ஸ்வரம் 35

 



ஸ்வரம் 35


மழை பெய்து ஓய்ந்து, வானில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மின்னி மறைந்து கொண்டு இருக்க, காரின் ஜன்னலை இறக்கி விட்டு இடது கையால் வாகனத்தைச் செலுத்திய விக்ராந்த், வலது கையால் தலையை அழுத்தி கோதி கொண்டு ஈர காற்றை ரசித்தவனின் இதழிலோ புன்னகை பூத்திருந்தது.


அவன் மனதோ தனுஷாவிடம் தாவி செல்ல, ஒருவித உற்சாகத்துடன் தனது வீட்டின் போர்டிக்கோவில் காரை நிறுத்தினான்.


வீட்டின் உள்ளே ராதா எப்பொழுதும் போல் டீவி சீரியலில் மூழ்கி இருக்க, மோகனாவோ கணவனிடம் முக்கியமான விஷயம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தாள். அப்பொழுது விசில் சத்தம் கேட்க,


"என்னங்க.. நான் உங்ககிட்ட எவ்வளவு சீரியஸான விஷயம் பேசிட்டு இருக்கேன்? நீங்க என்னன்னா கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம இப்படி நடு ஹாலில் உக்காந்துகிட்டு என்னைப் பார்த்து விசில் அடிக்கிறீங்க. ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது? நம்ம மூணு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகிருச்சு, ஞாபகத்துல வச்சிக்கோங்க. இன்னும் சின்ன பையன்னு நினைப்பா உங்களுக்கு?" என்று கணவனை முறைத்தாள் மோகனா.


"விசிலா? நான் எதுக்குடி உன்னைப் பார்த்து விசில் அடிக்கப் போறேன்? என் ரசனை என்ன அவ்வளவு சீப்பா போச்சா?" வேண்டும் என்றே மனைவியிடம் வம்பிழுத்தான் கார்த்திக்.


"என்ன சொன்னிங்க?" மோகனா எகிறி கொண்டு வரவும்..


"சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டி…" நொடியில் மனைவியிடம் சரணடைந்த கார்த்திக், "விசில் அடிச்சது நான் இல்ல, உன் செல்ல புத்திரன் தான் விசில் அடிச்சுட்டு வரான்.. அதும் எப்படின்னு நீயே பாரு!" என்று அவன் கூறவும், மோகனாவின் பார்வை வாசலை நோக்கியது. 


அங்கே மேல் சட்டை இல்லாமல், இடது கையை ஜீன்ஸ் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு, வலது கையில் கார் சாவியைச் சுழற்றியவாறு வந்து கொண்டிருந்தான் விக்ராந்த்.


"என்னங்க இது? இவன் இப்படி வரான்?" என்று திகைத்துக் கணவனிடம் மோகனா கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவன் அவர்களைக் கண்டுகொள்ளாமல் படி ஏறப் போக,


"டேய் பேராண்டி! நில்லுடா.." பேரனை நிறுத்தினார் ராதா.


பாட்டியின் குரலில் நின்று திரும்பி அவரைப் பார்த்தவன், "என்ன பாட்டி?"  கேட்க,


"இது என்னடா கோலம்? உன் சட்டை எங்கே?" என்று அவர் கேட்கவும்,


அப்பொழுது தான் சுயஉணர்வுக்கே வந்தான் போலும்! தன்னைக் குனிந்து பார்த்தவனுக்கு ஒருவித கூச்சம் வர, "ஹி ஹி! அது.. அது வந்து பாட்டி.. இதோ போட்டுட்டு வரேன்.." என்று அசடு வழிந்தான்.


"டேய்! காலையில போட்டுட்டுப் போன சட்டை எங்கடா?" என்று விடாமல் கேட்டார் ராதா.


'என்ன சொல்வது?' என்று திருதிருவென முழித்த விக்ராந்த், "அது.. ஹான்! அது.. ஒரு குழந்தை மழையில நனைஞ்சி குளிர்ல நடுங்கிட்டு நின்னுச்சு பாட்டி. அதான் என் சட்டையைக் கழட்டி அந்தப் பெண்குட்டிக்கு.. ச்ச! அந்தப்  பெண்குழந்தைக்கு போர்த்தி விட்டேன்.." என்றவன், அவர் மேலும் ஏதும் கேட்கும் முன் விறுவிறுவென்று படியேறி, தனது அறைக்குச் சென்று மறைந்தான்.


"இவன் பேச்சே சரி இல்லையே? எங்கேயோ இடிக்குதே?" என்று பேரனைப் பற்றி யோசித்த ராதா மீண்டும் சீரியலில் கவனத்தைச் செலுத்த, மோகனாவும் அதே யோசனைடன் கேள்வியாகக் கணவனைப் பார்த்தாள்.


