வாடகை வீடு (சிறு கதை)


 தீபஷ்வினி சிறுகதை
"வாடகை வீடு"

"மச்சான் எங்கடா நிக்கிறே?" என்று போனில் பேசியபடி சுற்றும் முற்றும் யாரையோ தேடினான் ஒருவன்.

"உனக்கு வலது பக்கம் திரும்பிப் பாரு மாப்ள.." என்று மற்றவன் கூறவும்,

திரும்பிப் பார்த்தவன், பைக்கில் சாய்ந்தபடி நின்றிருந்தவனைப் பார்த்ததும், தன்னுடன் வந்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு நண்பனின் அருகில் சென்று, 

"மச்சான்! இவ என் காதலி, இவங்க வீட்ல எங்க காதலுக்கு கடும் எதிர்ப்புடா.. நாளைக்கு காலையில் ரிஜிஸ்டர் ஆபிஸில கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அதுவரை இவளைத் தங்க வைக்கப் பாதுகாப்பான வீடு ஏதும் இருந்தா சொல்லு மாப்ள.." என்று அவன் சொன்னான்.

எதிரில் நின்றவனோ, "சரிடா, எனக்குத் தெரிஞ்சவங்க வீடு ஒன்னு இருக்கு. ஆனா ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கும். உனக்கு ஓகேன்னா  இப்பவே போய் வீட்டைப் பார்க்லாம். நீ என்ன சொல்றே..?" என்று கேட்டான் பைக்கில் நின்றவன்.

"பிரச்சினையே இல்லடா.. அங்கேயே தங்கிக்கிறோம்.. அப்போ தான் இவ வீட்டு ஆளுங்க எங்களைக் கண்டுபிடிக்க முடியாது" என்று கூறவும்,

"சரி வா.." என்று அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான் வாடகை வீட்டுக்கு.

மூன்று மாதங்கள் கழித்து…

"ஹலோ சார், என் பேர்  சுரேஷ். மும்பையில இருந்து பேசுறேன்" 

"….." 

"வீடு வாடகைக்கு இருக்குதுன்னு நீங்க  பேப்பர்ல விளம்பரம் கொடுத்து இருந்ததைப் பார்த்தேன்"

"...."

"ஆமா சார்,  இங்க ஐடி கம்பெனியில வேலை. இப்ப சென்னை பிராஞ்ச்சுக்கு என்னை மாத்தி இருக்காங்க. வாடகைக்கு வீடு வேணும். அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்." என்றான் சுரேஷ்.

"..."

"ஆமா சார், பேமிலியோட தான் வர்றோம். எனக்கு ரெண்டு தங்கச்சியும், அம்மாவும்  மட்டும் தான். அப்பா போன வருஷம் தவறிட்டாங்க" என்று அவன் கூறவும்,

"...." 

"சரி சார், நீங்க வீடு எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் போட்டோ எடுத்து அனுப்பினா நல்லா இருக்கும். பிடிச்சுதுன்னா நான் உடனே அட்வான்ஸ் உங்க அக்கவுண்ட்க்கு அனுப்பிருவேன்." என்றதும்,

"...." அந்தப் பக்கம் என்ன கூறப்பட்டதோ??

"ஓகே சார்.." என்றுவிட்டு வைத்த மகனின் அருகில் வந்த அவனது தாய் ஜெயந்தி, 

"சுரேஷ்! என்னப்பா? என்னாச்சு? வீடு கிடைச்சுதா..?" என்று கேட்டார்.

"கிடைச்ச மாதிரி தான்ம்மா.. தனி வீடாம். மேல் போர்சன் தான் இப்ப காலியா இருக்காம். ரெண்டு பெட்ரூம், ஹால், கிச்சன்.. போட்டோ கேட்டு இருக்கேன்" என்று அவன் கூறிக் கொண்டு இருக்கும் போது அவனது மொபைலில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அதைத் திறந்து பார்த்தவனோ, "அம்மா! இங்க பாருங்க.. வீட்டு புரோக்கர்  வீட்டின் உள் அமைப்பு போட்டோ அனுப்பி இருக்கார்." என்று சில புகைப்படங்களைத் தாயிடம் அவன் காட்டினான்.

அதை வாங்கிப் பார்த்தவருக்கு திருப்தியாக இருந்தது. ஆனாலும் சிறிது யோசித்தவர்,

"சுரேஷ்! வீடு நல்லா தான் இருக்கு. எதுக்கும் உன் பிரெண்ட் வினோத்தை நேரே போய் பார்த்து விசாரிச்சுட்டு வரச் சொல்லுப்பா. அதுக்கு அப்புறம் அட்வான்ஸ் கொடுக்கலாம்" என்று அவர் கூறவும்,

"சரிம்மா.." என்ற சுரேஷ், உடனே தனது நண்பன் வினோத்திற்கு அழைத்தான். ரிங் போய் கொண்டே இருக்க யாரும் எடுக்கவில்லை. மீண்டும் இருமுறை அவன் முயற்சி செய்ய, மூன்றாவது தடவை வினோத்தின் மொபைல் எடுக்கப்பட்டது.

"ஹலோ வினோ.." என்று சுரேஷ் பேச ஆரம்பிக்கவும்,

"யாருங்க நீங்க? வினோத்துக்கு நேத்து ஆக்சிடெண்ட் ஆகிப் போச்சு. அவன ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். இப்ப அவன்கிட்ட பேச முடியாது!" என்று அவனது  மொபைலில் இருந்து யாரோ  வேகமாகக் கூறி விட்டு சுரேஷின் பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்து விட்டனர்.

நண்பனுக்கு விபத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டதும், சுரேஷிற்கோ ஒன்றும் ஓடவில்லை.  எதைப் பற்றியும் யோசிக்காமல்  வேகமாகத் தாயின் அருகில் சென்றவன், அவரிடம் விபரம் கூறி விட்டு,

"அம்மா! நான் இப்பவே வினோத்தை பார்க்க சென்னைக்கு கிளம்புறேன். அப்புறம் நானே நேரே போய் வீட்டை பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன். அதுக்கு அப்புறம்  நீங்க தங்கச்சிங்களைக் கூட்டிக்கிட்டு வாங்க.." என்று கூறியவன், அடுத்த பிளைட் பிடித்து சென்னை வந்து இறங்கினான்.

