ஸ்வரம் 36

 



 ஸ்வரம் 36


மோகனாவும், கார்த்திக்கும் வந்த கார் ஓவியாவின் வீட்டின் முன் வந்து நின்றது. ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த ரம்யா வாசலை எட்டிப் பார்த்தாள். வருவது தன் மாமாவும் அத்தையும் என்றதும், "மாமா!" என்று அவர்களை நோக்கி ஓடினாள்.


"ஓய் வாலு குட்டி! எப்படி இருக்கே?" என்று தன் மருமகளை நலம் விசாரித்தான் கார்த்திக்.


"எனக்கென்ன மாமா? என் அண்ணன் பொண்டாட்டியை நல்லா வேலை வாங்கி, அவ செய்யும் சமையலை சாப்பிட்டு வெயிட் போட்டு அக்கடான்னு(ஹாயா) இருக்கேன்.." என்று அவள் கண்ணடித்துக் கூற, 


"என் பொண்ணு என்ன உனக்கு வேலைக்காரியா?" என்று மோகனா பொய்யாக முறைத்தபடி ரம்யாவின் காதைப் பிடித்துத் திருக,


"ஏன் மாமியாரே.. என் காதை பஞ்சர் ஆக்கத்தான் மெனக்கெட்டு இவ்ளோ தூரம் வந்திங்களா?" என்று இடுப்பில் கை வைத்து மோகனாவை அவள் முறைத்துக் கொண்டு இருக்கும் பொழுது..


"மோஹிமா.." என்று ஓடி வந்து தாயை கட்டிக் கொண்டாள் ஸ்னேகா.


"ஓய் ஸ்னேக் பேபி! அது என் மாமியார்.. நீ உங்க அப்பாகிட்ட போ!" என்று அவளைப் பிடித்துத் தள்ளி விட்டு மோகனாவை ரம்யா கட்டிக் கொள்ள, "போடி.." என்றுவிட்டு, "அப்பா.." என்று தந்தையின் தோள் சாய்ந்தாள் ஸ்னேகா.


இருவரும் இன்னமும் குழந்தை போல் நடந்து கொள்வதை ரசித்துப் பார்த்தவர்கள், "அப்பாவும், அம்மாவும் எங்கடா?" என்று ரம்யாவிடம் கேட்டாள் மோகனா.


"ரொமான்ஸ் கப்புள் இதோ இப்ப வந்துருவாங்க மாமியாரே.. நீங்க வாங்க உக்காருங்க.." என்று இருவரையும் அழைத்து வந்து உட்கார வைத்தவள்,


"அடியேய் ஸ்னேக் பேபி! என்னோட மாமியாரும், மாமனாரும் வந்து இருக்காங்க. அவங்களுக்குக் குடிக்க காபி டிபன் எல்லாம் எடுத்துட்டு வராம, இப்படி மசமசன்னு நின்னா என்ன அர்த்தம்? ஓடு!" என்று ஸ்னேகாவை விரட்டினாள் ரம்யா.


அதில் கடுப்பான ஸ்னேகா, ரம்யாவின் தலையில் நறுக்கென்று கொட்டி விட்டு கிச்சனை நோக்கி ஓடி விட,


"ஷ்.. ஆஹ்!" என்று தலையைத் தடவி கொடுத்த ரம்யா, "எப்படிக் கொட்டிட்டுப் போறா பார்த்தீங்களா மாமா, எங்க வீட்டுக்கு வந்த மருமக? நாத்தனார்னு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா?" என்று கூறியவளை இருவரும் முறைத்தனர்.


"ஓகே ஓகே! கூல்! உங்க பொண்ணை நான் எதுவும் சொல்லல, போதுமா?" என்று அவள் ஜகா வாங்கவும், ரம்யாவின் குறும்பில் இருவருக்கும் சிரிப்பு தான் வந்தது.


அப்பொழுது "வாங்க கார்த்திக்!" என்றபடி மனைவியின் கைப் பிடித்துப் படியில் இறங்கி வந்தான் ரவிவர்மன்.


சிறிது நேரம் நலம் விசாரிப்புக்குப் பிறகு, "ஸ்னேகா! மாப்ள போன் பண்ணினாரா? எப்போ வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறாராம்?" என்று பேச்சை ஆரம்பித்தாள் மோகனா.


அன்னையின் கேள்வியில் ஸ்னேகா சற்றுத் தடுமாற, ஓவியாவோ கணவனின் கையை இறுக பிடித்துக் கொண்டாள்.


மனைவியின் கையைச் சற்று அழுத்திக் கொடுத்த ரவிவர்மன், "ரிஷி பிஸ்னெஸ் விஷயமா வெளியே போயிருக்கானாம். வந்ததும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னான்" என்று தெரிந்தே பொய்யுரைத்தான்.


அவன் கூறியது பொய் என்று மோகனா அறிய வாய்ப்பில்லை என்றாலும், கார்த்திக் நன்கு அறிவான். ஆம்! தன் மகள் இன்னமும் பெங்களூர் செல்லாமல் இங்கேயே இருப்பது பற்றி ஒருநாள் ஸ்னேகாவிடம் அவன் கேட்க, அவன் மகளோ, சரியான பதிலை அவனுக்குச் சொல்லவில்லை. அதனால் உடனே ரவிவர்மனிடம் என்ன விஷயம் என்று கேட்டு இருந்தான் கார்த்திக். 


