ஸ்வரம் 42

 



ஸ்வரம் 42.


எப்பொழுதும் போல் மாமனாரிடம் கையெழுத்து வாங்க வந்த ஸ்னேகா, அங்கே அமர்ந்திருந்த கணவனைக் கண்டு அதிர்ந்து தான் போனாள். கணவன் அவளைத் தேடி வருவான் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவான் என்று தான் அவள் எதிர்பார்க்கவில்லை. அது அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, அப்படியே சிலையாய் நின்று விட்டாள்.


அவள் எதிரே சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த ரிஷிவர்மனோ, இருக்கையில் நன்றாகச் சாய்ந்து கொண்டு, அணிந்திருந்த குளிர் கண்ணாடியின் வழியாக அவளைத்தான் அழுத்தமாக பார்த்திருந்தான்.


அவன் கண்ணில் குளிர் கண்ணாடி இருந்தாலும், அதையும் தாண்டி அவளைத் தீண்டிய அழுத்தமான பார்வையில், அவளையும் அறியாமல் அவளது உடல் சில்லிட்டுப் போக, இரண்டடி தள்ளி நின்றாள். இப்பொழுது அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.


ரிஷிவர்மனும் அவளிடம் பேசவும் இல்லை. மனைவியை அங்குலம் அங்குலமாகப் பார்வையிடுவதை நிறுத்தவும் இல்லை. 


‘கணவன் தன்னிடம் என்ன கேட்கப் போகிறான்? சொல்லாமல் வந்ததுக்கு கோபம் கொள்வானா?’ என்று அவள் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருக்க, அப்பொழுது கேபின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ரவிவர்மன்.


மாமனாரைப் பார்த்ததும் ஸ்னேகாவின் மனதில் சற்றே நிம்மதி உண்டானது என்றால், உள்ளே வந்த ரவிவர்மனோ, தனது இருக்கையில் அமர்ந்திருந்த மகனைக் கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றான்.


"ரிஷி! நீ இங்க எப்படி?" என்ற ரவிவர்மனுக்கு சந்தோசத்தில் வார்த்தைகள் வரவில்லை.


ஆனால் அவன் மகனோ, "என்ன டாட், ஏன் வந்தேன்னு கேட்கிற மாதிரி இருக்கு? இது என்னோட ஆபிஸ் தானே? உங்களுக்கு அப்புறம் நான் தானே எம்.டி?" என்று தந்தையிடம் கிண்டலாகக் கேட்டான்.


"அப்கோர்ஸ் ரிஷி! இது உன்னோட ஆபிஸ் தான். நீ எப்போ வேணாலும் வரலாம்.." என்று புன்னகையுடன் கூறிய ரவிவர்மனுக்கோ, மகன் தனித்துச் சுயம்புவாக அவனுக்கென்று தனி பாதையை அமைத்துக் கொண்டதில் பெருமையும் மகிழ்ச்சியும் இருந்தாலும், 'தனது அலுவலகத்திற்கும் வர வேண்டும், இங்குள்ள பொறுப்புகளை ஏற்க வேண்டும்' என்பது அவனது எத்தனை வருட கனவு! அது இப்பொழுது நிறைவேறி விட்டதே! 'இந்த விஷயத்தை இப்பொழுதே மனைவியிடம் கூற வேண்டும். மனைவியின் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தைக் காண வேண்டும்' என்ற ஆவல் அவனுக்குப் பிறந்தது.


"ஓகே ரிஷி, யூ கேரி ஆன்.." மகனைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், திரும்பி வெளியே செல்ல போன ரவிவர்மனின் கண்ணில் அங்கு நின்றிருந்த ஸ்னேகா விழுந்தாள். மேலும் அவள் ஒருவித நடுக்கத்துடன் நின்றிருப்பதைக் கவனித்து மீண்டும் மகனைப் பார்த்தான் ரவிவர்மன். மகன் வந்த சந்தோசத்தில், அங்குள்ள சூழ்நிலையை சரிவர உணராமல் இருந்தவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க, 


"ரிஷி.." என்று அழைத்து ஏதோ கூற வந்த தந்தையிடம், அவர் கூற வருவதைப் புரிந்து கொண்டவன் போல், "டாட்! இந்த ஆபிஸ் சம்பந்தமா உங்க பி.ஏ மிசஸ்.ஸ்னேகா ரிஷிவர்மன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.." என்று அங்கு நின்றிருந்த மனைவியை அழுத்தமாக பார்த்தவன், "இன்னையில் இருந்து இவங்க என்னோட பி.ஏ. உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?" என்று தந்தையிடம் அவன் கேட்டான்.


