ஸ்வரம் 44

 




ஸ்வரம் 44

தன்னை அடித்த அன்னையை அஜித் அதிர்ந்து பார்க்க, தனுஷாவோ அழுது கொண்டிருந்தாள்.

லட்சுமியோ, "ஏன்டா உனக்கு இப்படிப் புத்தி போச்சு? பொண்ணுங்களை மதிக்கச் சொல்லித்தானே உன்னை வளர்த்தேன்? ஆனா நீ என்ன காரியம் பண்ணி இருக்கே? இப்படிப் பண்ணுவேன்னு உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலடா.." என்று அவர் கோபமாக கூற,

"அம்மா! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. நான் நேகாவை லவ் பண்றேன்மா.." என்று தன்னிலை விளக்கமாகக் கூற முயன்றான் அஜித்குமார். 

"என்னது லவ் பண்றியா? லவ் பண்றவன் செய்யும் காரியமா இது? உன் லவ்வை என்னைக்காவது நேகாகிட்ட சொல்லி இருக்கியா? அவ நம்ம ஆபீஸ்ல தானே வேலை பார்த்துட்டு இருந்தா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல நீ உன் மனசை அவ கிட்ட வெளிக்காட்டினியா? இல்ல புரிய வைக்க முயற்சி தான் பண்ணினியா?" என்று அழுத்தமாக கேட்டார் லட்சுமி.

அன்னை கேட்டதற்கு அவனிடம் பதில் இல்லை. அமைதியாக நின்றிருக்க,

"எந்த முயற்சியும் பண்ணாம, சொல்ல வேண்டிய நேரத்துல எல்லாம் அமைதியா இருந்துட்டு, வேற ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணைக் கடத்திட்டுப் போய் கஷ்டப்படுத்தியிருக்க… இதுக்கு பேர்தான் லவ்வா? நீ செஞ்ச காரியத்தை வெளிய சொல்லிடாதே! தெரிஞ்சா எல்லாரும் கைக் கொட்டிச் சிரிப்பாங்க…" என்று ஏளனமாகக் கூற, அஜீத்தோ தன் தவறை உணர்ந்து தலை குனிந்து நின்றான்.

அண்ணனின் இந்த நிலையைக் காண முடியாத தனுஷாவோ, அஜித்தின் அருகில் வந்து நின்று, அவனது கரத்தைப் பற்றிக் கொண்டவள், "அம்மா! ப்ளீஸ்! அண்ணா பாவம் திட்டாதீங்க…" என்று தாயிடம் மன்றாடினாள்.

அவரோ, "உன் தங்கச்சியைப் பார்த்தியா அஜித்து? நீ திட்டு வாங்குறதை கூட அவளால தாங்கிக்க முடியல. இப்படி உன் மேல வச்ச பாசத்துக்கு இவளுக்குக் கிடைச்ச பேர் என்ன தெரியுமா?" என்று வலியுடன் கூறியவர், நேகா தன் மகளைப் பார்த்துக் கூறிய வார்த்தையை இன்னமும் ஜீரணிக்க முடியாமல், அப்படியே சோபாவில் தளர்ந்து அமர்ந்து விட்டார்.

அதில் பதறிய அவரின் பிள்ளைகள் இருவரும், "அம்மா!" என்று அவரிடம் ஓடிச் சென்று தாங்கிக் கொண்டனர்.

லட்சுமியோ மகனின் பிடியில் இருந்து விலகி அமர்ந்து கொண்டார். அன்னையின் செயலிலும், அவர் தன்னைப் பார்த்த வெறுப்பான பார்வையிலும் மேலும் குன்றிப் போனவன், அன்னையின் கைகளைப் பற்றிக் கொண்டு, "அம்மா என்னை நம்புங்க… நான் நேகாகிட்ட என் லவ்வை சொல்லத்தான் நினைச்சேன். ஆனா நான் ஒன்னு நினைச்சு செய்ய அது வேற விதமா முடிஞ்சிடுச்சு. என்னோட எண்ணம் தப்பில்லம்மா, ஆனா நான் கையாண்ட முறைதான் தப்பு! என்னை மன்னிச்சிடுங்கம்மா!" என்று இறுகிய குரலில் அவன் கூற, 