அவனோ "ரெண்டு பேருக்கும் ஏதோ பிரச்சினைனு நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்துப் பார்க்கலாம் கார்த்திக்.." என்று ஓவியாவுக்குச் சொன்ன அதே பதிலைத்தான் கூறிச் சமாளித்தான் ரவிவர்மன்.


'சீக்கிரமே எல்லாம் சரி ஆகும்' என்று நம்பிய கார்த்திக், அதைப் பற்றி மனைவியிடம் கூறி, அவளை வருத்த செய்ய அவன் விரும்பவில்லை. காரணம், ஸ்னேகாவின் திருமணத்தை அவள் தானே பிடிவாதத்துடன் நடத்தி வைத்தாள். தன் மகளின் வாழ்வு சிறக்கவில்லை என்று தெரிந்தால், தன்னால் தான் எல்லாம் என்று நிச்சயம் அவளால் தாங்கிக் கொள்ள முடியாதல்லவா? அதனால் மனைவியிடம் மகளின் விஷயத்தை மறைத்து இருந்தான் கார்த்திக்.


ரவிவர்மன் கூறியதைக் கேட்ட மோகனா, "சரிண்ணா.." என்றவள், "ஓவி! நாங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்துருக்கோம்.." என்று தாங்கள் வந்த காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தாள் மோகனா.


"என்ன விஷயம் மோனா?" என்று ஆர்வத்துடன் ஓவியா கேட்க, அதே ஆர்வத்தை முகத்தில் தேக்கி ரம்யாவும், ஸ்னேகாவும் ஆவலுடன் மோகனாவைப் பார்த்தனர்.


"அது வந்து.. நம்ம விக்கிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம் ஓவி.." என்று கூற,


"ஹை! அண்ணாக்குக் கல்யாணமா?" என்று சந்தோசப்பட்ட ஸ்னேகா, தன் அருகில் நின்றிருந்த ரம்யாவைப் பார்த்தாள். 


ரம்யாவுக்கோ மோகனாவின் பேச்சில் மனதில் படபடவென வந்தது. அதே சமயம், தன் அத்தானே தன் கணவனாக வருவதை எண்ணியவளுக்கு வெட்கம் வந்து விட, மெதுவாக அங்கிருந்து நழுவி, தனது அறைக்குச் சென்று கதவின் ஓரம் நின்று, வெளியே பெரியவர்கள் பேசுவதை ஒருவித ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள். 


ஓவியாவுக்கோ, 'மகள் இன்னும் படிப்பை முடிக்கவில்லையே?' என்ற நினைப்புடன் மோகனாவிடம், "மோனா.." என்று ஏதோ பேச வரும் முன்,


"ஓவி! நான் முழுசா பேசிடுறேன்டி, அதுக்கு அப்புறம் நீ என்ன சொல்லணுமோ சொல்லு! நான் கேட்டுக்கிறேன்.." என்று சிறு தயக்கத்துடன் கூறியவள் கணவனைப் பார்க்க, கார்த்திக்கோ, "சொல்லு.." என்பது போல் கண் மூடித் திறந்தான்.


அவர்களையே பார்த்திருந்த ரவிவர்மனுக்கு, ஏதோ சரி இல்லை என்று தோன்றினாலும், அவர்களே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தான்.


"அது வந்து.. விக்கி ஒரு பொண்ணை விரும்புறானாம். அந்தப் பொண்ணையே அவனுக்குப் பேசி முடிச்சுடலாம்னு நினைக்கிறோம்.." என்று கூறி விட்டு மோகனா ஓவியாவையும், ரவிவர்மனையும் பார்த்தாள்.


அறைக்குள் இருந்த ரம்யாவோ, 'அந்தப் பெண்.. தான் தான்..' என்ற எண்ணத்தில் ஒருவித பரவசத்தில் நின்றிருக்க, அடுத்து மோகனா கூறிய வார்த்தை, அவள் தலையில் இடியாய் இறங்கியது.


"அது வேற யாரும் இல்ல.. நம்ம நேகா பிரென்ட் தனுஷா இருக்காள்ல, அஜித் மாப்பிள்ளையோட தங்கச்சி, அந்தப் பொண்ணு தான்!" என்று கூறி முடிக்க, அங்கே அப்படி ஒரு அமைதி நிலவியது. ரம்யாவோ அதிர்ச்சி தாங்காமல் தொப்பென்று கீழே அமர்ந்து விட்டாள்.


"ஓவி! ஏதாவது பேசுடி.." என்று மோகனா எழுந்து சென்று, தோழியின் அருகே அமர்ந்து அவளது கையைப் பிடித்துக் கொள்ள..


