ஸ்வரம் 39

 



ஸ்வரம் 39


ஹோட்டலில் தனது அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஸ்னேகா.


கான்ஃபரன்ஸ் முடிந்து அவள் அறைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகிறது. ஆனாலும் அவள் மனதிலும், உடலிலும் இருந்த படபடப்பு இன்னமும் அடங்கவில்லை! 


எத்தனை மாதங்கள் கழித்து கணவனைப் பார்க்கிறாள்?! அன்று அவன் ஓவிமாவிடம் நடந்து கொண்ட விதத்தில், அவன் மீது கோபம் கொண்டு, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டாலும், அது அவளை வருத்திக் கொண்டு தான் இருக்கிறது. பின்னே? அவள் காதல் என்ன திடீரென அவனைப் பார்த்ததும் வந்த காதலா? அவள் பிறந்ததில் இருந்து, என்று அவன் முகம் பார்த்துச் சிரித்தாளோ, அன்றிலிருந்து அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போன காதல் அல்லவா! அதை ரிஷிவர்மன் அறியாவிட்டாலும் அவள் அறிவாளே! 


அதே நேரம், மருத்துவமனையில் வைத்து ரவிவர்மனின் மூலம், கணவன் சிறு வயதில் அனுபவித்த மனக் கஷ்டங்கள் அனைத்தும் அவளுக்குத் தெரிய வரவும், அவனுக்காக அவள் மனதில் துடித்துப் போனது என்னவோ உண்மை தான்! பாசத்திற்காக ஏங்கும் கணவனிடம் ஓடிச் சென்று அவனை மடி தாங்க பேராசை கொண்டாள். அவன் மீது முன்பிருந்த பயம் இப்பொழுது அவளிடம் இல்லைதான்! ஆனாலும் அவனைத் தேடிச் சென்றால், நிச்சயம் தன்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டான் என்று அவள் அறிவாள். அதனால் தான் ரவிவர்மன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், மனதைக் கல்லாக்கிக் கொண்டு, சென்னையிலேயே இருக்க முடிவு செய்து இருந்தாள்.


இப்பொழுது அவள் இங்கு வர தயங்கியதற்கான முதல் காரணம் கூட அவள் கணவன்தான்! அவனும் தொழிலதிபன் தானே? நிச்சயம் இங்கு வருவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அவனை எப்படி எதிர்கொள்வது என்று தான் அவள் மாமனாரிடம் மறுத்துப் பார்த்தாள். அவளது மறுப்பு ரவிவர்மனிடம் எடுபடவே இல்லை. இதோ! டெல்லி வந்ததும் அல்லாமல், அவனை நேருக்கு நேர் பார்த்தும் விட்டாள்.


மீட்டிங்கோ கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்தது. அத்தனை நேரமும் ரிஷிவர்மனின் பார்வை அங்கும் இங்கும் எங்கும் திரும்பவில்லை. அவன் மீட்டிங்கில் கவனத்தைச் செலுத்தினானோ இல்லையோ, ஸ்னேகாவைப் பார்வையிடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. அவள் அவனைப் பார்க்கா விட்டாலும், கணவனது பார்வை தன்னைத் துளைப்பதை அறிந்தே இருந்தாள். 


என்ன மாதிரியான பார்வை அது?! கோபமா அல்லது வேறு ஏதுமா? 

கணவனுக்குத் தன்னைப் பிடிக்காது என்று அவளுக்கு நன்கு தெரியும். பின்பு எதற்காக அப்படித் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் அவளுக்குப் புரியவில்லை. அவனது பார்வையில், அந்த ஏசி அறையிலும், ஸ்னேகாவுக்கு வியர்த்து வழிந்தது. 


ஆனாலும் அவன் மீது காதல் கொண்ட அவளது மனமோ, இத்தனை நாட்களாக கணவனைப் பார்க்காமல் இருந்ததால், அவனைப் பார்த்ததும் மனதின் அடி ஆழம் வரை அவளுக்குத் தித்தித்தது. கணவன் அறியாமல் அவனைப் பார்வையால் படம்பிடித்து, மனப் பெட்டகத்தில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.


இப்படிப் பலவகை உணர்வுகளால் ஆட்கொண்ட ஸ்னேகா, நாளை கணவனை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க. அவளை மேலும் யோசிக்க விடாமல், அவளது மொபைல் ஒலி எழுப்பி, அவள் கவனத்தைத் தன் புறம் திருப்பியது.


