ஸ்வரம் 46

 



ஸ்வரம் 46


தனது அறையின் பால்கனியில் நின்றிருந்தான் விக்ராந்த். அவனது பார்வை தொலைதூரத்தை வெறித்துக் கொண்டு இருந்தாலும், அவன் மனதிலோ, கலங்கிய கண்களுடன் தன்னை அதிர்ந்து பார்த்த தனுஷா தான் வந்து நின்றாள்.


அவளை நினைத்ததும் சட்டென அவன் முகம் இறுகி போக, அவள் மீது அப்படியொரு கோபம் வந்தது. அப்பொழுது அவனது கவனத்தைக் கலைக்கும் பொருட்டு, "விக்கி.." என்று சத்தமாக அழைத்தவாறு அங்கு வந்தாள் மோகனா.


அன்னையின் அழைப்பில் பால்கனியில் இருந்து அவன் அறையின் உள்ளே வர, மகனின் அருகில் வந்த மோகனாவோ, "உனக்கு இப்ப சந்தோசமா? நிம்மதியா இருக்கா? ஏன்டா? ஏன்டா இப்படிப் பண்ணினே?" என்று கோபமும் ஆதங்கமுமாக மகனிடம் சீற ஆரம்பித்தாள்.


விக்ராந்த்தோ, இன்று காலையில் தனு வீட்டில் நடந்ததை வைத்துத்தான் இப்பொழுதும் தன்னிடம் அன்னை கோபம் கொள்கிறார் என்று நினைத்தவன், காரணம் சொல்ல முடியாமல் மீண்டும் அமைதியைத் தத்தெடுத்து இறுகிப் போய் நின்றான்.


அவளோ, "எது நடந்துருமோன்னு பயந்தேனோ, அது நடந்துருச்சேடா! மாப்ள என்ன சொன்னாரோ தெரியல? பெட்டியைத் தூக்கிட்டு, 'இனிமேல் அங்க போக மாட்டேன், மொத்தமா வந்துட்டேன்'னு வந்து நிக்கிறா என் பொண்ணு. எல்லாம் யாரால? உன்னால! உன் தங்கச்சி வாழ்க்கையை நினைச்சுப் பார்த்திருந்தா, இப்படிப் பண்ணி இருப்பியாடா?" என்று மகனைச் சாடியவள், மனம் தாளாமல் மீண்டும்,


"என்னதான் உன் பிரச்சனை? சொல்லித் தொலையேன்டா!" என ஆதங்கமாகக் கேட்க, அன்னையின் பின்கேள்விக்குப் பதில் அளிக்காமல்,


"என்னது? நேகா வீட்டுக்கு வந்துட்டாளா?" என்று அதிர்ந்து கேட்ட விக்ராந்த்,


"அமைதியா இருங்கம்மா.. நான் அவகிட்ட என்னன்னு கேட்கிறேன்" என்றவன், தங்கையைக் காண விரைந்து சென்றான்.


நேகாவின் அறை வாசலுக்கு வந்தவன், "நேகா!" என்று தங்கையின் அறை கதவை தட்ட ஆரம்பிக்க, ஒருமுறை தட்டியதுமே கதவைத் திறந்து இருந்தாள் நேகா. அமைதியாக அண்ணனை ஏறிட்டாள்.


தங்கையைப் பார்த்ததும், "என்ன நடந்தது நேகா? எதுக்கு வீட்டை விட்டு வந்தே? உன் புருஷன் ஏதாவது சொன்னானா?" என்று கோபம் பொங்கக் கேட்டான் விக்ராந்த். அவன் மனதிலோ, 'செய்யுறதையும் செஞ்சிட்டு இப்ப என் தங்கச்சியை வீட்டை விட்டு விரட்டி இருக்கான்' என்று அஜித்தின் மீது அவ்வளவு கோபம் வந்தது. 


அவளோ, "தங்கச்சி புருஷனை இப்படித்தான் மரியாதை இல்லாம பேசுவியா அண்ணா?" என்று நிதானமாகக் கேட்க,


பதிலுக்குத் தங்கையை முறைத்துப் பார்த்தவனோ, "அவனுக்கு மரியாதை ஒன்னு தான் கேடு!" என்று வாய்க்குள் முணுமுணுத்தான். 


அது சரியாக நேகாவின் காதில் வந்தடைய, "ஏன்? அவருக்கு மரியாதை கொடுக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டு அண்ணனிடம் சண்டைக்கு நின்றாள்.


தங்கை கூறியதைக் கேட்ட விக்ராந்த்திற்கோ கோபம் கோபமாக வந்தது. தவறு செய்தது அவள் கணவன்! ஆனால் தங்கையோ, அவள் கணவனுக்காகப் பரிந்து பேசுகிறாளே? என்று கோபத்தில் அவன் தங்கையை முறைக்க,


அண்ணனின் கோபத்தைக் கண்டுகொள்ளாமல், தன் கைகளைக் கட்டிக் கொண்டு அண்ணனையே கூர்ந்து பார்த்தபடி, "என் புருஷன் கதையை விடு! தனுவை பொண்ணு பார்க்க வந்த நீ, எதுக்கு அவளைப் பிடிக்கலனு சொன்னே?" என்று நேரடியாகவே கேட்டு விட்டாள் நேகா. 