கார்த்திக்கோ, "ஓவிமா! உன் மனசுல என்ன ஒடுதுன்னு எனக்குப் புரியுது. நாம விக்ரமுக்கும், ரம்யாவுக்கும் முடிச்சிப் போட நினைச்சோம். அதை நாம நினைச்சா போதுமா? அந்தக் கடவுள் நினைக்கணுமே! அவர் யாருக்கு யாருன்னு முடிச்சு போட்டு இருக்காரோ, அதன்படி தானே நடக்கும்? விக்ரம் அந்தப் பொண்ணை மனசார விரும்புறதா சொல்லிட்டான். அதே சமயம், நம்ம ரம்யாவை அவன் தங்கை ஸ்தானத்தில் தான் வச்சி இருக்கிறேன்னும் சொல்லிட்டான். எங்களுக்கும் என்ன பண்றதுன்னு புரியல.." என்று கூறி முடித்தான்.


அவர்களின் நிலை ரவிவர்மனுக்கு நன்றாகவே புரிந்தது. அதனால் சட்டென்று சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்ட ரவிவர்மன், "சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கீங்க கார்த்திக்.. கண்டிப்பா இதை ஸ்வீட்டோட தான் கொண்டாடணும்.." என்றுவிட்டு, "ஸ்னேகா! கேசரி செஞ்சி எடுத்துட்டு வாம்மா.." என்று மருமகளிடம் கூறியவன், "ஓவிமா.." என்று சற்று அழுத்தமாக அழைத்தான்.


அதைப் புரிந்து கொண்ட ஓவியாவும், "மோனா! இதைச் சொல்லவா உன் குரல் தயங்கிச்சு?" என்று மோகனாவை முறைக்க.. 


மோகனாவோ, "ஓவி! உனக்குக் கோபம் ஏதும் இல்லையே?" என்று கேட்டாள்.


"இதுல கோபப்பட என்ன இருக்கு மோனா? அண்ணா சொன்ன மாதிரி யாருக்கு யாருன்னு என்ன எழுதி இருக்கோ, அதன்படி தான் நடக்கும். நம்ம விக்ரம்க்கு அந்தப் பொண்ணுன்னு கடவுள் போட்ட முடிச்சு! அதை மாத்த நாம யாரு? விக்ரம் கல்யாணத்தை எந்தக் குறையும் இல்லாமல் சும்மா ஜாம் ஜாம்னு நடத்தணும், சரியா?" என்று புன்னகையுடன் கூற,


"ஓவி!" தோழியை அணைத்துக் கொண்ட மோகனா, "எனக்கு என்ன பயம்ன்னா, ரம்யா மனசுல ஏதும் ஆசை.." என்று இழுக்க,


"அப்படிலாம் இருக்க வாய்ப்பு இல்லை மோனா. ஏன்னா நாம நமக்குள்ள மட்டும் தானே பேசி இருந்தோம். அதனால நீ கவலைப்படாமல் மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையைப் பாரு.." என்று கூறி விட, தாங்கள் வந்த வேலை சுமூகமாக முடியவும், சிறிது நேரம் பேசி விட்டு, கார்த்திக்-மோகனா தம்பதியர் அங்கிருந்து கிளம்பினர். அதுவரை பொறுமையாக நின்றிருந்த ஸ்னேகா ரம்யாவைத் தேடி ஓடினாள்.


அங்கே தரையில் அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் ரம்யா. அவளைப் பார்த்து பதறிய ஸ்னேகா, "ரம்யா.." என்று வேகமாக அவள் அருகில் செல்ல,


கண்களில் கண்ணீர் வழிய, "ப்ளீஸ் ஸ்னேகா! நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.." என்று கூற, மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசாமல் அவளைத் திரும்பி திரும்பிப் பார்த்தவாறு அங்கிருந்து வெளியேறியவள், நேரே தனது அறைக்குச் சென்று, தன் மொபைலில் இருந்து விக்ராந்த்திற்கு அழைத்து இருந்தாள். 


இந்நேரத்தில் தங்கை அழைக்கவும், அழைப்பை ஏற்று, "ஸ்னேகா! சொல்லுடா.." என்று கூற,


அவளோ எடுத்த எடுப்பில், "ஏன்ணா, இப்படிப் பண்ணினே? ரம்யாவை உனக்குப் பிடிக்கலயா?" என்று தான் கேட்டாள்.


தங்கை எதற்காக இப்படிக் கேட்கிறாள் என்று புரியாத விக்ராந்த், "குட்டிமா! என்னடா? அண்ணா என்ன பண்ணினேன்? நீ எதைக் கேட்கிறே?" என்று கேட்டான்.


சற்று முன் தாய் - தந்தை வந்து பேசி விட்டுச் சென்றதைக் கூறியவள், "ரம்யா அழுதுகிட்டே இருக்கா. எனக்கென்னமோ அவ உன்னை லவ் பண்றான்னு நினைக்கிறேன்.." என்று கூறி முடிக்கவும்..


ஒரு நொடி அமைதி காத்தவன், அடுத்த நிமிடம், "நான் வந்து அவகிட்ட பேசுறேன்.." என்றுவிட்டு போனை வைத்தவன், அடுத்தச் சில நிமிடங்களில் ரவிவர்மனின் வீட்டில் இருந்தான்.