ரவிவர்மனின் மனதிலோ, பல வருடங்களுக்கு முன், "ஏன் டாடி, நான் ஆபிசுக்கு வரக் கூடாதா? இன் பியூசர்ல நான் தான் இந்த ஆபிஸ் எம்.டி. பாப்பா தான் என் பி.ஏ.. இப்ப மாதிரி எப்பவும் என் கூடத்தான் இருப்பா. அப்படித்தானே பாப்பா?" என்று ஸ்னேகாவிடம் கேட்டதும், "ஆமா அத்து, நான் உங்க கூடத்தான் இருப்பேன்.." என்று கூறிய குட்டி ஸ்னேகா அவனை ஒட்டி நின்ற நிகழ்வும், அவனது கண் முன் படமாக விரிய..


"ஷ்யூர் ரிஷி! என் பி.ஏ உன்னோட பி.ஏவா இருக்க எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்ல. பட் என்னோட மருமக கொஞ்சம் பயந்த சுபாவம். டேக் கேர் ஆப் ஹெர்!" எனக் கூறி விட்டுப் புன்னகை முகமாக அங்கிருந்து கிளம்பவும், ரிஷிவர்மனும் இருக்கையில் இருந்து எழுந்தான்.


இவ்வளவு நேரம் தந்தை-மகன் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்னேகா, இப்பொழுது கணவன் எழுந்து நிற்கவும், கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்.


அவனோ குளிர் கண்ணாடியைக் கழட்டி டேபிளில் வைத்து விட்டு, அவளது விரிந்த விழிகளை ஆழ்ந்து பார்த்தவாறு, ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து மனைவியை நோக்கி வர ஆரம்பிக்க, ஸ்னேகாவின் மனமோ படபடவென அடித்துக் கொண்டது. அவள் கால்களோ, கணவனின் ஒவ்வொரு அடிக்கும் தன்னிச்சையாகப் பின்னால் நகர்ந்தது.


எவ்வளவு தான் பின்னால் செல்ல முடியும்? ஒரு கட்டத்தில் சுவர் முதுகில் இடிக்க, அதில் சாய்ந்து நின்று கணவனை ஏறிட்டுப் பார்த்தவள், அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.


ரிஷியோ, தனது மூச்சுக்காற்று அவள் மேனியில் படும் அளவுக்கு நெருங்கி நின்று, தனது இடது கையை மனைவியின் கழுத்தைத் தீண்டியவாறு சென்று சுவரில் பதித்தவன், வலது கையால் அலுவலக அறையின் கதவைப் பூட்டி இருந்தான். 


கணவனின் செயலில் உள்ளுக்குள் திக்கென்று அதிர்ந்த ஸ்னேகாவோ, வேகமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அப்பொழுது அவனது சூடான மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட்டு அவளை மேலும் படபடக்க வைக்க, எச்சில் விழுங்கியபடி பயம் கலந்த அவஸ்தையில் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள் ஸ்னேகா.


மனைவியின் பதட்டம் கலந்த அவஸ்தையைக் கண்டு ரசித்த ஆணவனோ, இதழோரம் புன்னகை அரும்ப அவள் காதோரம் குனிந்து, "ஏன்டி அன்னைக்குச் சொல்லாம கிளம்பி வந்தே?" என்று தனது உதடுகள் கொண்டு அவளது காது மடலை உரசியபடி கேட்டான் ரிஷிவர்மன்.


கணவனின் நெருக்கத்தில் தவித்துப் போன ஸ்னேகா, அவனது கேள்விக்குப் பதில் அளிக்காமல் கண்களை இறுக மூடிக் கொள்ள, அவளை ரசனையுடன் பார்த்த ரிஷிவர்மனோ, மூடிய இமையின் மீது தனது மீசை உராய அழுத்தமான முத்தம் ஒன்றைப் பதித்தவன், "எப்போ கிளம்பலாம்?" என்று கேட்டான்.


கணவன் கொடுத்த முத்தத்தில் நெஞ்சுக்கூடு ஏறி இறங்க, எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் ஸ்னேகா. அவளது முகத்தைப் பார்த்த ரிஷிவர்மன், அவளது நாடி தொட்டு நிமிர்த்தி, "என்னைப் பார்!" என்றான். அவன் குரல் மென்மையாக ஒலித்தாலும் அதில் அத்தனை அழுத்தம் இருந்தது.


அதை உணர்ந்து மெதுவாகத் தனது விழிகளைத் திறந்த ஸ்னேகா, மேலும் அதிர்ந்து தான் போனாள். காரணம் அவன் உதடும், அவளது உதடும் ஒட்டி உரசும் நூலிழை இடைவெளியில் தான் இருந்தது.


