ஸ்வரம் 38

 


ஸ்வரம் 38


கல்லூரியில் இருந்து தனது ஸ்கூட்டியில் வெளியே வந்து கொண்டிருந்தாள் ரம்யா.


அப்பொழுது அவளது வாகனத்தை வழிமறிப்பது போல் அவள் எதிரே ஒரு பைக் வரவும், அதில் "ஏய்.." என்றபடி சற்றுத் தடுமாறியவள், வண்டியை நிறுத்தி விட்டு, "வண்டி வர்றது கண்ணுக்குத் தெரியலையா?" என்று கோபத்தில் கத்தியபடி நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கே தலைக்கவசத்தை கழட்டியவாறு விஷால் அவளுக்கும் மேல் அவளை முறைத்துக் கொண்டு பைக்கில் அமர்ந்திருக்க, அவனைப் பார்த்ததும் தன் கோபம் பறந்தோட, "ஹலோ சீனியர்! நீங்க தானா?" என்று ஆச்சர்யமாகக் கேட்ட ரம்யா, "இங்க என்ன திடீர் விஜயம்?" என்றும் கேட்கவும்,


அவனோ எடுத்த எடுப்பில், "உனக்கு அறிவுங்கிறதே இல்லையா?" என்று திட்ட ஆரம்பித்தான்.


எதற்காகத் திட்டுகிறான் என்று புரியாமல், "ஹி ஹி! அப்படி ஒன்னு இருந்தா, நான் ஏன் சீனியர் உங்ககிட்ட எல்லாம் நான் பிரெண்டா இருக்கப் போறேன்?" என்று சிரித்துக் கொண்டே அவள் கூறவும்,


அதில் கடுப்பான விஷால், "என்ன கிண்டலா?" என்று மேலும் முறைக்க,


"பின்ன என்ன சீனியர்? நீங்க பாட்டுக்கு வந்திங்க, உனக்கு அறிவு இல்லையானு கேக்குறீங்க. என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?" என்று அவள் இப்பொழுது எகிறிக் கொண்டு வந்தாள்.


அவளை ஆழ்ந்து பார்த்த விஷால், "பத்ரிகிட்ட என்ன சொன்னே?" என்று கேட்டான்.


அவளோ, "அவர்கிட்டயா? என்ன சொன்னேன்? உங்களைப் பத்தி ஒன்னுமே சொல்லலையே?" என்று அவள் புரியாமல் அவனிடமே கேட்கவும்,


பைக்கில் இருந்து இறங்கி அவள் அருகில் வந்தவன், "வளர்ந்தா மட்டும் போதாது. யார்கிட்ட என்ன பேசணும்னு பார்த்துப் புரிஞ்சி பேசணும். இப்ப தான் ஏதோ கொஞ்சம் அவன் தெளிஞ்சி வந்தான். அது பொறுக்காம அவன்கிட்ட போய் ஏதேதோ உளறி வச்சி இருக்கே. அவன் என்னன்னா, மறுபடியும் ஆலமரத்தில ஏறியே தீருவேன்னு ஒத்த கால்ல நின்னுட்டு இருக்கான். எல்லாம் உன்னால தான்! உன்னையெல்லாம்.." என்று அவள் தலையில் கொட்ட போனவனின் கையைச் சட்டென்று பிடித்துக் கொண்ட ரம்யா,


"சீனியர்! அது முருங்கை மரம் தானே சொல்லுவாங்க?" என்று அவள் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்க,


'உன்னை என்ன செய்தால் தகும்?' என்று கொலைவெறியில் அவளைப் பார்த்தான் விஷால். ஏனெனில் நேற்று முன்தினம் ஸ்னேகாவுடன் டெல்லி செல்ல போவதாகக் கூறிய தன் நண்பனிடம் அவன் நோக்கம் புரிந்து, 'வேண்டாம்" என எவ்வளவு எடுத்துச் சொல்லியும், கெஞ்சிக் கேட்டும், 'தான் போயே தீருவேன்!' என்று கிளம்பிச் சென்றவனின் மேல் வந்த கோபத்தை ரம்யாவிடம் காட்டத்தான் அவளைத் தேடி வந்தான். இவளது உளறல் தானே பத்ரியை இப்படி மாற்றி விட்டிருக்கிறது என்ற கோபம் அவனுக்கு!


