ஸ்வரம் 43

 



ஸ்வரம் 43


கார்த்திக் மற்றும் ரவிவர்மனின் வாகனம் அடுத்தடுத்து கார்த்திக்கின் வீட்டு வாசலில் வந்து நிற்க, அவர்களைத் தொடர்ந்து வந்த விக்ராந்த்தும், தனது வாகனத்தை வாசலில் நிறுத்தினான்.


மற்றவர்கள் இறங்கி அமைதியாக வீட்டுக்குள் செல்லவும், விக்ராந்த்தோ, யாரையும் பார்க்காமல் மாடிப்படி ஏற ஆரம்பித்தான்.


அப்பொழுது, "டேய் நில்லுடா!" என்று மோகனா மகனைத் தடுத்து நிறுத்தினாள்.


அன்னையின் குரலில் நின்று திரும்பி அவரைப் பார்த்த விக்ராந்த், "என்ன மோஹிமா?" என்று எதுவும் நடவாதது போல் சாதாரணமாகக் கேட்டான். 


ஏற்கனவே மகன் மீது கோபத்தில் இருந்த மோகனா, இப்பொழுது அவன் என்னவென்று அசட்டையாகக் கேட்கவும், "உன் மனசுல என்னதான்டா நினைச்சிட்டு இருக்கே? இப்படி எங்களை அவமானப் படுத்தணும்ன்னு எத்தனை நாளா காத்துக்கிட்டு இருந்தே?" என்று கேட்ட தாய்க்குப் பதில் கூறாமல் மௌனமாய் நின்றிருந்தான் விக்ராந்த்.


மகனின் அமைதி அவருக்கு மேலும் கடுப்பைக் கிளப்ப, "பாருங்க! செய்யறதையும் செஞ்சிட்டு உங்க புள்ள கேக்குறதுக்குப் பதில் சொல்லாம எப்படிக் கல்லு மாதிரி நிக்கிறான்?" என்று கணவனிடம் அவள் மகனைச் சுட்டிக் காட்டிக் கூறவும், கார்த்திக்கோ மகனைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். 


ஓவியாவோ, "மோனா! கோபப்படாதே, நம்ம விக்ரம் எப்பவும் எதுக்காகவும் யார் மனசையும் புண்படுத்த மாட்டான். அப்படிப்பட்டவன் இன்னைக்கு இப்படி நடந்துகிட்டான்னா, அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். பொறுமையா என்ன ஏதுன்னு கேளு.." என்று தோழியை அமைதிப்படுத்த முயன்றாள்.


"ஆமாமா! சார் யார் மனசையும் புண்படுத்தவே மாட்டார்.. அதுக்குத்தான் இன்னைக்கு மொத்தமா தலை குனிய வச்சிட்டானே! இதுக்கு மேல அவன்கிட்ட என்னத்தை பொறுமையா கேட்கச் சொல்லுறே?" என்று பொருமியவள்,


"இவன்தான் ஓவி, அந்த தனு பொண்ணை விரும்புறதா சொன்னான். சரி, அவன் விருப்பம் தான் நம்ம விருப்பம்.. அவன் சந்தோஷம் தான் முக்கியம்னு இவன் பேச்சைக் கேட்டு, நேகா வீட்டுக்குப் போய் பேசி முடிச்சு எல்லா ஏற்பாடும் பண்ணினேன். ஆனா கடைசி நிமிசத்தில இப்படிக் கழுத்தை அறுப்பான்னு நினைக்கவே இல்லை. அந்தப் பொண்ணு பாவம்! எவ்வளவு சந்தோசமா வந்து நின்னா? ஒரு நொடியில எல்லாத்தையும் தலைகீழா மாத்திட்டானே? இப்படி ஒரு பொண்ணை எதிர்பார்க்க வச்சி ஏமாத்துறது பாவம்தானே? அவளைப் பிடிக்கலன்னா இங்க இருந்து கிளம்பும் போதாவது சொல்லி இருக்கலாம்ல?" என்று அவள் ஆதங்கத்தில் பேசிக் கொண்டே போனாள்.


விக்ராந்த் அன்னை கூறும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளிக்காமல், விறுவிறுவென்று படியேறி தனது அறைக்குச் சென்று இருந்தான்.