நெஞ்சம் படபடக்க, விழிகளை மட்டும் உயர்த்தி கணவனின் வசீகர விழிகளை அவள் பார்க்க, "எப்போ கிளம்பலாம்?" என்று மீண்டும் கேட்டான் ரிஷிவர்மன்.


"எ..எ..எங்க?" என்றவளுக்கு வார்த்தை தந்தி அடித்தது.


அவனோ, தனது பார்வையைப் பெண்ணவளின் இதழில் இருந்து விலக்காமல், "என்ன கேள்வி? நம்ம வீட்டுக்குத்தான்.." என்று கூறவும், அதில் ஆச்சரியமாகப் பார்த்த மனைவியின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த ரிஷிவர்மன்,


"பெங்களூர்ல இருக்கிற நம்ம வீட்டுக்கு.." என்று சற்று அழுத்திக் கூறவும்,


'ஓஹ்..' என்று உள்ளுக்குள் கூறிக் கொண்டவளுக்கு, கணவனின் நெருக்கத்தில் உண்டாகி இருந்த மாயவலை அறுந்து விழ, "நான் எங்கேயும் வரல.." என்றாள், அவனை விட அழுத்தமாக.


இந்தப் பதில் தான் கூறுவாள் என்று தெரிந்ததால் வியப்படையாமல், "ஏன்?" என்று கேட்டான் ரிஷிவர்மன்.


"ஏ..ஏன்னா? என்ன அர்த்தம்? எந்த உரிமையில அங்கே வரச் சொல்றிங்க?" என்று சற்றுத் தைரியமாகவே கேட்டாள் ஸ்னேகா.


மனைவியின் தைரியத்தை மெச்சி கொண்ட ரிஷியோ, "என் பொண்டாட்டிங்கிற உரிமை போதாதா?" என்றபடி அவள் கன்னத்தில் தனது கன்னத்தை உரசினான்.


கணவனின் செயலில் மயங்கும் தனது உடலையும், மனதையும் இழுத்துப் பிடித்த ஸ்னேகாவோ, "அந்த உரிமை இனி உங்களுக்கு இல்லன்னு, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுட்டேனே.. மறந்துட்டிங்களா?" என்று கேட்க,


"ம்ம்ம்.. அப்புறம்..." என்று கேட்டான், இன்னும் அவள் கன்னத்தில் இருந்து தன் கன்னத்தை விலக்காமல்.. 


"என்ன அப்புறம்? அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே!" என்று அவள் கூறவும்,


அதில் சிரித்தவன், "நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லடி! அதுக்குள்ள முடிஞ்சி போச்சுன்னு சொல்ற" என்றவன் மனைவியின் கன்னத்தில் இதழை ஒற்றிக் கொண்டான்.


கணவன் கூற வருவதைப் புரிந்து கொண்ட ஸ்னேகாவோ, "அ..அன்னைக்கு ஹோட்டல்ல நடந்தது வச்சு இப்ப என்கிட்ட இப்படிப் பேசுறீங்களா? அ..அதை மறந்துருங்க, அப்போ நான் சுயநினைவுல இல்ல.." என்று கூறுவதற்குள் அவள் முகம் அநியாயத்துக்குச் சிவந்து விட்டது.


மனைவியின் முகச் சிவப்பை ரசனையுடன் பார்த்த ரிஷிவர்மன், "அன்னைக்கு ஹோட்டல்ல அப்படி என்ன நடந்தது?" என்று குறும்பு கொப்பளிக்கும் குரலில் கேட்க,


"ஹான்.." என்பது போல் அதிர்ந்து கணவனை நோக்கினாள் ஸ்னேகா.


"ஐ மீன்.. நீதான் சுயநினைவுல இல்லையே? அப்புறம் எப்படி உனக்கு அங்கே நடந்தது ஞாபகம் இருக்கும்? அதான் கேட்டேன்.." என்று சிரிப்பை உள்ளடக்கிய குரலில் கேட்க, கணவனின் பேச்சில் சற்றுத் திணறி தான் போனாள் ஸ்னேகா.


"அது.. அது.." என்று அவள் தடுமாற,


அவளை மேலும் தவிக்க விட மனம் இல்லாமல், "நான் சொல்லவா?" என்றவன், "அன்னைக்கு நீ முழு சுயநினைவோட தான் இருந்தே.. நான் உன் புருஷன்னு தெரிஞ்சு தான், உன்னைத் தொட என்னை அனுமதிச்சன்னு எனக்கு நல்லாவே தெரியும்!" என்று கூறவும், மேலும் அதிர்ந்து போனாள் ஸ்னேகா.


அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிய ரிஷிவர்மனோ, "என்னடி, அப்படிப் பார்க்கிறே? நீ மூச்சு முட்ட குடிச்சிருந்தாலும், லிப்ட்ல என்னைப் பார்த்ததுமே, உனக்குப் பாதி போதை குறைஞ்சிடுச்சுன்னு எனக்குத் தெரியும்.." என்று தன் புருவங்களை உயர்த்திச் சொன்னவன்,


"ரொம்ப வீம்பு பிடிக்காம இப்பவே என் கூட கிளம்புடி. எதுனாலும் நாம பெங்களூர் போய் பேசிக்கலாம். ஏன்னா எந்த இடையூறும் இல்லாம உன்கிட்ட நான் மனசு விட்டுப் பேசணும். என் மனசுல உள்ளதை எல்லாம் உன்கிட்ட சொல்லணும். இங்க இருந்தா பேச முடியாது, புரிஞ்சிக்கோடி! எனக்கு நீ வேணும்.." என்றான் ரிஷிவர்ன். அவன் சாதாரணமாகக் கூறினாலும், அவனது குரலில் ஒருவித தவிப்பை உணர்ந்தாள் ஸ்னேகா. அது எதனால் உண்டான தவிப்பு என்று அவளுக்குப் புரிந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,


"ஓஹ்! உங்களுக்கு இப்ப நான் வேணும்.. அதுக்குத்தான் என்னைத் தேடி இவ்ளோ தூரம் வந்தீங்களா? அதுக்கு எதுக்கு பெங்களூர் போகணும்? இங்கேயே சென்னையில ஏதாவது ஒரு நல்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா பார்த்து புக் பண்ணுங்க.." என்றாள் ஸ்னேகா.


அவள் கூறியதைக் கேட்ட ரிஷிக்கோ, என்ன கூற வருகிறாள் என்று புரியவும், கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடம் இருந்து விலகி நின்றவன், தனது கைகளைக் கட்டிக் கொண்டு, "எதுக்கு?" என்று புயலை உள்ளடக்கிய குரலில் கேட்டான்.


கணவனின் குரலிலும், முகத்திலும் தெரிந்த கோபத்தில் அவளுக்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும், 


"அதான் டெல்லில நமக்குள்ள நடந்ததே, அதே மாதிரி மறுபடியும் நடக்கணும். அதுக்கு நான் உங்களுக்கு வேணும். அதுக்காகத் தானே இத்தனை வருசமா இங்க வராதவர், இப்ப வந்து இருக்கீங்க.." என்று அவள் கூறி முடிக்கவில்லை! சிறிதும் பாவம் பார்க்காமல், அவளை அறைவதற்காகக் கையை ஓங்கி இருந்தான் ரிஷிவர்மன்.


அடித்து விடுவானோ என்ற பயத்தில் கண்களை மூடித் தனது கன்னத்தைப் பொத்திக் கொண்ட ஸ்னேகா, "அத்து.." என்று கத்தி விட்டாள்.


அவளது 'அத்து' என்ற வார்த்தையில் தனது கையை கீழே இறக்கிய ரிஷிவர்மன், எதுவும் பேசாமல் அவளை முறைத்து விட்டு, அங்கிருந்து வெளியேறி இருந்தான்


கணவனின் காலடி சத்தத்தில் அவன் சென்று விட்டான் என்று புரிந்து கொண்ட ஸ்னேகா, மெதுவாகக் கண்களைத் திறந்தாள். கேபின் கதவு வேகமாகச் சாத்தியதில் கணவனது கோபம் நன்றாகவே அவளுக்குப் புரிந்தது. ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி திரும்பியவளின் கண்ணில் பட்டது, டேபிளில் இருந்த கணவனின் குளிர் கண்ணாடி. அதை ஆசையுடன் எடுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட ஸ்னேகா, "சாரி அத்து!" என்றாள் கண்கள் கலங்க.


இங்குக் கோபத்தில் அலுவலகத்தை விட்டு வெளியேறிய ரிஷிவர்மன், எதிரே வந்து கொண்டிருந்த தங்கை ரம்யாவைக் கவனிக்காமல் தனது காரில் ஏறி கிளம்பிச் சென்றிருந்தான். ஆனால் தன் அண்ணனைக் கண்டு விட்ட ரம்யாவோ, செல்வது நிஜமாகவே தன் அண்ணன் தானா இல்லை வேற யாரோவா என நம்ப முடியாத திகைப்பில் அப்படியே நின்றிருந்தாள். .