அவனோ, அவளது கேள்வியில் நிதானமாக அவளைப் பார்த்தவன், "எனக்கு அவளைப் பிடிக்கல, சோ பிடிக்கலன்னு சொன்னேன்.." என்றான் சாதாரணமாக.


"ஓஹ்! அப்போ அன்னைக்கு நான் கேட்கும் போது, 'உன் பிரெண்டே உனக்கு அண்ணியா வந்தா சந்தோஷம் தானேன்னு' என்கிட்ட கேட்டியே, அதுக்கு என்ன அர்த்தம்?" என்று அவள் கேட்கவும்,


இந்த கேள்விக்கு விக்ராந்த்திடம் இருந்து இப்பொழுது அமைதி மட்டுமே அவளுக்குப் பதிலாகக் கிடைத்தது.


இவ்வளவு நேரம் பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்த நேகா, "சொல்லு அண்ணா! அன்னைக்குப் பிடிச்சது இன்னைக்கு எப்படிப் பிடிக்காம போச்சு? ஏன்னு எனக்குக் காரணம் தெரியணும்!" என்று அழுத்தத்துடன் கேட்க,


இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாமல், "அவதானே உன் வாழ்க்கை நாசமாக காரணமா இருந்தா.. அதான் காரணம்.." கண்களில் அனல் தெறிக்க கூறினான் விக்ராந்த்.


அண்ணனின் பதிலில் உள்ளுக்குள் திடுக்கிட்டாள் நேகா. 'எதை வைத்து இவன் இப்படிச் சொல்கிறான்? ஒருவேளை விஷயம் தெரிந்து இருக்குமோ? தெரிய வாய்ப்பு இல்லையே! அந்த விஷயம் அவளது கணவன் மற்றும் தனுஷா தவிர வேறு யாருக்கும் தெரியாதே? அப்படி இருக்க, அண்ணனுக்கு எப்படித் தெரிந்தது?' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,


"என்னடா சைலண்ட் ஆகிட்டே? சொல்லு! உன் வாழ்க்கை நிம்மதி இல்லாம ஆனதுக்கு யார் காரணம்? அவ தானே?" என்று சிறிதும் கோபம் குறையாமல் விக்ராந்த் கேட்க,


தனது அதிர்ச்சியைத் தனக்குள் புதைத்துக் கொண்டு, "என்ன சொன்னே? என் வாழ்க்கை நிம்மதி இல்லாம இருக்கா? அப்படின்னு உன்கிட்ட யார் சொன்னது? நான் வந்து சொன்னேனா?" என்று அவள் கேட்க,


"சொல்லி இருக்கணும் நேகா! நீ அப்பவே என்ன நடந்ததுன்னு என்கிட்ட சொல்லி இருக்கணும்! அப்படிச் சொல்லி இருந்தா, மூனாவது மனுஷியான அமலாகிட்ட கேட்டுத் தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்து இருக்காது!" என்று அஜித்தையும், தனுவையும் நினைத்து அவன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.


"அமலாவா?!" என்று அதிர்ந்து தன் அண்ணனைப் பார்த்தவளுக்கு சர்வமும் விளங்கியது.


தங்கையின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த விக்ராந்த், இன்று காலையில் நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.


வீட்டில் தன்னவளுக்குப் பரிசு வாங்கச் செல்வதாகக் கூறி விட்டு சந்தோசமாகச் சென்ற விக்ராந்த், அஜித்தின் வீட்டின் அருகே இருந்த ஒரு பிரபல நகைக்கடைக்குத்தான் சென்றான்.


கடைக்குள் சென்று அழகான மோதிரம் ஒன்றை வாங்கி விட்டு அவன் வெளியே வரவும், தனது இரண்டு மாத குழந்தையுடன் அந்தக் கடையின் உள்ளே சென்று கொண்டிருந்தாள் அமலா.


அவன் அவளைக் கவனிக்கவில்லை. ஆனால் அமலா அவனைக் கண்டு கொண்டு, "விக்ரம் அண்ணா.." என்று அழைத்து நிறுத்தினாள்.


தன் பேரை சொல்லி யாரோ அழைக்கவும், திரும்பிப் பார்த்த விக்ராந்த், அமலாவை நெற்றிச் சுருக்கிப் பார்த்தவன், பின்பு அவள் தங்கையின் தோழி என்று நினைவுக்கு வரவும், புன்னகை முகமாக அவள் அருகில் சென்று, "நீ நேகா பிரென்ட் அமலா தானேமா? எப்படிமா இருக்கே?" என்று நலம் விசாரித்தவன், அவள் கையில் இருந்த குழந்தையைப் பார்த்து, "என்ன பேபி? எத்தனை மாசம் ஆகுது? தனியாவா வந்தே?" என்று கனிவுடன் கேட்டான்.