சுரேஷின் குடும்ப பூர்விகம் தமிழகம் என்றாலும், நான்கு தலைமுறைக்கு முன்னர் பாட்டன் காலத்தில் மும்பைக்கு வந்தவர்கள், இங்கேயே இருந்து விட்டனர்.

இப்பொழுது சுரேஷ் வேலை பார்க்கும் கம்பெனி அவனை சென்னைக்கு அனுப்ப முடிவு செய்து இருந்தது. ஜெயந்தியோ, "எல்லோரும் போலாம்.. தங்கச்சிங்க படிப்பை அங்கேயே தொடரட்டும். இப்போதைக்கு வாடகைக்கு வீடு பாரு! பிடித்து இருந்தால் புது வீடாக வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறி இருந்தார்.

சென்னைக்கு வந்த சுரேஷ் முதலில் சென்றது நண்பன் வினோத்தை காணத்தான்!

சுரேஷ், வினோத் இருவரும் கல்லூரி நண்பர்கள். இவர்களுடன் ராம் என்பவனும் உண்டு. ஆனால் இப்பொழுது அவன் அவர்களுடன் இல்லை.

சுரேஷ் மும்பை என்றால் வினோத்தும், ராமும் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு வந்து படித்தவர்கள். படிப்பு முடியவும்  மற்ற இருவரும் அவரவர் ஊருக்குச் செல்ல, சுரேஷ் அங்கேயே வேலை தேடிக் கொண்டான். மூவரும் அலைபேசி வாயிலாகத் தங்களது நட்பை தொடர்ந்து கொண்டு இருந்தார்கள்.

வினோத் அனுமதிக்கப் பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வந்த சுரேஷ், அவனது பெயரை சொல்லி விசாரித்து, நண்பனைக் காண விரைந்தான்.

அங்கோ, அவசர பிரிவில் வினோத் உடல் முழுவதும் மருத்துவ உபகரணங்களோடு உயிருக்குப் போராடி கொண்டிருக்க, அவனது குடும்பமோ, வெளியே கண்ணீரில் கரைந்து கொண்டு இருந்தது.

கதவின் வழியே அவனை அப்படிப் பார்த்ததும், சுரேஷின் மனம் ராமை நினைத்துப் பார்த்தது. ஆம்! இது போல் தான் மூன்று மாதத்திற்கு முன் அவன் விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடித் தனது உயிரை விட்டான்.

சுரேஷ் வினோத்தையே பார்த்துக் கொண்டு இருக்க, உள்ளே வேக வேகமாக மூச்சை இழுத்து விட்டபடி படுத்திருந்த வினோத், மெதுவாகக் கண்களைத் திறந்தான். அவன் பார்வையில் அறையின் வெளியே சுரேஷ் நிற்பது தெரியவும், அவனது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

தனது வலது கை ஆள்காட்டி விரலை வாசலை நோக்கி நீட்டினான். அதைக் கவனித்த செவிலி பெண்ணொ, "என்ன தம்பி, என்ன வேணும்..?" என்று கேட்க,

அவனோ நீட்டிய கையை கீழே இறக்கவே இல்லை. அதில் திரும்பி வாசலைப் பார்த்தவர், என்ன நினைத்தாரோ?? உடனே சுரேஷை உள்ளே அழைத்து வந்தார்.

உள்ளே வந்ததும், "டேய் வினோத்! உனக்கு ஒன்னும் இல்லடா.. நீ சீக்கிரம் குணமாகி வருவே, கவலைப்படாதே.." என்று நண்பனுக்கு ஆறுதல் சொல்லித் தைரியம் அளிக்க முயன்றான்.

வினோத்தோ, தன் முகத்தில் மாட்டி இருந்த ஆக்சிஜன் மாஸ்கை கழட்டி விட்டு, "போ.. போ..ய்டு போய்டு.. இ..ருக்கா..தே! போய்.." என்று தட்டுத்தடுமாறி கூறியவனின் ஆவி அவனை விட்டுப் போயிருந்தது.

சுரேஷ் அதிர்ந்து நிற்க, வினோத்தின் குடும்பமோ அழுகையில் கரைந்தது.

இதோ, வினோத் இவ்வுலகை விட்டு சென்று பதினாறு நாட்கள் ஆகி விட்டது. வினோத்தின் நண்பனாக, அவனது வீட்டினருக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருந்தான் சுரேஷ். ஆனால் எதற்காகத் தன்னை 'போய் விடு..' என்று நண்பன் கூறினான் என்று தான் அவனுக்குப் புரியவே இல்லை!

நண்பனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தவனின் மொபைல் ஒலித்தது. அழைப்பது அன்னை என்றதும் எடுத்து,

"சொல்லுங்கம்மா.. கிளம்பிட்டிங்களா..?" என்று கேட்டான்.

"...."

"சரிமா, நான் வந்து உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன்.."  என்று சுரேஷ் கூற,

"..."

"இல்லமா, வீட்டை இன்னும் போய் பார்க்கல. நீங்க வந்ததும் சேர்ந்தே போய் பார்த்துக்கலாம்.." என்று கூறி விட்டு வைத்தவன், வீட்டு புரோக்கருக்கு அழைத்தான்.