அப்பொழுது அங்கே வந்த வாசு, "ரம்யா! என்னம்மா இங்கேயே நின்னுட்டே? உள்ள போ!" என்று அவளிடம் கூற,


அவளோ "ஹான்.. வாசு அங்கிள்! அதோ அந்த கார்ல போறது ரிஷி அண்ணா தானே?" என்று தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவரிடம் திருப்பிக் கேட்டாள் ரம்யா.


"ஆமாடா ரிஷி தான்.. திடீர்னு ஆபிசுக்கு வந்தது எனக்கே ஆச்சரியமா இருந்தது.." என்று கூறவும்,


"அண்ணா வந்தது அப்பாக்குத் தெரியுமா அங்கிள்?" என்று கேட்டாள் ரம்யா.


"ம்ம்.. தெரியும்.. ரிஷிகிட்ட பேசிட்டு இப்ப கொஞ்ச நேரம் முன்ன தான் வீட்டுக்குக் கிளம்பிப் போனார் பாஸ்.." என்றவர், "ஸ்னேகாவைப் பார்க்கத் தானே வந்தே? அவ பாஸோட கேபின்ல இருப்பா, போய் பாரு.." என்று விட்டு அவரது வேலையைக் கவனிக்கச் சென்று விட, ரம்யாவோ அண்ணனை நினைத்து யோசனையுடன் ஸ்னேகாவைத் தேடிச் சென்றவள், பத்ரியின் கேபினைக் கடக்கும் போது மேற்கொண்டு செல்லாமல் அப்படியே நின்று விட்டாள்.


இப்பொழுது அண்ணனைப் பற்றிய யோசனை பின்னுக்குத் தள்ளப்பட, ஸ்னேகாவைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள், பத்ரியைக் காண அவனது கேபினைத் திறந்து உள்ளே சென்றாள்.


ஸ்னேகா அறைந்து விட்டுச் சென்றதும், தலையைப் பிடித்தபடி இருக்கையில் அமர்ந்து விட்ட தேவ், கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். வருவது ரம்யா என்றதும், தன் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு, "வா ரம்யா, என்ன விஷயம்?" என்று அவளைப் பார்த்துக் கேட்டான் பத்ரி.


அவளோ, அவன் கேட்டதற்குப் பதில் கூறாமல், அவன் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, "எப்படி இருக்கீங்க சீனியர்?" என்று கேட்டாள்.


அவனோ, "இதை கேட்கத்தான் வந்தன்னா, ப்ளீஸ்! தயவு செஞ்சி கிளம்பு! நான் உன்கிட்ட பேசுற மூட்ல இல்ல. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு" என்றான் பத்ரி.


"அப்போ எந்த மூட்ல இருக்கீங்க சீனியர்? உங்க எக்ஸ் லவ்வரை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா?" என்று கிண்டலாக அவள் கேட்க,


"வாட்? எக்ஸ் லவ்வரா? என்ன உளர்ற?" பல்லைக் கடித்தான் பத்ரி.


"எஸ் சீனியர், நீங்க லவ் பண்ணின பொண்ணுக்குக் கல்யாணம் ஆகிருச்சுன்னா, இனிமேல் அந்தப் பொண்ணு உங்களுக்கு எக்ஸ் லவ்வர் தானே?" என்று புரியாதது போல் கூறவும்,


அவளது பேச்சில் சற்றுப் பதட்டமானான் பத்ரி. 'அது எப்படி இவளுக்குத் தெரியும்? ஒருவேளை அது ஸ்னேகான்னும் தெரிஞ்சி இருக்குமோ?' என்று யோசித்தவன், அதே பதட்டத்துடன், "ஆமா, யார் உன்கிட்ட இதெல்லாம் சொன்னா? நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல..." என்றான் எரிச்சலாக.


"எனக்கு எல்லாம் தெரியும் சீனியர்! விஷால் என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டார்.." என்று விஷாலைப் போட்டுக் கொடுத்து இருந்தாள் ரம்யா.


'அந்த நாய் பார்த்த வேலை தானா? டேய் எருமை! இன்னைக்கு நீ செத்தடா!' என்று மனதில் கறுவியவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, 


"ரம்யா! இப்பவும் சொல்றேன்.. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. அவன் சொன்னதை வச்சி நீ எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காதே!" என்று பொறுமையாக எடுத்துச் சொல்ல முயன்றான் பத்ரி. இப்பொழுது அவனது கவலை எல்லாம், 'இந்த அரை லூசு போய் ஸ்னேகாவிடம் எதையும் உளறி வைக்க கூடாதே?' என்பதே ஆகும்.