லட்சுமியோ, "ஏன்டா அப்படிப் பண்ணினே? தப்பெல்லாம் நீ பண்ணிட்டு, தண்டனை என் பொண்ணுக்கு வாங்கிக் கொடுத்துட்டியே கண்ணா? எத்தனையோ நாள் என் புள்ளைய நினைச்சு பெருமைப்பட்டு இருக்கேன். ஆனா இப்ப.." என்றவர்,

"நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்காங்றதை நீ நினைச்சு பார்த்து இருந்தா, ஊரான் வீட்டு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்க உனக்கு மனசு வந்து இருக்குமா? உன் தங்கச்சிகிட்ட ஒருத்தன் இப்படி நடந்து இருந்தா, அதை உன்னால் ஏத்துக்க முடியுமா? ஓஹ்! இவ தான் உன் கூடப் பிறந்த தங்கச்சி இல்லையே? அதான் நீ தப்பு பண்ணும் போது இவ நினைப்பு உனக்கு வரல, அப்படித்தானே அஜித்து?" என்று அவர் கேட்டு முடிக்கவில்லை..

"அம்மா.." என்று அஜித் வீடே அதிர கத்தினான் என்றால், தனுஷாவோ, தாயின் மடியில் முகம் புதைத்து அழுகையில் கரைய ஆரம்பித்து விட்டாள்.

அஜித்தோ, அன்னையின் வார்த்தையில் துடித்துப் போனான். தனுஷா அவன் கூடப் பிறக்காத தங்கை என்றாலும், அவள் மீது உயிரையே வைத்து இருக்கிறானே! அவனா அப்படி நினைப்பான்?

ஆம்! தனுஷா அஜித்தின் உடன் பிறந்த தங்கை இல்லை. சில வருடங்களுக்கு முன்பு, 'பதினோரு வயதான அஜித்துக்கு ஜாதகத்தில் கண்டம் இருப்பதாகவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். அதும் குலதெய்வ கோவிலில் வைத்துத்தான் செய்ய வேண்டும்' என்றும் ஜோசியர் கூறி இருந்தார். அதன்படி லட்சுமியும் தனது மகனை அழைத்துக் கொண்டு குலதெய்வ கோவிலுக்குச் சென்று, பரிகாரம் அனைத்தையும் முடித்து விட்டுச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவு நேரம் என்பதால் ஓட்டுநரிடம் மெதுவாகக் காரை ஓட்டும்படி லட்சுமி கூறி விட்டு, பின்இருக்கையில் மகனுடன் அமர்ந்து இருந்தார். 

அப்பொழுது அவரது வாகனத்தின் பின்னே வந்த இன்னொரு வாகனம் அவர்களை முந்திக் கொண்டு வேகமாகச் சென்றது. அதைக் கவனித்த லட்சுமி, "இவ்வளவு வேகமா எதுக்குப் போறாங்க? அந்த வண்டியில குழந்தை கூட இருக்கு. கவனம் வேணாமா?" என்று புலம்பிக் கொண்டிருக்கும் நேரம், திடீரென ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இருந்தார் ஓட்டுநர்.

"என்னாச்சு மணி? எதுக்கு நிறுத்திட்டே?" என்று லட்சுமி கேட்க,

"அம்மா, அங்க பாருங்க.. நம்மளை ஓவர் டேக் பண்ணிப் போன வண்டி ஆக்சிடென்ட் ஆகிருக்கு.." என்று விட்டு அவர் இறங்கி வேகமாக விபத்து நடந்த வாகனத்தை நோக்கி ஓட, லட்சுமியோ, "அஜித்! நீ வண்டியிலேயே இரு" என்று மகனிடம் கூறியவர் தானும் இறங்கிச் சென்றார்.