அந்தப் பக்கம் எடுத்தவரோ, "சொல்லுங்க தம்பி, அன்னைக்கே போட்டோ அனுப்பினேன். ஆனா நீங்க தான் ஒன்னும் சொல்லல.." என்று அவர் கூற,

"இல்லைங்க.. சில அசம்பாவிதம் நடந்து போச்சு. அதான் உங்களை காண்டாக்ட் பண்ண முடியல. அந்த வீடு இருக்கா? இல்ல வேற ஏதும் வீடு.." என்று சுரேஷ் முடிக்கும் முன்,

"அதெல்லாம் இருக்கு தம்பி. இப்படி யாராவது வீடு கேட்டா ஒரு மாசம் அப்படியே வச்சிப்போம். அதுக்கு அப்புறமும் எந்த ரெஸ்பான்ஸ் இல்லையா, வேற ஆளுக்கு மாத்தி விடுவோம்." என்று  அவர் கூற,

"ஓகே சார், இன்னைக்கு நைட் அம்மா தங்கச்சிங்க வராங்க. வயசு பொண்ணுங்களை ஹோட்டல்ல தங்க வைக்கிறது சேப் இல்ல. சோ அட்வாஸ் என்ன ஏதுன்னு சொன்னிங்கன்னா, இப்பவே பே பண்ணிடுறேன். இன்னைக்கே நாங்க வீட்டுக்கு வந்துடுறோம், சாவி வேணும்." என்றான் சுரேஷ்.

அவரோ, "நல்லது தம்பி,  காசு எல்லாம் அப்புறம்.. மொதல்ல  எல்லோரையும் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க.. அங்கே வச்சி பேசிக்கலாம். இப்ப உங்களுக்கு நான் வீட்டு அட்ரஸ் அனுப்பி விடுறேன்." என்று முடித்தார் புரோக்கர்.

இரவு எட்டு மணி.. ரெயில் நிலையத்தில் தனது குடும்பத்திற்காகக் காத்திருந்தான் சுரேஷ். சிறிது நேரத்தில் ரயில் வந்து நின்றது.

சுரேஷின் தங்கைகள் அண்ணனைப் பார்த்தும் ஓடி வர, ஜெயந்தியோ, "எப்படி இருக்கே சுரேஷ்? வினோத் விஷயம் நீ சொன்னதும் கஷ்டமா போச்சு. நாளைக்கு ஒரு எட்டு அவங்க வீட்டுக்குப் போய் துஷ்டி கேட்டுட்டு வந்துரலாம்." என்று கூறினார்.

அவனோ, "சரிமா, வாங்க.. இப்ப வீட்டுக்குப் போகலாம்" என்றுவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தவன், டாக்சியில் மூவரையும் ஏற்றினான்.

"அண்ணா! வீடு எப்படி இருக்கும்? நாம ஒரு திங்ஸும் எடுத்துட்டு வரலையே, எல்லாம் புதுசு வாங்கப் போறோமா..?" என்று ஒரு தங்கை கேட்க,

அவனோ, "இல்லடா.. வீடு பர்னிஷ்டா தான் வாடகைக்கு விடுறாங்க. சோ நாம குரோஸரீஸ் மட்டும் வாங்கினா போதும்ன்னு புரோக்கர் சொன்னார். பட் வாஷிங் மிஷின் மட்டும் இல்லையாம். அதை வேணா நாம  மெதுவா வாங்கிக்கலாம்.." என்று அவன் கூறவும் வீடும் வந்திருந்தது.

காரில் இருந்து இறங்கிய நால்வரும் அந்த வீட்டை பார்த்தனர். சுரேஷா, 'இந்த வீட்டை எப்பவாவது பார்த்து இருக்கோமா?' என்று யோசித்துக் கொண்டு நின்றான்.

அது ஒரு தனி வீடு. சுற்றிக் கண்ணுக்கு எட்டின தூரத்தில் ஆங்காங்கே சில வீடுகள் மட்டும் இருந்தன.

சுரேஷின் அன்னையோ,  "வீடு அழகா இருக்குப்பா.." என்று கூற,

"ஆமா அண்ணா, வீடு  வெளியே பார்க்கவே செம சூப்பரா இருக்கு. ஹை பால்கனி..!!" என்று குதித்தாள் இன்னொரு தங்கை.

அப்பொழுது பைஜாமா - ஜிப்பா அணிந்த ஒரு பெரியவர், "வாங்க! வாங்க! வந்து நேரம் ஆச்சா?" என்றபடி அங்கு வந்தார்.

அவரை அனைவரும் நெற்றிச் சுருக்கிப் பார்க்க, அவரோ, "நான் இந்த வீட்டு ஓனர்" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள,

"ஹலோ சார்.. நான் தான் சுரேஷ்" என்று தன்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டான்.

அவரோ, "இந்தாங்க தம்பி வீட்டு சாவி. அட்வான்ஸ் பத்தி நாளைக்கு காலையில் பேசிக்கலாம். இப்ப பிள்ளைகளை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போங்க. ராத்திரி நேரத்தில இப்படி வெளியே நிக்க வைக்க வேண்டாம்!"  என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.

"சுரேசு! அவரை பார்க்க நல்ல மனுசனா தான் தெரியுறார். அவர் சொன்ன மாதிரி ரொம்ப நேரம் இங்க நிக்க வேண்டாம்.." ஜெயந்தி கூற,

"சரிமா, நீங்க போங்க.. நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்." என்றான்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா. நான் ஊர்ல இருந்து கட்டி கொண்டு வந்த சாப்பாடு இருக்கு. ஒரு நைட் தானே? அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்." என்று அவர் கூற,

சுரேஷோ சரி என்பது போல் தலையை ஆட்டி விட்டு, அன்னையையும் தங்கைகளையும் கூட்டிக் கொண்டு தாங்கள் புதிதாக வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டுக்குள் கால் பதித்தான்.

வீடு சிறு தூசி துரும்பு கூட இல்லாமல் அப்படி ஒரு சுத்தமாக இருந்தது. சின்னவர்கள் இருவரும் வீட்டை சுற்றி சுற்றி வந்தார்கள். 

சுரேஷ் இன்னமும் யோசனையில்தான் இருந்தான். பின்பு  ஜெயந்தி கொண்டு வந்த உணவை நால்வரும் சாப்பிட்டு விட்டு ஹாலிலேயே பாய் விரித்துப் படுத்துக் கொண்டார்கள்.

எவ்வளவு நேரம் கடந்ததோ?? 'வீல்' என்று கத்தியபடி எழுந்தாள் சுரேஷின் சின்னத் தங்கை. அதில் அடித்து பிடித்து அனைவரும் எழுந்து கொண்டனர்.