அவனது மனநிலையை உணராமல், "சீனியர்! எனக்கு உங்க மனசு புரியுது. நாம விரும்புன பொண்ணு நமக்கு கிடைக்கலன்னா கஷ்டமா தான் இருக்கும். இல்லன்னு சொல்ல முடியாது.. இந்த உலகத்தில யாருக்குத்தான் லவ் பெயிலியர் ஆகல? சொல்லுங்க.. ஏன் என்னையே எடுத்துக்கோங்க, எனக்கும் லவ் பெயிலியர் ஆயிடுச்சு.


எனக்கு என்ன குறைச்சல்? அழகு இல்லையா? அந்தஸ்து இல்லையா? இல்ல படிப்பறிவு இல்லாத மக்கா? ஆனா எங்க அத்தான் என்னை லவ் பண்ணலனு சொல்லிட்டாங்க. அதுல எனக்கு வருத்தம் இருந்தது தான். அதுக்காக அவர் தான் வேணும்ன்னு அவர் பின்னாடியேவா சுத்திட்டு இருக்கேன்? அதெல்லாம் தப்பு சீனியர். 


எல்லோருக்கும் அவங்களோட முதல் காதல் ஏதோ ஒரு விதத்தில் நிறைவேறாம போகலாம். அதுக்காக அதையே நினைச்சு வாழ்க்கையை வீணாக்கலாமா? சொல்லுங்க… 


சீனியர்! நம்ம காதல் நிறைவேறலன்னாலும், நாம காதலிச்சவங்க நல்லா இருக்கணும்னு விட்டுக் கொடுத்து விலகிப் போகணும். விட்டுக் கொடுப்பதால் யாரும் கெட்டுப் போவது இல்ல சீனியர். 


அதே மாதிரி, நாம விரும்புனவங்களை விட நம்மை விரும்புறவங்களைக் கட்டிக்கிட்டா, நம்ம வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அப்படி ஒரு பொண்ணு நிச்சயம் உங்களைத் தேடி வருவா சீனியர். அவளைக் கெட்டியா பிடிச்சிக்கோங்க சீனியர்" என்று நீளமாகப் பேசி விட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள் ரம்யா.


அவளையே ஒரு மார்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த பத்ரி, எதுவும் சொல்லாமல், டேபிளில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து அவளிடம் நீட்டினான்.


"தேங்க்ஸ் சீனியர்! ரொம்ப பேசிட்டேனா, அதான் மூச்சு வாங்குது.." என்றுவிட்டு தண்ணீரை ஒரே மூச்சில் குடித்து முடித்த ரம்யா, "இப்ப சொல்லுங்க சீனியர்.. நான் சொன்னது எல்லாம் சரி தானே?" தனது பேச்சினால் அவன் மனம் மாறியிருக்கும் என்ற அதீத எதிர்பார்ப்புடன் அவன் முகத்தைப் பார்த்துக் கேட்க,


அவனோ, "நான் ஏற்கனவே தலைவலியில இருக்கேன். பிளீஸ்! தயவு செய்து நீ கிளம்பு இங்கிருந்து.." என்றான் அமைதியாக..


"அப்படிலாம் கிளம்ப முடியாது சீனியர். உங்களுக்கு உண்மையான காதல்ன்னா என்ன, அந்தக் காதல் என்னென்ன தியாகங்களை பண்ணும்ன்னு புரிய வச்சுட்டுத்தான் நான் போவேன்.." என்று அடம்பிடித்தவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த பத்ரி,


"சரி, நீ பொறுமையா புரிய வை! நான் கிளம்புறேன்" என்றவன் அவளைத் திரும்பியும் பார்க்காமல் வெளியே சென்று விட,


'என்ன ஒரு அவமானம்?!' என்று மனதுக்குள் கொதித்த ரம்யா, "நில்லுங்க சீனியர்.. உங்களுக்குத்தான் புரிய வைக்கணும்.." என்று கத்தியபடி அவனை நோக்கி ஓடினாள்.


*******


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.. இன்று தனுஷாவைப் பெண் பார்க்கப் போவதால் கார்த்திக்கின் வீடு பரபரப்பாக இருந்தது. 


"மேகா! ஸ்னேகா! ரெண்டு பேரும் ரெடியாகிட்டிங்களா? இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று மகள்களை அழைத்தாள் மோகனா.


"மோஹிமா! நான் ரெடி!" என்று வந்த ஸ்னேகாவைப் பார்த்த மேகாவின் கனவன் சஞ்சீவோ, "ஸ்னேகான்னா ஸ்னேகா தான்! உங்க அக்காவும் இருக்காளே? என்னமோ அவளைப் பொண்ணு பார்க்க வர்ற மாதிரி நாலு மணிநேரமா மேக்கப் போட்டுட்டு இருக்கா. இன்னும் முடியல!" என்று மனைவியை மச்சினியிடம் கிண்டல் அடிக்க,


"என்ன இங்க சத்தம்?" என்று பட்டுச்சேலை சரசக்க அங்கு பிரசன்னம் ஆனாள் மேகா.