அவளோ, "நல்லா இருக்கேன் அண்ணா. பெண் குழந்தை.. ரெண்டு மாசம் ஆகுது. என் கணவர் காரை பார்க்கிங் பண்ண போயிருக்கார்.." என்றவள், "நேகா எப்படிண்ணா இருக்கா?" என்று கேட்டாள் அமலா.


"நல்லா இருக்காம்மா.. ஆமா, நீ ஏன்டா நேகா கல்யாணத்துக்கு வரல?" என்று கேட்டான்.


அதற்கு அவளோ, "அவ மட்டும் என் கல்யாணத்துக்கு வந்தாளா?" என்று நடந்ததை அறியாமல் அவனிடம் செல்ல சண்டைக்குப் போக,


இதுவரை அவளைப் புன்சிரிப்புடன் பார்த்திருந்த விக்ராந்த்தின் முகம் யோசனையானது. "அமலா கல்யாணதுக்கு நேகா போகலையா?" என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவனுக்கு, அன்றொரு நாள், 


‘தனுவுடன் தானும் தோழியின் திருமணத்திற்குச் செல்கிறேன்' என்று கூறிய தங்கையை தனுஷாவின் வீட்டில் இறக்கி விட்டது அவன் தானே! 'இந்தப் பெண் என்னடாவென்றால், அவளது கல்யாணத்துக்கே அவர்கள் வரவில்லை என்று சொல்கிறாள்' என்று குழம்பியவன், 


"என்னமா சொல்றே? உன் கல்யாணத்துக்கு இரண்டு பேரும் வரலையா?" என்று அவளிடம் அவன் திருப்பிக் கேட்க,


"எங்க? நானும் அவங்க ரெண்டு பேரும் வருவாங்க வருவாங்கன்னு எவ்வளவு ஆசையா எங்க சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு இருந்தேன் தெரியுமா? ஆனா கடைசி நேரத்தில தனு போன் பண்ணி, "என்னால வர முடியாது, கால்ல சுளுக்கு.. ஆனா நேகாவை எங்க அண்ணா கூட்டுட்டு வரார்"னு சொன்னா. ஆனா கடைசி வரை அவளும் வரவே இல்ல தெரியுமா?" என்று தோழிகளின் மேல் உள்ள கோபத்தை விக்ராந்த்திடம் கொட்டிக் கொண்டு இருந்தாள் அமலா.


அவள் கூறியதைக் கேட்டதும் அதிர்ந்தான் விக்ராந்த். 'ஏதோ சரி இல்லை! எங்கோ தவறு நடந்து இருக்கிறது. தோழியின் திருமணத்திற்கு என்று கிளம்பிய தங்கை அங்கு செல்லவே இல்லை. உடன் செல்வதாக இருந்த தனுஷாவும் காலில் சுளுக்கு என்று அவளது வீட்டில் இருந்திருக்கிறாள். அஜித் தன் தங்கையை திருமணத்திற்கு அழைத்துச் செல்லாமல் வேறு எங்கு அழைத்துச் சென்றிருப்பான்?’


இரண்டு நாட்கள் கழித்துத்தானே தனது தங்கை வீட்டுக்கு வந்தாள். அவள் திரும்பி வந்ததில் இருந்து அவளாகவே இல்லையே? எதையோ பறிகொடுத்தது போல் தான் இருந்தாள். 


அவள் அப்படி இருப்பதைக் கண்டு, அவளது திருமணத்தை நினைத்துப் பயந்து இப்படி இருக்கிறாளோ? என்று தான் வீட்டில் எல்லோரும் நினைத்தார்கள். மேலும் ஒரு மாதம் அமைதியாக இருந்தவள், திருமணத்தன்று திடீரென ரிஷியுடனான கல்யாணம் தனக்கு வேண்டாம் என்றதும், அதே நேரம் சரியாக அங்கு வந்த அஜித், தானும் நேகாவும் விரும்புவதாகக் கூறியதும் நினைவுக்கு வர, 'இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்திருக்கும்?' என்று யோசித்து அவனுக்குத் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.


நடந்தது என்னவென்று இப்பொழுதே தங்கையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த விக்ராந்த், அமலாவைப் பார்த்து, "சரிமா, நான் நேகாகிட்ட உன்னைப் பார்த்ததா சொல்றேன்.." என்று அவசரமாகக் கூறியவன், தனது காரை கிளப்பி நேகாவின் வீட்டை நோக்கிச் சென்றான்.


தங்கையின் வீட்டின் அருகே சற்றுத் தள்ளி காரை நிறுத்தி விட்டு நேகாவின் மொபைலுக்கு அழைத்தான். அதுவோ அடித்துக் கொண்டே இருந்ததே தவிர அவள் எடுக்கவே இல்லை.


"ம்பச்!" என்று சலித்தபடி மீண்டும் மீண்டும் முயற்சித்தவன், பின்பு என்ன நினைத்தானோ? காரில் இருந்து இறங்கி அஜித்தின் வீட்டுக்குச் சென்றான்.