லைட்டை ஆன் செய்த சுரேஷ், "குட்டிமா! என்னடா என்னாச்சு..?" என்று கேட்க,

அவளோ, ஏதோ பேயை கண்டது போல் விழித்தாளே தவிர யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

ஜெயந்தியோ, "குட்டி! கனவு கண்டு பயந்துட்டியா? இரு, திருநீறு வச்சி விடுறேன்." என்று அவரது கைப்பையில் தேட, அங்கே எதுவும் இல்லை.

பெரிய மகளைப் பார்த்தவர், "சுபா! திருநீறு எடுத்து வைக்கச் சொன்னேனே, வச்சியா..?' என்று கேட்க,

அவளோ, "அவசரத்துல எடுத்து வைக்க மறந்துட்டேன் மா" என்று கூறவும், அவளை முறைத்தவர், "சரி, போய் தண்ணி எடுத்துட்டு வா!" என்றார்.

அவளும் எழுந்து கிச்சனுக்குள் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பியவள், "அண்ணா!" என்று அலறினாள்.

அவளது அலறல் சத்தம் கேட்டு சுரேஷ் அங்கே விரைய, அவளோ, ஒரு இடத்தைப் பார்த்தவாறு கண்கள் நிலைகுத்தி நின்றாள்.

"சுபா! என்னாச்சு? எதுக்கு கத்தினே..?" என்று தங்கையை உலுக்க,

அவளோ, தான் பார்த்துக் கொண்டு இருந்த திசையை நோக்கித் தனது வலது கையை நீட்டினாள்.

தங்கை கை காட்டிய திசையில் தானும் பார்த்த சுரேஷ், "என்னடா, அங்க என்ன இருக்கு..?" என்று புரியாமல் கேட்க,

அவளோ, "வா..வாஷிங் மி..ஷின்.." என்றாள். அவளது குரலில் அப்படி ஒரு நடுக்கம் தெரிந்தது.

அவள் கூறியதைக் கேட்டு மீண்டும் அங்கு பார்த்த சுரேஷ், புத்தம் புதிதாக இருந்த வாஷிங் மிஷினை கண்டு, "ஒஹ்! வாஷிங் மிஷினா? புதுசா வாங்கி வச்சி இருப்பாரா இருக்கும். நம்மகிட்ட சொல்ல மறந்து இருப்பார்டா.." என்று கூற,

தன் அண்ணனைத் திரும்பிப் பார்த்தவளோ, "இ.இல்ல அண்ணா.. நானும், குட்டிமாவும் வீட்டை சுத்தி பார்க்கும் போது அ..அது இல்ல. இ..இப்ப இருக்கு.. எப்படிண்ணா..?" என்று பயத்தில் வேர்த்து வடியும் முகத்தோடு கேட்டாள் தங்கை.

"என்னது? அப்ப பார்க்கும் போது இல்ல, இப்ப இருக்கா..?" என்று நினைத்தவனுக்கும் ஒன்றும் புரியவில்லை.

"சரி, எதுனாலும் காலையில் பேசிக்கலாம்.. இப்ப  வந்து தூங்கு!" என்று கூறித் தங்கையை ஹாலுக்கு அழைத்து வர,

"என்ன சுபா, எதுக்கு கத்தினே..?" என்று ஜெயந்தி கேட்கவும்,

"ஒன்னும் இல்லமா.. பல்லி  அவ மேல விழுந்து இருக்கு போல! அதான் கத்தி இருக்கா.." என்று கூறிச் சமாளித்தவன், தங்கையை படுக்க வைத்தான். தாயின் மடியில் படுத்து இருந்த சின்னவளோ, கண்களை மூடாமல் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு பெருமூச்சு விட்ட சுரேஷ் சோபாவில் யோசனையுடன் அமர, அப்பொழுது அவனது மொபைலுக்கு அழைப்பு வந்தது.

இந்த நேரத்தில யார் என்று எடுத்துப் பார்த்தவன், அதில் வினோத் என்று வரவும், "வினோத் அம்மா இப்ப எதுக்கு கால் பண்றாங்க..?" என்று நினைத்தபடி அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.

அந்தப் பக்கமோ, "டேய் சுரேஷ்! போயிருடா.. நீ அந்த வீட்ல இருக்காதடா, போயிரு!" என்ற வாக்கியதோடு மொபைல் சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருந்தது.

ஆனால் சுரேஷோ தீச்சுட்டார் போல் தன் கையில் இருந்த மொபைலை கீழே தவற விட்டு இருந்தான். "இறந்து போன வினோத் எப்படி போனில்..??" என்று படபடத்துப் போனான். ஏனெனில் வினோத்தின் குரல் அப்படியே இருந்தது. கூடவே அவன்  இறக்கும் தருவாயில் இதே போல்  கூறியது நினைவுக்கு வர, அவன் முகமோ வியர்வையில் முக்குளித்து இருக்க, அந்த வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தான்.

மகனின் வியர்த்த முகத்தைக் கண்ட ஜெயந்தி, "சுரேஷ்! என்னப்பா என்னாச்சு? போன்ல யாரு..?" என்று கேட்டார்.

"வி..வினோத்மா.." என்றான் திக்கி திணறி..

அவரோ, "என்னப்பா சொல்றே? அவன் தான் செத்து போய்ட்டானே!" என்று அவர் கூறவும்,

என்ன நினைத்தானோ?? "அம்மா! இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க கூடாது. வாங்க போயிடலாம். சுபா, குட்டிமா எழுந்துருங்க.." என்று அவர்களைத் துரிதப்படுத்தினான். அவர்கள் மூவரும் அசையாமல் அப்படியே அவனைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார்கள்.

"அம்மா! என்னமா? எழுந்துருங்க.. இங்க ஏதோ சரி இல்ல, வாங்க போகலாம்.." என்று பதட்டத்துடன் கூறி விட்டு, வேகமாகக் கதவின் அருகில் சென்று கதவைத் திறக்க முயல, அதுவோ திறக்க மறுத்தது.

மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவன் காதில் சார்ஜ் இல்லாமல் அணைந்து போயிருந்த மொபைல் ஒலித்தது. படபடக்கும் இதயத்துடன் தலையை மட்டும் திருப்பி மொபைலை பார்க்க, அதில் 'அம்மா காலிங்' என்று வந்தது. அதுமட்டுமின்றி அது தானாக ஆன் ஆக, அந்தப் பக்கமிருந்து, "சுரேஷ்! நாங்க ஸ்டேஷனுக்கு வந்துட்டோம்ப்பா. ட்ரெயின் லேட்டு போல! நீ எங்க நிக்கிறே..?" என்று கேட்டது அவனது தாயின் குரல்.

அதில் ஷாக் அடித்தது போல் நின்றிருந்த சுரேஷ், அப்போது தான் கூட்டிக் கொண்டு வந்தது யார் என்று வேகமாகத் திரும்பிப் பார்த்தான்.

அங்கே வெறித்த பார்வையில் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள் இருவர். அது வேறு யாரும் அல்ல இறந்து போன ராமும், வினோத்தும்!

தனது குடும்பம் அல்லாமல் இவர்கள் நிற்பது கண்டு, "நீ.. நீங்க ரெண்டு பேரும்.." என்று பயத்தில் நடுங்கினான் சுரேஷ்.

"பயப்படாதே சுரேஷ்! நாங்க தான் இறந்து போன உன்னோட பிரெண்ட்ஸ்.  நாங்க இல்லாத உலகத்துல நீ மட்டும் இருந்து என்ன பண்ணப் போறே? அதான் உன்னையும் கூட்டிட்டுப் போக வந்தோம், வா.." என்றான் ராம்.

"ஆமாடா, நீ இல்லாம எங்களுக்குப் போர் அடிக்குது. எது செஞ்சாலும் மூணு பேரும் சேர்ந்து தானே செய்வோம்? இதோ! ராமோட காதலியை இதே வீட்ல வச்சி அனுபவிச்சு வாஷிங் மிஷின் உள்ள வச்சி கூவம் ஆத்துல தூக்கிப் போட்டோமே? இப்ப எங்க ரெண்டு பேரையும் அவ கொன்னுட்டா. இனி நீ மட்டும் தான்! வா.. வா! வந்துரு! எங்க கூட வந்துரு.." என்று இருவரும் குரூரமாகச் சிரித்தபடி அவனை நெருங்க, 

"வேணாம்! வேணாம்!" என்று பயத்தில் அலறியபடி இருவரையும்  பீதியுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்த சுரேஷ் கதவின் பிடியை வேகமாகத் திருக, கதவோ பட்டென திறந்தது. எடுத்தான் ஓட்டம்! உயிரை காத்துக் கொள்ள திரும்பியும் பாராமல் ஓடிக் கொண்டு இருந்தவனுக்கு ஓர் நிலைக்கு மேல்  ஓட முடியாமல் போக, மூச்சு வாங்கியபடி  சுற்றும் முற்றும் பார்த்தவாறு, அங்கிருந்த ஒரு கடை வாசலில் போடப்பட்ட பெஞ்சில் அப்படியே கண் மூடி அமர்ந்து விட்டான்.

"இவ்வளவு நேரம் நடந்தது அனைத்தும் பிரமையா?  இல்லை கனவா? அல்லது நிஜமா? என் குடும்பம் எங்கே?" என்று கண் மூடி யோசித்தான். அவன் கண் முன் சில விஷயங்கள் படமாக விரிந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் ராம் சுரேஷிற்கு கால் செய்து  உடனே சென்னை வரச் சொன்னான். தான் காதலிப்பதாகவும், காதலி வீட்டில் எதிர்ப்பு இருப்பதால் தனக்கு உதவுமாறு கேட்டான். நண்பன் உதவி கேட்டு இல்லை என்று மறுக்க முடியாமல், அன்று இரவே சென்னைக்கு கிளம்பி வந்தான்.

அவனை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த வினோத், "டேய் சுரேஷ்! ராமோட ஆளு செம பிகர்டா! வீடு ஏதும் வாடகைக்கு கிடைக்குமான்னு என்கிட்ட கேட்டான். நான் தான் எனக்குத் தெரிஞ்சவங்க வீட்ல தங்க வச்சி இருக்கேன். ஆனா போயும் போயும் அவனுக்கு இப்படி ஒரு லவ்வரான்னு தான் என்னால ஜீரணிக்க முடியலடா.." என்று சுரேஷிடம் பொருமினான்.

அதற்கு சுரேஷ் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்து மட்டும் வைத்தான். ஏனெனில் எப்பொழுதுமே வினோத் அப்படித்தான்! அழகான பெண்களை கண்டால் ஜொள்ளு வடிப்பான். தானாக வரும் பெண்களை அனுபவித்து விடுவான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்தியது இல்லை. 

சற்றுத் தள்ளி ஒரு டாஸ்மாக் கடையைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திய வினோத், வேகமாகச் சென்று சில உயர் ரக மிகவும் போதை ஏற்றும் மதுபானங்களை அள்ளிக் கொண்டு வந்தான்.

அதைப் பார்த்த சுரேஷ், "டேய்! எதுக்குடா இதெல்லாம்?" என்று கேட்க,

"பின்ன என்னடா? அவன் அவனோட ஆளு கூட நைட் புல்லா ஜல்சா பண்ணுவான். என்னை விளக்கு பிடிச்சுட்டு உக்கார சொல்லுறியா? போறோம்.. சரக்கை ஏத்துறோம்.. குப்புற படுத்து குறட்டை விட்டு தூங்குறோம்.." என்று கூறவும், தலையில் அடித்துக் கொண்டான் சுரேஷ்.

அவர்களின் வாகனம் சிறிது தூரம் சென்றிருக்க, அந்த இடமெங்கும் இருளில் சூழ்ந்து இருந்தது. "என்னடா இப்படி இருட்டா இருக்கு..?" என்று சுரேஷ் கேட்க,

"தெரியலடா.. கரண்ட் இல்ல போல.." என்று சொல்லியவாறு காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் அவர்கள் வர வேண்டிய இடத்துக்குச் சரியாக வந்து இருந்தான் வினோத்

இருட்டாக இருந்ததால் அந்த வீட்டின் வெளித்தோற்றத்தை சுரேஷால் சரியாகப் பார்க்க முடியவில்லை. காரில் இருந்து இறங்கி மொபைல் டார்ச் அடித்து படியேறி வந்து இருவரும் வீட்டின் கதவைத் தட்டினர்.

