ஸ்வரம் 37

 


ஸ்வரம் 37


அந்தப் பக்கம் விக்ராந்த் எடுத்ததும், "அண்ணா! எங்கே இருக்கே? ஃப்ரீயா இருக்கியா? உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றாள் நேகா.


"நேகா! நான் வீட்ல தான் இருக்கேன், என்ன விஷயம் சொல்லுடா?" என்று விக்ராந்த் கூறவும்,


"அண்ணா, அது வந்து.." என்று ஆரம்பித்தவளுக்கு அடுத்த வார்த்தை வெளிவராமல் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது. அவள் ஏதோ ஒரு வேகத்தில் தனுவைப் பற்றிக் கூற தன் அண்ணனுக்கு அழைத்து விட்டாள் தான்! ஆனால் 'தனுவை நீ கல்யாணம் பண்ணக் கூடாது!' என்று இப்பொழுது தான் கூறினால், 'என்ன காரணம்?' என்று தன் அண்ணன் கேட்பான். என்னவென்று அவனிடம் சொல்ல முடியும்? ஒருவேளை நடந்த அனைத்தையும் அவனிடம் கூறி விட்டால், அடுத்த நொடி தன் அண்ணன் கோபத்தில், அவனது வாழ்க்கையைப் பற்றிக் கூட யோசிக்காமல், எதையும் செய்ய சிறிதும் தயங்க மாட்டான். ஏனெனில் அவன் தங்கைகள் மீது வைத்திருக்கும் பாசம் அப்படி!


அதை நினைத்து அஞ்சியவள், சொல்ல வந்த விஷயத்தைத் தனக்குள் முழுங்கிக் கொண்டாள். ஒருபக்கம் தன் வாழ்வைக் கெடுத்த கணவன், இன்னொரு பக்கம் தோழியின் நம்பிக்கை துரோகம்.. இவர்களுக்கு நடுவில் இப்பொழுது தானும், தன் அண்ணனும்! இயலாமையில் சத்தம் வராமல் கண்ணீரை வடித்தாள் நேகா.


ஏதோ பேச வேண்டும் என்று அழைத்த தங்கை அமைதியாக இருக்கவும், "நேகா! ஏய் வாலு! என்னடா? போன் பண்ணிப் பேசணும்னு சொல்லிட்டு நீ சைலண்ட்டா இருக்கே?" என்று கேட்டான் விக்ராந்த்.


முயன்று தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், "அது வந்து.. அண்ணா.. உன் கல்யாண விஷயமா மோஹிமா இங்க பேச வந்திருந்தாங்க. அதைப் பத்தி கேட்கத்தான் உனக்கு போன் பண்ணினேன்" என்று நேகா கூறவும்,


தங்கை கூறியதைக் கேட்ட விக்ராந்தின் இதழில் புன்னகை அரும்பியது. "என்ன சொன்னாங்க? தனுவை எனக்காகப் பொண்ணு கேட்டாங்களா?" என்று கேட்டவனின் குரலில் தான் எவ்வளவு ஆர்வமும், காதலும்!


தன் அண்ணனின் குரலில் இருந்த காதலைப் புரிந்து கொண்ட நேகாவுக்கோ, விரக்திப் புன்னகை தோன்ற, "ம்ம்ம்.." என்று மட்டும் கூறினாள்.

 

அவனோ தங்கையின் மனநிலையை அறியாமல், "உன் பிரெண்டே உனக்கு அண்ணியா வரப் போறா. உனக்குச் சந்தோஷம் தானேடா?"  என்று கேட்க,


"அண்ணா.." என்ற நேகாவின் குரல் இப்பொழுது நலிந்து ஒலித்தது.


தங்கையின் குரலில் என்ன உணர்ந்து கொண்டானோ? "என்னடா?" என்று விக்ராந்த் கனிவுடன் கேட்கவும்..


"நீ..நீ தனுவை உ...உண்மையாவே லவ் பண்றியா?" என்று கேட்டாள் நேகா.


"ம்ம்ம்.. அது என்னமோ தெரியல, இதுவரைக்கும் யார் மேலேயும் வராத காதல், உன் பிரெண்ட் மேல வந்துருச்சுடா…" என்று தன் அண்ணன் கூறியதைக் கேட்டுக் கண்களை இறுக மூடிக் கொண்ட நேகா,  


"ஓகேண்ணா, இதைக் கேட்கத்தான் போன் பண்ணினேன். வேற ஒன்னும் இல்ல, நான் வச்சிடுறேன்.." என்று கூறி விட்டு, அதற்கு மேல் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மொபைலைத் தூக்கி கட்டிலில் எறிந்தாள் நேகா. 