விஷாலின் முறைப்பைப் பார்த்து ஏதோ சரி இல்லை என்று புரிந்து கொண்ட ரம்யா, "சீனியர்! ஜோக்ஸ் அப்பார்ட், ஏதோ ஒரு கோபம் என் மேல உங்களுக்கு இருக்குனு எனக்குப் புரியுது. அது என்னனு சொன்னாதானே, என்னால முடிஞ்ச விளக்கத்தை உங்களுக்கு நான் கொடுக்க முடியும்.." என்று அவள் சீரியஸாகக் கூறவும்,


அவனோ, "என்ன விளக்கம் கொடுக்கப் போறே? தன்னோட காதல், தோல்வியில முடியவும், பித்து பிடிச்சுப் போய் தண்ணி அடிச்சு பயித்தியக்காரன் மாதிரி இருந்தான் தேவ், தெரியுமா?" என்று படபடவென அவன் பேசிக் கொண்டே போனான்.


அவளோ, "என்னது? சீனியருக்கு லவ் பெயிலியரா?" என்று அதிர்ந்து நிற்க,


"ஆமா! அவன்கிட்ட எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தேன். கேட்கவே மாட்டேன்னுட்டான். ஆனா அவன் நல்ல நேரம், உங்க அப்பா வந்து அவன்கிட்ட பேசி, அவன் மனசை மாத்தி வேலைக்கு வரச் சொன்னார். மறுபடியும் வேலைக்குப் போய் ரெண்டு நாள் கூட ஆகி இருக்காது. நீ அவன்கிட்ட ஸ்னேகா பத்தி ஏதோ உளறி இருக்கே. இப்ப அவன்.." என்று நண்பனை நினைத்து ஒருவித ஆதங்கத்தில் பேசிக் கொண்டு போன விஷால், ஸ்னேகாவின் பெயரைக் கூறி விட்டது உணர்ந்து, சட்டென்று சுதாரித்துப் பேச்சை நிறுத்திக் கொண்டான்.


அவன் பேச பேச கேட்டுக் கொண்டிருந்த ரம்யாவோ, "ஸ்னேகாவா? அவ பேரை எதுக்குச் சொன்னிங்க சீனியர்?" என்று கேட்டு விட்டாள்.


"நா..நான் அப்படியா சொன்னேன்? இல்லையே?" என்று அவன் சமாளிக்க முயல,


அவளோ, "எஸ்! ஸ்னேகான்னு தான் நீங்க சொன்னிங்க.. ஒழுங்கா என்ன ஏதுன்னு விவரமா சொல்லுங்க சீனியர்.." என்று அவள் அழுத்திக் கேட்கவும்,


தன்னைத்தானே நொந்து கொண்ட விஷால், "அது வந்து.. பத்ரி ஒரு பொண்ணை லவ் பண்றான்னு உனக்குத் தெரியும் தானே ரம்யா?" என்றதும்,


"ஆமா, அது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டு விட்டு ரம்யா அவனையே பார்த்துக் கொண்டு இருக்க,


"தெரியும்! அந்தப் பொண்ணு வேற யாரும் இல்ல, ஸ்னேகா தான்!" என்று உண்மையைக் கூறி இருந்தான் விஷால்.


"வாட்?" என்று அதிர்ந்து கேட்டவளுக்குக் கண்கள் ரெண்டும் வெளியே தெறித்து விடும் போல் விரிந்தது.


"ம்ம்ம்.. அவளைத்தான் அவள் மனசார விரும்பினான். அவ இந்த காலேஜில் சேர்ந்த அன்னைக்கே அவளைப் பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். அப்புறம், படிக்கிற பொண்ணு மனசைக் கலைக்க கூடாதுனு அவன் மனசுல இருந்த காதலை யாருக்கும் தெரியாம பொத்தி பொத்திப் பாதுகாத்தான். ஒருநாள் அவன்கிட்ட ஏதோ பாடத்தைப் பத்தி டவுட்டு கேட்டு இருக்கா. அவ தன் கூடப் பேசிட்டாங்கிற சந்தோசத்துல என்கிட்ட அவன் காதல பத்தி சொன்னான். நான் கூட அவ குறையைச் சுட்டிக் காட்டி, அவ உனக்கு வேணாம்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். தேவ் கேட்கவே இல்ல. 