ஓவியாவோ, "புரியுது மோனா.. நீ டென்ஷன் ஆகாத, அமைதியா இரு! அடுத்து என்னன்னு யோசிக்கலாம்…" என்று அவள் கூற, தொப்பென்று சோபாவில் அமர்ந்த மோகனா, "எப்படி அமைதியா இருக்கச் சொல்ற ஓவி?


இவன் பண்ண கூத்தால பாதிக்கப்பட்டது தனுன்னா, இனி பாதிக்கப்பட போறது நம்ம நேகா.. நம்ம வீட்டு பொண்ணு அந்த வீட்ல வாழ்ந்துட்டு இருக்கா ஓவி. இதனால அவளுக்கு ஏதாவது பிரச்சினை வரும்னு கொஞ்சமாச்சும் இவன் நினைச்சு பார்த்தானா? எனக்கு என் பொண்ணு வாழ்க்கையை நினைச்சா தான் கவலையா இருக்கு. இதை வச்சு அவங்க நேகாவை ஏதாவது சொல்லிட்டா?" என்று மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடுமோ என்று மோகனா இங்கு புலம்பிக் கொண்டிருந்தாள்.


அங்கே அஜித்தின் வீட்டிலோ, விக்ராந்த் தனுஷாவைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டுக் கிளம்பவும், யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்பு நேகாவின் பிறந்த வீட்டினர் தர்மசங்கடமான உணர்வில், லட்சுமியிடம் மன்னிப்பை வேண்டி விட்டுக் கிளம்பி இருந்தனர். அஜித்தோ, தன் தங்கையையும், அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரையும் பார்த்தவனுக்கு விக்ராந்த் மீது கொலை வெறியே உண்டானது. தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனும் வெளியே கிளம்பி இருந்தான்.


தனுஷாவோ அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவள் அறைக்கு அழுதபடி ஓடி இருக்க, லட்சுமியோ மருமகளை ஒரு பார்வை பார்த்து விட்டு, எதுவும் பேசாமல் கனத்த மனதுடன் பூஜை அறையை நோக்கிச் சென்று இருந்தார்.


இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை நிம்மதியாக  வெளியிட்ட நேகா, கிச்சனுக்குள் நுழைந்தாள். அங்கே கமகமவென்று வந்த கேசரியின் வாசனையை நுகர்ந்து விட்டு, சுடச்சுட நெய் சொட்ட சொட்ட இருந்த கேசரியை ஒரு கிண்ணத்தில் அள்ளி எடுத்தவள், ஸ்பூனால் அதை ரசித்து ருசித்துச் சாப்பிட்டபடி தனுஷாவின் அறைக்குச் சென்றாள்.


அங்கே கட்டிலில் கால்களை மடக்கி, அதில் முகம் புதைத்து தனுஷா அழுது கொண்டிருக்க, அவளைப் பார்த்த நேகா, "த்சு! த்சு! த்சு!" என்று உச்சுக் கொட்டியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.


அவளது கேலி சத்தத்தில், கண்களில் கண்ணீர் வழிய தனுஷா அவளை நிமிர்ந்து பார்க்க, நேகாவோ, "என்ன தனு பேபி, இப்படி ஆயிடுச்சு? ச்சு! ச்சு! எங்க அண்ணா கொடுத்தது உனக்கு மட்டும் இல்ல ஷாக், எனக்கும்தான்!" என்றவள், ஒரு ஸ்பூன் கேசரியைத் தனது வாயில் போட்டுக் கொண்டவள், "ஒரு சின்ன திருத்தம்.. உனக்கு அதிர்ச்சியில வந்த ஷாக்ன்னா எனக்குச் சந்தோஷத்துல வந்த இனிய அதிர்ச்சி! எங்க அண்ணன் உன்னை வேண்டாம்ன்னு சொன்னதும், எனக்கு அப்படியே குளுகுளுன்னு இருந்துச்சு தெரியுமா?" என்று கூறவும், தனுஷாவோ தோழியை அடிபட்ட பார்வை பார்த்தாள்.