ஓவியா அவளது அறையில் இருக்க, ரவிவர்மன் சற்று முன் தான் வெளியே கிளம்பிச் சென்றிருந்தான். ஹாலில் அமர்ந்திருந்த தங்கையைப் பார்த்ததும், "ஸ்னேகா.." என்று அழைக்க,


"அண்ணா.." என்று வேகமாக அவனிடம் செல்ல, அவனோ, "ரம்யா எங்கே?" என்று கேட்டான்.


ரம்யாவின் அறையை ஸ்னேகா சுட்டிக் காட்டவே, நிமிடமும் தாமதிக்காமல் அங்குச் சென்றவன், கட்டிலில் கவிழ்ந்து படுத்து அழுது கொண்டிருந்தவளைப் பார்த்தவன், "ரம்யா.." என்றான்.


அவனது குரலில் அழுது கொண்டிருந்த ரம்யா சடாரென திரும்பிப் பார்த்தவள், அடுத்த நொடி அவனை நோக்கி ஓடி வந்து, "அத்தான்.." என்று அவனைக் கட்டிக் கொண்டு மேலும் அழுகையில் கரைய, அவளது அந்த அழுகை அவனை வருந்த செய்தது. மெதுவாக அவளை அணைத்தவாறு நடத்தி வந்து கட்டிலில் அமர வைத்த விக்ராந்த்,


"ரம்யா! இப்ப என்ன நடந்ததுனு நீ இப்படி அழுதுட்டு இருக்கே?" என்று அவள் முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தபடி கேட்டான்.


அவளோ, அவனது அருகாமையில் அழுகை குறைந்து, விசும்பலுடன் அவன் முகம் பார்த்தவள், "என்னை உங்களுக்குப் பிடிக்கலயா அத்தான்? நான் உங்களை அவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா? நீங்க என்னன்னா வேற யாரையோ லவ் பண்றதா அத்தை சொல்றாங்க. அப்படி இல்ல தானே அத்தான்? நீங்க என்னைத்தானே லவ் பண்றிங்க?" என்று குழந்தை போல் கேட்டாள் ரம்யா.


அவள் பேச்சில், 'ஏதோ ஒரு விதத்தில் அவளது மனதில் தான் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். அதைக் காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு, இப்படி ஆசையை வளர்த்துக் கொண்டுள்ளாள்' என்று புரிந்து கொண்ட விக்ராந்த், அவளுக்குப் புரிய வைக்கும் பொருட்டு,


"ரம்யா.." என்று மென்மையாக அழைத்தவன், "என்னைக்காவது, எப்பவாவது உன்னை லவ் பண்றதா நான் சொல்லி இருக்கேனா? இல்லை அப்படி ஒரு பார்வை தான் உன்னைப் பார்த்து இருக்கேனா? சொல்லு!" என்று கேட்டான்.


அதில் திகைத்தவள், அவனது முகத்தைப் பார்த்தவாறு, "இல்லை.." என்பது போல் தலையை ஆட்டினாள். அவன் கேட்பது சரி தானே? அவன் எங்கே அவளிடம் காதலைச் சொன்னான்? ஏன் கண்களால் கூடக் குறிப்பு காட்டியது இல்லையே? அவளாகத்தானே அவன் மீது ஆசைப்பட்டாள்?


"அப்போ எதை வைத்து நீ என்னை லவ் பண்ண ஆரம்பிச்சே? மாமா பையன்ங்கிற முறையிலா?" என்று அடுத்தக் கேள்வி கேட்க,


ஏதோ நினைவு வந்தவளாக, "நீங்க நேகா அக்கா நிச்சயதார்த்தம் அன்னைக்கு, தோட்டத்தில வச்சி என்னை ஹக் பண்ணினீங்களே அத்தான், அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?" என்று கேவலுடன் அவனிடம் கேட்டாள்.


எவ்வளவு யோசித்தும் அவனது நினைவிடுக்கில் அவள் கூறியதைப் போல் எந்தக் காட்சியும் வரவே இல்லை.  


"என்ன அத்தான் அமைதியாகிட்டிங்க? பதில் சொல்லுங்க.. ஹாஸ்பிட்டல்ல கூட என்னைக் கட்டிப் பிடிச்சீங்களே? அதுக்கு என்ன அர்த்தம்?" என்று விடாமல் கேட்க,


அவளது குழந்தைத்தனத்தில் அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. "ரம்யா! கட்டிப் பிடிக்கிறதுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அன்னைக்கு ஓவிமா உடம்பு சரியில்லாத நிலைமையில, எல்லாரும் அவங்க அவங்க கவலையில இருக்கும் போது, நீ மட்டும் தாயைத் தேடும் கன்னுக்குட்டி போல அழுதுகிட்டு இருந்த. அந்த நேரத்துல அன்னைக்கு அன்னையாய் ஆதரவா உன்னை அணைச்சிக்கிட்டேனே தவிர வேற எண்ணத்திலயும் இல்ல.