கேட்டில் காவலாளி அப்பொழுது இல்லை. கேட்டை தாண்டி வீட்டிற்குள் செல்ல போனவனின் கண்ணில், தோட்டத்தில் சற்றுத் தூரத்தில் நேகாவும், தனுஷாவும் ஒரு மரத்தில் அருகே நிற்பது தெரிய, அவர்களை நோக்கிச் சென்றான்.


அஜித் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டதால் அவன் அலுவலக அறைக்குள் இருக்க, அவனது அன்னை லட்சுமியோ, சமையல் அறையில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். அவனின் வரவு யாருக்கும் தெரியவில்லை. நேகாவும், தனுஷாவும் அவனுக்கு முதுகு காட்டி நின்றதால், பின்னால் வந்து கொண்டிருந்தவனைக் கவனிக்கவில்லை.


அவன் அவர்களை நெருங்கும் முன், "நேகா! ப்ளீஸ்டி! என்கிட்ட பேசு.. எனக்கொரு விசேஷம் நடக்கும் போது, நீ யாரோ போல விலகி இருக்கிறது, எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குடி" என்று தனுஷா நேகாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, விக்ராந்த்தின் நடையோ தானாக நின்றது.


தனது சந்தேகங்களுக்கு எல்லாம் தனுஷா பதில் கொடுத்துக் கொண்டிருப்பது போல் தோன்றவும், சட்டென அவர்களுக்குத் தெரியாமல் அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டு, காதை கூர்மையாக்கினான். 


"நீ எனக்கு அண்ணியா, என் அண்ணனுக்கு மனைவியா, வர ஆசைப்பட்டுத் தான், அன்னைக்குப் பொய் சொல்லி எங்க அண்ணன் கூட உன்னை அனுப்பி வச்சேன். மத்தபடி எந்த ஒரு தவறான எண்ணமும் எனக்கு இல்லடி!" என்று கூற, நேகாவோ அலட்சியமாக நின்றிருந்தாள்.


"என் அண்ணா அஞ்சு வருஷமா உன்னை லவ் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஆனா அதைச் சொல்லத்தான் அவருக்குத் தெரியல. உனக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு நேகா! ஆனா அதை அவர் வெளிய காட்டிக்கலைன்னாலும், என் அண்ணனைப் பத்தி எனக்குத் தெரியாதா? அதுனாலதான் ஒரு முறையாவது அவரோட காதல் உனக்குத் தெரியணும்ன்னு, உன்னை என் அண்ணன் கூடத் தனியா அனுப்பி வச்சேன்…" என்றதும், நேகா தனுவை முறைத்தாளே தவிர அவளிடம் பதில் ஏதும் பேசவில்லை.


"நான் பண்ணது உனக்கு வேணா தப்பா தெரியலாம். ஆனா எனக்கு என் அண்ணன் மனசுதான்டி முக்கியமா பட்டுச்சு. நீ நினைக்கலாம், இவ்வளவு சுயநலக்காரியான்னு? ஆமா, என் அண்ணன் விஷயத்துல எனக்கு சுயநலம் அதிகம்தான். ஏன்னா என்னோட உயிரே என் அண்ணன்தான்! அவர் சந்தோஷம்தான் என் சந்தோஷம்!" என்றதும் நேகா தோழியை வெறித்துப் பார்த்தாள்.


அவளது பார்வையின் பொருள் உணர்ந்து, "என்னடா இவ அண்ணன் அண்ணன்னு ஓவரா பேசுறாளேன்னுதானே நினைக்கிற? அவர் அந்த அளவுக்கு என் மேல பாசம் வச்சிருக்கார். எனக்காக அவர் நிறைய விட்டுக் கொடுத்திருக்கார்.


ஒரு அண்ணன் தன் சொந்த தங்கச்சி மேல பாசம் வைக்கிறது இயற்கைதான்! ஆனா என் மேல என் அண்ணன் பாசம் வச்சது எனக்கு வரம் தெரியுமா? ஏன்னா நான்…" என்று அவள் மேலும் என்ன கூறியிருப்பாளோ, அவளது அண்ணன் புராணத்தைக் கேட்க முடியாமல் முகம் சுளித்த நேகா, "போதும்!" என்பது போல் சைகை செய்தவள்,


"இப்ப எதுக்கு இதெல்லாம் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க? நீ என்ன சொன்னாலும் நீ எனக்குச் செஞ்சது பெரிய துரோகம்! அதை என்னால மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது! நாளை பின்ன உன்னை என் அண்ணன் மனைவியா ஏத்துக்கிட்டாலும், தோழியா எப்பவும் உன்னால என்னை நெருங்க முடியாது!" என்ற நேகா விறுவிறுவென வீட்டிற்குள் சென்று விட, தனுஷாவோ எவ்வளவு கெஞ்சியும், தன் பக்க காரணத்தைக் கூறியும், இளகாமல் கல் போல் இறுகி இருக்கும் நேகாவைச் சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.