அதைப் புறம் தள்ளிய நேகா, "என்ன பார்க்கிறே? எனக்கெல்லாம் உன்னை என் அண்ணன் மனைவியா கற்பனை பண்ணி கூடப் பார்க்கச் சுத்தமா பிடிக்கல. நீ எனக்குப் பண்ணினதை என் அண்ணன் உனக்குப் பண்ணியிருக்கான். ஆக்சுவலி என் அண்ணன்கிட்ட சொல்லி இந்தக் கல்யாண பேச்சை நிறுத்த நினைச்சேன். ஆனா அந்தக் கடவுளே என் அண்ணன் வாயாலேயே உன்னைப் பிடிக்கலனு சொல்ல வச்சிட்டார் பார்த்தியா? என் சந்தோஷத்துக்கு அளவே இல்ல! அதான் ஸ்வீட் சாப்பிட்டு செலிபிரேட் பண்ணிட்டு இருக்கேன். உனக்கு வேணுமா?" என்று தன் கையில் இருந்த கேசரி கிண்ணத்தை தனுஷாவின் முன் நீட்டிக் கேட்டாள் நேகா.


அவளோ கண்கள் கலங்க, "ஏன் நேகா இப்படிலாம் பேசுற? நான் உன் பிரெண்டுடி! நீ இப்படிப் பேசுறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் உங்க அண்ணனை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்டி.." என்று சொல்லி விட்டு முகத்தை மூடிக் கொண்டு அழுகையில் கரைந்தாள். 


சட்டென்று எழுந்து வேகமாக கட்டிலின் அருகே சென்ற நேகா, தனுஷாவின் நாடியை அழுத்தமாக பிடித்து நிமிர்த்தி தன் முகம் பார்க்கச் செய்தவள், "என்னது பிரெண்டா? நீயா? எனக்கா? இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமா இல்ல? பிரெண்டுன்னு கூடப் பார்க்காம உன் அண்ணனுக்கு என்னைக் கூட்டிக் கொடுத்தியே, அப்போ எங்க போச்சுடி உன் பிரெண்ட்ஷிப்?" என்று கோபத்தில் கத்தியவள், 


"அப்புறம் என்ன சொன்னே? எங்க அண்ணன் மேலே லவ்வா? நீயெல்லாம் எங்க வீட்டுக்கு மருமகளா வர எந்த தகுதியும் இல்லடி.." என்று ஆக்ரோஷமாக கூறி முடிக்கவில்லை!


"நேகா!" என்று அந்த அறையே அதிர கத்திய லட்சுமி, வேகமாக உள்ளே வந்தவர், "யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்றே? நல்ல குடும்பத்துப் பொண்ணு பேசிற பேச்சா இது?" என்று அவளிடம் அவர் சீற,


தனுஷாவோ நேகா சொன்ன வார்த்தை கேட்டு அதிர்ந்து, தன் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டாள்.


"நான் நல்ல குடும்பத்து பொண்ணா இருக்கப் போய் தான், இவளும் இவ அண்ணனும் எனக்குப் பண்ணின கொடுமையை வெளியே சொல்லாம, எனக்குள்ள போட்டுப் புழுங்கிட்டு இருக்கேன். தினம் தினம் நரக வேதனையை அனுபவிச்சுட்டு இருக்கேன். அது உங்களுக்குத் தெரியுமா?" என்று ஆதங்கத்துடன் கேட்டாள் நேகா.


அவரோ, "வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோனு பேசக் கூடாது நேகா! வார்த்தையை விட்டா அள்ள முடியாது. எதுனாலும் பார்த்துப் பேசு. ஆமா, அப்படி என் புள்ளைங்க உனக்கு என்னடி தீங்கு பண்ணிடாங்க?" என்று கோபமாகக் கேட்டார் லட்சுமி. அவருக்கு நேகா தன் மகளைப் பார்த்துக் கூறிய அந்த வார்த்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.


"என்ன பண்ணினாங்களா? சொல்லவா? சொன்னா தாங்குற சக்தி இருக்கா உங்களுக்கு?" என்று ஆக்ரோஷமாகக் கேட்ட நேகா, தான் தன் தோழி அமலாவின் திருமணத்திற்குச் செல்வதற்காகக் கிளம்பியதில் இருந்து அஜித் அவளைத் திருமணம் செய்தது வரை கூறி முடித்தவள், கண்களில் கண்ணீர் வழிய, 


"இப்ப சொல்லுங்க.. உங்க புள்ளைங்க என் வாழ்க்கையில விளையாடினது சரியா? அவங்க எனக்குச் செஞ்சதெல்லாம் நியாயமா?" என்று கேட்டவளுக்கு அன்றைய நாள் நினைவுக்கு வந்ததோ? அதன் தாக்கம் தாங்க முடியாமல், முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.