இதோ! இப்ப கூட உன்னைக் கட்டிப் பிடிச்சுட்டுத்தான் இருக்கேன். இதை லவ்வுன்னு சொல்ல முடியுமா? ஏன் நாளைக்கு உனக்குக் கல்யாணம் ஆகி, நீ உன் புருஷன் வீட்டுக்குப் போனா கூட, ஒரு அண்ணனா உன்னை ஹக் பண்ணத்தான் செய்வேன். ஏன்னா எனக்கு மேகா, நேகா, ஸ்னேகா எப்படியோ அப்படித்தான் நீயும்! எங்க வீட்டுக் குட்டி தேவதைடா நீ! உன்னை மனைவியா என்னால பார்க்க முடியல ரம்யா. உனக்கானவன் நான் இல்லடா.. உன்னோட ராஜகுமாரன், ஹீரோ மாதிரி, கண்டிப்பா உன்னைச் சிறையெடுக்க வருவான் பாரு!" என்று கண் சிமிட்ட, அவளோ, அவனை முறைத்துப் பார்த்தாள். 


ஹா! ஹா! அவன் எங்கே அறியப் போகிறான்?! அவள் தான் அவளது ராஜகுமாரனைப் பின்னாளில் சிறையெடுக்கப் போகிறாள் என்பதை..


"இப்படி முறைக்காதே ரம்யா குட்டி! சின்ன பையன் பயந்துடுவேன்.." என்று பயப்படுவது போல் அவன் நடிக்க,


"அத்தான்.." என்று சிணுங்கியவாறு தன் கரம் கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தாள்.


"ம்ம்.. இப்ப தான் ரம்யாவைப் பார்த்த மாதிரி இருக்கு. அதை விட்டுட்டுச் சும்மா தேவை இல்லாம அழுதுட்டு.. நல்லாவே இல்ல.." என்று சொல்லிச் சிரித்தவன், அவளுக்குப் புரியும்படி மேலும் சில விஷயங்களை எடுத்துக் கூறி, ஒருவழியாக அவளைச் சமாதானம் செய்து ரம்யாவைத் தெளிய வைத்தான்.


"இப்ப நீ ஓகேவா ரம்யா? நான் கிளம்பவா?" என்று அவன் கேட்க, "தேங்க்ஸ் அத்தான்! என் மனசை எனக்குப் புரிய வச்சதுக்கு.. இல்லனா லூசு மாதிரி ஏதேதோ நினைச்சிட்டு அழுதுட்டே இருந்து இருப்பேன்.." என்று கூற, அவளின் இந்தப் புரிதலான பேச்சு விக்ராந்த்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. 


"தேங்க்ஸ் எல்லாம் வேணாம் ரம்யா. நீ இந்த அத்தானை புரிஞ்சிகிட்டதே போதும்.." என்று அவள் தலையைப் பிடித்து ஆட்டியவன், "நான் கிளம்புறேன்.." என்று கூறி விட்டு எழுந்து கொள்ள..


"அத்தான்! தேங்க்ஸ் வேணாம்ன்னா போங்க, ஆனா உங்க கல்யாணத்துக்கு எனக்கு ரெண்டு பட்டு சேலை வேணும். அதும் பொண்ணுக்கு எடுக்கப் போற சேலையை விட காஸ்ட்லியா இருக்கணும்.." என்று குறும்புடன் கூறவும்,


"அவ்வளவு தானே? உனக்கு இல்லாததா ரம்யா குட்டி? ரெண்டு சேலை என்ன, அந்தக் கடையையே உனக்கு வாங்கித் தரேன், போதுமா?" என்று சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான் விக்ராந்த்.


அவன் சென்றதும் மீண்டும் ரம்யாவின் முகம் வாடிப் போனது. அவன் அவளுக்குப் புரிய வைத்தாலும், சட்டென நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு, மனதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. சிறிது நாளே ஆனாலும், அவன் மீது காதல் என்ற ஒன்றை வைத்து விட்டிருந்தாள் அல்லவா? அவனுக்காகச் சிரித்துப் பேசினாலும் அவள் மனதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது.


****


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மதியம் அஜித் தனது அறையில் அமர்ந்து மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவன் மனையாள் நேகாவோ, அந்த அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.


அவள் பொருட்களை உருட்டும் சத்தத்தில் தன் கவனம் கலைந்து நிமிர்ந்து பார்த்தான் அஜித். பேபி பிங்க் நிறத்தில் ஜார்ஜெட் சேலையில், முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகி கொண்டு, அவனது கபோர்டை திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 


"நானும் அப்போ இருந்து பார்த்துட்டு இருக்கேன். இவ அப்படி எதை தேடிட்டு இருக்கா?" என்று நெற்றிச் சுருக்கி யோசித்தவன், "நேகா! என்ன தேடிட்டு இருக்க?" என்று குரல் கொடுத்தான். 


சட்டென்று நின்று திரும்பிக் கணவனை ஒரு நொடி உறுத்து விழித்த நேகா மீண்டும் தேட ஆரம்பிக்க, அவளது அந்த விழியில் விரும்பி விழுந்தவன், மடிக்கணினியை மூடி வைத்து விட்டு எழுந்து அவள் அருகே சென்றான்.


கணவன் தனது அருகில் வந்து ஒட்டி உரசிக் கொண்டு நிற்பதை அவள் உணர்ந்தாலும், அவனைத் திரும்பிப் பார்த்தாள் இல்லை.