"ஏன் ப்ரோ அவளைப் போய் காதலிச்சே? என் வாழ்க்கை நாசமாக காரணமா இருந்தவ அவ!" என்று வாய் விட்டுக் கூறியவளுக்கு அழுகை மட்டும் நிற்கவே இல்லை! 


அவள் அழுகைக்குக் காரணம்.. அவளது அண்ணன் இதுவரை எதற்கும் ஆசைப்பட்டது இல்லை! எப்பொழுதும் அவனுக்குத் தங்கைகள் நினைவு மட்டுமே இருக்கும். அவர்களின் மனம் அறிந்து எல்லாவற்றையும் நிறைவேற்றுவான். அவனுக்காக அவன் ஆசைப்பட்டது தனுஷா மட்டுமே அல்லவா? அவன் விருப்பத்தைக் குலைக்க அந்தத் தங்கைக்கு மனம் வருமா என்ன?


அந்தப் பக்கம் தன் கையில் இருந்த மொபைலை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ராந்த். எதற்காகத் தங்கை அழைத்தாள்? என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளும் எதுவும் சொல்லாமல் வைத்து விட்டாள். தனுவைப் பற்றி, தன் காதலைப் பற்றிக் கேட்டாள். அதைப் பற்றிக் கூறவும், சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பாள் என்று அவன் எண்ணி இருக்க, அவளோ குரலில் கூட மகிழ்ச்சியைக் காட்டவில்லை. ஏதோ ஒன்று அவனுக்கு இடித்தது. 


அதே நேரம் தனது தங்கையைக் காண அவளது அறைக்கு வந்தான் அஜித்குமார். தனுஷா எழுந்து அமர்ந்திருப்பது கண்டு, "தனு! எழுந்துட்டியாடா? இப்ப ஓகேவா?" என்று கேட்டவாறு அவள் அருகில் சென்று நெற்றியைத் தொட்டுப் பார்க்க, ஜில்லென்று இருந்தது. அதில் நிம்மதியுற்றவன், தங்கையின் அருகில் அமர்ந்து,


"சாப்பிட ஏதும் கொண்டு வரச் சொல்லவா?" என்று அக்கறையுடன் அவன் கேட்க,


"இல்லண்ணா, இப்ப எதுவும் வேணாம்.. நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்.." என்று சோர்வுடன் கூறிய தனுஷா, "அம்மா எஙகே?" என்று கேட்டாள்.


அவனோ, "நேகாவோட அம்மா வந்திருந்தாங்க. அவங்ககிட்ட பேசிட்டு இப்ப தான் ரூமுக்குப் போனாங்க.." என்று கூறி விட்டுத் தங்கையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


அவளுக்கோ, தன்னவனின் அன்னை வந்திருக்கிறார் என்று கேட்டதும் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி வந்தது. "எப்போண்ணா வந்தாங்க? என்ன சொன்னாங்க? என்னை எழுப்பி இருக்கலாம்ல?" என்று சிறு குழந்தையென சிணுங்கியவளைச் சிரிப்புடன் பார்த்திருந்தான் அவள் அண்ணன்.


தன் அண்ணனின் பார்வையில் திருதிருவென விழித்த தனுஷா, "அச்சோ! ஓவர் ரியாக்ட் பண்ணிட்டோமோ? இப்ப என்ன ஏதுன்னு அண்ணா கேட்டா என்னனு பதில் சொல்றது?" என்று யோசித்தபடி அவள் தலையைக் குனிந்து கொள்ள,


"தனு! நீ விக்ராந்த் பத்தி என்ன நினைக்கிறே?" என்று நேரடியாகக் கேட்டான் அஜித்குமார்.


இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத தனுஷா, "அண்ணா!" என்றவாறு அவனைத் திகைத்துப் பார்த்தாள்.


"உனக்கு அவரைப் பிடிச்சு இருக்கா?" என்று அடுத்தக் கேள்வியைக் கேட்க,


"அண்ணா.." என்றவளுக்கு உடலில் ஒருவித நடுக்கமும், பயமும் வந்தது. 'தான் விக்ராந்த்தைக் காதலிக்கும் விஷயம் அண்ணனுக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்? அதை அண்ணன் எப்படி எடுத்துக் கொள்வான்? ஏன் சொல்லவில்லை என்று திட்டுவானோ?' என்று புரியாமல் அவள் அமர்ந்து இருக்க.. 