அப்புறம் உங்க அண்ணா கல்யாணத்துக்கு வந்தான். அங்க அவனோட காதலிக்குக் கல்யாணம் நடக்கும்ன்னு அவன் எதிர்பார்க்கவே இல்ல. அன்னைக்கு குடிக்க ஆரம்பிச்சவன் தான்! கிட்டத்தட்ட அஞ்சி மாசம் வேலைக்குக் கூடப் போகாம கிறுக்கன் மாதிரி இருந்தான். அவங்க அம்மா ரொம்பப் பாவம்! அவங்கள கூட அவன் நினைச்சு பார்க்கல. சரி, உங்க அப்பா வந்து பேசினதும், இனியாவது ஒழுங்கா இருப்பான்னு சந்தோசப்பட்டேன். ஆனா நீ உங்க அண்ணனுக்கும், ஸ்னேகாக்கும் ஏதோ பிரச்சனை, ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்காங்கனு எப்ப சொன்னியோ, அப்ப இருந்து ஸ்னேகா எனக்குத்தான்னு சொல்லிட்டு இருக்கான்.." என்று சலித்துக் கொண்டவன்,


"இப்படித்தான் உங்க வீட்ல நடக்கிறது எல்லாத்தையும் யார் என்னனு பார்க்காம எல்லார்கிட்டையும் உளறி வைப்பியா?" என்று விஷால் திட்டிக் கொண்டே போக, ரம்யாவோ சிலையாய் சமைந்து நின்றாள்.


இங்கே ஸ்னேகா மற்றும் பத்ரியைச் சுமந்து சென்ற விமானம் டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஒவ்வொரு பயணிகளாக விமானத்தில் இருந்து இறங்க, ஸ்னேகாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் பத்ரி.


தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து வெளியே வந்தார்கள். அங்கே ஸ்னேகா-பத்ரி தேவ் என்ற பெயரை தாங்கிய போர்டை கையில் பிடித்திருந்த ஆடவன் ஒருவன் நிற்க, அவனை நோக்கிச் சென்றான் தேவ்.


தன்னை நோக்கி வருபவர்களைப் பார்த்த அந்த ஆடவனோ, 


"ஹலோ சார்! ஆப் தேவ் ஹை கியா? மே வீர், ஆப்கா ட்ரைவர்(சார்! நீங்க தான் தேவா? என் பெயர் வீர், உங்களுக்காக நியமிக்கப்பட்ட ஓட்டுநர்)" என்று ஹிந்தியில் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் வீர்.


"எஸ்!" என்ற தேவ், "நாங்க தங்கப் போற ஹோட்டல் இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கு?" என்று ஆங்கிலத்தில் கேட்டான்.


(இவர்கள் பேசுவது உங்களுக்காகத் தமிழில்)


"ஒருமணி நேரம் ஆகும் சார்.." என்றுவிட்டு அவர்களின் உடைமைகளை எடுத்து கார் டிக்கியில் அடுக்கியவன், ஓட்டுநர் இருக்கையில் அமரவும், பத்ரியோ, "ஸ்னேகா! நீ பின்னாடி உக்காந்துக்கோ.." என்று அவளிடம் கூறினான்.


ஸ்னேகாவோ, பத்ரி கூறியதைக் கேட்காமல் தனது பார்வையை வேறு திசையில் பதித்து நின்றிருந்தாள்.


அவள் அருகில் சென்ற தேவ், "என்னாச்சு ஸ்னேகா? யாரைத் தேடுறே?" என்று கேட்க,


அவளோ, "என்னை யாரோ ஃபாலோ பண்ற மாதிரி இருக்கு" என்று பேச்சு அவனிடம் இருந்தாலும், அவளது பார்வை இன்னும் அந்த இடத்தைத்தான் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது.