அவளது கையைப் பிடித்து அவளைத் தன்னை நோக்கித் திருப்பிய அஜித், "என்னனு கேக்குறேன்ல, சொல்லேன்டி..!" என்று அவளின் அருகாமையில் எப்பொழுதும் போல் தன்னைத் தொலைத்து ஹஸ்கி குரலில் கேட்க,


கணவனை அண்ணாந்து பார்த்தவள், "ம்ம்ம்.. என் வாழ்க்கையைத் தொலைச்சுட்டேன். அதான் தேடிட்டு இருக்கேன்.." என்று கிண்டலாகக் கூறினாள் நேகா.


அவளின் மெல்லிடையைப் பிடித்துத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்ட அஜித்குமார், "உன் வாழ்க்கை எங்கேயும் தொலையலடி, இங்கே தான் இருக்கு. நீதான் புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறே.." என்று தன் நெற்றி கொண்டு அவள் நெற்றியில் முட்ட,


அதில் கடுப்பான நேகா, "இப்ப உனக்கு என்ன வேணும்? விடு என்னை.." என்று கணவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.


அவனோ விட்டு விடாமல் இன்னும் தன்னுள் அவளை இறுக்கிக் கொண்டவன், அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து, பெண்ணவளின் சுகந்தமான வாசனையை நுகர்ந்தபடி, உலகில் உள்ள ஒட்டு மொத்த காதலையும் குரலில் தேக்கி, "நேகா! எனக்கு நீ தான்டி வேணும்.." என்றான் கிறக்கமாக..


பெண்ணவள் காதல் கொண்டு ஆடவனைக் கரம் பிடித்து இருந்தாள் என்றால், அவனது குரலில் மயங்கிக் கரைந்து, அவனுள் காணாமல் போயிருப்பாள். ஆனால் அப்படி நடக்கவில்லையே? அதனால்,


"இந்த மாதிரி கட்டிப் பிடிக்காதே! எனக்குப் பிடிக்கலன்னு எத்தனை தடவை சொன்னாலும் உனக்குப் புரியவே புரியாதா?" என்று கணவனைத் தள்ளி விட முயற்சித்தவாறு அவள் கோபத்துடன் கேட்க..


"எனக்குப் பிடிச்சு இருக்கே.. உன்னை இப்படிக் கட்டிப் பிடிக்கணும், இப்படி முத்தம் கொடுக்கணும்னு.." என்று அவள் கன்னத்தில் தன் மீசை முடி உராய அழுத்தி முத்தம் வைத்தவன், அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.


அவனது செயலில் அவனை தீயாய் முறைத்தவள், "பொறுக்கி! பொறுக்கி!" என்று சத்தம் போட்டுக் கத்தினாள் நேகா.


"பொறுக்கி தான்டி! உன்னை மட்டும் பொறுக்க ஆசைப்படும் பொறுக்கி.." என்று சிறிதும் காதல் குறையா குரலில் கூற,


"விடு என்னை! விடுடா.." என்று அவன் அணைப்பில் இருந்து விடுபட அவள் திமிறிக் கொண்டு இருக்க,


"விட முடியாது! என்னடி பண்ணுவே?" என்று அவள் எதிர்பாராத நேரத்தில் அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்ட அஜித்குமார், கட்டிலை நோக்கி நடந்தான்.


கணவனின் செயல் புரிந்து, அவன் கையில் இருந்து துள்ளி இறங்க முயன்றாள் நேகா. ஆனால் அவனது பிடி இரும்பாக இருக்க, அவளால் அது முடியாமல் போனது. கட்டிலின் அருகே வந்த அஜித்குமார், பூவை விட மென்மையாக இருந்தவளைக் கட்டிலில் கிடத்தி விட்டு, அவள் முகம் பார்த்தான்.


செக்கச் சிவந்த பெண்ணவளின் முகம் கோபத்தில் மேலும் சிவந்து இருக்க, கணவனை முறைத்துப் பார்த்தவள், உருண்டு கட்டிலின் ஓரத்துக்குச் செல்ல, அவள் அப்படி உருண்டதால், இடுப்பில் சொருகி இருந்த முந்தானையுடன் சேர்ந்து மாராப்பு சேலையும் விலகி, அவளது செழிப்பான அங்கங்களை ஆணவனுக்குப் பளிச்சென்று காட்டியது. அதில் மேலும் பித்தான அஜித்குமார், அவளை நெருங்கும் முன், நேகாவின் மொபைல் ஒலி எழுப்பி, அவனைத் தடுத்து நிறுத்த முயன்றது.


ஆனால் அவனோ, அதைச் சட்டை செய்யாமல், மனைவியைப் பார்வையால் விழுங்கும் முயற்சியில் இறங்கியபடி மேலும் நெருங்க, அதற்குள் ஒருமுறை அடித்து ஓய்ந்த மொபைல் மீண்டும் ஒலிக்கவும், சட்டென்று சுதாரித்துக் கணவனின் கையில் சிக்காமல் கட்டிலில் இருந்து இறங்கிய நேகா, ஓடிச் சென்று தனது போனை எடுத்துப் பார்த்தாள். அழைப்பது தன் அன்னை என்றதும், உடனே அட்டன்ட் செய்தவள், "மோஹிமா.." என்றாள்.