சிறிது நேரத்தில் வந்து திறந்தாள் ராமின் காதலி நிஷா. தேவலோக ரம்பை போல் இருந்த பெண்ணவளைக் கண்ணெடுக்காமல் பார்த்தான் வினோத்.

அந்தப் பெண்ணோ, "வாங்க அண்ணா.." என்று இருவரையும் உள்ளே அழைக்க,

வினோத்தோ, "நான் சொன்னேன்லடா.. பாரு! எப்படி இருக்கா! ஒருநாள் வாழ்ந்தாலும் இப்படி ஒருத்தி கூட வாழணும் மாப்ள.." என்றான் போதையாக! 

"டேய்! அவ நம்ம ராம் வருங்கால பொண்டாட்டி. பார்த்து பேசு!" என்று கூறியவன், "ராம் எங்கம்மா..?" என்று கேட்டான் சுரேஷ்.

நிஷாவோ, "திடீர்னு கரண்ட் போயிருச்சு அண்ணா. அதான் ஒவ்வொரு இடமா மெழுகுவர்த்தி ஏத்தி வச்சுட்டு இருக்காங்க.." என்று அவள் தனது தேன் குரலில் கூறி கொண்டு இருக்கும் போது அங்கு வந்தான் ராம்.

"டேய்! என்னடா லேட்டு? சரி வாங்க.. சாப்பாடு வாங்கி வச்சிருக்கேன். சாப்பிட்டு அதோ அந்த ரூம்ல படுத்துக்கோங்க.. நாளைக்கு காலையில்  சீக்கிரமே ரிஜிஸ்டர் ஆபிஸ் போகணும்." என்றவன், தன் நண்பர்களுக்கு உணவை எடுத்து வைக்க, அவனுக்கு உதவினாள் நிஷா.

வினோத்தின் பார்வை முழுவதும் அவள்  மீதே இருந்தது. அதை உணர்ந்த நிஷாவுக்கு ஏதோ போல் இருக்க, "ராம்! எனக்குக் கொஞ்சம் தலைவலியா இருக்கு, நான் படுக்கிறேன்.." என்றுவிட்டு ஒரு அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் செல்லவும், "டேய் மச்சான்! உனக்கு நாளைக்கு கல்யாணம்.. அதை இப்பவே இன்னைக்கே செலிபிரேட் பண்ணலாம்டா. நாளையில் இருந்து நீ பிசி ஆகிருவே. எங்களைக் கண்டுக்கவே மாட்டே! அப்புறம் எப்படி உன்கிட்ட ட்ரீட் கேக்கிறது? அதான் நானே வாங்கிட்டு வந்துட்டேன்.." என்று வினோத் தான் வாங்கி வந்ததை கடை பரப்ப,

"டேய்! ஏன்டா? அவளுக்கு இதெல்லாம் பிடிக்காதுடா.." என்றான் ராம்.

"உன்னை யாரு குடிக்கச் சொன்னா? நீ போய் உன் ஆளு கூட குஜாலா இரு! இது எங்களுக்கு மட்டும் தான்.." என்று வினோத் கண்ணடிக்க,

"உன்னை.." என்று நண்பனின் முதுகில் அடித்து விட்டுச் சிரித்தபடி நிஷா இருந்த அறைக்குள் ராம் சென்றான்.

இங்கு சுரேஷும், வினோத்தும் குடிக்க ஆரம்பித்தார்கள். சில பல பெக்குகள் உள்ளே போனதும், "மச்சான்! நீ சொன்ன மாதிரி பொண்ணுன்னா இது பொண்ணுடா.. கட்டினா இவளை மாதிரி  ஒரு பொண்ணு பார்த்துக் கல்யாணம் கட்டணும்!" என்று சுரேஷ் போதையில் உளற ஆரம்பிக்க,

"அது என்னடா இவளை மாதிரி? இவளையே கல்யாணம் பண்ணிப்போம்டா.." என்று வினோத் வரம்பு மீறி உளறினான்.

சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து வெளியே வந்தான் ராம். 
அவனைப் பார்த்ததும், "என்னடா புது மாப்பிள்ளை?  தாலி கட்டுறதுக்கு முன்ன அப்பா ஆக  பிராக்டிஸ் பண்ணிட்டியா..?" என்று கண்ணடித்து வினோத் கேட்க,

"சும்மா இருடா.. அவளுக்கு கேட்டுற போகுது.. அப்புறம் நீயும் வேணாம் உன் லவ்வும் வேணாம்னு சொல்லிட்டுப் போய்டுவா.." என்று சொல்லிச் சிரித்தபடி தனக்கும் ஒரு கிளாசில் ஊற்றினான் ராம்.

"அடங்கோ டேய்! கொஞ்ச நேரம் முன்ன இதெல்லாம் அவளுக்குப் பிடிக்காதுனு சொன்னே, இப்ப குடிக்கப் போறே..?" என்று வினோத் நக்கலாகக் கேட்க,

"அது.. அவ தூங்கிட்டாடா.. அதான் ஒரே ஒரு பெக் எடுத்துட்டு கம்முன்னு படுத்துக்கப் போறேன்"  என்ற ராம், கணக்கு வழக்கு இல்லாமல் குடித்து எழும்ப முடியாத அளவுக்கு மட்டையாகிப் போனான்.