"என்ன?" என்று கேட்ட கணவனிடம், "அத்தை சொன்ன மாதிரி கொஞ்ச நாளாவே விக்கிகிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுதுங்க. அவன் சரி இல்ல, எதையோ மறைக்கிற மாதிரி இருக்கு.." என்று அவள் மகனைப் பற்றிக் கூறவும்,


"ம்ம்ம்.." என்று சிறிது யோசித்தவனோ, "பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய நேரம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன் மோகனா.." என்றான் விஷமச் சிரிப்புடன்.


கணவனின் பேச்சில் முகம் மலர்ந்தவளோ, "என்னங்க சொல்றிங்க? அப்போ நாளைக்கே ஓவியா வீட்டுக்குப் போய் ரம்யாவைப் பேசி முடிச்சுடலாமா?" என்று ஒருவித ஆர்வத்துடன் கேட்க,


"அவசரப் படாதே மோகனா! ரம்யா இன்னும் படிப்பை முடிக்கல. தென் நம்ம விக்ரம் மனசுல என்ன இருக்குனு மொத நாம தெரிஞ்சிக்கணும். அதுக்கு அப்புறம் என்ன பண்ணணுமோ பண்ணலாம்.." என்று கார்த்திக் முடித்தான்.


"என்ன பேசுறீங்க நீங்க? ரம்யா பிறந்ததும் விக்கிக்கு தான்னு முடிவு பண்ணிட்டோம் தானே? அந்த விஷயம் அவனுக்கும் தெரியும். என்னைக்கா இருந்தாலும் ரம்யா தான் இந்த வீட்டு மருமக! இப்ப நிச்சயம் மாதிரி வச்சுக்கலாம். அவ படிப்பு முடியவும் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை வச்சுக்கலாம்.." என்று மோகனா வேகமாகப் பேசிக் கொண்டே போக, "மோகனா!" என்று கண்டிப்புடன் அழைத்தான் கார்த்திக்.


கணவனின் அந்தக் குரலில் அவனை மோகனா புரியாமல் பார்க்க, 


அவனோ, "ரம்யா என் தங்கை பொண்ணுதான், அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா எனக்கும் சந்தோசம்தான்! ஆனா நேகா விஷயத்தில் அவகிட்ட கேட்காம நாம அவசரப்பட்ட மாதிரி, நம்ம பையன் கல்யாண விஷயத்தில் எடுத்தோம் கவிழ்தோம்னு முடிவு பண்ணக் கூடாது! நாளைக்கே விக்ரம்கிட்ட கேட்போம். அவன் சரின்னு சொல்லிட்டா மட்டுமே மேற்கொண்டு ஓவியா வீட்ல பேசுவோம். இல்லையா…" என்று அவன் கூறி முடிக்கும் முன்,


"நம்ம விக்கி ரம்யாவைக் கட்டிக்க நிச்சயமா சம்மதம் சொல்லுவான். என் பேச்சை மீற மாட்டான்! எனக்கு நம்பிக்கை இருக்குங்க.."  என்று மகனின் மனம் அறியாமல் கூறினாள் மோகனா.


"சப்போஸ் அவன் மறுத்துட்டா, அவன் மனசுல என்ன இருக்குனு அவன் உன்கிட்ட சொன்னா, அதுக்கு நீ மனசார சம்மதம் சொல்லணும், ஓகேவா?" என்று அழுத்தமாக கேட்டான் கார்த்திக். 


"அதை நாளைக்குப் பார்க்கலாம்.." என்று பேச்சை முடித்த மோகனா எழுந்து அறைக்குச் செல்ல, கார்த்திக்கோ ஒரு பெருமூச்சுடன் மனைவி சென்ற திசையைப் பார்த்தான்.


மறுநாள் உணவு மேஜையில் காலை உணவை கணவனுக்கும், மகனுக்கும், மாமியாருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள் மோகனா.


அப்பொழுது விக்ராந்த்தின் மொபைல் ஒலி எழுப்ப, எடுத்துப் பேசப் போனவனை, "விக்கி! சாப்பிடும் போது மொபைல் பேசக் கூடாதுனு சொல்லி இருக்கேனா இல்லையா?" என்று மோகனா முறைக்க,


"ஒரு இம்பார்ட்டெண்ட் க்ளையண்ட் கால் மோஹிமா.." என்றவனிடம் இருந்து மொபைலை பிடிங்கி ஓரமாக வைத்தாள் மோகனா. தாயின் செயலில் சிரித்துக் கொண்டே உண்ண ஆரம்பித்தான் விக்ராந்த்.


மோகனாவோ, "கேட்கவா?" என்பது போல் கணவனிடம் கண்களால் கேட்க, அவனும் "ம்ம்.. கேளு!" என்பது போல் கண்களை மூடித் திறக்கவும், "விக்கி.." என்று மகனை அழைத்தாள் மோகனா.