அங்கே அந்த வாகனம் அப்பளம் போல் நொறுங்கி இருக்க, உள்ளே ரத்த வெள்ளத்தில் ஆண், பெண் என்று இரு ஜீவன்கள் இறந்து கிடந்தார்கள்.

அதைப் பார்த்து நெஞ்சம் பதைபதைக்க, "மணி! போலீசுக்கு போன் பண்ணு! அப்படியே ஆம்புலன்ஸுக்கும் போன் பண்ணிடு!" என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும் போது, சற்றுத் தள்ளி ஒரு முனகல் சத்தம் கேட்டது. அப்பொழுது தான் சற்று முன் அந்த காரில் பார்த்த குழந்தையின் ஞாபகம் வர, உடனே, 

"மணி! இங்கே எங்கேயாவது குழந்தை இருக்கான்னு சுத்தி பாரு!" என்றவர், அந்த இருட்டுக்குள் தானும் அந்த முனகல் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றார்

இரவு நேரம், அதுவும் காட்டு பகுதி என்பதால், அவ்வளவாக வாகன போக்குவரத்து அங்கு இல்லை. தங்களது காரில் அமர்ந்து இருந்த அஜித்தோ, அங்கே எதையோ தேடிக் கொண்டிருந்த அன்னையைத்தான் பார்த்திருந்தான்.

புதருக்குள் சென்ற லட்சுமியின் கண்ணில் பட்டாள், அவர் தேடிச் சென்ற குழந்தை! அந்தக் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும். தலையில் அடிபட்டு பாதி மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை உடனே வாரி அணைத்துக் கொண்டவர், "மணி! சீக்கிரம் வண்டியை எடு! குழந்தைக்கு தலையில் அடிபட்டு இருக்கு. உடனே ஹாஸ்பிட்டல் கொண்டு போகணும்.." என்று அவசரப் படுத்தினார்.

மணியோ, "அம்மா, இவங்க.." என்று தயங்கினார்.

"போலீசுக்கும், ஆம்புலன்ஸுக்கும் சொல்லியாச்சுல.. அவங்க பார்த்துப்பாங்க.. இறந்தவங்களை விட உயிரோட போராடிட்டு இருக்கிற இந்தக் குழந்தையின் உயிர் முக்கியம்.." என்று கூறவும், டிரைவருக்கும் அதுவே சரி என்று பட, வண்டியை நோக்கி ஓடினார்.

அதற்குள் லட்சுமி பின்இருக்கையில் அந்தக் குழந்தையுடன் அமர, அஜித்தோ, "அம்மா! யார் இந்தப் பாப்பா?" என்று கேட்கவும்,

"அப்புறம் சொல்றேன்டா கண்ணா.." என்றுவிட்டு குழந்தையின் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்த இடத்தைக் கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டார்.

அடுத்தச் சில நிமிடங்களில் ஒரு மருத்துவமனையில் அந்தக் குழந்தையை சேர்த்த லட்சுமி, மருத்துவர் கூறும் பதிலுக்காகக் காத்திருந்தார். மறுநாள் காலையில் தான் கண் விழித்தாள் குழந்தை. அவள் கண் விழித்ததும், தனது தாய்-தந்தையைத் தேடி அழ ஆரம்பிக்க, அவளைச் சமாதானம் செய்வது அவருக்குப் போதும் போதும் என்று ஆனது.

மதியம் வந்த மருத்துவர், குழந்தை இப்பொழுது நன்றாக இருப்பதாகவும், வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி விட்டுச் சென்றார். அப்பொழுது தான் லட்சுமிக்கு இந்தக் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று புரியவில்லை. மெதுவாக, "பாப்பா! உங்க பேர் என்ன?" என்று அவளிடம் கேட்க,

அக்குழந்தையோ, "தனுஷா.." என்றது. "நல்ல பேர்!" என்று குழந்தையின் கன்னத்தை வருடி விட்டு, பின்பு ஏதோ நினைத்தவராக, "அஜித்து! பாப்பாவைப் பார்த்துக்க, அம்மா இதோ வந்துடுறேன்.." என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.