எடுத்து யார் என்று பார்த்தவள், அழைப்பது தேவ் என்றதும் அட்டன்ட் செய்து, "சொல்லுங்க பத்ரி சார்.." என்றாள்.


அந்தப் பக்கம் இருந்த பத்ரியோ, "ஸ்னேகா! ஆர் யூ ஓகே?" என்று மென்மையான குரலில் கேட்க,


அவளோ, "ஏன்? எனக்கு என்னாச்சு? நல்லா தானே இருக்கேன்.. அப்புறம் எதுக்கு இப்படிக் கேக்குறீங்க?" என்று புரியாமல் அவனிடம் கேட்கவும்,


"இல்ல, நீ மீட்டிங் ஆரம்பிச்சதுல இருந்து நெர்வசாவே இருந்த.. லன்ச் கூடச் சரியா சாப்பிடல, அதான் கேட்டேன்.." என்று இப்போது அக்கறையான குரலில் கேட்டான் பத்ரி.


ஏனோ இவனது அக்கறை கலந்த விசாரிப்பு ஸ்னேகாவுக்கு எரிச்சலைத்தான் கிளப்பியது. அதனால், "வேற ஏதும் விஷயம் இருக்கா சொல்லுங்க! இல்லன்னா நான் வைக்கிறேன் பத்ரி சார்.. எனக்குத் தூக்கம் வருது.." என்று என்று வேகமாகக் கூறினாள்.


அவளது பேச்சில் அங்கே ஒரு நொடி அமைதி நிலவியது. பின்பு, "ஓகே ஸ்னேகா, நீ ரெஸ்ட் எடு! பட் ஈவினிங் ஏழு மணிக்கு டின்னர் பார்ட்டி இருக்கு, மறந்துடாதே! கரெக்ட் டைம்க்கு ரெடி ஆகிடு!" என்றுவிட்டு போனை வைத்து விட்டான் பத்ரி.


"கண்டிப்பா டின்னர் பார்ட்டி போகணுமா?" என்று யோசனையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தவள், பின்பு நேரம் ஆவதை உணர்ந்து,


"ம்பச்!" என்று சலித்தபடி குளியல் அறைக்குச் சென்று குளித்து முடித்து, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்த ஸ்னேகா, தனது சூட்கேஸை திறந்து பார்ட்டிக்காக அவள் கொண்டு வந்த உடையைத் தேடினாள். ஆனால் அதற்குப் பதில் அங்கே வேறு ஒரு சேலை இருக்கவும்,


 "இது யார் சேலை? எப்படி என் பெட்டியில்? நான் வைக்கலையே?" என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென மனதில் மின்னல் வெட்ட, அடுத்த நொடி ரம்யாவுக்கு அழைத்து இருந்தாள்.


ஸ்னேகாவின் அழைப்பை எதிர்பார்த்தது போல் உடனே அட்டன்ட் செய்த ரம்யா, "ஹாய் செல்ல குட்டி! முதல் நாள் மீட்டிங் எப்படிப் போச்சு? ஈவினிங் பார்ட்டிக்கு ரெடியாகிட்டியா?" என்று சாதாரணமாகக் கேட்க,


"ஏய் குட்டிப் பிசாசு! என்னடி பண்ணி வச்சி இருக்கே? இதெல்லாம் உன் வேலை தானே? எதுக்குடி சேலையை மாத்தி வச்ச?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு பொரிய ஆரம்பித்தாள் ஸ்னேகா.


அதை அமைதியாகக் கேட்ட ரம்யா, "ஹி ஹி! நான் மட்டும் இல்ல, இதுல உன் ஓவிமாக்கும் பங்கிருக்கு. அவங்க தான் ஆர்.வி குரூப்ஸ் ஆப் கம்பெனியின் எம்.டி, தி க்ரேட் மிஸ்டர் ரவிவர்மனின் செல்ல மருமகள், மிஸ்டர் ரிஷிவர்மனின் கியூட் மனைவி, பார்ட்டிக்கு சும்மா ஏனோ தானோன்னு ட்ரெஸ்ஸிங் பண்ணக் கூடாது, சோ ஸ்னேகா என்ன என்ன ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கப் போறானு உன்கிட்ட கேட்கச் சொன்னாங்க. நீயும் காட்டன் சேலைன்னு சொன்னியா.. எனக்குச் சிரிப்பு வந்துச்சுடி. அதான் நேகாக்காகிட்ட ஹெல்ப் கேட்டு, ரெண்டே நாள்ல அந்தச் சேலையை ரெடி பண்ணி, உனக்குத் தெரியாம உன்னோட சூட்கேஸ்ல வச்சேன்.. எப்புடி?!" என்றவள்,


"ஸ்னேக் பேபி! நீ அந்தச் சேலையிலும் ஜூவெல்ஸ்லையும் செம்ம பிகரா இருப்ப..