தனுஷா கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த விக்ராந்த்தின் காதல் மனம், இப்பொழுது கோபத்தில் கனன்றது. அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல், தான் வந்த சுவடு தெரியாமல், அங்கிருந்து கிளம்பி இருந்தான்.


"இப்ப சொல்லு நேகா.. உன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு அவளும் ஒரு காரணம். இதுக்கு மேலேயும் நான் அவளைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு நீ நினைக்கிறியா?" என்று அழுத்தமாக விக்ராந்த் கேட்க,


அண்ணனை இமைக்காமல் பார்த்த நேகாவோ, "ஆக நீயும் ஒரு சராசரி ஆண்தான்னு நிரூபிச்சுட்டே இல்ல? உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல அண்ணா. நீங்களா காதலிப்பீங்க… உங்க இஷ்டத்துக்கு ஏதேதோ செய்வீங்க.. அப்புறம் வேணாம்ன்னு தூக்கியும் போட்டுடுவீங்க.. இதனால பொண்ணுங்க மனசு எவ்ளோ தூரம் பாதிக்கப்படும்ன்னு அவரும் யோசிக்கல, நீயும் யோசிக்கலண்ணா…" என்றதும் விக்ராந்த் ஏதோ கூற வர, அவளோ,


"புரியுதுண்ணா.. நீ இன்னைக்கு எனக்காக, என் மேல உள்ள பாசத்துல தான், இப்படியெல்லாம் நடந்துகிட்டேன்னு எனக்கு நல்லாவே புரியுது. இப்பவும் தனு மேல உள்ள கோபம் எனக்குக் குறையல, குறையுமான்னும் தெரியல. தினம் தினம் அவளை வார்த்தையால நோகடிச்சிட்டுத்தான் இருக்கேன். 


ஆனாலும் நீ பண்ணினதை நினைச்சு, ஒரு பொண்ணா, என்னால சந்தோஷப்பட முடியலண்ணா. ஏன்னா அவ உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறா. அவ கண்ணுல உனக்கான காதலை நான் பார்த்தேன். அதுனாலதான் என் பிரச்சனை என்னோட போகட்டும்ன்னு அமைதியா இருந்துட்டேன்.


நான் நினைச்சிருந்தா எனக்கு நடந்த எல்லாத்தையும் உன்கிட்ட எப்பவோ சொல்லி இருக்க முடியும். ஆனா நான் சொல்லல.. ஏன் தெரியுமா? என்ன இருந்தாலும் என் வாழ்க்கை அவர் கூடத்தான்னு முடிவு பண்ணித்தான் அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். அவர் தப்புக்கான தண்டனையை நான் மட்டும்தான் கொடுப்பேன். எங்க ரெண்டு பேருக்கு நடுவில் யார் வந்து நாட்டாமை பண்றதை என்னால ஏத்துக்க முடியாது!" என்று அவள் கூற, 


விக்ராந்த்தோ, "என்ன புருஷனுக்கு கொடி பிடிக்கிற மாதிரி இருக்கு. மஞ்ச கயிறு மேஜிக் செய்து உன் மனசை மாத்திடுச்சா?" என்று அவன் கேலியாகக் கேட்டான்.


அதில் ஒரு நொடி அமைதி காத்தவள், பின்பு, "மேஜிக் எல்லாம் இல்லண்ணா.. அவர் பக்கமா நின்னு லாஜிக்கா யோசிச்சி பார்த்தேன். என் புருஷன் என்னைக் கல்யாணம் பண்றதுக்காக கையாண்ட முறை வேணா தப்பா இருக்கலாம். ஆனா என்னைக் காதலிச்சது உண்மை! அதை பல நேரம் நான் உணர்ந்திருக்கேன்.


அன்னைக்கு அவரோட காதலை சொல்ல வந்தப்போ, ஒரு நிமிஷம் நான் காது கொடுத்துக் கேட்டு இருந்தா, இவ்வளவு தூரம் வந்து இருக்காது. அவரும் எல்லோருக்கும் கெட்டவரா தெரிஞ்சி இருக்க மாட்டார்.


அவர் ரொம்ப நல்லவர் அண்ணா! நான் என்ன டார்ச்சர் கொடுத்தாலும், மனம் வலிக்கப் பேசினாலும், அதைத் தாங்கிப்பாரே தவிர, என்னை இதுவரைக்கும் எந்த இடத்திலும், யார்கிட்டயும் அவர் விட்டுக் கொடுத்ததே இல்ல" என்று கூறவும்,


இந்த வயதில் இப்படிப் பக்குவமாய் பேசும் தங்கையை வியந்து அவன் பார்த்துக் கொண்டிருக்க,


"இப்பவும் நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி அவர் என்னை வீட்டை விட்டுத் துரத்தல. நானா தான் அவர்கிட்ட சண்டை போட்டுக் கிளம்பி வந்தேன்" என்றவளுக்குத் திடீரென தலை சுற்ற, அப்படியே மயங்கிச் சரிந்து இருந்தாள் நேகா.