"......" அந்தப் பக்கம் மோகனா என்ன கூறினாரோ? நேகாவின் முகம் யோசனையைக் காட்டியது.


"அது யார் மோஹிமா?" என்று அதே யோசனையுடன் அவள் அன்னையிடம் கேட்க..


"....." 


"சரி மோஹிமா.." என்றுவிட்டு மொபைலை அணைத்த நேகா, அடுத்த நொடி மேகாக்கு அழைத்து இருந்தாள்.


அந்தப் பக்கம் அவள் எடுத்ததும், சிறிது நலம் விசாரித்து விட்டு, "மேகா! மோஹிமா உனக்கு போன் பண்ணினாங்களா? ப்ரோ கல்யாண விஷயமா ஏதும் சொன்னங்களா?" என்று கேட்டாள் நேகா.


"ஆமாடி, ப்ரோ லவ் பண்றதாவும், அந்தப் பொண்ணையே அவனுக்குப் பேசி முடிக்கப் போறதா மோஹிமா சொன்னாங்க. அது யாருன்னு கேட்டதுக்கு, "உடனே கிளம்பி வா! இங்க வந்ததும் தெரிஞ்சிக்கோ!' சொன்னாங்க. அநேகமாக ப்ரோக்கு இந்த வாரமே நிச்சயதார்த்தம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்டி.." என்றவள், "ஏய் நேகா! ப்ரோ நிச்சயதார்த்தத்துக்கு என்ன கலர்ல சேலை எடுக்கலாம்? சொல்லுடி..!" என்று குதூகலத்துடன் கேட்டது மேகாவின் குரல்.


"ம்ம்ம்.. யோசிச்சு சொல்றேன்.." என்று கூறி விட்டு மொபைலை அணைத்த நேகா அப்படியே நிற்க,


இவ்வளவு நேரம் அவளது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்ததால் தள்ளி நின்ற அஜித்குமார், "நேகா! என்னாச்சு? போன்ல யாரு உங்க அம்மாவா? என்ன சொன்னாங்க?" என்று மென்மையாக அவன் கேட்டபடி அவள் அருகில் வந்தான்.


ஏதோ ஒரு யோசனையில் இருந்த நேகா, கணவன் மீது சற்று முன் இருந்த கோபம் மறந்து, "ப்ரோக்குப் பொண்ணு பார்த்து இருக்காங்களாம். அதைப் பத்தி பேச மோஹிமா இன்னைக்குச் சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வர்றதா சொன்னாங்க" என்று கூறியவள், அவனது முகத்தைப் பார்த்தாள்.


தன்னிடம் கோபப்படாமல், தான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறியது மட்டும் அல்லாமல், இந்த வீட்டை 'நம்ம வீடு..' என்று சொன்னது தன் மனைவி தானா? என்று நம்ப முடியாமல் அவளைப் பார்த்தவன், பின்பு, "என்ன விஷயம்ன்னு சாயங்காலம் அவங்க வந்ததும் தெரிஞ்சிற போகுது. அதுக்கு எதுக்கு நீ இப்ப டென்ஷனா இருக்கே? ரிலாக்ஸ்!" என்று மென்மையாக கூறவும்.


"ம்ம்ம்" என்றவள் அறையில் இருந்து வெளியேற, செல்லும் தன் மனைவியையே புன்னகையுடன் பார்த்திருந்தான் அஜித்குமார். அவன் மனமோ, தன்னவள் சீக்கிரமே மாறி விடுவாள் என்று நம்பிக்கை கொண்டது. ஆனால் அவன் அறியவில்லை! அவனது இந்தப் புன்னகைக்கும், நம்பிக்கைக்கும், அவன் மனைவி இன்னும் சில நாட்களில் முடிவுரை எழுத போவதை…


மாலை நேரம்.. ஒருவித படபடப்புடன் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள் நேகா. அவள் மனதில் அன்னை கூறிய விஷயமே ஓடிக் கொண்டு இருந்தது. 'மோஹிமா சொன்ன பொண்ணு யாரா இருக்கும்? ஒருவேளை தனுவா?’ என்று எண்ணியவளுக்கு, நேற்று தனது அண்ணனின் காரில் வந்து அவள் இறங்கியதும், அவளது தன்னை மறந்த நிலையும் நினைவுக்கு வர, அந்த நினைப்பே அவளுக்குப் பிடிக்கவில்லை. 'அப்படி மட்டும் ஏதாவது இருந்தது.. அப்புறம் இந்த நேகா மனுஷியாவே இருக்க மாட்டா!" என்று கறுவி கொண்டவள், தனது அன்னையின் வரவுக்காகக் காத்திருந்தாள்.


"அம்மாடி! உங்க அம்மா டிராஃபிக்ல மாட்டி இருப்பாங்க. நீ எதுக்கு இவ்ளோ டென்ஷனா இருக்கே? இங்க வந்து உக்காரு.." என்று கூறினார் அஜித்தின் அன்னை.


"ஹான்! சரி அத்தை.." என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போது, மகளை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் அஜித்தின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மோகனா.


அன்னையைப் பார்த்ததும் சிறு குழந்தை என ஓடிச் செல்ல, "ஏய் நேகா! மெதுவா வாடி, விழுந்துற போறே.." என்று செல்லமாக அதட்டியபடி மகளை அணைத்துக் கொண்டாள் மோகனா.