"ஹி ஹி.. அது ஒன்னும் இல்ல அம்மு.. இந்தச் சேலையில் என் பொண்டாட்டி தேவதை மாதிரி இருக்கான்னு சொல்லிட்டு இருந்தேன். அப்படித்தானே ஸ்னேகா குட்டி?" என்று அவள் கணவன் ஜகா வாங்க,


"ஆமா ஆமா.." என்று வாய் விட்டுச் சிரித்தாள் ஸ்னேகா.


அப்பொழுது அங்கு வந்த கார்த்திக், "விக்ராந்த் எங்கே?" என்று மகனைக் கேட்க,


"அதோ! அண்ணா வந்தாச்சு.." என்று மாடிப்படியைப் பார்த்தாள் ஸ்னேகா.


அடர் நீல நிற முழுக்கை சட்டை அணிந்து, வெளிர் நிற ஜீன்சில் சட்டையின் கையை மடக்கி விட்டபடி கம்பீரமாக கீழே இறங்கி வந்தான் விக்ராந்த்.


"வாவ் ப்ரோ! செம ஹன்சம்மா இருக்கே!" என்று மேகா அண்ணனைப் புகழ, அவனோ, தங்கைக்கு ஒரு வெட்கப் புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து விட்டு,


"மோஹிமா! நீங்க எல்லோரும் கிளம்பி நேகா வீட்டுக்குப் போங்க.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, முடிச்சுட்டு நேரா அங்கே வந்துடுறேன்.." என்று கூறவும்,


"விக்கி! இன்னைக்கு உனக்குத்தான் பொண்ணு பார்க்கப் போறோம்டா. நீயென்னன்னா வேலை இருக்குனு சொல்றே.." என்று மகனைக் கேட்ட மோகனா கணவனை முறைத்தாள்.


மனைவியின் முறைப்பைக் கண்டு, "சத்தியமா நான் எதுவும் அவனுக்கு வேலை கொடுக்கலடி" என்று மனைவியிடம் பம்மியபடி கூறி விட்டு, மகனிடம், 


"எந்த முக்கியமான வேலைன்னாலும் நாளைக்குப் பார்த்துக்கலாம். இப்ப எங்க கூட வா.." என்று உத்தரவிட,


"அப்பா! அது வந்து.. நான்…" மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயங்கியவன், 


"பிளீஸ்! புரிஞ்சிக்கோங்க… நான் சீக்கிரம் வந்துருவேன்.." என்றான் கெஞ்சலுடன்.


அண்ணனின் முகபாவனையைக் கண்ட மேகா, "ஏன் ப்ரோ, முக்கியமான வேலைன்னு சொல்றியே, அண்ணிக்கு கிப்ட் ஏதும் வாங்கப் போறியா?" என்று கண்ணடித்துக் கேட்க,


அவள் தலையில் வலிக்காமல் கொட்டிய விக்ராந்த்தோ, "இப்படியா போட்டுக் கொடுப்ப?" என்று தங்கையை முறைத்தான்.


"ஓஹ்! அப்போ அதானா?" என்று அவள் ராகம் போட்டு இழுக்கவும்,


தங்கையின் சாதுர்யத்தைக் கண்டு, "அப்ப நீ சும்மாதான் கேட்டியா? நான்தான் உண்மையை உளறிட்டேனா?" என்று அசடு வழிந்தபடி அவன் சொல்ல,


"இதுக்குப் பேர்தான் போட்டு வாங்குறது.." என்று சொல்லி விட்டு, அண்ணன் அடிக்குப் பயந்து கணவனின் பின்னே சென்று ஒளிந்து கொண்டாள் மேகா.


அவர்களின் பேச்சைக் கேட்ட மோகனாவோ, "அப்படியா விக்கி? மருமகளுக்கு ஏதும் வாங்கப் போறியா?" என்று திகைப்புடன் கேட்கவும்,


"ஆமாம்மா" என்றவன், "நான் சீக்கிரம் வந்துடுறேன்.." என்றுவிட்டு அதற்கு மேல் அங்கு நில்லாமல், சிவந்த முகத்தைப் பெற்றவர்களுக்குக் காட்டாமல் சென்று விட்டான்


"நல்ல பிள்ளை! நேத்தே வாங்கி வச்சி இருக்கலாம்" என்று சொல்லிக் கொண்ட மோகனா,


"என்னங்க.. ஓவியாக்கு போன் பண்ணிக் கிளம்பச் சொல்லுங்க.. நல்ல நேரம் முடியறதுக்குள்ள சம்பந்தி வீட்டுக்குப் போகணும்.." என்று கூறவும், "சரி" என்ற கார்த்திக் தங்கைக்கு அழைத்துக் கூறவும், அதன்பிறகு அனைவரும் தனுவைப் பெண் பார்க்கக் கிளம்பினார்கள்.