பேசிக் கொண்டு இருந்த தங்கை திடீரென மயங்கி விழவும், "நேகா.." என்றபடி அவள் விழும் முன் தன் கைகளில் தாங்கி இருந்தான் விக்ராந்த். 


"நேகா! என்னாச்சு?" என்று அவளது கன்னத்தில் தட்டியவன், அவள் எழுந்து கொள்ளவில்லை என்றதும் முகத்தில் தண்ணீர் தெளிக்க, அவளோ கண்களைத் திறக்கவே இல்லை. உடனே அவனுக்குப் பதட்டம் உண்டாக, அப்படியே தங்கையைத் தூக்கிக் கொண்டு கீழே வந்தான்.


அங்கே ஹாலில் அமர்ந்திருந்த அனைவரும் நேகாவை விக்ராந்த் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்துப் பயந்து போனவர்கள், "ஐயோ! நேகாக்கு என்னாச்சு? எதுக்குடா தூக்கிட்டு வர்ற?" என்று ஆளாளுக்குப் பதறியபடி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க,


அவனோ, "பேசிட்டுத்தான் இருந்தா.. என்னனு தெரியல? திடீர்ன்னு மயங்கி விழுந்துட்டா. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும்" என்று அவர்களுக்குப் பதில் கூறி விட்டு, "அம்மா! நேகாக்குத் துணையா நீங்க வாங்க.." தாயை அழைத்தவாறு வெளியே சென்ற விக்ராந்த், தனது காரின் பின்இருக்கையில் தங்கையைப் படுக்க வைத்து விட்டு முன்பக்கம் ஓட்டுநர் இருக்கையில் அமர, அதற்குள் மகளின் அருகே அமர்ந்து அவளை மடிதாங்கிக் கொண்டாள் மோகனா.


விக்ராந்தின் வாகனம் சாலையில் வேகமெடுக்க, வீட்டில் இருந்த அனைவருக்கும் நேகாவை நினைத்து ஒருவித பதற்றம் தொற்றி இருந்தது. ராதாவோ, "இப்ப எதுக்கு எல்லாரும் இப்படிப் பதட்டமா இருக்கீங்க? எல்லாம் சந்தோஷமான விஷயமா தான் இருக்கும்.." என்று அனுமானத்துடன் கூற,


பதட்டத்தில் இருந்த அனைவரின் முகமும் சட்டென்று பிரகாசமாக மாறியது. மேகாவோ பாட்டியின் அருகே ஓடிச் சென்றவள்,

 

"கிராண்ட்மா! நிஜமாவா? நம்ம வீட்டுக்கு பேபி வரப் போகுதா?" என்று குதூகலமாகக் கேட்க,


அவரோ, "ம்க்கூம்.. உனக்குத்தான் மொத கல்யாணம் முடிஞ்சிது. நீ தான் சீக்கிரம் நல்ல சேதி சொல்லுவேனு பார்த்தோம். ஆனா நேகா முந்திகிட்டா" என்று அவர் முகத்தை வெட்ட,


மேகாவோ, "அஸ்கு புஸ்கு.. நாங்களாம் நாலு வருசம் நல்லா எஞ்சாய் பண்ணிட்டு அப்புறம் தான் பெத்துப்போம்.." என்று பாட்டியைப் பார்த்து அழகு காட்டினாள். 


அங்கே நின்றிருந்த ஸ்னேகாவின் கைகளோ பாட்டி கூறியதைக் கேட்டு, அவளையும் அறியாமல், தனது மணிவயிறை தடவி கொண்டது. அவள் மனமோ, "எனக்குள்ள குட்டி அத்து வந்தா எப்படி இருக்கும்?" என்று ரகசியமாய் எண்ணிக் கொண்ட அதே நேரம் எதையோ நினைத்து அவளது உடல் இறுகி போனது.


சிலமணி துளிகளில் அவர்களின் குடும்ப டாக்டரின் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள் நேகா. சிறிது நேரத்தில் அவளது மயக்கம் தெளிய, "ஹாய் நேகா! ஆர் யு ஓகே?" என்று அவளிடம் வந்தார் மருத்துவர்.


அவரைப் பார்த்ததும், "நான் ஓகே டாக்டர்.. என்னை யார் இங்க கொண்டு வந்து சேர்த்தது? அண்ணனா? எனக்கு என்னாச்சு? எதுக்குத் திடீர்னு மயக்கம் வந்தது?" என்று நேகா கேட்க,


"உன் அண்ணனும், அம்மாவும் தான் உன்னைக் கூட்டிட்டு வந்தாங்க.." என்றவர், "அதீத மன அழுத்தத்தால் வந்த மயக்கம்தான்! பயப்பட ஒன்னும் இல்ல.." என்றுவிட்டு, 


"நேகா! உன்கிட்ட பெர்சனலா சில கேள்விகள் கேட்கணும், கேட்கலாமா?" என்று பேச்சை ஆரம்பித்தார் மருத்துவர்.