"என்ன மோஹிமா?" என்று உண்டவாறு நிமிர்ந்து தன்னைப் பார்த்த மகனிடம், 


"உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறோம்டா. உனக்குச் சம்மதம் தானே?" என்று மோகனா கேட்கவும், அவனின் பதிலை எதிர்பார்த்து அங்கிருந்த மூவரின் பார்வையும் விக்ராந்தின் மீது படிந்தது. 


அன்னை 'கல்யாணம்' என்றதும் விக்ராந்த்தின் மனக் கண்ணில் அவனும், அவனவளும் மணமேடையில் அக்கினி குண்டத்தின் முன் அமர்ந்து இருக்க, ஐயர் எடுத்து கொடுத்த தாலியைத் தன்னவளின் சங்கு கழுத்தில் கட்டி, அவளது பிறை நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சிகள் படமாக விரிய, அவன் இதழிழோ புன்னகை அரும்பியது.


"விக்கி.." என்று மீண்டும் மகனை அழைத்தாள் மோகனா.


அதில் கனவுலகில் இருந்து வெளியே வந்த விக்ராந்த், "சொல்லுங்க மோஹிமா.." என்றான்.


"டேய்! நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்.. நீ என்னன்னா தானா சிரிச்சுகிட்டே இருக்கே?" என்று மகனை முறைக்க,


"எனக்குச் சம்மதம் மோஹிமா.." என்றான் விக்ராந்த்.


மகன் கூறியதைக் கேட்டு கார்த்திக் அவனை ஆராய்ச்சியுடன் பார்க்க, ராதாவுக்கும் மோகனாவுக்கும் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை.


"என்னங்க.. நேத்து என்னமோ சொன்னிங்க.. இப்ப பார்த்தீங்களா? என் புள்ள அவனே சம்மதம்னு சொல்லிட்டான். நான் இப்பவே ஓவிக்கு போன் பண்ணிச் சொல்லிடுறேன். சாயங்காலம் நம்ம ஜோசியரைப் பார்த்து விக்கி-ரம்யா நிச்சயத்துக்கு நாள் குறிச்சுடலாம்.." என்று பேசிக் கொண்டே போக,


‘வாட்? எனக்கும் ரம்யாவுக்குமா?' என்று மனதில் ஜெர்க்கானவன், சற்று நிதானித்தான். ஏனெனில் அவனுக்கும், ரம்யாவுக்கும் அவனது அன்னை எப்பொழுதோ முடிச்சு போட்டு விட்டார் என்றும், இந்தப் பேச்சு என்றாவது ஒருநாள் பேசப்படும் என்றும் அவன் அறிந்து தான் இருந்தான். ஆனாலும் அதைப் பற்றிப் பேசி அன்னையின் கோபத்தைக் கிளற விரும்பாமல், அப்போதைக்கு அமைதியாக இருந்தான். அதே நேரம் ரம்யாவின் மனதில் தன் மேல் காதல், ஈர்ப்பு என்பது மாதிரியான ஆசைகள் வரக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தான். காரணம், அவன் அவளை உடன்பிறப்பாகத்தான் பாவித்துக் கொண்டு இருக்கிறான். 


இப்பொழுது திடீரென அன்னை தனது கல்யாணப் பேச்சை எடுக்கவும், இதற்கு மேலும் அமைதியாக இருப்பது நல்லதுக்கு அல்ல என்று உணர்ந்தவன்,


"மோஹிமா.. ஒரு நிமிசம்.." என்று தாயின் பேச்சை நிறுத்தியவன், "கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்தான். ஆனா பொண்ணு யாருன்னு நீங்க கேட்கவே இல்லையே?" என்று தாயைப் பார்த்தான் விக்ராந்த்.


அதில் "என்னடா பேராண்டி சொல்றே? பொண்ணு நம்ம ரம்யா தான்னு எங்களுக்குத் தெரியாதா?" என்று ராதா அவனைப் புரியாமல் பார்த்தார்.


பாட்டியைப் பார்த்து மென்புன்னகை புரிந்த விக்ராந்த், "பாட்டி! கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழுச் சம்மதம்தான். ஆனா ரம்யாவை கட்டிக்கப் போறேன்னு சொல்லவே இல்ல.." என்று கூறவும்,


மோகனாவோ, "விக்கி.." என்று சற்று அழுத்தமாக அழைக்க,


"எஸ் மோஹிமா.. நான் ஒரு பெண்ணை விரும்புறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..." என்று கூற, மகனை அதிர்ந்து பார்த்தாள் மோகனா.


கார்த்திக்கோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், "என்னங்க சொல்றான் இவன்? ரம்யா பிறந்ததுல இருந்து இவனுக்குத்தான்னு முடிவு பண்ணி இருக்கோம். அது இவனுக்கும் தெரியும். தெரிஞ்சும் வேற பொண்ணைக் காதலிக்கிறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று மகனை விடுத்துக் கணவனிடம் அவள் பாய,


அவனோ, "மோகனா! அவன் மனசுல என்ன இருக்கோ, கேட்டு, அதுக்கு அப்புறம் முடிவு பண்ணலாம்னு நேத்து சொன்னேனா இல்லையா?" என்று பொறுமையாகக் கூறவும்,


"அதெல்லாம் இவன் இஷ்டத்துக்கு ஆட முடியாதுங்க! ரம்யா தான் இந்த வீட்டு மருமக.." என்றாள் முடிவுடன்.