தங்கையின் பதட்டத்தைக் கண்டு, "தனு! ரிலாக்ஸ்டா.. விக்ராந்த் உன்னை விரும்புறதா சொல்லி, நேகாவோட அம்மா பொண்ணு கேட்கத்தான் நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. உன்கிட்ட கேட்காம பதில் சொல்ல முடியாதுல, அதான் கேட்டுச் சொல்றேன்னு சொல்லிட்டேன். உனக்கு ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம். இல்லனா இருக்கவே இருக்கார், பாரின் மாப்பிள்ளை ரோஹன்.." என்று கேட்டு விட்டுத் தங்கையைக் குறும்புடன் பார்த்தான்.


அவளோ, 'என்னது பாரின் மாப்பிள்ளையா?' என்று உள்ளுக்குள் அதிர்ந்தவள், "ஐயோ அண்ணா! எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சு இருக்கு" என்று அவசர அவசரமாகத் தனுஷா கூறவும்,


"யாரு பாரின் மாப்பிள்ளையைத்தானே சொல்றே?" என்று நாடியை தடவியபடி அவன் கேட்கவும், இப்பொழுது அண்ணனை முறைத்தாள் தனுஷா. அதில் வாய் விட்டுச் சிரித்த அஜித்குமார், "ஓஹ்! விக்ராந்த்தைப் பிடிச்சு இருக்குனு சொல்றியா?" என்று சிரித்துக் கொண்டே கேட்க,


அண்ணன் தன்னிடம் விளையாடி இருக்கிறான் என்று புரிந்ததும், சட்டென்று அவளுக்கு வெட்கம் வந்து விட, அண்ணனின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் தனுஷா.


ஆதுரத்துடன் அவளது தலையைத் தடவியவனின் மனமோ, அலுவலகத்தில் வைத்து ரோஹனைப் பற்றிக் கேட்கும் பொழுது, அவன் யாரென்று அவளுக்கு நினைவு கூட இல்லை. அதே நேரம் யாரையாவது காதலிக்கிறாயா என்று அவன் கேட்ட போது, இல்லை என்று அவள் வாய் கூறினாலும், அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை யோசிக்க வைத்தது. அதன்படி இன்று விக்ராந்த் தனுஷாவை விரும்புவது பற்றிக் கூறி மோகனா பெண் கேட்டு வரவும், தங்கையின் மனது பற்றி ஓரளவுக்குப் புரிந்து கொண்டான். ஆனாலும் அவளது முழுச் சம்மதம் இல்லாமல் வாக்கு கொடுக்க கூடாது என்று தான் தங்கையின் கேட்டுச் சொல்வதாக மோகனாவிடம் கூறினான். 


இப்பொழுது தங்கையின் வாயிலாகக் கேட்ட பிறகு, 'மேலும் தாமதம் வேன்டாம்! சீக்கிரமே அவளது ஆசையை நிறைவேற்ற வேண்டும்' என்று எண்ணிய அஜித்குமார்,


"இந்த அண்ணாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேடா?" என்று ஆதங்கத்துடன் அவன் கேட்க,


அதில் வேகமாக நிமிர்ந்து அமர்ந்த தனுஷா, "அண்ணா! உங்ககிட்ட மறைக்கணும்னு நினைக்கல. எனக்கே உறுதியா தெரியாத போது, எப்படிச் சொல்றதுன்னு தான் தவிச்சுட்டு இருந்தேன்.." என்றவள், 'விக்ராந்த்தின் மீது எப்பொழுது எப்படி காதல் வந்தது, எதனால் அன்று நீ கேட்கும் பொழுது இல்லை என்று கூறினேன்' என அனைத்தையும் கூறியவள்,


"அண்ணா! என் மேல கோபம் இல்லையே? இந்தக் கல்யாணத்துல உனக்கும் சம்மதம் தானே? உனக்குப் பிடிக்கலன்னா எனக்கும் வேணாம்.." என்ற தங்கையின் கன்னத்தைத் தாங்கி நெற்றியில் முத்தமிட்ட அஜித்குமார்,


"உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்! விக்ராந்த் ரொம்ப நல்லவர். நீ முன்னமே அவரைப் பத்தி சொல்லி இருந்தா, அவர் வீட்ல பேசி, எப்பவோ உங்க கல்யாணத்தை நடத்தி வச்சி இருப்பேன்.." என்று புன்னகையுடன் கூறியவன்,


"உன்னோட கல்யாணத்தை ஊரே மெச்சும் அளவுக்கு ஜாம் ஜாம்னு நான் நடத்திக் காட்டுறேன் பாரு!" என்றுவிட்டு அவன் சென்று விட, அப்படியே கட்டிலில் படுத்தாள் தனுஷா. 