லட்சுமியோ மருமகள் கூறியதைக் கேட்டுத் தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நிற்க,


அவரது அமைதியை வேறு விதமாக எடுத்துக் கொண்ட நேகா, "நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஏன்னா இவங்க ரெண்டு பேரும் உங்க பிள்ளைங்க. ஆனா எந்தப் பெண்ணும் இந்த விஷயத்தில பொய் சொல்ல மாட்டா. உங்க புள்ள எந்தச் சூழ்நிலையில் என்னைக் கல்யாணம் பண்ணினார்னு யோசிச்சி பாருங்க, அப்போ புரியும்.." என்று இத்தனை நாட்களாக மனதளவில் நொந்து கொண்டிருந்தவள், தனது ஆதங்கத்தை அவரிடம் கொட்டி விட்டு,


"நான் இப்படிக் கிடையாது. என் சுபாவமே வேற! என்னைச் சுத்தி இருக்கிறவங்களைச் சந்தோசப்படுத்தி பார்க்க மட்டுமே எனக்குத் தெரியும். ஆனா உங்க புள்ளைங்க ரெண்டு பேரும் என் சந்தோசம், நிம்மதி எல்லாத்தையும் மொத்தமா பறிச்சுட்டாங்க.." என்று வலி நிறைந்த குரலில் கூறியவள்,


"அப்போ கூட, இது தான் வாழ்க்கைன்னு ஏத்துக்கிட்டு, நடந்தது எல்லாம் மறந்துட்டு, உங்க புள்ள கூட வாழ ஆரம்பிக்கலாம்ன்னு ஒவ்வொரு தடவையும் நினைப்பேன். ஆனா என்னால முடியலையே? அவரைப் பார்க்க பார்க்க அவர் எனக்குச் செய்தது மட்டும் தான் நினைவுக்கு வருது.." என்று கோபத்துடன் கூறினாள்.


அவரோ, இன்னமும் அதே அதிர்ச்சியுடன் தான் மருமகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


"அதை நினைக்கும் போதெல்லாம், எப்படா இந்த நரகத்துல இருந்து விடுதலை கிடைக்கும்ன்னு இருக்கு. முடிஞ்சா அந்த விடுதலையை உங்க மகன்கிட்ட இருந்து நீங்க எனக்கு வாங்கிக் கொடுங்க.." என்று கையெடுத்துக் கும்பிட்ட நேகா, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.


தனுஷாவோ நேகா பேசியதைக் கேட்டு உறைந்து தான் போனாள். அவள் கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட, சிலையாய் நின்றிருந்த அன்னையைப் பார்த்தாள். அவளுக்கு மனதில் பயம் எழ, "அ..அம்மா..!" என்று ஈனஸ்வரத்தில் தாயை அழைக்க,


அதில் தன்னுணர்வுக்கு வந்த லட்சுமியோ, மகளின் அருகே வந்தவர், "நேகா சொல்றது உண்மையா?" என்று மட்டும் கேட்டார். 


"இப்படியெல்லாம் நடக்கும்ன்னு எனக்குத் தெரியாதும்மா. அண்ணா நேகாகிட்ட காதலைச் சொல்லணும்னு தான் நான் ஆசைப்பட்டேன். ஆனா.." என்று மேற்கொண்டு பேச முடியாமல் தாயைக் கட்டிக் கொண்டு கதறி விட்டாள் தனுஷா.


மகளின் மனது அவளது அன்னைக்குப் புரிந்தது. இதில் முழுத் தவறும் தன் மகன் மீதுதான் என்று உணர்ந்து கொண்ட லட்சுமியோ, ஒரு முடிவுக்கு வந்தவராக, "தனு! கண்ணைத் துடைச்சுக்கோ! நாம இங்க இருந்து உடனடியா கிளம்பணும்.." என்றார் இறுகிய குரலில்.


சட்டென்று அன்னையிடம் இருந்து விலகிய தனுஷா, "எ..எங்கம்மா போறோம்?" என்று புரியாமல் தாயிடம் கேட்க,


அவரோ, "நம்ம வீட்டுக்கு.." என்றார் அழுத்தமாக.


அதில் அதிர்ந்தவளோ, "அம்மா! அ..அண்ணா.." என்று தவிப்புடன் கேட்க,


"நமக்கு அப்படி யாரும் இல்ல.. வா, போகலாம்.." என்று மகளின் கண்ணீரைத் துடைத்து விட்ட லட்சுமி, அவளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.