"என்ன டாக்டர் கேளுங்க?" என்று அவள் கூறவும்,


"உனக்குக் கல்யாணம் முடிஞ்சி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுதுல?" என்று அவர் கேட்க,


"ஆமா டாக்டர்.." என்றாள்.


"நீயும் உன் கணவரும் லவ் பண்ணித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?" என்று கேட்டார். கார்த்திக்கின் குடும்ப டாக்டர் என்ற முறையில் அவரும் அவள் திருமணத்திற்கு வந்திருந்தார். அங்கு அவளது திருமணத்தில் நடந்த மாற்றத்தையும் கண்டிருந்தார். அதனால் தான் அப்படிக் கேட்டார்.


அவர் கேள்வியில் சிறிது தடுமாறினாலும், "ஆமா டாக்டர்.. லவ் மேரேஜ் தான்! ஏன் கேக்குறீங்க?" என்று அவள் புரியாமல் கேட்க,


"உனக்கும், உன் கணவருக்கும் நடுவில் ஏதும் பிரச்சினையா நேகா? இல்ல உன் கணவர்.." என்று மேற்கொண்டு என்ன கேட்டு இருப்பாரோ?


"டாக்டர் ப்ளீஸ்! எனக்கும், என் கணவருக்கும் இடையில் ஒரு பிரச்சனையும் இல்ல. நாங்க சந்தோசமா தான் இருக்கோம். நீங்க என்ன கேட்க வரிங்களோ நேரடியா கேளுங்க.." என்று நேகா படபடவென கூறவும்,


அதற்கு அவரோ, "நீ மயங்கி விழுந்ததா சொன்னதும், ஒருவேளை பேபியா இருக்குமோன்னு உன்னை செக் பண்ணிப் பார்த்தேன். ஆனா.." என்று அவர் அடுத்துக் கூறியதைக் கேட்டதும் நேகா, "வாட்?" என்று அதிர்ந்தாள். ஏனோ அவர் கூறியதைக் கேட்டதும், அவள் உடலில் அப்படி ஒரு நடுக்கம் உண்டானது.


"எஸ் நேகா! யு ஆர் வெர்ஜின்.. நீ இன்னும் கன்னிப் பெண்ணா கன்னித் தன்மையோட தான் இருக்கே.. அதான் உங்களுக்குள்ள ஏதும் பிரச்சினையா, ஏன் இன்னும் சேர்ந்து வாழாம இருக்கீங்கன்னு, அஸ் எ பேமிலி டாக்டரா உன்கிட்ட உரிமையா கேட்டேன்.." என்று அவர் சொல்லவும், 


நேகாவுக்கு படபடவென வந்தது. அந்த வார்த்தையைக் கிரகிக்க முடியாமல் மலங்க மலங்க விழித்தபடி அவள் அமர்ந்திருக்க, "நேகா.." என்று அவளது தோளை உலுக்கினார்.


அதில் தன்னுணர்வுக்கு வந்த நேகா, "டாக்டர்! எ..எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? இந்த விஷயம் எக்காரணம் கொண்டும் எங்க அம்மாக்கும், வேற யாருக்கும் தெரிய வே..வேணாம். நான் ஏன் இப்படிச் சொல்றேன்னு நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்" என்று தலையைக் குனிந்து கொண்டு கூறியளுக்கு, கணவனின் மேல் அப்படி ஒரு கோபம் கனன்றது. 


மருத்துவரோ, "நேகா! அது உன்னோட பெர்சனல். உன் வாழ்க்கையில் என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியாது. அஸ் அ டாக்டரா சின்ன அட்வைஸ்.. எந்த ஒரு விஷயமும் பேசாத வரை அப்படியே தான் இருக்கும். எதுனாலும் நீயும், உன் கணவரும் மனசு விட்டுப் பேசுங்க! எல்லாம் சரி ஆகும். அடுத்த தடவை நீ இங்க வரும் போது குட் நியூஸோடதான் வரணும்" என்றவர், மோகனாவைக் காணச் சென்றார்.


மருத்துவரை ஓர்வித எதிர்பார்ப்புடன் நோக்கிய மோகனாவைக் கண்டு புன்னகைத்தவர், "பயப்பட ஒன்னும் இல்ல மோகனா.. நேகா ரொம்பவே மன அழுத்தத்தில இருந்து இருக்கா. அதனால் வந்த மயக்கம்தான்! இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்தில மயக்கம் தெளிஞ்சதும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்.." எனக் கூறவும்,


மருத்துவரின் கைகளைப் பிடித்துக் கொண்ட மோகனா, "டாக்டர்! நிஜமாவே அது சாதாரண மயக்கம் தானா? நான் கூட அவ மாசமா இருப்பாளோன்னு நினைச்சேன். எதுக்கும் ஒருதடவை நல்லா செக் பண்ணிப் பாருங்களேன்.." தன் மகள் தாயாகப் போகிறாளோ என்ற ஆசையில் கேட்டாள். 