"வாங்க சம்மந்தி.." என்று லட்சுமி வரவேற்க, உள்ளே வந்த மோகனா, சுற்றிப் பார்த்து விட்டு, "மாப்ள எங்க?" என்று அஜித்தைக் கேட்டாள்.


"இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தான். ஏதோ முக்கியமான போன் வரவும், பேசிட்டு வரேன்னு ரூமுக்குப் போனான்.." என்று லட்சுமி கூறிக் கொண்டு இருக்கும் போது, மாடிப்படியில் இறங்கி வந்தான் அஜித்குமார்.


அவனைப் பார்த்ததும் மரியாதை நிமித்தம் மோகனா எழுந்து நிற்க, "உக்காருங்க அத்தை.." என்றவாறு அவருக்கு எதிரே இருந்த சோபாவில் அமர, மோகனாவோ, "தனு எங்கே?" என்று தனது வருங்கால மருமகளைக் கேட்க, தனுவை அன்னை கேட்கவும் உள்ளுக்குள் திக்கென்று ஆனது நேகாவுக்கு.


"தனுக்குக் கொஞ்சம் உடம்பு சரி இல்ல சம்மந்தி. நேத்து மழையில நல்லா நனைஞ்சுட்டா. அது என்னன்னா காச்சல்ல கொண்டு விட்டுருச்சு. டாக்டர். இப்ப தான் வந்து பார்த்துட்டு ஊசி போட்டுட்டுப் போனார்.." என்று லட்சுமி விளக்கம் கொடுக்க,


"அப்படியா? சரி சம்மந்தி, அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.." என்ற மோகனா, அஜித்தையும், லட்சுமியையும் ஒருபார்வை பார்த்தவள், "சம்மந்தி! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.." என்று ஆரம்பிக்க..


"சொல்லுங்க அத்தை.." என்றான் அஜித்.


"நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பல, நேராவே விஷயத்துக்கு வரேன். என் பையன் விக்ராந்த் உங்க பொண்ணு தனுஷாவை லவ் பண்றதா எங்ககிட்ட சொன்னான். எங்களுக்கு முழுச் சம்மதம். தனு நல்ல பொண்ணு, எங்க வீட்டுக்கு அவ மருமகளா வரணும்னு ஆசைப்படுறோம். நீங்க சரின்னு சொன்னா, இந்த வாரம் நல்ல நாள் பார்த்து, முறைப்படி பொண்ணு பார்க்க வரோம். இதைச் சொல்லத்தான் வந்தேன்.." என்று மோகனா முடித்தாள்.


மற்ற இருவரும் எப்படி உணர்ந்தார்களோ? தெரியாது! நேகாவின் மனதிலோ பிரளயமே உண்டானது.


லட்சுமியோ ரோஹனை மனதில் வைத்துக் கொண்டு, "அது வந்து சம்மந்தி.." என்று ஏதோ பேச வரவும்,


"கேட்கவே சந்தோசமா இருக்கு அத்தை. ஆனா நாங்க தனுகிட்ட பேசணும். அவகிட்ட கேட்டுட்டு நான் சொல்றேன். அதுக்கு அப்புறம் மேற்கொண்டு பேசலாம்.." என்று அஜித் கூற,


"சரி மாப்ள, நான் கிளம்புறேன். நீங்க பேசிட்டுச் சொல்லுங்க.." என்ற மோகனா, மூவரிடமும் விடைபெற்றுச் செல்ல, நேகாவோ அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தங்களது அறைக்குச் சென்று விட்டாள்.


லட்சுமியோ, "அஜித்து! என்னப்பா இது? இவங்க இப்படித் திடீர்னு வந்து பொண்ணு கேட்டுட்டுப் போறாங்க. அப்போ சாந்திக்கு என்ன பதில் சொல்றது?" என்று மகனிடம் கேட்க,


"அம்மா! நேத்தே நான் தனுகிட்ட ரோஹன் பத்தி கேட்டேன். அவனைப் பிடிக்கலன்னு சொல்லிட்டா. என்னையும் உங்களையும் விட்டுட்டுத் தூர தேசம் போக மாட்டேன்னு முடிவா சொல்லிட்டா. அப்புறம் நேகாவோட அண்ணன் விக்ராந்த் ரொம்ப நல்லவர்மா. அவ எங்கேயோ தூரமா போய் வாழ்றதுக்கு, நம்ம பக்கத்துல நம்ம கண் முன்னாடி இருந்தா நல்லது தானே? தனு எழுந்ததும் அவகிட்ட கேட்போம். சரின்னு சொன்னா பார்த்துக்கலாம்.." என்றவன் தங்கையைக் காணச் செல்ல,


இங்கு அறைக்கு வந்த நேகாவோ கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்தாள். அவளால் இதை ஜீரணிக்கவும், ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. எவ்வளவு நேரம் அதே யோசனையுடன் இருந்தாளோ? ஒரு முடிவுடன் தனது மொபைலில் இருந்து தனது அண்ணனுக்கு அழைத்தாள். 



****


No comments:

Post a Comment