதோ?! அவர்களின் வாகனத்தைக் கடந்து சென்ற மற்றொரு வாகனத்தின் ஹாரன் சத்தத்தில் அவனிடம் இருந்து வேகமாக விலக முயன்றாள் தனுஷா. ஆனால் விக்ராந்த்தோ, மிக மிக மென்மையாகத் தன்னிடம் இருந்து அவளை விலக்கி அமர வைத்தவன், மீண்டும் விளக்கை ஒளிர விட்டு அவளது முகம் பார்த்தான்.


அவளது செந்நிற மேனி அவன் கொடுத்த முத்தத்தில் மேலும் சிவந்து இருக்க, அவனது முகம் பார்க்க வெட்கப்பட்டு, தனது பார்வையை வெளியே படர விட்டாள் தனுஷா.


அவளது இந்த வெட்கம் அவனை மேலும் பித்தம் கொள்ள செய்ய, ‘மீண்டும் அவளை ஆட்கொள்!’ என்று அவனது மனமும், உடலும், உணர்வுகளும் பேயாட்டம் போட, அதை அடக்கப் பெரும்பாடு பட்ட விக்ராந்திற்குத் தன்னை நினைத்து வியப்பாக இருந்தது.


இதுவரை யாரிடமும் செல்லாத தன் மனம் இவளைக் கண்டதும் மனதில் ஆர்ப்பரிக்கும். அது காதல் தானா என்று அவன் யோசித்துக் கொண்டு இருந்த வேளையில், 'உன் உணர்வுகளைத் தட்டி எழுப்ப கூடிய ஒரே பெண் இவள் மட்டுமே!' என்று இன்று உணர்ந்து கொண்டான்.


'சீக்கிரமே வீட்டில் பேசி விட வேண்டும். இதற்கு மேலும் இவளை விட்டுத் தன்னால் தள்ளி இருக்க முடியாது' என்று எண்ணிக் கொண்டவன், தன்னைச் சமன் செய்து கொண்டு,


"கிளம்பலாமா?" என்று மென் குரலில் கேட்க, "ம்ம்.." என்று மட்டும் பதில் அளித்த தனுஷா, அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.


இன்று மாலை வரை உறுதியாக இல்லாமல் இருந்த அவளது காதலை, முத்த அச்சாரம் மூலம் உறுதி படுத்தி இருந்தான் அல்லவா அவளவன்?! சீக்கிரமே தன் அண்ணனிடம் பேச வேண்டும் என்று அவளும் தனக்குள் முடிவு எடுத்துக் கொண்டாள்.


இவர்கள் என்னதான் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டாலும், கடவுள் விதித்தது தானே அங்கே நடக்கும்! அதை மாற்ற நாம் யார்?


வாகனத்தைக் கிளப்பிய விக்ராந்த், பிளேயரில் பாடலை ஒலிக்க விட்டான். அதிலோ,


உன் நெனப்பு

நெஞ்சுக்குழி வர இருக்கு

என் உலகம் முழுசும்

உன்னை சுத்தி சுத்தி

கெடக்கு


மனசுல ஒரு

வித வலிதான் சுகமா

சுகமா எனக்குள்ள

உருக்குற உன்ன

நீயும் நிஜமா நிஜமா


கண்ணே கண்ணே

காலம் தோறும் என்கூட நீ

மட்டும் போதும் போதும்

நீ நாளும்



என்று தனுஷாவின் மனதை எடுத்துரைக்க, அவளோ விழி உயர்த்தி தன்னவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் கட்டுண்ட விக்ராந்த் வலது கையால் வாகனத்தை செலுத்தியவன், இடது கையால் அவளது கையைப் பிடித்துத் தனது கைக்குள் அடக்கிக் கொண்டான்.


நான் முழுசா

உன்னை எனக்குள்ள

பொதைச்சேன் என்

உசுர அழகே உன்ன

நித்தம் நித்தம் நெனச்சேன்


இனி வரும் ஜென்மம்

மொத்தம் நீயும் தான் உறவா

வரணும் மறுபடி உனக்கென

பிறந்திடும் வரம் நான் பெறணும்


பெண்ணே பெண்ணே

வாழ்க்கை நீள என் கூட நீ மட்டும்

போதும் போதும் நீ நாளும்


என்ற வரியில் அவன் இதழில் புன்னகை அரும்ப, அவளைப் பார்த்தான்.


ஒருவழியாக அவர்கள் வீடும் வந்து சேர, மழையும் நின்றிருந்தது. அஜித்தின் வீட்டின் முன் தனது வாகனத்தை நிறுத்திய விக்ராந்த், அவளை பார்த்தவாறு திரும்பி அமர்ந்தான்.


அவளும் அதே நேரம் அவனைப் பார்க்க, அவனது ஆண்மை மிகுந்த தோற்றத்திலும், பார்வையிலும் நாணம் கொண்டவள், "நா..நா இறங்குறேன்…" என்றுவிட்டு கார் கதவை திறக்கப் போக, அதுவோ பூட்டி இருந்தது.