அஜித்ஜோ கட்டிலில் தலையில் கட்டுடன் அமர்ந்திருந்த குழந்தையை முறைத்துப் பார்த்தான். காரணம், நேற்று இரவில் இருந்து இதோ இப்பொழுது வரை, தனது அன்னை தன்னைக் கவனிக்காமல், இதோ! இந்தச் சிறுமியைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாரே? ஒத்தையாக தாய், தந்தையின் பாசத்தை தான் மட்டுமே அனுபவித்து வரும் எல்லா குழந்தைகளை போலவேதான், அஜித்தும் தன் அன்னையின் பாசத்தை பங்கு போட அவனுக்கு விருப்பம் இல்லை.

அந்தக் குழந்தையோ அஜித்தைப் பார்த்து, "தூக்கு!" என்று தனது கையை அவனை நோக்கி நீட்டவும், நீட்டிய கையை தட்டி விட்டு அவன் வெளியே சென்று விட, தனுஷாவின் முகமோ அவனது செயலில் சுருங்கி விட்டது.

அன்று மாலையே தனுஷாவை மருத்துவமையில் இருந்து தனது வீட்டுக்கே அழைத்து வந்திருந்தார் லட்சுமி. அதில் அஜித்துக்கு ஏக கோபம் அன்னையின் மீது எழுந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது அறைக்குள் முடங்கிக் கொண்டான்.

மறுநாள் காலையில், "அம்மா! நீங்க சொன்ன மாதிரி கார் நம்பர் வச்சி விசாரிச்சிட்டேன். இந்தக் குழந்தையின் அம்மா-அப்பாக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கத்துல ஏதோ கிராமமாம். ஆனா ரெண்டு பேரும் வேலை பார்க்கிறது சென்னையில தானாம். அன்னைக்கு கூட அவங்க ஊர்ல ஒரு கல்யாண வீட்டுக்குப் போய்ட்டு திரும்பி வந்து இருக்காங்க, அப்போ தான் விபத்து நடந்துருக்கு. இந்தக் குழந்தையோட அத்தை இங்க பக்கத்தில திருவல்லிக்கேணில தான் இருக்காங்க. குழந்தையை அவங்ககிட்ட ஒப்படைச்சுடலாம்மா.." என்று அவர் கூறி முடிக்கவும்,

"சரி, இப்பவே போலாம்.. நீங்க வண்டி எடுங்க.." என்ற லட்சுமி, குழந்தை தனுவை அவளது அத்தையிடம் ஒப்படைக்க அவரது வீட்டுக்குப் புறப்பட்டார்.

ஒரு வாரம் கடந்து இருக்கும். பள்ளிக்குக் கிளம்பி காரில் சென்று கொண்டிருந்தான் சிறுவன் அஜித்குமார். அவன் சென்ற வண்டி சிக்னலில் நிற்க, அவனோ வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அவனது பார்வை திடீரென ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது. அங்கே உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, கிழிந்த அழுக்கு உடையில், எண்ணெய் வைக்காத பரட்டை தலையுடன், ஒவ்வொரு காரின் ஜன்னலையும் தட்டி ஏங்கி ஏங்கி அழுதபடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள் குழந்தை தனுஷா.

அஜித்தின் மனதிலோ, இரண்டு நாளே ஆனாலும், தனது வீட்டில் கொழுகொழு பொம்மை போல் அழகுடன் இருந்த தனுஷா நினைவுக்கு வந்தாள்.

அடுத்து அவள் அஜித் அமர்ந்திருந்த வாகனத்தின் அருகே வந்து நின்று ஜன்னலைத் தட்ட, அதுவோ மெதுவாகத் திறந்தது. உள்ளே அமர்ந்திருந்த அஜித்தைப் பார்த்ததும் அழுத கண்கள் சந்தோஷத்தில் விரிய, "அண்ணா.." என்று அழைத்தாள்.

அவளுக்கு எப்படியோ, ஆனால் அந்த வார்த்தை, அந்தச் சிறுவனின் உயிர் வரை சென்று தீண்டியது.