"ஃபாலோ பண்றாங்களா? யாரு?" என்று கேட்டவன் தானும் சுற்றிப் பார்வையிட, 


"யாருன்னு தெரியல. ஆனா யாரோ என்னைக் கண்காணிக்கிற மாதிரியே இருக்கு" என்றவளின் குரலில் ஒருவித படபடப்பு வந்தது.


மீண்டும் சுற்றிப் பார்வையை ஓட்டிய தேவ்க்கு சந்தேகம்படும்படி யாரும் இருப்பது போல் தெரியவில்லை என்றதும், "அது உன்னோட பிரம்மையா இருக்கும். நேரம் ஆச்சு! வா, போகலாம்.." என்று கூறவும், மனமே இல்லாமல் காரின் பின்இருக்கையில் ஏறி அமர்ந்தாள் ஸ்னேகா. 


கார் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லும் வரை, அவள் அந்த விமான நிலையத்தையே திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் இனம் புரியா உணர்வு ஒன்று தோன்ற, அது என்ன மாதிரியான உணர்வு என்று தான் அவளுக்குப் புரியவில்லை. இருக்கையில் கண் மூடிச் சாய்ந்து கொண்டாள்.


ஒருமணி நேர பயணத்திற்குப் பிறகு, அவர்களை அழைத்து வந்த வாகனம் தாஜ் பேலஸ் என்ற பிரம்மாண்டமான ஐந்து நட்சத்திர ஹோட்டலின் முன் வந்து நின்றது. "ஸ்னேகா! நாம வர வேண்டிய இடம் வந்தாச்சு.." என்று தேவ் கூறவும், கண்களைத் திறந்தவள், காரில் இருந்து இறங்கி நின்றாள்.


இருவரும் ரிசப்சனுக்குச் சென்றவர்கள், தங்களுக்காகப் பதிவு செய்திருந்த அறையின் சாவியை வாங்கிக் கொண்டு, தேவ் லிப்டை நோக்கி நகர, ஸ்னேகா அவனுடன் நடக்காமல் அப்படியே நின்றிருந்தாள். சிறிது தூரம் சென்ற தேவ், அவள் தன்னுடன் வரவில்லை என்று புரியவும், திரும்பிப் பார்த்தான். பின்பு அவள் அருகில் சென்றவன், "என்னாச்சு ஸ்னேகா? இங்கேயே நின்னுட்டே.. ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா வந்து சுத்தி பார்க்கலாம், வா.." என்று அவளை அழைக்க, அமைதியாக அவனுடன் நடந்தாள். 


இருவரும் லிப்ட்டில் ஏறி எட்டாவது தளத்துக்கு வந்தவர்கள், அவர்களுக்காகப் பதிவு செய்திருந்த அறையின் முன் வந்து நின்று, "ஸ்னேகா! இது உன்னோட ரூம் சாவி, இந்தா!" என்று அவள் கையில் கொடுத்த தேவ், "புட் ஆர்டர் பண்றேன். சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு! பயப்படாதே! எதுனாலும் எனக்கு கால் பண்ணு" என்று அவன் அக்கறையாகக் கூறவும்,


"ம்ம்ம்.." என்ற ஸ்னேகா அறையைத் திறந்து உள்ளே சென்று கதவைப் பூட்டிக் கொள்ள, சிறிது நேரம் பூட்டி இருந்த கதவை விஷமப் புன்னகையுடன் பார்த்த தேவ், தனக்கான அறைக்குச் சென்று விட்டான்.


உள்ளே வந்த ஸ்னேகா, அங்கிருந்த ஜன்னலின் அருகே சென்று, கனத்த திரைச்சீலையை ஒதுக்கி கண்ணாடியின் வழியே வெளியே தெரிந்த அந்த ஹோட்டலின் முன்பகுதியைப் பார்த்தாள். அவள் மனமோ ஒருநிலையில் இல்லை.


காரணம், விமான நிலையத்தில் அவள் என்ன உணர்ந்தாளோ, அதே உணர்வு தான் இங்கேயும் அவளுக்குத் தோன்றியது. ஆம்! இங்கும் அவளுக்கு, யாரோ தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்று தான் இருந்தது. அது யார் என்று தான் அவளுக்குப் புரியவில்லை. 