அவள் மனமோ பூரிப்பில் திளைத்து இருந்தது. தன்னவனின் காதல் கிடைக்குமா கிடைக்காதா என்று இத்தனை வருடங்களாக மனதில் ஏங்கித் தவித்தவளுக்கு, நேற்று அந்தக் காதலை இதழ் முத்தம் மூலம் அவளுக்கு உணர்த்தி இருந்தான். அதுமட்டும் அல்லாமல், உடனே அதை வீட்டில் கூறி, இதோ! கல்யாணம் வரை கொண்டு வந்து விட்டான். தன்னவனை நினைத்து அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. 


தன்னவனுடனான வாழ்வைப் பற்றி இப்பொழுதே கனவு காண ஆரம்பித்தாள் தனுஷா. ஒருவேளை அது கனவாகவே போய் விட்டால்? அவள் தாங்குவாளா?


****


மறுநாள் ஆர்.வி கன்ஸ்ட்ரக்ஷன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, தனது கேபினில் அமர்ந்திருந்த ரவிவர்மன் இன்டர்காம் மூலம் ஸ்னேகாவை அழைத்தான்.


சிறிது நேரத்தில் அவனின் அனுமதி பெற்று உள்ளே வந்த ஸ்னேகா, "மாமா.." என்று அவரைப் பார்க்க,


அவனோ, "உக்கார் ஸ்னேகா.. உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்.." என்றான்.


ரவிவர்மன் அமரச் சொல்லவும் அமர்ந்தவள், "சொல்லுங்க மாமா, என்ன விஷயம்?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு வந்தார் வாசு. 


அவரும் ஸ்னேகாவின் அருகில் இருந்த இருக்கையில் அமர, இருவரையும் பார்த்த ரவிவர்மன், "ஸ்னேகா! இன்னும் ரெண்டு நாளில் நீ வாசு கூட டெல்லிக்குப் போகணும்.." என்று பேச்சை ஆரம்பித்தான்.


'டெல்லிக்கா ஏன்?' என்பது போல் அவரைப் பார்க்க,


அவனோ, "டெல்லில ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை பிஸ்னெஸ் கான்பரன்ஸ் நடக்கும். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான தொழிலதிபர்கள் அங்கே வருவாங்க. ஆக்சுவலி நான்தான் போறதா இருந்தது. ஆனா உன் அத்தை அவளை விட்டு எங்கேயும் போக கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா. உனக்கே தெரியும், இப்ப கொஞ்ச நாளா அவ எப்படி இருக்கான்னு.. அதான் எனக்குப் பதிலா வாசுவையும், உன்னையும் அனுப்புறேன்.." என்று கூறி முடிக்கவும்,


"மாமா! நான் எப்படி அவ்ளோ தூரம் தனியா? அங்கே பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்கனு சொல்றிங்க.." என்று அவள் சற்றுத் தயங்கியபடி கேட்டாள்.


அவளைப் புன்னகையுடன் எதிர்கொண்ட ரவிவர்மன், "நீ தனியாவே கனடா போய் படிக்க நினைச்சே.. மறந்து போச்சா ஸ்னேகா? இது நம்ம நாட்டுக்குள்ள இருக்கிற ஊரு தான். உன் கூட வாசு இருப்பான். பயப்படாம போய்ட்டு வா.. அங்கே உனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். நீ கண்டிப்பா போய்த்தான் ஆகணும்.." என்று ஆர்டர் போடவும், மறுக்க முடியாமல், வேறு வழி இல்லாமல், அங்கே தன் வாழ்க்கையையே புரட்டிப் போடும் சம்பவம் ஒன்று காத்திருக்கிறது என்பதை அறியாமல், "சரி மாமா, நான் போறேன்.." என்று ஒத்துக் கொண்டாள் ஸ்னேகா.


"குட்! ட்ராவல், அக்காமடேஷன் எல்லாம் வாசு பார்த்துக்குவான். எப்படியும் மூணு நாள் நீ டெல்லில தங்க வேண்டி இருக்கும்" என்றதும்,


"சரி மாமா.." என்றவள் அங்கிருந்து கிளம்பினாள். 