தனது நெற்றியை விரல் கொண்டு நீவிய விக்ராந்த் எழுந்து தாயின் அருகே வந்தவன், "மோஹிமா! எனக்கு உங்க ஆசை புரியுது. ஆனா நான் ரம்யாவை அப்படி ஒருநாளும் பார்த்தது இல்ல. எனக்கு மேகா, நேகா, ஸ்னேகா எப்படியோ அப்படித்தான் ரம்யாவும். நான் தூக்கி வளர்த்த குழந்தை அவ. எனக்கு அவ மேல வேற எந்த ஈர்ப்பும் வரலம்மா.. ப்ளீஸ்! என்னைப் புரிஞ்சிக்கோங்க.." என்று எடுத்துக் கூறினான்


"பேராண்டி! நிஜமாவே உனக்கு ரம்யாவைப் பிடிக்கலயா?" என்று கேட்டார் ராதா. அவருக்கும் தன் பேத்தி இந்த வீட்டுக்கு வாழ வர வேண்டும் என்ற ஆசை மலையளவு இருந்தது.


"பாட்டி! எனக்கு ரம்யாவை ஒரு தங்கையா பிடிக்கும். ஆனா தாரமா ஒருநாளும் நினைச்சுப் பார்த்தது இல்ல.." என்று கூற, தொப்பென்று இருக்கையில் அமர்ந்தாள் மோகனா. 


"மோஹிமா!" என்று விக்ராந்த் பதற, அவளோ, "நீயாவது என் ஆசையை நிறைவேத்துவன்னு நினைச்சேன்டா. நேகா மாதிரி நீயும் என்னை ஏமாத்திட்டேல்ல.." என்று வருத்தத்துடன் கூற,


"எனக்கு உங்க வருத்தம் புரியுது மோஹிமா. ஆனா நான் ஒரு பொண்ணை மனசார விரும்புறேன். அவ என் லைஃப்ல வந்தா நான் ரொம்பச் சந்தோஷமா இருப்பேன்னு என் மனசு சொல்லுது.." என்று காதலுடன் கூறிய விக்ராந்த் அறியவில்லை.. அவளைப் பிடிக்கவில்லை என்று கூறி, முற்றிலுமாக தனுஷாவை வெறுத்து ஒதுக்கப் போவதை…


மகனின் குரலில் தெரிந்த காதலை உணர்ந்த மோகனா, "அந்தப் பொண்ணு யாரு? அவ பேர் என்ன ?" என்று கேட்டாள்.


அன்னையின் அருகே அமர்ந்த விக்ராந்த், அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு, "நேகா பிரென்ட் தனுஷா.." என்று கூறவும்,


"யாரு அஜித் மாப்ளயோட தங்கச்சியா?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள் மோகனா.


"ஆமாம்மா" என்று தாயின் சம்மதத்தை எதிர்நோக்கி அவன் காத்திருக்க,


அவனது கன்னம் தொட்டு, "சீக்கிரமே அவங்க வீட்ல பேசி உங்க கல்யாணத்தை நடத்திடலாம்.." என்று தனது சம்மதத்தைத் தெரிவித்தாள் மோகனா.


அதை நம்ப முடியாது ஆச்சரியமாகப் பார்த்த விக்ராந்த், "மோஹிமா! உண்மையாவா?" என்று கேட்டான். ஏனெனில் மோகனாவின் பிடிவாதத்தை அறிந்தவனாயிற்றே! இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பார் அன்னை என்று அவன் நினைக்கவே இல்லை! 


அவனது தாயோ, "கண்ணா! எங்க பிள்ளைகள் சந்தோஷம் தான் எங்க சந்தோசம். எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல! நான் ஓவிக்கிட்ட பேசிக்கிறேன்" என்று புன்னகை முகமாகக் கூறினாள்.


"தேங்க்ஸ்மா! தேங்க்யூ சோ மச் அன் லவ் யூ மோஹிமா.." என்று சந்தோசத்துடன் அன்னையின் கன்னத்தில் முத்தம் வைத்தவன், அலுவலகம் கிளம்பிச் செல்ல, ராதாவும் அமைதியாகத் தனது அறைக்குச் சென்று விட்டார். 


இருவரும் கிளம்பவும், மோகனாவோ கணவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். அவனோ மனைவியின் பார்வையை உணர்ந்து, "மோகனா! நானும் கிளம்புறேன்டா.." என்று எழுந்து கொள்ள போக,


"விக்ராந்த் லவ் பண்ற விஷயம் உங்களுக்கு முன்னமே தெரியுமா? அதான் நேத்து அப்படிச் சொன்னீங்களா?" என்று முறைத்துக் கொண்டே கேட்டாள் அவன் மனையாள்.