வானத்துல இருந்து தேவதைதான் இறங்கி வந்திடுச்சோன்னு, அங்கே இருக்கிறவங்க கண்ணெல்லாம் உன் மேல தான் இருக்கும். முரண்டு பிடிக்காம அதையே கட்டிக்கோ!" என்று ரம்யா ரசித்துக் கூறவும்,


"போடி லூசு.." என்று திட்டினாள் ஸ்னேகா. 


"நான் போறது இருக்கட்டும்.. அங்கே எல்லாம் ஓகே தானே ஸ்னேகா?" என்று கேட்டாள் ரம்யா. 


"எல்லாம் ஓகே தான்டி.." என்றவள், "ரம்யா! பார்ட்டிக்கு நேரம் ஆச்சு, நான் போன் வைக்கிறேன்.." என்றவளிடம்,


"ஏய் ஏய்! நில்லு நில்லு, ஆமா சீனியர் எப்படி இருக்கார்?" என்று பல்லைக் கடித்தபடி பத்ரியை பற்றிக் கேட்ட ரம்யாவின் குரலில் இருந்த காட்டத்தை உணராமல்,


"அதை அவர்கிட்ட தான் நீ கேட்கணும்" எனப் பட்டுக் கத்தரித்தார் போன்று பதில் அளித்த ஸ்னேகா, மொபைலை அணைத்து விட்டு பார்ட்டிக்குத் தயாரானாள்.


அப்பொழுது அவளது மொபைலுக்கு அழைத்த தேவ், "ஸ்னேகா! நான் பார்ட்டி ஹாலுக்குச் சீக்கிரம் போகணும். ரவி சார் ஒருத்தரை இமீடியட்டா மீட் பண்ணச் சொல்லி இப்ப தான் கால் பண்ணினார். அதனால நான் முன்னாடியே கிளம்புறேன். நீ சரியா ஏழு மணிக்கு கிரவுண்ட் ஃபுளோர்க்கு வந்துரு! அங்கே தான் டின்னர் பார்ட்டி.." என்று கூறியவன், அவளின் பதிலை எதிர்பாராமல் வைத்து விட்டான். 


ஸ்னேகாவுக்கும் கூட அவனுடன் செல்ல விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. இப்பொழுது அவனே அப்படிச் சொல்லவும், சற்று நிம்மதியாக உணர்ந்தவள், தான் அணிந்திருந்த சேலையைச் சரிசெய்தபடி தன்னை கண்ணாடியில் பார்த்தாள்.


பார்ட்டி ஹாலுக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க, அங்கே மெல்லிய இசை ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த பார்ட்டி ஹாலின் மத்தியில் தொங்க விடப்பட்டிருந்த சாண்ட்லியர் விளக்கு ஒளி வெள்ளத்தைப் பாய்ச்ச, அதற்குப் போட்டி போடும் விதமாய், சரியாக ஏழு மணிக்கு, வெள்ளை மற்றும் தங்க நிற கற்களை வாரி இறைத்த சந்தன நிற ஷிப்பான் டிசைனர் புடவையில் விண்ணிலிருந்து இறங்கி வந்த ரதி போல, அங்கே நுழைந்தாள் ஸ்னேகா.


தோளோடு தோள் உரசும் அளவுக்கு நீளமான வைரத் தோடும், கழுத்தை ஒட்டிய வைர நெக்லசும், கையில் வைரத்தில் இழைத்த ப்ரேஸ்லெட்டும் நட்சத்திரங்களை உடைத்து ஒட்ட வைத்தது போல ஜொலித்தது. சிறு கை வைத்த பிளவுஸும், தனது நீளமான கார் கூந்தலை ஒரு பக்கம் மட்டும் கிளிப்பில் அடக்கியிருக்க, மறுபுற கூந்தலை மயில் தோகையென விரித்து விட்டிருந்தாள் தேவதையவள்.