தாயின் பேச்சைக் கேட்ட விக்ராந்த்திற்கோ சிரிப்பு தான் வந்தது. 'குழந்தைக்காக ஆசைப்படும் அன்னைக்கு, அவரது மகளின் வாழ்க்கை இன்னும் சிறக்கவே இல்லை என்று தெரிந்தால் என்ன செய்வாரோ?' என்று எண்ணியவன் அமைதியாக நின்றிருக்க,


மருத்துவரோ, "செக் பண்ணாம இருப்பேனா? முதல்ல அதுக்கான டெஸ்ட்தான் எடுத்தேன். எல்லாம் நெகட்டிவ்ன்னு வந்திடுச்சு" என்றதும் மோகனாவின் முகம் வாட,


அதைக் கண்ட மருத்துவர், "எதுக்கு இவ்ளோ அவசரப்படுற மோகனா? சின்ன வயசுதானே? பொறுமையா பிள்ளை பெத்துக்கட்டும்" என்று மோகனாவைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.


விக்ராந்த்தின் வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, நேகாவோ இறுக்கத்துடன் அமர்ந்திருந்தாள். 


மகளின் அருகே இருந்த மோகனாவோ, தன் ஆசை நிராசையான கடுப்பில், "மூனு பொண்ணுங்களைப் பெத்து வளர்த்து ஆளாக்கி கட்டிக் கொடுத்தேன். ஒருத்தியாச்சும் என்னைப் பாட்டியா ஆக்கணும்ன்னு நினைச்சாளுங்களா.? புள்ளை பெத்துக்க அம்மா வீட்டுக்கு வருவாங்கன்னு பார்த்தா, அவ அவ புருஷன் கூடச் சண்டை போட்டுட்டுப் பெட்டியைத் தூக்கிட்டு வராளுங்க.. எல்லாம் நான் வாங்கி வந்த வரம்!" என்று அவள் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டிருக்க, நேகாவோ திரும்பித் தாயைப் பார்த்து முறைத்தாள். 


"என்னை ஏன்டி முறைக்கிறே? உண்மையைச் சொன்னா கோபம் வருதா?" என்று அவரும் பதிலுக்கு முறைக்க,


"அண்ணா! வண்டியை என் வீட்டுப் பக்கம் திருப்பு!" என்றாள் சத்தமாக. அவனும் தங்கையின் மனநிலையைப் புரிந்து கொண்டவனாக, வாகனத்தை அடுத்தச் சில நிமிடங்களில் அஜித்தின் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தான். 


நேகாவோ வேகமாக இறங்கி வீட்டுக்குள் செல்ல, மகளின் பின்னே செல்ல போன அன்னையை, "மோஹிமா! நீங்க எங்க போறீங்க?" என்று விக்ராந்த் கேட்க,


"சம்பந்திகிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு வரேன்டா. காலையில் நீ பண்ணின காரியத்தில அவங்ககிட்ட சரியா மன்னிப்பு கூடக் கேட்கலை. இப்ப என்னன்னா, உன் தங்கச்சி பெட்டியைத் தூக்கிட்டு வந்துட்டா. அதான் பேச போறேன்.." என்றதும், தான் இவ்வளவு நேரம் மறந்திருந்த தனுவின் விஷயம் மீண்டும் நினைவுக்கு வர,


"அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல.." என்று எரிந்து விழுந்தவன், வாகனத்தைக் கிளப்பி இருந்தான்.


"நிஜமா சொல்றேன்டா.. நான் தான் உங்களைப் பெத்தேனான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு" என்று வீடு வரும் வரை மோகனாவின் புலம்பல் தொடர்ந்து கொண்டே இருந்தது.


இங்கு வீட்டுக்குள் நுழைந்த நேகாவோ, நேரே தங்களது அறைக்குச் சென்று படாரென்று கதவைத் திறந்தாள்.


கட்டிலில் அமர்ந்திருந்த கணவனைப் பார்க்க பார்க்க, இத்தனை நாட்களாக மனதளவில் தான் பட்ட கஷ்டம், தவிப்பு எல்லாம் சேர்ந்து கோபத்தைக் கடல் அளவு பெருக்கி இருக்க, அவன் அருகில் சென்றவள், அவனை ஓங்கி அறைந்து இருந்தாள்.


மனைவி தன்னைத் தேடி வந்த சந்தோசத்தில் இருந்தவனுக்கு, அவள் கொடுத்த அடி அதிர்ச்சியைக் கொடுக்க, "நேகா.." என்ற அதிர்ந்து கூறவும், மீண்டும் அவன் கன்னத்தில் அறைந்து விட்டு, கணவனின் சட்டை காலரைப் பிடித்து இருந்தாள்.


மனைவுயின் கோபம் எதற்காக என்று புரியவில்லை என்றாலும், தன்னை அவளுக்கு ஒப்புக் கொடுத்து அப்படியே நின்றிருந்தான் அஜித்குமார்.


***

 

No comments:

Post a Comment