அவர்கள் இருவரும் வீட்டை விட்டுச் சென்று விட்டதை அறியாத நேகாவோ, அவளது அறைக்குள் கட்டிலில் படுத்து அழுது கொண்டிருக்க, வீட்டில் வேலை செய்யும் பெண்மணிகள் இருவரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்வையாளராக நின்றிருந்தனர். அதில் ஒருவர்,


"சாரதா! என்னடி இது? அம்மாவும், தனு பாப்பாவும் வீட்டை விட்டு வெளியே போய்ட்டாங்க.." என்று கவலையுடன் கேட்க,


"ஆமாக்கா, எனக்கு என்னமோ சரியா படல.. சின்னம்மா தான் அவங்ககிட்ட ஏதோ சத்தம் போட்டுட்டு இருந்தாங்க. அப்புறம்தான் இவங்க ரெண்டு பேரும் வெளிய போயிட்டாங்க. இப்ப என்ன பண்றது? ஐயாவுக்கு போன் பண்ணிச் சொல்லுவோமா?" என்று சாரதா கேட்க,


"சொல்லிடலாம்.." என்றவள், ஹாலில் இருந்த தொலைபேசியில் இருந்து அஜித்துக்கு அழைத்தாள். ஆனால் அவனோ தனது கைப்பேசியை அணைத்து வைத்திருக்க, இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்து விட்டு, 


"சாரதா! ஐயா போன் ஆப் பண்ணி வச்சி இருக்கார்டி.." என்று அவள் கவலையுடன் கூறினாள்.


சாரதாவோ, "ஐயா மதியம் வருவார்ல, அப்போ சொல்லிக்கலாம்.." என்று விட்டு இருவரும் சமையல் அறைக்குள் மறைந்தார்கள்.


வீட்டில் இருந்து கோபமாக வெளியேறிய அஜித்தோ, கடற்கரையோரம் காரை நிறுத்தி விட்டு, மொபைலை அணைத்து வைத்தவன், இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண் மூடி இருந்தான். அவன் மனம் முழுவதும் தனுஷா மட்டுமே நிறைந்து இருந்தாள். எதற்காகவும் அழாத தங்கையின் கண்ணில் இருந்து கண்ணீரைப் பார்த்ததும், ஒரு அண்ணனாக அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதே நேரம், விக்ராந்த் எதற்காக அப்படிச் செய்தான் என்றும் அவனுக்குப புரியவில்லை. இப்பொழுதே போய் விக்ராந்த்தின் சட்டையைப் பிடித்துக் கேட்டால் என்ன என்று நினைத்தானே தவிர, தான் செய்த தவறு தான், தனது தங்கையைப் பாதித்து இருக்கிறது என்று அவன் சிந்திக்கவே இல்லை.


நேரம் கடந்து கொண்டே இருக்கவும், வீட்டுக்குச் செல்ல மனம் இல்லாமல், அலுவலகத்தை நோக்கித் தனது காரை கிளப்பினான் அஜித்குமார்.


அங்கே அவனை வேலை இழுத்துக் கொள்ள, மாலை தான் சற்று ஓய்வாக அமர்ந்தான். அப்பொழுது அவனது மொபைலை எடுத்துப் பார்க்க, அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது. "ம்பச்!" என்று சலித்தபடி ஆன் செய்தது தான் தாமதம்! வீட்டில் இருந்து பல அழைப்புகள் வந்ததைத் திரையில் காட்ட, யோசனையானான் அஜித்குமார்.


'எதுக்கு இவ்வளவு போன் கால் வந்து இருக்கு? ஒருவேளை அம்மாக்கு உடம்பு சரியில்லையா? இல்ல தனு ஏதும் விபரீதமா?' அதற்கு மேல் யோசிக்கப் பிடிக்காமல் உடனே வீட்டின் தொலைபேசிக்கு அழைத்தான்.


அந்தப் பக்கம் அதற்காகவே காத்திருந்தது போல் வேகமாக போனை எடுத்தாள் சாரதா.