மறுநாள் இரவு டெல்லி செல்வதற்குத் தனக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஸ்னேகா. அவள் அருகில் வந்து அமர்ந்த ரம்யா, "ஸ்னேக் பேபி! இந்தா லிஸ்ட்! இதுல இருக்கிறது எல்லாம் மறக்காம வாங்கிட்டு வந்துரு.. ஏதாவது ஒன்னு நீ மறந்தாலும், மறுபடியும் பிளைட் ஏத்தி விட்டு வாங்கிட்டு வர வச்சிருவேன்.. பார்த்துக்கோ!" என்று மிரட்டினாள் ரம்யா.


அவளைச் சிறிது நேரம் பார்த்த ஸ்னேகா, "ரம்யா! நீ ஓகே தானே?" என்று கேட்டாள்.


"எதுக்குடி கேக்குறே? இப்ப வரை நான் ஓகே தான்.. இனி தானே நீ செஞ்ச பிரியாணியை சாப்பிட போறேன்.. அதுக்கு அப்புறம் எப்படின்னு தான் தெரியல?" என்று சோக கீதம் வாசித்தவளின் முதுகில் ஒரு அடி போட்டவள், 


"லூசு! நான் அதைக் கேட்கல, எங்க அண்ணாவைப் பத்தி கேட்கிறேன்.." என்று அவள் சற்றுத் தயங்கியபடி இழுக்க,


"அத்தானா? அத்தானுக்கு என்னாச்சு?" என்று புரியாமல் கேட்க,


"அது இல்லடி, எங்க அண்ணா உன்னை லவ் பண்ணலன்னு சொல்லிட்டாங்கள்ல, அதுக்கு நீ பீல் பண்றியா? இல்ல அத்தை மாமாக்காக நார்மலா இருக்கிற மாதிரி நடிக்கிறியானு கேட்டேன்.." என்று அழுத்தமாக கேட்கவும்,


"ஒஹ் அதுவா? அத்தான் என்னை லவ் பண்ணலனு சொல்லவும், எனக்கு வருத்தம் ஏற்பட்டது உண்மைதான்! அதுக்காக அழுது உருண்டு பிரண்டு சோக கீதம் வாசிக்க முடியாது. அது என் கேரக்டருக்கு செட் ஆகாதுடி. அதும் அத்தான் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கும் போது, அவர் மேல ஆசைப்படுறது ரொம்பத் தப்பு!" என்று கூறிய ரம்யாவை இமைக்காமல் பார்த்திருந்தாள் ஸ்னேகா.


"என்ன ஸ்னேக் பேபி.. அப்படிப் பார்க்கிறே? எனக்கு வரப் போற ராஜகுமாரன் என்னை மட்டுமே நேசிக்கணும்! அவன் மனசுல தப்பித் தவறி கூட வேற யாரும் இருக்க கூடாது! அவன் லவ் முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்! அப்படி ஒருத்தன் கிடைச்சா, கப்புன்னு பிடிச்சுக்குவேன்.." என்று கண் சிமிட்டவும், ரம்யாவைக் கட்டிக் கொண்டாள் ஸ்னேகா.


"சரி சரி.. ரொம்ப சென்டிமென்ட் பிழியாம, மொதல்ல இந்த லிஸ்டை உள்ள வை! மறந்துட போறே.." என்று அவள் காரியத்தில் கண்ணாக இருக்க,


"எவ்ளோ பீலிங்கா உன்னை ஹக் பண்ணிட்டு இருக்கேன்? நீயென்னன்னா.." என்று ரம்யாவை அடிக்க கையை ஓங்க, ஓங்கிய அவள் கையைப் பிடித்து அதில் முத்தம் வைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள் ரம்யா.


மறுநாள் டெல்லி செல்லும் விமானத்தில், ஜன்னலோர இருக்கையில், ஸ்னேகா வெளியே தனது பார்வையைப் பதித்தபடி அமர்ந்திருக்க, அவள் அருகே அவளை இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்து இருந்தான் பத்ரி தேவ்.


ஆம் கடைசி நேரத்தில் வாசு டெல்லி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட அவருக்கு பதில், பத்ரி திறைமையானவன் என்பதால் அவனை ஸ்னேகாவின் துணைக்கு அனுப்பி வைத்தான் ரவிவர்மன்


பத்ரியோ "இது எனக்குக் கிடைச்ச நல்ல ஆப்பர்சூனிட்டி ஹனி! இதை நான் மிஸ் பண்ணவே மாட்டேன்!" எனத் தனக்குள் விசமமாக நினைத்துக் கொண்டான்.


********


No comments:

Post a Comment