கூடவே சுரேஷும் போதை அதிகமாகி அங்கேயே படுத்து விட,
வினோத்தோ இருவரையும் பார்த்தவன், "ஐஸ் முடிஞ்சி போச்சு.. சரி, நாம போய் எடுத்துட்டு வரலாம்.." என்று தட்டுத்தடுமாறி எழுந்து இருட்டில் கிச்சனுக்கு  சென்றவனோ, திரும்பி வரும் பொழுது லேசாகத் திறந்து இருந்த அறையைப் பார்த்தான்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அங்கே கட்டிலில் அழகோவியமாக படுத்திருந்த நிஷாவை பார்த்தான். மது போதையைக் காட்டிலும் பெண் போதை அவனை வக்ர மனிதனாக மாற்ற,  தங்கை முறையில் இருப்பவளை நாசம் பண்ணத் துணிந்தவன், நண்பர்கள் இருவரையும் பார்த்தான். பின்பு வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டு நிஷாவின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றினான்.

அரைமணி நேரம் கழித்து அந்த அறையில் இருந்து வெளியே வந்தவனின் முகம் பேயறைந்தது போல் இருந்தது.

வேகமாக ஹாலுக்கு வந்த வினோத், எச்சில் விழுங்கியபடி ராமை பார்த்தான். பின்பு சுரேஷின் அருகில் சென்று, "டேய் மச்சான்! எழுந்துருடா.." என்று அவனை உலுக்கினான்.

சுரேஷா முழு போதையில், "கொஞ்ச நேரம் தூங்க விடுடா.." என்று குளறிய குரலில் கூறினான்.

அவனோ, "மச்சான்! தப்பு நடந்து போச்சுடா" என்று நடந்ததைக் கூறவும். "என்னடா சொல்றே?" என்று வேகமாக எழுந்து அமர,

அவனிடம் நடந்த அனைத்தையும் வினோத் கூறினான். குப்பென்று போதை அனைத்தும் இறங்க, பதறி எழுந்த சுரேஷ், நிஷா இருந்த அறைக்கு ஓடினான்.

அங்கே கண்கள் நிலைகுத்த, கட்டிலில் உயிரற்ற உடலாய் கிடந்தாள் நிஷா.

அதிர்ந்து பின்னால் நகர்ந்த சுரேஷ், "என்னடா பண்ணி வச்சு இருக்கே..?" என்று அதிர்ச்சி விலகாமல் கேட்க,

"ப்ளீஸ் மச்சான்! என்னைக் காப்பாத்துடா! ஏதோ போதையில அப்படிப் பண்ணிட்டேன். ஆனா அவ செத்து போவான்னு நினைக்கலடா.." என்று பயத்தில் அழுது கொண்டே கூறினான்.

தவறு நண்பன் மேல் என்றாலும் ஏனோ அவன் அழுவது அவனுக்கு என்னவோ போல் இருக்க, தனக்கும் இரண்டு தங்கைகள் இருப்பதை மறந்து, அங்கிருந்த வாஷிங் மிஷினில் நிஷாவின் உடலை வைத்து மூடினான்.

பின்பு வினோத்தை பார்த்தவன், "இங்க பார்! இன்னும் கரண்ட் வரல. எந்த சி.சி டீவி கேமராவிலயும் நம்ம முகம் விழ வாய்ப்பு இல்ல! எப்படியாவது இந்த வாசிங் மிஷினை கூவம் ஆத்துல போட்டுட்டா பிரச்சினை முடிஞ்சிது. இதெல்லாம் ராம் போதை தெளிஞ்சி எழுந்துக்கிறதுக்குள்ள நடக்கணும்.." என்று  சுரேஷ் கூறினான்.

"சரிடா.." என்று தலையை ஆட்டினான் வினோத்.

பின்பு இருவரும் மெதுவாக அந்த வாஷிங் மிஷினை தூக்கிக் கொண்டு காரின் மேலே வைத்து, கயிறு கொண்டு கட்டியவர்கள், காரை கிளப்பிச் சென்றார்கள். நள்ளிரவு மணி இரண்டு என்பதால் வாகனப் போக்குவரத்து கூட அவ்வளவாக இல்லை. கூவம் அருகில் வந்தவர்கள், வாஷிங் மிஷினோடு நிஷாவின் உடலை தூக்கி வீசி விட்டு, அசப்பு தெரியாமல் மீண்டும் வந்து ராமின் அருகில் படுத்துக் கொண்டனர்.

நான்கு மணியளவில் போதை தெளிந்து எழுந்த ராம், "மச்சான்! எழுந்துருங்கடா.. இப்பவே கிளம்பினா தான்  மொத ஆளா கல்யாணத்தை முடிக்க முடியும். அப்புறம் எந்தப் பிரச்சினை வந்தாலும் பார்த்துக்கலாம்" என்று நண்பர்களை எழுப்பி விட்டு  நிஷா இருந்த அறைக்குச் சென்றான்.

இங்குத் தூக்கத்தில் இருந்து எழுவது போல் பாவனை செய்த இருவருக்கும் திக்திக்கென்று இருந்தது.

காதலியைத் தேடிச் சென்ற ராம், அவள் எங்கும் இல்லை என்றதும், பதட்டத்துடன் ஹாலுக்கு வந்தான்.

"ராம்! என்னடா? எதுக்கு இப்படிப் பதட்டமா இருக்கே? நிஷா எங்க..?" என்று ஏதும் அறியாதவன் போல் கேட்டான் வினோத்.

அவனோ, "அவ ரூம்ல இல்லடா. வீடு புல்லா தேடிட்டேன், எங்கேயும் காணல.." என்று கூற,,

சுரேஷா, "இன்னும் விடிய கூட இல்ல.. இந்த இருட்டுல எங்க போயிருப்பா..?" என்று கேட்டவன், "ஒன்னு பண்ணலாம்.. நீ இங்கேயே இரு! நானும் வினோத்தும் பக்கத்துல தேடிப் பார்க்கிறோம். பயப்படாதே ராம்! எங்கேயும் போயிருக்க மாட்டா.." என்றுவிட்டு வினோத்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

காரில் அமர்ந்து இருந்த வினோத் அந்த வீட்டை திரும்பிப் பார்த்து கொண்டே வர, சுரேஷோ சிறிது தூரம் வந்ததும் வாகனத்தை நிறுத்தி விட்டு, ஸ்டியரிங்கில் தலை வைத்துப் படுத்து விட்டான்.