"ஹலோ அம்மா.." என்று அஜித் சற்றுப் பதட்டத்துடன் அழைக்க,


"ஐயா! நான் சாரதா பேசுறேன். அம்மாவும் பாப்பாவும்.." என்று ஆரம்பித்து நடந்த எல்லாவற்றையும் கூறியவள், "எங்க போனாங்கன்னு தெரியலைங்கய்யா.. இந்நேரம் வரைக்கும் ரெண்டு பேரும் வீட்டுக்கு திரும்பியும் வரலை.." என்று அவள் கூறி முடிக்கவில்லை.. மொபைலை அணைத்து விட்டுத் தனது காரை புயல் வேகத்தில் கோபத்துடன் கிளப்பி வீடு வந்து சேர்ந்தான் அஜித்குமார்.


வீட்டுக்குள் நுழைந்தவனோ, "நேகா!" என்று அந்த வீடே அதிர கத்தினான்.


அழுது அழுது அப்படியே தூங்கி இருந்த அவனது மனையாளோ, அவனது காட்டுக் கத்தலில் சாவகாசமாக எழுந்து முகத்தைக் கழுவி விட்டு, தங்களது அறையில் இருந்து வெளியே வந்தாள்.


மனைவியைப் பார்வையாலேயே எரித்து பஸ்பம் ஆக்கி விடும் கடும் கோபத்தில் அஜித் நின்றிருக்க,


கணவனையே பார்த்தபடி இறங்கி வந்த நேகாவோ, சமையல் அறைக்குச் சென்று, சூடாக காபியும், வெங்காய பஜ்ஜியும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்


அங்கே கணவன் என்று ஒருவன் நிற்கிறான், அதுவும் கோபத்துடன் இருக்கிறான் என்று தெரிந்தாலும், 'எனக்கென்ன?' என்பது போல் சோபாவில் அமர்ந்து டீவியை ஒளிர விட்டவள், காபியையும் சுடச்சுட பஜ்ஜியையும் உண்ண ஆரம்பித்தாள்.


அவளது செயலில் பல்லைக் கடித்தவன், வேகமாக அவள் அருகில் சென்று, "எங்க அம்மா எங்கே நேகா?" என்று கேட்டான்.


அவளோ, 'அம்மா எங்கேன்னு என்கிட்ட கேட்குறான். போய் அவங்க ரூம்ல பார்க்க வேண்டியது தானே?' என்று தனக்குள் நினைத்தவள், கணவனை ஏற இறங்கப் பார்த்தாளே தவிர, அவனது கேள்விக்குப் பதில் அளிக்காமல் காபியை அருந்த போக, அடுத்த நொடி அந்தக் காபி கப்பை வேகமாகத் தட்டி விட்டவன், "ஏய்! நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லுடி! அம்மாவும், தனுவும் எங்கே?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.


அப்பொழுதும் அசராமல் அவள் பஜ்ஜியில் கை வைக்கப் போகவும், சட்டென்று அவளது கையைப் பிடித்து, அவளை எழுந்து நிற்கச் செய்தான் அஜித்குமார்.


"ம்பச்! இந்த வீட்ல நிம்மதியா ஒரு பஜ்ஜி கூடச் சாப்பிட முடியுதா?" என்று பொய்யாக வருத்தப்பட்டவள், "இப்ப உங்களுக்கு என்ன தான் வேணும்?" என்றபடி கணவனின் கையில் இருந்து தனது கையை உதற முயன்றாள்.


அவனோ, "உன்னால தான்டி அவங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டுப் போயிருக்காங்க. அவங்களை என்னடி சொன்ன?" என்று அவன் சிங்கமாய் கர்ஜிக்க,


'என்ன? ரெண்டு பேரும் வீட்ல இல்லையா?' என்று தனக்குள் அவள் அதிர்ந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,


"என்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்? வீட்டை விட்டுப் போறவங்களுக்கு, வீட்ல இருக்கிற மருமககிட்ட சொல்லிட்டுப் போகணும்ங்கிற ஒரு மேனர்ஸ் கூட இல்ல. என்ன மனுசங்களோ?" என்று எகத்தாளமாகக் கூற,


"ஏய்! என் பொறுமையை சோதிக்காதே நேகா! நீதான் ஏதோ சொல்லி இருக்கே.. அதான் வீட்டை விட்டுப் போய்ட்டாங்க. அம்மாவையும், தனுவையும் என்னடி சொன்னே?" என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்க,


"அவசியம் தெரிஞ்சிக்கணுமோ? ம்ம்ம்.." என்று நக்கலாகக் கேட்ட நேகா, கணவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி, "உண்மையைச் சொன்னேன் மிஸ்டர்.அஜித்குமார். எப்பவுமே உண்மை சுடும் தானே? அதான் உங்க தங்கச்சியும், அம்மாவும் வலி தாங்க முடியாம ஓடிட்டாங்க போல.." என்று தோளைக் குலுக்கினாள் நேகா.