அங்கிருந்தோர் கண்களின் கரு விழிகள் தெறித்து வெளியே விழும் அளவுக்கு, மெழுகு பொம்மைக்கு அலங்காரம் செய்தது போல், அவ்வளவு அழகாக இருந்தாள் ஸ்னேகா.


எப்பொழுதுமே ஸ்னேகா தன் தோற்றத்திலும், அலங்காரத்திலும் அவ்வளவாக கவனம் செலுத்த மாட்டாள். ஏனோ அவளுக்கு அதில் நாட்டம் இருந்தது இல்லை. அவளது தமக்கைகள் தான் அவளைப் பிடித்து வைத்து அழகு செய்து பார்ப்பார்கள். இன்று ரம்யாவின் வேலையால், வேறு வழியில்லாமல் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவளுக்கு.


இப்பொழுது அனைவரின் பார்வையும் அவள் மீதே இருக்கவும், அசௌகரியமாக உணர்ந்தாள் ஸ்னேகா. அப்பொழுது "ஹனி.." என்ற குரலில் அவள் நிமிர்ந்து பார்க்க, அவள் எதிரே அவளையே ரசித்துப் பார்த்தபடி நின்றிருந்தான் தேவ்.


'ஹனியா? யாரை அப்படிச் சொன்னாங்க? என்னையா?' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, அவளை மேலும் யோசிக்க விடாமல், "எதுக்கு இப்படி இங்கேயே நின்னுட்டே? வா.." என்று தேவ் அழைக்க, அவளோ அசையாமல் அவனை அழுத்தமாக பார்த்தபடி நின்றிருந்தாள். 


"ம்பச்.. வா.." என்று ஸ்னேகாவின் அனுமதி இல்லாமல், அவளது பூங்கரத்தை மென்மையாக பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான் தேவ்.


உள்ளே வந்ததும், அவன் கையில் இருந்து தனது கையை விடுவித்துக் கொண்டவள், அவனிடம் இருந்து தள்ளி நின்று கொள்ள, அவளைப் பார்த்த சில பெண்கள், "வாவ்! யு ஆர் லுக்கிங் கார்ஜியஸ்.." என்று அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கவும், அதில் எழுந்த சங்கோஜத்தை மறைத்துக் கொண்டு சிரித்த முகமாக அவர்களுடன் பேச முயன்றாள் ஸ்னேகா. ஆனால் தேவ்வின் நெருக்கம் அவளுக்கு முள்ளில் மேல் இருப்பது போன்று இருந்தது. 


காரணம், பத்ரி அவளின் அருகிலேயே தான் நின்றிருந்தான். 'என்னாச்சு இவருக்கு? எதுக்கு இப்படி பிகேவ் பண்றாங்க? பத்ரியா இப்படி?' என்று அவளால் நம்ப முடியவில்லை. அவர்களுடன் பேசியபடி மெதுவாக அங்கிருந்து விலகி நடந்த ஸ்னேகா, உணவு உண்ணச் செல்வது போல் நகர்ந்து கொண்டாள். அதன் பிறகே அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.


உணவு உண்ண மனம் இல்லை என்றாலும், வேறு வழி இல்லாமல், ஒரு தட்டில் சில உணவுகளை எடுத்து வைத்தவள், மெதுவாகத் தனது பார்வையை அங்கிருந்தவர்களின் மீது படர விட்டாள். அவளது பார்வை ஒருவித ஏக்கத்தோடு சுற்றி வந்தது என்று கூடச் சொல்லலாம். ஆனால் அவளது பார்வையில் பட வேண்டியவன் மட்டும் இன்னும் வந்திருக்கவில்லையோ? அல்லது வர மாட்டானோ? என்று எண்ணியவாறு அப்படியே நின்றிருந்தாள். 


அப்பொழுது அவளை யாரோ பார்ப்பது போல் உள்ளுணர்வு தோன்றவும், அதிலும் ஏர்போர்ட்டில் உணர்ந்த அதே உணர்வு என்று புரிந்ததும், அவளையும் அறியாமல் வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் ஸ்னேகா. அவள் பார்த்த திசையில், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் பத்ரி.