"அது.. அது.." என்று கார்த்திக் திணறவும், அவளோ, "சும்மா சொல்லுங்க.. அடிக்க மாட்டேன்.." என்று சிரிப்பை அடக்கியபடி கூற, இப்பொழுது முறைப்பது அவன் முறையானது. 


"ஆனாலும் நீங்க எனக்குப் பயப்படுற மாதிரி நடிக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்! ஒழுங்கா விஷயத்தைச் சொல்லுங்க!" என்று மீண்டும் முறைக்க,


"அது மோகனா.. ஒருநாள் விக்ராந்த் அவனோட மொபைலை மறந்து ஆபிஸ்ல விட்டுட்டு சைட் விசிட் போய்ட்டான் போல.. ரொம்ப நேரமா போன் அடிச்சுட்டு இருக்கவும், அதை பியூன் எடுத்து வந்து என்கிட்ட கொடுத்தான். அதுல ஸ்க்ரீன் சேவரா அந்தப் பொண்ணு போட்டா தான் இருந்தது. அதைப் பார்த்து எனக்கும் அதிர்ச்சி! அப்புறம் போன்ல போட்டோ கேலரியைத் திறந்து பார்த்தா, புல்லா அந்தப் பொண்ணு போட்டோ மட்டும் தான் இருந்தது. இதைப் பத்தி அவன்கிட்ட கேட்கணும்ன்னு நினைச்சு இருந்தேன். அதுக்குள்ள ஓவியா பிரச்சனை அது இதுன்னு வரவும் மறந்துட்டேன். நேத்து நீ ரம்யா பத்தி பேசவும் தான் எனக்கு மறுபடியும் நினைவுக்கு வந்தது. அதைப் பத்தி நான் உன்கிட்ட சொல்றதை விட, விக்ரம் அவன் வாயாலே சொன்னா தான் நல்லதுன்னு எனக்குத் தோணுச்சு" என்று முடித்த கார்த்திக்,


மனைவியின் கையை எடுத்துத் தனது கைக்குள் அடக்கிக் கொண்டவன், "உனக்கு இதில முழுச் சம்மதம் தானே மோகனா?" என்று கேட்க.. 


"பொய் சொல்ல விரும்பலங்க.. கொஞ்சம் வருத்தம் தான்! ஆனா நான் சம்மதம் சொன்னதும், விக்கி முகத்தில தெரிஞ்ச மகிழ்ச்சி தான் எனக்குப் பெருசா தெரிஞ்சிது. நேகா விஷயத்துல பண்ண தப்பை என் மகன் விஷயத்துல பண்ண விரும்பல. எனக்கு என் பிள்ளைகள் சந்தோஷம் தான் முக்கியம். நாளைக்கு ஓவி வீட்டுக்குப் போய் பேசுவோம். அவ நிச்சயம் நம்மளைப் புரிஞ்சிப்பா" என்று கூற, மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டான் கார்த்திக்.


****


இரவு நேரம் வேலை முடிந்து களைப்புடன் தனது அறைக்கு வந்த விஷால், கழுத்தில் இருந்த டையை கழட்டியபடி திரும்பியவனின் பார்வையில் பால்கனியில் நின்றிருந்த தேவ் விழுந்தான்.


"இவன் என்ன இன்னும் வேலைக்குக் கிளம்பாம இருக்கான்?" என்று யோசித்தவாறு நண்பனின் அருகே சென்றவன், "மாப்ள! டைம் ஆச்சு, நீ வேலைக்குப் போகாம என்ன பண்ணிட்டு இருக்கே?" என்று கேட்க,


"போகணும் மாப்ள.." என்றான் தேவ் மந்தகாச புன்னகையுடன்.


தேவ்வின் குரலில் இருந்த புத்துணர்வை உணராமல், ஒருவேளை மீண்டும் முருங்கை மரம் ஏற போகிறானா? அதான் வேலைக்குச் செல்லாமல் இருக்கிறானோ? என்று கடுப்புடன் நினைத்த விஷால்,


"டேய் மாப்ள! எந்த கம்பெனியிலும் நடக்காத அதிசயம் உன் ஆபீஸ்ல நடந்தது. அது என்னனு கேக்குறியா? அதான் உன் ஆபிஸ் எம்.டி ரவிவர்மன்.. அந்த மனுஷன் எப்பேர்ப்பட்டவர் தெரியுமா? அவரே நேரடியா வந்து உன்னை மறுபடியும் வேலைக்கு வரச் சொன்னார்ன்னா, அவர் மனசுல நீ எந்த அளவுக்கு இடம் பிடிச்சு இருக்கேன்னு நீயே நினைச்சுப் பாரு. இதான் நீ அவருக்குக் கொடுக்குற மரியாதையா?" என்று நண்பனைச் சாடினான்.