அவளை மேலும் யோசிக்க விடாமல் அறையின் கதவு தட்டப்பட, சிப்பந்தி உணவு கொண்டு வந்திருப்பானோ என்று எண்ணியவள், கதவைத் திறந்தாள். அவள் நினைத்தது போல் அவளுக்கான உணவு தான் வந்திருந்தது. அவனே உணவை அறைக்குள் வந்து வைத்து விட்டுச் செல்ல, டீபாயின் மீது இருந்த உணவைப் பார்த்தவளுக்கு ஏனோ இப்பொழுது சாப்பிட மனம் இல்லை. அதனால் ரம்யாவுக்கு அழைத்து, தான் டெல்லிக்கு வந்து விட்டது பற்றிக் கூறியவள், சிறிது நேரம் அவளிடம் பேசி விட்டுக் கட்டிலில் படுத்தவளுக்கு உறக்கம் வர, வெகுநாட்கள் கழித்து நிம்மதியான தூக்கம் வந்து அவளைத் தழுவி கொண்டது.


திடீரென விழிப்பு வந்து எழுந்த ஸ்னேகா, சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க, அது இரவு எட்டுமணி என்று காட்டவும், வேகமாக எழுந்து அமர்ந்தாள். 


"ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல.." என்று தனக்குத்தானே அவள் கூறிக் கொண்டு இருக்கும் நேரம் அவளது மொபைல் ஒலி எழுப்ப, எடுத்துப் பார்த்தவள், அழைப்பது பத்ரி என்றதும் அட்டன்ட் செய்து, "சொல்லுங்க சார்.." என்றாள்.


"ஸ்னேகா! ஆர் யு ஓகே? ரெண்டு மூணு டைம் போன் பண்ணிப் பார்த்தேன். அப்புறம் தூங்கி இருப்பியோனு விட்டுட்டேன். பட் மணி எட்டாகவும் தான் மறுபடியும் போன் பண்ணேன்.." என்று சிறு பதட்டம் கொண்டு அவன் கூற,


"ஆமா, நல்லா தூங்கிட்டேன்.. இப்ப தான் எழுந்தேன். சரி, எதுக்கு போன் பண்ணினீங்க? ஏதும் முக்கியமான விஷயமா? மீட்டிங் நாளைக்குத்தானே?" என்று அவள் கேட்க,


"எஸ்! நாளை காலையில் கரெக்ட்டா பத்து மணிக்கு மீட்டிங்ல இருக்கணும். ரெடியா இரு! இப்ப நைட்க்கு சாப்பாடு கொண்டு வரச் சொல்றேன்.." என்று அவன் சொல்லவும்,


"இல்ல வேணாம், நான் பார்த்துக்கிறேன்.." என்று அவசரமாக மறுத்தவள், மொபைலை அணைத்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்தாள். சிறிது நேரத்தில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்த ஸ்னேகா, டீபாயின் மீது இருந்த ஆறி போன உணவை எடுத்துப் பார்த்தவள், அதை வீணாக்க மனம் இல்லாமல், அதையே உண்டு முடித்து விட்டு அறையில் சிறிது நேரம் நடை பயின்றாள்.


நன்றாகத் தூங்கி எழுந்ததாலோ என்னவோ, மனமும் உடலும் புத்துணர்வுடன் இருக்க, மீண்டும் ஜன்னல் அருகே வந்தவள், வெளியே ஒளி விளக்கில் ஜொலித்துக் கொண்டிருந்த ஹோட்டலின் தோற்றத்தைப் பார்த்தாள் ஸ்னேகா 


அதில் லயித்தவள்,  ‘இங்கு அடைந்து கிடப்பதற்குப் பதில் கீழே சென்றால் என்ன?’ என்று நினைத்தவள், அறையில் இருந்து வெளியேறி அங்கிருந்த லிப்டில் கீழ் தளத்துக்கு வந்தாள்.