அவனது அந்தப் பார்வையில் துணுக்குற்றாள் ஸ்னேகா. அதற்கு மேல் உண்ண மனமில்லாமல், தட்டை வைத்து விட்டு, ஓரமாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் எல்லாம் மங்கலாக மாற, நடன நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. அது முடிய எவ்வளவு நேரம் ஆகுமோ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தவளின் அருகே வந்த பத்ரி,


"ஸ்னேகா! ஷால் வீ டான்ஸ்?" என்று தனது வலது கையை அவள் முன் நீட்டினான். 


அவளோ, அவனையும் அவனது கையையும் பார்த்தவள், "சாரி! எனக்கு டான்ஸ் பண்ண வராது.." என்று, 'உன்னுடன் ஆட எனக்கு விருப்பம் இல்லை!' என்பதை நாசூக்காக மறுத்துக் கூறினாள்.


ஆனால் பத்ரியோ, அவள் பேச்சை சட்டை செய்யாமல், "நான் சொல்லித் தரேன்" என்றபடி சட்டென அவளின் வலது கையைப் பிடித்து இழுத்து, எழுந்து நிற்க வைத்தது மட்டும் அல்லாமல், அவளை ஒரு சுழற்று சுழற்றி தன்னோடு ஒட்டி நிற்கச் செய்தவன், அவளை அணைத்துக் கொண்டு அங்குப் போடப்பட்ட பாடலுக்கு ஏற்ப நடனம் ஆட ஆரம்பித்தான். அவர்கள் மட்டும் இல்லை, அங்கு வந்த சிலரும் தங்களது இணையுடன் நடனம் ஆட ஆரம்பித்தார்கள்.


அவனது செயலில் அதிர்ந்த ஸ்னேகாவுக்கோ, அவனின் தொடுகை தீயாய் தகித்து அவளைக் கொன்றது. அந்தத் தீயின் கனலைக் கண்களில் தேக்கி, "தேவ்! என்ன பண்றிங்க?" என்று அடிக்குரலில் அவனிடம் அவள் சீற,


அவனோ அவளை ஆழ்ந்து பார்த்தவாறு, "ஹனி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் ஆழ்ந்த குரலில்.


அவனது பார்வையிலும், பேச்சிலும் நெருப்பின் மீது இருப்பது போன்று உணர்ந்த ஸ்னேகா, "பத்ரி! நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமில்ல?" என்று அவள் கோபத்தில் சீறியபடி அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக விலகிய நேரம், அவள் கையை வேறொரு இரும்பு கரம் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தது. 


அந்த நடன நிகழ்ச்சியோ, ஒவ்வொரு ஜோடியாக ஆடியபடி சுற்றி வரும் போது, ஒரு கட்டத்தில் ஜோடி மாற்றி ஆட வேண்டும். அப்படித்தான் பத்ரி இப்பொழுது வேறு பெண்ணுடன் ஆடச் செல்ல, ஸ்னேகாவோ வேறு ஒருவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.


அவன் யார் என்று அவள் உணரும் முன்பு, அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டது மட்டும் அல்லாமல், சிறிதும் தாமதிக்காமல், அவளது புடவையின் ஊடே மறைந்திருந்த அவளது பொக்கிஷங்களையும், அங்க வளைவுகளையும் அழுத்தத்துடன் களவாடியது அவளை அணைத்திருந்தவனின் கரம்.


அவனது அந்தச் செயலில் அதிர்ந்து துடித்தாள் ஸ்னேகா. இருளில் அவன் முகம் வேறு சரியாகத் தெரியாததால், கோபத்தில் அவனைத் தள்ளி விட முயன்றாள். அவனோ, சட்டென அவளைத் திருப்பி, அவள் முதுகைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அவளது கழுத்துவளைவில் முகம் புதைத்துக் கொள்ள, அவனது சூடான மூச்சுக்காற்று முதுகில் பட்டு பெண்ணவளின் உடலில் சிறு அதிர்வை உண்டாக்கியது.