அவளது பதிலில், "நேகா!" என்று உறுமியவன், "என்னடி பெரிய உண்மை?" என்றபடி அவன் அவளை அழுத்தமாக பார்க்க,


"அதுவா? பிரெண்டுன்னு கூடப் பார்க்காம தன் அண்ணணுக்கே கூட்டி..." என்று அவள் கூறி முடிக்கவில்லை! அவன் அடித்த அடியில் தூர போய் விழுந்தாள் நேகா. அவளது கன்னம் தீயாய் பற்றி எரிந்தது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவள் கணவனை உக்கிரமாக முறைக்க,


அவனோ இன்னமும் கோபம் குறையாமல், "நீயெல்லாம் ஒரு மனுஷியாடி? பொம்பளையா இருந்துட்டு இன்னொரு பெண்ணை இப்படிப் பேச உனக்கு வாய் கூசல?" என்று கேட்கவும்,


சட்டென்று எழுந்து நின்ற நேகா, "இப்ப எதுக்கு என்னை அடிச்சே?" என்று பெண் சிங்கமாய் சிலிர்த்து நின்றவள், "என்ன கேட்ட? நான் மனுஷியான்னா? ஆமா! நான் மனுசியே இல்லதான்! உன் தங்கச்சியை நம்பி உன் கூட கார்ல வந்தேன் பாரு.. நான் மனுசியே இல்லதான்! என்னை நாசம் பண்ணின உன்னையே கல்யாணம் பண்ணிருக்கேன் பாரு.. நான் மனுசியே இல்ல தான்! உன் தங்கச்சியை ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு இப்படிக் கோபம் வருதே, எனக்கு நீ பண்ணின மாதிரி உன் தங்கச்சிக்கும் நடந்தா, இப்படித்தான் பேசுவியா?" என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் பேசிக் கொண்டே போக, மனைவியை முறைத்துப் பார்த்தான் அஜித்குமார். 


கணவனின் பார்வையில், "என்ன முறைக்கிறே? அன்னைக்கு நாம என்ன சொல்லி மிரட்டினாலும் அமைதியா அடிபணிஞ்சி நின்னாளே?' இன்னைக்கு இப்படி எதிர்த்துப் பேசுறாளேன்னு பார்க்கிறியா? அப்ப எனக்கு அப்புறம் என் தங்கை ஸ்னேகா வாழ்க்கை என் கண் முன்னாடி நின்னுச்சு. என்னால அவ வாழ்க்கை கேள்விக்குறி ஆகிருமோன்னு பயந்து, வேற வழி இல்லாம உனக்குக் கழுத்தை நீட்டினேன். இப்ப அந்தக் கவலை எனக்கு இல்ல. புரியுதா மிஸ்டர்.அஜித்குமார்?" என்று ஆங்காரமாகக் கூறியவளை வெறித்துப் பார்த்தான்.


'அவன் காதலித்த நேகா இவள் இல்லை. அவளுக்கு மற்றவர்களைத் தன் குறும்பால் சிரிக்க வைக்க மட்டுமே தெரியும். இப்படி யார் மனதையும் நோகடிக்கத் தெரியாது. ஏன் இப்படி மாறி போனாள்?' என்று அவன் வேதனையுடன் நினைத்துக் கொள்ள,


 'அவள் இப்படி ஆனதற்குக் காரணமே நீதானே?' என்று அவனது மனசாட்சி குத்திக் கிழித்தது. கண்களை இறுக மூடித் திறந்தவன், "சோ, என் மேல உள்ள கோபத்தை என் தங்கை மேல காட்டிட்டே, ரைட்?" என்று கேட்டவனின் குரலில் ஆழ்கடல் அமைதி இருந்தது.