அந்த ஹோட்டலின் அழகை சுற்றும் முற்றும் பார்த்து ரசித்தபடி, வெளியே தோட்டத்துக்கு வந்தவளின் கண்ணில் சற்றுத் தள்ளி இருந்த நீச்சல் குளம் தென்பட்டது. அங்கு ஆள் நடமாட்டம் இருப்பது போல் தெரியாததால், தனிமையை விரும்பி, அதை நோக்கி நடந்தாள் ஸ்னேகா. அவள் செல்லும் வழியில், நீச்சல் குளம் உபயோகத்தில் இல்லை என்ற அறிவிப்பு போர்ட் இருந்ததை அவள் கவனிக்கத் தவறினாள்.


டெல்லியின் குளிர் உடலை ஊசியாய் துளைக்க, கைகளைக் கட்டிக் கொண்டு, நிலவின் ஒளியில் ரம்யமாக மின்னிக் கொண்டிருந்த நீச்சல் குளத்தின் நீரை ரசித்துப் பார்த்தபடி நடந்தவளின் மனதில் நேற்று ரவிவர்மனிடம் பேசியது நினைவுக்கு வந்தது. 


"ஸ்னேகா! வாசு உன் கூட வர முடியாத சூழ்நிலைடா.." என்று ரவிவர்மன் கூறவும்,


"ஏன் வாசு அங்கிளுக்கு என்னாச்சு மாமா?" என்று கேட்டவளிடம்,


"அவனுக்கு ஒன்னும் இல்ல, அவன் பையனுக்கு நேத்து நைட் ஆக்சிடென்ட் ஆகிருச்சு. கொஞ்சம் சீரியஸ் தான்! அதான் அவனைக் குடும்பத்தோட இருன்னு சொல்லிட்டேன்" என்று கூறவும்,


"அப்போ டெல்லிக்கு நான் மட்டும் தனியா போகணுமா மாமா?" என்று மிரட்சியுடன் கேட்க,


"இல்லடா, வாசுக்குப் பதில் தேவ்வை அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். திறமையான பையன்! உனக்கு நல்லா தெரிஞ்சவனும் கூட.. சோ நீ நிம்மதியா போய்ட்டு வரலாம்.." என்று கூற,


"மாமா! நான் கண்டிப்பா போயே ஆகணுமா?" என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள் ஸ்னேகா. அவளது தயக்கத்துக்குக் காரணம் இருந்தது.


அதைப் புரிந்து கொண்ட ரவிவர்மனோ, "எதுக்காக இப்படிக் கேக்குறனு எனக்குப் புரியுது ஸ்னேகா. எவ்ளோ நாளைக்கு நீ இப்படி ஓடி ஔிய முடியும்? எதுனாலும் பேஸ் பண்ணித்தானே ஆகணும்?" என்று அழுத்தத்துடன் கூற,


"ம்ம்ம்.. சரி மாமா.." என்றுவிட்டு எழுந்து சென்று விட. செல்லும் தன் மருமகளைப் பெருமூச்சுடன் பார்த்திருந்தான் ரவிவர்மன்.


அதை நினைத்துப் பார்த்துக் கொண்டே நீச்சல் குளம் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்னேகா. திடீரென முதுகுத்தண்டு சில்லிட்ட உணர்வு தோன்ற, வேகமாகத் திரும்பிப் பார்த்தாள். அங்கே யாரும் இல்லை என்றதும், "ம்பச்!" என்று சலித்தபடி பின்னோக்கி ரெண்டு எட்டு எடுத்து வைத்தவாறு திரும்பியவள், நீச்சல் குளத்தின் விளம்பில் நிற்பதை உணராமல், கால் தவறி அடுத்த நொடி தண்ணீரில் விழுந்து விட்டாள். நீச்சல் குளம் சற்று ஆழமாக இருந்ததாலும், அதே நேரம் அவளுக்கு நீச்சல் தெரியாததாலும், தன்னைக் காப்பாற்றுமாறு கூறியபடி தண்ணீரில் மூழ்கியவள், கைகளை மட்டும் மேல் நோக்கி நீட்டி உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தாள் ஸ்னேகா. 


ஏற்கனவே அறிவிப்பு போர்ட் வைத்திருந்ததால், இங்கு யாரும் வர வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில், ஹோட்டல் ஊழியர்கள் கூட அந்தப் பக்கம் தென்படவில்லை.