ஆம்! மங்கலான வெளிச்சத்தில் யாரும் அறியாமல் தன்னைக் களவாடியவன் யார் என்று அவளுக்குப் புரிந்து விட, கோபத்திலும், இயலாமையால் வந்த கண்ணீரிலும் அவளது உடல் விறைக்க, அவளது உடல்மொழியையும், அழுகையையும் கண்டவன்,


"என்னடி.. அவன் கட்டிப் பிடிச்சப்போ இனிச்சுது.. இதுவே நான் கட்டிப் பிடிச்சா உனக்குக் கசக்குதா?" என்று கர்ஜித்தவன், அடுத்த நொடி, அவளை உதறி தள்ளி விட்டு மாயமாய் மறைந்து விட, ஸ்னேகாவோ, அவன் தள்ளியதில் தடுமாறி கீழே விழப் போனாள். அப்பொழுது பத்ரி சட்டென அவளைத் தாங்கிக் கொள்ள முயல, அவனை தீப்பார்வை பார்த்து கண்ணாலேயே அவனை விலகி நிற்க செய்த ஸ்னேகா, விறுவிறுவென்று அவ்விடத்தில் இருந்து அகன்றாள். 


அன்றைய இரவு அவளுக்கு தூங்கா இரவாகிப் போனது. விடிந்ததும் ஒரு முடிவுடன் குளித்து முடித்து மீட்டிங் ஹாலுக்குச் சென்றாள்.


மீட்டிங் ஹாலில் இறுக்கத்துடனே அமர்ந்திருந்த ஸ்னேகா, அருகில் இருந்த பத்ரியையும் திரும்பிப் பார்க்கவில்லை. கணவன் வந்திருக்கிறானா என்றும் அறிய முற்படவில்லை.


ஏனெனில் இருவரும் தன் உணர்வுகளுடன் விளையாடுவது போல் இருந்தது. இவ்வளவு நாளும் நல்லவன் என்று நினைத்த பத்ரி, நேற்று அப்படி நடந்து கொண்டது, அவளுக்குக் கோபத்தை வரவழைத்தது.


அதே நேரம், பிடிக்காத மனைவியிடம் அத்து மீறிய கணவனிடமும் கோபம் கொண்டாள் ஸ்னேகா. அவன் அவளிடம் நடந்து கொண்டதை இப்பொழுது நினைத்தாலும் அவளது உடல் கூசியது.


இப்படி அவள் தனக்குள் இறுகி போய் உழன்று கொண்டிருக்க, பத்ரியோ ஒரு பெருமூச்சுடன் ஸ்னேகாவை மட்டுமே பார்த்திருந்தான்.


அன்றைய மீட்டிங் முடியவும் முதல் ஆளாக ஸ்னேகா வெளியேற, அவளைப் பின்தொடர்ந்த பத்ரி, "ஸ்னேகா! ஒரு நிமிசம்.." என்று அவளைத் தடுத்து நிறுத்தினான்.


அவளோ, கைகளைக் கட்டிக் கொண்டு அப்படியே நின்றாளே தவிர அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.


அவளின் கோபத்தை உணர்ந்து, அவள் முன் வந்த பத்ரி, "உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் புன்னகையுடன்.


அவனது புன்னகை கடுப்பை கிளப்ப, அவனிடம் பேசி விடும் முடிவுடன், "நானும் உங்ககிட்ட பேசணும்.." எனப் பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கூறவும்,


"கண்டிப்பா! ஆனா இங்க வேண்டாம், நைட் எட்டு மணிக்கு ரெடியா இரு!" என்று சத்தமாகக் கூறி, கண் சிமிட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.


இரவு சரியாக எட்டு மணி.. அவளது அறையின் அழைப்பு மணியை அழுத்தினான் பத்ரி. கதவைத் திறந்த ஸ்னேகாவைப் பார்த்தவன், "போலாமா?" என்று கேட்டான்.


"எங்கே போறோம்?" என்று கேட்டாள் ஸ்னேகா.


"ஏன்.. சொன்னாதான் வருவியா?" என்று ஒருமாதிரியான குரலில் கேட்கவும், 


அறைக்கதவை பூட்டி விட்டு அவள் அமைதியாக முன்னே நடக்கவும், அவளைப் பின்தொடர்ந்தான் பத்ரி.


இருவரும் லிப்டில் ஏறி அந்த ஹோட்டலின் முதல் தளத்திற்கு வந்தார்கள். அவர்கள் வந்த இடத்தைப் பார்த்ததும் அதிர்ந்தாள் ஸ்னேகா. ஏனெனில் அந்த தளம் முழுவதும் முழுக்க முழுக்க கேளிக்கைக்கான இடம். 