அரைமணி நேரத்தில் அஜித்தின் வீட்டு வாசலில் இவர்களின் வாகனம் வந்து நிற்கவும், ரவியின் வாகனம் வரவும் சரியாக இருந்தது.


காரின் சத்தம் கேட்டு நேகா மற்றும் அஜித் இருவரும் அவர்களை வாசலுக்கே வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல, நேகாவோ மேகாவைக் கட்டிக் கொண்டாள்.


"எப்படிடி இருக்கே?" என்று மேகா நலம் விசாரிக்க, "நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்கே?" என்று தன் பங்கிருக்கு விசாரித்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்த நேகா, "ஆமா, ப்ரோ எங்கே?" என்று கேட்டாள். 


"அது வந்து.." என்று அவள் சொல்ல வருவதற்குள் அழுத்தமான காலடியோசை வாசலில் கேட்க, விக்ராந்த் தான் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அவன் அருகில் சென்ற அஜித் அவனையும் வரவேற்று அமர வைத்தான்.


சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தவர்கள், "நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணைக் கூட்டுட்டு வா நேகா!" என்று பேத்தியிடம் கூறினார் ராதா.


"சரி பாட்டி.." என்று தனுஷாவின் அறைக்குச் சென்ற நேகா, அழகு பதுமையாக ஜொலித்துக் கொண்டிருந்த தனுஷாவை வெறுமையாக ஒரு பார்வை பார்த்தவள், அவளை அழைத்து வந்தாள். 


கொள்ளை அழகுடன் வந்து நின்ற தனுஷாவை எல்லோருக்கும் பிடித்து விட, ரம்யாவோ, "அத்தான் இவங்களை லவ் பண்ணினதுல தப்பே இல்ல.. வாவ்! எவ்வளவு அழகு!" என்று மனதில் சொல்லிக் கொண்டாள். ஏற்கனவே சில தடவை தனுஷாவைப் பார்த்து இருந்தாலும், அவ்வளவாக அவளைக் கண்டுகொள்ள மாட்டாள் ரம்யா.


"அப்புறம் என்ன.. எங்களுக்குப் பொண்ணைப் பிடிச்சி இருக்கு, மேற்கொண்டு பேசலாம் தானே?" என்று கூறிய ராதா, தன் மருமகளையும் மகனையும் பார்க்க, அவர்கள் இருவரும் சரி என்று தலையாட்டினர்.


அப்பொழுது லட்சுமி அவர்களிடம், "சம்பந்தம் பேசுறதுக்கு முன்னாடி உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும். என் பொண்ணு தனு..” என்று அவர் ஏதோ கூற வரும் முன், 


இதுவரை அமைதியாக அமர்ந்திருந்த விக்ராந்த், சட்டென்று தன் முழு உயரத்திற்கு எழுந்து நின்று, "அதுக்கு முன்னாடி நான் ஒரு விஷயம் சொல்லணும்.." என்றதும் அனைவரும் கேள்வியாக அவனைத் திரும்பிப் பார்க்க,


அவனோ அவர்களின் பார்வையைக் கண்டுகொள்ளாமல், "எனக்குப் பொண்ணைப் பிடிக்கல, இதோட முடிச்சிக்கலாம்.." என்றான் அழுத்தமாக.


அவன் கூறியதைக் கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், தனுஷாவிற்கோ பேரதிர்ச்சியாக இருந்தது. வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். 


முதலில் சுதாரித்த மோகனாவோ, "விக்கி! என்ன விளையாட்டு இது?" என்று கடுமையாக மகனைக் கண்டிக்கவும்,


அவனோ, தனது பார்வையைத் தனுஷாவின் மீதிருந்து விலக்காமல், "என் வாழ்க்கை இது! இதுல போய் நான் விளையாடுவேனா மோஹிமா? நிஜமா தான் சொல்றேன். எனக்கு இந்தப் பொண்ணை பிடிக்கல.." என்று கூறியவன், யாரையும் திரும்பியும் பாராமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.


****


ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு தினுசா இருக்கானுங்க நான் என்ன பண்ணட்டும் பேபிஸ்🏃🏃🏃

No comments:

Post a Comment