எவ்வளவு நேரம் கடந்ததோ?! சுரேஷின் மொபைலில் அழைப்பு வந்தது. யார் என்று பார்த்தவன், அழைப்பது ராம் என்றதும், ஒரு நிமிடம் இதயம் நின்று துடிக்க வினோத்தை பார்த்தான். அவனும் வியர்த்து வழியும் முகத்தோடு போனை பார்க்க,

அதை அட்டென்ட் செய்து காதில் வைத்த சுரேஷ், "சொல்லு மச்சான்!" என்றான் சற்றுத் திக்கியபடி.

ராமோ, "டேய் மாப்ள! என் நிஷா.. என் நிஷா என்னை விட்டுப் போய்ட்டாடா! அவ தற்கொலை பண்ணிக்கிட்டா. நேத்து நைட்டு அவங்க அப்பாவை நினைச்சா பயமா இருக்குன்னு சொல்லிட்டே இருந்தா.  நான் அவளைச் சமாதானம் பண்ணி தூங்க வச்சேன்டா. ஆனா அவ நாம தூங்கினதுக்கு அப்புறம் வீட்டை விட்டு போய் கூவம் ஆத்துல விழுந்துட்டாடா. இப்ப நியூஸ் சேனல்ல அவளைப் பொணமா காட்டினாங்க. அவ இல்லாத உலகத்தில நானும் இருக்க மாட்டேன்! போறேன்.. என் நிஷா கூடவே போறேன்.. ஆஆ.." என்ற அலறல் சத்தத்தோடு ராமின் மொபைல் அணைந்து போயிற்று.

ஆம்! கூவத்தில் வீசிய வாஷிங் மிஷின் ஆழத்தில் அமிழ்ந்து போக, நிஷாவின் உடல் மிதந்து வெளியே வந்திருந்தது.

சுரேஷா திக்பிரம்மை பிடித்தவன் போல் இருக்க, "என்னடா? அவன் என்ன சொன்னான்? நீ எதுக்கு ஷாக்கா உக்காந்து இருக்கே..?" என்று நண்பனை உலுக்கினான்.

அவனிடம் விஷயத்தைக் கூறி விட்டு ராம் மொபைல் லொக்கேஷன் வைத்து அங்கு காரில் விரைந்தான் சுரேஷ்.

சில நிமிடங்களில் ஓரிடத்தில் கூட்டமாக இருக்க, வேகமாக காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடினார்கள். அங்கே லாரியில் அடி பட்டு உயிர் துடிக்கச் சாலையில் கிடந்தான் ராம்.

"ராம்!" என்று சுரேஷ் நெருங்கும் நேரம் அங்கு போலீஸ் வாகனமும், ஆம்புலன்ஸும் வர, இருவரும் அப்படியே நின்று விட்டனர்.

கூடி இருந்த மக்களை போலீஸ் விரட்ட, எல்லோரும் கலைந்து சென்றார்கள். வினோத்தும், சுரேஷும் ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருந்த நண்பனைப் பார்த்துக் கொண்டே பின்னால் நடக்க, வினோத்தின் காலில் ஏதோ தட்டுப்பட்டது. அது என்னவென்று குனிந்து பார்த்தவன், ராமின் மொபைல் என்றதும், யாரும் அறியாமல் வேகமாக அதை எடுத்து தனது பேண்ட் பேக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

மறுநாள்  ராமின் இறப்பு செய்தி தான் அவர்களின் காதிற்கு வந்தது. ஒரு பெருமூச்சை வெளியிட்ட சுரேஷ் கனத்த மனதுடன் மும்பைக்கு கிளம்பிச் சென்றான்.

வினோத்தோ, தன்னால் இரண்டு உயிர்கள் போய் விட்டது என்றதும், தனது தீய பழக்கத்தைத் தள்ளி வைத்து விட்டான்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிய, அலுவலகத்திற்குச் சென்று விட்டு  வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வினோத், பிரேக் பிடிக்காத லாரியால் தூக்கி எறிய பட்டான்.

எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த சுரேஷிற்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனால் 'இங்கு இருக்க கூடாது! உடனே ஊருக்குச் செல்ல வேண்டும்' என்று முடிவெடுத்தவன், ஓர் எட்டு தான் எடுத்து வைத்திருப்பான். அடுத்த நொடி சரக்கு லாரியால் தூக்கி எறிய பட்டான்.

மண்டை உடைந்து நடு ரோட்டில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவன் முன் தோன்றினாள் நிஷா.

அவளை அவன் அந்நிலையிலும் அச்சத்துடன் பார்க்க, அவனை உக்ர சிரிப்புடன் பார்த்தவளோ, "என்ன பார்க்கிறே? நீங்க எல்லாம் மனுசங்க தானா? உங்களுக்கு மனிதாபமே கிடையாதா..? உன்னை மாதிரி ஒரு பச்சோந்தி பிரெண்ட்ஸ நம்பி என்னைக் கூட்டிட்டுப் போனதுக்காக, என்னைக் காதலிச்சவனைக் கொன்னேன். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம என்னை நாசம் பண்ணினவனை திருப்தியா கொன்னேன். தப்பு பண்ணின் பிரெண்ட்டுக்கு துணை போன உன்னை மட்டும் சும்மா விடுவேனா..?" என்று வானம் அதிர சிரித்தாள் நிஷா.

ஒரு மாதம் கழித்து..

"ஹலோ! சொல்லுங்க யாரு..?" 

"சார், என் பிரெண்ட்ஸ் லவ் பண்ணி ஓடி வந்துட்டாங்க. அவங்களுக்கு வீடு வேணும் சார்…" 

"அப்படியா தம்பி? வீடு வாடகைக்கு ரெடியா இருக்கு.  ஒரு பொருள் நீங்க கொண்டு வர வேண்டாம்! எல்லாம் இருக்கு. ஆனா வாஷிங் மிஷின் மட்டும் இல்ல தம்பி.." என்று கூறி கொண்டு இருக்க,

அவர் பின்னே கண்கள் இருளாக மாற குரூரமாகச் சிரித்தபடி நின்றிருந்தது ஒரு உருவம்!!

முற்றும்
**********

No comments:

Post a Comment