உயிருக்குப் போராடிக் கொண்டு இரண்டு மூன்று முறை நீருக்குள் சென்று வந்த ஸ்னேகாவுக்கு, தன்னைக் காப்பாற்ற யாரும் வரப் போவதில்லை எனப் புரிந்தததோ என்னவோ? அந்நேரம் அவள் மனத்தில் தோன்றிய ஒரே உருவம், அவள் கணவன் மட்டுமே! இறுதியில் அவள், "அ..த்து" என்று ஈனஸ்வரத்தில் முனகியபடி முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கும் நேரம், ஒரு வலிய கரம் நீண்டு அவளைத் தாங்கிப் பிடித்துக் குளத்தின் வெளியே இழுத்தது.


மயக்கம் தெளிந்து மெதுவாகக் கண் விழித்த ஸ்னேகா, தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோமா என்று நம்ப முடியாமல் சுற்றிப் பார்த்தவளுக்கு, ஏதோ ஒரு அறையில் இருக்கிறோம் என்று புரியவும், அடித்து பிடித்து வேகமாக எழுந்து அமர்ந்தவளுக்கு, அது அவள் தங்கி இருந்த அறை என்று தெரியவும், நிம்மதி உண்டான அதே நேரம், 


"நான் இங்க எப்படி வந்தேன்? என்னை யார் காப்பாத்தினா?" என்று யோசித்தவளுக்கு ஏதோ தோன்ற, தான் அணிந்திருந்த உடையைப் பார்த்தாள். பார்த்தவள் ஏகத்துக்கும் அதிர்ந்து தான் போனாள். காரணம், அவளது உடை கூட மாற்றப்பட்டு இருந்தது.


"யா..யார் மாற்றி இருப்பா?" என்று புரியாமல் தவித்தவளுக்குக் கண்களில் கண்ணீர் பெருகி, அது விழவா வேண்டாமா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஒரு அழகான யுவதி. அவளது உடையை வைத்து, அவள் இங்கு வேலை செய்பவள் என்று ஸ்னேகாவுக்குப் புரிந்தது.


அந்தப் பெண்ணோ, "மேம்! ஆர் யூ ஓகே நவ்?" என்று அழகாக ஆங்கிலத்தில் கேட்க,


ஸ்னேகாவோ, "நீங்க.." என்று இழுக்க,


"நான் மிர்ஸி மேனன்.. இங்க தான் வொர்க் பண்றேன். நேத்து நைட் உங்களுக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணி விட்டது நான் தான். அப்புறம் டாக்டர் வந்து உங்களை செக் பண்ணிட்டு இன்ஜெக்சன் போட்டுட்டுப் போனார்…" என்று அவள் தமிழில் கூறவும்,


"ஹப்பா!" என்று மனதில் நிம்மதியுற்றவள், "என்னை யாரு காப்பாத்தினா?" என்று ஒருவித படபடப்புடன் கேட்டாள் ஸ்னேகா. 


"நீங்க ஸ்விம்மிங் ஃபூல்ல விழுந்ததும், சார் தான் உங்களைக் காப்பாற்றி.." என்று மேற்கொண்டு அந்தப் பெண் கூற வரும் முன், 


"ஸ்னேகா! இப்ப எப்படி இருக்கு?" என்று கேட்டபடி அங்கு வந்தான் பத்ரி தேவ்.


அவன் வரவும், "மேம்! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, நான் போகணும். சார்கிட்ட கேளுங்க, சொல்லுவாங்க.. இப்ப நான் கிளம்புறேன்.." என்று விட்டு அந்தப் பெண் செல்லவும்,


"கவனமா இருக்க வேணாமா ஸ்னேகா? உனக்கு ஏதாவது ஆகி இருந்தா ரவிவர்மன் சாருக்கு என்ன பதில் சொல்றது?" என்று அக்கறையுடன் தேவ் கடிந்து கொண்டான்.


"என்னைக் காப்பாத்தினது நீங்களா?" என்று கேட்டாள் ஸ்னேகா.