அவளோ மீண்டும், "அண்ணா!" என்று அழைக்கவும், சிக்னல் விழவும் சரியாக இருக்க, ஒவ்வொரு வாகனமாக நகர ஆரம்பித்தது. அஜித் அமர்ந்திருந்த வாகனமும் நகர ஆரம்பிக்க, குழந்தை தனுஷாவோ அவன் செல்வதைக் கண்டு அழுகையுடன் அவனைப் பார்த்தாள். பார்த்துக் கொண்டே நின்றவள் சிறிது நேரத்தில் அப்படியே மயங்கிச் சரிநதாள். 

"மணி அங்கிள்! வண்டியை நிறுத்துங்க!" என்று கத்தியவன், வேகமாக தனுஷாவை நோக்கி ஓடிச் செல்ல, டிரைவர் மணியும் இறங்கி ஓடினார்.

அஜித்தோ, "பேபி.. பேபி.." என்று அவளை எழுப்ப முயன்றான். அதற்குள் அந்தக் குழந்தையை கண்டுகொண்ட மணி, அவளைக் கையில் ஏந்தி காரின் அருகே செல்ல, சற்றுத் தள்ளி பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்து விட்டு, அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த இரு ஆண்கள், தனுஷாவை யாரோ தூக்கிச் செல்வதைப் பார்த்து ஓடி வருவதற்குள் அஜித்தின் வாகனம் வேகம் எடுத்து இருந்தது.

மகனை பள்ளிக்கு அனுப்பி விட்டு மதிய சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் லட்சுமி. அப்பொழுது "அம்மா!" என்று உரக்க கத்திக் கொண்டு வந்தான் அஜித்குமார்.

மகனின் சத்தத்தில் வெளியே ஹாலுக்கு வந்த லட்சுமி, அங்கே சோபாவில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கண்டு நெற்றிச் சுருக்கியவர், "மணி! இது யார் குழந்தை? ஆமா, நீ ஸ்கூலுக்கு போகாம இங்க என்ன பண்றே?" என்று கேட்கவும்,

மணியோ, இந்தக் குழந்தை யார் என்பதையும், நடந்த அனைத்தையும் கூறி விட்டு, "நான் போய் இந்தக் குழந்தை எப்படிப் பிச்சை எடுக்க வந்ததுன்னு கேட்டுட்டு வரேன்ம்மா.." என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

லட்சுமியோ, "கடவுளே!" என்று அதிர்ந்து வேகமாகத் தனுஷாவிடம் சென்றார்.

அஜித்தோ, "அம்மா! இனிமேல் இந்த பேபி இங்க தான் இருப்பா. வேற யார் வந்தாலும் திருப்பிக் கொடுக்க கூடாது! நான் கொடுக்கவும் மாட்டேன்! இவ என்னோட சிஸ்டர்.." என்றவன், குழந்தையின் காலருகில் அமர்ந்து, அவளது காலை எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டான்.

அவனும் சிறுவன்தான்! அன்னையின் பாசத்தைப் பங்கு போட விரும்பாதவன்தான்! ஆனால் "அண்ணா!" என்ற ஒற்றைச் சொல்லில், அவனின் மனதில் தங்கையாக இடம்பிடித்து இருந்தாள் தனுஷா.

மணி கூறியது போல் விசாரித்து விட்டு வந்தவர், "அம்மா, குழந்தையோட அத்தைக்காரி நாம கொண்டு ஒப்படைச்சுட்டு வந்த மறுநாளே குழந்தையை அநாதை ஆசிரமத்தில சேர்த்து இருக்கா. அங்கே இருந்து யாரோ தத்தெடுத்து இருக்காங்க. தத்தெடுத்தது வளர்க்க இல்ல, பிச்சை எடுக்க வைக்க போல.." என்று அவர் கூறி முடிக்கவும், 

லட்சுமியோ ஓர் முடிவெடுத்தவராக, "சரி மணி, இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேணாம். இந்தக் குழந்தையை என்னோட குழந்தையா நானே வளர்க்கப் போறேன்.." என்று கூறி விட்டார்.