"இங்க எதுக்குக் கூட்டிட்டு வந்து இருக்கீங்க?" என்று அவள் அவனை முறைத்தபடி கேட்க,


"பேசத்தான்.." என்றுவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்த ஒரு அறையின் கதவைத் திறந்தான் பத்ரி. அவன் திறந்ததுதான் தாமதம்! டீ.ஜேவின் சத்தம் காதை பிளந்தது.


அதில் ஓரடி பின்னால் நகர்ந்த ஸ்னேகா, "நான் ரூமுக்குப் போறேன்.." என்று விட்டு அவள் திரும்பி நடக்கவும்..


அவளை வழி மறித்த தேவ், "ம்பச்! கமான் ஸ்னேகா! பேசணும்னு சொல்லிட்டுத் திரும்பிப் போனா என்ன அர்த்தம்? உள்ள வர எதுக்கு இப்படிப் பயப்படுறே? அதான் நான் உன் பக்கத்திலேயே இருக்கேன்ல, வா!" என்றவன், அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.


அது ஒரு பப்.. ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் இசைக்கேற்றவாறு தங்களை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர்.


உள்ளே செல்ல செல்ல, தன்னை யாரும் தீண்டாதவாறு தன்னிச்சை செயலாக ஓரமாக ஒதுங்கினாள் ஸ்னேகா. மேலும் இங்கு வந்தது தவறோ? என்று தனக்குத்தானே அவள் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க,


சற்றுத் தள்ளி ஓரமாகப் போடப்பட்டிருந்த வட்ட வடிவ மேஜையும், அதைச் சுற்றி இருந்த இருக்கையின் அருகே அவளை அழைத்து வந்த தேவ், அதில் அவளை அமர வைத்து விட்டு, "என்ன சாப்பிடுற?" என்று கேட்டான்.


"எனக்கு ஒன்னும் வேண்டாம்" என்று ஸ்னேகா சிறு பதட்டத்துடன் கூறவும்,


அதை உணர்ந்து, "ரிலாக்ஸ் ஸ்னேகா! உனக்கு கோக் பிடிக்கும் தானே?" என்றவன், "ஜஸ்ட் ட்டு செகன்ட்... இதோ வந்துறேன்!" என்றவன் எழுந்து சென்றான். 


இங்குத் தன் கைகளைப் பிசைந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தவாறு அமர்ந்திருந்த ஸ்னேகாவின் நாசியில், திடீரென ஏதோ ஒவ்வாமைக்கான வாடை அடிக்க, "ம்ம்ம்" என்று முகம் சுளித்தபடி திரும்பிப் பார்த்தவள், அதிர்ந்து போனாள். 


அங்கே, அவள் அருகே இருந்த இருக்கையில், கண்கள் சிவக்க முழுப் போதையில் அவளையே ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன்!


அவனது பார்வையில் சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டவள், 'தேவ் எங்கே?' என்று தேடினாள்.


அவள் அருகில் இருந்தவனோ, அவள் மீதிருந்த தன் பார்வையை மாற்றிக் கொள்ளாமல், சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து, ஒரு சிப் இழுத்து அதன் புகையை ஊதியவன், "சிகரெட்…" என்று அவளிடம் அதை நீட்டினான்.


அவளோ, அவனது செயலில் அவனை முறைத்துப் பார்க்க, அவளது முறைப்பைச் சட்டை செய்யாமல், "ஷேல் வீ டான்ஸ்?" என்று கண் சிமிட்டிக் கேட்டவன், அவள் அனுமதி இல்லாமல், அவளது கரத்தைப் பிடிக்க முயன்றான்.


அவன் அப்படிக் கேட்டதும் அவளுக்கு நேற்றைய நாள் நினைவுக்கு வர, தனது கையைச் சட்டென்று இழுத்துக் கொண்ட ஸ்னேகா, அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் வேகமாக எழுந்து கொண்டவள், திரும்பி வாசலை நோக்கி நடந்தாள். ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. காரணம், அவளது கரம் அவன் வசம் இருந்தது. அதில் ஏகத்துக்கும் அதிர்ந்தவள், 


"விடுங்க கையை!" என்று சீறியவளின் உடல் ஏனோ நடுங்கித்தான் போயிற்று.