அவளோ, கணவனுக்குப் பதில் கூறாமல் தனது பார்வையை எங்கோ பதித்தபடி வீம்பாக நிற்க,


"தப்பு நேகா! ரொம்பத் தப்பு பண்ணிட்ட! என் மேல கோபம் இருந்தா என்கிட்ட மட்டும்தான் காட்டியிருக்கணும். அதை விட்டுட்டு என் தங்கச்சிகிட்ட காட்டி அவளை என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட. சத்தியமா சொல்றேன்டி, இதுக்காகப் பின்னாடி ரொம்பவே வருத்தப்படுவே…" என்றவன், 


"இப்படி மனசு முழுக்க வெறுப்போட நீ என் கூட குடும்பம் நடத்தணும்ன்னு அவசியம் இல்ல. நீ உங்க அப்பா-அம்மாக்கு பொண்ணா, உன் அண்ணனுக்குத் தங்கையாய் தாராளமா உங்க வீட்டுக்குத் திரும்பிப் போகலாம். உன்னைத் தடுக்க இங்க இனி யாரும் இல்லை..." என்று கூறியவன், அதற்கு மேல் அங்கு நிற்காமல், அவளது முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் வெளியே சென்று விட்டான்.


கணவனின் பேச்சில், கோபத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்ற நேகா, "பண்றது எல்லாம் இவன் பண்ணிட்டு, என்னைக் குத்தம் சொல்றான். இனி ஒரு நிமிஷம் கூட இந்த நேகா இங்க இருக்க மாட்டா.." என்று பல்லைக் கடித்தபடி கூறியவள், தனது அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் பெட்டியுடன் கீழே இறங்கி வந்தவள், அந்த வீட்டை விட்டு வெளியேறி, அங்கு வந்த ஆட்டோவில் ஏறி தனது வீட்டை நோக்கிச் சென்றிருந்தாள்.


அஜித்தோ கலங்கிய மனதுடன் காரை செலுத்திக் கொண்டிருந்தவன், சிறிது நேரத்தில் ஒரு சிறிய வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு, வேகமாக இறங்கி உள்ளே சென்றான்.


லட்சுமி ஹாலில் அமர்ந்து இருக்க, தனுஷாவோ அங்கிருந்த ஒரு அறையில் விட்டத்தைப் பார்த்தவாறு கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.


தாயின் அருகே சென்ற அஜித், அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து, "அம்மா! இங்க எதுக்கு வந்தீங்க? அவ ஏதோ சொன்னா, உடனே வீட்டை விட்டு வந்துருவீங்களா? என்கிட்ட ஒருவார்த்தை சொல்ல தோணலயா உங்களுக்கு? வாங்க, நம்ம வீட்டுக்குப் போகலாம்.." என்று கூறியவன்,


"தனு எங்கம்மா?" என்று கேட்டு, "தனு!" என்று தங்கையை அழைக்க, மகனையே பார்த்தபடி மெதுவாக எழுந்து நின்ற லட்சுமி, "அஜித்து! நேகா சொன்னது உண்மையா?" என மகளிடம் கேட்ட அதே கேள்வியை மகனிடமும் கேட்டார்.


அவனோ, "நேகா என்ன சொன்னா?" என்று அவரிடமே திருப்பிக் கேட்டான்.


"நீ அவளை மிரட்டிக் கல்யாணம் பண்ணினதாகவும், அதுக்கு உடந்தையா உன் தங்கை தனு இருந்ததாகவும் சொன்னா. சொல்லு! அது உண்மையா?" என்று அழுத்தமாக கேட்க,


அன்னையின் கேள்வியில் அதிர்ந்தாலும், இனி மறைத்துப் பயனில்லை என்று உணர்ந்தவன், "ஆம்.." என்று கூறவும், மகனை ஓங்கி அறைந்து இருந்தார் லட்சுமி.


அன்னை இப்படித் தன்னை அடிப்பார் என்று எதிர்பாராத அஜித் அதிர்ந்து நிற்க, அண்ணனின் பேச்சு சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்த தனுஷாவோ, "அம்மா.." என்று அலறி விட்டாள். அன்னையே ஆனாலும், அவர் தன் அண்ணனை அடித்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.


மகளை உக்கிரமாக முறைத்த லட்சுமி, "இந்த அடி உனக்கும் சேர்த்துத்தான்! சொல்ல போனா உன்னைத்தான் மொதல்ல அடிச்சு இருக்கணும். ஆனா பொம்பளை புள்ளையா போய்ட்டியே? அதான் உனக்கும் சேர்த்து இவனுக்குக் கொடுத்தேன்" என்று சிறிதும் கோபம் குறையாமல் கூற, தனுஷாவும் அன்னையை அதிர்ந்து பார்த்தாள்.


***


No comments:

Post a Comment