அதன்பிறகு அஜித்துக்குத் தன் தங்கையே உலகம் என்று ஆனாள். எப்பொழுதும் அவளுடனே நேரத்தைக் கடத்தினான். தனுஷாவும் அவனிடம் ஒன்றிப் பழகினாலும், சில சமயம் அஜித் தனது அன்னையின் மடியில் படுத்து இருப்பதை மட்டும் ஏக்கமாகப் பார்ப்பாள். காரணம், அஜித்திடம் அவள் ஒன்றிய அளவுக்கு லட்சுமியிடம் நெருக்கம் காட்டவில்லை.

இப்படியே நாட்கள் செல்ல, திடீனெ்று ஒருநாள், "அம்மா! என்னை ஊட்டியில இருக்கிற ஹாஸ்டலில் சேர்த்து விடுங்க" என்று வந்து நின்றான் அஜித்குமார்.

லட்சுமியோ, "என்னடா சொல்றே? ஹாஸ்டலா?" என்று புரியாமல் கேட்க,

"ஆமாம்மா, இந்த தனு பேபிக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். ஆனா உங்ககிட்ட என்னை மாதிரி உரிமை எடுத்துக்க மாட்டேன்கிறா. அவளுக்கும் அம்மா வேணும் தானே? அதான் நான் தள்ளிப் போறேன்.." என்று அவ்வயதிலேயே இவ்வளவு பொறுப்பாய் பெரிய மனிதனாய் பேசும் மகனைப் பெருமையோடு பார்த்தார் லட்சுமி. 

"அதெல்லாம் வேண்டாம் கண்ணா, கொஞ்ச நாள் அப்படி இருப்பா.. அப்புறம் நம்ம வீட்டு பொண்ணா சீக்கிரம் மாறிடுவா" என்று அவர் கூற,

அவர் கூற்றை மறுத்தவன், தன் நிலையிலேயே நிலையாக நின்று, தனக்குக் கிடைக்க வேண்டிய தாயின் அன்பை, முழு மனதுடன், தன் கூடப் பிறக்காத தங்கைக்கு விட்டுக் கொடுத்து விட்டு, படிப்பதற்காக ஊட்டிக்குச் சென்று இருந்தான்.

இப்படி எந்தவித ரத்த சம்பந்தம் எதுவும் இல்லாமல் இருக்கும் தன்னைப் பாதுகாத்து வளர்த்து, தனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த அந்த அண்ணனின் மீது அதீத பாசம் வைத்து இருந்தாள் தனுஷா. அவன் மட்டும் அன்று தன்னைத் தூக்கி வரவில்லை என்றால், எப்பொழுதோ சீரழிந்து போயிருப்போம் என்று புரிந்த நொடி, தன் அண்ணன் மீது உயிரையே வைத்து இருந்தாள். அவனுக்காக எதுவும் செய்ய தயங்க மாட்டாள்! அவளுக்கு அவன் சந்தோஷம் மட்டுமே பிரதானம்! மற்றவர்கள் யாராக இருந்தாலும் அவனுக்கு அடுத்து தான்..

"நீ கத்தினா நீ செஞ்சது எல்லாம் தப்பு இல்லன்னு ஆகிருமா அஜித்து? நேகா மனசுல என்ன இருக்குன்னு என்னைக்காவது யோசிச்சி பார்த்தியா? இல்ல நீ செஞ்ச தப்பு என்னன்னு உணரவாச்சும் செஞ்சியா?" என்று அவர் மருமகளுக்காகக் கேள்வி கேட்டார். 

அவனோ, பதில் ஏதும் கூறாமல் அப்படியே சிலையாய் அமர்ந்து இருந்தான்.