நண்பனைப் புரியாமல் பார்த்த தேவ், "டேய்! வேலைக்குப் போகணும்னு தானேடா சொன்னேன். அதுக்கு எதுக்கு நீ இப்ப இப்படி லெச்சர் எடுத்துட்டு இருக்கே?" என்று முறைக்க,


அதில் திருதிருவென முழித்த விஷால், "ஒஹ்! நீ அப்படிச் சொன்னியா? நான் தான் ஏதோ ஞாபகத்துல கவனிக்கல.. ஹி ஹி.." என்று சிரித்து வைத்தவன், "அப்போ ஏன்டா இன்னும் கிளம்பாம இருக்கே?" என்று கேட்க,


"ஹனி.." என்றான் தேவ்.


"ஹனியா? யாரு ஸ்னேகாவா? அவ புருஷனோட பெங்களூர்லதானே இருக்கா?" என்று யோசனையுடன் கேட்க,


"இல்ல! ஓவியா மேடத்துக்கு உடம்பு சரி இல்ல. அவங்களைப் பார்த்துக்க வந்தவ இங்கேயே இருந்துட்டா. வீட்ல சும்மா இருக்க மனம் இல்லாம, ரவி சார்க்கு பி.ஏவா, அவரோட ஆபிஸ்ல வேலைக்கு ஜாயின் பண்ணி இருக்கா. தென் இன்னொரு விஷயம்.. ஸ்னேகாக்கும், அவ ஹஸ்பெண்ட்க்கும் ஏதோ பிரச்சினை போல! அதான் அங்கே போக மாட்டேன்னு சொல்லிட்டாளாம்" என்றவனின் கண்கள் மின்னியது. 


அதைக் கவனித்தவன், "டேய் மாப்ள! இனி நீ அங்கே வேலைக்குப் போக வேண்டாம்! உடனே ரிஸைன் பண்ணிரு.." என்றான், நண்பனின் மேல் உள்ள உண்மையான அக்கறையுடன்.


ஏனெனில் இப்பொழுது தான் சற்றுத் தெளிந்து வந்திருக்கிறான். மீண்டும் படுகுழியில் விழு என்றா அவன் சொல்வான்? அதனால், "மாப்ள! எங்க ஆபிஸ்ல ஒரு வேகன்சி இருக்கு. நான் மேனேஜர்கிட்ட பேசிட்டு உனக்குச் சொல்றேன். இந்த வாரமே நீ ஜாயின் பண்ணிக்கலாம்..." என்று அவனது தோளை அழுத்திச் சொல்ல,


தேவ்வோ, "இல்லடா, நான் கண்டிப்பா வேலைக்குப் போவேன். இது எனக்குக் கடவுள் கொடுத்த செகன்ட் சான்ஸ்! இதைத் தவற விட மாட்டேன்!" என்றவனின் குரலில் ஒருவித உறுதி தெரிந்தது.


அவனது பேச்சில் இருந்த சூட்சுமத்தை நொடியில் புரிந்து கொண்ட விஷால், அதிர்ந்து தான் போனான். "டேய் மாப்ள! என்ன சொல்றே? இதெல்லாம் தப்புடா.. அவளுக்கும், அவ புருசனுக்கும் ஏதாவது சின்னப் பிரச்சினையா தான் இருக்கும். நீ வேணா பாரு, சீக்கிரமே ரிஷி வந்து ஸ்னேகாவைக் கூட்டிட்டுப் போயிருவார்.." என்று எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயன்றான்.


"அதெல்லாம் அவர் வர மாட்டார்டா.." என்று சிரிப்புடன் கூற,


"உனக்கு எப்படி உறுதியா தெரியும்?" என்று எரிச்சலுடன் கேட்டான் விஷால்.


தேவ்வின் மனமோ நேற்றைய நாளுக்குச் சென்றது. நேற்று ரவிவர்மனிடம் பேசி விட்டு வெளியே வந்த தேவ், எதிரே வந்த ஸ்னேகாவைப் பார்த்து அப்படியே நின்று விட்டான். அவன் இதழோ, அவனையும் அறியாமல் 'என் ஹனி!' என்று முணுமுணுத்தது.


அவனைக் கண்டு விட்ட ஸ்னேகாவும், "சீனியர்! நீங்க எங்க இங்க?" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.


அவளது குரலில் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்ட தேவ், "நான் இங்க தான் வேலை பார்க்கிறேன்.." என்றான்.


"அப்படியா? ஆனா இங்க ஜாயின் பண்ணி ரெண்டு மாசம் ஆகுது. உங்களைப் பார்த்தது இல்லையே?" என்று யோசனையுடன் அவனைப் பார்க்க,


"நான் லீவில் இருந்தேன்.." என்று சிறு தடுமாற்றதுடன் கூறியவனை, 


"ஒஹ்! அப்போ? சீஃப் இன்ஜினியர் பத்ரிதேவ் நீங்க தானா?" என்று அதே ஆச்சரியத்துடன் மீண்டும் கேட்டாள் ஸ்னேகா.