"என்னடி! நல்லவ மாதிரி சீன் போடுறே? கண்டவன் கூட ஹோட்டலுக்கு வந்தும் இல்லாம, இதோ! அவன் கூட பப்புக்கும் வந்துருக்கே.. அப்போ நீ எப்படிப்பட்டவளா இருப்பன்னு எனக்குத் தெரியாதா?" என்று இகழ்ச்சியுடன் கேட்கவும், கூனி குறுகிப் போனாள் ஸ்னேகா. இத்தகைய பேச்சை அவள் எதிர்பார்க்கவே இல்லை!


அதற்குள் கோக் ஒன்றை வாங்கிக் கொண்டு அங்கு வந்து விட்ட தேவ், சட்டென்று அங்கு நடந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு, "மிஸ்டர்! அவ கையை விடுங்க…" என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கூறவும்,


"விடலன்னா என்னடா பண்ணுவே?" என்று நக்கலாகக் கேட்டவன், "ஆமா, நீ யாரு? இவளுக்கு அண்ணனா? ஹான்…" தன் புருவம் தூக்கிக் கேட்க,


"இல்ல, இவ என்னோட வருங்கால மனைவி. அவ கையை விடுங்க…" என்று கூறிய பத்ரியை அதிர்ந்து பார்த்தாள் ஸ்னேகா.


மற்றவனோ, பத்ரி கூறியதைக் கேட்டதும், பட்டென ஸ்னேகாவின் கையை விட்டு விட, அவன் விட்டது தான் தாமதம்! விறுவிறுவென்று வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.


அப்பொழுது "ஏய் நில்லுடி!" என்ற கர்ஜனை குரல் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த டி.ஜேவின் சத்தத்தையும் மீறி ஒலித்தது.


அதில் அந்த இடமே சட்டென அமைதியாகி விட, ஸ்னேகாவும் நின்று திரும்பி அவனைப் பார்த்தாள். 


அவனோ, "சார் உன்னோட வருங்கால புருஷன்னு சொல்றாரு…" என்று நிறுத்தி, தன் தாடையைத் தடவியபடி அவளைப் பார்த்தவன், "அப்போ நான் யாருடி? உன்னோட முன்னாள் புருஷனா?" என்று கேட்டுக் குரூரமாகச் சிரித்தான் ரிஷிவர்மன்!


ஸ்னேகாவுக்கோ, எல்லோரும் அவளைக் கேலியாகப் பார்ப்பது போல் இருக்க, அவமானமாக உணர்ந்தாள். அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தாள்.


வெளியே வந்தவளுக்கோ இதயத்தில் சொல்லொணா வலி உண்டானது. கோபத்திலும், ஆற்றாமையிலும் கண்களில் கண்ணீர் வழிய வேகமாக நடந்தாள். அப்பொழுதும் அவளை யாரோ பின்தொடர்வது போல் இருக்க, அந்த அழுத்தமான காலடியோசையில் மேலும் அழுகை வர, அந்த தளத்தில் அடுத்த திருப்பத்தில் திரும்பிய ஸ்னேகா, அங்கிருந்த ஒரு அறையின் கதவைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்து இருந்தாள்.


திடீரென ஒரு அழகிய பெண் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரவும், அந்த பாரில் இருந்தவர்கள் அவளைப் போதையுடன் பார்த்தனர்.


ஆம்! அவள் அவசரத்தில் நுழைந்தது பாரினுள்தான்.. நேராக அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவளுக்குக் கோபம் அடங்க மறுக்க, அவளது கண்ணில் இருந்து கண்ணீர் துடைக்க துடைக்க நிற்காமல் வழிந்து கொண்டு தான் இருந்தது. தன் வாழ்க்கையில் இன்னும் தான் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ? என்று கழிவிரக்கத்தில் துடித்துக் கொண்டிருந்தாள் ஸ்னேகா.


எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ? அவள் அருகில் வந்து நின்ற பேரர், "மேம், உங்களுக்கு என்ன கொண்டு வரட்டும்?" என்று ஆங்கிலத்தில் அவளிடம் கேட்டான்.


அவளோ அவனிடம் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவன் மீண்டும் கேட்கவும், என்ன நினைத்தாளோ, சட்டென அங்கே வேறு ஒருவருக்கு வைத்திருந்த பானத்தை எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.


ஏற்கனவே பாரில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த சில ஆண்களின் பார்வையோ அவள் மீது தான் இருந்தது. அதை உணர்ந்தாலும், "பேரர்.." என்று சத்தமாக அழைத்தவள், "ஒன் மோர்!" என்றாள் ஸ்னேகா.


***


No comments:

Post a Comment