"பதில் சொல்லு அஜித்து! தப்பு மேல தப்பு பண்ண தெரிஞ்ச உனக்கு, அதைச் சரி செய்யணும்னு தோணுச்சா?" என்று காட்டமாகக் கேட்க,

அதற்கும் அவனிடம் பதில் இல்லை. காரணம், அவன்தான் தான் செய்த தவறை, இதோ சற்று முன்பு, அன்னை பொட்டில் அடித்தது போல் கூறும் வரை உணரவே இல்லையே?! அவனுக்கு அவனவள் வேண்டும்! அது மட்டும் தானே அவன் மனதில் இருந்தது. அதில் நேகாவின் மனதைப் புரிந்து கொள்ளத் தவறி இருந்தானே?

"போதும்டா! என் பொண்ணு மனசளவில் கஷ்டப்பட்டது போதும்! எங்களை விட்ரு. நாங்க இந்த வீட்ல நிம்மதியா இருந்துக்கிறோம். எங்களுக்கு வேற யாரும் வேண்டாம்" என்று அவர் கூற,

"அம்மா! ப்ளீஸ்! அப்படிச் சொல்லாதீங்க, எனக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும்.."

"அப்போ நேகா? அவளை என்ன பண்ணப் போறே?" என்று அவர் அழுத்தமாக கேட்டார்.

அவனுக்கோ தாய் என்ன சொல்கிறார் என்று ஒன்றும் புரியவில்லை. "ஒருவேளை நேகாவை விட்டுப் பிரிய சொல்கிறாரோ?" என்று அதிர்ந்து அன்னையைப் பார்த்தான் அஜித்.

"நான் அவளை என்னைக்கும் விடச் சொல்ல மாட்டேன். இந்த ஜென்மத்தில் அவ மட்டும் தான் என் மருமக! நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ, எனக்குத் தெரியாது. என் மருமக மனசு மாறி, "வீட்டுக்கு வாங்க அத்தைன்னு" வாய் நிறைய சந்தோஷமா கூப்பிடணும். என் பொண்ணை மதிச்சு, மன்னிச்சு அவ ஏத்துக்கணும். அதுக்கு அப்புறம் தான் நான் அந்த வீட்டுக்கு வருவேன். அதுவரை இங்க உங்க அப்பா எனக்காகக் கட்டின இந்த வீட்லயே நானும், என் பொண்ணும் கடைசி வரை இருந்துக்குறோம்.." என்று உறுதியுடன் கூறியவர், மகளை எழுப்பி அணைத்தவாறு தனது அறைக்குள் செல்ல, அஜித்தோ செய்வதறியாது சிலையென இறுகி  நின்றிருந்தான். 

அதே நேரம் கார்த்திக்கின் வீட்டில், "ஸ்னேகா! பாட்டிக்கு மாத்திரை எல்லாம் எடுத்துக் கொடுத்துட்டியா?" என்று மகளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் மோகனா.

சற்று முன்பு தான் ரவிவர்மன், ஓவியா, ரம்யா மூவரும் கிளம்பி இருந்தார்கள். விக்ராந்த் தனுஷாவின் வீட்டில் இருந்து வந்ததும், அவனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டவன், தான் சாப்பிட கூட வெளியே வரவே இல்லை!

மோகனா மகன் மேல் கோபத்தில் இருக்க, ஸ்னேகாவால் அப்படி இருக்க முடியவில்லை. தன் அண்ணனுக்கு உணவை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கே சென்றாள். ஆனால் அவனோ, பசி இல்லை என்று உணவை திருப்பி அனுப்பி விட்டான்.

"இப்ப எதுக்கு நீ அவனுக்குச் சாப்பாடு கொண்டு போன?" என்று மகன் மேல் உள்ள கோபத்தில் மகளை மோகனா கடிந்து கொண்டாலும், அவளுமே உணவை உண்ணவில்லை.

கார்த்திக்கோ, மகனின் செயலை நினைத்து யோசனையில் இருக்க, மேகாவோ, "மோஹிமா! நாளைக்கு நாங்க ஊருக்குக் கிளம்புறோம்.." என்றபடி அங்கு வந்தாள். அவளும் எவ்வளவு ஆசையாகத் தன் அண்ணனுக்குப் பெண் பார்க்க கிளம்பி வந்தாள்?! ஆனால் இப்படி ஆகும் என்று அவள் நினைக்கவே இல்லை. ரொம்பவே வருத்தமாக இருந்தது. அதனால் ஊருக்குச் செல்ல முடிவு செய்தாள்.