"ம்ம்ம்.." என்றவனின் மனமோ இவள் இவ்வளவு பேசுவாளா? என்று வியப்பு மேலிட்டது. ஏனெனில் ரம்யா அறுந்த வாலு! ஸ்னேகாவோ அமைதியின் சிகரம்! யாரிடமும் லேசில் பேச மாட்டாள். ஏன் அவனே சில தடவை பேச முயற்சித்தும் முடியாமல் போனது. அந்த அமைதி தானே அவளிடம் அவனைக் கவர்ந்தது. 


"ஓகே, நான் என் சீட்டுக்குப் போறேன்.." என மேற்கொண்டு அவளிடம் ஏதும் பேசாமல் தனது இருக்கைக்குச் செல்ல, ஸ்னேகாவோ ரவிவர்மனைக் காணச் சென்றாள்.


தனது இடத்திற்கு வந்த பத்ரிதேவ்வின் மனமோ நிலை இல்லாமல் தவித்துப் போனது. ரவிவர்மன் வந்து வேலைக்கு அழைக்கவும், அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, எதைப் பற்றியும் யோசிக்காமல், இதோ வந்து விட்டான். மேலும் ஸ்னேகா பெங்களூரில் வசிப்பதால், அவளை நேரில் பார்ப்பது அவ்வளவு சாத்தியம் இல்லை என்றே எண்ணி இருந்தான். ஆனால்? இனி என்ன செய்வது? என்று அவன் தனக்குள் உழன்று கொண்டிருக்க,


"ஹாய் சீனியர்.." என்ற குரல் கேட்க, வேகமாக நிமிர்ந்து பார்த்தான் பத்ரிதேவ். 


அங்கே நீல நிற காட்டன் குர்தி மற்றும் ஜீன்சில் சிக்கென்ற அழகுடன் அவனைப் பார்த்துப் புன்னகையுடன் நின்றிருந்தாள் ரம்யா.


தானும் அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவன், "ஹாய் ரம்யா! காலேஜ் போகாம இங்க என்ன பண்றே?" என்று கேட்டான் தேவ்.


அவனை நன்றாக முறைத்தவள், "ஹலோ சீனியர்! உங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்ததுக்கு எனக்கு நீங்க ஒரு நன்றி கூடச் சொல்லல. அதான் கேட்டு வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்" என்று அவன் முன்னே வந்து அமர்ந்தாள் ரம்யா.


"இன்னும் ஒரு வருஷம் கழிச்சு வந்து கேட்க வேண்டியது தானே?" என்றவனின் குரலில் எரிச்சல் மேலிட்டது. அவனே என்ன செய்வது என யோசிக்க முடியாமல், அடுத்து என்ன முடிவெடுபது என்று புரியாமல் அமர்ந்திருக்க, இதில் இவளது பேச்சு கடுப்பைக் கிளப்பாமல் இருந்தால் ஆச்சரியம் தானே!


அவனது மனநிலையை உணராமல், "ம்பச்.. நிறையப் பிரச்சினை நடந்து போச்சு சீனியர். நானுமே ஒழுங்கா காலேஜுக்குப் போகல தெரியுமா?" என்று சோகத்துடன் ஒலித்தது ரம்யாவின் குரல்.


"ஏன் என்னாச்சு?" என்ன முயன்றும் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.


தங்களது அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் என்று எண்ணாமல், தனக்கு அவன் சீனியர் என்ற உரிமையுடன், எப்பொழுதும் அவனிடம் பேசுவது போல், "அது வந்து.." என்று ஆரம்பித்து, நேகா - அஜித் திருமணம், அதைத் தொடர்ந்து ஸ்னேகா மற்றும் தன் அண்ணனின் திருமணம் என்று இதோ இப்பொழுது ஸ்னேகா இங்கு வேலைக்கு வருவது வரை சொல்லி முடித்தவள்..


"நீங்களும் எங்க அண்ணா கல்யாணத்துக்கு வந்து, அங்கே எவ்ளோ பிரச்சினை நடந்தது பார்த்தீங்க தானே? அதுல ஆரம்பிச்சது இன்னும் முடியல சீனியர்.." என்று வருத்தத்துடன் கூறினாள்.


அவன் கண் முன் ரிஷி ஸ்னேகாவுக்குத் தாலி கட்டும் காட்சிகள் வந்து போனது. அதன் பிறகு தானே பேதையை மறக்க முடியாமல் போதையை நாடினான். 


"உ..உங்க அண்ணாகிட்ட பேசி ஸ்னேகாவை அனுப்பி வைக்கலாம் தானே ரம்யா?" என்று கேட்டவன், அவளின் நூல் விட்டுப் பார்த்தான்.