"ம்ம்ம்.. நான் சொல்லாம அது திறக்காது.." என்றான் குறும்புடன்.


அதில் அவனை முறைத்தவள், "வீட்டுக்கு முன்னாடி வச்சி இது என்ன விளையாட்டு?" என்றாள்.


"அப்போ இன்னொரு ரவுண்டு கார்ல ட்ரைவ் போய்ட்டு வரலாமா?" என்று அதே குறும்புடன் அவன் கேட்க,


அவனது விளையாட்டு புரிந்து, "ப்ளீஸ்! நான் இன்னும் வரலன்னு அம்மா தேடிட்டு இருப்பாங்க.." என்று கெஞ்சுதலாக அவள் சொல்ல,


"ஓகே, நீ கிளம்பு.." என்று உடனே டோர் லாக்கை அவன் ரிலீஸ் செய்து இருந்தான்.


அவனது குரலில் வித்தியாசத்தை உணர்ந்து, ஒருவேளை கோபம் கொண்டு விட்டானோ? என எண்ணி வேகமாக அவன் முகம் பார்த்தாள் தனுஷா.


ஆனால் அவனோ, அவளைப் பார்த்து கண் சிமிட்டி வைக்க, அதில் மேலும் முகம் சிவந்தவள், அடுத்த நொடி காரில் இறங்கி வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.


 "ஏய் தனு! ஒருநிமிசம்.." என்று விக்ராந்த் அவளைத் தடுத்து நிறுத்த, 


அவளோ, "என்ன" என்பது போல் திரும்பிப் பார்க்கவும், "என் சட்டை.." என்று தன் புருவத்தை உயர்த்திக் கேட்டான் அவன்.


அப்பொழுது தான் தன் மேனியில் தழுவி இருந்த அவனது சட்டையின் ஞாபகமே அவளுக்கு வந்தது. அதை எடுத்து அழகாக மடித்துத் தனது கைகளுக்குள் அடக்கி வைத்துக் கொண்ட தனுஷா, 


"தர முடியாது!" என்று அவனுக்குப் பழிப்பு காட்டி விட்டு வேகமாக வீட்டை நோக்கி நடந்து விட்டாள்.


அவளது செயலில் சிரிப்புடன் தன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டே விக்ராந்த் தனது வீட்டை நோக்கி வாகனத்தை மீண்டும் கிளப்ப, இவை அனைத்தையும் பால்கனியில் நின்று யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் நேகா.


ஆம்! மழையை ரசித்தபடி தனது அறையின் பால்கனியில் நின்றிருந்த நேகா, வீட்டு வாசலில் வந்து நின்ற வாகனத்தைப் பார்த்து, "ஹை ப்ரோ! என்ன திடீர்னு என்னைப் பார்க்க வந்து இருக்கான்.." என்று அவள் குதூகலித்துக் கொண்டு இருக்கும் பொழுது, தனுஷா முன்பக்க கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள்.


'இவ எப்படி அண்ணா கார்ல?" என்று மேலும் யோசித்துக் கொண்டே கீழே இறங்கி வரும் போது, விக்ராந்த்தின் வாகனம் கிளம்பி இருந்தது.


"அண்ணா எதுக்கு என்னைப் பார்க்க வராம போறான்?" என்று எண்ணியவளின் பார்வை ஒருவித உற்சாகத்துடன் வந்து கொண்டிருந்த தனுஷாவின் மீது படிந்தது. 


அவளோ, தன் காதல் கைக் கூடிய சந்தோஷம், தன்னவன் தனக்குக் கொடுத்த இதழ் முத்தம், அவன் வாசத்தை உணர வைத்துக் கொண்டிருந்த அவன் உடை எனத் தனது தனி உலகத்தில் சஞ்சரித்தபடி வீட்டுக்குள் வந்தவள், அங்கே மகளைக் காணாமல் தவித்துப் போய் அமர்ந்து இருந்த அன்னையின் அழைப்பை கூடக் கவனிக்காமல் கனவுலகில் மிதந்தபடி, தனது அறைக்குள் சென்று கதவை சாற்றி கொண்டாள்.


"என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு? கூப்பிட கூப்பிட பதில் சொல்லாம அவ பாட்டுக்குப் போறா.." என்று லட்சுமி புலம்ப,


நேகாவுக்கோ தனுஷாவின் நடவடிக்கை ஒரளவுக்குப் புரிந்தது. ஆனால் புரிந்த விஷயம் தான் அவளுக்கு உவப்பானதாக இல்லை.


"என் வாழ்க்கையைக் கெடுத்தது பத்தாதுனு, இப்ப என் அண்ணா வாழ்க்கையைக் குறி வைக்கறியா? இந்த நேகா இருக்கும் மட்டும் அது நடக்காதுடி!" என்று கறுவி கொண்டாள் நேகா.


****

No comments:

Post a Comment