"இப்பவே கிளம்பணுமா? இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப் போங்களேன்" என்று மோகனா மகளிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, "மோஹிமா! நான் வந்துட்டேன்.. இனிமேல் இங்க தான் இருக்கப் போறேன்.." என்ற குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் வாசலைப் பார்க்க, அங்கே கையில் சூட்கேஸுடன் நின்றிருந்தாள் நேகா.

அவளைப் பார்த்த யாருக்கும் எதுவும் பேச வாய் வரவில்லை. எல்லோரும் அதிர்ச்சியில் சிலையாய் மாறி இருக்க, உள்ளே வந்த நேகாவோ, விறுவிறுவென்று தனது அறைக்குச் சென்றிருந்தாள். 

செல்லும் மகளைப் பார்த்த மோகனா, "என்னங்க, நான் பயந்த மாதிரியே ஆகிப் போச்சே?" என்று என்று நெஞ்சம் அதிர கணவனிடம் கூற, கார்த்திக்கிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

அறைக்கு வந்த நேகா கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள். இவ்வளவு நாட்களும் கணவன் மீது ஒருவித கோபம், வீம்பு என்று இருந்தவளுக்கு, இங்கு வந்ததும் எதையோ இழந்து விட்ட உணர்வு! என்ன தான் கணவன் அவளுக்குத் தீங்கு செய்து இருந்தாலும், அங்கிருந்து நிரந்தரமாகத் தாய் வீட்டுக்கு வர வேண்டும் என்று ஒருநாளும் அவள் நினைத்தது இல்லை. அமைதியாக அந்த வீட்டிலேயே இருக்க தான் நினைத்தாள். அப்படித்தான் இதுநாள் வரை இருந்தாள். ஏன், விவாகரத்து பத்திரத்தை நீட்டியது கூடக் கணவனைக் கோபப்படுத்திப் பார்க்கத்தான்.. 

ஆனால் இன்று ஏனோ அவளது கோபம் எல்லையைக் கடந்து விட்டது. தன்னையும் மீறி அழுத்தம் தாங்காமல் தனுஷாவைத் தேளாய் கொட்டி இருந்தாள். அதற்காகக் கணவன் தன்னை வீட்டை விட்டுச் சென்று விடு என்று கூறுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அப்பொழுது கூட அவன், "தன்னைப் பற்றியும், தன் மனதை பற்றியும், தான் ஏன் இப்படி ஆனேன் என்றும் புரிந்து கொள்ளவில்லையே?" என்றுதான் இன்னும் அவன் மீது அவளுக்குக் கோபத்தைக் கிளப்பி இருந்தது. அதனால் தான் இதற்கு மேலும் அங்கு இருக்க கூடாது என்று முடிவு செய்து, கிளம்பி அன்னை வீட்டிற்கு வந்து விட்டாள். 

அதே நேரம் அஜித்தோ 'மனைவியை எப்படிச் சமாதானப் படுத்துவது?' என்ற யோசனையுடன் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்

நிதானமாக அவளை அணுகி, தன் காதலை மென்மையாக கூறியிருந்தால், ஒருவேளை தன் மனம் புரிந்து அவள் தன்வசம் வந்திருப்பாளோ என்னவோ?

அன்னை கூறியது போல், ‘தன் தங்கையிடம் வேறொருவன் இப்படி நடந்திருந்தால் அதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படியிருக்க, தன் மனைவி மட்டும் கோபத்தை விடுத்து எப்படி தன்னை உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணினோம்?

தொலைந்த காதலை எப்படி மீட்டெடுக்க போகிறோம்? இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில், தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்பதை மனைவியிடம் கூறினால், அவள் அதைச் சரியாகப் புரிந்து கொள்வாளா?' என்று தவித்தவனின் மனம் தன்னவளைக் கவர்ந்து சென்ற நாளுக்குச் சென்றது. 

****

No comments:

Post a Comment