அவனோ, அவளது கேள்விக்குச் சிறு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தவன், "நல்லா ரெஸ்ட் எடு ஸ்னேகா! இன்னைக்கு மீட்டிங்க்கு நான் மட்டும் போறேன், நீ நாளைக்கு ஜாயின் பண்ணிக்கோ.." என்று அவன் கூறவும்,


அப்பொழுது தான் அன்று கான்ஃபரன்ஸ் என்ற ஞாபகமே அவளுக்கு வந்தது. "அச்சோ! டைம் ஆகிருச்சா? ஒரு பத்து நிமிஷம்! நானும் ரெடி ஆகிடுறேன்.." என்று பரபரத்தவளைப் பார்த்தவன்,


"ஓகே, உன் விருப்பம்.." என்று தோளைக் குலுக்கிக் கொண்டு வெளியேறினான் தேவ்.


அவன் செல்லவும், மீண்டும் யோசனையானாள் ஸ்னேகா. "நேத்து என்னைக் காப்பாத்தினது யாரு?" என்று அதையே நினைத்துக் குழம்பிப் போனவள், பின்பு நேரமாவது உணர்ந்து, இப்போதைக்கு அந்த யோசனையைத் தள்ளி வைத்து விட்டுக் குளிக்கச் சென்றாள்.


அவள் குளித்து முடித்து வரவும் காலை உணவும் வரவும் சரியாக இருக்க, "நான் ஆர்டர் பண்ணலையே? ஒருவேளை தேவ் பண்ணி இருப்பாங்களோ?" என்று எண்ணியபடி உண்டு முடித்தவள், தான் கொண்டு வந்த பார்மல் உடையான கோட் சூட்டை அணிந்து கொண்டு, மீட்டிங்கிற்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள், தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்து விட்டு, அறையில் இருந்து வெளியேறினாள் ஸ்னேகா.


அதே நேரம் பத்ரியும் தனது அறையில் இருந்து வெளியே வர, இருவரும் இணைந்து, அதே ஹோட்டலில் இரண்டாவது தளத்தில் நடைபெறும் கான்ஃபரன்ஸ் தளத்திற்குச் செல்வதற்கு அங்குள்ள லிப்டை உபயோகித்து அங்குச் சென்றனர்.


மீட்டிங் ஹால் மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. அங்கு அமர்ந்திருந்த அனைவரும் பெரிய பெரிய பிஸ்னெஸ் மேக்னட்கள். அதில் சில பெண் தொழிலதிபர்களும் அடக்கம். அவர்களின் நடுவில் ஏதோ காட்டில் தொலைந்து விட்ட சிறு குழந்தை போல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்னேகா. 


ஆம்! கான்ஃபரன்ஸ் அறைக்கு வரும் வரை தைரியமாக இருந்த ஸ்னேகா, வந்திருந்த அனைத்து ஜாம்பவான்களையும் பார்த்ததுதான் தாமதம்! அவளது தைரியம் எல்லாம் அவளை விட்டுத் தூர சென்றிருந்தது.


ஸ்னேகாவின் அருகில் அமர்ந்திருந்த தேவ், அவள் கையின் நடுக்கத்தைக் கவனித்து, "ஸ்னேகா! ரிலாக்ஸ்.." என்று அவள் கைப் பிடித்து அழுத்தம் கொடுக்க,


"ம்ம்ம்" என்று கூறினாலும், அவளது பார்வை மிரட்சியுடன் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே வந்த நேரம், தன் எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும், அவளது விழிகள் அப்படியே நிலைகுத்தி நின்றது. 


அங்கே, அவளின் நேர் எதிரே, சாம்பல் வர்ண கோட் சூட்டில் சுவிங்கத்தை மென்றபடி, லேசாகத் தலை சாய்த்து, ஒற்றைப் புருவத்தைத் தூக்கி, அவளையே பார்வையால் துளைத்தவாறு ஆண்மகனுக்கே உண்டான கம்பீர அழகுடன் அமர்ந்திருந்தான் அவன்! ஸ்னேகாவின் மணாளன் ரிஷிவர்மன்!


****


No comments:

Post a Comment