"ஸ்னேகாகிட்ட எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம் சீனியர். அவ போக மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா. ம்பச்! அதை விடுங்க, இப்ப நீங்க சொல்லுங்க.. உங்க லவ் எந்த லெவலில் இருக்கு? உங்க காதலை அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டிங்களா? எனக்கு எப்போ இன்ட்ரோ கொடுக்கப் போறீங்க?" என்று ஒருவித ஆர்வத்துடன் ரம்யா கேட்டாள்.


அதற்குள் பல கணக்குகளை மனதில் போட்டு விட்ட தேவ், "சீக்கிரமே.." என்றான், விசமமான புன்னகையுடன்..


"ஓகே சீனியர், நான் அப்பாவைப் பார்க்கப் போறேன். நான் அடுத்த தடவை வரும் போது, என்னை ஏமாத்தாம, உங்க லவ்வர் யாருன்னு சொல்லணும்.." என்று கண் சிமிட்டி விட்டுத் தந்தையைக் காண ரம்யா சென்று விட்டாள். 


பத்ரியோ, "கண்டிப்பா பேபி.." என்று வாய் விட்டே முணுமுணுத்துக் கொண்டான்.


ரம்யா தன்னிடம் கூறியது என எல்லாவற்றையும் நண்பனிடம் கூறிய தேவ், "இப்ப சொல்லு, எனக்கு இன்னொரு சான்ஸ் இருக்கு தானே?" என்று கண் சிமிட்டிக் கேட்க,


விஷாலுக்கோ ரம்யாவின் மீது கொலைவெறி உண்டானது. "எல்லாம் அந்த அறுந்தவாலு வேலை தானா?" என்று பல்லைக் கடித்தவன்,


"என்னதான் நீ என் பிரெண்டா இருந்தாலும், உன் நினைப்பு ரொம்பத் தப்பு மாப்ள! ஸ்னேகா இன்னொருத்தனோட பொண்டாட்டி.. உன் மனசை அலைபாய விடாதே! இன்னொரு ஏமாற்றத்தை உன்னால தாங்கிக்க முடியாது. இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.." என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.


அலட்சியமாகத் தன் தோளைக் குலுக்கிய தேவ், சிறிது நேரத்தில் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்று, தனக்கான இடத்தில் அமர்ந்து, வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவனது கவனத்தை, "தேவ் சார்.." என்ற குரல் கலைத்தது.


அந்தக் குரலில் உடல் சிலிர்த்தவனோ நிமிர்ந்து பார்த்தான். அங்கே நின்றிருந்தாள் ஸ்னேகா. 


உள்ளே வந்த ஸ்னேகா, "சார், இந்த பைல்.." என்று ஆரம்பித்து அவள் வேலை விஷயமாகப் பேசிக் கொண்டிருக்க, அவனோ அவளையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். 'இது தவறு!' என்று அவனது மூளை எடுத்துரைத்தாலும், அவன் மனமோ, 'உன் பேச்சை கேட்க மாட்டேன்!' என்று அடம்பிடித்தது.


பைலில் பார்வையைப் பதித்தபடி பேசிக் கொண்டிருந்த ஸ்னேகாவுக்கோ, யாரோ தன்னையே பார்ப்பது போல் உள்ளுணர்வு எச்சரிக்கை விடுக்க, சட்டென்று நிமிர்ந்தாள். 


நொடியில் தனது பார்வையைப் பைலில் பதித்த தேவ், "இதுல இந்த கம்பெனியில இருந்து வாங்கும் மெட்டீரியல்ஸ கேன்சல் பண்ணனும் ஸ்னேகா. ஏற்கனவே இந்த கம்பெனி தரம் தாழ்ந்த பொருட்களை சப்ளை பண்றதா கம்ப்ளைன்ட் வந்து இருக்கு. நான் வாசு சார்கிட்ட நேத்து இன்ஃபார்ம் பண்ணிட்டேன்" என்று கூறிக் கொண்டு இருக்க, 


மானசீகமாகத் தன் தலையில் தட்டிக் கொண்டவள், "ஓகே சார்.." என்றுவிட்டு எழுந்து கொள்ளவும்,


"ஸ்னேகா! இப்ப எதுக்கு என்னை சார் சார்ன்னு ஏலம் போட்டுட்டு இருக்கே. பேர் சொல்லியே கூப்பிடு!” என்று அவன் கூற,


"நீங்க இந்த ஆபிஸ்ல சீஃப் எஞ்சினியர். உங்க பதவிக்கு நான் கண்டிப்பா மரியாதை கொடுத்துத்தான் ஆகணும் சார்.." என்று புன்னகையுடன் கூறி விட்டுச் சென்றாள் ஸ்னேகா.


அவளது அந்த ஒற்றைப் புன்னகை அவனின் இதயத்தை ஏதேதோ செய்ய, தேவ்வின் மனமோ உள்ளுக்குள் மர்மமாகச் சிரித்துக் கொண்டது.


*****


No comments:

Post a Comment